Monday, November 23, 2009
ஒன்று:
தூக்கம் வர..
படித்த சிந்தனையை
கனவுடன் கலைத்துவிட்டு
காலையெழுந்தேன்.
முக்கியும் முனகியும்
நடந்தும் ஓடியும்
பலனில்லை...
குனியாமலே
தெரிந்த தொந்தி
இரவினில் தின்ற
தோசைக்கு
தொட்டுக்கொண்ட
காரச்சட்னி...
கடுகடுத்த வயிறு...
பாழாய்ப்போன
பல் தினமும்
கேட்கும் பற்பசை
உழைப்பறியா
உடம்புக்கு...
அழுக்குகளை
களைந்தெடுக்க
ஐசுவர்யாராய்
படம் சுற்றப்பட்ட
சவக்காரம்
எல்லாம் முடித்து
பசியாற பார்த்திருந்த
நேரத்தில் பழைய
சோறை போட்ட
புதிய மனைவி.
சலித்துக்கொண்டது மனம்..
தயிரூற்றி உண்ட
களைப்பில்
அலுவலகத்தில் சிறிது
உறக்கம்.
இடையிலேதேனும்
சிந்தனையிடுகை
இடவேண்டும்....
கொட்டாவியுடன்
எழுதினேன் என் வலையில்
உலகத்தில் எல்லோரும்
சோம்பேறிகள்...
**************
இரண்டு:
பாதியிரவொன்றில்
திடுக்கிட்டெழுந்தேன்.
காரணம்
யாதுமில்லை.
மூடப்படாத
கதவாக இருக்கலாம்.
இரண்டு குவளை
நீரருந்தியும்
வரமறுத்தது தூக்கம்.
அரசி தொடரை
பார்க்கவிடாமல்
மின்கம்பியை
துண்டித்த........
அதே எலி...
அரிசிப்பானையை
உருட்டுகையில்...
பதுங்கியிருந்து
பழி தீர்த்ததும்
இலகுவாய்
மூடிக்கொண்டது
இமைகள்.
**************


