க.பாலாசி: சிறுகதை...
Showing posts with label சிறுகதை.... Show all posts
Showing posts with label சிறுகதை.... Show all posts

Friday, February 3, 2012

படர்க்கை

*

பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன்.

‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

‘இதான் உன்னோட அத்த’

‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’

‘இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன்.

எனக்கு சித்தியான பாலாவுடைய அம்மா சின்ன வயதிலேயே இறந்துவிட்டாள். இவளைப் போட்டுவிட்டு சித்தப்பனும் எங்கோ ஓடிவிட்டான். என்னதானிருந்தாலும் அப்பனாத்தா இல்லாத பிள்ளைகளை வளர்ப்பதென்பது புட்டிப்பால் கொடுப்பது போலத்தான். எண்ணையும் தண்ணீரும்போல ஒரு ஒட்டு இல்லாமல் இடைவெளி இருந்துகொண்டேயிருக்கும். வீட்டில் பெண்பிள்ளை இல்லாத குறையாக நாங்கள்தான் வளர்த்தோம். எனக்கு ஒரு தங்கையாக அம்மாவுக்கு ஒரு நல்ல மகளாக இருந்தாள். படிப்பு இத்யாதிகள் எதிலும் குறையில்லை.  

எடத்தெருவில் இருந்த 45 குழி இடத்தில் 15 குழியை நாங்களே வைத்துகொண்டு மீதி இடத்தை விற்கும்போது பாதி பணத்தில் வீடு கட்டிக்கொண்டு மீதியில் பாலாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் எண்ணினேன், அம்மாவுக்கும் அதான் எண்ணம். ‘நம்மள விட்டா அவுளுக்கு யாருப்பா இருக்கா?’ அம்மா அடிக்கடி சொல்லுவாள். வீடு கட்டி குடியும் போனாம். 10 பவுனுக்கும், சீர் செனத்திக்கும் போக எப்படியும் ஒரு கைப்பங்கு பணம் இருக்கும். அந்தப் பணத்தில் பிறகு என் கல்யாணத்தைப் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தேன்.

ஆனால் நடந்தது நேர்மாறாகத்தான். பாலாவுக்கு ஜாதகம் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லையென தட்டிக்கொண்டே போனது. வந்த ஜாதகத்திலும் பாதிக்கு மேல் புலுத்தி ஜாதகமாகத்தானிருந்தது. சரி இரண்டாந்தாரம் எதாவது கிடைக்குமா என்றும் தேடினோம். கொடுமையிலும் கொடுமை பெண்களை பிரத்தியில் ரெண்டாம்தாரத்திற்கு கட்டிக்கொடுப்பதுதான். யாரும் அந்த முறையை விரும்ப மாட்டார்கள். ஒரே ஒரு லாபம் இரண்டாம் தாரத்திற்கு கொடுத்தால் ஜாதகம் பார்க்க தேவையில்லை.  கும்மோணத்தில் ஒருத்தன் கிடைத்தான் நாலு பிள்ளைகளுடன். கேட்டவுடனே முகம் சுளித்தாள். எங்களுக்கும் சரியாகப் படாமல் விட்டுவிட்டோம். ரெண்டு வருடம் ஜாதகங்கள் வருவதும் போவதும், பெண் பார்க்க வருவதும் போவதுமாகத்தானிருந்தது. எதுவும் அமையவில்லை.

அம்மாவுக்கு சுகர் வந்து வாய் கோணிவிட்டது. கைகால்கள் அடிக்கடி மறப்பதும், சோம்பி விழுவதுமாக இருந்தாள். அந்த நேரத்தில்தான் வேறு வழியில்லாமல்தான் எனக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. மாமாவிடம் சொல்லி பெண்பார்க்கச் சொன்னார்கள். சொல்லி வைத்தது போல இந்த கவிதா கிடைத்தாள். பாலாவுக்கு மாப்பிள்ளை பார்த்த அனுபவத்தினால், முதலில் பார்த்த பெண்ணே ஒருவனுக்கு மனைவியாக அமைவதென்பது இக்காலகட்டத்தின் ஜென்ம பலனாகத் தெரிந்தது.

கவிதாவுக்கும் எனக்கும் திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின்போது மணமக்களுக்கு பின்புறம் காமாட்சி விளக்கு பிடிக்க கட்டுக் கழுத்தியைத்தான் நிற்க வைப்பார்கள்.நான்தான் பிடிவாதமாக பாலாவை காமாட்சி விளக்கு பிடிக்க வைத்தேன். அவளுக்கு அதில் ரொம்ப சந்தோஷமும் கூட. திருமணம் முடிந்தபின் பாலாவும், கவிதாவும் ரொம்ப அந்நியோன்யமாக இருந்தார்கள். அவர்களுக்குள் நல்ல நட்பும் இருந்தது. பாலா, அண்ணி அண்ணி என்று வாய்நிறைய அழைப்பாள்.

புதிதாக சென்ட் அடிப்பவன் அக்குளை மோந்து மோந்து பார்ப்பது மாதிரிதான் புதிதாக கல்யாணம் பண்ணினவர்கள் பாடு, மனைவிக்கு கணவனும் சரி, கணவனுக்கு மனைவியும் சரி. ஒருவரையொருவர் மோந்துகொண்டே இருப்பர். போலவேதான் நாங்களும். காலை எழுத்ததும் இருவரும் குளித்துவிடுவோம் என்றாலும் கலவி முடிந்தவுடன் பாத்ரூமுக்கு சென்று கைகால்கள் இத்யாதியை கழுவிவிட்டு வருவது எங்கள் பழக்கம். கூடாரத்தில் அம்மாவும் பாலாவும் படுத்திருப்பார்கள். நானும் கவிதாவும் சத்தம் வராமல் பொறுமையாக போய்வருவோம்.

ஒருநாள் பிற்பகலில் முடிந்தது. கூடாரத்தில் பாலா உட்காந்திருந்தாள். கவிதா கூடாரத்தின் வழியே கொல்லைக்குப் போகவும், ‘என்ன அண்ணி பகல்லியேவா?’ என்று சாடையாக கேலி செய்தாள். ரூமில் இருந்த எனக்கும் கேட்டது. கொஞ்சம் சங்கடமும், சங்கோஜமும் இருந்தாலும் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனக்கு ஒருவாரம் இரவு, ஒருவாரம் பகலாக வேலை மாறியிருந்தது. நாளாக நாளாக நாங்களிருவரும் வீட்டிலிருந்தாலோ அல்லது பேசிக்கொண்டிருந்தாலோ பாலா பக்கத்து வீட்டுக்குப் போக ஆரம்பித்தாள். என்னிடமும் அவளுக்கு பேச்சு குறைந்தது. கவிதாவுடன் எப்போதும்போல் இருந்தாள். புது உறவினர்கள் வருவதும்போவதும், நாங்கள் ஊர் சுற்றுவதுமென இரண்டு மூன்று மாதங்கள் பாலாவின் திருமணம் பற்றி எதுவும் பேசவில்லை. பாலாவும் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தனியாக படுக்க பயந்துகொண்டு எப்போதும் அம்மாவுடன் கூடாரத்தில்தான் படுப்பாள் பாலா. ஆனால் சிலநாட்களாக மளிகை சாமானும், பீரோவும் இருக்கும் ரூமில் படுத்துக் கொள்வதாக அம்மா சொன்னாள். என் ரூமுக்கு அடுத்த ரூம்தான் அது. ஒருநாள் பின்னிரவு நேரத்தில் முனகல் சத்தம் அவள் ரூமிலிருந்து கேட்டது. கவிதாவை பார்த்தேன். நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். நானும் ஜுரத்தில்தான் முனகுகிறாள் போலிருக்கிறதென்று அம்மாவை எழுப்பி பார்க்கச்சொன்னேன். ‘அதுல்லாம் ஒண்ணுல்ல போய் பேசாமப் படுடா’ என்றாள். மறுநாள் மறுநாள் அதே நேரம் அதே முனகல் தொடர்ந்தது.

அம்மாவிடம் எதுவும் கேட்க முடியவில்லை. ஒருநாள் பகலில் வீட்டிலிருந்த நேரத்தில் பாலா கோவிலுக்கு போயிருந்தாள். மனதில் அழுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தை தீர்த்துகொள்வதற்காக நான் அவளுடைய அறைக்குள் நுழைந்தேன். கவுச்சி வாடை அடித்தது. அம்மா அலறி அடித்துக்கொண்டு பின்னாலயே வந்து ‘அந்தண்டப்போ மொதல்ல’ என்று கையைப் பிடித்து தள்ளினாள்.

‘என்னம்மா என்னமா பிரச்சனை?’ எதோ மர்மங்களை உணர்ந்தவனாய் கேட்டேன்.

‘பாவம் பண்ணிட்டம்டா மவனே.. பாவம் பண்ணிட்டம்டா, வயசுக்கு வந்த பொண்ண வச்சிகிட்டு ஒனக்கு கல்யாணம் பண்ணது எவ்ளவு தப்புன்னு ரெண்டுவாரமா அனுபவிக்கிறன்டா.. அந்த பாவிக்குதான் அமையலையே பெத்ததுக்காச்சும் கால்கட்டு போட்டுப் பாப்பம்னு தானே செஞ்சேன்... இப்டி ஆவும்னு நெனச்சிப்பாக்கலையேப்பா...’ அம்மா சத்தம்போட்டு அழமுடியாமல் மழுமாறிக்கொண்டே கதறினாள். ‘உன்னயாச்சும் தனிக்குடித்தனம் அனுப்பிருக்கணும் அதுஞ்செய்யாம உட்டனே.. ஒருத்தி வாழ்க்கயையே நாசம் பண்ணிட்டம்பா... இந்த பாவத்த எங்கபோயி தெத்தப்போறன்னு தெரியலையே......’

என்னால் அம்மாவை சமாதானப்படுத்த முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுதாள். பாலாவுக்கு இப்ப என்ன பிரச்சனை என்பதை அறிவதிலேயே மனசு கூடுதலாக பிரயத்தனப்பட்டு அலைந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் அன்று இரவே பின்னிரவில் தெரியாமல் அவள் அறைக் கதவைத் திறக்க முயன்றேன். முடியவில்லை. சாவித் துவாரத்தின் வழியே பார்த்தேன். போர்வைக்குள் முனகிக்கொண்டே சுருண்டு கிடந்தாள். அருகில் ஒரு பாவாடை நிறைய இரத்தக் கறையாக இருந்தது. எனக்கு சூழ்நிலை புரிந்தது. முதன் முதலாக வாய்விட்டு கதறி அழுதேன். அம்மா எழுந்து வந்துவிட்டாள். ‘பாத்தியாடா.... பாத்தியாடா...’ என்று அவளும் கட்டிக்கொண்டு கதறினாள். ஆனாலும் பாலா ரூமில் முனகல் நிற்கவில்லை.

மறுநாளிலிலிருந்து தீவிரமாக வரன் தேட ஆரம்பித்தேன். மறுபடியும் அதே நிலைதான். பாலா சித்தப் பிரமை பிடித்ததுபோல் தானகவே பேசிக் கொள்ளத் தொடங்கினாள். யாருடனும் பேசுவது கிடையாது. கவிதாவுடன் அறவேயில்லை. பக்கத்துவீட்டுக்கு போவதும் நின்றுவிட்டதுபோலும். அந்த அறையிலேயே கிடந்தாள். ஒருநாள் அம்மாவும் நானும் ரெங்கபாஷ்யம் கல்யாணத்திற்கு சென்றிருந்தோம். கவிதா மட்டும் வீட்டிலிருந்தாள். அன்றுதான் அந்த விபரீதமும் நடந்தது. நாங்கள் திரும்பி வரும்போது கவிதா தலையில் அடிபட்டு ரெத்த வெள்ளத்தில் துடித்துகொண்டிருந்தாள். காது ஒருபக்கம் பிய்ந்து குழவிக்கல்லுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. பாலாவைத் தேடினேன், ஆளைக்காணோம். எனக்கு புரிந்துவிட்டது.

•••••••

நல்ல மழை. திருச்சி பேருந்து நிலையத்தினுள் சுக்கு காபிக்கு கூவி கூவி அழைத்தார்கள். அந்தப் பின்னிரவின் குளுமைக்கும், சாரல் ஊதலுக்கும் அது தேவையாகவும் பட்டது. சுக்கு காபியுடன் ஒரு தண்டவாளத் தூணினோரம் சாய்ந்து நின்றேன். ‘வர்ரீங்களா?’ என்று யாரோ கூப்பிட திரும்பினேன். ஒயர் கூடையுடன் பாலா நின்றிருந்தாள். ஒரு சில பெரிய பேருந்து நிலையங்களில் இதுபோல ஒயர் கூடையுடன் நிற்கும் பெண்களை பார்த்திருக்கிறேன். பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் விலைமாதென்று தெரிந்துவிடும். பாலாவை கொஞ்சம் நிதானித்துதான் அடையாளம் கண்டேன். தூக்கிவாரிப் போட்டது. நெஞ்செல்லாம் அடைத்தது. பாலா என்னை அடையாளம் காணவும் வாய்விட்டு ஓவென்று அழுதபடியே கண்மண் தெரியாமல் ஓடினாள். ஈரோட்டிலிருந்து பேருந்து நிலையத்தின் உள்ளே வந்த பேருந்தொன்று வந்த வேகத்தில் அவள்மீது மோதவும் பின் சக்கரம் அவள் மண்டையில் ஏறியது.

••••••

பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன்.

‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

‘இதான் உங்க அத்த’

‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’

இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன். கண்ணீர்தான் வரவில்லை.


நன்றி பண்புடன் இணைய இதழ்


Friday, September 16, 2011

வதம்

துண்டான சிலந்தியின் கால் துடிப்பதைபோல அவளின் இடதுகை மட்டும் பாயில் பிறாண்டிக் கொண்டிருந்தது. இரண்டு கண்முழிகளும் பிதுங்கி மேற்நோக்கி நிலைகுத்திவிட்டது. இந்நேரம் அவள் நாடி அடங்கியிருக்கும். இத்தனை ரண வேதனையும் நெஞ்செரிச்சலையும் தாண்டி என்மனதில் பூரண நிம்மதி, சந்தோஷம். இரண்டுவாரமாக இருந்த என் வயிற்றெரிச்சல் இன்று அடங்கிவிட்டது. ஆனாலும் வாய்விட்டு சிரிப்பதற்கு என்னிடம் திராணியில்லை. ஒரே இறுக்கமாக இருக்கிறது. இந்த மரமட்டைகள் அசைந்து தொலைத்தால் தேவலை. வாசற்கதவுக்கூட திறந்துதான் கிடக்கிறது.  இவள் போட்ட இந்தக்கூச்சலை யாராவது கேட்டிருப்பார்களா? இருக்காது... இருக்காது. எனக்கே லேசாகத்தான் கேட்டது.  பாஷாணம் எனக்கும் வேலை செய்கிறது. மெல்ல மெல்ல பார்வை மறைவதை நன்றாக உணரமுடிகிறது. கூரையின் மோட்டுவலைக் குச்சிகள் கோடுகோடாய்த்தான் தெரிகிறது.


காலையில் செய்தி தெரிந்தபின் என்னாகுமோ!? கலைந்த கோலமும் அதனை மொய்க்கும் எறும்புகளுமாய் ஊர் சனமே கூடி நிற்கும். ஆளாளுக்கு வாயில் வந்ததை மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். “சும்மாவாடி சொன்னாங்க… புத்திக்கெட்டதுங்க பூமிக்கிப்பாரம்னு” , “இந்த ரெண்டுங்கெட்டானோட வாழறதுக்கு அவ இப்டி சாவலாங்கறேன்” “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு வளத்தத தாரவாத்துட்டுதுங்க, இனி இருந்தென்ன? இல்லன்னாயென்ன? பேரன்பேத்தி பாத்துட்டு போயிருக்கலாம், என்ன கஷ்டமோ என்னமோ?” இப்படி. எப்படியும் எவனாவது ஓடிப்போய் பபிதாவுக்கு தந்தி அடித்துவிடுவான். அவளிடமிருந்து வந்த கடிதங்கள் குதிருக்கு பக்கத்தில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதிலேயே அவளின் முகவரியும் இருக்கிறது. MOTHER AND FATHER DEAD அல்லது VAITHYANATHAN AND ANNAM DEAD இப்படித்தான் கொடுக்கப்போகிறார்கள். இப்படித்தான் நாலைந்து எழவு வீடுகளுக்கு நானும் கொடுத்திருக்கிறேன்.


செய்தி தெரிந்தால் பபிதா துடித்துதான் போவாள். சிறா உடைக்கும் கோடரியை நடுமாரில் போட்டதுபோல்தான் இருக்கும், வயிறிலும் வாயிலும் அடித்துக்கொள்வாள். அந்த நேரத்தில் பஸ் கிடைக்குமோ என்னமோ?. அவளுக்கு எங்களைவிட்டால் நாதியில்லைதான், அதுவும் என்மேல் அவளுக்கு ரொம்பவே ப்ரியம். ஒரே பெண், சொல்லவா வேண்டும்.. எத்தனை ஊட்டி வளர்த்திருக்கிறேன். இவள் வயிற்றில் பிறந்ததுதான். கல்யாணம் முடிந்து இரண்டுவாரம்தான் ஆகிறது. நேற்று ஊருக்குப் போகும்போது கலங்கிய விழிகளுடன் என்னையேன் அப்படிப் பார்த்தாளென்று தெரியவில்லை. தீர்க்கதரிசனம் என்பார்களே! அதுபோல் எதாவது இருந்திருக்குமோ? இருக்கும் இருக்கும்.. நான் வளர்த்தவளாயிற்றே. பெண் வீட்டாரின் மூன்று அழைப்புகளும் முடிந்து ரெண்டுபேரையும் நேற்றுதான் அனுப்பிவைத்தோம். நானும் அவள் நல்லபடியாக போகட்டுமென்றுதான் காத்துக்கிடந்தேன். பபிதாவை நினைத்தால் கொஞ்சம் சங்கடமாகயிருந்தாலும் இது சரியான முடிவுதான். என்ன செய்வது?.


பலநாள் திருடன் ஒருநாளில் மாட்டுவான் என்பார்கள். ஒருவேளை அந்தச் செய்தி பப்பிக்குத் தெரிந்தால்... அவ்வளவுதான், நாண்டுகொள்வாள், இதைவிட பெரிய அவமானம் அவளுக்கு கிடையாது. குடியே முழுகிவிடும். அய்யோ, வேண்டாம்..வேண்டாம், நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அந்த மாதிரி நடப்பதற்குதான் இனி வழியில்லையே. அன்னம் வாய் திறந்தால்தான் உண்டு. அவள் வாய்தான் பிளந்துகிடக்கிறதே. ஹ..ஹ... என்னமோ சொல்வார்களே கரவம் கட்டி பழிதீர்ப்பதென்று. இந்த ரெண்டு வாரமும் என் மனம் கிடந்து எப்படித் துடித்தது, யாருக்காவது தெரியுமா?.. எத்தனை சாணக்கியக்காரி, கைகாரி இந்த அன்னம். நாக்கில் எத்தனை கொடுக்குகள். சாகும்போதுக்கூட என்ன துடுக்கான பேச்சு பேசுகிறாள்.


எனக்கும் அன்னத்துக்குமான இந்த 24, 25 ஆண்டுகால வாழ்க்கை மேம்போக்காக அப்பா, அம்மா ஸ்தானத்தில் பப்பிக்கு தெரிந்தாலும் இலைமறை காய்மறையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்த விசயம் வெளியுலகத்திற்கு தெரிந்தால் என்னாவது? வெளியுலகம் கிடக்கு, முதலில் பபிதாவிற்கு தெரியாமலே போய்விடவேண்டும். இனித்தெரியவும் வாய்ப்பில்லை. சுப்பிணி ஒருத்தனை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது.  அவனும் சொல்லக் கூடியவனில்லை. மானஸ்தன்தான். என்ன பெரிய மானஸ்தன்? பொல்லாத மானஸ்தன், நயவஞ்சகன்... காரியசாலி.. அவனைவிட்டால் இது வெளியில் ரெண்டாம்பேருக்கு தெரியாது, சொல்லமாட்டான் அவன்...


தெரிந்தால்தான் என்ன? நான் இனி எதைப் பார்க்கப்போகிறேன். தோ, இந்த பூரணம் அற்பமாகப்போகிறது. பிராணன் போனப்பிறகு என்ன நடந்தால் என்ன..? இந்த சுப்பிணி இல்லையென்றால் எனக்கும் அன்னத்துக்குமான வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்!! இருந்திருக்குமா? அவன் முன்னமே செத்திருந்தால் இது சாத்தியம். நிச்சயம் இருந்திருக்கலாம், ஆனால் இவள்.. நெஞ்செல்லாம் வஞ்சம், சண்டாளி... செத்தாள் சனியன், சாகட்டும், சாகட்டும்.


அப்போது எங்களுக்கு கல்யாணம் ஆகி 6 மாதமாகியிருந்தது. தனிக்குடித்தனம். அதற்குள் எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது, மாயை. வேண்டா வெறுப்பான வாழ்க்கையாக தெரிந்தது. கொல்லன் பட்டறையில் பதம் பார்த்தடித்த அரிவாள் முனையில் சம்மட்டியை போட்டு மழுங்கடித்தாற் போலாகிவிட்டது. வேறென்ன சொல்வது? அன்னம் அன்று காலரா வந்துகிடந்தாள். பக்கத்தில் பார்த்துக்கொள்ள ஆளில்லை. இருவர் வீட்டிற்குமே நான் சொல்லவுமில்லை. பார்த்துக்கொள்ளலாமென்ற அசட்டை. நான் பட்டறையில் கிடந்தேன். முதல்நாளே வயிற்றைப் பிடித்துக் கிடந்தவளை நான்தான் அலட்சியப்படுத்திவிட்டேன். அவளும் தன் தீவிரத்தைக் காட்டவில்லை. இந்த சுப்பிணி பக்கத்து வீட்டுக்காரன். துணிமணியெல்லாம் கழிந்து கிடந்தவளை தூக்கிக்கொண்டு அவன்தான் ஆஸ்பத்திரிக்கு ஓடியிருக்கிறான். பிறகு சேதிவந்துதான் அரக்கபறக்க நானும் ஓடினேன். காய்ந்த மாவிலைப்போல படுக்கையில் கிடந்தாள். எனக்கும் உச்சிமண்டையில் அப்போதுதான் உரைத்தது. ஒரு உயிரை உதாசீனப்படுத்துமளவுக்கு எத்தனை வன்மம், வக்கிரப்புத்தி எனக்கு. படித்து என்ன பிரையோஜனம். ஒன்றுமில்லை. ஒரு நல்ல வேலைக்குக்கூட போகமுடியவில்லை, நல்ல புத்தியும் இல்லை, இந்த உடல், நடை, உடை, பாவனை எதுவும் ம்கூம்....


அப்போதெல்லாம் நான் சுப்பிணியை தினமும் வணங்காத குறைதான். அவ்வளவு மதிப்பு அவன் மீதிருந்தது. நண்பர்களைப்போல நல்ல பழக்கம்தான் சுப்புணிக்கும் எனக்கும். அவனுக்கு நல்ல தலதல உடல்வாகு, மண்வெட்டி இலைபோல ஏந்தலான மார்புகள், தலை, கை, கால், மூக்கு முழி எதுவும் குறையில்லை. என்னைப்போலில்லைதான். எனக்கென்ன குறைச்சல் நானும் அவனைப்போல ஆண்பிள்ளைதான், ஆமாம் ஆண்பிள்ளைதான். அன்னத்தை தவிர எல்லாருக்கும் நானொரு ஆண்மகன்தான். தாம்பத்தியத்தை அன்னம் ரொம்பவும் விரும்பியிருப்பாள் போலிருக்கிறது. ஆனால் வெறும் தாம்பத்தியம்தான் இந்த வாழ்க்கையா? ச்ச்ச.. நானும் அவ்வாறு நினைக்கவில்லைதானே. அதிலும் குறையாக எனக்கு தெரியவில்லையே...


ஆனால் அன்னம்.. இந்த அன்னம்.......? இதோ கோசா..கோசா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கத்தியே செத்துப்போனாளே இந்த அன்னம்.. இவளைத்தவிர நான் எல்லோருக்கும் ஆண்பிள்ளைதான். என்னைப்பற்றி யாரிடமாவது சொல்லியிருப்பாளா? இருக்காது, சொல்லியிருந்தால் அக்கம் பக்கத்துக்கு சிறுக்கிகள்
என்னை ஏளனமாக பார்த்திருக்கவேண்டும். யாரும் அப்படி பார்த்ததே கிடையாது. ஆங்... ஆனாலும் சகுந்தலா சிறுக்கி மட்டும் ஒருமாதிரி வெடைப்பாக பார்ப்பாள், அப்பப்பா அதில்தான் எத்தனை எள்ளல்...!! த்தூ...


எப்போதோ பள்ளிவயதில் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு சிங்கானோடை ஜோசியக்காரன் சொன்னான், அந்த கருநாக்கன்தான் சொன்னான்..  இன்னும் ஞாபகமிருக்கிறது. ‘இது, பொம்மனாட்டி ஜாதகம்ல, இது தப்பிப்பொறந்தது, கேந்திரஸ்தானம், லக்னத்துல புதனும், சுக்கிரனும் சேந்துக்கெடக்கான், சந்திரன்  உச்சம்... புதன் அலி, சுக்கிரனும், சந்திரனும் பொம்பளச் சாதி.... ம்ம்ம்... ஜாதக அம்சமே அதாஞ்சொல்லுது, ஆளு பாத்தாலே தெர்லயா... ‘ஆனாலும்?’ இரண்டு மூன்று விரல்களை எண்ணிவிட்டு பிறகு சொன்னான் ‘....... காலத்துல சரியாயிடும், பாருங்க. கெட்டிக்காரனாயிடுவான்’.


உண்மைதான், என் பேச்செல்லாம்கூட ரெண்டுங்கெட்டான் நிலைதான், இப்போதெல்லாம் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன், மாற்றிகொண்டேனென்றால் அதிகம் எவரிடமும் பேசுவது கிடையாது. வாயைக் குதப்ப வெற்றிலைப் பாக்கு, இருக்கவேயிருக்கு. வேறென்ன.. அப்போதெல்லாம் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ள ரொம்ப பிரியப்படுவேன். ஏனென்றும் தெரியாது. அந்த பருவத்தில் ஆண்கள் மீதான விருப்பம்தான் மிதமிஞ்சியிருந்தது. பள்ளியில் என்கூட படித்த பயல்கள் எல்லாமே முதுகுக்குப்பின்னாடி ‘கோசா, ஒம்போது’ என்றுதான் பேசிக்கொள்வார்கள். எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் எனக்கு அது பொருட்டில்லை, பழகிப்போய்விட்டது.


ஒரு மாட்டின் கன்றுக்குட்டியை தினமும் தூக்கிப்பழகினால், அது மாடானப்பிறகும் நம்மாள் தூக்க முடியும். அதுபோல்தான் எல்லாமே எனக்கு பழகியிருந்தது. புளித்துப்போன வார்த்தைகள். ஒரு உச்ச வெறுப்பான நாளில் அன்னத்துக்கும் எனக்கும் சண்டை. பப்பிக்கு அப்போது மூன்றரை வயதிருக்கும். அன்னம் என்னை ‘வாடா, போடா’ போட்டு திட்டினாள். ஓங்கி அறைந்தேன், ‘டேய் கோசாப்பயலே என்னையாடா அடிக்கிற? சாண்டக்குடிக்கார, உங்கூட எவளாச்சும் குடும்பம் நடத்துவாளாடா, இம்மாந் தண்ணிக்கு உன்னய தெருவுல கையேந்த விடறேன்டா’ என்று பிடித்து தள்ளினாள், பிறகு அப்பன் வீட்டுக்கு போய்விட்டாள். பிறகு மாமனார் சமரசம், இத்யாதிகள். ஆனாலும் அவள்மனதில் என் மீதான இளக்காரப் பார்வை தொடர்ந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. நிஜமாகவே குமட்டுகிறது... உவ்வ்வ்... பாஷாணம் வேலை...


இத்தனை நாள் இல்லாத அல்லது தெரியாத அந்த இடி இரண்டு வாரங்களுக்கு முன்னால்தான் என்தலையில் விழுந்தது. அது எனக்கு தெரியாமலே இருந்திருக்கக்கூடாதா?... பப்பி என் மகளே இல்லையாம்.


‘மகமாயி.. மகமாயி.. நித்தம் உன்னக் கும்பிடுறனே... என்னடி சோதனையிது..’ கொல்லைக்கட்டில் இந்த சிறிக்கியும், அந்தப்பயலும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, எவ்வளவு அன்யோன்யமாக பேச்சு அவர்களுக்குள், குசுகுசுன்னு. ‘தாயே... மகமாயி...மகமாயி... நீயாச்சும் அப்பவே இவள காட்டிகொடுக்கக்கூடாதா?...’ ஆமாம் தெரிந்துதான் என்ன? ஒன்றும் கிடையாது. என் வாழ்க்கையே பப்பிக்காகதானே... அதெப்படி? இத்தனைக்காலம் எனக்குத் தெரியாமல்.... இவர்களின் உறவு புடம்போட்டதுபோல் மறைந்திருக்க முடியும்?.. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திருக்கும், எத்தனை நாள், ராப்பகல் பாராத பட்டறை வாழ்க்கை.. தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டது பிறகென்ன... பப்பிக்குப்போட்ட அந்த நாலு பவுன் நகையும், அவன்தான் கொடுத்திருப்பானோ? அவனேதான்.. நான் கேட்டதுக்கு இவள்தான் பதிலே சொல்லவில்லையே.. அப்படித்தானிருக்கும். அய்யோ பப்பி.. பப்பி..  ‘ச்ச்ச்ச்ச... இதென்ன புதிசா.. ஞாபகம் கொடுக்கும் பப்பியின் முகம் அவன் மூகமாட்டம்... அந்த உள்ளி மூக்கு அவனுடையதுதானோ? அவனுடையதுதான்.. அவனுடையதுதான்.. அப்படியே அவனைத்தான் உரித்துவைத்திருக்கிறாள். இத்தனைநாள் எனக்கு தோன்றவில்லையே.. இதென்ன.. ச்சை..ச்சை..


இந்த பாஷாணம் என்ன இப்படி உடம்பை முருக்குகிறது. யப்பா.. நெஞ்சிக்குள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதுபோல் எரிகிறது.... அன்னம் இன்று பரங்கிப்பழம் போட்டு பூண்டுக் குழம்புதான் வைத்திருந்தாள். அதில்தான் இதை ஊற்றினேன். பூண்டு வாடை எல்லாவற்றையும் மறைத்தேவிட்டது. நல்லதுதான். ஒன்றரை தட்டு சாதமாவது சாப்பிட்டிருப்பாள். தெரிந்ததாலோ என்னமோ அரைதட்டுக்குமேல் என்னால் முழுங்க முடியவில்லை. ரெண்டு மொனரு தண்ணீரும் குடித்தேன்.


அன்னம் போய்ச்சேர்ந்து இவ்வளவு நேரமாகியும் நான்மட்டும் இழுத்துக்கொண்டு கிடக்க அதுதான் காரணம். ஆனாலும் பூண்டுக்குழம்பில் பரங்கிப்பழம் போட்டால் எவ்வளவு ருசி!! நன்றாக வெந்த சேமியாபோல அதன் சதைகள், ஹும்.. ரசித்து ருசித்துச் சாப்பிடவேண்டும். ‘நாடகம் விடும் வேலைதான் உச்ச காட்சி நடக்குதம்மா....’ பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது. ‘கண்ணெல்லாம் சொருகுதுடி, நெஞ்செரிச்சல் தாங்கமுடியலடி ப்ப்பி...தாயீ.. நீ என் பொண்ணேயில்லையாமே?.. அய்யோ..அய்யோ..அய்யோ.. இது அடுக்குமா? தலையிலகூட அடிச்சிக்க முடியலடி.. சண்டாளி... செத்தா... இப்டி ஒரு வாழ்க்கை தேவையாடி ஒனக்கு அன்னம்..?? தேவயா......’ பூலோகம் இருண்டது.

நன்றி அதீதம்

Thursday, June 30, 2011

பம்பரம்



நீலவேணி இறந்து திங்களோடு திங்கள் எட்டு செவ்வாய் ஒன்பது நாட்களாகிறது. கோபுரத்தில் விழுந்த காகத்தின் எச்சம், முளைத்து ஆலமரமும் பின் அதுவே விருட்சமுமானது போல்தான் எங்கள் வாழ்க்கை. பாசி பிடித்த படித்துறையில் கால் வைத்தால் வழுக்கிவிடும், ஆனால் அதையும் மீறி இத்தனைக்காலம் ஓடிவிட்டது. போய் சேர்ந்துவிட்டாள் புண்ணியவதி. புதைத்த கையோடு உடன் பாலும் கையோடு மையோடு கல்லு கருமாதியும் முடிந்தேவிட்டது. ஊதுபத்தி வாடையும், பன்னீரின் வாடையும் கலந்து அவளின் சுவாசம் நிறைந்த இந்த கூடாரத்தை அபகரித்துவிட்டது. கண்ணுக்குத் தெரிந்து இந்த வீடும், தோ அவள் படத்தின் முன்னுள்ள பாக்கு வெட்டியும்தான் அவளுக்கான ஜென்மபலன், எங்களுக்கும். ஒட்டங்காடு போகவேண்டுமென்று தோன்றியது. இத்தனை நாளும் இந்த எண்ணம் இல்லாமலில்லை, இப்போதுபோல் இத்தனை நாளுமில்லை.

‘ரெங்கா? நான் ஒட்டங்காடுவரைக்கும் போவலாம்ணு இருக்கேன்யா...’ ரெங்கா என்னையே பார்த்துகொண்டிருந்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், அவனும் என்ன செய்வான்?

‘ஏம்ப்பா? இப்பபோயி?!!!’

‘இல்லய்யா, எனக்கென்னமோ போலருக்கு, நீலா பொறந்த ஊரு, அவளோட நான் வந்ததுலேர்ந்து இப்பதான் நேரங்கூடி வந்திருக்கு, தடவைக்கு தடவ நாஞ்சொன்னாலும் வேண்டா வேண்டாம்பா.. ஒரு நாலு நாளு இருந்திட்டு வர்ரன்யா’ நிறைய ஆற்றாமையும் கொஞ்சம் இயலாமையும் கலந்த என் பேச்சை அவன் தட்டவில்லை.

‘அதுக்குச்சொல்லல...’ முழுங்கிவிட்டு ‘சரிப்பா, அங்கப்போயி எங்க தங்குவீங்க? யாரிருக்கா? பட்டாமணியாரு இருக்காரா இப்ப? அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு போங்களேன்..’

‘சரிய்யா, பாக்கறேன், ராத்திரி சாப்பாடு முடிச்சிட்டே கெளம்பறேன்’

எல்லாம் தயாராகிவிட்டது. ஒரு கருப்புப் பையும், துணிமணிகளும், பேஸ்ட், பிரஸ் எல்லாமும் சரியாக எடுத்துவைத்திருந்தாள் சரசு, மருமகள். ‘போலாமா?’

‘தோ வந்திட்டேம்பா’ வண்டியில் கொண்டுவந்து பஸ்டாண்டில் விட்டான்.

ஒன்பதே முக்காலுக்கு கோயம்பேட்டில் எடுப்பான் அந்த பொறையார் பஸ். பொறையார் டூ மெட்ராஸ், மெட்ராஸ் டூ பொறையார் பைபாஸ். நெய்வேலி, சீர்காழி, மாயவரம், அப்பறம் நேர்வழியாக பொறையார் செல்லக்கூடியது. மாயவரத்தில் இறங்கி லாட்ஜில் தங்கி, குளித்துவிட்டு லைட்டாக டிபன் முடித்துக்கொண்டு கிளம்பினாலும் போதும். காலையில் ஒன்பதரைக்கோ என்னமோ 23ம் நம்பர் பஸ். செம்பனார்கோவில், ஒட்டங்காடு, திருவிளையாட்டம் வழியாக சங்கரன்பந்தல் போகும் அப்போது. இப்போதும் அந்த பஸ் ஓடுவதாக பட்டாமணியார் சொன்னார். இன்னேரம் அவருக்கும் என்னைப்போலவே வயதாகிருக்கும். தாடி, மீசை, கழுத்தில் ஒற்றை ருத்ராச்சம் இன்னமும் அப்படியே இருப்பாரா?!! வயோதிகம் அவர் உடலையும் வாட்டியிருக்கலாம். அவர் மனைவி செத்தது தெரியும். ஒட்டங்காட்டில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளையும் அவர் மூலமேதான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது ‘வர்ரேன்’ என்று சொன்னேனே ஒழிய எப்போதென்று சொல்லவில்லை. அவர் கண்ணில் படாமல் ஊரில் உலாவ முடியுமா? முடியும், முடியும்.. பாப்போம்..

மஞ்சளாற்றைத் தாண்டி இடதுபுறம் திரும்பியது பேருந்து. எனக்கு மனதெல்லாம் பக்..பக்..கென்று அடித்துக்கொள்ளத் துவங்கியது. கிட்டத்தட்ட 32 வருடங்கள். இங்கிருந்து இதே வழியேதான் நானும் நீலாவும் சைக்கிளில் செம்பனார்கோவில் போய், பின்பு பேருந்தில் மாயவரம், அப்பறம் மெட்ராஸ். அப்போது இந்தச் சாலை சிகப்பு கப்பியில் நிரம்பியிருக்கும். தொலைவில் இடதுபுறத்தில் சட்ரஸ்ஸும், வலதுபுறத்தில் முனியப்பன் கோவிலும் தெரிந்தது. அப்படியேத்தானிருக்கிறது. எந்த மாற்றமும் தெரியவில்லை. அருகருகே இரண்டு மூன்று குடிசைகள். நாங்கள் ஊரைவிட்டுப்போன அந்தக் கடைசிநேர பரபரப்பிலும் நீலா முனியப்பன் உண்டியலில் எதோ காசுபோட்டுவிட்டு சைக்கிளில் வந்து குந்தினாள். விபூதியும் பூசிக்கொண்டாள், நான் கண்டுகொள்ளவில்லை, இருவரையும். பனைமுட்டு, கோனமுட்டி வாய்க்கால், ஒரு சர்ச், உத்திராபதி கோவில் எல்லாம் செருகச்செருக கடந்துகொண்டேயிருந்தது. உடல் வயிறெல்லாம் ஒரு சந்தோஷ திரவம் சில்லென்றாற்போல் ஊறியது. பேருந்து இறக்கத்தில் இறங்கும்போது அடிவயிற்றில் ஒரு இனம்புரியா கிறக்கம் உண்டாகும், அப்படிதான் இதுவும்.

ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் ஸ்டாப்பிங்கில் இறங்கினேன். யாருக்கும் என்னைத்தெரிய வாய்ப்பேயில்லை. ஆனால் என் அப்பனை அறிந்தவர்கள் யாரேனுமிருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். ஆமாம்...என்னிடம் என் அப்பனின் முகம் அப்படியே ஒட்டியுள்ளது. இந்த பத்துநாள் தாடியும், வீசையும் அந்தாள் மூஞ்சை பளிச்சென்று காட்டிக்கொடுத்துவிடும். நெஞ்சின் படபடப்பு அடங்கவில்லை. மாரியம்மன் கோவில் வாசலில் தீக்குழி, கரிகள் அள்ளியபின் தெரியும் கருமை படர்ந்திருந்தது. எத்தனைக் கூட்டம் தீமிதித்திருக்குமோ!!!? ஒட்டங்காடு மாரியம்மன் தீமிதியென்றால் மாமாங்க கூட்டம் கூடும். ஜெ.ஜெ வென்று சுத்துபட்டு 54 கிராம மக்கள் கூடுவார்கள். எதிர் சாரியில் ஒரு பெட்டிக்கடை, வாடகை சைக்கிளும் இரண்டு முன்று கிடந்தது. அருள்ராஜ்தான் முன்பு இந்தக் கடை வைத்திருந்தார். இப்போது யாரென்று தெரியவில்லை. கடையில் யாரோ பொடியன் இருந்தான்.

‘தம்பி, சைக்கிள் வாடகைக்கு வேணும்பா?’

‘சைக்கிளா? நீங்க? எங்க போணூம்?’

‘பெருமாக் கோவிலாண்ட’

‘எப்ப வருவீங்க?’

‘ஒரு மணிநேரத்துக்குள்ள வந்திடுவம்பா’

‘ஐ.டி. கார்ட் வேணும், இருக்கா?’

சட்டையிலிருந்த பழைய லைசன்ஸ் கார்டை நீட்டினேன். வாங்கிக்கொண்டான்.

‘கேரியர் வய்ச்சி வேண்டால்ல’ ஒரு சைக்கிளைக் காட்டினான். எடுத்து ஸ்டேண்ட் தள்ளினேன். ரொம்ப நாளாகிறது, சைக்கிளைத்தொட்டு. மெட்ராஸில் கொஞ்சகாலம் சைக்கிள் ஓட்டியிருந்தாலும் நீண்ட இடைவெளி. ஒரு உந்து உந்தி ஏறினேன். பெடலை மிதிக்கும்போது சுலபமாக என்னையும் தள்ளிக்கொண்டே போவதுமாதிரி தோன்றியது.

நல்லவேளை, பெருமாள் குளத்தங்கரையில் யாருமில்லை. சைக்கிளை நிறுத்திவிட்டு  அரசமரத்தைச் சுற்றி கட்டியிருந்த திண்ணையில் அமர்ந்தேன். கோவிலின் உள்ளே மணிச் சத்தம் கேட்டது. மதியக்கால பூஜையாக இருக்கும்.

இந்த அரச மரத்தடியில் சிறுவனாக இருக்கும்போது சோறு தண்ணியின்றி விளையாடிய காலங்கள் எத்தனை!!! எத்தனை!!! என்னடாயிது வயோதிகத்திலாவது இந்த ஞாபகக் கொடுக்குகள் அற்றுப்போகக்கூடாதா? அதுசரி அப்படியிருந்தால் நாம் ஏன் இங்குவரப்போகிறோம்? கோவிலிலிருந்து யாரோவொருவர் வந்தார். ஆ... அந்த உருவம் பழக்கப்பட்டதுதான். அந்தக்காலத்து ஒற்றைநாடி, இப்போது.. இன்னும் தளர்ந்து... கூன் விழுந்து, அய்யரேதான்!!!!. என்னைப் பார்த்துவிட்டார்.

‘யாருப்பாது? இங்க உட்காந்திண்டிருக்க? புதுசாட்டருக்கு!!’

நெற்றியில் அவர் வைத்திருக்கும் குங்குமக் கீற்றலே போதும் அடையாளங் காண. புருவ மத்தியிலிருந்து உச்சி மண்டை வரை நீளும் அந்தக்கோடு. ‘ஆமாங்க சாமீ, புதுசுதான்.’

‘இஞ்ச யாரப்பாக்கணும்?’

‘சாமீ.. கோதண்டபாணிய ஞாபவமிருக்கா ஒங்களுக்கு?’

‘எந்தப் போதண்டபாணிங்க, தெர்லியே’

காது சரியாக கேட்கவில்லை போலும் ‘போதண்டபாணில்ல, கோதண்டபாணி, கோதண்டபாணி..’ உறக்கச்சொன்னேன். பிறகு ‘கொசவங் குட்டைக்கிட்ட ரெய்லோடு போட்ட வீடு ஞாபவமிருக்கா? 30-35 வருஷத்துக்கு முன்னாடிச் சொல்றேன் நானு. அவரு?’

‘ஆங்... டேய், படவா.. கோதண்டம் மொவங்காரனா??!!.. அதாங் மொவரக்கட்ட காட்டுதே...!!, குண்டுகுண்டுன்னு ஓடியாடிண்டிருந்த அந்தக் கொழந்தைய சைக்கிள்லயே இழுத்துண்டு ஓட்ன பயலாச்சே நீ... தாடி வீசல்லா வச்சிண்டு, கெழவனாட்டங்க கடக்க.. கூம் நாம்பரவால்லடாப்பா...’

‘ஆமாங்க சாமீ’. அவர் இத்தனையும் ஞாபகம் வைத்திருப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நாளில் ஊர் ஜனங்களுக்கே இந்த சேதி பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கும், அந்த விசும்பல்தான் இந்த ஐயரும். இந்த மரத்தடியில் பம்பரம் விளையாடும் பொழுதுகளில்தான் நீலா ரோட்டுக்கு அந்தண்டைப் பக்கம் வீட்டிலிருந்து பார்ப்பாள். சின்னப்பிள்ளையிலேயே அப்படிதான். ஊரிலேயே அவள் வீடுதான் மாடிவீடு. சீமத்தண்ணி குடித்த குடும்பமென்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மாட்டு கொட்டகைக்கூட ஒரு ஒட்டுக் கட்டிடத்தில்தான் இருந்தது. இப்பொழுது அந்த வீடும் கொட்டகையுமிருந்த சுவடுகளேயில்லை.

‘ஏண்டாப்பா நீலா எப்டியிருக்கா?! இன்னும் நீ சாமிச்செலைய ஒடைச்சிண்டுதானிருக்கியா?.... மொகரையே தெரியுதே... தோ பாத்தியா இந்த புள்ளையார? அவரு மூக்க உடைச்சது உன் வேலைதானேடா, இன்னும் ரெண்டு மூணுப் பேரோட தூக்கிப்போட்டியே இந்த கொளத்துல..’

உண்மைதான் இந்தப் பிள்ளையாரின் மூக்கு உடைந்தது என்னால்தான். அப்போதிருந்த வேகம், பகுத்தறிவு சிந்தனைகள், பெரியார், இராவணன் அண்ணன்... இந்த பிள்ளையார்தான் அதற்கு பலி, சாட்சி. அதனால் ஊரில் கெட்டப்பெயர், என்னுடன் சேர்ந்திருந்த மூன்றுபேருக்கும். நீலாவுக்குக்கூட இது பிடிக்கவில்லைதான். ஆனாலும் அதுவொரு பொருட்டில்லாமல் என்னை முழுமனதோடு ஏற்றுக்கொண்டிருந்தாள்.

‘ஆனா ஒண்ணுடாம்பி, எப்ப புள்ளையாரத்தூக்கி கொளத்தண்டைப் போட்டியோ அப்பலேர்ந்து கொளத்துல தண்ணி அத்துப்போச்சு.. என்ன சாபமோப்போ. பூட்டியிருந்ததால இந்தப் பெருமாள் தப்பிச்சிண்டார். இல்லன்னா அப்பருந்ததுக்கு இவரையும் தூக்கிப்போட்டிருப்ப..  ஒண்ணு தெரிஞ்சிக்கோடா, பெருமாளாயிருந்தாயென்ன? பெரியாராயிருந்தாயென்ன? மனுஷாள்மேல மனுஷாளுக்கு நம்பிக்கயத்து போனதாலனேடா இந்த தெய்வங்கள் வந்தது. அதையும் லோகத்லேர்ந்து அழிச்சிண்டா எல்லாஞ் சரியாயிடுமாயென்ன?, சரிவுடு, நீலா எப்டியிருக்கா?’ விட்ட இடத்திற்கே வந்து மீண்டும் அவர் கேட்கும்போது அவர் கண்களில் தெரிந்த ஆச்சர்யம் என்னை நடைமுறைக்கு தள்ளியது.

‘ம்ம்..நல்லாருக்கா சாமீ’ வேறெதையும் சொல்லத்தோன்றாமல் அசட்டையாக பொய் சொன்னேன்.

‘நீ கெடக்கவுடு, அவ நல்லாருக்கணும்டாப்பா, ஓடுபுள்ள ஒடியாருபுள்ளையா நாங் பூஜைக்கு வந்தாப்போதும் ஓடோடி வந்திடுவா, குளத்திலேர்ந்து தண்ணி கொண்டாரன்னே.. லெஷ்மி கடாஷம் அப்டியேருக்கும், இந்தப் பெருமாளுக்கு அவளை புடிக்கலப்போல.. அதான உன்னாண்டை விட்டுட்டான். ம்கூம் சூட்டிக்கலானப் பொண்ணு.., சின்ன வயசிலே பம்பரம் வெளையாண்டே அவள ஜோடி சேத்திண்டியேடா? அடுக்குமா, லோகத்துல எந்த பயலுக்காவது இந்த கொடுப்பினை உண்டா?!!’

நீலாவையே சுற்றி சுற்றி பேசிக்கொண்டிருந்தார், அவள் அம்மா அப்பா செத்தது, போனது, வந்தது, இன்னொரு பட்டாமணியார் கணக்காக ஆகிவிட்டது. அப்பறம் கிளம்பினார். என்னைப் பற்றி பெரிதாக விசாரிக்கக்கூட அவர் விரும்பவில்லை. போய்விட்டார். 

‘இந்த அரச மரத்தடிதான் என் வாழ்க்கை, இங்குதான் என் பொழுதுகள் விடிந்தது, இங்குதான் நீலா கிடைத்தாள், இந்த புனர்ஜென்மம் கிடைத்தது. நாலடி விட்டத்தில் ஒரு வட்டமும் நடுவே முக்கி வெளியேற முடியாத பம்பரங்களுமிருக்கும். வெளியே வந்த பம்பரக்காரர்களின் குறி உள்ளேயிருக்கும் பம்பரங்கள் மீது. அதில் உக்கு வைக்கவே அத்தனைப்பேரின் உக்கிர குணங்களும் ஆசைப்படும். எல்லோருக்கும் பொருந்தும் இந்த நீதி. எல்லாப் பம்பரங்களும் அடிபட்டு வெளியேறினால் பம்பரத்தை இழுப்பு விட்டு கையிறால் இரண்டு சுற்று சுற்றி மேலே தூக்கி இரண்டுகையாலும் பிடிக்கவேண்டும். அப்பீட் என்பார்கள். கடைசியாக எடுப்பவர் பம்பரத்தை உள்ளே வைக்கவேண்டும். இதுதான் பொழுது முச்சூடுமான விளையாட்டு. நான் பம்பரம் விடும் அழகுக்காகவும், அதை குத்துவிடும் ஆக்ரோஷத்திற்காகவும்தான் நீலா என்னை பார்த்துக்கொண்டேயிருப்பாள்.  அவளே பிறிதொரு நாளில் சொன்னாள். எல்லாப்பசங்களும் போனப்பிறகு நான் மட்டுமிருப்பேன். மரத்தடிக்கு வந்து ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ என்பாள். அப்போதெல்லாம் பம்பரக்கயிறு புதுத்தாலிக் கயிறு மொத்தமிருக்கும். பம்பரத்தின் கூர்முனையிலிருந்து படிப்படியாக சுற்றி தலைக்குமேல் ஓங்கி கீழ்நோக்கி ஒரு சொடுக்கு சொடுக்குவேன. தரையில் விழாமல் அதை வலது உள்ளங்கியில் தாங்கி அவள் கையில் விடுவேன். பிஞ்சிக்கைகளில் அந்த ஆணிப் பம்பரம் சுற்றிவர சிவந்துவிடும். ரசித்துக் கொண்டிருப்பாள்.

இந்த பம்பரத்திற்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு ஒற்றுமை, தொடர்பு. சாட்டையால் சுற்றிவிடுவது எவனோ. சுற்றுவது நாம், தெம்பு குறைந்தபின் ஆட்டம் காலி படுதா காலி. முடியாமல் கஷ்ட வட்டத்தில் மாட்டிக்கொண்டால் உக்கு விழுவதுபோல் சில அடிகள், மரண அடிகள். இதை நினைக்க நினைக்க எனக்கு பம்பரம் விடவேண்டும் என்ற ஆசை வந்தது.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வேங்குவேங்கென்று அந்தக் கடைக்குப்போனேன். ‘தம்பி, பம்பரம் இருக்கா?’ மூச்சி இறைத்தது.

‘இருக்குங்க’ முழுக் கொட்டைப்பாக்கு அளவில் ஒன்றைக் கொடுத்தான். ப்ளாஸ்டிக் பம்பரம். தமிழ்நாட்டில் பம்பரத் தட்டுப்பாட்டுக்கு விஜயகாந்தும், வைகோவும் காரணகர்த்தாக்கள் போலிருக்கிறது. ச்ச்சை..

‘கயிறு கொடப்பா?’ சிகப்புக்கலரில் ஒரு தாம்புக் கயிறுப்போல் கொடுத்தான். மொத்தம் 8 ரூபாய்.

மறுபடியும் அரச மரத்தடிக்கு வந்தேன். பெருமாள் கோவில் உள்ளேயிருந்து ஊதுபத்தி மணம் வெளிவரைக்கும் அடித்தது. அரசமர இலைகள் சலசலவென்று அடித்துக் கொண்டிருந்தன. சைக்கிளை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமில்லை. பம்பரத்தில் கயிற்றைச் சுற்றினேன். வழுக்கி வழுக்கி வந்தது. பிறகு பிடித்துகொண்டது. தரையில் ஓங்கி குத்துவிட்டேன், டங்கென்று தரையில் தட்டி குளத்துப் படிக்கட்டில் விழுந்தது. சுற்றவில்லை. மீண்டும் எடுத்து கொஞ்சம் பொறுமையாகக் குத்தினேன். சுற்றியது. ஒரு பின்னிரவு நேரத்தில் மொட்டைமாடியை அலங்கரிக்கும் காற்று மனதைப் பரவசப்படுத்தும், அதுபோலிருந்தது. கீழே குனிந்து புறங்கை தரையில் பட ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் ஒரு விரிசல் உண்டாக்கி பம்பரத்தில் ஆணிக்கு நேராக நீட்டிச் சொருகினேன். பம்பரம் சுற்றியபடியே கையில் ஏறியது.

என்னைக் கேட்டால் பம்பரம் கையில் சுற்றும் அந்த விநாடிகளின் குருகுருப்பையும் கூச்சத்தையும் ஏந்தி ரசிப்பது இந்த வயோதிகத்தின் புண்ணியம் என்பேன். நாற்பது வருடங்கள் இருக்கலாம். இதே மரம், இதே இடம், கலகலவென்று எத்தனைப்பேர் இந்தப் பம்பரம் விளையாட. ஆனால் இப்போது? மல்லாந்துப் படுத்து  மார்பில் துப்பிக்கொள்வதுபோல் நகர வாழ்க்கை, கிராமத்துப் பிள்ளைகளுக்கும் இதேதான் கதி. நெஞ்செங்கும் நிம்மதியால் நிறைந்தது. கொஞ்சநேரம் மரத்தடி திண்ணையில் படுத்து கண்களை மூடினேன். ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ நீலா கை நீட்டினாள்..  


Friday, October 29, 2010

நந்தி...

பிரதோஷந்தோரும் மௌன விரதமிருக்கும் பழக்கம் எனக்குண்டு. ஏன் ஆரம்பித்தேனென்று தெரியவில்லை. பெரும்பாலான ஆண்கள் இவ்விரதமிருப்பதில்லை. ஆனால் நானிருக்கிறேன். இந்தநாளில்தான் ஒருவேளை உணவுக்கும், அவ்வப்போதைய தொண்டை நனைத்தலுக்கும் இந்த உதடுகளை புணரவிடுதல் போதுமானதாக இருக்கிறது. மேலும் ஒரு தனி அறை முற்றிலுமொரு மயான அமைதியை தரவல்லதாதலின் இவையெல்லாவற்றிற்கும் உகந்தது. இன்று மாலை ஈஸ்வரன் கோவில் செல்லும்வரை இதுதான் என்னுலகம். இந்த சாலை பார்த்தமாதிரியான சன்னலும் வடக்கிலிருந்து வீசும் மெல்லிய கிழிசல் காற்றும் அனுபவிக்க அனுபவிக்க சுகந்தம். மனிதிலிருக்கும் தாண்டவ அமைதி இந்த நாளை தவிர்த்து மற்றைய நாட்களில் கிடைப்பதில்லை என்பது என் அனுபவ உண்மை.

இந்த தனியறையில் வியாபித்திருக்கும் அத்தனைப்பொருட்களுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது. அதையுணரக்கூட எனக்கிந்தப் பொழுது தேவைப்படுகிறது. இந்த நாற்காலி, மேசை, அரிக்கன் விளக்கு, சுவர் மூலையிலிருக்கும் அடுக்குப்பானைகள், மேசைமீது அடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள், அந்த எம்ப்ராய்டரிங் திரைச்சீலைகள் இப்படியாவும் இந்தவொருநாளில்தான் அழகாய் தெரிகிறது, மற்ற நாட்களில் எனையாட்கொள்ளும் இயந்திரத்தன்மை இவையனைத்தையும் கண்மூடி மறைத்துவிடுகிறது. இந்த நாளும், நான் பார்க்கும் இந்த சாலையும் அதில் பயணிக்கும் மனிதர்களும் என் பெருஞ்சுமையென்பது யாருக்குத்தெரியும்?. ஏனோ தெரியவில்லை, இதையனைத்தையும் நானே விரும்பி ஏற்கிறேன். ஒரு நாள் முழுதும் மலரும் அனைத்துப்பூக்களும் பூஜைக்குரியதாகவோ அல்லது ரசிப்பதற்குகந்ததாகவோவா இருந்துவிடுகிறது? எதோவொன்றேனும் குறைபட்டுதான் விடுகிறது. அதுபோலவே நான்பிறந்த அன்றையநாளில் என்கால்கள் விண்ணப்பட்டிருந்தது. ஈஸ்வரன்கோவில் நந்தியினுருவம் உங்கள் மனதிலிருக்கும். அதுபோல்தான் எனக்கும் எப்போதும் அமர்ந்தநிலை. அதற்காக எந்த ஈஸ்வரன் என்னெதிரே அமர்ந்திருக்கிறான் அல்லது அனுதினம் விஷேசப்படுகிறானென்று தெரியவில்லை. அதன் கால்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அந்தப்பெரிய நந்தியின் கால்கள் எவ்வளவு சிறிதாக சோம்பிக்கிடக்கும், அதேதான். இப்போது என்னை உருவகப்படுத்துங்கள்.

மனைவி மக்கள், குடும்பச்சுமை, உறவுகள், நல்லதுகெட்டது, நாள் கிழமை இப்படியிவை எதுவுக்கும் லாயக்கற்றவனென்பது எனக்கு கொடுக்கப்பட்ட வரம். கொஞ்சம் வசதியானதுதான். சென்றமாதம் நான்சென்ற வினோத்தின் திருமணம் நீங்கலாக வேறெதிலும் நான் பங்கேற்பதில்லை. அவன் என் பால்ய சிநேகிதன். அவனல்லால் வேறொருவன் என்னை வெகுவாக கவர்ந்ததில்லை. ஒவ்வொருநாளும் என்னை மொய்க்கும் பரிதாபக்கண்களுக்கு மத்தியில் அவன் என்னை உணர்ந்தவன் என்றால் மிகையில்லை. எவ்வளவு ஆழமான நட்பு அவனுடையது. நினைத்துப்பார்க்கையில் இப்போதும் இனித்துக்கொண்டேயிருக்கிறான். பதினெட்டு வருட நட்பில் இடையில் மனக்கசப்பில் ஒருவருடம் பேசாமல் இருந்திருக்கிறோம். என்தவறுதான் அது. அதுவொரு ஆழ்ந்த வலி, இருவருக்குமே.

அன்றைய நாளில் எனக்கு அறிமுகமானவன்தான் சிவா. அவன்மூலம்தான் இந்த அலுவலகப்பணி எனக்கு கிடைத்தது. இதுவும்கூட ஒரு ஆத்மார்த்தமான நட்பு. ஆயினும் என்னுள் எழும் பொறாமைக் குணம் அனைத்தையும் கெடுத்துவிடுமோ என்ற அச்சம்மட்டும் இருந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொருநாளும் அவன் அலுவலகத்திற்கு வரும்விதம், நடையுடைகள், பாவனைகள். வெகுவாக இம்சிக்கிறது. கட்டுடலும் செந்தோல் கவர்ச்சியுமிக்க ஒருத்தியை கண்கொட்டும் பார்வையில் அள்ளித்தின்னும் உணர்வு எந்தவொரு பருவமெய்தவனுக்கும் இருக்கத்தான் செய்யும். அதுபோலவே அவனின் தோற்றமும் நடையுடையும் என்கண்களை கொத்திக்கொள்கிறது. என்ன செய்ய? என் ஊனம் பிச்சிப்பிடுங்கும் கழுகாக சாகடிக்கிறது. நான் வணங்கும் தெய்வம் எனையேன் இப்படி சபித்தது, சபிக்கிறது என்று எண்ணும்போதெல்லாம் இவ்வுடலின் மீதுரும் வெறுப்பு அளவில்லாதது.

நான் மாற்றுத்திறனாளியாம், சிறகற்றப் பறவைக்கு இச்சமூகம் காட்டும் அற்ப அக்கறை. எந்த கொம்பனுக்கு தெரியும் என் அன்றாட அவஸ்தைகளும், வேதனைகளும் இன்னபிறவும். பார்ப்பதற்கு நானொரு சக மனிதன்தான். ஆனால்..ஆனால்...இந்த கால்...ச்சை..ச்சை.. சிவா மீதான நட்பு எப்போதும்போலிருப்பினும் அவன் மீதான வெறி என்னுள் தலைதூக்கத்தொடங்குகிறது. அதிலும் அவன் கரும்பச்சை பேண்ட், அதற்கு தகுந்தார்ப்போல் அணியும் வெளிர்நிற சட்டையும் நடக்கும்போது இடது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டுச் செல்வதும்.... என்ன சொல்ல? அவன் கோப்புகளைச் சுமந்து எனைகடக்கும்போதும், அலுவலகத்தில் இடையிடையே நடந்துசெல்லும்போதும் என்னையறியாமல் அவனை சபிக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள். என் மீது எனக்கே பரிதாபம் உண்டாகும் அல்லது உண்டாக்கும் கணங்கள் யாவிலும் என் சாபம் எவரையோ நோக்கி பயணிக்கிறது.

இந்த நேரத்தில் என்னைப்பற்றி என் நாட்குறிப்பேட்டில் எழுதிய வரிகள் ஒன்று ஞாபகம் வருகிறது. ‘என் வாழ்க்கை இருட்டறையில் எழுதப்பெற்றதொரு தொடர்கதை‘ எவ்வளவு உண்மை. இதையேன் எழுதினேன் தெரியவில்லை. எதோவொரு அற்பாசையும் அதன்மூலம் பெற்ற வெறுமையும் இதை எழுத காரணமாயிருந்திருக்கக்கூடும். இப்போது ஞாபகம் வருகிறது. ஒரு நாள் நான் எழ முயன்றேன். என் உள்ளங்கால்களை இப்புவியிலழுத்தி நிற்க முயன்றேன். எவர்எவர் மீதானோ ஈர்ப்போ வெறியோ எனையிப்படி செய்யத்தூண்டியது. ப்ச்..இது தோல்விதான் என்பது தெரிந்தே செய்யப்பட்ட முயற்சி. எல்லோருக்கும் ஒரு கனவிருக்கும். எனக்கும் இருக்கிறது இவ்வாழ்நாளில் ஒருநிமிடமேனும் சிவாவைப்போல வாழ்ந்து இல்லையில்லை நடந்துவிடவேண்டும். ஸ்டைலாக இந்தக் கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு கோப்புகளை அலுவலக அறையெங்கும் எடுத்துச்செல்லவேண்டும். அப்படியே இறந்துவிடலாம். என் பிறவிப்பயன் முழுமைபெறும். இப்போது ஈஸ்வரன்கோவில் செல்கிறேன். வழக்கம்போல நந்திதான் இன்றைய முக்கியஸ்தர். எனக்கு அதன் கால் மட்டுமே.


.

Friday, September 17, 2010

ராசம்...

என்றுமில்லாது இன்று ஆளோடிக்கட்டிலில் கொஞ்சம் படுக்கவேண்டும் என்று தோன்றியது. வீட்டினுள்ளே டங்..டங்.. என்று தரை அதிர்வதற்கு என் மனைவிதான் காரணம். பெயர் ராசம். இந்த 26 வருட திருமண வாழ்வில் அவளிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியன நிறைய இருந்திருக்கிறது. ஆயினும் எந்த கணவனுக்குத்தான் மனைவியென்பவள் ஒரு மானுட ஜென்மம் என்பது அவ்வளவு எளிதாக புரிந்திருக்கிறது. நான் மட்டும் விதிவிலக்காயென்ன. சின்ன வயதில் தந்தையை இழந்த என்னை பத்தாம் வகுப்புவரை படிக்கவைத்தது என் அம்மாதான். மரப்பொந்தினிலிருக்கும் பருந்து குஞ்சுக்கு ஆகாரம் அவ்வப்போது கிடைத்துவிடும்தான். இருப்பினும் பறக்க கற்றுக்கொடுப்பது ஜென்ம இரத்தமின்றி வேறென்னவாக இருக்கமுடியும். என் பாட்டன், முப்பாட்டன் எவன் மதித்தான் என் பாட்டி, முப்பாட்டிகளை.

ஒரு படி மேலேபோய் என் தாத்தன் குடும்பச்சண்டையில் பாட்டியின் காலை கடப்பாறையால் முட்டிக்குமேலே ஓங்கி அடித்திருக்கிறான். அய்யோ..அய்யோ...என்று அடுத்தவீட்டுக்குகூட கேட்காதபடி அலறிவிட்டு அடுத்தவேளை சோற்றை பொங்கிப்போட்ட புண்ணியவதி அவளென்று குடும்ப வரலாறை கேட்கும்போதெல்லாம் என் அத்தை கண்ணீர்மல்க கூறுவாள். எவ்வளவு கொடியவன், கிராதகம் பிடித்தவன் என்று அப்போதும் நினைத்துக்கொள்வேன். இப்போது நினைத்தாலும் அப்படித்தான். பித்துக்குளி. நல்லவேளை நமக்கந்தளவுக்கு புத்திகெட்டுப்போகவில்லை என்பதற்கு என் படிப்பறிவோ, பகுத்தறிவோ காரணமாயிருக்கும் அக்காவின் மகளை அவளின் 16 வயதில் கட்டிக்கொண்டேன். என் குடும்ப ரத்தம்தான் ராசத்திற்கு. அதனாலோ என்னவோ என்னிடம் அரைவாங்கி கண்ணம் வீங்கினாலும் எனக்கு சோறு உண்டு. 3 வருட தாம்பத்தியத்தில் பெற்றெடுத்ததை மலர்கொடி என்ற நாமம்சூட்டி ஒருவழியாக சென்றவருடம் கரையேற்றினேன். கரையேற்றினேன் என்பதுதான் அத்தனை சிரமங்களுக்குமான ஒற்றைச்சொல்.

ஒரே பெண் வேறெதுவுமில்லை. சிறுவயதில் அவள் சில்லிக்கோடு விடையாடும் அழகு தனிதான். கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நானும் ராசமும் மற்றவர்களுடன் அவள் போட்டிப்போட்டு துள்ளி துள்ளி நொண்டியடித்து விளையாடும் பாங்கை ரசித்திருக்கிறோம். ராசம்தான் அவளுக்கு இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்தாள். ராசமும் சிறுவயதில் இந்த விளையாட்டில் தேர்ந்தவள்தான். பெண் பார்க்க நிச்சயமாகி சிங்காரத்தின் கூண்டு வண்டியை வாடகைக்கெடுத்து போகும்போதுகூட தெருவாசலில் விளையாடிக்கொண்டுதான் இருந்தாள். ‘விளையாட்டுப்பிள்ளையாவே வளந்துட்டா, போ..போ..மூஞ்சி கழுவியா’என்று அவளை துரத்திவிட்டு மாமா என்னிடம் அசடு வழிந்ததுகூட இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஏணிப்படிகள்போல ஆறு பெட்டிகளுடன் கூடியதில் மலையிலிருந்து ஆரம்பித்து 5,4,3,2,1 வரை வந்து பிறகு, கைமேல் சில்லியை வைத்து நொண்டியடிக்கவேண்டும். புறங்கை, விரலிடுக்கு, கால், கால் விரலிடுக்கு, இறுதியாக மேட்டா கீட்டாவில் முடியும் அந்த விளையாட்டு தெருப்பெண்களின் சமயோசித விளையாட்டு, இன்னும் சொல்வதானால் பாரம்பரிய விளையாட்டு. மேட்டா கீட்டாவில் எந்த பெட்டியில் சில்லியை போடுகிறோமோ அந்த பெட்டி ஒரு உப்பு என்று விளையாடிய பெண் கோடுபோட்டுக்கொள்வாள். அந்த பெட்டியை எதிராளி நொண்டியடிக்கும்போது தாண்டித்தான் செல்லவேண்டும். விதிமுறை. வயதுக்கு வந்த பின்னும் மலருக்கு இந்த விளையாட்டு அலுக்கவில்லை. ராசத்திற்கும் வேடிக்கை பார்ப்பதும் அலுக்கவில்லை.

என் மகளை பெண்பார்க்க வந்தபோதும் சில்லிக்கோடுதான் விளையாடிக்கொண்டிருந்தாள். என் மாப்பிள்ளையிடம் நான் அசடுவழியவில்லை. சின்ன சின்ன குடும்பங்களில் ஒருவர் பிரிந்தபின் ஏற்படும் அதே வெறுமைதான் இப்போது என் வீட்டிலும். காயப்போட்ட துணிகளுடன் கொடி அறுந்து விழுவதுபோல பிரிவென்பது இந்த மூன்றுபேர் குடும்பத்தின் உச்ச வலி, பார்க்க அழகாயிருந்தாலும்கூட. நான் வேலைக்கு சென்றபின் ஆக்கி இறக்கி வைத்த நேரம்போக ராசத்தை வேறெந்த வேலைகளும் இழுத்துப்பிடிக்கவில்லை. மிஞ்சிப்போனால் என் துணிகளை துவைப்பாள். உண்டு தின்ற ஏனங்கள். அப்படியேதும் அவளின் தனிமையை ஆட்கொண்டதாக தெரியவில்லை, ஏன் நானும்கூட. என் வலியே அதிகம்தான். பெண்களுக்கான வற்றாத கண்ணூற்று முனுக்கென்றால் பொங்கிவிடுவதைப்போல, எந்த ஆண்மகனால் முடிகிறது. என் நெஞ்சிலும் அழுத்தம் இல்லாமல் இல்லை.

இரவுகளில் ராசம் தூங்கும் போது எதோ நெஞ்சழுத்தக்காரியின் முகமாகத்தான் அவள் முகம் இருக்கும். என் முகத்தைப்பற்றி அவளிடம்தான் கேட்கவேண்டும். சென்றமாதம்தான் அவளின் நெஞ்சாழ்மையை இந்தக்கோலத்தில் பார்த்தேன். ஒரு கண்ணாடியும் அது உடைந்தால் தெரியும் இரண்டு பிம்பங்களுமாய் என் முன் அவள். மலரின் அந்த பச்சைக்கலர் பாவாடை தாவணியை உடுத்தியிருந்தாள். இந்த 45வது வயதில் அவளுக்கு எடுப்பாகத்தான் இருந்தது என்று சொன்னால் நான் பைத்தியமோ என்று எனக்கே தோன்றும். சிகையில் இரட்டைப்பின்னல் வேறு. கொல்லையில் பூத்திருந்த திசம்பர் பூவைக் கட்டி சூடியிருந்தால். அந்த நெத்திச்சுட்டி ஏதென்று தெரியவில்லை. பார்ப்பதற்கு அகோரமான தோற்றம்தான். அருகில் செல்லும்வரை என்னைப்பார்க்காதவள் சென்றவுடன் விரைத்த உடலுடன் மலங்க மலங்க விழித்தது என் 52 வருட வயது முரட்டையும், திடகாத்திரத்தையும் பொலபொலவென விழ்த்தியது. இன்று நினைத்தாலும் ஒரு சொட்டாவது கண்ணீர் வரத்தான் செய்கிறது.

நாட்கள் நகர்வது அவளுக்கு தெரிகிறதோ என்னவோ, சமயத்தில் அவளிடம் அந்த பருவ நினைவு குடிபுகுந்துவிடுகிறது. பார்ப்பவர்கள் பைத்தியம் என்கிறார்கள். இன்று வீட்டினுள் வரும் டங்...டங்...என்ற சத்தம் ராசம் சில்லிக்கோடு விளையாடுவதால்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் தனி அரையில் கோலிக்குண்டு விளையாடுவது யாருக்கும் தெரியாது.

*


குறிப்பு- இச்சிறுகதை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அவரது தளத்தில் குறிப்பிட்டது கீழே :-

சுருக்கமாகச் சொல்லப்பட்ட கதை. கதைசொல்லியின் ஆளுமை அந்த மொழ்யிலேயே தெரிகிறது. அதிக விவரிப்புகள் இல்லாமல் இயல்பாக ஒரு பெரும் சோகம், தலைமுறைகளாக நீளும் சோகம் சொல்லப்படுகிறது

ஒரு உச்சத்தில் அந்த வட்டாட்டம் பலவிஷயங்களுக்கு குறியீடாக மாறி நிற்கிறது
நன்றி திரு.ஜெயமோகன்

Wednesday, July 21, 2010

ஒட்டுவாரொட்டி...

முருகேசனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் முருகேசனுக்கு பத்திகொண்டுதான் வரும்.

‘ஒருநாளைக்கு பதினஞ்சாயரத்து சொச்சம் பேராவது பொழங்குற எடத்துல க... பயலுங்க ஒரு பக்கத்தால மட்டும்தான் ஒண்ணுக்க இருக்க கட்டிவிட்டுருக்கானுங்க. அந்தப்பக்கத்தால ஒண்ணு கட்டினா இவனுவ வீட்டுக்காசு கொறஞ்சமாதிரி நெனப்பு. இந்த செவத்துல பொழுதுக்கும் நின்னு ஒண்ணுக்கடிச்சு நாறடிக்கிறத பயலுங்கல என்னத்த சொல்றது. பாழப்போனவனுங்களுக்கு புத்தியிருக்குமா என்னான்னே தெரியல. எல்லாம் முழுக்காலு சட்டையும் சவடாலுமாத்தான் திரியிரானுங்க, ஒரு பயலுக்காச்சும் இப்டி பொதுவால நின்னு இருக்கோமே இதுனால வர கெடுதல நெனச்சுப்பாத்தானுங்களா? நாத்தம் நாத்தம் அண்டசயிக்கல’
இது முருகேசனின் அன்றாட புலம்பல்.

‘ஏப்பா கொஞ்சம் தள்ளிதான் போங்களாம்பா.. அங்கணத்தான் கட்டிவுட்டுருக்காங்கல்ல’
இப்டியும் சிலநேரம் கத்திப்பார்ப்பான். ‘நல்லது சொன்னா எவங்கேக்குறான்.. நாசமாப்போச்சு..நமக்கென்ன’ என்று நினைப்பதுதான். ஆனாலும் அவனால் முடிவதில்லை. ‘பங்காளி ஆத்தர அவசரத்துக்கு போறதுதான். இதெல்லாமா பாத்துகிட்டுருப்பாங்க, அழிஞ்ச கொல்லையில ஆடு மேஞ்சான்ன? மாடு மேஞ்சான்ன??’ன்னு பக்கத்துக்கடை பங்காளி சொல்வதுண்டு. ‘சும்மாகெட பங்காளி. எனக்கு கெட்டக்கோவம் வந்திடும்’ என்பான்.

அன்றைக்கு ஆறுமணிக்கு கடைதிறக்கவேண்டியவன் ஏழு மணி ஆகிவிட்டது. அவசரஅவசரமாக வந்தவன் ‘இந்த கொண்டாங்கொடுத்தான் ஒறவே வேண்டான்னு நெனைக்கறதுதான். என்னப்பண்ணி தொலையறது. வந்ததுங்களுக்கு எதாவது செஞ்சித்தொலைய வேண்டிக்கடக்கு’ மனதிற்குள் புலம்பியவாறே ‘கிரிச்’ யென்ற உருமலோடு இயங்கும் சட்டரை மேலே தூக்கினான். கொல்லைப்பக்கமுள்ள ஒரு கழிவரையையும் சொந்தங்கள் அடைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. ‘எல்லாத்தையும் அடக்கலாம் போலருக்கு, இத அடக்க முடியறதில்ல. கடையத்தெறந்திட்டு போலாம்னா இப்டி அடிவயித்தால படுத்துதே. நேத்தைக்கு நைட்டு இந்த அரிசி கணக்கா உள்ள மாத்தரைய (Cetirizine) சாப்டது தப்பாப்போச்சு. நிமிசத்து ஒருவாட்டியா வரும். கருமம் புடுச்சவனுங்க. சலி அலர்ஜின்னாலும் சரி, அரிப்பு, புண்ணுன்னாலும் சரி இதததான் தர்ரானுங்க.’ அதற்குள் யாரோ கடைக்கு வந்துவிட்டார்கள்.

‘வாங்கம்மா என்ன வேணும்?’.
‘ஆப்பில் என்னவெல’.
‘கிலோ 140’
‘அரகிலோ போடுங்க’
‘ம்ம்ம்’
‘பை வச்சிருக்கீங்களா?’
‘இருக்கு’
‘இந்தாங்க.... காலைலேயே நூறுவாய தர்ரீங்களே. சில்லர இல்லைங்களா?’
‘இல்லப்பா’
‘பங்காளி இந்த நூறுவாய ஒடச்சி கொடேன்.’
‘காலைல ஏது பங்காளி. இல்ல...’
‘இரும்மா, எதுத்தால பூக்கடயில வாங்கியாரேன்.’

‘ச்ச..ச்ச.. அடிவயத்தவேற லேசா வலிக்கற மாரி இருக்கே. இனிமேலும் முடியாது. யாவாரத்தையும் உடமுடியல. நல்லவேள சில்லர வாங்க இங்கவந்தோம். அப்டியே போயிட்டு வந்திடவேண்டியதுதான்’ கீழண்டப்பக்கமாய் உள்ள இடுப்பளவு சிமெண்ட் கிராதிப்போட்டு அடைத்திருந்த அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்திற்குள் நுழைந்தான். உள்ளபோனதுதான் தாமதம்...‘அடக்கருமம் புடிச்சவங்களா இங்கயா வந்து பேண்டு வப்பானுங்க, நாறப்பயலுக. காலங்காத்தால, ஹ்கூம், கொல்லுன்னு மொய்க்கிற ஈக்கூட்டத்த பாத்தாலே பயமாயிருக்கு. வாயில நல்லா வருது. என்னாத்த சொல்லி திட்டறது. இப்ப எங்கப்போறது?. ம்கூம்....... அவசரத்துக்கு பாவமில்ல. இன்னைக்கு இந்த செவத்தாலையே போவவேண்டியதுதான். இங்க கூட பரவாயில்ல போலருக்கு. மூக்க பொத்திகிட்டே இருந்துக்கலாம்’ குற்றவுணர்ச்சியும் தானாக பொத்திக்கொண்டது.

•••••••••••••••

ராமநாதனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ராமநாதனுக்கு பத்திகொண்டுதான் வரும்.........................................


Friday, May 21, 2010

வெட்டிவேரு வாசம்....


.......வெட்டிவேரு வாசம்... இந்த வெடலப்புள்ள நேசம்.... பூவுக்கு வாசமுண்டு.... பூமிக்கும் வாசம் உண்டு...... வேருக்கு வாசம் வந்தது ஓஓ.. மானே....

“அடியே........ ஏங்கறன்ங் காலங்காத்தால பாட்டப்போட்டு உசுரெடுக்குறன்ங்..... ”

“ந்ந்ந்த ஏந்திரிய்யா.... மணி ஆறாச்சு...... ”

“ஏ.... என்னைக்குல்லாம இன்னைக்கு என்னாங்கறன்ங்.... ”

“யோ... இன்னைக்கு நம்ம கண்ணால நாளுயா.... ”

“அட....ரெண்டு பெத்தப்பறமுமா நாபவம் வச்சிருக்குறன்ங்..... ”

“ம்ம்க்க்கும்.... எவத்தாளத்துக்கு ஒண்ணு கொறச்சல்ல... ஏந்திரி மொதல்ல.. கொள்ளடுப்புல வெந்நீரு போட்ருக்கன்ங்... தோப்புக்கு போய்ட்டு வந்து குளி.. நாத்தத்தோடவ படுத்துகிட்டு.....”

“ஏங்... காலைல்ல குளிக்க சொல்றங்கறன்ங்... ஏன்ங் எங்கப்போணும்... ”

“வாய்யா.... திருக்கடவூருக்கு போயிட்டு வந்திடுவோம்..... ”

“அடியே...கோயிலுக்குபோறவ கேக்குற பாட்டாடி இது?? அதுவுல்லாம அறுவதாங் கண்ணாலத்துக்கதாங்கறன்ங் அங்கப்போவணும்...”

“ஆமா... இப்ப போனா அந்த சாமீ வேண்டான்னுடுமாக்கும்... ”

“சொல்லிக்கேக்குறவளா நீயி.... இரு..... ”

“யோ... அப்டியே... மஞ்சப்பொட்டியில வேட்டி சட்ட சலவப்போட்டு வச்சிருக்கன்ங்... கட்டிக்க...”

“அட... இதுவேறயா... நமக்கு ஏங்கறன்ங் இந்த சவடாலு.... ”

“....வாயடைக்காத நீ..... யோவ்... நல்லா யோசனப்பண்ணிப்பாரு.... என்னைக்காவது சாக்கட நாத்தமும் இந்த ஊர்க்காரப்பயலுவோ பீநாத்தமுல்லாம உன்ன பாக்க முடியுதா?”

“ம்ம்ங்ங்ங்.... கழுதைக்கு வாக்கப்பட்டா ஒதப்பட்டுதான ஆவ்ணும். புதுசா என்ன ஓசன....சரி... வர்ரப்ப மடப்பொறத்துல பெரியாச்சிய ஒரு எட்டு பாத்துட்டு, பசங்களையும் அனுப்பி ஒருவாரமாச்சி... அதுங்களையும் பாத்துட்டு வந்திடுவம்...கண்ணுலையே நிக்குதுங்க...”

“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்... மொதல்ல கோயிலுக்கு போயிட்டு நேரா வூட்டுக்குதான் வரணும். மதியானம் சமைச்சி சாப்புட்டு மொத ஆட்டம் சிம்லஸ்க்கு படம் பாக்க போவணும்... ”

“அடி... எழவெடுத்தவள... பெரிசா கனவோடத்தான் திரியிறயா நீ... வௌக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் தேவையா....... ம்ம்ம்ம்.........”

•••••••••••••••••••

“ஏ..சின்னாளு..?? .சின்னாளு....?? ”

“ஏக்கா... காலைல ஜோடிச்சிட்டு களம்பிட்ட...??”

“கோயிலுக்கு போயிட்டு... 12 மணிப்போல வந்திடுவன்ங்.. மொட்ட தெருவுக்கு மீனு கொண்டாரும்.... பாற கருவாடும், சதநண்டும் கொண்டார சொல்லிக்கன்ங்.. இந்தா 50 ரூவா இருக்கு... வாங்கி வைய்யி வந்திடுறேன்ங்..”

“எக்கா... கோயிலுக்கு போறங்கறன்.. கருவாடு, நண்டு வாங்கச்சொல்ற.. ”

“அதான் போயிட்டு வந்திடுவன்ல்ல... பிறவென்ன.. வாங்கி வைய்யிந்த...அப்டியே கொள்ளைக்குப்போயீ கொழம்புல போட ரெண்டு வாழக்காவும் பறிச்சி வைய்யி... ”

“ம்ம்ம்... ஒரு மாக்கமாத்த இருக்க... போயிட்டு வா....”

•••••••••••••••••

“நல்லா வேண்டிக்குய்யா..... மொதல்ல இந்த நாத்தம்புடிச்ச வேலய வுட்டுட்டு மேல போவணும்.. ”

“அடியே நானுங் பாக்குறன்ங்... .நாத்தம் நாத்தமுன்னே பேசிட்டு திரியிறன்ங்... போட்டன்னு வைய்யி...”

“நாத்தமுல்லாம பின்ன என்ன... சந்தனத்துலயா டெயிலி முழுவி கெடக்குற நீ.. ”

“ஆமா.. அய்யன்ங் போனப்பறம்... கருணப்பாத்து எனக்கு இந்த வேலய கொடுத்தானுவோ.. இல்லன்னா தெருத்தெருவா குப்பய கூட்டிட்டு எவன்டா எட்டனா ஒர்ரூவா குடுப்பான்னு கையேந்திகிட்டுதான் நிக்கணும் தெரிஞ்சிக்க.”

“இப்ப மட்டும் என்னவான்ங்... எவன் வூட்ல பீத்தக்கொழா அடச்சிக்கெடந்தாலும் உள்ள யெறங்கி நோண்டி வுட்டுட்டு அப்டித்தான செய்யிற... ஒங் மேல வர்ர நாத்தம் பத்தாதுன்னு சாராயமும், பீடியும் வேற...”

“ஏன்டி தெரியாமத்தாங் கேக்குறன்ங் ஒப்பன் உன்ன இந்த நாத்தத்தோடதானடி பெத்தான்ங்...”

“சரி... கோயில்ல நின்னு சத்தம்போடாத... போயிட்டு வந்து வச்சிக்கலாம்ங்....”

••••••••••••••••••••••

“ஏய்.. படமும் பாத்தாச்சு.. சந்தோஷந்தான...?? லைட்ட போடு மொதல்ல.. இருட்டாருக்கு...

“இந்தாய்யா அப்டியே போயி குளிச்சிட்டு வா...”

“ம்ம்ம்........ம்ம்ம்.......என்னா வேக்காலம்....மானம் வேற மூடிக்கெடக்கு.. சரி அந்த துண்ட எடு... ”

••••••••••••••••••••••

“இந்தா இத போட்டுக்க.. ”

“என்னாடியிது... சவ்வாது பவுடறாட்டம்.... ”

“அதான்..”

“இந்நேரத்துல என்னாத்துக்கு?? ”

“யோ... நல்லா நெனச்சிப்பாரு... எப்பவாவது உம்பக்கத்துல மூக்க மூடாம படுக்க முடியுதா? நானும் பொம்பளதான... ஊருல உள்ள மனுஷப்பயலுவோல்லாம் என்னமா சம்முன்னு இருக்கானுங்க. உன்னயும் அந்த மாதிரி பாக்கணும்னு எனக்கும் ஆச இருக்கும்ல.. நீ வந்தப்பறமும் குளிக்கவுமாட்ட.. சாராயப்பாக்கட்ட ஒடச்சி ஊத்திகிட்டு...கொஞ்சமாச்சும் நெனச்ச்....”

“ஏ... வாயமூடு.. எனக்கும் ஆசபாசமுல்லாமயா கெடக்குறன்ங்.... இப்ப என்னங்கற.... ”

“இந்தா இத போட்டுக்க... உம்மாருல கொஞ்சநேரமாச்சும் இந்த வாசத்தோட சாஞ்சிகெடக்கணும்யா...எனக்காவ....”

“ச்ச்சீ... ஏன்டி கண்ணக்கசக்குறன்ங்... ஒனக்காவ்வும், புள்ளைங்களுக்காவுந்தானடி இந்த நாத்தப்பொழப்பு...என்ன பண்ணச்சொல்ற...சரி...வா........”





•••••••••••



Friday, October 9, 2009

குடியானவன்...


மரங்களடர்ந்த சாலையில் புள்ளியிட்டும் போடாத கோலமாய் ஒழுகியிருக்கும் நிலவொளி, புளியமரங்களின் புண்ணியத்தில் அடைந்து, அடைகாத்து தலைமுறையை செழிக்க செய்யும் காக்கைகளின் ஒன்றிரண்டு அரைகூவல், எங்கோ ஒலிக்கும் நாய்களின் மெல்லிய அழகான குரைப்பு, இஞ்சியை மென்று விழுங்கமுடியா தவிப்பில் விழிக்கும் குரங்குகளைப்போல ஆந்தைகள், இசைந்தோடும் காற்றில் முடியாமல் அசையும் நாணல், தலையில் விழுந்த பனிச்சுமையை தாங்கி நிற்கும் புற்கள், உறவுகளின் தூரங்களையொத்து இடைவெளிகாட்டும் தார்ச்சாலையின் நடு கோடுகள் இப்படி எல்லாமே ரசிக்கும்படியான சூழ்நிலையாயினும் குமார் எனும் பெயரிருந்த அவன் எதையும் பார்த்து பரவசப்பட முடியவில்லை. ஆயினும் தன் இல்லத்தின் திசையில் காற்றுடன் இயைந்து நடக்கிறான்.


செல்லும் வழியில் தான் கடைசியாக மதுவருந்திய கடையினை சற்றே நின்று பார்த்து ஒரு பெருமூச்சினை விலையாக கொடுத்து மதுவின் வாசனையை புதிதாய் சுவாசிப்பவன்போல் உணர்கிறான். உள்ளே மதுவருந்துமிடத்தில் குடியரசர்கள் விட்டுச்சென்ற போதை தெளியாத பாட்டில்களை பொறுக்கிப்போடும் சத்தம் மிகத்தெளிவாக கேட்கிறது. மீண்டும் மதுவின் பிடியில் விழக்கூடாது என்ற எண்ணத்துடன் அவனின் கால்கள் மேலும் இரண்டொரு விரல்கடை தள்ளிதள்ளியே வைத்து நடக்கின்றன.


தெருவினில் நுழைகிறான் இந்த அமைதியை எங்கோ உணர்ந்ததுபோல் இருந்தாலும் அதை ஆராய்ந்து விடை தெளிய அவன்மனம் ஒப்பவில்லை. மனைவியை காணும் மனநிலையில் கொஞ்சமும் மழுங்காமல் செல்கிறது அவன் கால்கள். கருத்த உருவம், பருத்த உடல் என அந்த மளிகைக்கடைக்காரரை கயற்றுக்கட்டில் கொஞ்சம் சிரமமாய்த்தான் தாங்கிக்கொண்டிருந்தது. எதிலும் கவலைகொள்ளாத அவன் உடல் கொசுவின் கொஞ்சலில் மட்டும் கொஞ்சம் குலுங்குகிறது. பரம்பரையோடு படுத்திருக்கும் ஆட்டுக்கூட்டங்கள் கொஞ்சம் வழிவிட்டுதான் பார்ப்போம் என்ற தோரணையில் விலகி நிற்கின்றன. பக்கத்து வீட்டின் பரமசிவம் கதவினை இறுக சாத்திவிட்டு தூங்கிகொண்டிருப்பான் போலவே தெரிந்தது. நேற்று முன்தினம்வரை இருவரும் சேர்ந்து போதையின் புத்தியை பரிமாறிக்கொண்டது நினைவில் நிழலாடியது.


வீட்டின் வாசல் வருகிறான். சிறிய பந்தலில் தேக்குமர கட்டில் மற்றும் நாற்காலி. சற்று முன்னர் தான் கழுவியிருக்கவேண்டும். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ரோஜாப்பூவின் இதழ்கள், கால்வைத்தால் அப்பிக்கொள்ளும் சேரும் சகதியுமான தெருவினை ஒட்டிய வாயிற்படி, அலசிவிடப்பட்ட திண்ணை, யாருமில்லை. உள்ளே நுழைகிறான். சிதறி கிடக்கும் கண்ணாடித் துண்டங்களாய் ஆங்காங்கே உறங்கும் உறவினங்கள். காலையில் வந்தவர்கள் இன்னும் செல்லவில்லை என்றே தோன்றியது. மனைவியைத்தேடினான். அறையில் இருக்கவேண்டும் என்று எண்ணியவாறு உள்தாழ்ப்பால் போட்ட கதவினில் நுழைந்து செல்கிறான்.


விட்டம், சுழலும் மின்விசிறி, சுற்றி அலையும் கடன் சுமைகள் சூழ்ந்திருக்கும் மேகங்களாய் விடையில்லா மகனின் வாழ்க்கை, பருவமடைய பார்த்திருக்கும் மகளின் எதிர்காலம், எல்லாவற்றிற்கும் மேலாக சிறகொடிந்த பறவையாய் படுத்திருக்கும் மாமியாரின் மறுபக்கம் இப்படி எல்லாம் அவன் மனைவியின் வெறித்த பார்வையில் ஒரு ஏக்கமாய் தொங்கிகொண்டிருந்தது.


நீரின்றி காய்ந்த தென்னையாய் அவள் தேகம், இதற்குமேல் வர வாய்ப்பில்லா நிலையில் தற்கொலைக்கு தயாராகும் கண்ணீரின் எஞ்சிய துளி, அதைக் காப்பாற்றுத் துடிக்கும் கீழிமை, கோடியாய் வந்த ஒரு சிகப்பு புடவையுடன் ஒரு கோடியில் துறந்துவிட மறுக்கும் உயிருடன் அவள் உடல். அழியபோகும் பிரமிப்பில் நெற்றிப்பொட்டு, அதனருகே அடித்துக்கொண்டழுததில் உடைந்த வளையலின் ஒரு துண்டு குத்தியதாக பழிசுமத்தும் காயம், இன்னும் கொஞ்ச நாளாவது அவள் குழலில் தங்கவேண்டும் என்ற ஆதங்கத்தில் உதிரப்போகும் மல்லிகை, பதினைந்து நாளில் அவள் கழுத்தை விட்டகலப்போகும் அவன் குடித்தழித்ததில் மிஞ்சிய ஒரே சொத்தான தாலி. இப்படி எல்லாம் பார்த்து , ஒன்றை மட்டும் உணர்கிறான்... அவளுக்கான ஆறுதல் எவராலும் கொடுக்கமுடியாத கடனாக பதுங்கியிருந்ததை. உறங்காத அவள் விழியினில் நிலையிருந்த இமையின் வலிமை அவனை உருக்குலைத்தது. மௌனமாய் திரும்பினான்.


மூச்சு முட்டிய போதையில் நேற்று முன்தினம் எப்படி படுத்தோம்? எப்படி இறந்தோம்? ஏன் இறந்தோம்? என்ற கேள்விகளுக்கான விடை கிடைக்காமலே.... மீண்டும் வந்தவழியை தேடின குமார் எனும் ‘குடியானவனின் கண்கள்.


*******


தங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....



  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO