க.பாலாசி: தீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா?

Friday, October 2, 2009

தீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா?

பள்ளி நாட்களில் நான் பயின்ற ஆங்கில செய்யுளில் கீழ்கண்ட ஒரு poem இருந்தது.

GOOD FOR GOOD - நன்மைக்கு நன்மை
EVIL FOR EVIL - தீமைக்கு தீமை
EVIL FOR GOOD - தீமைக்கு நன்மை
GOOD FOR EVIL - நன்மைக்கு தீமை

இன்றைய நாளில் இதை நினைவு கூர்கையில்... நேற்று, இன்று, நாளை என இந்த மூன்று காலகட்டங்களிலும் இந்த உலகம் மேற்சொன்ன வார்த்தைகளின் சாரம் கொண்டே இயங்கியது, இயங்குகிறது, இயங்கும். இதில் இரண்டாம் சொன்ன வார்த்தையே பிரதான தத்துவமாகி உலகம் முழுதும் , ஆணவத்துடன் அலைந்து திரிந்து, கண்கொண்ட காட்சிகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

தீவிரவாதம் என்ற கேள்விக்கு பதிலாக தீவிரவாதம் என்ற பதிலினை பதிவிட்டால் கிடைக்கும் மதிப்பெண் பல உயிர்களின் மதிப்பாகவே இருக்கும். குருதியினால் கரைபுரளும் வெள்ளத்தினை அதே குருதியின் வீரியம் கொண்டு எதிர்த்தால் இரண்டும் கலந்து எதிர்த்து நிற்கும் இடமும் குருதியின் குழம்பாகத்தானே இருக்கமுடியும்.

அப்படியே சரியாக இருந்தாலும் தீவிரவாதத்தினை எதிர்த்த தீவிரவாதத்தினாலோ அல்லது வன்முறையை எதிர்த்த வன்முறையாலோ சாதிக்க முடிந்தது என்ன? என்ற ஒரு வினா தொடுக்கப்பட்டால் அதன் விடையில் அப்பாவி மக்களின் ஆவிகளே அடங்கியிருக்கும். இன்னும் சில மகாத்மாக்களின் ஆவிக்களும். வன்முறையால், இன்னொரு வன்முறையை வென்றால், இறுதியில் அந்த வன்முறையும், இன்னொரு வன்முறையாலேயே வதம் செய்யப்படும் என்பதுதானே உண்மை.

ஆயுதம் ஏந்திய போராட்டங்களின் வழி என்பது, காந்தியடிகளின் ‘அ’இம்சை வழியில் தெரிந்த வெளிச்சத்தை விட இருளாகவே இருந்தது. பலர் நடந்து செல்லவும் அகிம்சை பாதையே வழிகாட்டியது. ஒட்டு மொத்த இந்தியனுக்காக நிகழ்த்தப்பட்ட அறப்போராட்டத்தின் விடியலாகவே சுதந்திரம் எனும் சுவாசத்தை இன்றும் நாம் நிரந்தரமாய் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

இதில் கருப்பினத்திற்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கும், அதே வழியில் அதே இனத்திற்காக தென்னாப்ரிக்காவில் போராடிய நெல்சன் மண்டேலாவும் கண்ட வெளிச்சம் காந்திய வழியிலேயே தெரிந்தது. இம்சையில் கிடைக்கும் இன்மையைவிட அகிம்சையின் விளிம்பில் கிடைக்கும் சுதந்திரம் நிரந்தரமாய் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம்.

இனவெறியில் இடர்பட்டு இருந்தபோது, அங்கே விடுதலைக்கு போராடிய நெல்சன் மண்டேலா வெளியில் இருந்து கடைபிடித்த அகிம்சைக்கு வெற்றி கிடைக்கவில்லை. 27 ஆண்டுகால சிறைப்போராட்டத்தில் அறவழியில் அவர் சாதித்ததே இன்று ஒரு மகானாக உலகம் அவரை அடையாளம் காண காரணமாயிற்று. மார்ட்டின் லூதர் கிங்கின் மனிதாபிமான போராட்டமும் காந்திய கொள்கையினை கொள்முதல் செய்தே நடந்தது. இவையிரண்டிற்கும் தீர்வாக கிடைத்த கருப்பின சகோதரர்களின் சந்தோஷமே காந்தியத்திற்கு வெளியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றால் மிகையாகாது.

தீவிரவாதம், வன்முறை இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே சிக்குண்ட போராட்டம் என்ற புனிதம் புரியவைக்கப்படாமலேயே கொல்லப்பட்டு விட்டது. ஒரு அறப்போராட்டம், வன்முறையானாலோ அல்லது தீவிரவாதமானாலோ இறுதியில் உமிழப்படும் உதிரம் சாய்த்தது சகமனிதனின் உயிரைத்தானே. இதையா போராட்டங்கள் விரும்புகின்றன?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் எனும்போது இழப்பு என்பது அந்த இரண்டு இடங்களையும் மட்டுமே பாதித்துவிடப் போவதில்லை. அதையும் தாண்டி அதோடு தொடர்புடைய இன்னும் சிலவற்றையும் சேர்த்துதான் துண்டாடுகிறது. சாலைமறியலில் கிடைக்கும் நீதி, பேருந்தை எரிப்பதினால் கிடைத்துவிடப் போவதில்லை. மலையுச்சியில் புறப்படும் நீருற்று மரம் செடிகொடிகள், பாறைகள் இவற்றை கடந்துதான் வருகிறதேயொழிய அவற்றை கோடறி கொண்டு வெட்டி சாய்த்துவிட்டு ஆறாக சங்கமிப்பதில்லை.

இலங்கை தமிழர்களுக்காக முக்கிய மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 12 நாள் அன்னம், தண்ணியில்லாமல் உண்ணாவிரதம் இருந்து...இறந்த திலீபன், 13ம் நாள் வெற்றிப்பெற்றான். அந்தநாள் அவன் உயிருடன் இல்லை. ஆயினும் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருந்தன பின்னர் அங்கே நிகழ்ந்த சில தவறான இருதரப்பு புரிந்துணர்வுகளினால், ஆயுதமே மீண்டும் ஏந்தப்பட்டது. வெற்றி கிடைத்ததா என்றால் இன்று வரையில் இல்லை என்பதே மறுக்கமுடியா உண்மை. ஒருவேளை அன்றையிலிருந்தே அறப்போராட்டம் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் இத்தனை உயிர்களின் நாடி ஊசலாடிக் கொண்டிருக்காமல் இருந்திருக்கும்.... இருந்திருக்கலாம். உறுதிபட சொல்லிவிட முடியாதபடி அங்கே நடந்து கொண்டிருப்பது அரக்கர்களின் ஆட்சி.

எந்தவொரு முழுமையான வெற்றிக்கும் காரணமாய் அமைவது பேனா முனையில் இளகி கசியும் மையும் , அறவழியில் பிறக்கும் அகிம்சை போராட்டங்களுமே தவிர துப்பாக்கி முனையிலிருந்து துரத்தப்படும் தோட்டாக்கள் அல்ல. புரிந்துகொள்வோம். காந்திய வழிகளில் வழிப்போக்கனாகவாவது இருப்போம்.

*********

தங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....


27 comments:

சுரேஷ்குமார் said...

//கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் எனும்போது இழப்பு என்பது அந்த இரண்டு இடங்களையும் மட்டுமே பாதித்துவிடப் போவதில்லை. அதையும் தாண்டி அதோடு தொடர்புடைய இன்னும் சிலவற்றையும் சேர்த்துதான் துண்டாடுகிறது.
//
நிசர்சனமான் உண்மை.
//காந்திய வழிகளில் வழிப்போக்கனாகவாவது இருப்போம்.//
கலக்கலான கருத்து.சம்மந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்.

vasu balaji said...

/இலங்கை தமிழர்களுக்காக முக்கிய மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 12 நாள் அன்னம், தண்ணியில்லாமல் உண்ணாவிரதம் இருந்து...இறந்த திலீபன், 13ம் நாள் வெற்றிப்பெற்றான். அந்தநாள் அவன் உயிருடன் இல்லை. ஆயினும் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருந்தன பின்னர் அங்கே நிகழ்ந்த சில தவறான இருதரப்பு புரிந்துணர்வுகளினால், ஆயுதமே மீண்டும் ஏந்தப்பட்டது./

தவறான தகவல் அல்லது புரிதல் என நினைக்கிறேன் பாலாஜி. இதைப் புரிய முயற்சித்தால் நம்மை வெறுப்பதைத் தவிர வழியே இல்லை. அஹிம்சை எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறும். அஹிம்சையை போதித்த புத்தன் பூமியைத் தவிர. காந்தியின் உண்ணா விரதத்தை ஆங்கிலேயன் மதித்தான். அதை ஆயுதமாக பயன்படுத்திய காந்தியின் பூமி மதிக்கவில்லை. திலீபன் இறந்தான். ருஷ்யா, க்யூபா, சீனா, வியட்னாம் எல்லாம் அஹிம்சையிலா வென்றது?

இது தவிர்த்து மிக அருமையான இடுகை. சக்ஸஸ் ஃபார்முலா என்று ஒன்று இல்லை. அஹிம்சையோ புரட்சியோ ஆதரவிருப்பது வெல்லும். நியாயம் அநியாயம் எல்லாம் கடந்து.

பிரபாகர் said...

பாலாஜி,

அகிம்சையை பற்றி அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். அன்றிருந்த சூழல் வேறு, இன்றிருக்கும் சூழல் வேறு. கண்டிப்பாய் வன்முறையும் சேர்ந்த அகிம்சைதான் அவசியம் என எண்ணுகிறேன்.

நல்ல பதிவு. ஓட்டுக்களை போட்டாச்சு.

பிரபாகர்.

பழமைபேசி said...

//ஆவிக்களும்//

ஆவிகளும்

//வெற்றிப்பெற்றான்//

வெற்றி பெற்றான்

ஈரோடு கதிர் said...

முதலில் ஆழ்ந்து சிந்தித்து பதியப்பட்ட இடுகைக்கு மனமார்ந்த பாராட்டுகள்

காந்தியின் அகிம்சை போராட்டம் வென்றது உலகப் போரட்டங்களின் ஒரு குறிப்பிட்ட திருப்பு முனை என்பதை மறக்க முடியாது...

அதே சமயம் பாதிக்கப்படுபவன்தான், தான் பாதித்ததை அடிப்படையாகக் கொண்டு எந்த வகையில் போராடுவது என்பதை முடிவு செய்ய முடியும்.

உதாரணத்திற்கு ஒரு கொள்ளைக்காரன் தான் கொள்ளையடிப்பதற்காக கொல்ல முயற்சிக்கிறான், அந்த இடத்தில் வாய்ப்பு கிடைத்தால் அவனைக்கொன்று தப்பித்தல் அகிம்சையின் நேர் எதிர்ப்பதம் ஆகிவிடாது.

அகிம்சை மியான்மர் தேசத்தில் இன்னும் தத்தளித்துக் கொண்டுதான். ஆங் சான் சூ கீ இன்னும் வீட்டுச்சிறையில் இருக்கிறார்.

புலிகள் தோற்றது இலங்கையால் மட்டுமல்ல பல நாடுகளின் கூட்டுச்சதியால் மட்டுமே, காரணம் அந்த பல நாடுகளுக்கு பல காரணங்கள் இருந்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு

கவிக்கிழவன் said...

அன்பு கொண்டு ஆளும் நெஞ்சு அனைவரையும் வென்றிடும் பாலாஜி

அன்பேசிவம் said...

