க.பாலாசி: ராசம்...

Friday, September 17, 2010

ராசம்...

என்றுமில்லாது இன்று ஆளோடிக்கட்டிலில் கொஞ்சம் படுக்கவேண்டும் என்று தோன்றியது. வீட்டினுள்ளே டங்..டங்.. என்று தரை அதிர்வதற்கு என் மனைவிதான் காரணம். பெயர் ராசம். இந்த 26 வருட திருமண வாழ்வில் அவளிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியன நிறைய இருந்திருக்கிறது. ஆயினும் எந்த கணவனுக்குத்தான் மனைவியென்பவள் ஒரு மானுட ஜென்மம் என்பது அவ்வளவு எளிதாக புரிந்திருக்கிறது. நான் மட்டும் விதிவிலக்காயென்ன. சின்ன வயதில் தந்தையை இழந்த என்னை பத்தாம் வகுப்புவரை படிக்கவைத்தது என் அம்மாதான். மரப்பொந்தினிலிருக்கும் பருந்து குஞ்சுக்கு ஆகாரம் அவ்வப்போது கிடைத்துவிடும்தான். இருப்பினும் பறக்க கற்றுக்கொடுப்பது ஜென்ம இரத்தமின்றி வேறென்னவாக இருக்கமுடியும். என் பாட்டன், முப்பாட்டன் எவன் மதித்தான் என் பாட்டி, முப்பாட்டிகளை.

ஒரு படி மேலேபோய் என் தாத்தன் குடும்பச்சண்டையில் பாட்டியின் காலை கடப்பாறையால் முட்டிக்குமேலே ஓங்கி அடித்திருக்கிறான். அய்யோ..அய்யோ...என்று அடுத்தவீட்டுக்குகூட கேட்காதபடி அலறிவிட்டு அடுத்தவேளை சோற்றை பொங்கிப்போட்ட புண்ணியவதி அவளென்று குடும்ப வரலாறை கேட்கும்போதெல்லாம் என் அத்தை கண்ணீர்மல்க கூறுவாள். எவ்வளவு கொடியவன், கிராதகம் பிடித்தவன் என்று அப்போதும் நினைத்துக்கொள்வேன். இப்போது நினைத்தாலும் அப்படித்தான். பித்துக்குளி. நல்லவேளை நமக்கந்தளவுக்கு புத்திகெட்டுப்போகவில்லை என்பதற்கு என் படிப்பறிவோ, பகுத்தறிவோ காரணமாயிருக்கும் அக்காவின் மகளை அவளின் 16 வயதில் கட்டிக்கொண்டேன். என் குடும்ப ரத்தம்தான் ராசத்திற்கு. அதனாலோ என்னவோ என்னிடம் அரைவாங்கி கண்ணம் வீங்கினாலும் எனக்கு சோறு உண்டு. 3 வருட தாம்பத்தியத்தில் பெற்றெடுத்ததை மலர்கொடி என்ற நாமம்சூட்டி ஒருவழியாக சென்றவருடம் கரையேற்றினேன். கரையேற்றினேன் என்பதுதான் அத்தனை சிரமங்களுக்குமான ஒற்றைச்சொல்.

ஒரே பெண் வேறெதுவுமில்லை. சிறுவயதில் அவள் சில்லிக்கோடு விடையாடும் அழகு தனிதான். கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நானும் ராசமும் மற்றவர்களுடன் அவள் போட்டிப்போட்டு துள்ளி துள்ளி நொண்டியடித்து விளையாடும் பாங்கை ரசித்திருக்கிறோம். ராசம்தான் அவளுக்கு இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்தாள். ராசமும் சிறுவயதில் இந்த விளையாட்டில் தேர்ந்தவள்தான். பெண் பார்க்க நிச்சயமாகி சிங்காரத்தின் கூண்டு வண்டியை வாடகைக்கெடுத்து போகும்போதுகூட தெருவாசலில் விளையாடிக்கொண்டுதான் இருந்தாள். ‘விளையாட்டுப்பிள்ளையாவே வளந்துட்டா, போ..போ..மூஞ்சி கழுவியா’என்று அவளை துரத்திவிட்டு மாமா என்னிடம் அசடு வழிந்ததுகூட இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஏணிப்படிகள்போல ஆறு பெட்டிகளுடன் கூடியதில் மலையிலிருந்து ஆரம்பித்து 5,4,3,2,1 வரை வந்து பிறகு, கைமேல் சில்லியை வைத்து நொண்டியடிக்கவேண்டும். புறங்கை, விரலிடுக்கு, கால், கால் விரலிடுக்கு, இறுதியாக மேட்டா கீட்டாவில் முடியும் அந்த விளையாட்டு தெருப்பெண்களின் சமயோசித விளையாட்டு, இன்னும் சொல்வதானால் பாரம்பரிய விளையாட்டு. மேட்டா கீட்டாவில் எந்த பெட்டியில் சில்லியை போடுகிறோமோ அந்த பெட்டி ஒரு உப்பு என்று விளையாடிய பெண் கோடுபோட்டுக்கொள்வாள். அந்த பெட்டியை எதிராளி நொண்டியடிக்கும்போது தாண்டித்தான் செல்லவேண்டும். விதிமுறை. வயதுக்கு வந்த பின்னும் மலருக்கு இந்த விளையாட்டு அலுக்கவில்லை. ராசத்திற்கும் வேடிக்கை பார்ப்பதும் அலுக்கவில்லை.

என் மகளை பெண்பார்க்க வந்தபோதும் சில்லிக்கோடுதான் விளையாடிக்கொண்டிருந்தாள். என் மாப்பிள்ளையிடம் நான் அசடுவழியவில்லை. சின்ன சின்ன குடும்பங்களில் ஒருவர் பிரிந்தபின் ஏற்படும் அதே வெறுமைதான் இப்போது என் வீட்டிலும். காயப்போட்ட துணிகளுடன் கொடி அறுந்து விழுவதுபோல பிரிவென்பது இந்த மூன்றுபேர் குடும்பத்தின் உச்ச வலி, பார்க்க அழகாயிருந்தாலும்கூட. நான் வேலைக்கு சென்றபின் ஆக்கி இறக்கி வைத்த நேரம்போக ராசத்தை வேறெந்த வேலைகளும் இழுத்துப்பிடிக்கவில்லை. மிஞ்சிப்போனால் என் துணிகளை துவைப்பாள். உண்டு தின்ற ஏனங்கள். அப்படியேதும் அவளின் தனிமையை ஆட்கொண்டதாக தெரியவில்லை, ஏன் நானும்கூட. என் வலியே அதிகம்தான். பெண்களுக்கான வற்றாத கண்ணூற்று முனுக்கென்றால் பொங்கிவிடுவதைப்போல, எந்த ஆண்மகனால் முடிகிறது. என் நெஞ்சிலும் அழுத்தம் இல்லாமல் இல்லை.

இரவுகளில் ராசம் தூங்கும் போது எதோ நெஞ்சழுத்தக்காரியின் முகமாகத்தான் அவள் முகம் இருக்கும். என் முகத்தைப்பற்றி அவளிடம்தான் கேட்கவேண்டும். சென்றமாதம்தான் அவளின் நெஞ்சாழ்மையை இந்தக்கோலத்தில் பார்த்தேன். ஒரு கண்ணாடியும் அது உடைந்தால் தெரியும் இரண்டு பிம்பங்களுமாய் என் முன் அவள். மலரின் அந்த பச்சைக்கலர் பாவாடை தாவணியை உடுத்தியிருந்தாள். இந்த 45வது வயதில் அவளுக்கு எடுப்பாகத்தான் இருந்தது என்று சொன்னால் நான் பைத்தியமோ என்று எனக்கே தோன்றும். சிகையில் இரட்டைப்பின்னல் வேறு. கொல்லையில் பூத்திருந்த திசம்பர் பூவைக் கட்டி சூடியிருந்தால். அந்த நெத்திச்சுட்டி ஏதென்று தெரியவில்லை. பார்ப்பதற்கு அகோரமான தோற்றம்தான். அருகில் செல்லும்வரை என்னைப்பார்க்காதவள் சென்றவுடன் விரைத்த உடலுடன் மலங்க மலங்க விழித்தது என் 52 வருட வயது முரட்டையும், திடகாத்திரத்தையும் பொலபொலவென விழ்த்தியது. இன்று நினைத்தாலும் ஒரு சொட்டாவது கண்ணீர் வரத்தான் செய்கிறது.

நாட்கள் நகர்வது அவளுக்கு தெரிகிறதோ என்னவோ, சமயத்தில் அவளிடம் அந்த பருவ நினைவு குடிபுகுந்துவிடுகிறது. பார்ப்பவர்கள் பைத்தியம் என்கிறார்கள். இன்று வீட்டினுள் வரும் டங்...டங்...என்ற சத்தம் ராசம் சில்லிக்கோடு விளையாடுவதால்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் தனி அரையில் கோலிக்குண்டு விளையாடுவது யாருக்கும் தெரியாது.

*


குறிப்பு- இச்சிறுகதை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அவரது தளத்தில் குறிப்பிட்டது கீழே :-

சுருக்கமாகச் சொல்லப்பட்ட கதை. கதைசொல்லியின் ஆளுமை அந்த மொழ்யிலேயே தெரிகிறது. அதிக விவரிப்புகள் இல்லாமல் இயல்பாக ஒரு பெரும் சோகம், தலைமுறைகளாக நீளும் சோகம் சொல்லப்படுகிறது

ஒரு உச்சத்தில் அந்த வட்டாட்டம் பலவிஷயங்களுக்கு குறியீடாக மாறி நிற்கிறது
நன்றி திரு.ஜெயமோகன்

50 comments:

vasu balaji said...

அப்பப்பா. என்ன எழுத்துடா சாமி. அந்த கையக் குடும்மா. கண்ணுல ஒத்திக்கணும். முடியறப்ப அடி வயித்துல கத்திய சொருகி இழுத்த வலி. ம்ம். எங்கயோ போற நீ.

அகல்விளக்கு said...

நான் சொல்ல நினச்சத அய்யாவே சொல்லிட்டாரு....

யப்பா... சாமி....

நல்லா இருக்குங்க...

அன்பரசன் said...

பிரமாதம்ங்க..

ரோகிணிசிவா said...

//எந்த கணவனுக்குத்தான் மனைவியென்பவள் ஒரு மானுட ஜென்மம் என்பது அவ்வளவு எளிதாக புரிந்திருக்கிறது. நான் மட்டும் விதிவிலக்காயென்ன. //


//என் தாத்தன், முப்பாட்டன் எவன் மதித்தான் என் பாட்டி, முப்பாட்டிகளை.//


//என் வலியே அதிகம்தான். பெண்களுக்கான வற்றாத கண்ணூற்று முனுக்கென்றால் பொங்கிவிடுவதைப்போல, எந்த ஆண்மகனால் முடிகிறது. என் நெஞ்சிலும் அழுத்தம் இல்லாமல் இல்லை.//



ஏதும் சொல்ல முடியல பாலாசி , எங்கயோ போறீங்க , எப்படி இப்படி எல்லாம் உங்கனால சிந்திக்க முடியுது
அசத்தறீங்க.,

காமராஜ் said...

அன்பின் பாலாஜி.
ஒரு வாழ்க்கையை எப்படியும் சொல்லிவிடலாம்.ஆனால் பொட்டிலடித்த மாதிரிச்சொல்ல கைவரணும்.அது ரொம்ப லாவகமாக வருகிறது. அழகு அழகு பாலாஜி.

Chitra said...

நாட்கள் நகர்வது அவளுக்கு தெரிகிறதோ என்னவோ, சமயத்தில் அவளிடம் அந்த பருவ நினைவு குடிபுகுந்துவிடுகிறது. பார்ப்பவர்கள் பைத்தியம் என்கிறார்கள். இன்று வீட்டினுள் வரும் டங்...டங்...என்ற சத்தம் ராசம் சில்லிக்கோடு விளையாடுவதால்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் தனி அரையில் கோலிக்குண்டு விளையாடுவது யாருக்கும் தெரியாது.


......இந்தாங்க பூங்கொத்து...... பாராட்டுக்கள்! உங்கள் எழுத்து நடை, அப்படியே கட்டி போட்டு விட்டது..... அபாரம்!

பத்மா said...

பாலாci ,

இத்தனை பெரியவர்கள் எல்லாம் புகழும் போது உங்கள் எழுத்தின் உயர்வு எங்கு என்று தெரிகிறதா?

u have reached my friend ..and am so happy for you.

ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும் பாலாஜி .

நான் ராசம் என்று படித்ததும் ,,இதென்ன ஒரு புதுச்சொல் என வியந்தபடியே வந்தேன் ..
உங்கள் வழியில் என் பெயரை நினைத்தால்....:))

மனம் பிழன்று இருக்கும் காதல் மனைவியை காதலோடு நோக்கும் கணவனை பெற்றவள் பாக்கியசாலி.

கடைசி வரி புரட்டி போடுகிறது ..
சபாஷ் பாலாசி

Unknown said...

அப்பா! அடித்துப்போடும் அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.

ஹேமா said...

ஏதாவது வரிகள் எடுத்துப் பாராட்டலாமென்றால் முடியவில்லை பாலாஜி.கதையின் அழுத்தம் சொல்லும் சரளம் அருமை.

Anonymous said...

கிராமத்து நடை அசத்தல் இது உங்களுக்கு கைவந்த கலை...கடைசியில் கண்ணீர் விழித்திரை மறைக்கிறது.அடுத்தமுறை உங்களை பார்த்தால் ஆட்டோகிராப் வாங்கிக்கணும் பாலாசி...

க ரா said...

என்ன சொல்லி பாராட்ட பாலாசி.. பிரமாதம்..

அரசூரான் said...

ராசம் ஒரு கிராமத்து பாத-ரசம், நெகிழ்ந்த கண்ணாடியாய்... மிக அருமை.

பவள சங்கரி said...

மரப்பொந்தினிலிருக்கும் பருந்து குஞ்சுக்கு ஆகாரம் அவ்வப்போது கிடைத்துவிடும்தான். இருப்பினும் பறக்க கற்றுக்கொடுப்பது ஜென்ம இரத்தமின்றி வேறென்னவாக இருக்கமுடியும். என் தாத்தன், முப்பாட்டன் எவன் மதித்தான் என் பாட்டி, முப்பாட்டிகளை.........சின்ன சின்ன குடும்பங்களில் ஒருவர் பிரிந்தபின் ஏற்படும் அதே வெறுமைதான் இப்போது என் வீட்டிலும். காயப்போட்ட துணிகளுடன் கொடி அறுந்து விழுவதுபோல பிரிவென்பது இந்த மூன்றுபேர் குடும்பத்தின் உச்ச வலி, அருமை...அருமை பாலாசி. நெஞ்சைப் பிழியும் வாழ்வியல் உண்மைகள்... குழந்தைகள் பிரிந்து செல்லும் போது ஏற்படுகிற ரணம் சொல்லி முடியாது. அதை அழகாகச் சொல்லியிருக்கும் உங்கள் நடை வளம்........ என்ன சொல்ல நீங்கள் மேன் மேலும் வளர வேண்டும், வாழ்த்துக்கள்.

Mahi_Granny said...

கையைப் பிடித்து பாராட்டத் தோன்றுகிறது. எப்படி ஒரு எழுத்து. வாழ்த்துக்கள் தம்பி

கலகலப்ரியா said...

அழுத்தமா இருக்கு பாலாசி...

velji said...

எல்லோரிடமும் சொல்லத்தோன்றுகிற,எதுவுமே சொல்ல முடியாத நிலையை ஏற்படுத்துகிறது கதை.

அருமையான எழுத்து.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப கனமான எழுத்து... ஆழ்ந்த சிந்தனை... படிச்சு முடிச்சப்புறம் ஐயோ என்ன ஆச்சு அப்புறம்னு கேக்க வெக்கற நடை... ரெம்ப நல்லா இருந்தது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிரமாதம்..

தாராபுரத்தான் said...

உண்மையிலேயே இது வித்தியாசமான பதிவுங்க..ஆமா எங்களைப்போல உருமாற எப்படி முடிந்தது...

ஜெயந்த் கிருஷ்ணா said...

வணக்கத்துக்குரிய வரிகள்.... ஒவ்வொரு எழுத்துக்களும் வசியம் செய்கின்றன மனதை...

வணங்குகிறேன் உங்கள் வரிகளுக்காக....

ஈரோடு கதிர் said...

||காயப்போட்ட துணிகளுடன் கொடி அறுந்து விழுவதுபோல ||

அடடா!!

அழகா வந்திருக்கு எழுத்து

அம்பிகா said...

தேர்ந்த எழுத்து நடை. வரிவரியாக பாராட்டலாம். அருமை.

சத்ரியன் said...

எண்ணங்களைக் கட்டிப்போடும் என்னருமை பாலாசி...!

நான் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்போறேன் மக்கா. ஒரு எழுத்தாளனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்த புண்ணியமாவது சேரட்டும் எனக்கு.

மிருணா said...

அர்த்தமுள்ள, நடைமுறையில் உள்ள அவலங்களை அப்படியே கலைத்து போடுகிற, உளவியல் விஷயத்தை சொல்ல முயல்கிற நல்ல எழுத்து. அந்த பதின்பருவ வயதுக்கான உலகில் இன்னும் வாழ்பவர் பற்றி நடப்பில் கேள்விபட்டிருக்கிறேன். அது நடப்பின் வலியிலிருந்து தப்பிப்பதற்காக மனம் வகுக்கும் strategy. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

உங்கள் எழுத்து நடை, அப்படியே கட்டி போட்டு விட்டது...

பாராட்டுக்கள்!

ராமலக்ஷ்மி said...

எழுத்து நடை, முடித்த விதம் மிக நன்று பாலாசி.

thiyaa said...

நல்ல நடை
அருமை சூப்பர்

Ashok D said...

நல்ல Narration, visualizing பாலாசி...

காட்சிகள் கண்முன்னே விரிந்துக்கொண்டே போகிறது... ரொம்ப சில சில வரிகள் speedbreakersa இருந்தாலும்... ஆசாத்தியமான கதை சொல்லல்

கடைசி வரிகள்.. படிக்கச்சொல்லோ.. நிமிர்ந்து உக்காரவெச்சுடது...

Excellent... keep it up :)

க.பாலாசி said...

நன்றி வானம்படிகள் அய்யா
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி அன்பரசன்
நன்றி ரோகிணி அக்கா
நன்றி காமராஜ் அய்யா
நன்றி சித்ரா மேடம்
நன்றி பத்மா மேடம்
நன்றி சேது
நன்றி ஹேமா
நன்றி தமிழரசி
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி அரசூரான்
நன்றி நித்திலம் மேடம்
நன்றி Mahi_Granny
நன்றி ப்ரியாக்கா
நன்றி வேல்ஜி
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி டி.வி.ஆர் அய்யா
நன்றி தாராபுரத்தான் அய்யா
(கற்பனைதாங்க)
நன்றி வெறும்பய
நன்றி ஈரோடு கதிர்
நன்றி அம்பிகா
நன்றி சத்ரியன்
நன்றி சைக்கிள்
நன்றி சே.குமார்
நன்றி ராமலஷ்மி
நன்றி தியா
நன்றி அசோக் அண்ணா

ஹுஸைனம்மா said...

ரொம்ப அருமை. அதுவும் அந்த “துணிகளோடு அறுந்த கொடி போல...” அழகு...

Thenammai Lakshmanan said...

அழ அடிச்சிட்டீங்க பாலாசி.. சாமி என்ன எழுத்து இது.. இளமை கரைகிறதே என்ற கூக்குரல் மனசுள் அவ்வப்போது ஒலிக்கும். அதை தரிசனம் செய்து விட்டேன் பாலாசி..:((

க.பாலாசி said...

நன்றிங்க ஹுஸைனம்மா

நன்றிங்க தேனம்மை லெக்ஷ்மணன்

Unknown said...

அன்பின் பாலாசி,

நான் சிறுகதைகள் அவ்வளவாகப் படிப்பதில்லை. இந்தக் கதையைப் படிக்காமல் இருக்க முடியவில்லை.

அருமையாக நடை வருகிறது. அங்கங்கே தலை காட்டும் எழுத்துப் பிழைகளை தவிர்த்துப் படித்தால், இறுதியில் கண்கள் கலங்குவதைத் தடுக்க இயலவில்லை.

வாழ்த்துக்கள்!

vasan said...

காயப்போட்ட துணிகளுடன் கொடி அறுந்து விழுவதுபோல/
(இது ஒரு புது உவ‌மைதான்.)
//இன்று வீட்டினுள் வரும் டங்...டங்...என்ற சத்தம் ராசம் சில்லிக்கோடு விளையாடுவதால்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் தனி அரையில் கோலிக்குண்டு விளையாடுவது யாருக்கும் தெரியாது.//
(மொட்டும், பூவும், பிஞ்சும், காயுமாய் கும்மியிருக்கும் ப‌சுங்கொடி திடீரென‌ துண்டிக்க‌ப்ப‌ட்டு
வாடி வ‌த‌ங்கி, முடிவு ம‌ன‌தைப் பிழிந்து விட்ட‌து.)

க.பாலாசி said...

நன்றி தஞ்சாவூரான்
(இனிவருவனவற்றில் எழுத்துபிழைகளை தவிர்க்க முயல்கிறேன்.)

நன்றி வாசன்

suneel krishnan said...

ஒருவார்த்தை -அற்புதம்.. வாழ்த்துக்கள்

priyamudanprabu said...

பிரமாதம்ங்க..

ARUMAI

மரா said...

நண்பரே இப்பத்தான் இந்த கதைய படிக்கிறேன் ஜெ சொல்லி. ரொம்ப அழகா வந்திருக்கு.அற்புதமான எழுத்து.

தினேஷ் ராம் said...

அருமை. :-)

இந்த உரலி மரா உபயம். அவருக்கும் நன்றி!!

க.பாலாசி said...

நன்றிங்க dr suneel krishnan

நன்றி பிரியமுடன் பிரபு

நன்றிங்க மரா

நன்றிங்க சாம்ராஜ்ய ப்ரியன்
(உபயம் செய்தவருக்கும்)

செல்வா said...

ரொம்ப நல்லா இருக்குங்க .. எழுத்து நடை வாய்ப்பே இல்லை .. ரசித்துப் படித்தேன் .. கடைசியில் ஒரு வேதனை வருவதையும் உணர்கிறேன் ..

Ramesh said...

கடைசி இரண்டு மூன்று பத்திகளில் ஒரு பெரிய பாரத்தை மனதில் ஏற்றி விட்டீர்கள்

Giri Ramasubramanian said...

கதை ஒண்ணுமேயில்லீங்க!

ஆனா பாருங்க, காலத்துக்கும் எப்பவாவது எங்கயாவது நினைவுக்கு வந்துக்கிட்டே இருக்கும். அதுதான் சங்கடம்.

ஜோதிஜி said...

பாலாசி எனக்கே சற்று வெட்கமாக உள்ளது. வானம்பாடிகள் சொன்னது உண்மைதான். பதிவுலகில் பல இடங்களில் நான் பார்த்தவரையிலும் இந்த சிறுகதை வடிவங்கள் நல்ல விதமாக வந்துள்ளது. உங்கள் எழுத்தை தனியாக வேறு பாராட்ட வேண்டுமோ?

ஏன் இன்னமும் உங்கள் பதிவுகளை மின் அஞ்சல் வழியாக பெறும் வசதிகளை உருவாக்காமல் வைத்து இருக்கீங்க?

Unknown said...

பாலாஜி இத்தனை பாராட்டுக்கள் இருக்கும் போது என்னுடையது பெரிதாக தேவை இல்லைதான் .இருப்பினும் பூ மாலையில் ஒரு பூ


உங்கள் கதை மிக சிறப்பாக உள்ளது பெரிதாக என்னை பாதிக்கிறது

கோபிநாத் said...

தல தமிழ்பிரியன் அவர்களின் மூலம் வந்தேன் - மிக அற்புதம் ;)

வாழ்த்துக்கள் ;)

இரா.ச.இமலாதித்தன் said...

வாழ்த்துகள் பாலாசி!
ஜெமோ வின் "இரு கதைகள்" ளில் உங்களது இந்த ராசம் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

"ராசம்" என்பதை பின்னூட்டத்தில் தான், ராஜம் மென அறிந்தேன்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான எழுத்து நடை, அசத்தல்...!!!

Unknown said...

அருமையான எழுத்து

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Desktop Showrooms in Chennai
Printer prices in chennai
Buy Tablets online chennai
Laptop stores in chennai
Projectors price in Chennai
Buy pendrive online India
External hard disk price in Chennai
Laptop accessories online chennai
Best laptops in Chennai
Tablet showroom in Chennai
Inverters dealers in Chennai
Server dealers in Chennai

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO