தங்கள் பெண் முதியோர்களை பராமரிக்க தகுந்த முதியோர் இல்லம் கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு சென்னையை அடுத்த குன்றத்தூரில் எழிலார்ந்த இயற்கை நிலையில் மனம் ஒருமுகப்படும் அமைதியான இடத்தில் அமைந்துள்ளது பெண் முதியோர்களுக்கான ஸ்ரீ.........................
மேற்கண்டமாதிரியானதொரு வர்த்தக விளம்பரத்தினை சென்ற ஞாயிறு அன்று கண்கான நேர்ந்தது. இது பெண்களுக்கான முதியோர் இல்லம் என்று ஒரு முத்திரைவேறு. அப்புறம் அவ்விளம்பரத்தில் அந்த ....சாமியாரின் படம். இன்னும் கொஞ்சம் கவர்ச்சியாகவே, அதாவது விளம்பரத்தை பார்த்த மாத்திரத்தில் அங்கே கொண்டுபோய் நம் அன்னைகுலங்களை செர்த்துவிடலாம் என்று தோன்றுகிறமாதிரி....
சரி, என்னுடைய சாடல் முதலில் இம்மாதிரியான நிகழ்வுகளுக்கு காரணம்
* பெற்ற ஒன்றா? அல்லது பிறந்த ஒன்றா? இரண்டா? முன்றா?......
**இம்மாதிரி விளம்பரங்களுக்கு அடிப்படையாக அமைவது எம்மாதிரியான முன்னுதாரணங்கள்?
*** இவ்விளம்பரத்தின் நோக்கம் வருவாய் ஈட்டுதலா? அல்லது பொதுசேவையின் அடிப்படையா? அல்லது பெண்குலங்களின் 33சதவித இடவொதிக்கீட்டின் முன்மாதிரியா?
பெற்று வளர்த்திட்ட என்மகனை,
இங்கு பேணி வளர்ப்பது குற்றமென்றால்,
தாய்க்குலம் மாண்டு மடிவதுவோ?அன்றி
தர்மம் தலைசாய்ந்து வீழ்வதுவோ?
என்னுடையப் பிள்ளைக்குச் சோறிடவும், அவன்
இளைப்பாறி நிற்க இடம் தரவும்
அன்னை யெனக்கிங் குரிமை யுண்டாம், இதை
ஆண்டவன் வந்தாலும் விட்டுக் கொடேன்...
ஆகா என்னே தாயின் கொக்கரிப்பு. அவளின் இன்றைய நிலை?
தடுக்கிவிழும் மகனை
‘சொர்க்கம்’ சீரியலில் பார்கிறாள் தாய்,
கண்ணீர் வழிகிறது,
அருகில் உள்ளோரும்
சேர்ந்து அழுகின்றனர்.
இவையெல்லாம்
முதியோர் இல்லத்தில் நடக்கிறது....
தற்போது பெரும்பாலான தலைமகன், இடைமகன், கடைமகன் என ஒருசில கூட்டமே சேர்ந்து பெற்றவளுக்கு செய்யும் இறுதி மரியாதை இதுவாகத்தான் இருக்கிறது.
உனக்கு கிடைக்கும் மரியாதையை பார்த்து பூரிப்படையும் அவளுக்கு, நீ கொடுப்பது அவ்வளவுதானா? எவ்விடத்தில் உன்னை சுமந்தாலோ அவ்வவிடத்தில் அவளுக்கு நீ இடம்கொடாவிடினும் அதற்கு மேலாவது கொஞ்சம் இடம் கொடுக்கலாமே மனம் எனும் மணிமண்டபத்தில். ஒரு ஓரம் தானே. அவளுக்கு அதுபோதும்.
உன்னை தாங்கிய கைகளுக்கும்,
உனக்காய் தாவிய அவளின் கால்களுக்கும்
நீ தாழ்ந்து கொடுக்கும் அவளுக்கான இடம்
உன்வீட்டு தாழ்வாரமாக கூட இருக்கலாம்.
30வருடம் நமக்காக வாழ்ந்தவள், இன்னும் 3வருடங்களுக்கு நமக்காக வாழாமளா இருந்துவிடப்போகிறாள். நம்மை பெற்றதை விட அவள் செய்யும் பாவம் வேறெதுவாகவும் இருந்திட வாய்ப்பில்லை இப்படிப்பட்ட கல்நெஞ்ச மகனை பெற்றவளுக்கு.
படுக்கையை பகிர்ந்துகொள்ளும் கூடுதல் தகுதிமட்டுமே உடைய மனைவியை தவிர வேறெந்த விதத்தில் தாய் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுகிறாள் என்றுதான் எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் எனக்கு இன்னும் மணமாகவில்லை.
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்தா மட்டும் போதாது, கொஞ்சம் பெற்றவர்களையும் பார்க்கவேண்டும். பொண்டாட்டி கையப்புடிச்சிகிட்டே எங்கல்லாம் போகமுடியுமோ அங்கெல்லாம் போகும்போது கொஞ்சம் நெனைச்சு பாக்கனும், இந்ந கையிக்கும், காலுக்கும் உயிரக்கொடுத்தவளே அவதான்னு. தடவிகொடுக்குறவதான் தாரம், தாங்கி பிடிக்கறவ தாய்தான்.
பெத்தவ போயிட்டான்னா அந்த இடத்துல மனைவி ஒரு பொம்மை மாதிரிதான்.
ஓடு மீன் ஓட
ஒரு மீன் வர
காத்திருக்குமாம் கொக்கு....
உனக்கான காலமும்தான்.
நீ நடந்து பழக
அவள் கானும்
இன்பத்தைவிட
நீ விழாமல் இருக்க
அவள் தவிப்பதில்தான்
இருக்கிறது தாய்ப்பாசம்.
***********