நண்பா, சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். வட இந்தியாவில் ஒரு மலைவாழ் கிராமத்தில், தீவிரவாதிகளால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட பெற்றோரைப்பார்த்த பெண் (13வயது என்று நினைக்கிறேன்) வெறிகொண்டவளாய் அருகிலிருந்த கோடாலியால் அவனை அடித்தே கொன்றிருக்கிறாள். அஹிம்சை என்பது எல்லா இடங்களுக்கும் சரியான பதிலாக இருக்காது என்பது என் கருத்து. என் கருத்தில் தவறிருக்கவும் வாய்ப்பு உண்டு.

ஆனால் இதுதான் என் கருத்தும் “ நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்”

காமராஜ் said...

பாலாஜி.... என்ன இது உண்மையிலே மிக அருமையான சிந்தனை.
தலைப்பைப் பார்த்ததும் உன்னைப்போல ஒருவன் விமர்சனம் என்று நினைத்தேன், இந்து தீவிரவாதம்,
அப்புறம்,. இந்திய சுதந்திரப்போராட்டம், அப்புறம் ஈழப்பிரச்சினை, அப்புறம் அமெரிக்காவின் ஆட்கொல்லி நடவடிக்கை
இன்னும் எல்லாவற்றையும் கடந்து மனிதாபிமனத்தில் வந்து நிற்கிறது உங்கள் பதிவு. ஆஹா... அன்பே எல்லாம்.

ஹேமா said...

பாலாஜி,உங்கள் பதிவு இன்னும் யோசிக்க வைக்கிறது.என் நாட்டைப் பொறுத்தவரை சாத்தியமா என்றும் ஆகிறது !

Jerry Eshananda said...

முற்றிலும் முரண் படுகிறேன்

ரவி said...

நாம் அந்த நிலையை தாண்டி வந்துவிட்டோம்னு நினைக்கிறேன். இனி குனிந்துகொண்டிருந்தால் கூன் விழும்வரை குனியவேண்டியது தான்.

காந்தி இப்போது இருந்திருந்தால், கண்டிப்பாக துப்பாக்கி தூக்கியிருப்பார் என்று தோன்றுகிறது.

குறும்பு குண்டன் said...

உண்மைதான் பாலாஜி,

வன்முறையால் அடையப்படும் இலக்குகளை விட அதனால் ஏற்படும் இழப்புகள் அதிகம். ஆனால் அகிம்சை மிதிக்கப்படும்போது வன்முறைதான் வழியாகப் பிறப்பிக்கப்படுகின்றது.

passerby said...

இதற்கு நிரந்தர தீர்வு கிடையாது. இடத்துக்கு இடம், கால்த்துக்கு காலம், மேலும், மனிதருக்கு மனிதர் (இங்கு ஒருவர் சுட்டிக்காட்டியதைப் போல வெள்ளைக்காரனிடம் காந்தீயவழி வென்றது. இடிஅமீனிடம் வென்றிருக்குமா?) இதுபோன்றவற்றால் - எவ்வழி வெற்றி பெரும் என்பதற்கு நிரந்தர பதில் கிடையாது.

காந்தி பிறந்த மண்ணில், தீவிர வாதத்திற்கு தீவிர வாதமே பதில் என அரசு சொல்லிக்கொண்டே, இன்று காந்திக்கு விழா எடுத்துக்கொண்டிருக்கிறது.

சல்வா ஜூடம் என்ற அமைப்பு, இக்கொள்கையை உடையது. நக்சலைட்டுகளை அவர்கள் தீவிரவாத வழியிலே சென்று அழிப்பது. (கமலகாசன் உ.போ.ஒ வில் செய்தது போல). இவ்வமைப்பு அரசின் ஆதரவுடன் நடந்து வருகிறது. இது சரியா இல்லையா என்பது உச்சனீதிமன்ற வழக்காயுள்ளது.

சின்னாட்களுக்குமுன், ஒரு தீவிரவாதியைச் சுட்ட்க்கொண்ட காஷ்மீரத்துப்பெண்ணுக்கு அரசு bravery award கொடுக்க தீர்மானித்துள்ளது.

குஜராத்தில் மக்களின் பேராதவருடன் மோடியின் ஆட்சி நடந்து வருகிறது. இவர் தீவிரவாதத்தை ஒழிக்க இந்துக்களும் தீவிரவாதத்தை கையிலெடுக்கவேண்டும் என எண்ணமும் செயலும் உடைய்வர். போனவாரம், ஆயுதபூசையில் துப்பாக்கிகளை வைத்து ஆயுத்பூசை நடத்தினார். அதன்மூலம், காந்தீயவழி செல்லாது என மக்களுக்குத் தெரிவிக்கிறார்.

குஜராத் காந்தி பிறந்த மண் என்பது ஒரு tragic irony.

மோடி செய்தது, செய்கிற தீவிரவாதம் சரியா என்றால், ஆம் என இங்கும் கூட ஆதரவு தருகிறார்கள். மாதவராசின் வலைபதிவைப் பார்த்தால், எத்தனை தமிழர்கள் ஆதரவு தருகின்றனர்; உ.போ.ஒ - வின் எதிர்கருத்து விமர்சனத்துக்கு எத்தனை பேர் சண்டைபிடித்தனர் என்பது தெளியும்.

சுருங்கக்கூறின், என் முதல் வரியே சரி.

மக்கள் இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம், மனிதரின் கலாச்சார அமைப்புக்குத் தக்கவே - எவ்வழி சிறந்தது என முடிவெடுப்பர்.

காந்தீய வழி வென்றது. என்வே நீஙக்ள் முடிவெடுத்து மற்றவருக்கும் அதுவே சிறந்தது என்கிறீர்கள். இல்லையா?

தோற்றிருந்தால்...?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

அஹிம்சையைபற்றி நன்றாக கூறியுள்ளீர்கள்.ஆனால் தற்போது உதவாது என்பதே என் தாழ்மையான கருத்து.

ராஜ நடராஜன் said...

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியை நினைத்துப் பார்க்க மட்டும்தான் முடியுது.

இந்திய அகிம்சை வெற்றி பெற்றதற்கு காந்தி ஒரு கிரியா ஊக்கி என்பதோடு பிரிட்டிஷ்காரன் பெட்டிய கட்டிகிட்டு போகலாம்ன்னு நினைக்கிற மாதிரி இரண்டாம் உலகப் போர் ஒரு முக்கிய காரணி.ஆனால் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் முதல் சுதந்திரக் காற்றை (அல்லது பாகிஸ்தான்காரன் ஒரு ராத்திரி முந்திகிட்டானோ) சுவாசித்த பெருமை வேணுமுன்னா சொல்லிக்கலாம்.

எல்லோரும் புகழும் நெல்சன் மண்டேலா குண்டு வைக்கும் தீவிரவாதின்னுதான் முன்னாடி அவருக்கு முத்திரை.

இஸ்ரேல் எந்த அகிம்சையில் சுதந்திரம் வாங்கியது?

மியான்மரில் அகிம்சை,ஜனநாயகம் இதுவரைக்கும் ஜெயிக்கவில்லை.

புத்தம் சமாதானத்தை தேடியிருக்கலாம் எப்பாடு பட்டாவது.நடக்கும் நிகழ்வுகளில் புத்தமும் செத்துப் போச்சு.

ரத்தம் சிந்தா சுதந்திரம் எங்கே இந்தியா உள்பட.ஆனால் சிந்திய ரத்தங்களுக்கும் மேலாக அகிம்சையை முன்னிறுத்திய காந்தியும் வாழ்க்கையும் பாராட்டதலுக்கு உரியது சில விமர்சனங்களுக்குட்பட்டதாக இருந்தாலும்.

அமெரிக்காவின் ஆயுதங்கள் ஜெயிக்காமல் இருந்திருந்தால் அகிம்சை பரிட்சையை பல நாடுகளும் முயற்சி செய்து பார்த்திருக்கும்.

velji said...

காந்தியின் போரட்ட முறைகள் இன்றளவும் வியக்கத்தக்கதாய் இருக்கின்றன. போராட்டங்களில் எடுக்க வேண்டிய ஆயுதத்தை தீர்மானிப்பதில் எதிரியின் பங்கும் இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.
இல்ங்கையில் தந்தை செல்வா காலத்தில் நடந்த அறப்போரட்டங்கள் வீனாயின.ஒப்பந்தங்கள், அரசியல் வெற்றிக்காக வெளிப்படையாகவே கிழித்தெறியப்பட்டன.

மியான்மரின் ஆங் சான் சூயி, திபெத்தின் தலாய்லாமா, நம் மனிப்பூரில் ஒன்பது வருடங்களாக உண்ணாவிரதமிருக்கும் பெண்..இவர்கள் எப்போது வெல்லப்போகிறார்கள்?!

க்யூபப் புரட்சியின் வெற்றியையும், சே குவேராவின் வாழ்வையும் மறுக்க முடியுமா?!

தனி வாழ்விலும்,பொது வாழ்விலும் உலகின் மதிப்பீடுகள் மாறிவிட்டது. நியாயங்களும்!

சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட, உங்கள் எழுத்துக்கள் பாராட்டுக்குரியவை!

தமிழ் நாடன் said...

//////இலங்கை தமிழர்களுக்காக முக்கிய மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 12 நாள் அன்னம், தண்ணியில்லாமல் உண்ணாவிரதம் இருந்து...இறந்த திலீபன், 13ம் நாள் வெற்றிப்பெற்றான். அந்தநாள் அவன் உயிருடன் இல்லை. ஆயினும் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருந்தன பின்னர் அங்கே நிகழ்ந்த சில தவறான இருதரப்பு புரிந்துணர்வுகளினால், ஆயுதமே மீண்டும் ஏந்தப்பட்டது./

தவறான தகவல் அல்லது புரிதல் என நினைக்கிறேன் பாலாஜி. இதைப் புரிய முயற்சித்தால் நம்மை வெறுப்பதைத் தவிர வழியே இல்லை. அஹிம்சை எங்கு வேண்டுமானாலும் வெற்றி பெறும். அஹிம்சையை போதித்த புத்தன் பூமியைத் தவிர. காந்தியின் உண்ணா விரதத்தை ஆங்கிலேயன் மதித்தான். அதை ஆயுதமாக பயன்படுத்திய காந்தியின் பூமி மதிக்கவில்லை. திலீபன் இறந்தான். ருஷ்யா, க்யூபா, சீனா, வியட்னாம் எல்லாம் அஹிம்சையிலா வென்றது?

இது தவிர்த்து மிக அருமையான இடுகை. சக்ஸஸ் ஃபார்முலா என்று ஒன்று இல்லை. அஹிம்சையோ புரட்சியோ ஆதரவிருப்பது வெல்லும். நியாயம் அநியாயம் எல்லாம் கடந்து//////

நான் சொல்ல நினைத்ததை அண்ணன் வானம்பாடிகள் கச்சிதமாக சொல்லி இருக்கிறார்.

இன்றைய உலகத்தில் நேற்றைய வாழ்க்கை மதிப்பீடுகளுக்கு பெரிய மதிப்பிருப்பதாஇ தெரியவில்லை.

ஊர்சுற்றி said...

//காந்திய வழிகளில் வழிப்போக்கனாகவாவது இருப்போம்.//

நன்று.

Anonymous said...

Yes you are right.
Many of our friends were trying to justify the violence is the way to be meted out now , especially in the Tamil Elam issue.
Here Gandhiji's ahimsa did nit fail , but the basic understanding or the principle with which the movement started is not aligned with Ahimsa. The very movement whoever led that , they practised himsa against innocents may be the people they aimed would have been against the movement but the situtions like bombs thrown in a Bhuddist temple at that momment atleast the inmates were all inncoent because they had no idea of lifting the arms, .. scuh kind of acts and their impacts has ridiculed the very principle of Ahimsa for this liberation. Now when we are abused both physically we feel painful, and try to lift arms. Moreover Gandhi's bery basic principle of the freedom fight is that he analysed the basic dharma needed, he trusted it is not end justifies means. Here, the failure of Ahimsa by Dileepan is he beleived, but his own people did not beleive or understood the power of it or the need of it.

I feel so painful about the Tamil people who are facing atrocities in the camps, but at the same time I very bitterly remember the attacks killings in the name of very movement. Blasting people when they had no clue, so do not call ths kind of warfare as violence this is cold blooded murder,
Violence is when both parties know that they are fighting firing each other. Remember Mahabharatha, ramayana wars they are violent wars. But not the kind of war which was fought in the name of liberation, except in few situations. Otherwise in most cases there were attacks against people who had no arms.
That is what is being meted out now against the Camp population. Ippo kothikira intha ratham appo manasatchiyai ulukki porrata muraiyai athan abathangalai, koduranglai unartha thavariyathaal vantha vinai.
Nandrum, theethum pirar thara vaara

க.பாலாசி said...

எனது இந்த இடுகைக்கு வந்திருந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.

உங்கள் அனைவரது கருத்துக்களையும் எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் அவரவர் பார்வையில் தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள். இதை நான் தாழ்மையுடன் வரவேற்கிறேன்.

நான் சொன்ன கருத்துக்களில் சில முரண்பாடுகள் இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திய அனைத்து அன்பர்களுக்கும் மீண்டும் நன்றிகளை பகிர்கிறேன்.

இறுதியாக ஒரு வேண்டுகோள். நம் எதிர்வரும் சந்ததிகளுக்காகவாவது கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற மரபினை விதைக்காமல் இருப்போம்.

மணிஜி said...

நல்ல ஆழ்ந்த சிந்தனை..வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

நண்பரே இன்றைய நிலைமையில் அகிம்சையை வைத்து மட்டும் தீவிரவாதத்தை ஒடுக்க முடியாது. நிச்சயம் சில சமயங்களில் வன்முறைத் தேவைப் படுகிறது. நல்ல பதிவு. வாக்களித்து விட்டேன்.....

க.பாலாசி said...

//தண்டோரா ...... said...
நல்ல ஆழ்ந்த சிந்தனை..வாழ்த்துக்கள்//

நன்றி அன்பரே...

//புலவன் புலிகேசி said...
நண்பரே இன்றைய நிலைமையில் அகிம்சையை வைத்து மட்டும் தீவிரவாதத்தை ஒடுக்க முடியாது. நிச்சயம் சில சமயங்களில் வன்முறைத் தேவைப் படுகிறது. நல்ல பதிவு. வாக்களித்து விட்டேன்.....//

நன்றி நண்பா...வருகைக்கும் கருத்திற்கும்...

"உழவன்" "Uzhavan" said...

நல்ல இடுகை பாலாஜி. இதுபோன்று பல ஆய்வுகளின் அடிப்படையில் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

கதிர் சொன்ன கருத்தை பார்த்தீர்களா?

உங்கள் இடுகை கருத்தும் வந்து பின் ஊட்ட விமர்சனமும் எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாய்ப்பு இருந்தால் புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் நமது இந்திய சுதந்திர போராட்டத்தின் பின்னால் உள்ள விசயங்கள் படித்துப்பாருங்கள். படித்த விமர்சனம் மூலம் எனக்கு நானே சற்று ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
நல்ல இடுகை பாலாஜி. இதுபோன்று பல ஆய்வுகளின் அடிப்படையில் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்//

நன்றி...உழவன்...

//Blogger ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
கதிர் சொன்ன கருத்தை பார்த்தீர்களா?
உங்கள் இடுகை கருத்தும் வந்து பின் ஊட்ட விமர்சனமும் எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாய்ப்பு இருந்தால் புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் நமது இந்திய சுதந்திர போராட்டத்தின் பின்னால் உள்ள விசயங்கள் படித்துப்பாருங்கள். படித்த விமர்சனம் மூலம் எனக்கு நானே சற்று ஆறுதல் படுத்திக்கொண்டேன்.//

மிக்க நன்றி....பார்க்கிறேன்.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO