க.பாலாசி: படர்க்கை

Friday, February 3, 2012

படர்க்கை

*

பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன்.

‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

‘இதான் உன்னோட அத்த’

‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’

‘இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன்.

எனக்கு சித்தியான பாலாவுடைய அம்மா சின்ன வயதிலேயே இறந்துவிட்டாள். இவளைப் போட்டுவிட்டு சித்தப்பனும் எங்கோ ஓடிவிட்டான். என்னதானிருந்தாலும் அப்பனாத்தா இல்லாத பிள்ளைகளை வளர்ப்பதென்பது புட்டிப்பால் கொடுப்பது போலத்தான். எண்ணையும் தண்ணீரும்போல ஒரு ஒட்டு இல்லாமல் இடைவெளி இருந்துகொண்டேயிருக்கும். வீட்டில் பெண்பிள்ளை இல்லாத குறையாக நாங்கள்தான் வளர்த்தோம். எனக்கு ஒரு தங்கையாக அம்மாவுக்கு ஒரு நல்ல மகளாக இருந்தாள். படிப்பு இத்யாதிகள் எதிலும் குறையில்லை.  

எடத்தெருவில் இருந்த 45 குழி இடத்தில் 15 குழியை நாங்களே வைத்துகொண்டு மீதி இடத்தை விற்கும்போது பாதி பணத்தில் வீடு கட்டிக்கொண்டு மீதியில் பாலாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் எண்ணினேன், அம்மாவுக்கும் அதான் எண்ணம். ‘நம்மள விட்டா அவுளுக்கு யாருப்பா இருக்கா?’ அம்மா அடிக்கடி சொல்லுவாள். வீடு கட்டி குடியும் போனாம். 10 பவுனுக்கும், சீர் செனத்திக்கும் போக எப்படியும் ஒரு கைப்பங்கு பணம் இருக்கும். அந்தப் பணத்தில் பிறகு என் கல்யாணத்தைப் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தேன்.

ஆனால் நடந்தது நேர்மாறாகத்தான். பாலாவுக்கு ஜாதகம் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லையென தட்டிக்கொண்டே போனது. வந்த ஜாதகத்திலும் பாதிக்கு மேல் புலுத்தி ஜாதகமாகத்தானிருந்தது. சரி இரண்டாந்தாரம் எதாவது கிடைக்குமா என்றும் தேடினோம். கொடுமையிலும் கொடுமை பெண்களை பிரத்தியில் ரெண்டாம்தாரத்திற்கு கட்டிக்கொடுப்பதுதான். யாரும் அந்த முறையை விரும்ப மாட்டார்கள். ஒரே ஒரு லாபம் இரண்டாம் தாரத்திற்கு கொடுத்தால் ஜாதகம் பார்க்க தேவையில்லை.  கும்மோணத்தில் ஒருத்தன் கிடைத்தான் நாலு பிள்ளைகளுடன். கேட்டவுடனே முகம் சுளித்தாள். எங்களுக்கும் சரியாகப் படாமல் விட்டுவிட்டோம். ரெண்டு வருடம் ஜாதகங்கள் வருவதும் போவதும், பெண் பார்க்க வருவதும் போவதுமாகத்தானிருந்தது. எதுவும் அமையவில்லை.

அம்மாவுக்கு சுகர் வந்து வாய் கோணிவிட்டது. கைகால்கள் அடிக்கடி மறப்பதும், சோம்பி விழுவதுமாக இருந்தாள். அந்த நேரத்தில்தான் வேறு வழியில்லாமல்தான் எனக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. மாமாவிடம் சொல்லி பெண்பார்க்கச் சொன்னார்கள். சொல்லி வைத்தது போல இந்த கவிதா கிடைத்தாள். பாலாவுக்கு மாப்பிள்ளை பார்த்த அனுபவத்தினால், முதலில் பார்த்த பெண்ணே ஒருவனுக்கு மனைவியாக அமைவதென்பது இக்காலகட்டத்தின் ஜென்ம பலனாகத் தெரிந்தது.

கவிதாவுக்கும் எனக்கும் திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின்போது மணமக்களுக்கு பின்புறம் காமாட்சி விளக்கு பிடிக்க கட்டுக் கழுத்தியைத்தான் நிற்க வைப்பார்கள்.நான்தான் பிடிவாதமாக பாலாவை காமாட்சி விளக்கு பிடிக்க வைத்தேன். அவளுக்கு அதில் ரொம்ப சந்தோஷமும் கூட. திருமணம் முடிந்தபின் பாலாவும், கவிதாவும் ரொம்ப அந்நியோன்யமாக இருந்தார்கள். அவர்களுக்குள் நல்ல நட்பும் இருந்தது. பாலா, அண்ணி அண்ணி என்று வாய்நிறைய அழைப்பாள்.

புதிதாக சென்ட் அடிப்பவன் அக்குளை மோந்து மோந்து பார்ப்பது மாதிரிதான் புதிதாக கல்யாணம் பண்ணினவர்கள் பாடு, மனைவிக்கு கணவனும் சரி, கணவனுக்கு மனைவியும் சரி. ஒருவரையொருவர் மோந்துகொண்டே இருப்பர். போலவேதான் நாங்களும். காலை எழுத்ததும் இருவரும் குளித்துவிடுவோம் என்றாலும் கலவி முடிந்தவுடன் பாத்ரூமுக்கு சென்று கைகால்கள் இத்யாதியை கழுவிவிட்டு வருவது எங்கள் பழக்கம். கூடாரத்தில் அம்மாவும் பாலாவும் படுத்திருப்பார்கள். நானும் கவிதாவும் சத்தம் வராமல் பொறுமையாக போய்வருவோம்.

ஒருநாள் பிற்பகலில் முடிந்தது. கூடாரத்தில் பாலா உட்காந்திருந்தாள். கவிதா கூடாரத்தின் வழியே கொல்லைக்குப் போகவும், ‘என்ன அண்ணி பகல்லியேவா?’ என்று சாடையாக கேலி செய்தாள். ரூமில் இருந்த எனக்கும் கேட்டது. கொஞ்சம் சங்கடமும், சங்கோஜமும் இருந்தாலும் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனக்கு ஒருவாரம் இரவு, ஒருவாரம் பகலாக வேலை மாறியிருந்தது. நாளாக நாளாக நாங்களிருவரும் வீட்டிலிருந்தாலோ அல்லது பேசிக்கொண்டிருந்தாலோ பாலா பக்கத்து வீட்டுக்குப் போக ஆரம்பித்தாள். என்னிடமும் அவளுக்கு பேச்சு குறைந்தது. கவிதாவுடன் எப்போதும்போல் இருந்தாள். புது உறவினர்கள் வருவதும்போவதும், நாங்கள் ஊர் சுற்றுவதுமென இரண்டு மூன்று மாதங்கள் பாலாவின் திருமணம் பற்றி எதுவும் பேசவில்லை. பாலாவும் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தனியாக படுக்க பயந்துகொண்டு எப்போதும் அம்மாவுடன் கூடாரத்தில்தான் படுப்பாள் பாலா. ஆனால் சிலநாட்களாக மளிகை சாமானும், பீரோவும் இருக்கும் ரூமில் படுத்துக் கொள்வதாக அம்மா சொன்னாள். என் ரூமுக்கு அடுத்த ரூம்தான் அது. ஒருநாள் பின்னிரவு நேரத்தில் முனகல் சத்தம் அவள் ரூமிலிருந்து கேட்டது. கவிதாவை பார்த்தேன். நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். நானும் ஜுரத்தில்தான் முனகுகிறாள் போலிருக்கிறதென்று அம்மாவை எழுப்பி பார்க்கச்சொன்னேன். ‘அதுல்லாம் ஒண்ணுல்ல போய் பேசாமப் படுடா’ என்றாள். மறுநாள் மறுநாள் அதே நேரம் அதே முனகல் தொடர்ந்தது.

அம்மாவிடம் எதுவும் கேட்க முடியவில்லை. ஒருநாள் பகலில் வீட்டிலிருந்த நேரத்தில் பாலா கோவிலுக்கு போயிருந்தாள். மனதில் அழுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தை தீர்த்துகொள்வதற்காக நான் அவளுடைய அறைக்குள் நுழைந்தேன். கவுச்சி வாடை அடித்தது. அம்மா அலறி அடித்துக்கொண்டு பின்னாலயே வந்து ‘அந்தண்டப்போ மொதல்ல’ என்று கையைப் பிடித்து தள்ளினாள்.

‘என்னம்மா என்னமா பிரச்சனை?’ எதோ மர்மங்களை உணர்ந்தவனாய் கேட்டேன்.

‘பாவம் பண்ணிட்டம்டா மவனே.. பாவம் பண்ணிட்டம்டா, வயசுக்கு வந்த பொண்ண வச்சிகிட்டு ஒனக்கு கல்யாணம் பண்ணது எவ்ளவு தப்புன்னு ரெண்டுவாரமா அனுபவிக்கிறன்டா.. அந்த பாவிக்குதான் அமையலையே பெத்ததுக்காச்சும் கால்கட்டு போட்டுப் பாப்பம்னு தானே செஞ்சேன்... இப்டி ஆவும்னு நெனச்சிப்பாக்கலையேப்பா...’ அம்மா சத்தம்போட்டு அழமுடியாமல் மழுமாறிக்கொண்டே கதறினாள். ‘உன்னயாச்சும் தனிக்குடித்தனம் அனுப்பிருக்கணும் அதுஞ்செய்யாம உட்டனே.. ஒருத்தி வாழ்க்கயையே நாசம் பண்ணிட்டம்பா... இந்த பாவத்த எங்கபோயி தெத்தப்போறன்னு தெரியலையே......’

என்னால் அம்மாவை சமாதானப்படுத்த முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுதாள். பாலாவுக்கு இப்ப என்ன பிரச்சனை என்பதை அறிவதிலேயே மனசு கூடுதலாக பிரயத்தனப்பட்டு அலைந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் அன்று இரவே பின்னிரவில் தெரியாமல் அவள் அறைக் கதவைத் திறக்க முயன்றேன். முடியவில்லை. சாவித் துவாரத்தின் வழியே பார்த்தேன். போர்வைக்குள் முனகிக்கொண்டே சுருண்டு கிடந்தாள். அருகில் ஒரு பாவாடை நிறைய இரத்தக் கறையாக இருந்தது. எனக்கு சூழ்நிலை புரிந்தது. முதன் முதலாக வாய்விட்டு கதறி அழுதேன். அம்மா எழுந்து வந்துவிட்டாள். ‘பாத்தியாடா.... பாத்தியாடா...’ என்று அவளும் கட்டிக்கொண்டு கதறினாள். ஆனாலும் பாலா ரூமில் முனகல் நிற்கவில்லை.

மறுநாளிலிலிருந்து தீவிரமாக வரன் தேட ஆரம்பித்தேன். மறுபடியும் அதே நிலைதான். பாலா சித்தப் பிரமை பிடித்ததுபோல் தானகவே பேசிக் கொள்ளத் தொடங்கினாள். யாருடனும் பேசுவது கிடையாது. கவிதாவுடன் அறவேயில்லை. பக்கத்துவீட்டுக்கு போவதும் நின்றுவிட்டதுபோலும். அந்த அறையிலேயே கிடந்தாள். ஒருநாள் அம்மாவும் நானும் ரெங்கபாஷ்யம் கல்யாணத்திற்கு சென்றிருந்தோம். கவிதா மட்டும் வீட்டிலிருந்தாள். அன்றுதான் அந்த விபரீதமும் நடந்தது. நாங்கள் திரும்பி வரும்போது கவிதா தலையில் அடிபட்டு ரெத்த வெள்ளத்தில் துடித்துகொண்டிருந்தாள். காது ஒருபக்கம் பிய்ந்து குழவிக்கல்லுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. பாலாவைத் தேடினேன், ஆளைக்காணோம். எனக்கு புரிந்துவிட்டது.

•••••••

நல்ல மழை. திருச்சி பேருந்து நிலையத்தினுள் சுக்கு காபிக்கு கூவி கூவி அழைத்தார்கள். அந்தப் பின்னிரவின் குளுமைக்கும், சாரல் ஊதலுக்கும் அது தேவையாகவும் பட்டது. சுக்கு காபியுடன் ஒரு தண்டவாளத் தூணினோரம் சாய்ந்து நின்றேன். ‘வர்ரீங்களா?’ என்று யாரோ கூப்பிட திரும்பினேன். ஒயர் கூடையுடன் பாலா நின்றிருந்தாள். ஒரு சில பெரிய பேருந்து நிலையங்களில் இதுபோல ஒயர் கூடையுடன் நிற்கும் பெண்களை பார்த்திருக்கிறேன். பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் விலைமாதென்று தெரிந்துவிடும். பாலாவை கொஞ்சம் நிதானித்துதான் அடையாளம் கண்டேன். தூக்கிவாரிப் போட்டது. நெஞ்செல்லாம் அடைத்தது. பாலா என்னை அடையாளம் காணவும் வாய்விட்டு ஓவென்று அழுதபடியே கண்மண் தெரியாமல் ஓடினாள். ஈரோட்டிலிருந்து பேருந்து நிலையத்தின் உள்ளே வந்த பேருந்தொன்று வந்த வேகத்தில் அவள்மீது மோதவும் பின் சக்கரம் அவள் மண்டையில் ஏறியது.

••••••

பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன்.

‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

‘இதான் உங்க அத்த’

‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’

இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன். கண்ணீர்தான் வரவில்லை.


நன்றி பண்புடன் இணைய இதழ்


5 comments:

vasu balaji said...

க்ளாஸ்:)

அமர பாரதி said...

என்ன கதைடா சாமி. முதல்ல தான் கொஞ்சம் இழுத்த மாதிரி இருந்தது, ஆனா சட்டுனு முடிஞ்சிருச்சு.

Radhakrishnan said...

கொஞ்சம் கடினமாக இருந்தது புரிந்து கொள்ள. கதையை படித்துவிட்டு யோசித்து பார்த்தேன். மிகவும் அருமை. நன்றி பாலாசி. நல்லதொரு தலைப்பு கூட.

everestdurai said...

அருமை தொடரவும்

அகல்விளக்கு said...

அழுத்தம் அண்ணா...

:)

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO