க.பாலாசி: September 2010

Tuesday, September 28, 2010

விட்டு விடுதலையாகி...

அந்த காலைப்பொழுதும் எப்போதும்போல் விடிந்திருக்கவில்லையெனலாம். முற்றத்தில் முகம் கழுவ வந்தபொழுது அந்த கல்லுக்குருவி கண்ணில் பட்டது. ராஜவேலுவை அழைத்துக்காட்டினேன். எழத்திராணியற்ற அதனை கைகளுக்குள் அடக்கிக்கொண்டான். வேண்டாம் விட்டுவிடலாம் என்றேன். அவன் கேட்கவில்லை. வளத்தலாம் என்றான். எனக்கு அவன் செயல் பிடிக்கவில்லை. கூண்டுக்குள் ஒரு உயிரை அடைப்பதும் நெஞ்சிக்குழியில் துடிக்கும் இதயக்குமிழை வெளியே எடுப்பதும் ஒன்றாகவே தெரிந்ததெனக்கு. தரிகெட்ட சுதந்திரமே அதன் பிறப்புரிமை.

வீட்டிற்குள்ளிருந்த வெங்காய கூடையை எடுத்து உத்திரத்தில் சணல் கயிறைக்கட்டி தொங்கவிட்டான். பானைபோன்ற கூடையின் இடையே ஒரு வேப்பங்குச்சியை சொருகினான். குருவியினை உள்ளேவிட்டு பூஸ்ட் குடுவை மூடியில் நெற்மணிகளை கொட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான். இவனுக்கு தம்பினானது என் துரதிஷ்டம் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு.




கைக்கு எட்டாத கூண்டைவிட்டு அந்த உயிருக்கு விமோசனம் அளிக்க நான் அவ்வளவு உயரம் வளரவில்லை. ஒரு நாற்காலியைப்போட்டு அந்தப்பணியைச்செய்ய ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த வெங்கடாஜலபதியும் தைரியத்தைக்கொடுத்து அருள்பாலிக்கவில்லை. பாவம் என்று கொஞ்சநேரம் வெறித்து பார்த்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினேன்.

அம்மா அப்பாவும் கண்டுகொள்ளவில்லை. அவன்தான் செல்லம். அன்றைய மாலை, அடுத்தநாள் காலை அடுத்து... அடுத்து... மூன்றுநாளும் அந்தக்குருவிக்கு நெற்மணிகளும், சோற்றுப்பருக்கைகளும், எதிர்வீட்டு வாசற்படலில் பழுத்திருந்த கோவைப்பழமும் உணவாகப் படைக்கப்பட்டன. என் விருப்பமான இங்க் பழத்தைமட்டும் அவன் கொடுக்கவில்லை. அண்ணனாம் அண்ணன், மனதிற்குள் திட்டித்தீர்த்தேன். ஆனாலும் அந்தக்குருவி எதையும் திரும்பிப்பார்த்ததாய் தெரியவில்லை. கூண்டிற்குள் எல்லாமே காய்ந்து கிடந்தது. அதில் எனக்கு திருப்திதான்.

நான்காம்நாள். அந்த காலைப்பொழுதும் எப்போதும்போல் விடிந்திருக்கவில்லையெனலாம். முற்றத்தில் முகம் கழுவ வந்தபொழுது அந்த கல்லுக்குருவி கண்ணில் பட்டது. நடுவில் சொருகியிருந்த குச்சியில் தலைகீழாக தொங்கி சாகசம் காட்டியது. ராஜவேலுவிடம் காட்டினேன். திறந்து பார்த்தான். விரைத்துப்போய் விழுந்தது அது. அண்ணன் அழத்தொடங்கினான். வெங்கடாஜலபதி சிரித்துக்கொண்டிருந்தார்.



Friday, September 24, 2010

சுக்குமி ளகுதி ப்பிலி...

கொல்லவாசல் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரத்துகள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்கொடுக்கிற அம்மா இப்பவும் அதேமாதிரிதான் இருக்கு. நானிங்கவந்து நைட்டு ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு பக்கத்து பொட்டிக்கடையில ‘அண்ணா ஒரு பழம்னா?’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாங்க. பொழைப்பத்த அம்மாக்கு பொழைக்கத்தெரியலையா இல்ல எனக்கான்னு தெரியல. இந்த பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.

••••••••••••

ரெண்டுரூவாய தெருமொன ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்வாய்க்கு எப்பாருக்கு ஒரு பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல அதோட லாட்டரி சீட்டுக்கு நடுவுல வைச்சித்தர சுண்ணாம்போட கார்ரூவா கொட்டப்பாக்கு, கார்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச கார்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மாத்ரி.

•••••••••••••

அந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி வய்ச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரங்கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுகடையில வாங்கினா கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகால்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடயையும் சேர்த்து வித்துட்டு புள்ளைங்க சம்பாதிக்கறதே போதும்னு ஊட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அரிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.

••••••••••••

ஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள் எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட வந்தப்ப கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திராவீடு. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கு தாராளமா போதும். இந்தமாடு கறவ விட்டுட்டா அடுத்து அது, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம் பருத்திக்கொட்ட வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட மட்டுமில்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.

•••••••••••

இந்த மண்வெட்டி கால்ல விழுந்தாலுஞ்சரி, அருவா இல்லைன்னா கோடாளி எப்டிக்காயம்பட்டாலும் எலந்த இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும் வெட்டுக்காயம் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் தாத்தனுக்கு இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன என்னொடம்புக்கு அந்த டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும்.

•••••••••••••

அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.



Friday, September 17, 2010

ராசம்...

என்றுமில்லாது இன்று ஆளோடிக்கட்டிலில் கொஞ்சம் படுக்கவேண்டும் என்று தோன்றியது. வீட்டினுள்ளே டங்..டங்.. என்று தரை அதிர்வதற்கு என் மனைவிதான் காரணம். பெயர் ராசம். இந்த 26 வருட திருமண வாழ்வில் அவளிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியன நிறைய இருந்திருக்கிறது. ஆயினும் எந்த கணவனுக்குத்தான் மனைவியென்பவள் ஒரு மானுட ஜென்மம் என்பது அவ்வளவு எளிதாக புரிந்திருக்கிறது. நான் மட்டும் விதிவிலக்காயென்ன. சின்ன வயதில் தந்தையை இழந்த என்னை பத்தாம் வகுப்புவரை படிக்கவைத்தது என் அம்மாதான். மரப்பொந்தினிலிருக்கும் பருந்து குஞ்சுக்கு ஆகாரம் அவ்வப்போது கிடைத்துவிடும்தான். இருப்பினும் பறக்க கற்றுக்கொடுப்பது ஜென்ம இரத்தமின்றி வேறென்னவாக இருக்கமுடியும். என் பாட்டன், முப்பாட்டன் எவன் மதித்தான் என் பாட்டி, முப்பாட்டிகளை.

ஒரு படி மேலேபோய் என் தாத்தன் குடும்பச்சண்டையில் பாட்டியின் காலை கடப்பாறையால் முட்டிக்குமேலே ஓங்கி அடித்திருக்கிறான். அய்யோ..அய்யோ...என்று அடுத்தவீட்டுக்குகூட கேட்காதபடி அலறிவிட்டு அடுத்தவேளை சோற்றை பொங்கிப்போட்ட புண்ணியவதி அவளென்று குடும்ப வரலாறை கேட்கும்போதெல்லாம் என் அத்தை கண்ணீர்மல்க கூறுவாள். எவ்வளவு கொடியவன், கிராதகம் பிடித்தவன் என்று அப்போதும் நினைத்துக்கொள்வேன். இப்போது நினைத்தாலும் அப்படித்தான். பித்துக்குளி. நல்லவேளை நமக்கந்தளவுக்கு புத்திகெட்டுப்போகவில்லை என்பதற்கு என் படிப்பறிவோ, பகுத்தறிவோ காரணமாயிருக்கும் அக்காவின் மகளை அவளின் 16 வயதில் கட்டிக்கொண்டேன். என் குடும்ப ரத்தம்தான் ராசத்திற்கு. அதனாலோ என்னவோ என்னிடம் அரைவாங்கி கண்ணம் வீங்கினாலும் எனக்கு சோறு உண்டு. 3 வருட தாம்பத்தியத்தில் பெற்றெடுத்ததை மலர்கொடி என்ற நாமம்சூட்டி ஒருவழியாக சென்றவருடம் கரையேற்றினேன். கரையேற்றினேன் என்பதுதான் அத்தனை சிரமங்களுக்குமான ஒற்றைச்சொல்.

ஒரே பெண் வேறெதுவுமில்லை. சிறுவயதில் அவள் சில்லிக்கோடு விடையாடும் அழகு தனிதான். கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நானும் ராசமும் மற்றவர்களுடன் அவள் போட்டிப்போட்டு துள்ளி துள்ளி நொண்டியடித்து விளையாடும் பாங்கை ரசித்திருக்கிறோம். ராசம்தான் அவளுக்கு இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்தாள். ராசமும் சிறுவயதில் இந்த விளையாட்டில் தேர்ந்தவள்தான். பெண் பார்க்க நிச்சயமாகி சிங்காரத்தின் கூண்டு வண்டியை வாடகைக்கெடுத்து போகும்போதுகூட தெருவாசலில் விளையாடிக்கொண்டுதான் இருந்தாள். ‘விளையாட்டுப்பிள்ளையாவே வளந்துட்டா, போ..போ..மூஞ்சி கழுவியா’என்று அவளை துரத்திவிட்டு மாமா என்னிடம் அசடு வழிந்ததுகூட இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஏணிப்படிகள்போல ஆறு பெட்டிகளுடன் கூடியதில் மலையிலிருந்து ஆரம்பித்து 5,4,3,2,1 வரை வந்து பிறகு, கைமேல் சில்லியை வைத்து நொண்டியடிக்கவேண்டும். புறங்கை, விரலிடுக்கு, கால், கால் விரலிடுக்கு, இறுதியாக மேட்டா கீட்டாவில் முடியும் அந்த விளையாட்டு தெருப்பெண்களின் சமயோசித விளையாட்டு, இன்னும் சொல்வதானால் பாரம்பரிய விளையாட்டு. மேட்டா கீட்டாவில் எந்த பெட்டியில் சில்லியை போடுகிறோமோ அந்த பெட்டி ஒரு உப்பு என்று விளையாடிய பெண் கோடுபோட்டுக்கொள்வாள். அந்த பெட்டியை எதிராளி நொண்டியடிக்கும்போது தாண்டித்தான் செல்லவேண்டும். விதிமுறை. வயதுக்கு வந்த பின்னும் மலருக்கு இந்த விளையாட்டு அலுக்கவில்லை. ராசத்திற்கும் வேடிக்கை பார்ப்பதும் அலுக்கவில்லை.

என் மகளை பெண்பார்க்க வந்தபோதும் சில்லிக்கோடுதான் விளையாடிக்கொண்டிருந்தாள். என் மாப்பிள்ளையிடம் நான் அசடுவழியவில்லை. சின்ன சின்ன குடும்பங்களில் ஒருவர் பிரிந்தபின் ஏற்படும் அதே வெறுமைதான் இப்போது என் வீட்டிலும். காயப்போட்ட துணிகளுடன் கொடி அறுந்து விழுவதுபோல பிரிவென்பது இந்த மூன்றுபேர் குடும்பத்தின் உச்ச வலி, பார்க்க அழகாயிருந்தாலும்கூட. நான் வேலைக்கு சென்றபின் ஆக்கி இறக்கி வைத்த நேரம்போக ராசத்தை வேறெந்த வேலைகளும் இழுத்துப்பிடிக்கவில்லை. மிஞ்சிப்போனால் என் துணிகளை துவைப்பாள். உண்டு தின்ற ஏனங்கள். அப்படியேதும் அவளின் தனிமையை ஆட்கொண்டதாக தெரியவில்லை, ஏன் நானும்கூட. என் வலியே அதிகம்தான். பெண்களுக்கான வற்றாத கண்ணூற்று முனுக்கென்றால் பொங்கிவிடுவதைப்போல, எந்த ஆண்மகனால் முடிகிறது. என் நெஞ்சிலும் அழுத்தம் இல்லாமல் இல்லை.

இரவுகளில் ராசம் தூங்கும் போது எதோ நெஞ்சழுத்தக்காரியின் முகமாகத்தான் அவள் முகம் இருக்கும். என் முகத்தைப்பற்றி அவளிடம்தான் கேட்கவேண்டும். சென்றமாதம்தான் அவளின் நெஞ்சாழ்மையை இந்தக்கோலத்தில் பார்த்தேன். ஒரு கண்ணாடியும் அது உடைந்தால் தெரியும் இரண்டு பிம்பங்களுமாய் என் முன் அவள். மலரின் அந்த பச்சைக்கலர் பாவாடை தாவணியை உடுத்தியிருந்தாள். இந்த 45வது வயதில் அவளுக்கு எடுப்பாகத்தான் இருந்தது என்று சொன்னால் நான் பைத்தியமோ என்று எனக்கே தோன்றும். சிகையில் இரட்டைப்பின்னல் வேறு. கொல்லையில் பூத்திருந்த திசம்பர் பூவைக் கட்டி சூடியிருந்தால். அந்த நெத்திச்சுட்டி ஏதென்று தெரியவில்லை. பார்ப்பதற்கு அகோரமான தோற்றம்தான். அருகில் செல்லும்வரை என்னைப்பார்க்காதவள் சென்றவுடன் விரைத்த உடலுடன் மலங்க மலங்க விழித்தது என் 52 வருட வயது முரட்டையும், திடகாத்திரத்தையும் பொலபொலவென விழ்த்தியது. இன்று நினைத்தாலும் ஒரு சொட்டாவது கண்ணீர் வரத்தான் செய்கிறது.

நாட்கள் நகர்வது அவளுக்கு தெரிகிறதோ என்னவோ, சமயத்தில் அவளிடம் அந்த பருவ நினைவு குடிபுகுந்துவிடுகிறது. பார்ப்பவர்கள் பைத்தியம் என்கிறார்கள். இன்று வீட்டினுள் வரும் டங்...டங்...என்ற சத்தம் ராசம் சில்லிக்கோடு விளையாடுவதால்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் தனி அரையில் கோலிக்குண்டு விளையாடுவது யாருக்கும் தெரியாது.

*


குறிப்பு- இச்சிறுகதை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அவரது தளத்தில் குறிப்பிட்டது கீழே :-

சுருக்கமாகச் சொல்லப்பட்ட கதை. கதைசொல்லியின் ஆளுமை அந்த மொழ்யிலேயே தெரிகிறது. அதிக விவரிப்புகள் இல்லாமல் இயல்பாக ஒரு பெரும் சோகம், தலைமுறைகளாக நீளும் சோகம் சொல்லப்படுகிறது

ஒரு உச்சத்தில் அந்த வட்டாட்டம் பலவிஷயங்களுக்கு குறியீடாக மாறி நிற்கிறது
நன்றி திரு.ஜெயமோகன்

Monday, September 13, 2010

மனிதம் சொட்டிய மலர்கள்...

பிடறியில் விழும் காலத்தின் அடி ஒவ்வொன்றும் வலுவாகவே இருக்கிறது. குன்றினில் ஏறியபின் மதிப்பற்றுப்போகும் கட்டாந்தரையை போலவே எல்லாமும் வளர்‘சிதை‘ ஆகிவிட்டது. கடந்ததை அசைத்துப்பார்ப்பதில் இருளடர்ந்த கனவுகள்கூட அள்ளிப்பருகொத்த அமிர்தம்தான்.

‘செத்த இரு ஆத்தா தோ போட்டுக்கொண்டாறேன், கால்‘ல வெந்நீரயா ஊத்தியாந்த?’,

‘அட பொருடா, அதுக்குள்ள வந்தடமாட்டாங்கொப்பன்’,

‘யப்பா பிரவு கொஞ்சம் மணித்தாத்தாவுக்கு சட்ணி ஊத்துப்பா’,

‘வா மாப்ள ஊர்ல இருக்கியா!!?, இப்பலாம் ரோட்டுக்கடத்தான் கண்ணுக்கு தெரியுதானொக்கு’,

‘வாங்க சார், எதோ கெடக்கன், இது யாரு பேரனா?, பய அப்டியே ஒங்களயே உரிச்சி வச்சிருக்கானே’,

‘இரும்மா அம்மா வந்திடுவா, தாத்தா ஒண்டியா இருக்கன்ல, நிறைய பேரு சாப்டுட்டிருக்காங்க, எல்லாம் போனப்பின்னாடி நீக் கேட்டத வாங்கியாறேன் என்ன’,

‘என்ன பட்டாமணியாரே, பையனுக்கு எதோ வேணுமாமே துரைக்ட்ட சொல்லி வாங்கித்தர்ரது?’,

‘எய்யா செயா அங்காடியில என்னைக்குயா மண்ணன்ன போடுவ? பத்து தேதியாச்சுய்யா......’,

‘என்னத்த சொல்றது மாமா, நாம படுறது நம்மளோட போவட்டும்னுதான் மொவனையாவது வேற வேலைக்கு அனுச்சிட்டு ஒண்டியாவே பாத்துக்கிறேன்‘ என கிராமங்களில் குடிசைக்குளியங்கும் சின்னச்சின்ன உணவு விடுதிகளும், டீக்கடைகளும் உறவுகளுக்குள்ளும், உரிமையெடுப்பிலும் வாழ்ந்துகொண்டிருக்கும். புலரும் ஒவ்வொரு பொழுதும் கொஞ்சலும், குலாவலுமாகவே எல்லாவற்றிற்கும் விடையும் விடிவாகவும் கரைந்துகொண்டிருப்பதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்.



தெருத்தெருவுக்கு விடியலைப் பார்த்து எழுந்து அன்பொழுக பறிமாறப்படும் எந்த உணவிலும் பறக்கும் ஆவியுடன் எதோவொரு மனம் மற்றும் மண் சுவை இருக்கத்தான் செய்தது. அன்போ, பண்போ, பரிவோ, மனிதமோ, உறவு முறையுடன் வந்துவிழும் வார்த்தைகளோ ஏதோவொன்றின் மூலம். அப்பாவின் பெரியவராயின் பெரியப்பாவாகவோ, அம்மாவுக்கு அண்ணனாக்கி மாமாவாகோ, வயதின் மிகை அண்ணனாகவோ ஏதோவொரு முறையில் உறவாகிவிடுவார் அதன் உரிமையாளர். இன்றும் கீத்துக்கொட்டகையில் டீக்கடைகளையும், சின்ன உணவு விடுதிகளையும் சில இடங்களில் காணும்பொழுது நெஞ்சினில் உருளும் நினைவுகள் மலரவே செய்கின்றன.

‘சித்தப்பா நீ படிச்சிப்படிச்சு சொன்னன்னுதான் அத்துப்போன ஒறவ ஒட்டலாம்னு பொண்ணு கேட்க வந்தேன். ஆனா அவன் என்னடான்னா முறுக்கிகிட்டுல்ல போறான்.‘

‘அட இரு மோனே.. நாங்பேசிப் பாக்குறேன். ஒடனேவா கோச்சிக்கறது. எதார்ந்தாலும் பொறும வேணும்பா. இந்தா, டீய குடிச்சிட்டுப்போ நான் பேசுறேன் அவர்ட, நாஞ்சொன்னா மனுஷன் கேப்பான்யா.‘ என்று பிரிந்திருக்கும் உறவுகளை சேர்ப்பதில் தொடங்கி வாய்க்கால் வரப்பு தகராறு வரை தீர்த்துவைக்கப்படும் இவ்விடங்களில் ‘அரசியல் பேசாதீர்’ என்ற வாசகம் மட்டும் அழுத்தம் திருத்தமாக மாவுக்கட்டிகளால் தெரியும். எவரும் உறவாகவும், எல்லாம் இயல்பாகவும் மனிதம் சொட்டும் மலர்களாய் எப்படித்தான் நடக்கிறதோ இந்தக் கடைகள் என்று எண்ணத்தோன்றும் இவ்வேளையில், பளபளக்கும் கண்ணாடி மாளிகைக்குள் இயங்கும் தற்போதைய நவநாகரீக உணவு விடுதிகள் செங்கல்லும், சிமெண்டும் கலந்த புதர்களாகத்தான் காட்சித்தருகின்றன.

அடுத்தவீட்டு முகவரியறியா இக்காலத்தில் எல்லா ‘நகரீய’ மாற்றங்களையும் இழுத்துக்கொண்டு, சீக்குவந்த கோழியாய் சிறுத்துப்போய்த்தான் கிடக்கிறது மனிதநேயமும் மற்றசிலவும்.


  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO