க.பாலாசி: May 2011

Tuesday, May 31, 2011

மீசை


ரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன்கோவில் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு!! இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு  கொடுக்கவில்லை.

“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க?” எனக்கு முந்திக்கொண்டான்.

அவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு!!!. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.?”

“ம்ம்ம் நல்லாருக்கன்டா” என்றான்.

சிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க? பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்?”

“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன?”

“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா? கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது.

“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச..? மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா? அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான். 

மாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன். 

“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது.? அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார்.

ஆமாம் எனக்கு என்ன குறைச்சல்! என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குகூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தாதான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சிகோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன். 

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!!!  அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது.

இங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகடிலிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார்.  கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார்.

எப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார்.

ரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந்த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன்.

இப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.

இப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன்.

“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.

“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன்.

“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா? நீய் செய்யி” என்றான்.

“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் கொமட்டிலேயே குத்தினான், அந்த முக்காமீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.


••

Friday, May 6, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்

சென்ற வாரம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரின் உறவினருக்கு அவரசமாக இரத்தம் (வெள்ளை அணுக்கள் மட்டும்) தேவைப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் இணையத்தில் பகிரலாம் என்று யோசித்தேன். பிறகு வழக்கம்போல் எங்கள் வேலுஜி இந்த (http://www.friendstosupport.org/index.aspx) (http://www.blooddonors.in/) இணைய தளங்களில் இருந்த இரத்தம் கொடுக்கும் தன்னார்வலர்களின் அலைபேசி எண்களை சேகரித்து, அழைத்து 15 நிமிடங்களில் வேலை முடிந்தது. இதில் கிடைத்த 5 எண்களை தொடர்பு கொண்டதில் 2பேர் முன்வந்தார்கள். வாரம் ஒருமுறையாவது எங்களுக்கு இந்த இணையங்கள் பயன்படுகிறது. உங்களுக்கு எந்தவகையான இரத்தம் தேவைப்படுகிறது, நீங்கள் எந்த மாவட்டம், எந்த ஊர் போன்ற விபரங்களை கொடுத்தவுடன் உடனடியாக அந்தப்  பகுதியிலுள்ள இரத்ததானம்  கொடுப்பவருடைய முகவரி மற்றும் அலைபேசி எண்களை பெறலாம். பயனுள்ள தளம். மேலும் நீங்கள் இரத்த தானம் செய்பவராகவோ, அல்லது செய்யவிரும்புபவராகவோ இருந்தால் இந்த தளத்தில் உங்களது அழைப்பு எண் மற்றும் முகவரியையும் பதிந்து வைத்துவிடுங்கள். இல்லையெனில் என்னைப்போல் 50 கிலோ எடையை தாண்டாமல் இருங்கள்.

•••

30 நாட்களாக வலதுகையில் குடியிருந்த மூன்றங்குல ‘ஆணியை’ மருத்துவர் எடுத்துக்கொண்டார். இப்போதுதான் கை உடைந்ததுபோல் உள்ளது. ஒருமாதமாக நொண்டிக்கையை சாக்காக வைத்து பெற்றுவந்த சலுகைகள் ‘கிளிக்கு ரெக்க முளைத்துடுத்து, ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்து‘ கதையாகிவிட்டது. மொத்த உடலெடையில் 15 கிராம் குறைந்திருக்கிறது. எப்போதும்போல் 50 கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டேன். மருத்துவத்துறை முன்புபோல் இல்லை. புறங்கையில் ஒரு சுள்ளி எலும்பு முறிந்ததற்கு 9 ஆயிரத்து முன்னூத்துச் சொச்சம் செலவு. எதற்கெடுத்தாலும் பிளேட், கம்பி, ஸ்க்ரூ, ஆப்(பு)ரேசன், எதோ டெம்ப்போ லாரிக்கு பாடி கட்டுவதுபோல் செய்கிறார்கள், நல்லவேளை வெல்டிங் மிஷின் மட்டும் இல்லை. இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீடு, க.கா.தி, அல்லது நட்சத்திரம். படுக்கவைத்து இரண்டுநாள் படுத்தியெடுத்து ரவுண்டாக ஒரு தொகை கரந்துவிடுகிறார்கள் மடியில்(இல்)லாவிட்டாலும், நம்மிடம் அல்லது காப்பீடு மூலம் இப்படி இம்சைப்பண்ணும் மருத்துவர்கள் இன்னொசென்ட் என்ற பெயரில்கூட இருக்கிறார்கள். எண்ணெய்க்கட்டு, புத்தூர்கட்டு, மாவுக்கட்டு, அறுவைசிகிச்சை, கம்பிகள்... ; கழனித்தண்ணி, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, SKM மாட்டுத்தீவனம், ஊசிகள்.... 

••••

5 வயதில் ராக்கெட் விடவேண்டும் என்ற ஆசை வந்தது. பள்ளிக்கூடத்தில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன். வீட்டிற்கு வந்து எங்கே பேப்பர், எங்கே பேப்பர் எனத்தேடியதில் சிக்கியது அந்த திருமண பத்திரிக்கை. கூராக மடித்து சொய்ங்..சொய்ங்.... மணியன் தாத்தா வீட்டுக்கொல்லையில் விழுந்தது. வேலியை தாண்டி எடுக்க திரானி இல்லை. மறுநாள் அந்தத் திருமணம். அப்பா பத்திரிக்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்மீதான குற்றச்சாட்டு சகல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது. வழக்கம்போல விளக்கமாறுதான்.  மியாமிக்குஷன் செருப்பை மறைத்து வைத்திருந்தேன். தெருவில் ஓடவிட்டு அடித்தார். யாரோ ஒரு புண்ணியவான் உதவ, அதை எடுத்துகொடுத்துவிட்டேன். விசயம் அதுவல்ல. சமீபத்தில் யப்பாரின் மேஜையை பீராய வேண்டிய கட்டாயம், கரையான். பூராவும் பழைய திருமணப் பத்திரிக்கைகள், தொழில் சம்பந்தப்பட்ட கணக்குநோட்டுகள், 1980 க்கு பிறகு வந்த கடிதங்கள், என்னுடைய 3ம் வகுப்பு பாட குறிப்பேடு, கூடவே அந்த திருமணப்பத்திரிக்கையும். நிறைய பத்திரிக்கைகளையும், கடிதங்களையும் பொறுமையாக அமர்ந்து வாசித்தேன். பின்னோக்கிய பயணம்தான் எவ்வளவு சுவாரசியம். எனது நண்பன் ஒருவனின் பெற்றோருக்கு நடந்த திருமணப்பத்திரிக்கையும் அதில் இருந்தது. அவனிடமே காட்டியும் மகிழ்ந்தேன். இப்பவும் வீட்டின் எதோமூலையில் வருகிற பத்திரிக்கைகளை திருமணம் முடிந்ததும் கொக்கியில் சொருகிவிடுகிறார் அப்பா.  சென்றவாரம் நண்பனொருத்தன் திருமணத்திற்கான அழைப்பை குறுந்தகவலாக அலைபேசிக்கு அனுப்பினான், ‘புடவைடா (sarry) மாப்ள. ட்யூ டூ ஸார்டேஜ் ஆப் இன்விட்டேசன்‘ இன்ன கிழமை, இன்ன தேதி, இன்ன நேரம், இவளுக்கும் எனக்கும் இன்னக்‘கொடுமை’ யென்று.    படித்துவிட்டு உடனடியாக உள்பெட்டியை சுத்தம் செய்தேன். என் புத்தி.

••••

ஒரு நூலை விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு புத்தியில்லையெனக்கு. ஆனாலும் இந்த நூலைப்பற்றி எதாச்சும் சொல்லவேண்டுமென்று மனது அடித்துக்கொள்கிறது. படித்து ஒருமாதமாகிறது. இன்றளவும் அசைபோடுகிறேன். இதைப்பற்றி விமர்சித்தவர்களையெல்லாம் தேடிதேடிச்சென்று படிக்கிறேன். சென்ற மாதம் ஆஸ்பத்திரியில் 2 நாள் படுத்துக்கிடந்தபோதுதான் வாசித்தேன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள். ஒரு அற்புதமான படைப்பு. கேரளத்து மண்ணில் எல்லாவித பசியோடும் ஒடுங்கிய வயிற்றோடுமலைந்த அந்தக் கவிஞனின் வாழ்க்கை சில பக்கங்களில். பெரும்பாலும் வறுமையில் சிதைந்த முகத்துடன், கூடவே சபலம், ஆற்றாமை, குற்றவுணர்வுகள். ஒரு மனிதனின் முகம் வெளிக்காட்டக்கூடிய அனைத்து உணர்ச்சிகளையும் படிக்கும்போது உள்ளத்தால் உணரவைக்கிறார். ஒரு இடத்தில் ‘மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான், நான் சாப்பிட ஆரம்பித்தேன்’ என்றிருப்பார், அந்த கணம் மனதைப் பிசையும். ‘சிதம்பர ஸ்மரண’ என்ற இந்த மலையாளப் புத்தகத்தினை வம்சி பதிப்பகம் வழியாக அதே உணர்வுகளோடு தமிழில் கோர்த்திருக்கிறார் திருமதி.கே.வி. ஷைலஜா. எனக்காக இதை பரிந்துரைத்தவர் திருமதி. பத்மஜா. இருவருக்கும் என்றென்றும் நன்றிகள். 



••

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO