க.பாலாசி: ஏன்யா இந்த காண்டுவாதம்?

Friday, November 19, 2010

ஏன்யா இந்த காண்டுவாதம்?

சாதாரணமாவே கல்யாணம் முடிச்சு புதுபொண்டாட்டிய அம்மாவோட விட்டுட்டுப்போற வெளியூரு மாப்ளைகள் பாடு திண்டாட்டம். இதுல பயபுள்ள ஃபாரின்ல இருந்தா கேக்கவாவேணும். இப்டித்தான் எதுத்த வீட்லையும், பக்கத்தால லலித்தாக்கா, அதுக்கடுத்தால ஆனந்தி பெரிம்மா வீட்லையும் பசங்களுக்கு கல்யாணம் முடிச்சி அந்தப்பயலுங்க மூணுமாசம் லீவு முடிஞ்சி ஃபாரின் போயிட்டானுங்க. ஒரு வருசம் முடிஞ்சி புள்ளப்பெத்தபெறவுன்னு அதுவரைக்கும் மாமியா மருமகக்குள்ள எந்த பிரச்சனையுமில்ல. பாராட்டத்தான் செய்யணும். லைட்டா ரெண்டாவது வருசம் தீவாளி, பொங்கலுக்கு வரிசை வய்க்கிறப்பத்தான் எழவெடுத்த சண்ட ஆரம்பிச்சுது. முதல்ல லலித்தாக்கா வீட்ல. அஞ்சு தட்டு நெறைய சாமான்ங்கள  பொங்கச்சீரா அடுக்கிக்கொண்டுவந்தாலும் நொட்டாரம் சொல்ற மாமியாக்காரிங்க எங்கதான் இல்ல. அந்த நொல்லக்கண்ணு லலிக்கு மட்டும் இல்லாமலா போயிடும். என்மொவன் வெளிநாட்ல அவ்ளோ சம்பாரிக்கிறான், நாதியத்த குடும்பத்துல பொண்ணுகட்டி ஒண்ணுத்துக்கும் வழியில்லாம போயிடுச்சுன்னு அக்கம்பக்கத்து அக்காக்களோட சாயந்தரம் ஆனா கதையளக்க ஆரம்பிச்சிடும். கடைசியிலப்பாத்தா இந்தம்மாளோட பொண்ணுக்கு புருஷங்காரனவிட்டு மணியார்டர்ல 200, 300 ஓ அனுச்சிட்டு அடுத்தவன கொறசொல்லும். 

ஆத்துக்குப்போறவ அன்னாந்துகிட்டே போவாளாம், கூத்துக்குப்போறவன் குனிஞ்சிகிட்டே போவானாம் அந்த கதையா பெட்ரூமு, பைப்படி, அடுப்படி, சன்டிவி, ஆனந்தவிகடன், மாட்டுக்கொட்டா, ஏனம் வௌக்கறது, துணி தொவைக்கிறதுன்னு தன்னோட கோவத்தல்லாம் காட்டிட்டே பொழுத ஓட்டுற மாட்டுப்பொண்ணு சும்மாவா இருப்பா. தன்ன திட்டினாலும் கோவப்படாத எந்த பதுசான மனுஷிக்கும்  அப்பனாத்தால திட்டனா பொசுக்குன்னு வரத்தான் செய்யும். கோவத்துல ஒன்னு அழுவா, இல்லன்னா டக்குன்னு எதாவது ராங்கி ரப்பான வார்த்தையா கொட்டிடுவா. மாமியாளோட ஆட்டத்த ஆரம்பிக்க இதோட காரணம் வேணுமாயென்ன. அப்பறமென்ன ஈருகுளில்ல மாட்டின பேன் கதைதான் புதுப்பொண்ணோட பொழப்பு•. அது என்னமோத் தெரியல. எல்லா மாமியாக்காரிகளும் அம்மாவா இருக்கிறவரை நல்லாத்தாங்க இருக்குதுங்க. மருமக வந்தா அப்டியொரு குஜால் ஆயிடுதுங்க. சிக்கிட்டாடா ஒரு அடிமைங்கிறமாரி. 

ஈர நாக்குல யாருக்குத்தான் எலும்பிருந்திருக்கு. தெருக்கள்ல பாத்திங்கன்னா கட்டுக்கழுத்திங்கன்னு நாலுபேரு இருக்கும்ங்க. எங்கன கல்லு கருமாதி, நல்லதுகெட்டது, சாதி சடங்கு, சீமந்தம், வளயகாப்புன்னாலும் ஆரத்தியெடுக்கறதுக்கும் அம்மிக்கல்ல தூக்கி நேரா மூணு சுத்து, ரிவர்ஸ்ல மூணு சுத்து சுத்தறதுக்கும் இதுங்கத்தான் முன்னாடிப்போயி நிக்குங்க. ‘யக்கா பாத்துப்பாத்து கொண்டாந்த மருமவ ஒன்னையே எதுத்து பேசிட்டாம்ல. அப்டி என்னக்கா அவ்ளோ அதப்பா அவளுக்கு’ன்னு மூக்குப்பொடிய மூஞ்சிலத்தூவினாமாரி ஏத்தி விட்டுடுங்க. இதுக்கெடையிலத்தான் ரூமுக்குள்ள குமுறி குமுறி உட்காந்திருக்கிற மருமவ சிறிக்கி ஏர்மெயில் கவர் வாங்கி கண்ணீர் கடிதத்த ஆரம்பிக்கும்.. ‘அன்புள்ள அத்தான், அவ்வ்வ்வ்வ்வ்வ்....... ’ அதுக்கப்பறம் சொல்லவா வேணும், வந்தது போனது, நடந்தது நடக்காதது எல்லாத்தையும் நாலு பக்கமா எழுதி போஸ்ட் ஆயிடும். 

அதுக்கு முன்னாடியே ஆத்தாக்காரி 8 பக்கத்துக்கு கொறயாம எதுத்தவீட்ல எவனாச்சும் என்னாட்டம் இளிச்சவாயன் இருந்தான்னா எழுதச்சொல்லி ‘இங்க பாருடா மோகனு, உம் பொண்டாட்டி சரியில்ல, எது சொன்னாலும் எதுத்து எதுத்து பேசுறா, எதாச்சும் வேல சொன்னா மூஞ்ச சுழிச்சிக்கறா, ஆவூன்னா ரூமுக்குள்ள போயிடுறா, கரண்டு இல்லன்னா இந்த கொடகல்லுல ஆட்டுனா என்னா? அதகூட செய்யமாட்டுறா, அதென்னமோ குசுகுசுன்னு ஒரு நாளைக்கு ரெண்டு தரம் அவவீட்டுக்கு போன் பண்ணி கொறசொல்றா, போன் பில்லு நறையா வருது, சோறு போடுறப்ப தட்ட கீழ வச்சி சல்லுன்னு தள்ளிவிடுறா, உங்கொழந்தைய கொஞ்சநேரம் கொஞ்சக்கூட விடறதில்ல, சாயந்தரம் ஆனாவே பொட்டுதான் பூவுதான் சென்ட்தான். மேக்கப் போட்டுகிட்டு சித்ரா வீட்டுக்கு போயிடுறா, அவளும் இவளும் என்னதான் அப்டி பேசுவாங்களோ தெரியல, திரும்பி வர 9 மணிஆவுது. அதுவரைக்கும் எனக்கு சோறு போடறதில்ல. பேசி முடிச்சிட்டு வந்தப்பறம்தான் எனக்கு சோறு போடுறா. நானே போட்டு சாப்புட தெம்பாயிருக்கு. அவளோட சேர்மானம் சரியில்ல சொல்லிட்டேன் ஆமாம். அப்பா அன்னைக்கு எதோ சொன்னதுக்கும் எதுத்து பேசுறா, இது சரியில்ல. நானும் நீ மனசு கோணக்கூடாதேன்னுதான் எல்லாத்தையும் பொருத்துக்கிறேன். இப்பவும் நீ நல்லாருக்கனும்னுதான் நெனக்கிறேனே ஒழிய நான் என்னத்த மூட்டக்கட்டிகிட்டு போவப்போறேன் (ரெண்டு சொட்டு கண்ணீரு) சொல்லு. உம்பொண்டாட்டிய அடக்கி வைய்யி, இல்லன்னா உம் அம்மாவ நீ உசிரோட பாக்கமுடியாது. அவ்வ்வ்வ்வ்’ அப்பறம் எடையில எடையில மானே தேனே பொன்மானே.....

ங்ங்கொய்யால இந்தமாதிரி லெட்டர படிக்கிறவன் துபாயிலையும், சிங்கப்பூருலையும் நிம்மதியா வேலை செய்யமுடியும்கிறீங்க. ஏறச்சொன்னா எருதுக்கு கோவம் வரும், இறங்கச்சொன்னா நொண்டிக்கு கோவம் வரும்னு ஒரு பழமொழி உண்டு. இந்த மத்தளத்துல ரெண்டுபக்கமும் அடிவாங்குற தோலு மாதிரி கல்யாணம் முடிச்சிட்டு ஃபாரின் போற மாப்பிள்ளைங்க பொழப்பு நாத்தப்பொழப்புங்க. இதுங்க ரெண்டுபேரையும் சமாளிச்சு ஒருவழியா ஓஞ்சிப்போயிடுவான் அந்த படுபாவி. அது ஏன்டா உனக்கு இந்த ஃபீலிங்குன்னு நினைக்கிறீங்களா? ஏரி நிறைஞ்சா கரை கஸ்ஸ்ஸ்ஸியத்தானங்க செய்யும். எங்கத்தெருவில அஞ்சாரு குடும்பங்கள்ல இந்த நெலமத்தாங்க. இதெல்லாம் நெனச்சுப்பாக்குறப்பதான் ஏன்யா இந்த காண்டுவாதம்னு தோணுது.  



32 comments:

vasu balaji said...

இப்புடி பாரு. இதே பய புள்ள உள்ளூர்ல வேல செஞ்சாலும் இதே சண்டை வேற மாதிரி இருக்கும். என்னா நரகமாயிருக்கும். அதுக்கு இது மேலில்ல. கடுதாசி வந்துச்சா, டெம்ப்ளேட் பதில் எழுதி அனுப்பிட்டு லல்லால்லான்னு இருக்கலாம் பாரு.:)). அந்த பழமொழியெல்லாம் நச் நச்னு இருக்கவேண்டிய இடத்துல உக்காருது. கடைசியா அந்த படம். இன்னொரு அருமையான வெள்ளிக்கிழமை ரிலீஸ்.

ப.கந்தசாமி said...

இந்த மாதிரி பய புள்ளயெல்லாம் கல்யாணமே பண்ணீக்கப்படாதுங்க.

பவள சங்கரி said...

பாலாசி ......சும்மா சொல்லபடாது, நல்லாவே அக்கம் பக்கத்து ஊட்டு நாயத்தை ரசிச்சிருக்கீங்க....முன்னாடி வந்திருக்கிற இரண்டு பின்னூட்டத்தையும் அப்படியே வழிமொழிகிறேனுங்க.......

ரோகிணிசிவா said...

mm , enamo po sammy ellam kalyanam pathi adikadi pathivu varuthu, nanga ooruku kaduthasu podanumo

வினோ said...

பாலாசி யோசிக்க யோசிக்க எனக்கு சிரிப்பா வருது... நமக்கும் same blood தான்... ஆனா என்ன, எல்லாம் போன்ல வந்தது...

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாசி....கலக்கல் நடை, நல்ல ஓட்டம், மிகவும் ரசித்தேன். உங்க வட்டார மொழி வழக்கும், சரளமாக புகுந்து வரும் பழமொழிகளும் மிக அருமை. வாழ்த்துக்கள்.

Jerry Eshananda said...

புதிய பழமொழிகள் தெரிந்து கொண்டேன் பாலாசி ..

priyamudanprabu said...

ஆத்துக்குப்போறவ அன்னாந்துகிட்டே போவாளாம், கூத்துக்குப்போறவன் குனிஞ்சிகிட்டே போவானாம் அந்த கதையா
/////
ha ha

கலக்கல்ப்பா
என்னா நடை....
நல்லாவருதுங்க பழமொழி...

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க. டிவி பார்க்கிறதுல வர போட்டியை விட்டுட்டீங்க.

அரசூரான் said...

என்ன பாலாசி, பதிவுல் ஒரு பயம் தெரியுது... கிளைமாக்ஸா? விடு விடு... எவ்வளவோ பார்த்திருப்ப... இத சமாளிக்க மாட்டியா என்ன? சரி ஒரு மாறுதலுக்கு ஃபாரின் பொண்ணா பார்த்திடுவோமா உனக்கு?

ஈரோடு கதிர் said...

தம்பி

ஆத்துக்குப்போறவ அன்னாந்துகிட்டே போவாளாம், கூத்துக்குப்போறவன் குனிஞ்சிகிட்டே போவானாம்

இந்தக் கதையும் கொஞ்சம் எழுதேன்!

ஈரோடு கதிர் said...

யெப்பா

செம கலக்கல்

ம்ம்ம்

அடிச்சுதூள் கிளப்பு

அகல்விளக்கு said...

யப்பே....

என்னா வியாக்கானம்.....

கலக்கறீங்க அண்ணா!!!

அடிக்கடி கல்யாணம் பத்தி பதிவு வருது... இருக்கட்டும் இருக்கட்டும்...

sakthi said...

ங்ங்கொய்யால இந்தமாதிரி லெட்டர படிக்கிறவன் துபாயிலையும், சிங்கப்பூருலையும் நிம்மதியா வேலை செய்யமுடியும்கிறீங்க. ஏறச்சொன்னா எருதுக்கு கோவம் வரும், இறங்கச்சொன்னா நொண்டிக்கு கோவம் வரும்னு ஒரு பழமொழி உண்டு

அடங்கொன்னியா கலக்கறே அப்பு

கலக்கறே நடத்து நடத்து

அன்பரசன் said...

//எங்கத்தெருவில அஞ்சாரு குடும்பங்கள்ல இந்த நெலமத்தாங்க. இதெல்லாம் நெனச்சுப்பாக்குறப்பதான் ஏன்யா இந்த காண்டுவாதம்னு தோணுது//

ஓஹோ

'பரிவை' சே.குமார் said...

இது மாதிரி நிறைய இருக்குங்க... வெளிநாட்டில் இருப்பவன் மட்டுமல்ல... உள் நாட்டிலும் இதே மாதிரி நிறைய இருக்கு.

கலகலப்ரியா said...

ம்ம்... அருமை பாலாசி..

ஹேமா said...

வெளிநாட்டு ,உள்நாட்டு விவகாரமெல்லாம் விளக்கி...கலக்கி வைக்கிறீங்க பாலாஜி !

பத்மா said...

பாலா ரொம்ப யோசிக்கிறீங்க போல .என்னதான் பிளான் பண்ணி வைச்சாலும் வாழ்க்கை அது ஒரு புது கோணத்தில வரும் . இம்புட்டெல்லாம் யோசிக்காம சட் புட்னு சம்சார சாகரத்தில கலக்கிற வழிய பாருமேன்.
உங்க அம்மா பாவம் ரொம்ப சாதுங்க.

சத்ரியன் said...

//ங்ங்கொய்யால இந்தமாதிரி லெட்டர படிக்கிறவன் துபாயிலையும், சிங்கப்பூருலையும் நிம்மதியா வேலை செய்யமுடியும்கிறீங்க.//

ங்கொய்ய்ய்யால..! எப்பூடியெல்லாம் யோசிக்குது பயபுள்ள..!

சத்ரியன் said...

/ரூமுக்குள்ள குமுறி குமுறி உட்காந்திருக்கிற மருமவ சிறிக்கி ஏர்மெயில் கவர் வாங்கி கண்ணீர் கடிதத்த ஆரம்பிக்கும்.. ‘அன்புள்ள அத்தான், அவ்வ்வ்வ்வ்வ்வ்....... ’ அதுக்கப்பறம் சொல்லவா வேணும், வந்தது போனது, நடந்தது நடக்காதது எல்லாத்தையும் நாலு பக்கமா எழுதி போஸ்ட் ஆயிடும். ///

அட அட அடா!

Good citizen said...

பாஸ்,நீங்கள் நகைசுவையாக சொன்னாலும் எததனையோ வெளிநாட்டுவாழ் ஆண்களுக்கு இது நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்

நான் என் வாழ்க்கையில் இதை அனுபவ
போர்வமாக அனுபவத்திருக்கிறேன்,,நான்
மணன்முடித்து 6 மாததிலேயே பிரான்ஸ் வந்துவிட்டேன், ஒரு வருட கால்ம் மாமியார் மருமகள் பிரட்சனை உயிரை எடுத்தது,,ஆனால் அதிஷ்ட வசமாக
ஆண்டவனோ யாரோ என் அம்மாவுக்கு என் மனைவியின் அருமையை புரிய வைக்க ஒரு சந்தர்ப்பம் அமைத்தான்,, என் அம்மாவுக்கு ஒரு அறுவை சிகிச்சை
நடந்து அதன் காரணமாக நம்மூரில் நடந்ததல்லவா? அவர் மரணதை நெருங்கிவிட்டார்,, அப்போது தனியொரு ஆளாய் சாமாளித்தது என் மனைவிதான் ,,கடைச்சி தருவாயில் என் அம்மாவுக்கு மனைவியின் அருமை புரிய வந்தது ,, என்னிரு தங்கைகளையும் என் மனைவியின் கையில் கொடுத்துவிட்டு கண்ணை முடினார்,, மூன்று வருடம் கழித்து தான்நான் என் மனைவியை என்னுடன் கூட்டிக் கொண்டேன் ,,
இப்போது எல்லோருமே சந்தொஷமாக இருக்கிறோம்,, அதனால் விடிலிருந்து வரும் குடுமி சண்டைகளை பெரிதாக எடுத்து கொள்ளாதிர்கள்,, முடிந்தவரை இருவருக்கும் சமாதானமாக ஆறுதலாக பேசுங்கள் வழ்க்கை வளமாக இருக்கும்

ஜெயசீலன் said...

பழமொழில்லாம் அருமைங்க பாலாசி... கலக்கிட்டீங்க...

சத்ரியன் said...

// எதுத்தவீட்ல எவனாச்சும் என்னாட்டம் இளிச்சவாயன் இருந்தான்னா..//

ஊருக்கு ஒருத்தன் உன்னயாட்டம் இருந்தா போதுமே அப்பு..!

காமராஜ் said...

மொழி கிடந்து துள்ளுது பாலாசி.
வட்டார வழக்கு அத விட வட்டாரப்பழமொழிகள்
தூள் கிளப்புகிறது.'ஏருன்னா எருது எரங்குன்னா நொண்டி' நல்லா கோபம் வருது.
பாலாசி திருஷ்டி போட்டுக்குங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

அன்பேசிவம் said...

:-) இதுக்கு சிரிக்கனுமா....

பாலாசி எல்லாரும் கல்யாணத்தைப்பத்தி பேசி மனச கெடுக்கபாக்கிறாங்க.. சூதானமா இருந்துக்கப்பூ அவ்ளோதான் சொல்லுவேன்...

ஹுஸைனம்மா said...

கல்யாணம் பண்றதுக்கு முன்னே இப்படியெல்லாம் கலங்குறது ஜகஜம்தான். இதுக்கெல்லாம் பயந்து கல்யாணம் பண்ணாம இருந்தா கதக்காவுமா? :-))))

தாராபுரத்தான் said...

நல்லா வேடிக்கை பார்த்திருக்கீங்க.

Chitra said...

வானம்பாடிகள் said...

இப்புடி பாரு. இதே பய புள்ள உள்ளூர்ல வேல செஞ்சாலும் இதே சண்டை வேற மாதிரி இருக்கும். என்னா நரகமாயிருக்கும். அதுக்கு இது மேலில்ல. கடுதாசி வந்துச்சா, டெம்ப்ளேட் பதில் எழுதி அனுப்பிட்டு லல்லால்லான்னு இருக்கலாம் பாரு.:)). அந்த பழமொழியெல்லாம் நச் நச்னு இருக்கவேண்டிய இடத்துல உக்காருது. கடைசியா அந்த படம். இன்னொரு அருமையான வெள்ளிக்கிழமை ரிலீஸ்.


...... ரிப்பீட்டு!

arasan said...

ம்ம்ம் .. கலக்கலான நடை...
அப்படியே பழமொழிகளும்..
ரொம்ப நல்லா இருக்கு...

க.பாலாசி said...

கருத்திட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO