க.பாலாசி: May 2009

Friday, May 15, 2009

விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா?

Prabakaran இந்தக் கேள்விக்கான சரியான விடை நமக்குத் தெரிய வருமேயானால், இலங்கையில் நடக்கின்ற ஒரு இன விடுதலைப் போராட்ட வரலாற்றின் முழுமையான சாரம் நமக்குக் கிடைக்கும். இந்தக் கேள்விக்கான விடையை நோக்கிப் பயணப்படும்போது இலங்கையின் ஆதியான வரலாறு நமக்குத் தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், அந்த வரலாற்று ஆய்வுகளில் ஈடுபடுவது இன்றைய சூழலில் ஒரு தேவையற்றதானதாகவும், எரிகின்ற வீட்டில் எத்தனை ஓடுகள் இருந்தன, அந்த வீட்டை யார் கட்டியது போன்ற பயனற்ற ஆயவுகளாகவே இருக்கும். இருப்பினும், இலங்கையின் ஒரு குறைந்தபட்ச வரலாறு நாம் அறிந்து கொள்ள வேண்டியதே.

போர்த்துக்கீசியர்கள் 1505 ஆம் ஆண்டு வணிக நோக்கில் இலங்கையில் நுழைகிறார்கள், அந்த நேரத்தில் இலங்கையில் மூன்று நிலப்பரப்பு சார்ந்த அரசுகள் இருந்தன. அவை முறையே, கோட்டை அரசு, கண்டி அரசு மற்றும் யாழரசு (சீதாவாக்கை). இவற்றில் முதலிரண்டும், சிங்கள அரசுகளாகவும், கடைசி தமிழ் அரசாகவும் இருந்தது. தொடர்ந்த பல்வேறு சூழியல் காரணிகள் மற்றும் வாழ்வியல் பயணங்களைச் சந்தித்த இலங்கை, 1802 இல் ஆங்கிலக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டபோது ஆமியன்ஸ் (Amiens Agreement) ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அதனுடன் இணைக்கப்பட்ட இலங்கையின் வரைபடங்கள் இந்த மூன்று அரசுகளையும் தனித்தனியே சுட்டிக் காட்டுகிறது.

இதற்கு முன்னர் கிலேகான் (SIR.HUGH CLEGHORN) ஒரு தனிப்பட்ட வரலாற்றுக் குறிப்பை ஆங்கில அரசுக்குக் கொடுக்கிறார், அதில் தெளிவாக பண்டைக் காலம் தொட்டு இலங்கையின் வடகிழக்கு நிலப்பரப்பு தமிழர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது என்பதையும், சிங்களஇனம், மொழி, கலாச்சாரம் தமிழர்களின் மொழி, கலை, கலாச்சாரக் கூறுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது என்றும் ஒரு வரைவை, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் அளிக்கிறார். பின்னர் படிப்படியாக மூன்று வெவ்வேறான அரசுகளுமே ஆங்கில ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டது என்பதும், நிர்வாக வசதிகளுக்காக, ஆட்சி முறைமைகளுக்காக ஆங்கில அரசு வழமை போல (அதாவது இந்தியாவில் நடந்ததைப் போலவே) இலங்கைத் தீவு முழுதையுமே ஒரே கட்டுக்குள் கொண்டு வந்தது, 1948 இல் இலங்கை ஆங்கில ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைகிறது. இது ஒரு சுருக்கமான இலங்கையின் விடுதலைக்கு முந்தைய வரலாறு.

சரியான திசையில் பயணிக்க வேண்டிய இலங்கையின் சமூகப், பொருளாதார வளர்வு நிலைகள் விடுதலைக்குப் பின்னர் S.W.R.D பண்டாரநாயகாவின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்கிற ஒரு முறையற்ற செயல் திட்ட முன்வரைவால் தனது அழிவை நோக்கித் திரும்பியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட, அடிப்படைக் கல்வியை தமிழில் கற்ற தமிழர்களின் நிலையும், அவர்களின் வேலை வாய்ப்புகளுக்கான நிலைத் தன்மையும் இதனால் கேள்விக்குறியாகியது. தமிழர் பகுதிகளின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கான நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டது. பாதுகாப்புப் பணிகளில், படையணிகளில் தமிழர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டனர். 1958 இல் தமிழ் மக்களின் மீது ஏவிவிடப்பட்ட வன்முறைகளும், அரசியல் பின்புலமும் தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி, இலங்கையில் வாழும் தமிழர்கள், இலங்கையின் அதிகாரப் பூர்வக் குடிமக்களா என்கிற அளவில் வந்து நின்றது.

இதனிடையே, 1972 இல் குடியரசுச் சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மேற்கண்ட கேள்விகளை அரசாட்சி முறையாகவே சிங்கள பெரும்பான்மை அரசு முன்னெடுத்தது. 1950 இல் இருந்து தொடங்கிய சிங்களப் பேரினவாத அரசின் ஒருதலைப் பட்சமான போக்கினை எதிர்க்கும் முகமாக ஒரு எதிர்வினையாக திரு.சி.சுந்தரலிங்கனார் தலைமையில் "ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி" என்கிற அமைப்பு உருவாகி, தமிழர்களுக்கான "சுயாட்சி" என்கிற கொள்கை அவரால் முன்வைக்கப்படுகிறது. இதற்கு முன்னரே 1918 இல் திரு.விஸ்வலிங்கம் என்பவர் தனித்தமிழ் நாட்டின் கோரிக்கையை ஆங்கில அரசிடம் வைத்ததும், 1924 இல் திரு.பொன்னம்பலம் ராமநாதன் உருவாக்கிய தமிழர்களுக்கான ஒரு தனி அரசியல் பார்வையும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் திரு.சுந்தரலிங்கனார் அவர்களே "தமிழீழம்" என்கிற ஒரு குறியீட்டு அடையாளத்திற்கான காரணியாகவும், தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போரை முதன்முதலாகத் துவக்கியவருமாவார். பிற்காலத்தில் இவர் "வன்னிச் சிங்கம்" என்கிற அடைமொழியால் அழைக்கப்பட்டார். 1972 இல், இலங்கைப் பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயகா ஒருதலைப்பட்சமாக உருவாக்கிய ஓட்டுப் பொறுக்கி அரசியல் தந்திரத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட முன்வரைவுகளே இலங்கையில் வாழும் தமிழ் மக்களை ஒரு கடும் சமூகப், பொருளாதார நெருக்கடிகளை நோக்கித் தள்ளியது. போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழலை அவர்களுக்கு உருவாக்கியது.

1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவிய ஒரு தேர்தல் சூழலில் தான் "தந்தை செல்வா" என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு.S.J.V செல்வநாயகம் "தமிழரசுக் கட்சி" என்கிற ஒரு அரசியல் நகர்வை தேர்வு செய்து பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஒருதலைப் பட்சமான இலங்கை அரசின் பேரினவாத நடவடிக்கைகளைக் கண்டித்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உதறித் தள்ளிய தந்தை செல்வா, ஒரு இடைத் தேர்தலை சந்தித்து தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவில் மிகப்பெரும் வெற்றி அடைகிறார். வெற்றி அடைந்தது மட்டுமன்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் "தமிழ் மக்கள் தனியானதொரு ஆட்சியைப் பெறுவதைத் தவிர வேறு வழியற்ற நிலைக்கு சிங்களப் பேரினவாத அரசால் தள்ளப்பட்டிருக்கிறார்கள்" என்று கர்ஜனை செய்கிறார்.

இந்த நிலையில் பல்வேறு அரசியல் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த இலங்கை தமிழ் மக்களும், அரசியல் இயக்கங்களும் இணைந்து "தமிழர் விடுதலைக் கூட்டணி" என்கிற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி தங்கள் அரசியல் களங்களை வலிமைப்படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்த பல்வேறு அரசியல் ஒருங்கிணைவுகளில் 1977 பாராளுமன்றத் தேர்தல்களில் அதிகப்பட்சமாக 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு, தமிழீழம் என்கிற பாதையை நோக்கியே நாங்கள் செல்கிறோம் என்பதையும், அதனை அமைதி வழியிலோ இல்லை போராட்ட வடிவிலோ பெற்றே தீருவது என்கிற முடிவுக்கு வந்தார்கள். இதுதான் வரலாற்று உண்மை.

இன்று பார்ப்பன, பேரினவாத அரசுகளும் உலக ஏகாதிபத்தியங்களும் ஊடகங்களில் பரப்பும், "ஆயுதம் தாங்கிய புலிகள் அமைப்பு" 1980களில் தான் "தமிழீழம்" என்கிற ஒரு கோரிக்கையை முன்னெடுத்தது என்பது ஒரு வரலாற்றுத் திரிப்பு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விடுதலை உணர்வை எள்ளி நகையாடும் ஒரு பித்தலாட்டம் என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தொடர்ந்து கூற்றியல் நோக்கில் ஆய்வு செய்யும் எவரும் ஒப்புக் கொள்வார்கள்.

தமிழ் இளைஞர்கள் 1968களில் தங்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக ஆயுதம் ஏந்த வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். தொடர்ந்து தற்காப்பு மற்றும் இன ஒடுக்கலுக்கு எதிரான நிலைப்பாடுகளில் பல்வேறு குழுக்களாக இயங்கிய ஆயுதப் போராட்டக் குழுவினர், "கருப்பு ஜூலை" என்று இலங்கை வரலாற்றில் மட்டுமன்றி மனித சமூகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு அவல நிலையான வெறிகொண்ட பேரினவாதத் தாக்குதலை சந்தித்த பின்பு ஒரு மிகப் பெரும் எழுச்சியை போராட்ட நிலைப்பாடுகளில் கண்டது. தமிழ் மக்கள் ஆடைகள் களையப்பட்டு, நிர்வாணமாக தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார்கள். தந்தையின் எதிரில், கணவன்மாரின் எதிரில் எம் குலப்பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். எம் தமிழ்க் குழந்தைகள் ராணுவ வீரர்களால், கால்களைப் பிடித்துக் கொண்டு சாலைகளில் துவைத்து மண்டையைப் பிளந்து கொல்லப்பட்டார்கள். குழுக்கள், குழுக்களாக எம் தமிழ்மக்கள் எரித்துப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்துக் கொதித்தெழுந்த தாய்த் தமிழ் மக்கள் மிகப்பெரும் நெருக்கடியை இந்திய பார்ப்பனீய மேலாதிக்க அரசுகளுக்குக் கொடுத்த போதுதான், இந்திய அரசும், தமிழக அரசும், தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக அவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களையும், உதவிகளையும் செய்தார்கள். அதன் பிறகு தொடர்ச்சியாக நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் பதிவுகளும், கொடுமைகளும் நமக்குத் தெரியும் என்பதாலும், நீண்ட நெடிய துயரம் மட்டுமே அவற்றில் தோய்ந்து இருக்கும் என்பதாலும் அவற்றை பிறிதொரு காலத்தில் விரிவாகப் பதிவு செய்ய முனைகிறேன்.

காலத்தின் கட்டாயத்தால் மிகப்பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த தமிழ் இளைஞர்கள், வேறுவழியின்றி ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்கள், வெவ்வேறு குழுவாக பிரிந்து கிடப்பது, விடுதலை இயங்கியல் போராட்ட வரலாற்றை நீர்த்துப் போகச் செய்யும் என்கிற சமூக அறிவியல் உண்மையை உணர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பல்வேறு போராட்டக் குழுக்களை ஒருங்கிணைக்க முயன்றார் அல்லது வேறு வழியின்றி ஒழித்தார். அவை அடிப்படை மனிதநேயம் சார்ந்த பலரது நிலைப்பாடுகளில் மாற்றுக் கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தாலும், காலத்தின் தேவை என்பதும், ஒடுக்கப்படும் உயிரின எழுச்சிகளின் வரலாற்றில் தவிர்க்க இயலாதது என்பதும் உலக இயங்கியல் என்கிற அறிவியல் கோட்பாடுகளை ஆழ்ந்து படிப்பவர்களும், விடுதலைப் போராட்ட வரலாற்றை ஆய்வு செய்பவர்களும் நன்கு அறிவார்கள்.

LTTE புலிகளைப் பற்றிய கடும் மரண அச்சத்துடன் இலங்கை படையணி வீரர்களும், இலங்கை ராணுவ தாக்குதல்களைப் பற்றிய கடும் அச்சத்துடன் தமிழ்த் தேசிய இனமும் ஒரு இக்கட்டான அரசியல் மற்றும் நிலப்பரப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மரணம் என்பதும் வேதனை என்பதும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானதாகவும், அவற்றை உறுதி செய்ய எம் எதிரிகளும் துயர் கொள்ளக் கூடாது என்கிற உயரிய போர்முறைகளை, மனித நேயம் சார்ந்த பல்வேறு கட்டுப்பாடுகளை விடுதலைப்புலிகள் வைத்திருக்கிறார்கள் என்பதும், பல்வேறு உலக நாடுகளின் அமைதிக் குழுக்களுக்கும், உலகளாவிய ஊடகவியலாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் அமெரிக்காவில் "HOUSE INTERNATIONAL RELATIONS" என்கிற ஒரு அமைப்பு, நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் மேம்பாடுகள் குறித்த ஒரு கூட்டத்தைக் கூட்டியது. இதில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக அதன் செயலர் திரு.டொனல்ட் கேம்ப் (MR.DONALD CAMP) பேசினார். வழமை போல தீவிரவாதம் குறித்த அவரது உரையின் நடுவே குறுக்கிட்டுப் பேசிய அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர், (அதாவது காலிபோர்னியா மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட அமெரிக்கக் காங்கிரஸ் செனட் உறுப்பினர்) திரு.பிராட் சார்மேன் (MR.BRAD SHERMAN) பல்வேறு கேள்விகளுக்கு நடுவே ஒரு ஆய்வுக்குரிய கேள்வியைக் கேட்டார். அந்தக் கேள்வி "பயங்கரவாதத் தாக்குதலுக்கும், சட்டபூர்வமான கெரில்லாத் தாக்குதலுக்கும் என்ன வேறுபாடு?". இதைக் கூட விட்டு விடலாம், இன்னொரு மிக அழகான கேள்வியையும் அவர் கேட்டார். அந்தக் கேள்வி "அல் கொய்தாவிற்கும் அமெரிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றில் பங்கேற்ற எங்கள் ஜார்ஜ் வாஷிங்டனுக்கும் என்ன வேறுபாடு? உங்கள் பார்வையில் அவரும் ஒரு பயங்கரவாதியா?” இந்தக் கேள்வியைக் கண்டு நிலை குலைந்து போன திரு.டொனல்ட் கேம்ப் (MR.DONALD CAMP), பதில் அளிக்க இயலாமல் குழம்பிய காட்சியை நீங்கள் அனைவரும் இணையங்களில் கூடக் கண்டடையலாம்.

அதே கேள்வியைத் தான் இன்று நாங்களும் உலக மக்களிடமும், தமிழர்களைக் கொன்று குவிக்கும், சிங்களப் பேரினவாத அரசின் காவல் விலங்கான மஹிந்த ராஜபக்சேவிடமும், காவல் விலங்குகளுக்கு பாலூட்டிச் சீராட்டும் இந்தியப் பார்ப்பனீய பயங்கரவாத அரசுகளிடமும் கேட்கிறோம். இது உலகின் உயர்தனிச் செவ்வினத்தின் விடுதலைப் போராட்டமா? இல்லை பயங்கரவாதமா?

விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்று சொல்லும், பார்ப்பன ஜெயலலிதாக்களே, சோ.ராமசாமிகளே, தமிழைப் பேசவும் சரியாகத் தெரியாத சுப்ரமனியசாமிகளே, சிங்களப் பேரினவாதங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகின்ற இந்து ராம்களே, அரசியல் பகடைக் காய்களாய் மாறி ஒற்றுமைக்கு மறுக்கும் கோபாலசாமிகளே, தொப்புள் பம்பரப் புகழ் விஜயகாந்துகளே......

இன்றைக்கு தமிழகத்தில், உருவாகி இருக்கும், எழுச்சி அலையானது, ஈழத்தில் துயருறும் எம் தமிழ்மக்களை மட்டுமன்றி, அரசியல் அறிவற்று, அன்றாட வாழ்வியல் போராட்டங்களில் கணந்தோறும் உழைக்கும் வர்க்கத்தில் உறைந்து போயிருக்கும் சிங்கள பேரினத்தின் மக்களும் அமைதியை அடையட்டும், மனிதம் தழைக்கப் பிறந்த தமிழனின் பெருமையை சிங்களனும் உணரட்டும் என்று ஒரு உணர்வுள்ள தமிழனாக உங்கள் சார்பில் மனிதச் சங்கிலியின் ஒரு ஓரத்தில் நின்றிருப்பேன். என்னைத் தேடாதீர்கள், நீங்கள் தான் நான்.

விடுதலைப்புலிகள் உண்மையில் தீவிரவாதிகளா?

நீங்கள் தான் சொல்ல வேண்டும் தமிழர்களே......

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO