2005 மாசி மாதம்
‘ம்ம்ம்மா.... சாந்தி வருதும்மா ’
‘எந்த சாந்தி??’
‘அதாம்மா தெருவுக்கு மீனு கொண்டாருமே.. அந்த பட்ணத்தி சாந்திதான்ங்....’
‘ஏ.... அப்டியா... அவ பொழச்சிட்டாளா.!!!’
‘ம்ம்... எனக்கும் பாத்தொன்ன ஒண்ணுஞ் சொல்லமுடியலம்மா...’
••••••••
‘ஏ.. சாந்தி நல்லாயிருக்கியாடி... ?’
‘நல்லாருக்கங்கா... நீ எப்டி இருக்க...’
‘ம்ம்... நல்லாயிருக்கன்டி... எப்டிடி பொழச்ச...??’
‘ம்ம்.. எப்டியோ பொழச்சிட்டேன்கா... என்னத்த பொழச்சி என்ன பண்றது... ஏன்டா இந்த உசிருன்னு தோணுது...’
‘ஏண்டி சலுத்துகிறவ.. எத்தனயோ மக்க கடலோட போச்சு.. நீயாச்சும் உசிரோட வந்திருக்கியேன்னு சந்தோஷப்படுறேன்.. .நீயென்னடான்னா இப்டி சொல்றவ.’
‘என்னக்கா பண்றது பெத்த பொண்ணு போச்சு, கட்டுன புருஷன் வலையோட போயிட்டான்ங்... நான் மட்டுமிருந்து.....................’
‘ஏ... அழுவாதடி... அழுது என்னாத்த ஆவப்போவுது விடு... எல்லாந் தலவிதின்னு நெனச்சிக்கவேண்டியதுதான்...’
‘யாருட்டக்கா சொல்லியழுவுறது. உன்னாட்டமாதிரி யாராச்சும் விசாரிக்கமாட்டாங்களான்னுதான் மனசு கடந்து அடிச்சுக்கிது. எங்கணயாவது இந்த சொமைய எறக்கிவைக்கணும்ல.’
‘ஏங்க…. பொண்ணுன்னா... ஒரு சின்ன பொண்ணு இருந்துச்சே அதுவா.?? ஒருநாளு பஸ்ல காரைக்காலுக்கு போறதுக்கு அழச்சிட்டு வந்தீங்களே.... ?? (நான்)’
‘ஆமந்தம்பி... அதான்... 3ம்ப்பு படிச்சிகிட்டிருந்துச்சு.. லீவுதான வௌயாண்டுட்டு போவுட்டும்ட்டு வீட்லயே உட்டுட்டு நான் இங்க மீனு கொண்டாந்துட்டேன். கடைசியில.....’
‘ஏ... சாந்தி அழாத.... என்ன.... விடு..விடு... சரி... சாப்பிட்டியாடி....
‘ம்ம்... சாப்டங்க்கா... என்னத்தக்கா விடுறது... ஆழாக்கு அரிசியாருந்தாலும் அடுப்புகட்டி வேணுமேக்கா... வடிச்சி வச்ச சோத்த அள்ளிதின்னக்கூட மனசு வல்லியேக்கா...’
‘ம்ம்... சரி... உடுடி... ஆமா...இப்ப உங்கூட யாரு இருக்கா.?’
‘என்ங் மாமியாக் கெழவிதாங்கா இருக்கு.. இங்கண தெருவுக்கு கருவாடு கொண்டாருமே அதான்.. ’
‘ஓ அதுவா...
‘ம்ம்ம்....
‘நீ கொடுக்குற பப்பாளி பழம்னா உசிரா சாப்டுவாக்கா என்ங் பொண்ணு. இன்னைக்கு பாத்தியா....
‘ம்ம்... என்னத்தடி சொல்றது.. அந்த கடவுள் ஏந்தான் இப்டி எங்மக்கள சோதிக்கரான்னு தெரியல... கூம்...ஆமா இந்த குண்டா ஒருத்தி பெரிய கூடையில மீனு கொண்டாருவாளே அவ இருக்காளா?’
‘அது தெரியலக்கா.... அது தரங்கம்பாடில்ல.. எனக்கு தெரியாது.’
‘சரி... இப்பல்லாம் வீடுல்லாம் கட்டிக்கொடுக்கறானுவோலே.. ஒனக்கு எதுனாவ்து கொடுத்தாங்களா?’
‘கிழிச்சானுவோ. சாவப்பொழச்சி கெடந்தப்ப, அள்ளிப்போட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோவ ஒருத்தனும் வரல. வந்தவனுங்கல்லாம் செத்ததுங்க காதுலு கழுத்துல கடந்ததெல்லாம் களவாண்டிட்டுதான் போனானுவோலே தவர வேறொன்னும் செய்யல. என்ங் பொண்ணு காதுல கடந்த தொங்கட்டானக்கூட உடலக்கா. அது செத்துகெடந்த பனமுட்டுல போயி பாத்தப்ப காதுல இருந்த சதயக்கூட வுட்டுவைக்கல நாசமாப்போறபயலுங்க. வயிறெல்லாம் எறியுதுக்கா.’
‘அடிப்பாவி... இப்டில்லாமா சனங்க இருக்குதுங்க....’
‘எல்லாரும் இல்ல. சும்மாச்சொல்லக்கூடாது அதுலையும் செலபேரு நல்லா உதவுனாங்க. சோறு தண்ணியில்லாமக்கூட ராத்திரி பவலுன்னு பாக்காம எங்ககூடயே நெறையபேரு கடந்தாங்க... பெறகு வந்தவனுங்கல்லாம் அத செய்யுற இத செய்யுறன்னு செஞ்சிட்டு காசு பாக்குறானுங்க. யாருக்கும் சொந்தம்ல பந்தம்ல நடுத்தெருவுல நின்னுகெடக்கோம். எங்களுக்கு கட்டிகொடுக்குற வீட்லக்கூட அதையும் இதையும் அள்ளிப்போட்டு பூசிட்டு மிச்ச காச சுருட்டிட்டானுவோ சண்டாளப்பயலுங்க...’
‘ஆமாடி... இந்த கட்சிக்காரனுவோ பண்ற அழிச்சாட்டியம் தெரிஞ்சதுதானே.. விடு.....’
‘ம்ம்... சேரிக்கா மீனு வேணுமா?’
‘இல்லடிம்மா இன்னைக்கு வெள்ளிக்கெழம எனக்கு வேண்டாம்...ஞாயித்துக்கெழம நல்லா பெரிய மீனா கொண்டா, வறக்குறமாதிரி... இரு எதுத்தால ரேவதி கேட்டா.. கூப்புடுறேன்.’
‘தம்பி ரேவதிய கூப்டு சாந்தி மீனு கொண்டாந்திருக்கான்னு சொல்லு.’
•••••••••
‘இல்லம்மா அவங்களுக்கு வேண்டாமா.
‘சரி சாந்தி... நீ நேரமா களம்பு... வெய்ய வந்திடும்...
‘ம்ம்ம்... வர்ரங்கா...
••••••••••