க.பாலாசி: சிந்தனை...
Showing posts with label சிந்தனை.... Show all posts
Showing posts with label சிந்தனை.... Show all posts

Thursday, January 21, 2010

பிஞ்சிற் பழுத்த...

உள்ளத்து ஆளுமைகளை ஆசுவாசப்படுத்தி அமர்த்திவிட்டு, அதனுள் படிந்திருக்கும் கசடுகளை அவ்வப்போது அகற்றவேண்டிய கட்டாயம் எனக்கும் இருக்கிறது. எங்கோ பார்த்தோ பழகியோ நமக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் அவ்விதமான படிமங்களை பறித்தெரிவதற்கான நேரமும் காலமும் சுலபமாய் அமைந்துவிடுவதில்லை. எனக்கான இந்த வாய்ப்புகள்போல் (பகிர்தல்). சாம்பலைத்தின்று, வெளியே வெண்ணைகளை பூசிக்கொள்ளும் சக மனிதர்களையும் நம் கண்கள் அவ்வப்போது உள்ளிடுகைச்செய்யும்போது ஏற்கிறோமோ அல்லது ஏற்றுகிறோமோ ஆயினும் கடந்துவிடுகிறோம் அல்லது கடத்திவிடுகிறோம். வெண்ணையைத்தின்றாலும், சாம்பலைத்தின்றாலும் செல்லுமிடம் எதுவாக இருக்குமோ அதுவே மடியலுக்கு செல்லும்பாதையாகவும் அமையும். சிறிது ஆயுட்காலங்கள் மட்டும் வித்யாசப்படலாம்.

சமீபத்திய எனதூர் பயணத்தில் நான் கண்டறிந்த விடயங்கள் கொஞ்சம் மனதை திகைக்கவும் இளைஞர்களில் நிலையைக்கண்டு திகட்டவும் செய்தது. என் வீட்டுக்கு எதிர்வீட்டுப்பையன் வயது 19-20 இருக்கும். நான் தூக்கிவளர்த்தவன் என்பதை சொல்வதற்கும் மெல்லக் கூசவும் செய்கிறது. இன்றைய நாளில் வாரத்திற்கு இரண்டுநாட்களுக்கு குறையாமல் மது அருந்துகிறான். அவன் மட்டுமல்ல. எங்களது தெருவிலுள்ள மற்றய நாலைந்து இளைஞர்களும் (சிறுவர்கள்) சேர்ந்து. கல்லூரியில் முதலாமாண்டு தொழில்நுட்பம் படிக்கிறார்கள். தொழில்நுட்பத்தைதான் படிக்கிறார்களா? என்ற கேள்வியும் அவர்களின் செயல்கண்டு எழுந்துபார்க்கிறது.

நானும் கல்லூரிப் பயிலும்போது இவ்வாய்ப்பினில் மாட்டி மங்கியிருக்கிறேன். இந்தப்பழச்சாறும் புளிக்குமென்று முதல்நாளே அகற்றியெரிந்திருக்கிறேன். வீட்டுக்கொரு குடிமகனிருந்தாலே நாடு நலம்பெறும் என்ற நோக்கின் அடிப்படை அறிவினால் எனது தந்தைக்கு அவ்விலாக்காவை தாரைவார்த்துவிட்டேன். எனது தந்தைக்கு அப்பழக்கம் உண்டு. இருந்தாலும் அவரின் செய்கை மன்னிக்கத்தக்கது (என்னால் மட்டிலும்கூட இருக்கலாம்). பகற்பொழுதினில் உழைத்து உடல்வலுவை வியர்வைகள் வெளிக்கொணர்வதால் அவருக்கந்த இளைப்பாற்றல் தேவைப்படலாம்...படலாம்... அதனால் என்மனம் அவரின் செய்கையை ஒத்துக்கொள்கிறது தவறுதானென்றாலும்.

ஆனால் இந்த இளைவர்களுக்கு என்னக்கேடு என்றுதான் தெரியவில்லை. அவர்கள் குடிப்பதற்கான காரணமாய் ஏதோவொன்று இருக்கவேண்டும். (நொண்டிச்சாக்காக). சிறிதுநேர மனமகிழ்வுக்காக என்கிறார்கள். மஞ்சள்நிற சிலேடைகளின் சிலுசிலுப்பில், பிஞ்சில் வெதும்பி குறைநேர சிற்றிந்தின்பத்திற்காட்பட்டு விலைமாதுவின் வியர்வைகளை விலைக்குவாங்கி விலங்காகும் என்வயதொத்த ஒரு ஆண்மகனின் மனநிலையும் இதுவும் ஒன்றன்றி வேறெப்படி எண்ணவென்று தெரியவில்லை. இதற்கு வழிகாட்டுதலாக சில பெரியவர்களும் அமைந்துவிடுகிறார்கள். அப்துல்கலாம் காணச்சொன்ன கனவு இவ்வாறு மதிமயங்கி காணும் கனவாகவா இருக்கப்போகிறது??


Monday, January 11, 2010

கழுதைகளுக்கு தெரியுமா?

சக மனிதனொருவன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், தனது வெள்ளை வேட்டிச்சட்டையில் படப்போகும் ரத்தக்கரைகளுக்கு பயந்தோ அல்லது அசிங்கப்பட்டோ தூரநின்று தொலைப்பேசிவழி அடுத்தவர்களுக்கு தகவல்கொடுக்கும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதே காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களது உதவியாளர்கள், மற்றும் இன்னபிற அரசுத்துறை அதிகாரிகள், தீண்டத்தகாவன் என்பதுபோல் தண்ணீரை தூரநின்று ஊற்றும் ஒரு சமூகப்பிரஜை ஆகிய இவர்களின் ரத்தசொந்தமொன்றுக்கு இவ்வாறு நடந்திருந்தால், இதையேத்தான் செய்துகொண்டிருந்திருப்பார்களா? என்று எண்ணத்தூண்டுகிறது சமீபத்திய திருநெல்வேலி நிகழ்வு. இத்தனை வாகனங்களிருந்தும் அவசரகால ஊர்திக்காக காத்திருந்துதான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவேண்டுமென்ற ‘விடாப்பிடியான கொள்கையுடன் நின்றிருந்தவர்களை எப்படி வசை பாடினால் என்ன?


புரியாதவர்கள் இந்த காணொளியைப் பார்க்கவும்.


அவ்வாறு அவர் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே ஜீவனற்றுகிடந்த மரக்கட்டைகளுக்கும், உயிர்வலியை அல்லது துடிப்பை சகித்துக்கிரகித்துக் கொண்டிருந்த இவர்களுக்கும் இருக்கும் வித்யாசங்கள் வெகுக்குறைவாகே தெரிகிறது.


வழக்கமாய் பொதுமக்கள் செய்யும் காரியத்தைதான் உயர்மட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் செய்திருக்கிறார்கள் பூசிமொழுகிய ஊடகப்பார்வையுடன். இதில் கவனிக்கவேண்டிய விசயம் இதை ‘தத்ரூபமாக ஒளிப்பதிவு செய்தவருக்கும் மனிதாபிமானமோ வேறெந்த மண்ணாங்கட்டியோ இல்லாமல் இருந்திருக்கிறது.


ஒரு நாய்க்கு அடிப்பட்டால் கூட இன்னொரு நாய் அதனருகில் நின்று அழும். இன்னொரு காக்கைக்கு காலொடிந்திருந்தால் சுற்றிலும் காக்கைகளின் கூட்டம் அலப்பறியும். ஆனால் ஒரு மனிதன் அடிப்பட்டாலோ, அல்லது உயிர்வலியில் துடித்தாலோ நானா? நீயா? என்ற போட்டியிலோ அல்லது சுயநலப்புண்ணாக்கிலோ அனைவரும் வேடிக்கைப் பார்ப்பது எவ்வளவு கேவலமான செயல். அதுசரி கழுதைகளுக்கு தெரியுமா???



Thursday, December 17, 2009

வலைச் சுரைக்காய்...

சென்றவாரம் தினசரி பத்திரிக்கைகளில் ஒரு செய்தி.


‘குடிபோதையில் கணவனை கொன்ற மனைவி


இதென்ன புதுமை? செய்தி அச்சுப்பிழையோ என்றவாறே ஆராய்ந்தேன். உண்மையாகவே இந்த வீரப்பெண்மணி தனது கணவன் இன்னொருத்தியுடன் இருந்ததாக சந்தேகமடைந்து வெட்டிக்கொன்றுள்ளார். அவனும் அப்படித்தான் இருந்திருக்கிறான். இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் இருவருமே மது அருந்துபவர்கள். கூலித்தொழிலாளிகள். செய்தது சரியோ தவறோ அந்த பெண்ணை பாராட்டியே ஆகவேண்டும்.


•••••••••


அண்மையில் எனது கணிணி வைரஸ்களால் வலுவிழந்ததற்கு காரணமாக வன்பொருள் வல்லுனர்களால் சொல்லப்பட்டது சீனாவிலிருந்து வந்த மின்னஞ்சல்கள். ஒருவழியாக அவைகளை ஒருநாள் ஒருவேளை அடையாள உண்ணாவிரதமிருந்து அகிம்சை வழியில் ‘கொலைசெய்தேன்(தோம்).


சீனர்களின் கண் இப்போது நமது இரசாயன சந்தை. நானும் இரசாயனம் சார்ந்த துறையிலேயே பணிபுரிவதால் தெரிந்துகொண்டேன். இங்கே உற்பத்தி செய்யப்படும் இரசாயனங்களின் விலைகளை காட்டிலும் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் இரசாயனங்களின் விலை மிகக்குறைவு (அனைத்து வரிகள் மற்றும் செலவுகள் உட்பட) குறிப்பாக துணிச்சந்தைக்கு தேவைப்படும் இரசாயனங்கள். இவைகள் இலங்கை வழியாக நமது சென்னைத் துறைமுகங்களை வந்தடைந்து மற்ற மாநிலங்களுக்கும் வழிந்தோடுவதாக தகவல். நமது இரசாயன சந்தையும் அதன் விலைகளுடன் போட்டியிட முடியாமல்தான் உள்ளது. நமது பிரதமர் அடுத்தமுறை வெள்ளைமாளிகைக்கு விருந்தோம்பலுக்குச் செல்லும்பொழுது இதுபற்றி ஒபாமாவின் இரண்டு குழந்தைகளுடன் விரிவாக உரையாட உள்ளார். மதுரை நெஞ்சங்கள் அஞ்சவேண்டாம்.


••••••••


பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோவில்

தாயத்துடன். (!?)


•••••••••


பருத்தி பயிரப்படுவதில் ஆரம்பித்து அது நமது உடலுக்கு உடையாகும் வரை குறைந்தது 30 விதமான இரசாயனங்களை உள்வாங்கிக்கொண்டுதான் வெளிவருகிறது. ஆடைகளின் தரம், தன்மை, நிறம் இவைகளைப்பொருத்து அவைகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், சாயங்கள் கூடவோ குறையவோ செய்யலாம். இதில் குழந்தைகளுக்கான ஆடைகளை குறைவான செயல்திறனுடைய இரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன.


••••••••••

Friday, December 4, 2009

மழலைகளும் மரணங்களும்...

வேதாரண்யத்தில் நடந்த பள்ளி வாகன விபத்திற்கும் (இதுவரை) 9 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் வழக்கம்போல் நமது முதல்வர், முரசொலியில் ஒரு கவிதையும், திரைத்துறைக்கு ஒரு காவியமுமாக எழுதி மௌன கண்ணீரஞ்சலி செலுத்திவிடுவார். உடனிருப்புக்கள் (பிறப்பு) யாரும் கவலைக்கொள்ள தேவையில்லை. அதேபோல் ரத்தத்தின் ரத்தங்களுக்காக கொடநாடு நிலத்திலிருந்தபடி 200 பக்க ஆறுதல் அறிக்கையை எதிர்கட்சித்தலைவர் தயார் செய்துவருவதாக உளவுத்துறை, கோபாலபுரத்தை உசுப்பியுள்ளதாகவும் தகவல். விரைவில் அனைத்து அரசியல்வாதிகளும் நாகப்பட்டிணத்திற்கு அஞ்சலி செலுத்தவும், ஆறுதல் கூறவும் இழப்பீடு வழங்கவும் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

இந்த விபத்திற்கு காரணம் ஓட்டுனர் உரிமம் பெறாத ஓட்டுனரே என்று, மக்களும் போக்குவரத்துதுறை அதிகாரிகளும் கண்டுபிடித்திருக்கின்றனர்(!?). இன்னொரு சாரார் அந்த வாகனத்தில் 15 குழந்தைகளே பயணம் செய்யமுடியுமென்றும், மொத்தம் 22 குழந்தைகள் அவ்வாகனத்தில் இருந்ததாகவும் வருத்தப்படுகிறார்கள் மற்றும் பள்ளிவாகனம் சரியாக பராமறிக்கப்படாததும் காரணமாம். பள்ளிக்கல்வித்துறையும், போக்குவரத்துதுறையும் ஒருவரையொருவர் அயோக்கியன் என்று உண்மைகளை உளரிவருகின்றனர். எனது எண்ணம் 16லிருந்து 22வது குழந்தை வரை அந்த வாகனத்தில் ஏற்றிய பெற்றோர்களுக்கு ஏன் இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் போனது?

எத்தனையோ மூன்று சக்கர வாகனங்கள் எல்லைக்குமீறிய அளவில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு போவதை பார்த்திருக்கிறோம். இத்தனைக் குழந்தைகளை ஏற்றிய ஒரு வாகனத்தில் கடைசி குழந்தையாக தன்னுடையதையும் கடமையே கண்ணாக கடைசியில் ஏற்றிவிடும் பெற்றோர்கள் கொஞ்சமாவது சிந்தித்து பார்க்கவேண்டும். இத்தனை நெரிசலில் நம் பிள்ளையையும் ஏற்றிவிடுகிறோமே, இவ்வாகனம் விபத்துக்குள்ளானால் என்ன ஆகும் என்ற எண்ணம் சிறிதேனும் அவர்களுக்கு இருக்கவேண்டும். எத்தனை பண, மன துயர்களுக்கிடையே படிக்க வைத்தாலும் ஒரு குழந்தையின் உயிர் எவ்வளவு விலைமதிப்பில்லாதது. என்ன சொல்லி என்ன பயன். கந்தனுக்கு புத்தி கவட்டியில் என்பார்கள். இதேபோல அடுத்த விபத்து நடந்தாலும் எவரும் கண்டுகொள்ளப்போவதில்லை.


புளியங்காய்க்கு புளிப்பை ஏற்றிவிடவா முடியும்?


Saturday, November 28, 2009

அதிகாரம்...


அதிகாரம் எனும் ஆளுமையை உட்செலுத்தி எந்த உயிரை இன்புறச்செய்யமுடியும்? இந்த ஆதங்கம் எப்போதும் என் மனதில் இருப்பதுண்டு.

நேற்றுவரை அடிமைத்தனத்தில் அடிபட்டு, இன்று அதை அறுத்தெறிந்த பிறகும், அதே அதிகாரமிட்டு அடிமைப்படுத்தும் எண்ணம் நமக்குள்ளும் எங்கிருந்தேனும் ஆட்கொண்டுவிடுகிறது (விட்டது). காரணமாய் சில காழ்ப்புணர்ச்சிகளும், புழுங்கல்களும் இருக்கலாம். இல்லையென்றால் இதுவரையடைந்த அவமானங்களும்...இன்னும் சில...களும்...

அதிகாரம், ஆணவம், அடிமைபடுத்துதல் இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த வீடாகத்தான் இருக்கவேண்டும். எதிரெதிர் வீடாக இருக்க வாய்ப்பில்லை. பூவுடன் சேர்ந்த நாரைப்போல ஒன்றைவிட்டு ஒன்றகன்றாலும், ஒன்றின் நாற்றம் மற்றொன்றையும் இயல்பாய் தொற்றிவிடுகிறது. எந்த ஓர் உயிரின் மீது தேவையற்ற அதிகாரம் செலுத்தப்பட்டாலும் அந்த உயிர் சிறிது சிறிதாக அடிமைப்படுத்தப்படுகிறதென்றே அர்த்தம். அதன் மூலம் அங்கே ஆணவம் தலைக்கேறுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

தன்னுடைய சுதந்திரத்தை அதிகாரத்தினூடே இழந்த மனிதன், வாழ்க்கையின் ஓட்டத்தில் நூறடியோ, அதற்குள்ளாகவோ தாண்டியவுடன் இன்னொருவனிடம் அதே சுதந்திரத்தினை அதிகாரத்தின் வழி பறிக்கிறான். எடுத்துக்காட்டாக இல்லம், இல்லத்தரசி, அலுவலகம், பணியாளர்கள், தொழிலாளர்கள், பிராணிகள் இன்னும்....எங்குவேண்டுமானாலும் மாற்றிப்போட்டுக்கொள்ளலாம்.

பெண்கள் இதில் கொஞ்சம் விதிவிலக்கு. காரணம்...அதிகாரம் அதிகம் மிகைப்பட்டிருக்கும் இடம் ஆண் எனும் ஆணாதிக்கம். பெண்ணாதிக்கம் எனும் வார்த்தையே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையெனலாம் அல்லது இதுவரை நான் அறியாமல் இருக்கலாம்.


எங்கேனும் இழந்த சுதந்திரத்தை சற்றிடவெளியில் வேறொரு இடத்தில் அதிகாரம் மூலமாக, ஒரு மாற்று வெற்றியாக பறித்துக்கொள்ள முயல்கிறவன் இந்த சமுதாயத்தின் சாபக்கேடு என்றே சொல்லலாம். யாம் பெற்ற இவ்வின்பம் பெறுக இவ்வையகம் என்று அதிகாரப் பேயை தேவையற்ற இடங்களில் பிரயோகிக்கும் போது அன்பெனும் அகராதியே அவ்விடத்தில் அழிந்துபோகிறது. இதன் மூலம் சாதித்தது என்னவென்று தேடலைதொடங்கினால் முடிவில் கிடைப்பது அல்லது கிடப்பது மாண்டுபோன மனிதநேயமே.


பறிகொடுத்தவன்

பறிக்கும்போது

பறிகொடுத்தது

பறிக்கப்படுகிறது

பரிவில்லாமல்.


இப்படியே அலையும் அதிகாரத்தின் எல்லை...முற்றடையும் புள்ளிதான் கண்காணும் தூரம்வரை காணவில்லை....


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO