க.பாலாசி: ஒப்பாரி
Showing posts with label ஒப்பாரி. Show all posts
Showing posts with label ஒப்பாரி. Show all posts

Thursday, April 1, 2010

இதுக்காகவே சாவனுங்க...

“அட எங்கக்கா... காலங்காத்தால கட்ன சேலயோட களம்பிட்ட...

“அடியே கூறுகெட்டவளே சேதி தெரியாதாடி ஒனக்கு...


“என்னக்கா
சொல்ற... ??

“க்கும்... அறப்படிச்சவன் அங்காடிக்குப் போனாக்கா அள்ளவும் மாட்டானாங், கொள்ளவும் மாட்டானான். அந்த கதையால்ல இருக்கு. நீ அறப்புக்கு போனதும்போதும் அக்கம்பக்கத்துல என்ன நடக்குதுன்னே தெரிஞ்சிக்கிறதில்ல... நம்ம சந்தராவோட புருஷன் செத்துட்டானான்டி..


“அய்யோ என்னக்கா சொல்ற நீயி..
!!!!!! எடத்தெருவுலேர்த்து பாலு கொண்டாருமே அந்தக்கவோட வீட்டுக்காரனா.

“அட ஆமாடி.. நல்லாத்தான் இருந்தேன். என்ன எழவுன்னு தெரியல... பொசுக்குன்னு போயிட்டான். நல்ல சாக்காடு மனுசனுக்கு.

“அந்தக்காவ பொட்டும்பூவுமா ராசாத்தி மவன் கல்யாணத்துல பாக்குறப்போ அப்டியே மவாலட்சுமி மாதிரி இருக்குமேக்கா.. இனிமே அது மொவத்த எப்டி பாக்குறது??

“சரி... ஒன் வீட்டுக்காரன் எங்கடி.. ??

“அது இன்னைக்குன்னு பாத்துதான் வாழக்கொள்ளையில எல அரக்க போயிருக்கு. அண்ணன் வீட்ல இருந்தா அப்டியே அதுக்கு சேதி சொல்லிடசொல்லுக்கா.

“எங்கூட்டு மனுஷன் முன்னாடியே அங்கண போயிட்டான்டி. இரு என்மொவன அனுப்புறேன்.

“அக்கா இரு...இரு... அங்கண வர்ரறு அந்த மனுஷனாட்டந்தான் தெரியுது...

“அட உன் வீட்டுக்காரன்தாண்டி...

“என்னாங்கிறங் வாசல்ல நின்னு கதயளந்துகிட்டு நிக்கிற. பக்கத்துதெருவுல கலியன் செத்துட்டானாம்ல. காலைலேர்ந்து ஒரு பயலும் எனக்கு சேதிய சொல்லல. இப்பதான் பாண்டிபய வந்து சொன்னான். களம்பலையா நீயி.

இப்பதேன் அக்கா சொன்னுது... அதான் ஓங்கிட்ட சேதிசொல்லிட்டு போலான்னு பாத்தேன்.

“சரி.. .நான் கௌம்புறேன். நீங்க ரெண்டுபேருமா குறுக்கால வந்து சேருங்க..

***************

இப்டி ஒரு பேச்ச கேட்க முடியும்னா அது கிராமத்துலையாத்தான் இருக்குங்க. எங்கண எவன் செத்தாலும் சும்மா சேதி தெரிஞ்சா போதும். யாரு என்னங்கறது அப்பறம்தான். என்ன வேலவெட்டியாயிருந்தாலும் அங்கணயே போட்டுட்டு சோறுதண்ணிகூட இல்லாம சாவு வீட்லயே அடக்கம் பண்றவரைக்கும் காத்துகெடப்பாங்க. பொம்பளைங்க ஒருபடி மேலதான். அதுங்க ஒப்பாரியில்லன்னா செத்தவன் அனாத மாதிரிதான். எடத்தெரு பொம்பள, கீழத்தெரு பொம்பளைய கட்டிகிட்டு அழும். கீழத்தெரு பொம்பளைக்கு பக்கத்துல செத்தவனோட அக்காகாரி உக்காந்திருக்கும். அது எந்த தெருவு என்ன சாதி... ம்கூம்.. .ஒண்ணுத்தையும் பாக்காதுங்க.

வீட்லேர்ந்து மூக்க சிந்திகிட்டே வருவாங்க. அந்த வாசப்படிய தொடும்போது பாக்கணுமே...அதுங்க மார்ல அடிச்சிக்கிறத...நமக்கு நெஞ்சிவலியே வர்றமாதிரி இருக்கும். அவ்வளவு உணர்ச்சியோட இருக்கும். எங்கணயாவது தப்பு சத்தம் கேட்டாக்கா வீட்ல ஒட்காந்துகிட்டு எங்கம்மா பொலம்பிகிட்டிருக்கும். எவனுக்கோ நல்ல சாக்காடுன்னு. செத்தது ஆம்பளையா பொம்பளையான்னு கூட அதுக்கு தெரியாது.


செத்தவன் வூட்ல சொந்தக்காரங்க நிக்கிறாங்களோ இல்லையோ.. பெரத்தி சனங்கதான் நெறைய நிக்கும். தப்படிக்குறவனுக்கு சொல்லுறதுல ஆரம்பிச்சி வாக்கரிசி போடுறவரைக்கும் எல்லாரும் கூட நிப்பாங்க. இந்த கூட்டத்த பாக்குறப்ப நாமளும் இந்தமாதிரி நாலுபேர சம்பாதிச்சிட்டுதான்டா சாவனும்னு தோணும். வாழ்ந்தாலும் செத்தாலும் ஒன் ஒறவே வேனான்னுட்டு போனவன்கூட செத்துட்டான்னு சேதி தெரிஞ்சா மொத ஆளாவந்து சொந்தத்துக்கு சேதிசொல்லிகிட்டு நிப்பான். வாய்க்கா சண்டயில வறப்ப பறிகொடுத்தவனும், பங்காளி சண்டயில பங்கு கெடைக்காதவனும்கூட முன்னாடிவந்து பந்தகாலு நட்டுகிட்டு நிப்பானுங்க.


பொம்பளைங்க மட்டும் சும்மாவாயென்ன...


என்ன சொல்லி அழுதாலும்... ஆங்ங்ங்... அ.............

பாவிமனம் தாங்கலையே..... ஆங்ங்ங்ங்.... அ..........

என்ன ஆறுதல் சொன்னாலும்.... ஆங்ங்ங்ங்...அ.......

பாழும் மனம் ஆறலையே................................ யக்கா........


இப்டி உன்னய தவிக்க உட்டுட்டு போயிட்டானேங்ங்ங்ங்ங்...


யப்பாடி இத கேட்டாலே கல்லு மனசுக்காரனுக்குகூட கடகடன்னு கண்ணுலேர்ந்து தண்ணி கொட்டாதுங்களா இல்லியா...!!!

போன மனுஷன குளிப்பாட்டி முழுக்காட்டி பாடையில போட்டு, பேரன் பேத்திங்க, இல்லன்னா சொந்தக்காரங் கையில தீவெட்டிய குடுத்து, எல்லாரையும் மூணு சுத்து சுத்திவர சொல்லி, கையில அரிசியக்குடுத்து வாயிலப்போடச்சொல்லும்போது ஒடையாத நெஞ்சையும், கலங்காத கண்ணயும் எங்கணவும் பாக்கமுடியாதுங்க... அதோட பாடைய தூக்கும்போது இந்த பொம்பளைங்க வைக்குற கூப்பாடு இருக்கே... நண்டு சிண்டுங்க எல்லாஞ்சேந்து ஒப்பாரி வைக்குங்க. என்னத்த சொல்றது... இதுக்காகவே சாவனுங்க... அப்டியே செத்தாலும் கிராமத்துல (சொந்தவூருல) சாவனுங்க....

சரி உடுங்க... கண்ணுல வரப்போற செரங்குக்கு கண்ணாடிய பாத்து என்ன ஆவப்போவுது...





  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO