க.பாலாசி: மார்கழி மகோற்சவம்

Friday, December 24, 2010

மார்கழி மகோற்சவம்

இந்த மாதத்து காலைகள் இப்படித்தான் விடிகின்றன. வாசல் முருங்கை மரத்தில் அடைந்த கோழிகள் எழுந்துவர ஆறு ஆறரை ஆகிவிடுகிறது. உடலில் போர்த்திய போர்வையின் கதகதப்பை எரித்துக்கொண்டிருக்கிறது குளிர். குடிசைக்குள்ளிரங்கும் பனித்தூரல் பூனைகளின் உறக்கத்தைக்கூட கொஞ்சநேரம் வேடிக்கைப்பார்க்கிறது. முகனைப் பிள்ளையாரை துயிலெழுப்ப 4 மணிக்கே ஆயத்தமாகின்றனர் மைக்செட் காரர்கள். ‘கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?‘  மதுரை சோமுவின் குரல் அதிகாலைக் கனவினை முருகன் பக்கம் திருப்ப முயல்கிறது. போதாக்குறைக்கு ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ’ நாகேஷின் நடுங்கும் குரலில் திருவிளையாடல் வேறு. எப்பூவும் சூடாத கோலங்கள் இப்பொழுதான் சுமங்கலி வேடம் கொள்கிறது. மேலும் மழைவேறு பெய்தால் கேட்கவாவேண்டும்? தாழ்வாரத்தில் கட்டிவைத்த தூங்குமூஞ்சி சுப்பிக்கட்டுகள் மிதந்துபோகும். அடுப்பில் வறட்டித் துண்டுடன் காடா விளக்கில் மண்னெண்ணையை ஊற்றிப் பற்றவைக்கும் அம்மாவிடம் உதைவாங்கும் புகை, தென்னங்கூரையினூடே மலையைக் குடையமுனையும் மேகமாய்க் கடப்பதும் ஒரு கவர்ச்சிதான். விளாமிச்சைவேருக்கு விடுதலைக் கிடைத்து காய்ந்துகிடக்கும். வாசலில் சாணந்தெளித்து கூட்டவும், பெருக்கவும் தேவைப்படும் அதிகாலைப்பொழுது மழைகூட்டலில் அடைந்து போனதில் இன்னும் வேலைமிச்சம். அப்பாக்களின் தேநீர் கடைகள் அப்படியல்ல, எப்போதும் போலவே காதொட்டி முண்டாசு கட்டின தலைகளுடன் நிறைந்தோடும். மாட்டுத் தொழுவங்களின் நசநசத்துப்போன போன நாத்தம் வீதியெங்கும் விரவிக்கிடக்கும். கொஞ்சம் கொஞ்சம் தலைக் காட்டும் கதகத கதிரொளி தெருக்குழாய்களை நிழற்கோடாக்கிச் சிரிப்பதுகூட அழகுதான். நிற்க


அந்தக்கரையில் கூடின அலைகளின் நுரைக் குமிழ்கள் இன்னும் உடையவில்லை. அந்தக்கூடத்தில் சூழ்ந்த அனைவரின் மூச்சுக்காற்றும்கூட இன்னும் அங்கேயேத்தான் இருக்கும். மார்கழிக்குளிரில் ஒரு தந்திக்கம்பியில் ஒட்டியொட்டி அமர்ந்திருக்கும் குருவிகளை பார்த்திருக்கிறீர்களா? அந்த உடற்சூட்டில் ஒளிந்துகிடக்கும் நட்பெனும் செருக்கை உணர்ந்ததுண்டா? வாருங்கள் நமது ஈரோடு சங்கமத்திற்கு. ஒரு சேர கரம் கோர்க்கலாம். யார் யாருக்கோ எதெதுக்கோ பனிக்கும் கண்கள் நமக்கும் இந்நிகழ்வில் பனிக்கட்டும். மின்னஞ்சல் வழியும், அலைபேசிகள் வழியும் வந்துகுவியும் வாழ்த்துக்களும், வருகையை உறுதிப்படுத்துவதும் எங்களுக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அரங்கு இந்த ஜனத்திரளை தாங்குமா என்பதை பயத்துடனும் எதிர் நோக்குகிறோம். எப்படியாயினும் இதுவொரு மார்கழி மகோற்சவம்தான்.


.

16 comments:

vasu balaji said...

ஜமாய்ங்க. வாழ்த்துகள்.

பிரபாகர் said...

நாளை மாலை சந்திப்போம் இளவல்...

பிரபாகர்...

Unknown said...

மார்கழி பஜனை உண்டாங்க!

சூப்பர். நல்லா என்ஜாய் பண்ணுங்க.

இடத்தைப் பத்தி கவலைப்படாதங்க. பக்கத்தில ஒரு பெட்டிக் கடையோ, டீ கடையோ இருந்தா, பாதி சனம் தானா அட்ஜஸ்ட் பண்ணிக்கும்.

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் பாலாசி

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் பாலாசிhttp://kudanthaiyur.blogspot.com/2010/12/2.html

பிரதீபா said...

இப்போ தான் எனக்கு சங்கமத்த ரொம்ப மிஸ் பண்ற பீலிங் ரொம்ப வருதுங்க.நான் அங்க இருந்தா அப்படியே எங்க ஊருக்கும் (கோபி) எல்லாரையும் ஒரு ரவுண்டு கூட்டிட்டு போயி காமிச்சிருப்பேன்..

பிரதீபா said...

//உடலில் போர்த்திய போர்வையின் கதகதப்பை எரித்துக்கொண்டிருக்கிறது குளிர்// - ரசித்தேன் ரொம்ப.

பிரதீபா said...

//அடுப்பில் வறட்டித் துண்டுடன் காடா விளக்கில் மண்னெண்ணையை ஊற்றிப் பற்றவைக்கும் அம்மாவிடம் உதைவாங்கும் புகை, தென்னங்கூரையினூடே மலையைக் குடையமுனையும் மேகமாய்க் கடப்பதும் ஒரு கவர்ச்சிதான்// - சான்சே இல்லைங்க. இனிமே இப்படி ஒரு காட்சி பாக்கவே முடியாதுங்க.

பிரதீபா said...

//காதொட்டி முண்டாசு கட்டின தலைகளுடன்// - அப்படியே கிராமத்து பனிக்காலையை கண்முன் நிறுத்தி விட்டீர்கள்.

பா.ராஜாராம் said...

அருமையாய் எழுதி இருக்கீங்க பாலாசி!

வாழ்த்துகளும்!

வினோ said...

அருமையா வந்திருக்கு நண்பரே...வாழ்த்துக்கள்...

vasu balaji said...

இந்த வருடத்தின் ஐம்பதாவது இடுகை உற்சவமாக அமைந்தது. வாழ்த்துகள்.

பத்மா said...

பாலாஜி all the best ...
மார்கழி வர்ணனை வழக்கம் போல் கிளாஸ் ...
கோலத்தில் பூ சொருகி விட்டு வந்து பார்த்தால் இது ...சுமங்கலி கோலம் கொள்ளும் கோலங்கள் ...
அழகு பாலா

'பரிவை' சே.குமார் said...

சூப்பர். நல்லா என்ஜாய் பண்ணுங்க.

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

Anonymous said...

எத்தனை அழகுணர்ச்சியோட எழுதியிருக்கீங்க பாலாசி...

//யார் யாருக்கோ எதுக்கோ பனிக்கும் கண்கள்//

சந்தோஷமான நிகழ்வு தான் என்றாலும் இந்த வார்த்தை படிக்கும் போதே எட்டிப்பார்த்தது ஒரு துளி கண்ணீர்

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO