க.பாலாசி: அனுபவம்
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Monday, November 14, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்..

.

பேருந்தில் ஏறும்முன் நடத்துநரிடம் ‘இடமிருக்கா?’ என்று கேட்பது என் வழக்கமும்கூட. மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘உனகெதுக்குப்பா தனியாவொரு எடம்.. போ போ அங்கண ஓரமா ரவையோண்டு இருக்குப்பாரு’ என்பதாக தலையசைப்பார். கடக்கு கழுதையென்று தனியாவர்த்தனமாக ஓரிடம்பிடித்து உட்காரும்போதெல்லாம் கூடவே இன்னுமிருவர் வலுக்கட்டாயமாக நெருக்கியடித்து உட்காருவர், அது இருவரிருக்கையாயினும். ஏன்டா இப்படியென்று கேட்கவும் முடியாது. ‘ஒனக்கு இந்த எடம் போதும்’ மென்று பொளிச்சென சொன்னாலும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ‘ண்ணே ...க்கு ஒரு டிக்கெட்’ என்றால் ‘அரையா முழுசா?‘ என்பார் நடத்துநர், பார்வையில். உயரத்தில் இரண்டடி குறைவாகவும், இந்த இரண்டு மி.மீ நீள மீசையுமில்லையென்றால் மனசாட்சிக்கு விரோதமின்றி பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும் அரை கட்டணச் சலுகையில் என்னால் பயணிக்கமுடியுமென்பது தற்காலத்திற்குமான நிகழ்தகவு. இந்த மிகை, குறையல்லவென்பது எனைக் கண்டறிந்தவர்களுக்கும் தெரிந்ததுதான். இதைபோன்ற சிறப்பு நிகழ்வுகள் கூடிவந்து கும்மியடிக்கும்போதுதான் வருடந்தோறும் ஐப்பசியும் 8ம் நாளும் வந்து தொலைக்கிறது. அடுக்குப்பானையிலிருக்கும் அதிரசம்போல கடந்த இரண்டு வருடங்களாக 27 ம் அகவையிலேயே குடியிருந்தது ஒரு இனிமைதான். சென்ற ஐப்பசி எட்டுக்குப்பிறகு அதிலும் பூசணம் பூத்தது. 30 தொடங்கிவிட்டதாம். கலிகாலம்.
•••

இந்த நேரத்தில் நீங்கள் தாராசுரம் என்ற ஊரைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 5 ஆவது மைல்கல் தொலைவிலுள்ளது இந்தப் பேரூர். இங்குள்ள, உலகப் பாரம்பரிய சின்னங்களும் ஒன்றான ஐராவதேஸ்வரர் திருக்கோவில் 12 ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலும் மேற்கண்ட கோவிலும் கலையில் நிறைய ஒற்றுமையுடன் திகழ்வதாக அறியப்படுகிறது. மேலும் இக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இசைப் படிகள் உள்ளது. அதாவது 7 கருங்கற்படிகளும் 7 ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைப்பற்றி  ஒரு முழுமையான பயணக்கட்டுரையை பதிவர் புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கவும்
•••

கூத்தாடி கிழக்கே பார்க்கவும் கூலிக்காரன் மேற்கே பார்க்கவும் காரணமிருக்கிறது. கூத்தாடியின் பிழைப்பு ராப்பொழுதில். ஆகவே அவன் விடியலை கிழக்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். கூலிக்காரன் பிழைப்பு பகற்பொழுது. அவன் சூரியன் மறைவை மேற்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். போலவே மாயவரம் மண்ணில் பிறந்த நான் மேற்கண்ட பத்தியில் தாராசுர பெருமை போற்றவும் காரணமிருக்கிறது. என் வருங்காலத்திற்கானவள், அதாவது இந்த மாதொருபாகனுக்கான மாதவள்  அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். அது, அதற்கு  இன்னொரு பெருமை.

•••

பெண்பார்க்கப் அந்த வீட்டினுள் நுழையுமுன்னமும் படபடப்பிருந்தது. ‘ஏங்க இவரு மாப்பிள்ளைக்கு கடைக்குட்டி தம்பியா?’ என்று யாராவது என்னைப்பார்த்து கேட்டுவிடும் அபாயமிருந்தது. நல்லவேளை அதற்கான வாய்ப்பை உறவினரொருவர்  தடுத்து ‘இவர்தான் மாப்பிள்ளை’ யென்றார். அப்பாடா‘ என்றிருந்தது. காபி டம்பளரை நீட்டியவள் முன் நாணலாக நாணவும் தெரியாமல், வீராப்புடனுமில்லாமல் சங்கோஜப்பட்டேன். பரஸ்பரங்கள் முடிந்து இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது, இருவருக்கும். அடுத்த அகவை வருவதற்குள் நல்லூணைப் பெருக்கி உடலையும் பெருக்கி ஒரு டி.எம்.டி முறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ அல்லேல் குறைந்தபட்சம் பி.வி.சி குழாயையாவது வளைத்துக்காட்டும் தண்டுளப வண்ணனாகவோ மாறிவிடவேண்டுமென்பதை வருங்காலத்தாளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் கொண்டை முடிந்திருக்கிறாள்.

•••

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யமொன்றறியோம் பராபரமே என்பதற்கிணங்க கவிதையெழுதுவதை சமீபகாலமாக நிறுத்தியிருக்கிறேன். தெரியவில்லையென்பது இரண்டாம்பட்சம். நல்ல எளிமைக் கவிதைகளை படிப்பதிலிருக்கும் ஆர்வம் எழுதுவதில் கிஞ்சித்துமில்லை. ஒரு மதிமயங்கிய மாலைநேரம், மழைக்காலம் எதையோ பேசி, எதையோவொன்றைச் சொல்லப்போக என்னவள், ‘நானும் கவிதையெழுதுவே’னென்று என் வலப்பக்கச் செவியின்வழி  குண்டைத் தூக்கிப்போட்டாள். நள்ளிரவு 12 மணிக்குமேல் கவிதையெழுதத் தோன்றினாலும் உடனே துயில் கலை(த்)ந்து ஒரு கோடுபோட்ட குறிப்பேடு முழுக்க கவிதைகளாய் சமைத்துவிடும் வல்லமை  பெற்றவளாம். மாமியார்கூட புளங்காங்கிதமடைந்தார். இந்த கவிதாயினிக்கு ‘சாமி’ வராமல் காலமுழுக்க பார்த்துக் கொள்ளவேண்டுமென்பதே என் இப்போதைய ஆசை.


Wednesday, March 30, 2011

தஞ்சாவூர் சிறுக்கி

90, 91 வாக்கில் என்று நினைக்கிறேன், 2 வகுப்பு. ஒரு மூன்று அடி சுவரு. செந்தாமரை டீச்சர் முன்பு பயில்வான் பக்கிரிசாமியாக காட்டிக்கொள்ள துள்ளிக் குதித்து விளையாடியதில் விழுந்து இடது கை முட்டியில் செங்கல் மோதி மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குமார் வாத்தியார்தான் ஒரு அடி ஸ்கேல் மூன்றை இரண்டு இரண்டாக உடைத்து சணல்போட்டு கையில் இறுக கட்டி வீட்டிற்கு அனுப்பினார். அம்மா அழுதாள், ‘க’னா பய மொவன், சும்மாயிருக்கவேமாட்டான்’ அப்பா அடிக்காமல் திட்டினார்.  மாயவரம் சுப்பையா டாக்டர் அப்போது பிரபலம். மனிதர் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சார்மினார் சிகரெட் வீதம் பற்றவைத்தப்படியேதான் வைத்தியம் பார்ப்பார். ஒரு மாதம் கைக்கு வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து சுபமங்களம்.

மீண்டும் 2001-2002 கல்வியாண்டு. ஸ்கிப்பிங் கையிற்றை இருவர் பிடித்துக்கொள்ள உயரம் தாண்டுதலில் கோலோச்சிக்காட்டியதில் அதே இடதுகை முட்டியில் ஒரு எலும்புத்துண்டு விவாகரத்துக்கு விரும்பிவிட்டது. விடமுடியுமா?, மீண்டும் சுப்பையா, சார்மினார் சிகரெட் மருத்துவம், விவாகரத்து தள்ளுபடியாகி எலும்புத்தம்பதிகள் ஒன்றுசேர்ந்தனர். இந்தமுறை வீட்டிற்கு தெரியாமல் கட்டுப்போட்டுவிட்டு கலைமகள் ஸ்கூல் ஸ்டாப்பிங்கில் இறங்கி வீட்டிற்கு செல்லும்போது அம்மா முந்தானையில் மூக்கை சிந்தியபடி எதிரே வந்துவிட்டாள். ‘ஏன் தம்பி ஒனக்கு?’ அழுதாள். நண்பன் தேற்றினான். ஒரு மாதம் கல்லூரிக்கல்விக்கு விடுப்பு கொடுத்துவிட்டு காதல் கல்வியைத் தொடங்கினேன். உமா என்னை முழுதும் அடைத்துக்கொண்டது அந்தக்காலகட்டம்தான். ஸ்கிப்பிங் கயிறை இறுகப்பிடித்து என் கையை உடைத்த அதே நண்பனின் தங்கை, பழிக்குப்பழி.


இவைகள் என் வீரவரலாற்றுக் கல்வெட்டுக்களின் இண்டு இடுக்குகளில் காணப்படும் இரண்டு முத்துக்கள்தான். எப்போதுமே எனக்கு எண்ணிக்கையில் மூன்று பிடிக்கும். ‘பொதுவாழ்விலும்’ முதலில் சுஜா, பிறகு பவானி மூன்றாவதாக காதல் ரசம் கரைத்தூட்டிய உமா, கடைசியாயும்கூட. நெருங்கிய நண்பர்கள்கூட மூன்றுபேர்தான். உருப்படாத கோவிலில் உண்டக்கட்டி வாங்கித்தின்ன கூட்டம் நாங்கள்தான். இன்றும் எவனும் விளங்கவில்லை என்னையும் சேர்த்து. இப்போது 2011, பொதுவாகவே புஜபல பராக்கிரமசாலியான எனக்கு மீண்டும் அந்த எலும்புத்தேவன் கோவில் மணியோசை வலதுகை சுண்டுவிரலில் கேட்டது.


ஒரு பிணத்தின் கால்கட்டைவிரல்களின் கட்டை அவிழ்த்துவிட்டு மூக்கில் உள்ள பஞ்சிகளையும் நீக்கிவிட்டு ஒருநாள் உயிர்க்கொடுத்தால் அந்த பிணம் என்ன செய்யும்? என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகள் அப்படிதான் 6.30க்கு விடிகின்றன. யாருக்கு எப்படியோ, எனக்கு விளையாட்டு புத்திதான் மோகித்திருந்தது. மைதானம், மட்டை, பந்து, எதிரணியில் ஒன்பது ஜாம்பவான்கள். ஆளும் அணியில் ஒன்பது. ஒரு(ரே) பந்து சுண்டுவிரலை நக்கியதில் உள்ளெலும்பில் மணியோசை. உடைந்துவிட்டது.


இந்தமுறை நண்பர்களைத்தவிர வீட்டிற்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை, மூக்கு சிந்தவும், ‘ஏந் தம்பி, ஏந் தம்பி ஒனக்கு?’ என்று ராகங்களை இசைக்கவும் அம்மா, அப்பாவுக்கோ, அக்காளுக்கோகூட தெரியாது. வழக்கம்போல இரவு 8 மணிக்கு அழைத்து ஏம்மா? நல்லாருக்கியா? சாப்டியா? போதும். என் நலத்தையும் அறிந்துகொள்வாள். பத்துநாளில் ஊருக்கு போகவேண்டும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டை எனக்கு. அப்போது இதை எப்படி தாங்கிக்கொள்வாள். ம்ம்ம்.... அது கிடக்கு கழுதை, இந்த அம்மா எப்போதும் இப்படிதான், அப்பாவைப்போல உள்ளுக்குள் பரிந்துகொள்வதில்லை.

ஒரு அறுவை சிகிச்சை. கோணி ஊசி அளவு ஒரு கம்பியை உள்ளே செருகியிருக்கிறார் டாக்டர்.இன்னொசென்ட் (பெயரில் மட்டும்) நல்ல விபரம். ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா? கேட்டுவிட்டுதான் இரண்டுநாள் படுக்கவைத்தார்.  நாலைந்து செவிலிப்பெண்கள். ஒருத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உமாவை அப்படியே உரித்து வைத்திருந்தாள். புருவத்து முடிகளை ட்ரிம் செய்து, நெற்றியில் சிறிய கருப்புநிற ஒட்டுற பொட்டு, அதே அளவு, நிற மூக்குத்தி. உமாவைவிட நல்ல நிறம். நன்றாக சிரித்து பேசவும் பழகவும் செய்தாள், எளிமை காட்டினாள். என் காட்டில் பெய்த இந்த மழையில் சிலீரென்று அந்த இருதய நரம்பு துருத்திக்கொண்டது. கட்டணம், ரசீதுகள் மற்றும் இத்யாதிகளை முடித்துக்கொண்டு எல்லாப்பெண்களிடமும் விடைபெற்றுக்கொண்டேன். ‘அடுத்தமொற ஒங்களுக்கு வாயில அடிபடணும்’ ஒருத்தி விளையாட்டாக சிரித்துக்கொண்டே சொன்னாள். வாயை மூடிக்கொண்டேன்.

‘அண்ணே நாலுநாள் கழிச்சி வாங்க, கட்டுப்போடணும்’,


‘எவடி அவ?’ திரும்பிப்பார்த்தேன், உமாவை உரித்துவைத்த அந்த தஞ்சாவூர் சிறுக்கிதான், பாதகி, கிராதகி. கையிலும் வலித்தது.


Thursday, March 10, 2011

இவளும் பெண்தான்..

அவள் அப்போதுதான் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாள். பள்ளிக்கூடம் திறப்பதற்கு ஒன்றரை மாதகால அவகாசம் இருந்தது. பத்தாம் வகுப்பு செல்வதற்கான கனவுடனிருந்தாள். தெருவில் வரும் கிளி ஜோசியன் அவளுக்கான வாழ்க்கை சீட்டை கையில் வைத்துக்கொண்டு கூவி வருகிறான். அவளின் பெற்றோர்கள் அவனை அழைத்து ஆரூடம் பார்க்கின்றனர். தெருவில் சில்லிக்கோடோ என்னவோ விளையாடிக்கொண்டிருந்தவள் ஆர்வத்துடன் கிளிக்காகவோ, ஜோசியத்துக்காகவோ அந்த இடத்தில் அமர்கிறாள். விளையாட்டுப்போக்கில் அவளுக்கும் 2 ரூபாய் மொய்வைத்தப் பிறகு  ராஜாத்தியென்றோ பாப்பாத்தியென்றோ அழைக்கப்படும் அந்த பச்சைக்கிளி ஒரு சீட்டை எடுத்துப்போடுகிறது. பிரித்துப்பார்த்த ஜோசியக்காரர் பலவிசயங்களை சொல்லிவிட்டு இவளுக்கு இந்நேரம் வரம் பார்த்திருக்கவேண்டும் இல்லையென்றால் இன்னும் சொற்ப நாட்களில் வரம் வந்துவிடும், கிழக்கிலிருந்துதான் வருவான். சொந்தக்காரன், சீமைத்தண்ணி குடிப்பவனாக இருப்பான் போன்றனவும் இன்னும் சிலவும் வாயில் வசம்பு தேய்த்ததுபோல் சொல்கிறார்.

‘இவள் படிப்பில் கெட்டிக்காரி’ என்று அந்த ஜோசியன் சொன்னதை இரவு முழுக்க கனவாக காண்கிறாள். பெற்றவர்கள் வரப்போகும் வரனை அவனோ, இவனோ, எவனோ என்கிற யூகத்தில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சொல்லிவைத்தார்போல ஒரு ராஜன் (வயது 28) அந்த ராணிக்காக துபாயிலிருந்து பொத்துக்கொண்டு திருவெண்காட்டில் குதிக்கிறான். அவன் ராணிக்கு மாமன் முறை, ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட அல்லது கேடுகெட்ட. துபாயில் கதாநாயகன் சித்தாளோ, கொத்தனாரோ என்னயெழவோ. மார்பில் சங்கிலியும் கையில் மோதிரமும், ஒரு மைனர் குஞ்சு போல மூர்த்திக்கடை மிக்ஸரும்,  அல்வாவும் வாங்கிக்கொண்டு அக்கா வீட்டுக்கு வருகிறான். அவனுக்கு நம் ராணி அக்கா மகள் (முறையில்). இவள் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கிறாள். பேச்சிப்போக்கில் தனக்கு பெண் பார்த்துக்கொண்டிருப்பதாக அக்கா, மாமாவிடத்தில் சொல்லிவைக்கிறான். விருந்து கருமங்கள் முடிந்தது. நாயகன் நாயகியை ஓரக்கண்ணால் ஒரு லுக், அவள் அந்த மிக்ஸருக்காக ஒரு லுக், அவ்வளவே.

எங்கோ தட்டிய பொறி அவள் பெற்றோர்களுக்குள் பற்றிக்கொள்கிறது. சரி அவர்களாக கேட்டால் நாமும் பேசலாம் என்று முடிவாகிறது. அந்த சனியனும் அடுத்தவாரமே நடந்துவிட்டது. மூன்றாம் நபர் வழியாக ராணியை பெண் கேட்டு தூது வருகிறது. இவளின் குடும்பத்திற்குள் குதூகளம். அக்கம்பக்கத்திலுள்ள மொத்தம் 10 டூ 15 குடும்பங்களும் இவர்களுக்கு சொந்தம்தான். அனைவருக்கும் இந்த சம்பந்தம் பிடித்தாலும், ‘சின்னவயசுல இவளுக்கு எதுக்கு இப்ப கல்யாணம்?, நாலு வருஷம் தள்ளி பண்ணா ஆவாதா?’ என்று சொல்லிப்பார்க்கிறார்கள். ம்கூம். காதில்லாதவன் காதில் ஊதியென்ன, செவிட்டில் அப்பிதான் என்ன புண்ணியம்?. மறுபடியும் சிங்கானோடை ஜோதிடனிடம் ஜோடிப்பொருத்தம் பார்க்கிறார்கள். ஜோடிப்பொருத்தத்தில் ஒன்பதோ, எட்டோ பொருந்தியிருக்கவேண்டும். முடிவாகிவிட்டது.

நகை, நட்டு, சீர்வரிசை, அப்போதே இருபத்தைந்தாயிரம் செலவு செய்து கட்டில், பீரோ கூடவே ஒரு ஹெர்குலஸ் சைக்கிளோ, டி.வி.எஸ் வண்டியோ எனக்கு மறந்துவிட்டது. ஜாம் ஜாம் திருமணம் திருவெண்காடு அந்த பிரசித்திப்பெற்ற கோவிலில். ராணியின் கூடப்பிறந்தவர்கள் இருவர், ஒரு அண்ணன், ஒரு தம்பி. அந்த தம்பியும் நானும் பால்ய நண்பர்கள். பக்கத்துவீடுதான். ஜாதியில் வேற்றுமையிருந்தாலும், பெரியம்மா, பெரியப்பா உறவுப்பிணைப்புடையது எங்களின் குடும்பங்கள். நானும் திருமணத்திற்கு சென்றிருந்தேன். எனக்கும் ஒன்றுமறியாத வயது. எல்லாம் முடிந்தது. இது நடவாமலிருந்தால் இந்நேரம் அவளுக்கு பத்தாம் வகுப்பு  ஆரம்பித்திருக்கும். ஆனால்..?

6 மாதங்கள் ஓடிவிட்டது. அனைவருக்கும் சந்தோஷம், சென்னை ஏர்போர்டில் மாமனுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு சென்ற காரிலேயே திருவெண்காட்டிற்கு திரும்புகிறார்கள் ராணி. ஆறுமாத சந்தோஷ வாழ்க்கை இந்த பிரிவில் அவளுக்கு ஆற்றமுடியா சங்கடத்தைக்கொடுக்கிறது. பிறந்த வீட்டிற்கு 3 மாதம் வந்து தங்கிக்கொள்கிறாள். அங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இந்த மூன்றுமாத காலமும் அவளின் நடத்தை யை அசிங்கப்படுத்தி இவளின் குடும்ப எதிரிகள், அந்த மாமியாருக்கு வாராவாரம் கடிதம் எழுதுகிறார்கள். அப்படி செய்வது மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்தான், அவளுடன் இன்னும் இரண்டு பெண்டுகள். மாமியார் வீட்டில் புகைச்சல் அதிகமாகிறது. அவர்களும் நம்புகிறார்கள். ‘அவ இங்க இருக்கும்போதே அப்டித்தான் இருந்தா, அப்பன் வீட்லன்னா கேக்கவாவேணும்’ இது மாமியார்.

இந்நிலையில் 9 வது மாதம் வளையல் காப்பு (சீமந்தம்) முடிகிறது. மனதில் குமைச்சலுடன் மாமியாளும் நாயகன் வீட்டு உறவினர்களும் கலந்துகொள்கிறார்கள். பத்தாவது மாதம் அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. மூன்றுமாதம் கழித்து சாஸ்த்திரத்திற்கு திருவெண்காட்டுக்கு அழைத்து செல்கிறார் மாமியார். மீண்டும் ஆறுமாதங்கள் சண்டை சச்சரவு, மாமியார் கொடுமை நடத்தையை குத்திக்காட்டி, பச்சையான, கொச்சையான வார்த்தைகள். பச்ச உடம்புக்காரி ஓரளவிற்கு மேல் தாங்கமுடியாமல் அந்த ஒரு வயதை அடையப்போகும் தன் குழந்தையுடன் பிறந்த வீட்டிற்கு வருகிறாள், கணவனும் சேர்ந்து கைவிட்ட நிலையில். அடுத்த ஒரு வருடங்கள் சமாதானப்பேச்சு, இரண்டு மாதம் அங்கே, இரண்டு மாதம் இங்கே. வேலைக்காகவில்லை. அதே கொடுமை. நிரந்தரமாக பிறந்த வீட்டிலேயே தங்கிவிடுகிறாள்.

எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுது பித்தளை சொம்பில் ஜோடித்த கரகத்தை எந்த துணையுமின்றி தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு அரங்கம் அதிர ஆடிய அவளேதான் இப்போது அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாய். அனாதரவான நிலையில். பெற்றவர்கள் தலையில் போட்ட இந்த பாறாங்கல் அவளை தற்கொலைக்குக்கூட தூண்டியது. காப்பாற்றிவிட்டார்கள். ஊர், தெருமக்களின் இழிச்சொற்கள், வாழாவெட்டி என்ற அந்த பட்டம், எதிரி குடும்பத்தாரின் ஏளனச்சிரிப்பு, எல்லாவற்றிற்கும் மேல் இந்த நிர்கதிக்கு துணைநின்ற கணவன், மாமியார் மயிரை அறுக்கவேண்டும் இவை அனைத்தும் சாத்தியப்பட அவள்முன் எதிர்காலம் கனிந்துகிடக்கிறது. ஆனது ஆயிற்று அடுத்தது விவாகரத்து.

கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. எந்த சட்டப் புடுங்கிகளாலும் அந்த 18 வயது நிரம்பாத அந்த அபலைக்கு நீதி கொடுக்கமுடியாத சூழ்நிலை. சீர்வரிசை நகை நட்டில் பாதிதான் திரும்ப வருகிறது. வேறு இம்மியளவுக்கூட அசைக்கமுடிவில்லை. துபாய் துரை ஃபாரின் கிளம்புவதற்கு முன் இன்னொரு இடத்தில் பெண் பார்த்துகொண்டிருப்பதாக கேள்வி. ராணியின் அண்ணணும் தம்பியும் அவனை அடித்து வெளுக்கிறார்கள். மறுபடியும் வழக்கில் சிக்கல். தீர்ந்தபாடில்லை. அவளின் நிலை பார்க்கும் நல்லுள்ளங்களுக்கு பரிதாபம், எதிராளிக்கு இளக்காரம். கூனிக்குருகி வீட்டின் மூலையில் முடங்கியே கிடக்கிறாள். செய்த தவறை உணர்ந்தும் செய்வதறியாது அப்படியே காலத்தை ஓட்ட முனையும் பெற்றோர்கள். எங்கோ ஒரு வெளிச்சம் தெரிந்தது அவளுக்கு. அது....

3 வயது நிரம்பிய தன் மகளை மெட்ரிக் பள்ளியில் சேர்த்துவிட்டாள். தன் படிப்பையும் தொடர்ந்தாள். பத்தாவது, பனிரெண்டாவது... முடிந்தது. அடுத்து ஒரு டிகிரி படிக்கவேண்டும். அவளின் அனைத்து வழிகளுக்கும் உதவ பெற்றவர்கள் தயாராகவே இருந்தனர். டிகிரியும் முடித்தாயிற்று. பிறகு ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டும். ஏதோவொரு வெறி முளைத்துக்கொண்டேயிருந்தது அவளுள். இடையில் துபாய் துரை வரும்போதெல்லாம் ராணியின்  அண்ணன் தம்பிகளிடம் உதைவாங்கி கொண்டுதானிருந்தான். ஐ.ஏ.எஸ் ரெண்டாம்கட்ட தேர்வில் தோல்வி. ஓரளவிற்கு மேல் அவளாலும் முடியவில்லை. அந்த நேரத்தில் நமது ஊரின் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் பணி ஒருவருடத்தில் காலியாகும்போல் தெரிந்தது. பி.பி.டி.கோர்ஸ் சேர சிதம்பரம் செல்கிறாள். வெற்றிகரமாக முடிந்தது. வேலை கிடைக்கவேண்டிய சூழ்நிலை கைகூடியது. அண்ணணுக்காக அதை விட்டுக்கொடுக்கவேண்டிய நிலையும் வந்தது. அப்படியே செய்துவிட்டாள். வேறு என்ன செய்யலாம்....??

தமிழ்நாடு காவல்துறையின் எஸ்.ஐ. பணி தேர்விற்காக விண்ணப்பித்திருந்தாள். அதற்காக அனைத்துவிதத்திலும் தன்னை தயார்படுத்திக்கொண்டாள். எல்லாம் சுபமாக முடிந்தது. சில லகரங்களில் வேலையும் கிடைத்தது. ஒரு புதியதோர் வாழ்க்கை பிறந்தது. ட்ரெய்னிங் இத்யாதிகள் முடிந்து சீர்காழியில் ட்ரெய்னிங் எஸ்.ஜ. அங்கேயே கொஞ்சகாலம் சகவாசம். பெற்றவர்கள் மறுமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார்கள், அவளும். இப்போது எதிராளியாக இருந்த குடும்பங்களும் நெருங்கிவிட்டார்கள். அனைவரும் ஒற்றுமை.  இந்த நேரத்தில் அந்த செய்தி உச்சந்தலையில் இடியை இறக்குகிறது. அவள் மகள் பருவமெய்திவிட்டாள். அனைவரும் நொடிந்துபோனார்கள்.

கையை பிசைந்துகொண்டிருந்த பெற்றோர்கள் ஒரு வருடம் பொறுத்திருந்துவிட்டு நம் ராணிக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராணியின் விருப்பப்படி அவளே தேர்ந்தெடுத்த அல்லது காதலித்த வரனுக்கு அவளை கட்டிக்கொடுக்கிறார்கள். எல்லாம் சுபம்.

இது லட்சத்து சொச்சம் டெம்ப்ளேட் கதைகளில் துவைத்து காயப்போட்ட  சம்பவமாக இருக்கலாம். ஆனால் இதுவும் உண்மை. இப்போது ராணி நாகை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர். அந்த துபாய் துரை இன்னொரு திருமணம் முடித்துவிட்டு எங்கோயிருக்கிறான். இந்நிலையில் அவனை ஸ்டேஸனில் வைத்து மானியிலேயே உதைக்க அவளால் முடியும். ஆனால் அவள் அப்படியில்லை.


..

Friday, December 24, 2010

மார்கழி மகோற்சவம்

இந்த மாதத்து காலைகள் இப்படித்தான் விடிகின்றன. வாசல் முருங்கை மரத்தில் அடைந்த கோழிகள் எழுந்துவர ஆறு ஆறரை ஆகிவிடுகிறது. உடலில் போர்த்திய போர்வையின் கதகதப்பை எரித்துக்கொண்டிருக்கிறது குளிர். குடிசைக்குள்ளிரங்கும் பனித்தூரல் பூனைகளின் உறக்கத்தைக்கூட கொஞ்சநேரம் வேடிக்கைப்பார்க்கிறது. முகனைப் பிள்ளையாரை துயிலெழுப்ப 4 மணிக்கே ஆயத்தமாகின்றனர் மைக்செட் காரர்கள். ‘கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?‘  மதுரை சோமுவின் குரல் அதிகாலைக் கனவினை முருகன் பக்கம் திருப்ப முயல்கிறது. போதாக்குறைக்கு ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ’ நாகேஷின் நடுங்கும் குரலில் திருவிளையாடல் வேறு. எப்பூவும் சூடாத கோலங்கள் இப்பொழுதான் சுமங்கலி வேடம் கொள்கிறது. மேலும் மழைவேறு பெய்தால் கேட்கவாவேண்டும்? தாழ்வாரத்தில் கட்டிவைத்த தூங்குமூஞ்சி சுப்பிக்கட்டுகள் மிதந்துபோகும். அடுப்பில் வறட்டித் துண்டுடன் காடா விளக்கில் மண்னெண்ணையை ஊற்றிப் பற்றவைக்கும் அம்மாவிடம் உதைவாங்கும் புகை, தென்னங்கூரையினூடே மலையைக் குடையமுனையும் மேகமாய்க் கடப்பதும் ஒரு கவர்ச்சிதான். விளாமிச்சைவேருக்கு விடுதலைக் கிடைத்து காய்ந்துகிடக்கும். வாசலில் சாணந்தெளித்து கூட்டவும், பெருக்கவும் தேவைப்படும் அதிகாலைப்பொழுது மழைகூட்டலில் அடைந்து போனதில் இன்னும் வேலைமிச்சம். அப்பாக்களின் தேநீர் கடைகள் அப்படியல்ல, எப்போதும் போலவே காதொட்டி முண்டாசு கட்டின தலைகளுடன் நிறைந்தோடும். மாட்டுத் தொழுவங்களின் நசநசத்துப்போன போன நாத்தம் வீதியெங்கும் விரவிக்கிடக்கும். கொஞ்சம் கொஞ்சம் தலைக் காட்டும் கதகத கதிரொளி தெருக்குழாய்களை நிழற்கோடாக்கிச் சிரிப்பதுகூட அழகுதான். நிற்க


அந்தக்கரையில் கூடின அலைகளின் நுரைக் குமிழ்கள் இன்னும் உடையவில்லை. அந்தக்கூடத்தில் சூழ்ந்த அனைவரின் மூச்சுக்காற்றும்கூட இன்னும் அங்கேயேத்தான் இருக்கும். மார்கழிக்குளிரில் ஒரு தந்திக்கம்பியில் ஒட்டியொட்டி அமர்ந்திருக்கும் குருவிகளை பார்த்திருக்கிறீர்களா? அந்த உடற்சூட்டில் ஒளிந்துகிடக்கும் நட்பெனும் செருக்கை உணர்ந்ததுண்டா? வாருங்கள் நமது ஈரோடு சங்கமத்திற்கு. ஒரு சேர கரம் கோர்க்கலாம். யார் யாருக்கோ எதெதுக்கோ பனிக்கும் கண்கள் நமக்கும் இந்நிகழ்வில் பனிக்கட்டும். மின்னஞ்சல் வழியும், அலைபேசிகள் வழியும் வந்துகுவியும் வாழ்த்துக்களும், வருகையை உறுதிப்படுத்துவதும் எங்களுக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அரங்கு இந்த ஜனத்திரளை தாங்குமா என்பதை பயத்துடனும் எதிர் நோக்குகிறோம். எப்படியாயினும் இதுவொரு மார்கழி மகோற்சவம்தான்.


.

Friday, December 10, 2010

காஞ்ச மலர்

எந்த திசையுமின்றி விசைகளுக்கேற்ப ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. பறவையன்றி, விமானத்தின் நிழல்போல ஒரு செயற்கை நேர்கோடு பின்தொடர்ந்தே வருகிறது. குருவிகள் இறந்தபின்னும் கூண்டுக்குள் சிதறிக்கிடக்கும்  இரைகள்போல எதோவொன்று இருக்கத்தான் செய்கிறது. எதேச்சையாக பார்க்கின்ற ஓர் உயிரின் மீதான பரிவும் பச்சாதாபமும் ஆயிரம் மரங்களில் தன்னுடைய வசிப்பறியும் கோடைக்கால பட்சிகளாய் அமர்ந்துகொண்டு பழையதை உடைத்துக்காட்டுகிறது.

அந்த இலுப்பைத் திடலில் சுள்ளிப் பொறுக்கும் பெண்களுக்கும், காலைநேரத்தில் நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் செய்து உடலைக்கரைக்கும் ஜாம்பவான்களுக்கம்,  அருகிலுள்ள சாராயக்கடையில் மொய்க்கும் ஈக்களுக்கும்கூட அவளை நன்றாகவே தெரியும். நான் பார்க்கும் பொழுதுகளில் எப்போதும் ஒரு இலுப்பை மரத்தை உதைத்துக்கொண்டேயிருப்பாள். புழுதியில் கருத்துப்போன நாடா அறுந்த பாவாடையும், அதன்மேல் இறுக்கி கட்டப்பட்ட ஒரு சணல் கயிறும், ஜாக்கெட் என்று சொல்லமுடியாதபடிக்கு ஆங்காங்கே உறிந்து தொங்கும் ஏதோவொரு மேலங்கியும் அவளின் அடையாளத்திற்கு போதுமானது. பள்ளிப்பருவத்தில் அதன் பக்க மைதானத்தை மேயும்  இளம்பிஞ்சிகளுக்கு அவள் ஒரு பொருட்டல்ல.

ஒருகட்டத்தில் அவளை அன்றாடம் காண்பது என் வழக்கமாயிற்று. மரத்தை அவள் உதைக்கும்போது வசை வார்த்தைகள் சரமாரியாக வந்துகொண்டேயிருக்கும். கண்டிப்பாக அவள் ஒரு ஆண்மகனை உருவகப்படுத்திதான் மரத்தினை உதைத்திருக்கிறாள். சரிதான் எத்தனைப் பெண்களுக்குத்தான் தைரியம் இருந்திருக்கிறது புத்தி சுவாதீனத்துடன் ஓர்  ஆடவனை  உதைக்க? அவளைக் கடந்தபின்பும் வெகுநேரம் அவளிடமே மனது சுற்ற ஆரம்பித்தது. இவள் மட்டும் ஏன், இப்படி, எப்படி, உண்டு, உடுக்க என்ன செய்வாள்? எத்தனையோ கேள்விகள் அலைந்துகொண்டேயிருக்கும். ஒருநாள் மாலைவேளையில்தான் கவனித்தேன். எவனோவொருவன் ஒரு பாக்கெட்டை (சாராயம்) அவளிடம் கொடுத்தான். வாஞ்சையுடன் அவரசமாக மடிக்குள் புதைத்துக்கொண்டாள். மறுபடி அவன் நின்றானா போய்விட்டானா என்பதை கவனிக்கவில்லை.

அருகிப்போன மானுடப்பண்பு எங்கும் கோலோச்ச இனியேதும் காலமிருக்கிறதாயென்ன? கொஞ்சமாக அவளை கவனிக்கத் தொடங்கினேன். அவள் உடலில் மாற்றம். சிறுது காலம் கழித்து அவள் கைகள் நிறைய பழைய வளையல்களை அணிந்திருந்தாள். நெற்றியில் எதோ கொஞ்சம் சிகப்பு நிறம். முதலில் ரத்தமாக இருக்குமென்று நினைத்தேன். இல்லை. அவள் உடலில் வயிற்றுப்பகுதி பெரிதாக இருந்தது.  எனக்கு புரிந்தது, அவள் கருத்தரித்திருந்தாள். நாடெங்கிலும் அலையும் காமக்கண்களுக்கு ஏது பஞ்சம், எவனோ ஒருவன் காரணமாக இருக்கலாம். ஒரு புத்தி சுவாதீனமற்றவளை தின்றுப்பார்த்தவன் எந்தக்கொம்பனாக இருப்பான்? என்னால் யூகிக்க முடியவில்லை. மீண்டுமொரு இடைவெளி. பிறகு அவளைப் பார்த்தநாள் ஆற்றமுடியாத பாரத்தை கொடுத்தது. அவள் இறந்துகிடந்தாள், ஈக்கள் மூடிய உடலுடன். அருகில் கிடந்த அவளின் கிழிந்த ஆடைகளெங்கும் மர்மக்கறைகள். அந்த இலுப்பை மரம் அப்படியேத்தான் இருந்தது.



.

Tuesday, December 22, 2009

நன்றி நவிலல்...

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா? என்று யாரோ (???) கேட்டதுபோல அவ்வப்போது மனதில் தோன்றிய ஐயப்பாடுகளையும் தாண்டி எங்களின் மண்ணில் இந்த மாபெரும் பதிவர்கள், வாசகர்கள் சங்கமத்தினை சிறப்புறச் செய்த எல்லோரையும் முதற்கண் வணங்குகின்றேன்.

இம்மாபெரும் நிகழ்வினை எனது கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லையென்றே சொல்லவேண்டும். ஆரம்பத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது 30 நபர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்று தெரிகிறது என்றே பேசினோம். பிறகு நாட்கள் நகர நகர எங்களுக்கே கொஞ்சம் பயம் எடுக்கத்தான் செய்தது. எங்களது ஏற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்துமா என்ற அளவிலும் சந்தேகங்கள் இருந்தன. இப்போது வருகைதந்தோர் ஒவ்வொருவரும் கூறும் போது ஓரளவிற்கேனும் எங்களது உழைப்பு பயனுள்ளதாகிவிட்டது என்ற திருப்தியும் ஒட்டிக்கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற தங்களது முழு ஒத்துழைப்பினையும் மற்றும் எங்களுக்கான பதிவர் சந்திப்பு பட்டையினை தங்களது வலைதளத்தில் வெளியிட்டு அனைவருக்கு இதுபோன்றதொரு இனிமையான தருணம் அமைய வாய்ப்பு நல்கிய தமிழ்மணம் திரட்டி காசி அய்யா அவர்களுக்கு எங்களது நன்றிகளை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு என்றவுடனே வருகைதர ஒப்புக்கொண்ட சீனா அய்யா, மற்றும் புலவர் முனைவர். இராசு அவர்களுக்கும் நாங்கள் நன்றிகளை நவில கடமைப்பட்டுள்ளோம்.

எங்களது உழைப்பு என்பது இந்நிகழ்வில் மிக மிக குறைவுதான். ஏனெனில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார்கள் பெரியோர்கள். ஆனால் திரைகடல் தாண்டியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அய்யா பழமைபேசி, நாகா, செந்தில்வேலன், உடுமலை.காம் சிதம்பரம் போன்றோர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?. மகிழ்கிறோம் அன்பர்களே....

ஏதோவொரு சந்திப்பு நடைபெறுகிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்று சிரத்தையெடுத்துக்கொண்டு வருகைபுரிந்த சென்னை, திருப்பூர், கோவை, மதுரை, கரூர் உடுமலைப்பேட்டை, திருச்செங்கோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதி பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.

சங்கமம் குறித்து முகப்பு பக்கத்தில் வெளியிட்ட தமிழ்மணம், சங்மத்தின் முழுக் காணொளியைவெளியிடவிருக்கும் சங்கமம் லைவ் இணையதளம், படப்பதிவு செய்த ஸ்டார் வீடியோஸ்ஆகியோருக்கும் நன்றிகள்.

குறிப்பாய் இம்மாபெரும் விழாவிற்கு வருகைதந்த பெண் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.


நன்றி..நன்றி...நன்றி....

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.


சில நயம்மிகு நிழற்படங்களைக் காண இந்தச் சுட்டியை அழுத்துங்கள்

சங்கமம் குறித்த மேலதிக தகவல்களுக்கு....
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்


  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO