க.பாலாசி: நந்தி...

Friday, October 29, 2010

நந்தி...

பிரதோஷந்தோரும் மௌன விரதமிருக்கும் பழக்கம் எனக்குண்டு. ஏன் ஆரம்பித்தேனென்று தெரியவில்லை. பெரும்பாலான ஆண்கள் இவ்விரதமிருப்பதில்லை. ஆனால் நானிருக்கிறேன். இந்தநாளில்தான் ஒருவேளை உணவுக்கும், அவ்வப்போதைய தொண்டை நனைத்தலுக்கும் இந்த உதடுகளை புணரவிடுதல் போதுமானதாக இருக்கிறது. மேலும் ஒரு தனி அறை முற்றிலுமொரு மயான அமைதியை தரவல்லதாதலின் இவையெல்லாவற்றிற்கும் உகந்தது. இன்று மாலை ஈஸ்வரன் கோவில் செல்லும்வரை இதுதான் என்னுலகம். இந்த சாலை பார்த்தமாதிரியான சன்னலும் வடக்கிலிருந்து வீசும் மெல்லிய கிழிசல் காற்றும் அனுபவிக்க அனுபவிக்க சுகந்தம். மனிதிலிருக்கும் தாண்டவ அமைதி இந்த நாளை தவிர்த்து மற்றைய நாட்களில் கிடைப்பதில்லை என்பது என் அனுபவ உண்மை.

இந்த தனியறையில் வியாபித்திருக்கும் அத்தனைப்பொருட்களுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது. அதையுணரக்கூட எனக்கிந்தப் பொழுது தேவைப்படுகிறது. இந்த நாற்காலி, மேசை, அரிக்கன் விளக்கு, சுவர் மூலையிலிருக்கும் அடுக்குப்பானைகள், மேசைமீது அடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள், அந்த எம்ப்ராய்டரிங் திரைச்சீலைகள் இப்படியாவும் இந்தவொருநாளில்தான் அழகாய் தெரிகிறது, மற்ற நாட்களில் எனையாட்கொள்ளும் இயந்திரத்தன்மை இவையனைத்தையும் கண்மூடி மறைத்துவிடுகிறது. இந்த நாளும், நான் பார்க்கும் இந்த சாலையும் அதில் பயணிக்கும் மனிதர்களும் என் பெருஞ்சுமையென்பது யாருக்குத்தெரியும்?. ஏனோ தெரியவில்லை, இதையனைத்தையும் நானே விரும்பி ஏற்கிறேன். ஒரு நாள் முழுதும் மலரும் அனைத்துப்பூக்களும் பூஜைக்குரியதாகவோ அல்லது ரசிப்பதற்குகந்ததாகவோவா இருந்துவிடுகிறது? எதோவொன்றேனும் குறைபட்டுதான் விடுகிறது. அதுபோலவே நான்பிறந்த அன்றையநாளில் என்கால்கள் விண்ணப்பட்டிருந்தது. ஈஸ்வரன்கோவில் நந்தியினுருவம் உங்கள் மனதிலிருக்கும். அதுபோல்தான் எனக்கும் எப்போதும் அமர்ந்தநிலை. அதற்காக எந்த ஈஸ்வரன் என்னெதிரே அமர்ந்திருக்கிறான் அல்லது அனுதினம் விஷேசப்படுகிறானென்று தெரியவில்லை. அதன் கால்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அந்தப்பெரிய நந்தியின் கால்கள் எவ்வளவு சிறிதாக சோம்பிக்கிடக்கும், அதேதான். இப்போது என்னை உருவகப்படுத்துங்கள்.

மனைவி மக்கள், குடும்பச்சுமை, உறவுகள், நல்லதுகெட்டது, நாள் கிழமை இப்படியிவை எதுவுக்கும் லாயக்கற்றவனென்பது எனக்கு கொடுக்கப்பட்ட வரம். கொஞ்சம் வசதியானதுதான். சென்றமாதம் நான்சென்ற வினோத்தின் திருமணம் நீங்கலாக வேறெதிலும் நான் பங்கேற்பதில்லை. அவன் என் பால்ய சிநேகிதன். அவனல்லால் வேறொருவன் என்னை வெகுவாக கவர்ந்ததில்லை. ஒவ்வொருநாளும் என்னை மொய்க்கும் பரிதாபக்கண்களுக்கு மத்தியில் அவன் என்னை உணர்ந்தவன் என்றால் மிகையில்லை. எவ்வளவு ஆழமான நட்பு அவனுடையது. நினைத்துப்பார்க்கையில் இப்போதும் இனித்துக்கொண்டேயிருக்கிறான். பதினெட்டு வருட நட்பில் இடையில் மனக்கசப்பில் ஒருவருடம் பேசாமல் இருந்திருக்கிறோம். என்தவறுதான் அது. அதுவொரு ஆழ்ந்த வலி, இருவருக்குமே.

அன்றைய நாளில் எனக்கு அறிமுகமானவன்தான் சிவா. அவன்மூலம்தான் இந்த அலுவலகப்பணி எனக்கு கிடைத்தது. இதுவும்கூட ஒரு ஆத்மார்த்தமான நட்பு. ஆயினும் என்னுள் எழும் பொறாமைக் குணம் அனைத்தையும் கெடுத்துவிடுமோ என்ற அச்சம்மட்டும் இருந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொருநாளும் அவன் அலுவலகத்திற்கு வரும்விதம், நடையுடைகள், பாவனைகள். வெகுவாக இம்சிக்கிறது. கட்டுடலும் செந்தோல் கவர்ச்சியுமிக்க ஒருத்தியை கண்கொட்டும் பார்வையில் அள்ளித்தின்னும் உணர்வு எந்தவொரு பருவமெய்தவனுக்கும் இருக்கத்தான் செய்யும். அதுபோலவே அவனின் தோற்றமும் நடையுடையும் என்கண்களை கொத்திக்கொள்கிறது. என்ன செய்ய? என் ஊனம் பிச்சிப்பிடுங்கும் கழுகாக சாகடிக்கிறது. நான் வணங்கும் தெய்வம் எனையேன் இப்படி சபித்தது, சபிக்கிறது என்று எண்ணும்போதெல்லாம் இவ்வுடலின் மீதுரும் வெறுப்பு அளவில்லாதது.

நான் மாற்றுத்திறனாளியாம், சிறகற்றப் பறவைக்கு இச்சமூகம் காட்டும் அற்ப அக்கறை. எந்த கொம்பனுக்கு தெரியும் என் அன்றாட அவஸ்தைகளும், வேதனைகளும் இன்னபிறவும். பார்ப்பதற்கு நானொரு சக மனிதன்தான். ஆனால்..ஆனால்...இந்த கால்...ச்சை..ச்சை.. சிவா மீதான நட்பு எப்போதும்போலிருப்பினும் அவன் மீதான வெறி என்னுள் தலைதூக்கத்தொடங்குகிறது. அதிலும் அவன் கரும்பச்சை பேண்ட், அதற்கு தகுந்தார்ப்போல் அணியும் வெளிர்நிற சட்டையும் நடக்கும்போது இடது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டுச் செல்வதும்.... என்ன சொல்ல? அவன் கோப்புகளைச் சுமந்து எனைகடக்கும்போதும், அலுவலகத்தில் இடையிடையே நடந்துசெல்லும்போதும் என்னையறியாமல் அவனை சபிக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள். என் மீது எனக்கே பரிதாபம் உண்டாகும் அல்லது உண்டாக்கும் கணங்கள் யாவிலும் என் சாபம் எவரையோ நோக்கி பயணிக்கிறது.

இந்த நேரத்தில் என்னைப்பற்றி என் நாட்குறிப்பேட்டில் எழுதிய வரிகள் ஒன்று ஞாபகம் வருகிறது. ‘என் வாழ்க்கை இருட்டறையில் எழுதப்பெற்றதொரு தொடர்கதை‘ எவ்வளவு உண்மை. இதையேன் எழுதினேன் தெரியவில்லை. எதோவொரு அற்பாசையும் அதன்மூலம் பெற்ற வெறுமையும் இதை எழுத காரணமாயிருந்திருக்கக்கூடும். இப்போது ஞாபகம் வருகிறது. ஒரு நாள் நான் எழ முயன்றேன். என் உள்ளங்கால்களை இப்புவியிலழுத்தி நிற்க முயன்றேன். எவர்எவர் மீதானோ ஈர்ப்போ வெறியோ எனையிப்படி செய்யத்தூண்டியது. ப்ச்..இது தோல்விதான் என்பது தெரிந்தே செய்யப்பட்ட முயற்சி. எல்லோருக்கும் ஒரு கனவிருக்கும். எனக்கும் இருக்கிறது இவ்வாழ்நாளில் ஒருநிமிடமேனும் சிவாவைப்போல வாழ்ந்து இல்லையில்லை நடந்துவிடவேண்டும். ஸ்டைலாக இந்தக் கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு கோப்புகளை அலுவலக அறையெங்கும் எடுத்துச்செல்லவேண்டும். அப்படியே இறந்துவிடலாம். என் பிறவிப்பயன் முழுமைபெறும். இப்போது ஈஸ்வரன்கோவில் செல்கிறேன். வழக்கம்போல நந்திதான் இன்றைய முக்கியஸ்தர். எனக்கு அதன் கால் மட்டுமே.


.

33 comments:

THOPPITHOPPI said...

nice

vasu balaji said...

/ஒரு நாள் முழுதும் மலரும் அனைத்துப்பூக்களும் பூஜைக்குரியதாகவோ அல்லது ரசிப்பதற்குகந்ததாகவோவா இருந்துவிடுகிறது? எதோவொன்றேனும் குறைபட்டுதான் விடுகிறது. /

/அவ்வப்போதைய தொண்டை நனைத்தலுக்கும் இந்த உதடுகளை புணரவிடுதல் போதுமானதாக இருக்கிறது./

வணக்கம் எழுத்தாளரே:). கால் மடித்தமரந்திருக்கும் நந்தி, பிரதோஷம், ஊனம். யே! யப்பா. நடத்து சாமி. கதையோட அழகு என்னன்னா முடிச்சதும் அவன் மேல பரிதாபம் வரதில்லை. ஒரு பிரமிப்பு வருது. தன்னையுணர்ந்தவனாய் எப்படி இருக்க முடிகிறது என.

one more feather to your crown.

Vidhoosh said...
This comment has been removed by the author.
Vidhoosh said...

அசத்தல்,

மாற்றுத் திறனையும் பிரதோஷ நந்தியையையும் கோர்த்து... யப்பா... பாலாசி ... அருமை.அருமை. :)

ரோகிணிசிவா said...

asathal balasi , valakkam pola

Anonymous said...

அருமை பாலாசி!

Unknown said...

ரொம்ப அருமை பாலாசி...

dheva said...

பாலாசி ....

மீண்டும் ஒரு களம்.

கதையின் ஆரம்ப வரிளில் இருந்த சூடு பின் பகுதியில் தொய்ந்து போயிருப்பது போல எனக்கு ஒரு உணர்வு.

தானும் சக மனிதர்ளைப் போல இருக்க ஆசைப்பட்டதில் இருந்த் உக்கிரம் எழுந்து நின்று பார்ர்கும் வரை பரவியிருப்பது ரசிக்க முடிந்தது.

அருமை பாலாசி!

அரசூரான் said...

அருமை பாலாசி. ஈஸ்வரன் கோவிலா இல்ல நம்ம வைத்தீஸ்வரன் கோவிலா?

Praveenkumar said...

மிகவம் சுவாரஸ்யமாக இருந்தது.

Chitra said...

எவ்வளவு அருமையாக எழுதி இருக்கீங்க.... சூப்பர்!

Anonymous said...

எப்படி இப்படி கண்டிப்பா கேட்கமாட்டேன்..

//கால்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அந்தப்பெரிய நந்தியின் கால்கள் எவ்வளவு சிறிதாக சோம்பிக்கிடக்கும், அதேதான். இப்போது என்னை உருவகப்படுத்துங்கள்.//

ஹைய்யோ நெஞ்சை கொல்லும் வலி.ஊனத்தின் வலி உணர்ந்தால் அன்றோ தெரியும்..மனதின் ஏக்கம்

//ஆயினும் என்னுள் எழும் பொறாமைக் குணம் //

இதை குறிப்பிட்டது இந்த புனைவின் என்ன சொல்ல ஹை லைட்..வரிக்கு வரி பாலாசின்னு தான் தெரியுது உன் படைப்பு தெரியவில்லை...

ஜோதிஜி said...

படித்துக் கொண்டே வரும் போது ரெண்டு விசயங்கள் யோசித்தேன். வானம்பாடிகள் வணக்கம் எழுத்தாளரே என்று சொல்லிவிட்டார்.

பிரதோஷம் நீங்கள் சொன்னது போல் எந்த ஆண்களும் இருந்து நான் பார்த்தது இல்லை. அதென்னவோ பெண்கள் தான் இன்று வரைக்கும்விரதமாய் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

அப்புறம் திருமணம் ஆவதற்கு முன்பு இப்படி இருந்தால் அதற்கு பெயர் ஆச்சரியமல்ல. ஒரு குழந்தை பிறந்த பிறகு இப்போது நீங்கள் வர்ணித்தபடி உங்களால் வாழ முடிந்தால் தயை செய்து ஒரு கடிதம் எழுதவும். வந்து பயபுள்ளய பார்த்துட்டு பெத்த புள்ளைக்கிட்ட ராசா உனக்கு நல்ல எதிர்காலம்டான்னு வாழ்த்திட்டு வர கிளம்பி வர்றேன். சரியா பாலாசி

sakthi said...

‘என் வாழ்க்கை இருட்டறையில் எழுதப்பெற்றதொரு தொடர்கதை‘ எவ்வளவு உண்மை. இதையேன் எழுதினேன் தெரியவில்லை.

பாலாசி மனதை என்னவோ செய்கின்றது பா இவ்வரிகள்

'பரிவை' சே.குமார் said...

பாலாஜி...

பிரதோஷம்.... நந்தி.... ஊனம்... சிவா....
கலவையாய் ஆழ்ந்த அருமையான ... மனதை வருடும் பிரமிக்க வைத்த பதிவு.
என்ன எழுத்து... ஈர்க்கிறது உள்ளத்தை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

கலகலப்ரியா said...

அருமையா இருக்கும்னு தெரியும்... நாளைக்கு படிச்சுக்கறேன்...

தாராபுரத்தான் said...

நல்லா இருக்குங்க தம்பி..

காமராஜ் said...

உள்ளத்தில் ஒளியென்றால் வாக்கினிலே ஒளியுண்டாம். ஒரு கதை அதன் விவரிப்பிலும் தன் உள்ளடக்கத்திலும் ஜோடி சேரும்போது இப்படி அசத்தல் படைப்பு வாசகனுக்கு கிடைக்கும்.கொடுத்த கைகளுக்கு கோடி முத்தம்.

காமராஜ் said...

தெறிப்புகளணைத்தையும் பாலாண்ணா சுட்டிவிட்டார்கள்.அழகு பாலாசி.

Mahi_Granny said...

என்னவொரு புனைவு. முதல் வரியிலிருந்து கடைசி வரை மனதும் கூடவே கதை சொல்பவருடன் செல்கிறது.

Paleo God said...

One of the Best Balaji!! :)

பவள சங்கரி said...

அருமை....பாலாசி. வாழ்த்துக்கள்.

RVS said...

இயலாமை சுய கழிவிரக்கமாக... அருமை பாலாசி ;-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை..

ராமலக்ஷ்மி said...

மிக அருமையாக உள்ளது பாலாசி.

ஈரோடு கதிர் said...

ரொம்ப நல்லாயிருக்கு பாலாசி

மாசத்துக்கு 4 இடுகைனவுடனே எழுத்து கனம் கூடிடுச்சு

மோகன்ஜி said...

பாலாசி,அழகான நடையில் அசத்தி இருக்கிறீர்கள். இது என் முதல் வருகை.. ஆற அமர உங்கள் மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்.

க ரா said...

எல்லாரும் எல்லாத்தயும் சொல்லியாச்சி.. நான் சொல்றதுக்கு என்ன இருக்கு இனிமே.. பிரமிக்க வைக்கிறிங்க பாலாசி.. தொடருங்க.. முடிஞ்சா எல்லா எழுத்தயும் சேர்த்து புத்தகமா கொண்டு வாங்க சாமி.. என் வீட்டுல இருக்கபோற ஒரு உன்னதமான பொருளா இருக்கும் அந்த புத்தகம்.. ரொம்ப நன்றி பாலாசி ....

r.v.saravanan said...

அருமையா இருக்கு பாலாசி

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தங்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...

க.பாலாசி said...

நன்றி THOPPITHOPPI
நன்றிங்க வானம்பாடிகள் அய்யா
நன்றிங்க விதூஷ்.
நன்றி ரோகிணி அக்கா
நன்றி பாலாஜி சரவணா
நன்றி தஞ்சாவூரான்
நன்றி தேவா
நன்றி அரசூரான்
நன்றி பிரவின்குமார்
நன்றிங்க சித்ரா
நன்றி தமிழரசி அக்கா
நன்றிங்க ஜோதிஜி
(சரிங்க)
நன்றிங்க சக்தி
நன்றி சே.குமார்
நன்றி டி.வி.ஆர். அய்யா
நன்றி ப்ரியாக்கா
நன்றி தாராபுரத்தான் அய்யா
நன்றிங்க காமராஜ்
நன்றி Mahi_Granny
நன்றி ஷங்கர்
நன்றி நித்திலம் மேடம்
நன்றி ஆர்.வி.எஸ்
நன்றி வெறும்பய
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி ஈரோடு கதிர்
நன்றி மோகன்ஜி
நன்றிங்க இராமசாமி கண்ணண்
நன்றி r.v.saravanan
நன்றி தஞ்சை.வாசன்

ஹேமா said...

பாலாஜி...சுகமா இருக்கீங்களா.இன்றுதான் உங்களது விடுபட்ட பதிவுகள் படிக்கிறேன்.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO