க.பாலாசி: August 2012

Friday, August 24, 2012

சுக்குமி ளகுதி ப்பிலி..

.

கொல்லப்பக்கம் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரங்கள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்குடுக்கிற அம்மா இப்பவும் அதேமேரிதான் இருக்கு. நானிங்க ராநேரத்துல ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு, ஆர் ஆர் லாட்ஜ் பங்க் கடையில ‘அண்ணா ஒரு பழம்ணா’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாரு. அடி என்னப்பெத்தவளே நீ ரூவாய்க்கு மூணு குடுப்பியே இங்க பாத்தியான்னு மனசுலயே நெனச்சிக்க வேண்டிதான்.  பொழப்பத்த அம்மாக்கு பொழைக்கத் தெரிலியா, இல்ல எனக்கான்னு தெரில. பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.

••••••••••••

ரெண்டு ரூவாய தெருமொனைல ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்ரூவாய்க்கு எப்பாருக்கு 222 பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல (ரெண்டா கிழிச்ச லாட்டரி சீட்டு நடுவுல சுண்ணாம்போட) அதோட கா(ல்)ர்ரூவா கொட்டப்பாக்கு, கா(ல்)ர்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச மீர்ற கா(ல்)ர்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய சோடி போட்டுப்பமா சோடின்னு நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மேரி.

•••••••••••••

அந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், சேகரு டீக்கடைக்கு இந்தாண்ட காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி வெச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரத்தான் கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுக் கடையில வாங்கினா ஒரு கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகாப்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடை‘யும் சேர்த்து வித்துட்டு, புள்ளைங்க சம்பாத்தனையே போதும்னு வூட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அரிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.

••••••••••••

ஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள் எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பிச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட. அதுக்கப்பறம் கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திரா. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கும் தாராளமா போதும். இந்தவூட்டு மாடு கறவ நின்னுட்டா அடுத்து அந்த வூடு, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம், பருத்திக்கொட்டன்னு வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி, தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட இல்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.

•••••••••••

இந்த மம்புட்டி (மண்வெட்டி), அருவா இல்லைன்னா கோடாளி எது கால்ல வுழுந்தாலுஞ்செரி எப்டிக்காயம்பட்டாலுஞ்செரி எலந்த (இலந்தை) இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும். எப்பேர்பட்ட வெட்டுக்காயும் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் அப்பாக்கும், தாத்தனுக்கும் இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன ஒடம்புக்குகூட டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும் போலருக்கு.

•••••••••••••

அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.


மீள் இடுகை..

.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO