க.பாலாசி: ஒரு கூடும் சில குளவிகளும்..

Friday, January 3, 2014

ஒரு கூடும் சில குளவிகளும்..

.

முன்புபோலில்லை. கொஞ்சம் வயதாகிவிட்டதென எண்ணுகிறேன். ரெண்டுவரி தட்டுவதற்குள் நாக்கு தள்ளுகிறது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. கைவிரல்கள் ‘ஏன்டா உனக்கிந்த வேலை என்பதாக..’.. ‘சும்மா உக்காந்தா துருப்பிடிச்சாப்போவப்போற‘ என்கிறது மனது. செவனேன்னு உட்காந்திருப்பதில் ஒரு அலாதிப்பிரியமும் மிகுந்த சௌகர்யமும் கிடைக்கிறது. என்னவாச்சும் படிப்பமாவென்றால் ச்சீ... போ..போ.. வேலையப்பாரு என்ற நினைப்புவேறு. வேலைநேரம் போக தொலைக்காட்சி கொஞ்சம் விடுதலை, அதோடு இணையம் கொஞ்சம். எதுவும் எழுதாமலிருப்பதில் கிட்டும் நிம்மதியனைத்தும் என் கோடானுகோடி வாசகர்களுக்கு(!!!)தானேயொழிய எமக்கொன்றுமில்லை யேசப்பா... ஆமேன். ஆயினும் சீர்கேடுகளடர்ந்த இச்சமூகத்தை என்‘னெழுத்தால் காத்தருள வேண்டுமென்ற மனவேட்கை இருக்கத்தான் செய்கிறது. ரசிகர்களின் வேண்டுகோளை நிராகரிக்க மனமில்லாமல் எதையாவது செய்தே ஆகவேண்டிய சூழல். ஆகவே செழித்தோங்கியிருக்கும் இந்நாட்டின் வளங்களையும், பரிபாலங்களையும் நான் கட்டிக்காப்பாத்தாம விடமாட்டேனென்ற உறுதிமொழியில்...

••

‘ராஜா இருக்கவரையும்தான் ராஜாவீட்டு நாய்க்கு கூட மதிப்பு, தெரிஞ்சிக்க‘ சண்டை சமயங்களின் அப்பாவின் வாய்மொழி. அவர் போனபிறகு அதை நிஜத்தில் உணர்கிறேன். அவர் இருந்தவரை குணநலன்களுக்கு அப்பாற்பட்டு பெருந்தலை என்ற மரியாதை உறவுகளினிடத்து உண்டு. இப்போது ‘தலையே போயிடுச்சி இனிமே என்னகெடக்கு‘ போன்ற மனநிலை அவர்களினிடத்தும். போலவே அவருக்குப் பின்னான அம்மாவின் நிலை. துணையிழந்த தனிமை. ‘என்ன யாருப்பா மதிக்கறா, என்னக்கேட்டா எல்லாஞ்செய்றீங்க? நாவொரு கருவேப்பில கொத்துமேரி, வேணுன்னாதான்...  ம்ம்ம்’ ஒரு பெருமூச்சுடன் எதையும் எதிர்பார்க்காத நிலை. கூடம், மோட்டுவலை, நீர்நிறைக் கண், படுக்கை, சோறு, எனது சௌகர்யமும், அவ்வப்போதைய அழைப்பும் போதுமானதாயிருக்கிறது. அப்பாவிற்குப்பின் அம்மாவுக்குத் தேவையான கௌரவத்தை என்னளவில் கொடுத்தாலும், குடும்பச்சூழலில், உறவுகளிடத்தே தோல்வியே மிஞ்சுகிறது. என்னதான் பாடுபட்டாலும், உயர்த்திப்பிடித்தாலும் யதார்த்தத்தில், இச்சமூக கட்டமைப்பில் அப்பாக்கள் மட்டுமே ராஜாவாக வாழ்ந்தும் மறைந்தும் போகிறார்கள். ஏனையோர்* மேற்சொன்ன...

••

அப்பா இறந்த இரண்டொரு வாரங்கள் தவிர்த்து அம்மா பெரிதாக அலட்டிக்கொள்ளாததுபோல் தோன்றியது. நானும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அல்லும் பகலும் அவர் நினைவுதான். ம்ம்ம்முடியல.. அவர் கடைசி மூச்சை நானே சுவாசித்ததனால் இருக்கலாம். அந்தக் கடைசிப்பார்வை... கொடுமை... நான்கு மாதங்கள் கடந்தது, எங்களுக்கு ஆண் குழந்தை. பேரன் என்றவுடன் அம்மாவுக்கு அளப்பறியா ஆனந்தம், ஒரு பெரும் சிரிப்பு, மகமாயி...மகமாயி என்று நன்றிக்கடன். கிட்டத்தட்ட கேள்விப்பட்ட எல்லோருமே சொல்லிவிட்டார்கள் ‘அப்பா இருந்திருந்தால் பூரித்திருப்பார்‘. மருத்துவமனை.. அம்மாவை அழைத்துவந்து அவள் மடியில் மகனை கிடத்தினேன். ‘அப்பா மேரியே இருக்கான்ல... அப்பாவேதான் தம்பி பொறந்திருக்காரு, என் தங்கம் பெத்த தங்கமே... மாருடன் அனைத்து கொஞ்சினாள்.. இருவரும் அழுதோம்.. மகனும் அந்நேரம்...

••

மனது அம்மா உணவக இட்லி போல, ஒருநாள் கல்லாகவும் (இறுக்கமாகவும்) மறுநாள் பஞ்சுபோல லேசாகவும் இருக்கிறது. சூழ்நிலைகள், தேவைகள், வேலைகள்.. இன்னும் சில‘கள்... அப்ரஸன், டிப்ரஸன், கப்ரஸன்... என்ற ஆங்கில பண்புத்தொகைக்கொப்ப.. எல்லாவற்றிலுமே எடைக்குறைச்சல்தான் நமக்கு சரிவரும்போலிருக்கிறது. இந்த செருப்பு வெயிட்டா இருக்கு வேண்டாம். லைட் வெய்ட் வீ.கே.சி. கொடுங்க, ஆடைகள் கூட உடம்பில் இருப்பது தெரியாமலிருந்தால்தான் சௌகர்யம். 30 நாளைக்கு ஒருதடவை தலைமுடி கழிக்காவிட்டால் அதுவும் பெரிய பாரம். கூடவே பொண்டாட்டியாக இருந்தாலும் நாப்பத்தஞ்சு டூ அம்பது கிலோ இருந்தால் கச்சிதம். போலவேதான் மனதும். ஒருநிலைக்குமேல் அழுத்தங்கள் கூடக்கூட எல்லாத்தையும் தூக்கித் தூரப்போட்டுவிட்டு பாரம் குறைத்தால் தேவலை. எப்படியாவது மகிழ்ச்சியும், நிறைவும் தேவையாகிவிடுகிறது. எழுத்தும் இலக்கியமும் எள்ளளவும் மனதை லேசாக்குமென்று தோன்றவில்லை. அதைவிட்டு விட்டு விலகி நிற்பதே என்னளவிற்கொண்ட அனுபவம்.

••

இட்லி என்றவுடன் ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல இட்லி தின்பதற்காக நாய்படா பாடு பட்டிருக்கிறேன். 1 முதல் 18ரூபாய் வரையிலான இட்லிகளை க(உ)ண்டாயிற்று. ஆனாலும் திருப்தி? ம்கூம். ஈரோடு முழுக்கவே விதவிதமான இட்டேலி, இட்டிலி, இட்ட்லி மற்றும் இட்லிக்கடைகள். பொண்டாட்டி வந்த புதிதில் ஒருகல்லு மாவாட்ட நாலு மணிநேரம் எடுத்துக்கொள்வார். பிறகு படிப்படியாக குறைந்து அல்லது தேர்ந்து மூனேமுக்காலுக்குள் முடித்து சாதனையும் செய்தார் (மனைவிகளுக்கு இ‘ர்’ விகுதி அவ்வளவு பொருத்தமில்லை) கடைசிவரைக்கும் இட்டேலி பச்சரிசிக் கொழுக்கட்டைப் பதத்தில் மட்டுமே கிடைத்தது. இன்னும், இன்றும்.. உடல்நிலை சரியில்லாத அம்மாவுக்கு ஒரு நல்ல இட்லி வாங்கிக் கொடுப்பமேயென்று பிரயத்தனப்பட்டதில் கண்டது நளன் என்றொரு உணவகம். எதோ சித்தாவோ, ஆயுர்வேதாவோ அந்த முறையில் உணவுகளை தயாரித்துப் பரிமாறுகிறார்கள். நல்ல முயற்சி. ஒரு இட்டேலி எட்டு ரூபாய். மேலே ரெண்டு மூணு கேரட் துருவல். என்போன்ற நோஞ்சான்கள் மீதெரிந்தால் அவ்விடத்தே காலி. கொலை வழக்குதான். ஆனால் மற்ற உணவுகள் நல்ல முறையில் நன்றாகவே செய்கிறார்கள். ப்ப்ரமாதம். ஒரு நாலு தப்படியில்தான் ஈரோடு கதிர் அவர்களின் அலுவலகம். அவர் காசுலேயே சாப்பிட்டால் இன்னும் ப்ப்ரமாதமாக இருக்கும்.

••

கற்பனைகளும், கற்பிதமுமென் முதல் எதிரியென்பேன். கொல்லுகிறது. எ.கா.‘வாக மிதியுண்ட எறும்பின் வலி எனக்கு கற்பிதமாகிறது, அல்லது அப்படியாவதுபோல் கற்பனை தொடங்குகிறது. எதோவொருநாள் கும்பகோணம் பஸ்டாண்டில் 1000 ரூவாயை தொலைத்த கருவாட்டுக் கிழவியின் அழுகுரல், அவளின் வேதனைக்கூடிய முகம், மனம் இப்போதும் நிழலாடுகிறது, கனவுகள் வரை அதன் நீட்சி. இதுபோல் எல்லாமும், எல்லாரும், சந்தோஷத்தருணங்களற்ற வேதனைகள், வலிகள், உயிர்வலிகள். எல்லோருக்கும் இருக்கும் வெறும் பரிவும் பட்சாதாபமும்தானென்றாலும் இது கொஞ்சம் அதிகம். வலியின் கற்பிதங்கள் கொடுக்கும் மனவலி வேறுவிதமான இம்சை. வார்த்தைகளில்லை.. மீளவேண்டும்.

••

10 comments:

கும்மாச்சி said...

தந்தை இழப்பு தாயின் தவிப்பு, இட்லி என்று எண்ணங்களை கொட்டியிருக்கிறீர்கள்.

பகிர்விற்கு நன்றி.

ஓலை said...

Happy New Year பாலாசி.

'பரிவை' சே.குமார் said...

அப்பாவின் இழப்பு...
அம்மாவின் தவிப்பு...
தங்களின் நிலை...
இட்லி...
என எண்ணங்களைக் கொட்டியிருக்கிறீர்கள்...

தொடர்ந்து எழுதுங்கள்...

ஆரூரன் விசுவநாதன் said...


ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நீங்க எழுதத் தொடங்கியது.......

தேர்ந்த எழுத்துக்கள்.....

வாழ்த்துக்கள் பாலாசி.......

dheva said...

பாலாசி அப்பாவின் இழப்பு என்ன செய்யும் என்பதை நானும் உணர்ந்த்திருக்கிறேன். சமீபத்தில் எனக்கும் அது நிகழ்ந்தது.

மீண்டும் நீங்கள் எழுத வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. சிறந்த படைப்பாளி நீங்க்ள் தொடர்ந்து எழுத வேண்டும்.

ப்ரியங்களு வாழ்த்துகளும்....

Mahi_Granny said...

பாலாசியை பார்த்ததில் மகிழ்ச்சி.அதிக நேரத்தை பையனுடன் செலவழியுங்கள் எதிரிகளை( கற்பனைகளும், கற்பிதமுமென் முதல் எதிரியென்பேன். கொல்லுகிறது.) கொன்று விடுங்கள். இனி எல்லாம் சுகமே . வாழ்த்துகள்

க.பாலாசி said...

நன்றி கும்மாச்சி
நன்றி சேதுஜி
நன்றி சே.குமார்
நன்றி ஆரூரன்
நன்றி தேவா..
நன்றிங்க அம்மா...

fuel digital vignesh said...

We are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111


Best Digital Marketing Agency in Chennai
Best Content Marketing companies in Chennai
Best SEO Services in Chennai
leading digital marketing agencies in chennai
digital marketing agency in chennai
best seo company in chennai
best seo analytics in chennai

hont said...

Best IT Training in Chennai
Organic Chemistry tutor
Organic chemistry
online tutor
Organic chemistry

hawk eye said...

payroll software singapore
payroll system singapore

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO