அதிகாரம் எனும் ஆளுமையை உட்செலுத்தி எந்த உயிரை இன்புறச்செய்யமுடியும்? இந்த ஆதங்கம் எப்போதும் என் மனதில் இருப்பதுண்டு.
நேற்றுவரை அடிமைத்தனத்தில் அடிபட்டு, இன்று அதை அறுத்தெறிந்த பிறகும், அதே அதிகாரமிட்டு அடிமைப்படுத்தும் எண்ணம் நமக்குள்ளும் எங்கிருந்தேனும் ஆட்கொண்டுவிடுகிறது (விட்டது). காரணமாய் சில காழ்ப்புணர்ச்சிகளும், புழுங்கல்களும் இருக்கலாம். இல்லையென்றால் இதுவரையடைந்த அவமானங்களும்...இன்னும் சில...களும்...
அதிகாரம், ஆணவம், அடிமைபடுத்துதல் இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த வீடாகத்தான் இருக்கவேண்டும். எதிரெதிர் வீடாக இருக்க வாய்ப்பில்லை. பூவுடன் சேர்ந்த நாரைப்போல ஒன்றைவிட்டு ஒன்றகன்றாலும், ஒன்றின் நாற்றம் மற்றொன்றையும் இயல்பாய் தொற்றிவிடுகிறது. எந்த ஓர் உயிரின் மீது தேவையற்ற அதிகாரம் செலுத்தப்பட்டாலும் அந்த உயிர் சிறிது சிறிதாக அடிமைப்படுத்தப்படுகிறதென்றே அர்த்தம். அதன் மூலம் அங்கே ஆணவம் தலைக்கேறுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.
தன்னுடைய சுதந்திரத்தை அதிகாரத்தினூடே இழந்த மனிதன், வாழ்க்கையின் ஓட்டத்தில் நூறடியோ, அதற்குள்ளாகவோ தாண்டியவுடன் இன்னொருவனிடம் அதே சுதந்திரத்தினை அதிகாரத்தின் வழி பறிக்கிறான். எடுத்துக்காட்டாக இல்லம், இல்லத்தரசி, அலுவலகம், பணியாளர்கள், தொழிலாளர்கள், பிராணிகள் இன்னும்....எங்குவேண்டுமானாலும் மாற்றிப்போட்டுக்கொள்ளலாம்.
பெண்கள் இதில் கொஞ்சம் விதிவிலக்கு. காரணம்...அதிகாரம் அதிகம் மிகைப்பட்டிருக்கும் இடம் ஆண் எனும் ஆணாதிக்கம். பெண்ணாதிக்கம் எனும் வார்த்தையே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையெனலாம் அல்லது இதுவரை நான் அறியாமல் இருக்கலாம்.
எங்கேனும் இழந்த சுதந்திரத்தை சற்றிடவெளியில் வேறொரு இடத்தில் அதிகாரம் மூலமாக, ஒரு மாற்று வெற்றியாக பறித்துக்கொள்ள முயல்கிறவன் இந்த சமுதாயத்தின் சாபக்கேடு என்றே சொல்லலாம். யாம் பெற்ற இவ்வின்பம் பெறுக இவ்வையகம் என்று அதிகாரப் பேயை தேவையற்ற இடங்களில் பிரயோகிக்கும் போது அன்பெனும் அகராதியே அவ்விடத்தில் அழிந்துபோகிறது. இதன் மூலம் சாதித்தது என்னவென்று தேடலைதொடங்கினால் முடிவில் கிடைப்பது அல்லது கிடப்பது மாண்டுபோன மனிதநேயமே.
பறிகொடுத்தவன்
பறிக்கும்போது
பறிகொடுத்தது
பறிக்கப்படுகிறது
பரிவில்லாமல்.
தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...