க.பாலாசி: December 2009

Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்...


எனை ஈன்ற தந்தைக்கும் தாய்க்கும்,
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கும்,
என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாம்.

- பாவேந்தர்
பாரதிதாசனின் இவ்வரிகளை நம்மின் மனதில் வைராக்கியமாகக்கொண்டு வாழ்வோம்... வளம்பெறுவோம்...

அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பாசமுடன்,
க. பாலாசி


Tuesday, December 29, 2009

அவனல்லால் நண்பன் யாதொருவன்??காதலிக்கு எழுதிய கவிதையை
படித்து ஆசிகூறி அனுப்பிவைத்த நண்பன்
புறமுதுகில் காரித்துப்பியதையும்
காதில் வாங்கிபடியேச் சென்று....
அவள் அண்ணா என்றவுடன்
ஆற்றாமையில் அறைக்கு திரும்பும் நேரத்தில்
அரைகுடுவை சாராயத்துடன் காத்திருப்பான் அதே நண்பன்.

**********

மெழுகு காகிதத்தில் சுற்றப்பட்ட மேரி ரொட்டியை
சரிபாதியாய் பிரித்து, அதிலொன்று எச்சமடைய
இரண்டாய் ஒடித்துப் பகிர்ந்துகொண்டதுஉம்....
பின்னாளில் கல்லூரிவாசல் பெட்டிக்கடையில்
ஒரு புகைக்குழலுக்காய் சண்டையிட்டாலும்
தேர்வறையில் துண்டுச்சீட்டினைப் பரிமாறக்கொடுத்து
தேர்ச்சிபெறச்செய்ததுஉம்....நட்பன்றி வேறென்ன??

**********

தான் பார்க்கும் பெண்ணை
அவனும் பார்க்கிறான் என்றறிந்ததும்
தயக்கமின்றி அவளை தங்கையாக்கிக்கொண்டு
அடுத்தவளைத் தேடிச்சென்றுவிடும் நண்பனுக்கு
தன் காதலையும் தியாகம் செய்து
காதலே வேண்டாமென்று அறிவுறுத்தும்
அதுவும்கூட நட்புதான்.

**********

‘தருதலைங்க உருப்படவாப்போகுது’
என்று அம்மா திட்டியது தெரிந்தும்
சளைக்காமல் வந்து எதிர்வீட்டு பெண்ணை
எனக்கு தெரியாமலே கண்ணடிக்கும் அவனுக்கு...
அவன் தங்கையை நான் பார்ப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் மறந்துப்பழகும்
அவனல்லால் நண்பன் யாதொருவன்??

**********


Thursday, December 24, 2009

நானும் குடுக்கிறனுங்க...

ஒண்ணும் பெரிசா இல்லீங்க. ஒழுங்கா ஓரமா உட்காந்து ஆபிஸ் வேலய பார்த்துகிட்டு இருந்தேனுங்க. என்னையப்போயி மெயில் செக்ஸனுக்கு மாத்தினாங்க. அய்யோ அங்கண வேல பாக்கனும்ணா நமக்கு இங்கிலீஸ்காரன்ல நண்பனா இருக்கணும். என்னடா பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டே உட்காந்தப்பதான் ஒரு ஐடியா வந்துச்சு. இங்கண இருக்கிற ஒரு ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸ்க்கு போகலாம்னு. சரின்னு போயி ஜாயிண்ட்டும் பண்ணியாச்சு. அங்கணயிருந்த ஒரு அம்மாவுக்கு தமிழ் சுத்தமா வராது. ஏன்னா அவிங்க ஊட்டி கான்வெண்ட்ல படிச்சாங்கலாம். நமக்கும் ரொம்ப வசதியாப்போச்சுன்னு அவங்களுக்கு தமிழ நல்லா சொல்லிக்குடுத்துட்டு வந்தேனுங்க. இது வரலாறுங்க. நெக்ஸ்ட் வலைப்பூவியல் பாக்கலாங்க.

கொஞ்ச நாளு கம்பேனி மெயிலு அதுஇதுன்னு கலிகாலத்திலேயே சுத்திகிட்டு இருந்த என்னோட சுழி சும்மா இருந்துதா? அதான் இல்ல. புதுசா வர படத்துக்கு எங்கடா விமர்சனம் படிக்கலாம்னு கூகில் சர்ச்ல நோண்டி பாத்தேனா... அங்கணதான் கெடச்சுது கேபிள் சங்கரோட லிங்க். அது ஏதோ வெப்சைட்னு நெனச்சுகிட்டே ரொம்ப காலமா ஓட்டிகிட்டிருந்தனுங்க. ஆனா பாருங்க என்னோட மூளையில இது என்னா பிளாக்ஸ்பாட்டுன்னு ஒரு யு.ஆர்.எல் அப்டின்னு அதே கூகிள் சர்ச்ல தோண்டி தொழாவி கண்டுபுடிச்சனுங்க இந்த பிளாக்கர்.காம்ம. புடிடா பாலாசின்னு நல்லா இருக்கமா ஒரு ரெஜிஸ்ட்டர் பண்ணி எங்கணயாவது கெடைக்கிற சேதிங்கள பொறுக்கிப்போட்டு ஒரு பத்து போஸ்ட் பண்ணிருப்பன்னு நெனக்கிறேன். அதுக்குள்ள பாருங்க நம்ம வால் அண்ணணும், கேபிள் அண்ணணும் நமக்கு பாளோயர் ஆயிட்டாங்க. அப்பறமா கதிர் அய்யாவும், லவ்டேல்மேடியும் வந்துட்டாங்க. பார்றா நம்மளயும் பாக்குறாங்கன்னு நெம்ப சந்தோஷமாயிடுச்சுங்க. அதுக்கப்புறம் ஆரம்புச்சுதுங்க இந்த கிறுக்கு. இன்னும் ஓஞ்சபாடில்ல. பூவோட சேந்த நாரும் மணக்கும்னு சொல்லுவாங்களே அதுமாதிரி கதிரய்யாவோட சேந்துகிட்டு நானும் ஏதாவது நல்லது கெட்டது எழுதிகிட்டே இருக்கணுங்க.

கூட சுத்துர சேக்காளிங்க சரியில்ல, அதனாலத்தான் பயபுள்ள வீணாப்போயிட்டுன்னு ஆபிஸ் மேனேஜர் கத்திகிட்டு இருப்பாருங்க. இங்கண பாருங்க அவரையும் ஒரு பிளாக் ஆரம்பிக்க வைச்சிட்டனுங்க. கூடிய சீக்கிரமே அவரும் நம்மள மாதிரி பிளாக் லோகமே புண்ணியலோகம்னு ஆயிடுவாருன்னு நம்பிக்க மட்டும் இருக்குங்க. இதாங்க நம்ம பூவுலகவியல்.

இங்கணப் பாருங்க முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரின்னு சொல்லுவாங்க. அதுமாதிரி கூட்டாளிங்க புலிகேசிகிட்டேயிருந்தும், திருப்பூர்ல இருக்குற முரளிக்குமார் பத்மநாபன்டேயிருந்தும் நமக்கொரு விருது வந்திருக்குங்க. நான் முல்லையில்லாம் இல்லீங்க. ஆனாலும் முள்ளும்மில்லீங்க. மனசுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுங்களா? நானும் பிரிண்ட் எடுத்துக்கூட பாத்தேன். அந்த கோல்ட் கலர்தான் வருதே ஒழிய கோல்ட் வரமாட்டங்குது. சரி விடுங்க. ஆனாலும் பாருங்க நாம எழுற எழுத்துக்கு இப்டி விருதுல்லாம் வருதேன்னு சந்தோசமாதானுங்க இருக்கு. அதுவொரு இனம்புரியாத இனிமைங்க. நமக்கு விருதுகொடுத்த எல்லா மக்களுக்கும் நன்றிய சொல்லிக்கிறனுங்க. எத்தன நாளைக்குதாங்க சேட்டு கடையில இருக்குற நகையாட்டம் சும்மா வைச்சிக்கறது. அதனால எனக்கு கெடச்ச இந்த விருத கீழ உள்ளவங்களுக்கு நானும் குடுக்கிறனுங்க. வாங்கிக்குங்க சாமியோவ்...

வெண்ணிற இரவுகள்

பேநாமூடி

சங்கவி

நெம்ப நன்றிங்க...


Tuesday, December 22, 2009

நன்றி நவிலல்...

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்று யாரோ (???) கேட்டதுபோல அவ்வப்போது மனதில் தோன்றிய ஐயப்பாடுகளையும் தாண்டி எங்களின் மண்ணில் இந்த மாபெரும் பதிவர்கள், வாசகர்கள் சங்கமத்தினை சிறப்புறச் செய்த எல்லோரையும் முதற்கண் வணங்குகின்றேன்.

இம்மாபெரும் நிகழ்வினை எனது கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லையென்றே சொல்லவேண்டும். ஆரம்பத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது 30 நபர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்று தெரிகிறது என்றே பேசினோம். பிறகு நாட்கள் நகர நகர எங்களுக்கே கொஞ்சம் பயம் எடுக்கத்தான் செய்தது. எங்களது ஏற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்துமா என்ற அளவிலும் சந்தேகங்கள் இருந்தன. இப்போது வருகைதந்தோர் ஒவ்வொருவரும் கூறும் போது ஓரளவிற்கேனும் எங்களது உழைப்பு பயனுள்ளதாகிவிட்டது என்ற திருப்தியும் ஒட்டிக்கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற தங்களது முழு ஒத்துழைப்பினையும் மற்றும் எங்களுக்கான பதிவர் சந்திப்பு பட்டையினை தங்களது வலைதளத்தில் வெளியிட்டு அனைவருக்கு இதுபோன்றதொரு இனிமையான தருணம் அமைய வாய்ப்பு நல்கிய தமிழ்மணம் திரட்டி காசி அய்யா அவர்களுக்கு எங்களது நன்றிகளை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு என்றவுடனே வருகைதர ஒப்புக்கொண்ட சீனா அய்யா, மற்றும் புலவர் முனைவர். இராசு அவர்களுக்கும் நாங்கள் நன்றிகளை நவில கடமைப்பட்டுள்ளோம்.

எங்களது உழைப்பு என்பது இந்நிகழ்வில் மிக மிக குறைவுதான். ஏனெனில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார்கள் பெரியோர்கள். ஆனால் திரைகடல் தாண்டியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அய்யா பழமைபேசி, நாகா, செந்தில்வேலன், உடுமலை.காம் சிதம்பரம் போன்றோர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?. மகிழ்கிறோம் அன்பர்களே....

ஏதோவொரு சந்திப்பு நடைபெறுகிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்று சிரத்தையெடுத்துக்கொண்டு வருகைபுரிந்த சென்னை, திருப்பூர், கோவை, மதுரை, கரூர் உடுமலைப்பேட்டை, திருச்செங்கோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதி பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.

சங்கமம் குறித்து முகப்பு பக்கத்தில் வெளியிட்ட தமிழ்மணம், சங்மத்தின் முழுக் காணொளியைவெளியிடவிருக்கும் சங்கமம் லைவ் இணையதளம், படப்பதிவு செய்த ஸ்டார் வீடியோஸ்ஆகியோருக்கும் நன்றிகள்.

குறிப்பாய் இம்மாபெரும் விழாவிற்கு வருகைதந்த பெண் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.


நன்றி..நன்றி...நன்றி....

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.


சில நயம்மிகு நிழற்படங்களைக் காண இந்தச் சுட்டியை அழுத்துங்கள்

சங்கமம் குறித்த மேலதிக தகவல்களுக்கு....
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்


Thursday, December 17, 2009

வலைச் சுரைக்காய்...

சென்றவாரம் தினசரி பத்திரிக்கைகளில் ஒரு செய்தி.


‘குடிபோதையில் கணவனை கொன்ற மனைவி


இதென்ன புதுமை? செய்தி அச்சுப்பிழையோ என்றவாறே ஆராய்ந்தேன். உண்மையாகவே இந்த வீரப்பெண்மணி தனது கணவன் இன்னொருத்தியுடன் இருந்ததாக சந்தேகமடைந்து வெட்டிக்கொன்றுள்ளார். அவனும் அப்படித்தான் இருந்திருக்கிறான். இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் இருவருமே மது அருந்துபவர்கள். கூலித்தொழிலாளிகள். செய்தது சரியோ தவறோ அந்த பெண்ணை பாராட்டியே ஆகவேண்டும்.


•••••••••


அண்மையில் எனது கணிணி வைரஸ்களால் வலுவிழந்ததற்கு காரணமாக வன்பொருள் வல்லுனர்களால் சொல்லப்பட்டது சீனாவிலிருந்து வந்த மின்னஞ்சல்கள். ஒருவழியாக அவைகளை ஒருநாள் ஒருவேளை அடையாள உண்ணாவிரதமிருந்து அகிம்சை வழியில் ‘கொலைசெய்தேன்(தோம்).


சீனர்களின் கண் இப்போது நமது இரசாயன சந்தை. நானும் இரசாயனம் சார்ந்த துறையிலேயே பணிபுரிவதால் தெரிந்துகொண்டேன். இங்கே உற்பத்தி செய்யப்படும் இரசாயனங்களின் விலைகளை காட்டிலும் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் இரசாயனங்களின் விலை மிகக்குறைவு (அனைத்து வரிகள் மற்றும் செலவுகள் உட்பட) குறிப்பாக துணிச்சந்தைக்கு தேவைப்படும் இரசாயனங்கள். இவைகள் இலங்கை வழியாக நமது சென்னைத் துறைமுகங்களை வந்தடைந்து மற்ற மாநிலங்களுக்கும் வழிந்தோடுவதாக தகவல். நமது இரசாயன சந்தையும் அதன் விலைகளுடன் போட்டியிட முடியாமல்தான் உள்ளது. நமது பிரதமர் அடுத்தமுறை வெள்ளைமாளிகைக்கு விருந்தோம்பலுக்குச் செல்லும்பொழுது இதுபற்றி ஒபாமாவின் இரண்டு குழந்தைகளுடன் விரிவாக உரையாட உள்ளார். மதுரை நெஞ்சங்கள் அஞ்சவேண்டாம்.


••••••••


பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோவில்

தாயத்துடன். (!?)


•••••••••


பருத்தி பயிரப்படுவதில் ஆரம்பித்து அது நமது உடலுக்கு உடையாகும் வரை குறைந்தது 30 விதமான இரசாயனங்களை உள்வாங்கிக்கொண்டுதான் வெளிவருகிறது. ஆடைகளின் தரம், தன்மை, நிறம் இவைகளைப்பொருத்து அவைகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், சாயங்கள் கூடவோ குறையவோ செய்யலாம். இதில் குழந்தைகளுக்கான ஆடைகளை குறைவான செயல்திறனுடைய இரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன.


••••••••••

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO