மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட அம்மாவின் முந்தாணி என் தலையிலும் அப்பாவின் துண்டென் மாரிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் அம்மாவிற்கும் அப்பாவிற்குமான தூக்கம். அப்பொழுதெல்லாம் அரைநாண்கொடி இடுப்பில் தங்கிக்கொள்ள பழகிவிட்டிருந்தது, அதன் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்க பள்ளிக்கூடத்து காக்கி அரைக்கால் சட்டையும்தான். ஆயினும் அவர்களின் கூட்டுக்குள் நான் குளிர்காய்ந்த இரவுகள் பெரிதாய் மதிக்கப்படாமலே இருந்திருக்கிறது. இருந்திருக்கவேண்டும்... அறியாப்பருவமாதலின்....
[ஒருவேளை எங்கப்பாவிற்கு எழுதத்தெரிந்திருந்தால் இப்படித்தான் ஆரம்பித்திருப்பார்...
மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட என்மகனின் தலை என்வலக்கை முட்டியிலும், இடக்கால் அவனம்மாவின் இடுப்பிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் என் மனைவிக்கான தூக்கம்..........]
கூரைக்குள் பொழியும் மழைநீர்க்குட்டுகளை அலுமினிய ஏனங்கள் அசையாமல் நின்று வாங்கிக்கொள்வதைப்போல மழையில் விளையும் என் சில்வண்டுத்தனங்களை அவர்கள் ரசித்திருக்கலாம். ‘அப்பாடி இப்பயாச்சும் மானம் நல்லா பேயுதே’ என்று மச்சுவீட்டு மாமனும், ‘இந்தவாட்டியாவது மழைலேர்ந்து என்னோட பயிர காப்பாத்தும்மா தாயே’ என்று சின்னவண்டி முனுசாமியும், ‘அய்யோ அடிக்கிற காத்துல வாசல்ல உள்ள முருங்கமரம் வீட்ல சாஞ்சிடப்போவுது’ என்று உடையார் வீட்டு ஆச்சியும் புலம்பிக்கொண்டிருப்பது கரைந்து என்வீட்டு வாசல்வரையும் வந்திருக்கும். வழக்கம்போல அம்மா இருப்புச்சட்டியில் பச்சரிசி வறுக்க தாழ்வாரத்தில் கட்டிவைத்த சுப்பிகளை எடுத்துக்கொண்டிருப்பார். ‘பஞ்சாங்கத்துலதான் மழைன்னு போட்டிருக்கானே... எப்டிப்பெய்யாம போவும்’ என்று 222ம் நம்பர் பீடிப்புகையில் வட்டம் விடாமல் ஊதிக்கொண்டே இயல்பாகச் சொல்லுவார் அப்பா.
மகனாய் நான் அம்மாவின் அருகில், அடுக்கலையில் வறுத்த பொரியரிசியை கொரித்துக்கொண்டிருப்பேன். வேறெந்த இயல்பையும் மீறி பள்ளிக்கூட குறிப்பேட்டில் கத்திக்கப்பல் செய்து தாழ்வாரத்தில் ஒழுகியோடும் மழைநீர்களுக்கு தாரைவார்த்ததாக என் வரலாறு பதியப்படவில்லை. மிதிவண்டிக்கான கனவு மிகைந்திருந்தமையால் கப்பல்விடும் கனவு அதில் மிதிபட்டிருக்கலாம். வாசலொட்டி குதூகலமாய் நீச்சல்பயிலும் மண்புழுக்களும், மிகைநீர் பெற்றதால் சுமக்கமுடியாமல் மிகமெதுவாய் ஊர்ந்திடும் நத்தைகளும், மழையில் பொந்துகளையிழந்து அலைந்து திரியும் நெருப்பெறும்பு கூட்டங்களும், கூட்டுக்குள் விழும் நீர்ச்சிதறல்களுக்கு மெளிதாய் கீய்ச்சலிடும் சிட்டுக்குருவிகளின் கூச்சல்களும், அடுத்த வீட்டு லலி அக்காவின் ஆட்டுக்குட்டிகள் தூற்றிவிட்டுப்போன நனைந்த புலுக்கைகள் வாசம் என அந்நேரத்து அவசரத்துக்கான குளிர்ச்சிகள் ஏராளம். மழைக்கு மகுடியூதும் தவளைகூட்டங்களின் இரைச்சல்கள் சிலருக்கு எரிச்சலாகவோ அல்லது வரமாகவோ இருக்கக்கூடும். இன்னும் எத்தனையோ...
பணியிடம்பொருட்டு யாதுமற்ற தனியறையில் பாதுகாப்பாக நாற்காலி போட்டமர்ந்து எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடையில் முறுக்கு ஒரு பொட்டலம், உருளைக்கிழங்கு வறுவல் ஒரு பொட்டலம் வாங்கி சுவைத்துக்கொண்டே மழையை ரசிக்க சன்னலைத்திறந்தால் மேற்சொன்னவைகளே சாரல்களாய்....