பதிவுலக மூத்தவரான அன்பர் வானம்பாடிகளின் முதுமுறை அழைப்பிற்கிணங்க இந்த தொடர்பதிவை நானும் தொடுகிறேன்.
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு?
சொல்லுமளவிற்கு அறியப்படவில்லை என்று என்னுடைய சுயவிவரத்திலேயே குறிப்பிட்டிருந்தாலும், இது சிறு குறிப்பு என்பதால் சொல்கிறேன். வயது 27. படிப்பு இளம் அறிவியல் கணிதம். சொந்த ஊர் நாகை மாவட்டம், மயிலாடுதுறை. பணி நிமித்தமாக தற்போது ஈரோடு.
2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்?
அப்பா குருவி வெடியை ஒவ்வொன்றாக விளக்கில் கொளுத்தி விட்டெரிந்து வெடித்தார். அதையே பார்த்துக்கொண்டிருந்த நான் ஒரு பாக்கெட்டை ‘மட்டும்’ எடுத்து விளக்கில் கொளுத்தி வெடித்தேன். பிறகு நடந்தது எனக்குமட்டும் தெரியவில்லை. பாதிப்பு ஒன்றுமில்லாமல் தப்பித்ததாக எனது எழுதப்படாத வரலாற்றில் இருக்கிறது. அப்போது என் வயது 2.
3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
அப்பா அம்மாவுக்கு...தண்ணீரும் சோறும் போடும் மண்ணில். (செம்பொன்னார்கோயில், மயிலாடுதுறை)
4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள்?
ச்சி...இந்த பழம் புளிக்கும் என்று இப்போதுள்ள 8ம் வகுப்பு மாணவர்களுக்கே தெரிந்திருக்கிறது. அதனால் மட்டைவிளையாட்டில் மூழ்கி முத்தெடுத்தெடுத்து கொண்டிருந்தனர். அந்த வயதுக்கு கீழேயுள்ள சிறுவர்கள் மட்டும் தங்களது சிற்றின்பங்களை, வெடித்து சிதறும் காகிதத்தின் எண்ணிக்கையில் தேடிக்கொண்டிருந்தனர். வழக்கம்போல் பெரிசுகள் இந்த நாளுக்காக சேர்த்துழைத்த வதங்கிய உடலை உறக்கத்தில் மீட்க, வெடியொலியின் சப்தங்களுக்கிடையே முயன்றுகொண்டிருந்தனர்.
5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா ?
அப்பா வாங்கி கொடுத்தார். தைத்தேன். ஆனால் தீபாவளிக்கு அல்ல.
6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?
அம்மாவிற்கு வீண்வேலை வைக்க எப்போதும் விரும்புவதில்லை.
7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
உறவினர்களும் சரி, நண்பர்களும் சரி...யாரும் என்னிடம் வாழ்த்துக்களை எதிர்பார்த்ததில்லை. என்னிலையும் அப்படியே.
8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா?
தொலைக்காட்சி பார்ப்பது வழக்கமாக இல்லாத காரணத்தினால் முடிந்தவரை வீட்டிற்குள்.....புத்தகங்களை புரட்டுவதிலேயே நேரங்கள் நேராகும்.
9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள்? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
விடுமுறை கிடைக்கும் நாளாக அமைவதால் மட்டும் இனிய நாள் என்று கருதுகிறேன். மற்றபடி அந்த நாளில் நான் உதவி செய்தவர்களுக்கு பெயர், முகவரியைத்தவிர வேறொன்றும் இருந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.
10) நீங்கள் அழைக்கவிருக்கும் இருவர், அவர்களின் வலைத்தளங்கள்?
ஓர் அனுபவத்தை அறியும் பொருட்டு நண்பர்களான புலவன் புலிகேசி மற்றும் ஊடகன் அழைப்பை ஏற்பார்கள் என்ற எண்ணத்துடன்
பாசமுடன்,
க.பாலாசி