க.பாலாசி: June 2011

Thursday, June 30, 2011

பம்பரம்



நீலவேணி இறந்து திங்களோடு திங்கள் எட்டு செவ்வாய் ஒன்பது நாட்களாகிறது. கோபுரத்தில் விழுந்த காகத்தின் எச்சம், முளைத்து ஆலமரமும் பின் அதுவே விருட்சமுமானது போல்தான் எங்கள் வாழ்க்கை. பாசி பிடித்த படித்துறையில் கால் வைத்தால் வழுக்கிவிடும், ஆனால் அதையும் மீறி இத்தனைக்காலம் ஓடிவிட்டது. போய் சேர்ந்துவிட்டாள் புண்ணியவதி. புதைத்த கையோடு உடன் பாலும் கையோடு மையோடு கல்லு கருமாதியும் முடிந்தேவிட்டது. ஊதுபத்தி வாடையும், பன்னீரின் வாடையும் கலந்து அவளின் சுவாசம் நிறைந்த இந்த கூடாரத்தை அபகரித்துவிட்டது. கண்ணுக்குத் தெரிந்து இந்த வீடும், தோ அவள் படத்தின் முன்னுள்ள பாக்கு வெட்டியும்தான் அவளுக்கான ஜென்மபலன், எங்களுக்கும். ஒட்டங்காடு போகவேண்டுமென்று தோன்றியது. இத்தனை நாளும் இந்த எண்ணம் இல்லாமலில்லை, இப்போதுபோல் இத்தனை நாளுமில்லை.

‘ரெங்கா? நான் ஒட்டங்காடுவரைக்கும் போவலாம்ணு இருக்கேன்யா...’ ரெங்கா என்னையே பார்த்துகொண்டிருந்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், அவனும் என்ன செய்வான்?

‘ஏம்ப்பா? இப்பபோயி?!!!’

‘இல்லய்யா, எனக்கென்னமோ போலருக்கு, நீலா பொறந்த ஊரு, அவளோட நான் வந்ததுலேர்ந்து இப்பதான் நேரங்கூடி வந்திருக்கு, தடவைக்கு தடவ நாஞ்சொன்னாலும் வேண்டா வேண்டாம்பா.. ஒரு நாலு நாளு இருந்திட்டு வர்ரன்யா’ நிறைய ஆற்றாமையும் கொஞ்சம் இயலாமையும் கலந்த என் பேச்சை அவன் தட்டவில்லை.

‘அதுக்குச்சொல்லல...’ முழுங்கிவிட்டு ‘சரிப்பா, அங்கப்போயி எங்க தங்குவீங்க? யாரிருக்கா? பட்டாமணியாரு இருக்காரா இப்ப? அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு போங்களேன்..’

‘சரிய்யா, பாக்கறேன், ராத்திரி சாப்பாடு முடிச்சிட்டே கெளம்பறேன்’

எல்லாம் தயாராகிவிட்டது. ஒரு கருப்புப் பையும், துணிமணிகளும், பேஸ்ட், பிரஸ் எல்லாமும் சரியாக எடுத்துவைத்திருந்தாள் சரசு, மருமகள். ‘போலாமா?’

‘தோ வந்திட்டேம்பா’ வண்டியில் கொண்டுவந்து பஸ்டாண்டில் விட்டான்.

ஒன்பதே முக்காலுக்கு கோயம்பேட்டில் எடுப்பான் அந்த பொறையார் பஸ். பொறையார் டூ மெட்ராஸ், மெட்ராஸ் டூ பொறையார் பைபாஸ். நெய்வேலி, சீர்காழி, மாயவரம், அப்பறம் நேர்வழியாக பொறையார் செல்லக்கூடியது. மாயவரத்தில் இறங்கி லாட்ஜில் தங்கி, குளித்துவிட்டு லைட்டாக டிபன் முடித்துக்கொண்டு கிளம்பினாலும் போதும். காலையில் ஒன்பதரைக்கோ என்னமோ 23ம் நம்பர் பஸ். செம்பனார்கோவில், ஒட்டங்காடு, திருவிளையாட்டம் வழியாக சங்கரன்பந்தல் போகும் அப்போது. இப்போதும் அந்த பஸ் ஓடுவதாக பட்டாமணியார் சொன்னார். இன்னேரம் அவருக்கும் என்னைப்போலவே வயதாகிருக்கும். தாடி, மீசை, கழுத்தில் ஒற்றை ருத்ராச்சம் இன்னமும் அப்படியே இருப்பாரா?!! வயோதிகம் அவர் உடலையும் வாட்டியிருக்கலாம். அவர் மனைவி செத்தது தெரியும். ஒட்டங்காட்டில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளையும் அவர் மூலமேதான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது ‘வர்ரேன்’ என்று சொன்னேனே ஒழிய எப்போதென்று சொல்லவில்லை. அவர் கண்ணில் படாமல் ஊரில் உலாவ முடியுமா? முடியும், முடியும்.. பாப்போம்..

மஞ்சளாற்றைத் தாண்டி இடதுபுறம் திரும்பியது பேருந்து. எனக்கு மனதெல்லாம் பக்..பக்..கென்று அடித்துக்கொள்ளத் துவங்கியது. கிட்டத்தட்ட 32 வருடங்கள். இங்கிருந்து இதே வழியேதான் நானும் நீலாவும் சைக்கிளில் செம்பனார்கோவில் போய், பின்பு பேருந்தில் மாயவரம், அப்பறம் மெட்ராஸ். அப்போது இந்தச் சாலை சிகப்பு கப்பியில் நிரம்பியிருக்கும். தொலைவில் இடதுபுறத்தில் சட்ரஸ்ஸும், வலதுபுறத்தில் முனியப்பன் கோவிலும் தெரிந்தது. அப்படியேத்தானிருக்கிறது. எந்த மாற்றமும் தெரியவில்லை. அருகருகே இரண்டு மூன்று குடிசைகள். நாங்கள் ஊரைவிட்டுப்போன அந்தக் கடைசிநேர பரபரப்பிலும் நீலா முனியப்பன் உண்டியலில் எதோ காசுபோட்டுவிட்டு சைக்கிளில் வந்து குந்தினாள். விபூதியும் பூசிக்கொண்டாள், நான் கண்டுகொள்ளவில்லை, இருவரையும். பனைமுட்டு, கோனமுட்டி வாய்க்கால், ஒரு சர்ச், உத்திராபதி கோவில் எல்லாம் செருகச்செருக கடந்துகொண்டேயிருந்தது. உடல் வயிறெல்லாம் ஒரு சந்தோஷ திரவம் சில்லென்றாற்போல் ஊறியது. பேருந்து இறக்கத்தில் இறங்கும்போது அடிவயிற்றில் ஒரு இனம்புரியா கிறக்கம் உண்டாகும், அப்படிதான் இதுவும்.

ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் ஸ்டாப்பிங்கில் இறங்கினேன். யாருக்கும் என்னைத்தெரிய வாய்ப்பேயில்லை. ஆனால் என் அப்பனை அறிந்தவர்கள் யாரேனுமிருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். ஆமாம்...என்னிடம் என் அப்பனின் முகம் அப்படியே ஒட்டியுள்ளது. இந்த பத்துநாள் தாடியும், வீசையும் அந்தாள் மூஞ்சை பளிச்சென்று காட்டிக்கொடுத்துவிடும். நெஞ்சின் படபடப்பு அடங்கவில்லை. மாரியம்மன் கோவில் வாசலில் தீக்குழி, கரிகள் அள்ளியபின் தெரியும் கருமை படர்ந்திருந்தது. எத்தனைக் கூட்டம் தீமிதித்திருக்குமோ!!!? ஒட்டங்காடு மாரியம்மன் தீமிதியென்றால் மாமாங்க கூட்டம் கூடும். ஜெ.ஜெ வென்று சுத்துபட்டு 54 கிராம மக்கள் கூடுவார்கள். எதிர் சாரியில் ஒரு பெட்டிக்கடை, வாடகை சைக்கிளும் இரண்டு முன்று கிடந்தது. அருள்ராஜ்தான் முன்பு இந்தக் கடை வைத்திருந்தார். இப்போது யாரென்று தெரியவில்லை. கடையில் யாரோ பொடியன் இருந்தான்.

‘தம்பி, சைக்கிள் வாடகைக்கு வேணும்பா?’

‘சைக்கிளா? நீங்க? எங்க போணூம்?’

‘பெருமாக் கோவிலாண்ட’

‘எப்ப வருவீங்க?’

‘ஒரு மணிநேரத்துக்குள்ள வந்திடுவம்பா’

‘ஐ.டி. கார்ட் வேணும், இருக்கா?’

சட்டையிலிருந்த பழைய லைசன்ஸ் கார்டை நீட்டினேன். வாங்கிக்கொண்டான்.

‘கேரியர் வய்ச்சி வேண்டால்ல’ ஒரு சைக்கிளைக் காட்டினான். எடுத்து ஸ்டேண்ட் தள்ளினேன். ரொம்ப நாளாகிறது, சைக்கிளைத்தொட்டு. மெட்ராஸில் கொஞ்சகாலம் சைக்கிள் ஓட்டியிருந்தாலும் நீண்ட இடைவெளி. ஒரு உந்து உந்தி ஏறினேன். பெடலை மிதிக்கும்போது சுலபமாக என்னையும் தள்ளிக்கொண்டே போவதுமாதிரி தோன்றியது.

நல்லவேளை, பெருமாள் குளத்தங்கரையில் யாருமில்லை. சைக்கிளை நிறுத்திவிட்டு  அரசமரத்தைச் சுற்றி கட்டியிருந்த திண்ணையில் அமர்ந்தேன். கோவிலின் உள்ளே மணிச் சத்தம் கேட்டது. மதியக்கால பூஜையாக இருக்கும்.

இந்த அரச மரத்தடியில் சிறுவனாக இருக்கும்போது சோறு தண்ணியின்றி விளையாடிய காலங்கள் எத்தனை!!! எத்தனை!!! என்னடாயிது வயோதிகத்திலாவது இந்த ஞாபகக் கொடுக்குகள் அற்றுப்போகக்கூடாதா? அதுசரி அப்படியிருந்தால் நாம் ஏன் இங்குவரப்போகிறோம்? கோவிலிலிருந்து யாரோவொருவர் வந்தார். ஆ... அந்த உருவம் பழக்கப்பட்டதுதான். அந்தக்காலத்து ஒற்றைநாடி, இப்போது.. இன்னும் தளர்ந்து... கூன் விழுந்து, அய்யரேதான்!!!!. என்னைப் பார்த்துவிட்டார்.

‘யாருப்பாது? இங்க உட்காந்திண்டிருக்க? புதுசாட்டருக்கு!!’

நெற்றியில் அவர் வைத்திருக்கும் குங்குமக் கீற்றலே போதும் அடையாளங் காண. புருவ மத்தியிலிருந்து உச்சி மண்டை வரை நீளும் அந்தக்கோடு. ‘ஆமாங்க சாமீ, புதுசுதான்.’

‘இஞ்ச யாரப்பாக்கணும்?’

‘சாமீ.. கோதண்டபாணிய ஞாபவமிருக்கா ஒங்களுக்கு?’

‘எந்தப் போதண்டபாணிங்க, தெர்லியே’

காது சரியாக கேட்கவில்லை போலும் ‘போதண்டபாணில்ல, கோதண்டபாணி, கோதண்டபாணி..’ உறக்கச்சொன்னேன். பிறகு ‘கொசவங் குட்டைக்கிட்ட ரெய்லோடு போட்ட வீடு ஞாபவமிருக்கா? 30-35 வருஷத்துக்கு முன்னாடிச் சொல்றேன் நானு. அவரு?’

‘ஆங்... டேய், படவா.. கோதண்டம் மொவங்காரனா??!!.. அதாங் மொவரக்கட்ட காட்டுதே...!!, குண்டுகுண்டுன்னு ஓடியாடிண்டிருந்த அந்தக் கொழந்தைய சைக்கிள்லயே இழுத்துண்டு ஓட்ன பயலாச்சே நீ... தாடி வீசல்லா வச்சிண்டு, கெழவனாட்டங்க கடக்க.. கூம் நாம்பரவால்லடாப்பா...’

‘ஆமாங்க சாமீ’. அவர் இத்தனையும் ஞாபகம் வைத்திருப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நாளில் ஊர் ஜனங்களுக்கே இந்த சேதி பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கும், அந்த விசும்பல்தான் இந்த ஐயரும். இந்த மரத்தடியில் பம்பரம் விளையாடும் பொழுதுகளில்தான் நீலா ரோட்டுக்கு அந்தண்டைப் பக்கம் வீட்டிலிருந்து பார்ப்பாள். சின்னப்பிள்ளையிலேயே அப்படிதான். ஊரிலேயே அவள் வீடுதான் மாடிவீடு. சீமத்தண்ணி குடித்த குடும்பமென்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மாட்டு கொட்டகைக்கூட ஒரு ஒட்டுக் கட்டிடத்தில்தான் இருந்தது. இப்பொழுது அந்த வீடும் கொட்டகையுமிருந்த சுவடுகளேயில்லை.

‘ஏண்டாப்பா நீலா எப்டியிருக்கா?! இன்னும் நீ சாமிச்செலைய ஒடைச்சிண்டுதானிருக்கியா?.... மொகரையே தெரியுதே... தோ பாத்தியா இந்த புள்ளையார? அவரு மூக்க உடைச்சது உன் வேலைதானேடா, இன்னும் ரெண்டு மூணுப் பேரோட தூக்கிப்போட்டியே இந்த கொளத்துல..’

உண்மைதான் இந்தப் பிள்ளையாரின் மூக்கு உடைந்தது என்னால்தான். அப்போதிருந்த வேகம், பகுத்தறிவு சிந்தனைகள், பெரியார், இராவணன் அண்ணன்... இந்த பிள்ளையார்தான் அதற்கு பலி, சாட்சி. அதனால் ஊரில் கெட்டப்பெயர், என்னுடன் சேர்ந்திருந்த மூன்றுபேருக்கும். நீலாவுக்குக்கூட இது பிடிக்கவில்லைதான். ஆனாலும் அதுவொரு பொருட்டில்லாமல் என்னை முழுமனதோடு ஏற்றுக்கொண்டிருந்தாள்.

‘ஆனா ஒண்ணுடாம்பி, எப்ப புள்ளையாரத்தூக்கி கொளத்தண்டைப் போட்டியோ அப்பலேர்ந்து கொளத்துல தண்ணி அத்துப்போச்சு.. என்ன சாபமோப்போ. பூட்டியிருந்ததால இந்தப் பெருமாள் தப்பிச்சிண்டார். இல்லன்னா அப்பருந்ததுக்கு இவரையும் தூக்கிப்போட்டிருப்ப..  ஒண்ணு தெரிஞ்சிக்கோடா, பெருமாளாயிருந்தாயென்ன? பெரியாராயிருந்தாயென்ன? மனுஷாள்மேல மனுஷாளுக்கு நம்பிக்கயத்து போனதாலனேடா இந்த தெய்வங்கள் வந்தது. அதையும் லோகத்லேர்ந்து அழிச்சிண்டா எல்லாஞ் சரியாயிடுமாயென்ன?, சரிவுடு, நீலா எப்டியிருக்கா?’ விட்ட இடத்திற்கே வந்து மீண்டும் அவர் கேட்கும்போது அவர் கண்களில் தெரிந்த ஆச்சர்யம் என்னை நடைமுறைக்கு தள்ளியது.

‘ம்ம்..நல்லாருக்கா சாமீ’ வேறெதையும் சொல்லத்தோன்றாமல் அசட்டையாக பொய் சொன்னேன்.

‘நீ கெடக்கவுடு, அவ நல்லாருக்கணும்டாப்பா, ஓடுபுள்ள ஒடியாருபுள்ளையா நாங் பூஜைக்கு வந்தாப்போதும் ஓடோடி வந்திடுவா, குளத்திலேர்ந்து தண்ணி கொண்டாரன்னே.. லெஷ்மி கடாஷம் அப்டியேருக்கும், இந்தப் பெருமாளுக்கு அவளை புடிக்கலப்போல.. அதான உன்னாண்டை விட்டுட்டான். ம்கூம் சூட்டிக்கலானப் பொண்ணு.., சின்ன வயசிலே பம்பரம் வெளையாண்டே அவள ஜோடி சேத்திண்டியேடா? அடுக்குமா, லோகத்துல எந்த பயலுக்காவது இந்த கொடுப்பினை உண்டா?!!’

நீலாவையே சுற்றி சுற்றி பேசிக்கொண்டிருந்தார், அவள் அம்மா அப்பா செத்தது, போனது, வந்தது, இன்னொரு பட்டாமணியார் கணக்காக ஆகிவிட்டது. அப்பறம் கிளம்பினார். என்னைப் பற்றி பெரிதாக விசாரிக்கக்கூட அவர் விரும்பவில்லை. போய்விட்டார். 

‘இந்த அரச மரத்தடிதான் என் வாழ்க்கை, இங்குதான் என் பொழுதுகள் விடிந்தது, இங்குதான் நீலா கிடைத்தாள், இந்த புனர்ஜென்மம் கிடைத்தது. நாலடி விட்டத்தில் ஒரு வட்டமும் நடுவே முக்கி வெளியேற முடியாத பம்பரங்களுமிருக்கும். வெளியே வந்த பம்பரக்காரர்களின் குறி உள்ளேயிருக்கும் பம்பரங்கள் மீது. அதில் உக்கு வைக்கவே அத்தனைப்பேரின் உக்கிர குணங்களும் ஆசைப்படும். எல்லோருக்கும் பொருந்தும் இந்த நீதி. எல்லாப் பம்பரங்களும் அடிபட்டு வெளியேறினால் பம்பரத்தை இழுப்பு விட்டு கையிறால் இரண்டு சுற்று சுற்றி மேலே தூக்கி இரண்டுகையாலும் பிடிக்கவேண்டும். அப்பீட் என்பார்கள். கடைசியாக எடுப்பவர் பம்பரத்தை உள்ளே வைக்கவேண்டும். இதுதான் பொழுது முச்சூடுமான விளையாட்டு. நான் பம்பரம் விடும் அழகுக்காகவும், அதை குத்துவிடும் ஆக்ரோஷத்திற்காகவும்தான் நீலா என்னை பார்த்துக்கொண்டேயிருப்பாள்.  அவளே பிறிதொரு நாளில் சொன்னாள். எல்லாப்பசங்களும் போனப்பிறகு நான் மட்டுமிருப்பேன். மரத்தடிக்கு வந்து ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ என்பாள். அப்போதெல்லாம் பம்பரக்கயிறு புதுத்தாலிக் கயிறு மொத்தமிருக்கும். பம்பரத்தின் கூர்முனையிலிருந்து படிப்படியாக சுற்றி தலைக்குமேல் ஓங்கி கீழ்நோக்கி ஒரு சொடுக்கு சொடுக்குவேன. தரையில் விழாமல் அதை வலது உள்ளங்கியில் தாங்கி அவள் கையில் விடுவேன். பிஞ்சிக்கைகளில் அந்த ஆணிப் பம்பரம் சுற்றிவர சிவந்துவிடும். ரசித்துக் கொண்டிருப்பாள்.

இந்த பம்பரத்திற்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு ஒற்றுமை, தொடர்பு. சாட்டையால் சுற்றிவிடுவது எவனோ. சுற்றுவது நாம், தெம்பு குறைந்தபின் ஆட்டம் காலி படுதா காலி. முடியாமல் கஷ்ட வட்டத்தில் மாட்டிக்கொண்டால் உக்கு விழுவதுபோல் சில அடிகள், மரண அடிகள். இதை நினைக்க நினைக்க எனக்கு பம்பரம் விடவேண்டும் என்ற ஆசை வந்தது.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வேங்குவேங்கென்று அந்தக் கடைக்குப்போனேன். ‘தம்பி, பம்பரம் இருக்கா?’ மூச்சி இறைத்தது.

‘இருக்குங்க’ முழுக் கொட்டைப்பாக்கு அளவில் ஒன்றைக் கொடுத்தான். ப்ளாஸ்டிக் பம்பரம். தமிழ்நாட்டில் பம்பரத் தட்டுப்பாட்டுக்கு விஜயகாந்தும், வைகோவும் காரணகர்த்தாக்கள் போலிருக்கிறது. ச்ச்சை..

‘கயிறு கொடப்பா?’ சிகப்புக்கலரில் ஒரு தாம்புக் கயிறுப்போல் கொடுத்தான். மொத்தம் 8 ரூபாய்.

மறுபடியும் அரச மரத்தடிக்கு வந்தேன். பெருமாள் கோவில் உள்ளேயிருந்து ஊதுபத்தி மணம் வெளிவரைக்கும் அடித்தது. அரசமர இலைகள் சலசலவென்று அடித்துக் கொண்டிருந்தன. சைக்கிளை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமில்லை. பம்பரத்தில் கயிற்றைச் சுற்றினேன். வழுக்கி வழுக்கி வந்தது. பிறகு பிடித்துகொண்டது. தரையில் ஓங்கி குத்துவிட்டேன், டங்கென்று தரையில் தட்டி குளத்துப் படிக்கட்டில் விழுந்தது. சுற்றவில்லை. மீண்டும் எடுத்து கொஞ்சம் பொறுமையாகக் குத்தினேன். சுற்றியது. ஒரு பின்னிரவு நேரத்தில் மொட்டைமாடியை அலங்கரிக்கும் காற்று மனதைப் பரவசப்படுத்தும், அதுபோலிருந்தது. கீழே குனிந்து புறங்கை தரையில் பட ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் ஒரு விரிசல் உண்டாக்கி பம்பரத்தில் ஆணிக்கு நேராக நீட்டிச் சொருகினேன். பம்பரம் சுற்றியபடியே கையில் ஏறியது.

என்னைக் கேட்டால் பம்பரம் கையில் சுற்றும் அந்த விநாடிகளின் குருகுருப்பையும் கூச்சத்தையும் ஏந்தி ரசிப்பது இந்த வயோதிகத்தின் புண்ணியம் என்பேன். நாற்பது வருடங்கள் இருக்கலாம். இதே மரம், இதே இடம், கலகலவென்று எத்தனைப்பேர் இந்தப் பம்பரம் விளையாட. ஆனால் இப்போது? மல்லாந்துப் படுத்து  மார்பில் துப்பிக்கொள்வதுபோல் நகர வாழ்க்கை, கிராமத்துப் பிள்ளைகளுக்கும் இதேதான் கதி. நெஞ்செங்கும் நிம்மதியால் நிறைந்தது. கொஞ்சநேரம் மரத்தடி திண்ணையில் படுத்து கண்களை மூடினேன். ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ நீலா கை நீட்டினாள்..  


  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO