க.பாலாசி: அனுபவம்...
Showing posts with label அனுபவம்.... Show all posts
Showing posts with label அனுபவம்.... Show all posts

Friday, January 3, 2014

ஒரு கூடும் சில குளவிகளும்..

.

முன்புபோலில்லை. கொஞ்சம் வயதாகிவிட்டதென எண்ணுகிறேன். ரெண்டுவரி தட்டுவதற்குள் நாக்கு தள்ளுகிறது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. கைவிரல்கள் ‘ஏன்டா உனக்கிந்த வேலை என்பதாக..’.. ‘சும்மா உக்காந்தா துருப்பிடிச்சாப்போவப்போற‘ என்கிறது மனது. செவனேன்னு உட்காந்திருப்பதில் ஒரு அலாதிப்பிரியமும் மிகுந்த சௌகர்யமும் கிடைக்கிறது. என்னவாச்சும் படிப்பமாவென்றால் ச்சீ... போ..போ.. வேலையப்பாரு என்ற நினைப்புவேறு. வேலைநேரம் போக தொலைக்காட்சி கொஞ்சம் விடுதலை, அதோடு இணையம் கொஞ்சம். எதுவும் எழுதாமலிருப்பதில் கிட்டும் நிம்மதியனைத்தும் என் கோடானுகோடி வாசகர்களுக்கு(!!!)தானேயொழிய எமக்கொன்றுமில்லை யேசப்பா... ஆமேன். ஆயினும் சீர்கேடுகளடர்ந்த இச்சமூகத்தை என்‘னெழுத்தால் காத்தருள வேண்டுமென்ற மனவேட்கை இருக்கத்தான் செய்கிறது. ரசிகர்களின் வேண்டுகோளை நிராகரிக்க மனமில்லாமல் எதையாவது செய்தே ஆகவேண்டிய சூழல். ஆகவே செழித்தோங்கியிருக்கும் இந்நாட்டின் வளங்களையும், பரிபாலங்களையும் நான் கட்டிக்காப்பாத்தாம விடமாட்டேனென்ற உறுதிமொழியில்...

••

‘ராஜா இருக்கவரையும்தான் ராஜாவீட்டு நாய்க்கு கூட மதிப்பு, தெரிஞ்சிக்க‘ சண்டை சமயங்களின் அப்பாவின் வாய்மொழி. அவர் போனபிறகு அதை நிஜத்தில் உணர்கிறேன். அவர் இருந்தவரை குணநலன்களுக்கு அப்பாற்பட்டு பெருந்தலை என்ற மரியாதை உறவுகளினிடத்து உண்டு. இப்போது ‘தலையே போயிடுச்சி இனிமே என்னகெடக்கு‘ போன்ற மனநிலை அவர்களினிடத்தும். போலவே அவருக்குப் பின்னான அம்மாவின் நிலை. துணையிழந்த தனிமை. ‘என்ன யாருப்பா மதிக்கறா, என்னக்கேட்டா எல்லாஞ்செய்றீங்க? நாவொரு கருவேப்பில கொத்துமேரி, வேணுன்னாதான்...  ம்ம்ம்’ ஒரு பெருமூச்சுடன் எதையும் எதிர்பார்க்காத நிலை. கூடம், மோட்டுவலை, நீர்நிறைக் கண், படுக்கை, சோறு, எனது சௌகர்யமும், அவ்வப்போதைய அழைப்பும் போதுமானதாயிருக்கிறது. அப்பாவிற்குப்பின் அம்மாவுக்குத் தேவையான கௌரவத்தை என்னளவில் கொடுத்தாலும், குடும்பச்சூழலில், உறவுகளிடத்தே தோல்வியே மிஞ்சுகிறது. என்னதான் பாடுபட்டாலும், உயர்த்திப்பிடித்தாலும் யதார்த்தத்தில், இச்சமூக கட்டமைப்பில் அப்பாக்கள் மட்டுமே ராஜாவாக வாழ்ந்தும் மறைந்தும் போகிறார்கள். ஏனையோர்* மேற்சொன்ன...

••

அப்பா இறந்த இரண்டொரு வாரங்கள் தவிர்த்து அம்மா பெரிதாக அலட்டிக்கொள்ளாததுபோல் தோன்றியது. நானும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அல்லும் பகலும் அவர் நினைவுதான். ம்ம்ம்முடியல.. அவர் கடைசி மூச்சை நானே சுவாசித்ததனால் இருக்கலாம். அந்தக் கடைசிப்பார்வை... கொடுமை... நான்கு மாதங்கள் கடந்தது, எங்களுக்கு ஆண் குழந்தை. பேரன் என்றவுடன் அம்மாவுக்கு அளப்பறியா ஆனந்தம், ஒரு பெரும் சிரிப்பு, மகமாயி...மகமாயி என்று நன்றிக்கடன். கிட்டத்தட்ட கேள்விப்பட்ட எல்லோருமே சொல்லிவிட்டார்கள் ‘அப்பா இருந்திருந்தால் பூரித்திருப்பார்‘. மருத்துவமனை.. அம்மாவை அழைத்துவந்து அவள் மடியில் மகனை கிடத்தினேன். ‘அப்பா மேரியே இருக்கான்ல... அப்பாவேதான் தம்பி பொறந்திருக்காரு, என் தங்கம் பெத்த தங்கமே... மாருடன் அனைத்து கொஞ்சினாள்.. இருவரும் அழுதோம்.. மகனும் அந்நேரம்...

••

மனது அம்மா உணவக இட்லி போல, ஒருநாள் கல்லாகவும் (இறுக்கமாகவும்) மறுநாள் பஞ்சுபோல லேசாகவும் இருக்கிறது. சூழ்நிலைகள், தேவைகள், வேலைகள்.. இன்னும் சில‘கள்... அப்ரஸன், டிப்ரஸன், கப்ரஸன்... என்ற ஆங்கில பண்புத்தொகைக்கொப்ப.. எல்லாவற்றிலுமே எடைக்குறைச்சல்தான் நமக்கு சரிவரும்போலிருக்கிறது. இந்த செருப்பு வெயிட்டா இருக்கு வேண்டாம். லைட் வெய்ட் வீ.கே.சி. கொடுங்க, ஆடைகள் கூட உடம்பில் இருப்பது தெரியாமலிருந்தால்தான் சௌகர்யம். 30 நாளைக்கு ஒருதடவை தலைமுடி கழிக்காவிட்டால் அதுவும் பெரிய பாரம். கூடவே பொண்டாட்டியாக இருந்தாலும் நாப்பத்தஞ்சு டூ அம்பது கிலோ இருந்தால் கச்சிதம். போலவேதான் மனதும். ஒருநிலைக்குமேல் அழுத்தங்கள் கூடக்கூட எல்லாத்தையும் தூக்கித் தூரப்போட்டுவிட்டு பாரம் குறைத்தால் தேவலை. எப்படியாவது மகிழ்ச்சியும், நிறைவும் தேவையாகிவிடுகிறது. எழுத்தும் இலக்கியமும் எள்ளளவும் மனதை லேசாக்குமென்று தோன்றவில்லை. அதைவிட்டு விட்டு விலகி நிற்பதே என்னளவிற்கொண்ட அனுபவம்.

••

இட்லி என்றவுடன் ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல இட்லி தின்பதற்காக நாய்படா பாடு பட்டிருக்கிறேன். 1 முதல் 18ரூபாய் வரையிலான இட்லிகளை க(உ)ண்டாயிற்று. ஆனாலும் திருப்தி? ம்கூம். ஈரோடு முழுக்கவே விதவிதமான இட்டேலி, இட்டிலி, இட்ட்லி மற்றும் இட்லிக்கடைகள். பொண்டாட்டி வந்த புதிதில் ஒருகல்லு மாவாட்ட நாலு மணிநேரம் எடுத்துக்கொள்வார். பிறகு படிப்படியாக குறைந்து அல்லது தேர்ந்து மூனேமுக்காலுக்குள் முடித்து சாதனையும் செய்தார் (மனைவிகளுக்கு இ‘ர்’ விகுதி அவ்வளவு பொருத்தமில்லை) கடைசிவரைக்கும் இட்டேலி பச்சரிசிக் கொழுக்கட்டைப் பதத்தில் மட்டுமே கிடைத்தது. இன்னும், இன்றும்.. உடல்நிலை சரியில்லாத அம்மாவுக்கு ஒரு நல்ல இட்லி வாங்கிக் கொடுப்பமேயென்று பிரயத்தனப்பட்டதில் கண்டது நளன் என்றொரு உணவகம். எதோ சித்தாவோ, ஆயுர்வேதாவோ அந்த முறையில் உணவுகளை தயாரித்துப் பரிமாறுகிறார்கள். நல்ல முயற்சி. ஒரு இட்டேலி எட்டு ரூபாய். மேலே ரெண்டு மூணு கேரட் துருவல். என்போன்ற நோஞ்சான்கள் மீதெரிந்தால் அவ்விடத்தே காலி. கொலை வழக்குதான். ஆனால் மற்ற உணவுகள் நல்ல முறையில் நன்றாகவே செய்கிறார்கள். ப்ப்ரமாதம். ஒரு நாலு தப்படியில்தான் ஈரோடு கதிர் அவர்களின் அலுவலகம். அவர் காசுலேயே சாப்பிட்டால் இன்னும் ப்ப்ரமாதமாக இருக்கும்.

••

கற்பனைகளும், கற்பிதமுமென் முதல் எதிரியென்பேன். கொல்லுகிறது. எ.கா.‘வாக மிதியுண்ட எறும்பின் வலி எனக்கு கற்பிதமாகிறது, அல்லது அப்படியாவதுபோல் கற்பனை தொடங்குகிறது. எதோவொருநாள் கும்பகோணம் பஸ்டாண்டில் 1000 ரூவாயை தொலைத்த கருவாட்டுக் கிழவியின் அழுகுரல், அவளின் வேதனைக்கூடிய முகம், மனம் இப்போதும் நிழலாடுகிறது, கனவுகள் வரை அதன் நீட்சி. இதுபோல் எல்லாமும், எல்லாரும், சந்தோஷத்தருணங்களற்ற வேதனைகள், வலிகள், உயிர்வலிகள். எல்லோருக்கும் இருக்கும் வெறும் பரிவும் பட்சாதாபமும்தானென்றாலும் இது கொஞ்சம் அதிகம். வலியின் கற்பிதங்கள் கொடுக்கும் மனவலி வேறுவிதமான இம்சை. வார்த்தைகளில்லை.. மீளவேண்டும்.

••

Monday, April 2, 2012

ஒரு கூடும் சில குளவிகளும்..

*
கடந்த இருநாட்களில் 36 மணிநேரம் தூங்காமலிருந்திருக்கிறேன். இதிலொரு கொடுமை அலுவலக நேரத்திலும் கொட்டகொட்ட விழித்திருந்ததுதான். ஓர் இரவு கண்விழித்தாலே அடுத்தநாள் முழுதும் அர்த்தநாசம் குட்டிச்சுவர். ஆனாலும் நேற்றையப் பொழுதில் சில சுபங்கள். ஈரோடு வந்திருந்த பதிவரும் தீரா-இலக்கிய ஆர்வலருமான கோபியை சந்தித்து கொஞ்சநேரம் அளவளாவினேன். எங்களின் சங்கமங்கள் அனைத்திலும் பயணச் சிரமங்களைப் பொருட்படுத்தாது கலந்துகொள்ளும் இனிய நண்பர். இந்தவகை அண்ணன்களை சந்திக்கும்போது பெரும்பாலும் கால்கள் கடகடவென நடுங்க ஆரம்பிக்கும். ‘இந்தப் புத்தகத்த படிச்சியா, அந்தப் புத்தகத்த படிச்சியா’வென்று கேட்டுவிட்டு கடைசியில் ‘நீயெல்லாம் என்னய்யா மனுச’னென்று திட்டிவிடுவார்களோவென்ற பயம்தான். எனவே ‘எந்த பஸ்ல வந்தீங்க, எங்கங்க போனீங்க, சாப்டீங்களா, இந்த ரூம்க்கு வாடகை எவ்வளவு‘ போன்ற ‘இலக்கிய’த்தரமான கேள்விகளைக் கேட்க அவரும் பதிலுரைத்தார். ஓர் இலக்கியவாதியை இவ்விதமான கேள்விகளைக்கேட்டு ‘அவ்விதம்’ திருப்பாமலிருப்பது என்னுடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதெனப்பட்டது (with smiley). மாலை மூன்றுக்கு அவரை திருப்பூர் பேருந்தில் ஏற்றிவிட்டு அறைக்குச் சென்று தூஙகலாமென்றிருந்தேன். மனிதனுக்குமவன் மனதிற்குமான போராட்டத்தில் பெரும்பாலும் மனம் ஜெயித்துவிடுகிறது. அதிலும் அதீதமாய் நல்ல செயல்களுக்கு. தூக்கத்தைப்பார்ப்பதா, ‘கோபி’யாரைப் பார்ப்பதாவென்றதில் வென்றது அண்ணன் கோபி.

***

மற்றொன்று

நேசம் + யுடான்ஸ் + சேர்தளம் இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அவர்களிணைந்து நடத்திய சிறுகதை மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழாவும் நேற்று (01.04.2012) திருப்பூரில் நடந்தது. ‘போகலாமா வேண்டாமா, போகலாமா முடியுமா, அசதி.. தூங்கலாம், போகவேண்டாம் தூங்கலாம்,  தூங்கவேண்டாம் போகலாம்’ என்ற படிநிலைகளில் ஆர்வமும்,  கொஞ்சிய தூக்கத்தை பயணத்தில் கழிக்கலாமென்ற எண்ணமும் சேர்ந்தே உந்த, பேருந்தில் ஏறினேன். ஆனால் திருப்பூர் வரையில் கோவில்மணி நடுவாடும் நாக்கு கதியாக நின்றுகொண்டே பயணம். ‘விடியாமூஞ்சி, வேலை, கூலி’ பழமொழி ஞாபகம் வந்தது. போக... நிகழ்ச்சி நன்றாக நடந்தது. வலை நண்பர்கள் ஒன்றிணையும்போது கிடைக்கிற இனிமை சொந்த சுபகாரியங்களில்கூட இப்போது கிடைப்பதில்லை. புதியவர்களை காண நாணி முந்தானையொளியும குழந்தைகள் பதிவர்களைக் காணும்போது மட்டும் புழங்கிய வாசமடிக்குமோ என்னவோ. இயல்பாக ஒட்டிக்கொள்கிறார்கள். பரிசலின் பெண்ணும், விஜியக்காவின் பெண்களும் அப்படியே. கொஞ்சம் இறுக்கமான நிகழ்ச்சியின் இறுதியில் தப்பாட்ட குழுவினரின் சரியான ஆட்டம் நடந்தது. இக்காலம் இதைகாண புண்ணியம் தேவைதான். எல்லாம் அமைந்தாலும் மனிதனுக்கு அந்நேரத்தில் ரசிக்கிற மனம் கிடைப்பதரிது. கிடைத்தது. மொத்த நிகழ்வும் தேனூறிய அத்திப்பழம்.

நிகழ்ச்சி குறித்து மயில் விஜி

***

காலங்காலமாக திரைப்படங்களில் காட்டப்படுவதை மட்டுமே புற்றுநோய்க்கான தன்மையென்பதையே ஒருகாலத்தில் அறிந்திருந்தேன். இப்பவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்தனுபவங்கள் வாய்த்ததில்லை, அதன் கொடூரத்தை புகைப்படங்களிலும், ஏடுகளிலும் படித்ததோடன்றி. மார்பக புற்றுநோயை எதிர்கொண்டு அதையும் சவாலாக வென்று அதைப்பற்றி விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்கவேண்டுமென்ற எண்ணத்தில் திருப்பூர் நிகழ்ச்சியில் பேராசிரியை திருமதி.மோகனா அவர்கள் கலந்துகொண்டார். படித்ததை சொல்லும்போது ஏற்படுகிற அலட்சியத்தன்மை உணர்ந்ததைச் சொல்லும்போதே உறைக்கிறது. மேலும் இவர், இந்நிகழ்ச்சியொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

***

பதிவர் பல்டாக்டர் ரோகிணி அவர்கள் ‘ஒருகாலத்தில்’ வாய்ப் புற்றுநோய் வாய்ப்புகள் குறித்து எழுதியிருந்தார். பல் துலக்கும்போதெல்லாம் பயமாகவே இருந்தது. ‘பேய்’ அம்சம் கொண்ட கதைகளையோ, திரைப்படங்களையோ பார்த்துவிட்டு தூங்கினால் கனவிலும் பேய் வந்தாடும்... போலவேதான். நேற்றிலிருந்து இது அதுவா இருக்குமோ, அது இதுவா இருக்குமோ போன்றதான எண்ணங்களும் பயமும். முப்பதுக்குப் பிறகு ஆறுமாதத்திற்கொருதரம் முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது. ஆனாலும் எந்த எழவுக்குப்போனாலும் மருத்துவர்கள் ஊசியை எடுக்கிறார்கள். அது மூன்று மி.மீ. என்னுடலில் நுழைவதற்குள் தரைதட்டி எலும்பில் முட்டிவிடுகிறது. இதேபோலான பிரச்சனை என்னைக் கடிக்கும் ரங்குஸ்கி ரக கொசுக்களுக்கும் இருக்கும் போலிருக்கிறது. ‘நீ இன்னுமாடா இருக்க’ தோரணையில் மோந்து பார்ப்பதோடு சரி. அதுகெல்லாம் கொடுப்பனை வேணும் பாஸ்.

***

2004 ம் ஆண்டு ஜுலை 16ம் நாள் சென்னை கிண்டி நகர மக்கள் ஒரு அநாயசமான  அதிர்வை உணர்ந்திருப்பார்கள். செம்பொன்னார்கோவில் சிங்கமொன்று தன் பிடரியை சிலிப்பியபடியே சென்னை மண்ணில் முதலில் கால்வைத்தது அங்கேதான். சமகாலத்து தமிழ்த்திரை மரபுப்படி வலதுகாலை கடிகாரச்சுற்றுபடி மூன்று சுற்று சுற்றியபடியே தரையை ஓங்கி மிதித்தேன். தூசிதுரும்புகூட அசையவில்லை. போகட்டும். பிறகு போரூர் வாழ்க்கை, மைலாப்பூர், விண் டி.வி, சினிமா ஆசை, நடிகர் சத்யராஜை சந்திக்க ஏற்பாடு போன்றனவெல்லாம் நடந்தது. அக்கட்டத்தில்தான் என் கதையொன்று வாரமலரில் வந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் படித்து முன்னேறி மாவட்ட ஆட்சித்தலைவன் ஆகிறான் பாணியில். பிறகு கேட்கவாவேண்டும் ‘டேரக்டா ஹீரோதான்’ என்ற லட்சியக்கனவு வந்துவிட்டது. போரூர் நகர வீதிகள் கதறகதற கண்விழிப்பது என் பகற்கனவில்தானென்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். சொல்லமுடியாது இந்நேரம் தனுஷிற்கு சரியான போட்டியாக வந்திருப்பேன் ‘உடலளவில்’.

*

Friday, July 29, 2011

காத்திருத்தல்


பெரும்பாலும் பெரிய விசயங்களைவிட சிறுசிறு விசயங்களில்தான் காத்திருத்தலென்பது ஒரு சுமையெனப் படுகிறதெனக்கு, என் புத்திக்கு. நான் காத்திருந்த நேரங்களைவிட காக்கவைத்த நேரங்கள்தான் அதிகமிருக்குமென்பது இதையெழுத நினைக்கும்போதுதான் ஞாபகம் வந்துதொலை(க்)கிறது. விவசாயி மழைக்கு, மாணவன் பரிட்சை முடிவுக்கு, இளைஞன் காதலுக்கு, பெண் திருமணத்திற்கு, ஒரு குடும்பத் தலைவன் கணக்குப் போட்டு கடன் வாங்கி பின் வரும்படிக்கு என இப்படி ஒவ்வொரு காலத்திற்குமான ஒவ்வொரு வகை  பெரிய காத்திருப்புகள் கட்டாயம். ஒரு காத்திருத்தலும் அதற்குள் மனதிற்குள் உண்டாகும் எண்ணங்களும் மொத்த வாழ்வின் வலி, போராட்டம், தவிப்பு, இன்பம், துன்பம், அனைத்திற்கும் மேலான ஒருவித சுகச்சுமை போன்ற அத்துணைப் பண்புகளையும் காலத்திற்கேற்றாற்போல் ஒருங்கே கொடுத்துவிடுகிறது. நான் இத்தனைப் பிசகில்லாமல் எளிமையாகக் கடந்திருக்கிறேனோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இது வரமா, சாபமா தெரியவில்லை.



தெருவே அல்லோகலப்பட்டுக் கிடந்தது. அனைத்து வீட்டு வாசல்களிலும் என்னொத்தச் சிறுவர்கள் வெடிகளை காயப்போட்டிருந்தனர். பார்க்கப்பார்க்க பொங்கிப் பொங்கி வந்தது. மாலை மணி ஆறாகிவிட்டது. அப்பா வந்தபாடில்லை. மாயவரம் மரவாடிக்கு சென்றிருந்தார். துணிமணிகளை எடுத்து ஒரு மாதமாகியிருந்தது. ஆனால் வெடி? ‘தோ செத்தயிரு வந்திடும்பா’ இரும்புச் சாரணியில் முறுக்குப் பிழிந்தபடியே அம்மாவின் ஆறுதல். பாவி மனசு கேட்கணுமே. ஏக்கமும், தவிப்பும் நிரம்பி உதடுகள்வழி பிதுங்கி பொங்கிவிட்டது. ஏழு, எட்டு... கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி பொங்கலும் அடங்கியது. எனக்கு அப்போது புஸ்வானம் விட ரொம்பப் பிடிக்கும். ஒரு புள்ளியிலிருந்து விரிகின்ற மலர்போல அழகு.   எல்லோர்வீட்டு பிள்ளைகளும் புஸ்வானம் விட்டுக்கொண்டிருந்தனர். நான் ‘புஸ்’ஸானேன். உண்டேனா இல்லையாவென்று தெரியவில்லை ஆனால் உறங்கிவிட்டேன். பதினொன்றரை மணியிருக்கலாம் அப்பா வந்தார், ஐம்பது ரூபாய் வெடிகளுடன். அம்மா எழுப்பி காட்டினாள். செய்தித்தாளில் சுற்றி சணல் போட்டுக் கட்டியிருந்தார்கள். காத்திருந்த மனதிலிருந்து அத்தனை அடைசல்களும் நீங்கி ஆற்றாமையும், தவிப்பும், பொய்க் கோபங்களும் பெருமூச்சின் வழி காற்றுடன் கலந்தது. ஐப்பசி குளிரில் புஸ்வானங்கள் ஜில்லென்றிருந்தது. ‘இந்தா இந்தா கொளுத்து’ என்று அப்பாவும் துணைக்கு வந்தார். மழையும் வந்தது.



கல்லூரிக் காலம். பவானியின் அண்ணனைப் பார்க்க தனியாக ஆக்கூர் பஸ்டாண்ட் பேக்கரி கடையில் உட்கார்ந்திருந்தேன், இடுப்பில் பைப் கத்தி சகிதம். பவானியை காதலித்தேனென்பது உலகறிந்தது. அந்த ‘ஒரே’ குற்றத்திற்காக என்னை ஆள்வைத்து மிரட்டினான், கிராதகன். வந்ததே கோபம், வச்சனா தகடியா ஒன்று நான், இல்லை அவன். அதற்குதான் அந்தக் காத்திருத்தல். என்னை மிரட்டியவன் பார்த்து விட்டான். ஆனால் கண்டு கொள்ளவில்லை. 2வது சந்திலிருக்கும் பவானி வீட்டிற்கு அவன் சென்றிருக்க வேண்டும். அந்த சந்து முகனையில்தான் பஞ்சாயத்து அலுவலகம். அதுவரை எந்த வம்பு தும்புகளுக்கும் போனவனில்லை. அரசமரம், கோயில்கள் தவிர்த்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பஞ்சாயத்து நடக்குமென்பது என் அறிவீனம். கொஞ்சம் மனதுக்குள் வியர்க்கத் தொடங்கியது. போன பேருந்தைக் காணோம். ஒண்டிக்கட்டை. எவ்வளவு தைரியம்?  இவ்வளவு தூரமென்று உணர்வதற்கும் நேரமில்லை. பொதுவாகவே நான், இணையாகவிழும் இரு மழைத்துளிகளுக்கிடையேப் பிசகாமல் நுழைந்துவரும் புஷ்டியான உடலமைப்பைப் பெற்றவன். சற்றைக்கெல்லாம் அவள் அண்ணன் வந்துவிட்டான். நல்லவேளை வேறு யாரும் வரவில்லை. ‘டேய் வேணான்டா விட்டுடு, அதான் புடிக்கலன்னு சொல்லுதுல்ல, அப்பறம் ஏன்டா?, எப்பாவுக்கு (வாத்தியார்) தெரிஞ்சா பிரச்சன ஆயிடும்.. அவ்ளோதான்’ சொல்லி முடித்தான்.. ப்ப்ப்ரு... இவ்ளோத்தானா? அட சொங்கிப்பயலே.. (மனதிற்குள்) முகத்தை விரைப்பாக வைத்திருந்தேன், கையும் காலும் கடகட, மனது பக்பக். அடுத்த பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினேன். அரைமணி நேரமானது... அந்தக்(கால) காத்திருத்தலொரு இளப் போராட்டம்.



அதே காலம். நண்பனையும் அவன் காதலியையும் பேருந்தில் ஏற்றிவிட்டோம், இன்னொரு நண்பனும் நானும். சம்போ சிவசம்போ பாடல் அப்போதில்லை. இரண்டுநாள் கழித்து நானும் அவனும் காவல் நிலையத்தில், ஆய்வாளர் வருகைக்காக ‘அமர’ வைக்கப்பட்டிருந்தோம். காவல் நிலையமென்பது சிகப்புக் கலர் பெயிண்ட் அடிக்கப்பட்ட கட்டிடமென்பது என் பரம்பரைக்கே அத்துப்படி. அதில் ‘உள்ளாழ்ந்து’ நடப்பவற்றை முதலில் ‘புல’னாய்வு செய்தவன் நான்தான். பெண்ணைப் பெற்றவர் ‘உங்க ரெண்டுபேரையும் என்னப்பண்றேன் பாருங்கடா’  என்று காவல்நிலைய வாசலில் சவால்விட்டுக் கொண்டிருந்தார். (என்) அப்பா கொஞ்சதூரம் தள்ளி மரநிழலில் குருசாமியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் காவலர், தெருக்காரர், மேலும் எங்களிருவருக்கும் வக்காலத்து. வரப்போகும் காவல்துறை ஆய்வாளர் மிகவும் கண்டிப்பானவரென்று அறிந்திருந்தேன். உள்ளே மரப்பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பனும் நானும் உச்சா போகாதக் குறைதான். ‘ஒழுங்கா உண்மையச் சொல்லிடுங்கடா, விட்டுர்றோம், அய்யா வந்தாருன்னா பின்னிருவாரு’ என்னமோ சடைப் பின்னுவதுபோல் அந்த எழுத்தர் சொன்னார். அடிவயிறு முட்டியது. எப்பாடுபட்டாலும் உண்மையைச் சொல்லக்கூடாது என்பது எங்கள் திண்ணம். ஆனால் லத்தியைப் பார்க்கும்போது அது இளகிக்கொண்டிருந்தது. அதுவரைக்கும் அப்பாவின் விளக்கமாத்து அடிகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட எனக்கு லத்திகளை பார்த்தபோதே வலிக்க தொடங்கிவிட்டது. நண்பனுக்காவது கொஞ்சம் என்புசதை போர்த்திய உடம்பு, இங்கே என்புதோல்தான்.. ஒரு மணிநேரம் ஆகும். உதைவாங்க காத்திருந்தோம். அம்மா, அப்பா, அக்கா எல்லா உறவுகளும் கண்முன் நிழலாடியது. வாங்கப்போகும் அடியின் அச்சாரம் எப்படியிருக்குமென்பதை பக்கத்திலிருந்தவன் கன்னம் சொல்லியது. வந்தார். சில கட்டளைகள், சில வசவுகள், எச்சரிக்கைகள்...அவ்வளவுதான். சோம்பல் முறித்துக்கொண்டு வெளியே வந்தேன். காத்திருந்த அப்பா அழுதிருந்தார், பெத்தமனம்...


அழைத்த அண்ணன் மாதவராஜ் அவர்களுக்கும் நன்றி.

Friday, May 6, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்

சென்ற வாரம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரின் உறவினருக்கு அவரசமாக இரத்தம் (வெள்ளை அணுக்கள் மட்டும்) தேவைப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் இணையத்தில் பகிரலாம் என்று யோசித்தேன். பிறகு வழக்கம்போல் எங்கள் வேலுஜி இந்த (http://www.friendstosupport.org/index.aspx) (http://www.blooddonors.in/) இணைய தளங்களில் இருந்த இரத்தம் கொடுக்கும் தன்னார்வலர்களின் அலைபேசி எண்களை சேகரித்து, அழைத்து 15 நிமிடங்களில் வேலை முடிந்தது. இதில் கிடைத்த 5 எண்களை தொடர்பு கொண்டதில் 2பேர் முன்வந்தார்கள். வாரம் ஒருமுறையாவது எங்களுக்கு இந்த இணையங்கள் பயன்படுகிறது. உங்களுக்கு எந்தவகையான இரத்தம் தேவைப்படுகிறது, நீங்கள் எந்த மாவட்டம், எந்த ஊர் போன்ற விபரங்களை கொடுத்தவுடன் உடனடியாக அந்தப்  பகுதியிலுள்ள இரத்ததானம்  கொடுப்பவருடைய முகவரி மற்றும் அலைபேசி எண்களை பெறலாம். பயனுள்ள தளம். மேலும் நீங்கள் இரத்த தானம் செய்பவராகவோ, அல்லது செய்யவிரும்புபவராகவோ இருந்தால் இந்த தளத்தில் உங்களது அழைப்பு எண் மற்றும் முகவரியையும் பதிந்து வைத்துவிடுங்கள். இல்லையெனில் என்னைப்போல் 50 கிலோ எடையை தாண்டாமல் இருங்கள்.

•••

30 நாட்களாக வலதுகையில் குடியிருந்த மூன்றங்குல ‘ஆணியை’ மருத்துவர் எடுத்துக்கொண்டார். இப்போதுதான் கை உடைந்ததுபோல் உள்ளது. ஒருமாதமாக நொண்டிக்கையை சாக்காக வைத்து பெற்றுவந்த சலுகைகள் ‘கிளிக்கு ரெக்க முளைத்துடுத்து, ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்து‘ கதையாகிவிட்டது. மொத்த உடலெடையில் 15 கிராம் குறைந்திருக்கிறது. எப்போதும்போல் 50 கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டேன். மருத்துவத்துறை முன்புபோல் இல்லை. புறங்கையில் ஒரு சுள்ளி எலும்பு முறிந்ததற்கு 9 ஆயிரத்து முன்னூத்துச் சொச்சம் செலவு. எதற்கெடுத்தாலும் பிளேட், கம்பி, ஸ்க்ரூ, ஆப்(பு)ரேசன், எதோ டெம்ப்போ லாரிக்கு பாடி கட்டுவதுபோல் செய்கிறார்கள், நல்லவேளை வெல்டிங் மிஷின் மட்டும் இல்லை. இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீடு, க.கா.தி, அல்லது நட்சத்திரம். படுக்கவைத்து இரண்டுநாள் படுத்தியெடுத்து ரவுண்டாக ஒரு தொகை கரந்துவிடுகிறார்கள் மடியில்(இல்)லாவிட்டாலும், நம்மிடம் அல்லது காப்பீடு மூலம் இப்படி இம்சைப்பண்ணும் மருத்துவர்கள் இன்னொசென்ட் என்ற பெயரில்கூட இருக்கிறார்கள். எண்ணெய்க்கட்டு, புத்தூர்கட்டு, மாவுக்கட்டு, அறுவைசிகிச்சை, கம்பிகள்... ; கழனித்தண்ணி, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, SKM மாட்டுத்தீவனம், ஊசிகள்.... 

••••

5 வயதில் ராக்கெட் விடவேண்டும் என்ற ஆசை வந்தது. பள்ளிக்கூடத்தில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன். வீட்டிற்கு வந்து எங்கே பேப்பர், எங்கே பேப்பர் எனத்தேடியதில் சிக்கியது அந்த திருமண பத்திரிக்கை. கூராக மடித்து சொய்ங்..சொய்ங்.... மணியன் தாத்தா வீட்டுக்கொல்லையில் விழுந்தது. வேலியை தாண்டி எடுக்க திரானி இல்லை. மறுநாள் அந்தத் திருமணம். அப்பா பத்திரிக்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்மீதான குற்றச்சாட்டு சகல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது. வழக்கம்போல விளக்கமாறுதான்.  மியாமிக்குஷன் செருப்பை மறைத்து வைத்திருந்தேன். தெருவில் ஓடவிட்டு அடித்தார். யாரோ ஒரு புண்ணியவான் உதவ, அதை எடுத்துகொடுத்துவிட்டேன். விசயம் அதுவல்ல. சமீபத்தில் யப்பாரின் மேஜையை பீராய வேண்டிய கட்டாயம், கரையான். பூராவும் பழைய திருமணப் பத்திரிக்கைகள், தொழில் சம்பந்தப்பட்ட கணக்குநோட்டுகள், 1980 க்கு பிறகு வந்த கடிதங்கள், என்னுடைய 3ம் வகுப்பு பாட குறிப்பேடு, கூடவே அந்த திருமணப்பத்திரிக்கையும். நிறைய பத்திரிக்கைகளையும், கடிதங்களையும் பொறுமையாக அமர்ந்து வாசித்தேன். பின்னோக்கிய பயணம்தான் எவ்வளவு சுவாரசியம். எனது நண்பன் ஒருவனின் பெற்றோருக்கு நடந்த திருமணப்பத்திரிக்கையும் அதில் இருந்தது. அவனிடமே காட்டியும் மகிழ்ந்தேன். இப்பவும் வீட்டின் எதோமூலையில் வருகிற பத்திரிக்கைகளை திருமணம் முடிந்ததும் கொக்கியில் சொருகிவிடுகிறார் அப்பா.  சென்றவாரம் நண்பனொருத்தன் திருமணத்திற்கான அழைப்பை குறுந்தகவலாக அலைபேசிக்கு அனுப்பினான், ‘புடவைடா (sarry) மாப்ள. ட்யூ டூ ஸார்டேஜ் ஆப் இன்விட்டேசன்‘ இன்ன கிழமை, இன்ன தேதி, இன்ன நேரம், இவளுக்கும் எனக்கும் இன்னக்‘கொடுமை’ யென்று.    படித்துவிட்டு உடனடியாக உள்பெட்டியை சுத்தம் செய்தேன். என் புத்தி.

••••

ஒரு நூலை விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு புத்தியில்லையெனக்கு. ஆனாலும் இந்த நூலைப்பற்றி எதாச்சும் சொல்லவேண்டுமென்று மனது அடித்துக்கொள்கிறது. படித்து ஒருமாதமாகிறது. இன்றளவும் அசைபோடுகிறேன். இதைப்பற்றி விமர்சித்தவர்களையெல்லாம் தேடிதேடிச்சென்று படிக்கிறேன். சென்ற மாதம் ஆஸ்பத்திரியில் 2 நாள் படுத்துக்கிடந்தபோதுதான் வாசித்தேன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள். ஒரு அற்புதமான படைப்பு. கேரளத்து மண்ணில் எல்லாவித பசியோடும் ஒடுங்கிய வயிற்றோடுமலைந்த அந்தக் கவிஞனின் வாழ்க்கை சில பக்கங்களில். பெரும்பாலும் வறுமையில் சிதைந்த முகத்துடன், கூடவே சபலம், ஆற்றாமை, குற்றவுணர்வுகள். ஒரு மனிதனின் முகம் வெளிக்காட்டக்கூடிய அனைத்து உணர்ச்சிகளையும் படிக்கும்போது உள்ளத்தால் உணரவைக்கிறார். ஒரு இடத்தில் ‘மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான், நான் சாப்பிட ஆரம்பித்தேன்’ என்றிருப்பார், அந்த கணம் மனதைப் பிசையும். ‘சிதம்பர ஸ்மரண’ என்ற இந்த மலையாளப் புத்தகத்தினை வம்சி பதிப்பகம் வழியாக அதே உணர்வுகளோடு தமிழில் கோர்த்திருக்கிறார் திருமதி.கே.வி. ஷைலஜா. எனக்காக இதை பரிந்துரைத்தவர் திருமதி. பத்மஜா. இருவருக்கும் என்றென்றும் நன்றிகள். 



••

Monday, December 27, 2010

நன்றி என்னய்யா பெரிய நன்றி...

நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய அலைபேசிக்கு ஒரு பழக்கமிருக்கிறது, எப்போதும் ஊமையாகவே இருப்பது. அதற்கு அடிமையாகாமல் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கதைவிட்டாலும் அந்தளவிற்கு எனக்கு அழைப்புகள் வருவதில்லையென்பது உண்மை. மேலும் சீக்குவந்த கோழியின் தலைபோல அலைபேசியில் பேசிக்கொண்டேயிருப்பதும் எனக்கு பிடிக்காத செயல்தான். இந்த இரண்டு நாட்களாக என் அலைபேசி ‘சிரித்து’க்கொண்டேதானிருந்தது. சங்கமத்தைப்பற்றிய அழைப்புகள் மற்றும் கலந்துகொள்ளும் நண்பர்களின் அழைப்புகளென்று இந்த திருவிழாவில் பங்கேற்ற பெருமை என் அலைபேசிக்கும் உண்டு. இரட்டிப்பு மகிழ்ச்சி இப்போது உள்ளது. இப்படியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள் எல்லோரையும்  முதற்கண் வணங்குகிறேன்.

ஒரு பெரிய மலையை இரண்டுகைகளினால் புரட்டிப்போட்டதுபோன்ற பிரமிப்புணர்ச்சி எங்கள் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கிறது. இந்த முல்லைச்செடியை வளர்த்தது நாங்கள்தானென்றாலும் தேர்கொடுத்தவர்கள் நீங்கதானே. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் எங்களின் சங்கமத்தில்  இத்தனைப் பதிவர்கள் கலந்துகொண்டதையெண்ணி மிகவும் மகிழ்கிறேன்.  நாட்கள் நெருங்கநெருங்க எனக்கு கொஞ்சம் பயம் எடுக்கத்தான் செய்தது. எங்களது ஏற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தவேண்டுமே என்கிற இதயத்துடிப்புதான் அதற்கு காரணம். இப்போது வருகைதந்தோர் ஒவ்வொருவரும் இதைப்பற்றி சிறப்பாக கூறும் போது எங்களது உழைப்பு பயனுள்ளதாகிவிட்டது என்ற திருப்தியும் ஒட்டிக்கொண்டுள்ளது.

எங்களது உழைப்பு என்பது இந்நிகழ்வில் மிக மிக குறைவுதான். ஒவ்வொருவருடைய வாழ்த்தும் வருகையும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியில் அடங்கியுள்ளது. ஏதோவொரு சந்திப்பு நடைபெறுகிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்று சிரத்தையெடுத்துக்கொண்டு வருகைபுரிந்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள், மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டவர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு அனைத்துவகையிலும் உதவியவர்களுக்கும் எனது நன்றியை தனிப்பட்ட முறையிலும், குழுமத்தின் சார்பாகவும் தெரிவிக்கிறேன்.

குறிப்பாய் இம்மாபெரும் விழாவிற்கு வருகைதந்த பெண் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்.

நன்றி என்னய்யா பெரிய நன்றி... கண்கள் பனித்ததும் இதயம் இனித்ததும்  (கலைஞர் உபயம்) எப்படியென்று மனதார உணர்ந்தேன். எல்லோருக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்...


நன்றி...நன்றி...நன்றி சொந்தங்களே!!!!


சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் பட்டியல்

மேலும் விரிவான இடுகை ஈரோடு கதிர் அவர்கள் பக்கத்தில்
 
 சங்கமம்‘2010 படங்களைக் காண இந்த சுட்டியை சொடுக்கவும்



Friday, November 19, 2010

ஏன்யா இந்த காண்டுவாதம்?

சாதாரணமாவே கல்யாணம் முடிச்சு புதுபொண்டாட்டிய அம்மாவோட விட்டுட்டுப்போற வெளியூரு மாப்ளைகள் பாடு திண்டாட்டம். இதுல பயபுள்ள ஃபாரின்ல இருந்தா கேக்கவாவேணும். இப்டித்தான் எதுத்த வீட்லையும், பக்கத்தால லலித்தாக்கா, அதுக்கடுத்தால ஆனந்தி பெரிம்மா வீட்லையும் பசங்களுக்கு கல்யாணம் முடிச்சி அந்தப்பயலுங்க மூணுமாசம் லீவு முடிஞ்சி ஃபாரின் போயிட்டானுங்க. ஒரு வருசம் முடிஞ்சி புள்ளப்பெத்தபெறவுன்னு அதுவரைக்கும் மாமியா மருமகக்குள்ள எந்த பிரச்சனையுமில்ல. பாராட்டத்தான் செய்யணும். லைட்டா ரெண்டாவது வருசம் தீவாளி, பொங்கலுக்கு வரிசை வய்க்கிறப்பத்தான் எழவெடுத்த சண்ட ஆரம்பிச்சுது. முதல்ல லலித்தாக்கா வீட்ல. அஞ்சு தட்டு நெறைய சாமான்ங்கள  பொங்கச்சீரா அடுக்கிக்கொண்டுவந்தாலும் நொட்டாரம் சொல்ற மாமியாக்காரிங்க எங்கதான் இல்ல. அந்த நொல்லக்கண்ணு லலிக்கு மட்டும் இல்லாமலா போயிடும். என்மொவன் வெளிநாட்ல அவ்ளோ சம்பாரிக்கிறான், நாதியத்த குடும்பத்துல பொண்ணுகட்டி ஒண்ணுத்துக்கும் வழியில்லாம போயிடுச்சுன்னு அக்கம்பக்கத்து அக்காக்களோட சாயந்தரம் ஆனா கதையளக்க ஆரம்பிச்சிடும். கடைசியிலப்பாத்தா இந்தம்மாளோட பொண்ணுக்கு புருஷங்காரனவிட்டு மணியார்டர்ல 200, 300 ஓ அனுச்சிட்டு அடுத்தவன கொறசொல்லும். 

ஆத்துக்குப்போறவ அன்னாந்துகிட்டே போவாளாம், கூத்துக்குப்போறவன் குனிஞ்சிகிட்டே போவானாம் அந்த கதையா பெட்ரூமு, பைப்படி, அடுப்படி, சன்டிவி, ஆனந்தவிகடன், மாட்டுக்கொட்டா, ஏனம் வௌக்கறது, துணி தொவைக்கிறதுன்னு தன்னோட கோவத்தல்லாம் காட்டிட்டே பொழுத ஓட்டுற மாட்டுப்பொண்ணு சும்மாவா இருப்பா. தன்ன திட்டினாலும் கோவப்படாத எந்த பதுசான மனுஷிக்கும்  அப்பனாத்தால திட்டனா பொசுக்குன்னு வரத்தான் செய்யும். கோவத்துல ஒன்னு அழுவா, இல்லன்னா டக்குன்னு எதாவது ராங்கி ரப்பான வார்த்தையா கொட்டிடுவா. மாமியாளோட ஆட்டத்த ஆரம்பிக்க இதோட காரணம் வேணுமாயென்ன. அப்பறமென்ன ஈருகுளில்ல மாட்டின பேன் கதைதான் புதுப்பொண்ணோட பொழப்பு•. அது என்னமோத் தெரியல. எல்லா மாமியாக்காரிகளும் அம்மாவா இருக்கிறவரை நல்லாத்தாங்க இருக்குதுங்க. மருமக வந்தா அப்டியொரு குஜால் ஆயிடுதுங்க. சிக்கிட்டாடா ஒரு அடிமைங்கிறமாரி. 

ஈர நாக்குல யாருக்குத்தான் எலும்பிருந்திருக்கு. தெருக்கள்ல பாத்திங்கன்னா கட்டுக்கழுத்திங்கன்னு நாலுபேரு இருக்கும்ங்க. எங்கன கல்லு கருமாதி, நல்லதுகெட்டது, சாதி சடங்கு, சீமந்தம், வளயகாப்புன்னாலும் ஆரத்தியெடுக்கறதுக்கும் அம்மிக்கல்ல தூக்கி நேரா மூணு சுத்து, ரிவர்ஸ்ல மூணு சுத்து சுத்தறதுக்கும் இதுங்கத்தான் முன்னாடிப்போயி நிக்குங்க. ‘யக்கா பாத்துப்பாத்து கொண்டாந்த மருமவ ஒன்னையே எதுத்து பேசிட்டாம்ல. அப்டி என்னக்கா அவ்ளோ அதப்பா அவளுக்கு’ன்னு மூக்குப்பொடிய மூஞ்சிலத்தூவினாமாரி ஏத்தி விட்டுடுங்க. இதுக்கெடையிலத்தான் ரூமுக்குள்ள குமுறி குமுறி உட்காந்திருக்கிற மருமவ சிறிக்கி ஏர்மெயில் கவர் வாங்கி கண்ணீர் கடிதத்த ஆரம்பிக்கும்.. ‘அன்புள்ள அத்தான், அவ்வ்வ்வ்வ்வ்வ்....... ’ அதுக்கப்பறம் சொல்லவா வேணும், வந்தது போனது, நடந்தது நடக்காதது எல்லாத்தையும் நாலு பக்கமா எழுதி போஸ்ட் ஆயிடும். 

அதுக்கு முன்னாடியே ஆத்தாக்காரி 8 பக்கத்துக்கு கொறயாம எதுத்தவீட்ல எவனாச்சும் என்னாட்டம் இளிச்சவாயன் இருந்தான்னா எழுதச்சொல்லி ‘இங்க பாருடா மோகனு, உம் பொண்டாட்டி சரியில்ல, எது சொன்னாலும் எதுத்து எதுத்து பேசுறா, எதாச்சும் வேல சொன்னா மூஞ்ச சுழிச்சிக்கறா, ஆவூன்னா ரூமுக்குள்ள போயிடுறா, கரண்டு இல்லன்னா இந்த கொடகல்லுல ஆட்டுனா என்னா? அதகூட செய்யமாட்டுறா, அதென்னமோ குசுகுசுன்னு ஒரு நாளைக்கு ரெண்டு தரம் அவவீட்டுக்கு போன் பண்ணி கொறசொல்றா, போன் பில்லு நறையா வருது, சோறு போடுறப்ப தட்ட கீழ வச்சி சல்லுன்னு தள்ளிவிடுறா, உங்கொழந்தைய கொஞ்சநேரம் கொஞ்சக்கூட விடறதில்ல, சாயந்தரம் ஆனாவே பொட்டுதான் பூவுதான் சென்ட்தான். மேக்கப் போட்டுகிட்டு சித்ரா வீட்டுக்கு போயிடுறா, அவளும் இவளும் என்னதான் அப்டி பேசுவாங்களோ தெரியல, திரும்பி வர 9 மணிஆவுது. அதுவரைக்கும் எனக்கு சோறு போடறதில்ல. பேசி முடிச்சிட்டு வந்தப்பறம்தான் எனக்கு சோறு போடுறா. நானே போட்டு சாப்புட தெம்பாயிருக்கு. அவளோட சேர்மானம் சரியில்ல சொல்லிட்டேன் ஆமாம். அப்பா அன்னைக்கு எதோ சொன்னதுக்கும் எதுத்து பேசுறா, இது சரியில்ல. நானும் நீ மனசு கோணக்கூடாதேன்னுதான் எல்லாத்தையும் பொருத்துக்கிறேன். இப்பவும் நீ நல்லாருக்கனும்னுதான் நெனக்கிறேனே ஒழிய நான் என்னத்த மூட்டக்கட்டிகிட்டு போவப்போறேன் (ரெண்டு சொட்டு கண்ணீரு) சொல்லு. உம்பொண்டாட்டிய அடக்கி வைய்யி, இல்லன்னா உம் அம்மாவ நீ உசிரோட பாக்கமுடியாது. அவ்வ்வ்வ்வ்’ அப்பறம் எடையில எடையில மானே தேனே பொன்மானே.....

ங்ங்கொய்யால இந்தமாதிரி லெட்டர படிக்கிறவன் துபாயிலையும், சிங்கப்பூருலையும் நிம்மதியா வேலை செய்யமுடியும்கிறீங்க. ஏறச்சொன்னா எருதுக்கு கோவம் வரும், இறங்கச்சொன்னா நொண்டிக்கு கோவம் வரும்னு ஒரு பழமொழி உண்டு. இந்த மத்தளத்துல ரெண்டுபக்கமும் அடிவாங்குற தோலு மாதிரி கல்யாணம் முடிச்சிட்டு ஃபாரின் போற மாப்பிள்ளைங்க பொழப்பு நாத்தப்பொழப்புங்க. இதுங்க ரெண்டுபேரையும் சமாளிச்சு ஒருவழியா ஓஞ்சிப்போயிடுவான் அந்த படுபாவி. அது ஏன்டா உனக்கு இந்த ஃபீலிங்குன்னு நினைக்கிறீங்களா? ஏரி நிறைஞ்சா கரை கஸ்ஸ்ஸ்ஸியத்தானங்க செய்யும். எங்கத்தெருவில அஞ்சாரு குடும்பங்கள்ல இந்த நெலமத்தாங்க. இதெல்லாம் நெனச்சுப்பாக்குறப்பதான் ஏன்யா இந்த காண்டுவாதம்னு தோணுது.  



Monday, October 25, 2010

ஒரு கூடும் சில குளவிகளும்

நான் வந்த பேருந்தில் ஏறியவர்கள் கணவன் மனைவியாக இருக்கவேண்டும். தொடை உயரம் ஒரு மகன், இன்னொரு குழந்தை அப்பன் தோளில் தூங்கியது. அவர் கையில் பால் பாட்டிலும் தயாராகவே இருந்தது. பேருந்தினுள் நான்குபேர் இடைவெளியில் இருவரும் நின்றுகொண்டார்கள். மூக்கொழுகும் பெரிய மகன் அவளின் காலை கட்டிக்கொண்டான். ஒரு கையால் மேல்கம்பியை பிடித்துக்கொண்டாலும், மறுகையில் துணியடைத்த குச்சிப்பையை வைத்துக்கொண்டாள். ஒருவரின் மூச்சுகாற்று அடுத்தவர் முதுகில் சூட்டைப்பரப்புமளவு கூட்டம். இருவர் இருக்கையில் அமர்ந்திருந்த குண்டு சிறுக்கிகளுக்கு மூன்றுபேர் இருக்கையே தாங்காது. அவர்களின் தள்ளுமுள்ளலும் இவளுக்குத்தான் இடைஞ்சல். அவ்வப்போது விலகும் மாராப்பையும், இடுப்புச்சேலையையும் சரிசெய்துகொண்டாள். அருகருகே நிற்கும் ஆண்களின் இடிசலுக்கும், நடத்துநர் நடையழகுக்கும் ஓர் உடலங்கத்தை அவள் ஒதுக்கிவைத்தே ஆகவேண்டும். இந்த மேடுபள்ள சாலையில் பயணிப்பதில் ஆண்களுக்கே அடிவயிறு கலக்கும் அபாயம் உண்டு. ஐந்தாவது முறையாக பெரிய மகனின் ஒழுகும் மூக்கை முந்தானையால் துடைத்துவிட்டாள். ஒரு வேகத்தடையை கடந்தது பேருந்து. அப்பனிடம் தூங்கிய குழந்தை விழித்துக்கொண்டது. இவளைப்பார்த்து அழத்தொடங்கியது. அவர் பாலைக்கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார், குடிக்கவில்லை. அனைவரும் கவனிக்க தொடங்கினர், சிலருக்கு எரிச்சலும்கூட. அப்பன் கையில் திமிரிய அந்தப்பொடிசை அவளே வாங்கிக்கொண்டாள். ‘ச்ச்சுச்சூ...ச்ச்சுச்சூ...ஏஞ்செல்லம் அழுவுறீங்க.....’ என்றபடியே இடுப்பில் அமர்த்தி முத்தமிட்டாள், அவ்வளவுதான்....அதுவும் சிரித்தது, அவளும் சிரித்தாள்..... நான் இறங்கவேண்டிய நிறுத்தம் கடந்துவிட்டது.

•••••••

அக்கா மகள் தன் குறிப்பேட்டைக்காட்டி ’மாய்மா...இத பாறேன்’ என்றாள். ‘அ’னா‘வை அழகாக எழுதியிருந்தாள்.

‘ரொம்ப நல்லாயிருக்கே நீங்களா எழுதினீங்க?’என்றேன்.

‘ம்ம்ம்’ என்றாள்.

‘எந்த மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க?’

‘ஹர்ஸா மிஸ்’

‘ஓ...எங்க மறுபடி எப்டின்னு போட்டுக்காட்டுங்க பார்ப்போம்’

‘பர்ஸ்ட் மேலவொரு ஸ்மால் சர்க்கிள் இப்டி போட்டுட்டியா, அதுக்கு கீழ ஒரு பெரிய எலிப்ஸ், அப்பறம் ரெண்டையும் ஜாயிண்ட் பண்ணி ஒரு கர்வ், நெக்ஸ்ட் ஒரு ஹரிசான்டல் லைன், வெர்டிகிள் லைன். அவ்ளோத்தான்.......’

அக்கா கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள், மாமா பூரித்திருந்தார். ஒன்றாம் வகுப்பு சேரும்போது தமிழ்பண்டிட் பொன்னுசாமி அய்யா என் விரலைப்பிடித்து சிலேட்டில் ‘அ’ எழுதிக்காட்டியதை நினைத்துக்கொண்டிருந்தேன். விட்டத்து மூலையில் ஒட்டடைக்கூட்டினில் சிக்கிய பொன்வண்டை பார்க்கப் பாவமாயிருந்தது.

•••••••••

இப்போதெல்லாம் அவளை நினைத்துப்பார்ப்பதை குறைத்துவிட்டேன். ஓர் அகண்டவாய் ஏனமாக இன்றைய நிலை மாறிவிட்டதாலோ என்னமோ கொண்டதெல்லாம் கொண்டுவிடுகிறது. அவளென்னுள் படிந்த வேகம் ஒரு குறுகிய காலம். ஒரு ஜென்ம பகையும், ஏழு ஜென்ம நினைவுகளையும் மனதிலிருந்து சுரண்டமுடியாமல் செய்துவிட்டாள். ஒரு பெட்டிக்குள் அடைபட்டுள்ள துணிகளாய் வர்ணவர்ணமாய் அவளின் காதல் அடைந்துகிடக்கிறது. அவ்வப்போதைய கனவுகளும், சில பெருவெளி தனிமையும் அணிந்துகொள்வதோடு சரி. முக்கி முனகி நான்கு வருடங்களை கடந்துவிட்டேன். அண்ட சராசரங்களனைத்தும் ஒரே ஜீவனுக்குள் அடக்கிவைத்திருந்திருப்பதாய் பாரமாகவே கழிகிறது பொழுதுகள். ஒரு கழுமரமும் அதிலமர்ந்த காகமுமாய்த்தான் மடிந்து புலரும் பொழுதுகள் கண்ணாம்பூச்சிக்காட்டி ஓடி ஓடி மறைகிறது. எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டி மட்கசெய்துவிடத்தான் பார்க்கிறேன். போகும் வழியெங்கும் சேகரிப்பது குப்பைகளாகவே இருப்பின் எதை எங்கே கொட்ட.

•••••••••

நேற்றைய இரவுப்பொழுதை பேருந்துப்பயணம் மேயந்துகொண்டது. காலையிலதுமிழ்ந்த வெளிச்ச உலகில் மாற்றமேதுமில்லை. சென்றவருடத்தைவிட இப்போது 2 கிலோ எடை அதிகரித்திருக்கிறேன். தா(டி)டை முடிகள் சற்றே கூர்மையடைந்து காணப்படுகிறது. மீசை(?!!!)யில் கருமை அடர்ந்துள்ளது. வலது காதுமடல் மேல் ஒரு வெள்ளை மடையானின் இறகு நீட்சி. சென்றவருடம் இது இல்லை. ஒரு இருட்டறையும், அதிலமர்ந்து வாசிக்கும் தொடர்கதையுமாக இவ்வாழ்க்கை புரண்டுகொண்டேயிருக்கிறது எதுவும் புலப்படாமல் அல்லது படுத்தாமல். வெறுமனே புரட்ட 27 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. வீடு கட்டும் மணலில் காற்கூடு கட்டிக் கழித்த வயதுதான் இப்போதைய கனவுகளை சொரிந்து சுகப்படுத்துகிறது. வேறென்ன சொல்ல. இந்த நாளையினிமையாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



.

Friday, September 24, 2010

சுக்குமி ளகுதி ப்பிலி...

கொல்லவாசல் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரத்துகள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்கொடுக்கிற அம்மா இப்பவும் அதேமாதிரிதான் இருக்கு. நானிங்கவந்து நைட்டு ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு பக்கத்து பொட்டிக்கடையில ‘அண்ணா ஒரு பழம்னா?’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாங்க. பொழைப்பத்த அம்மாக்கு பொழைக்கத்தெரியலையா இல்ல எனக்கான்னு தெரியல. இந்த பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.

••••••••••••

ரெண்டுரூவாய தெருமொன ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்வாய்க்கு எப்பாருக்கு ஒரு பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல அதோட லாட்டரி சீட்டுக்கு நடுவுல வைச்சித்தர சுண்ணாம்போட கார்ரூவா கொட்டப்பாக்கு, கார்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச கார்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மாத்ரி.

•••••••••••••

அந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி வய்ச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரங்கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுகடையில வாங்கினா கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகால்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடயையும் சேர்த்து வித்துட்டு புள்ளைங்க சம்பாதிக்கறதே போதும்னு ஊட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அரிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.

••••••••••••

ஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள் எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட வந்தப்ப கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திராவீடு. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கு தாராளமா போதும். இந்தமாடு கறவ விட்டுட்டா அடுத்து அது, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம் பருத்திக்கொட்ட வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட மட்டுமில்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.

•••••••••••

இந்த மண்வெட்டி கால்ல விழுந்தாலுஞ்சரி, அருவா இல்லைன்னா கோடாளி எப்டிக்காயம்பட்டாலும் எலந்த இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும் வெட்டுக்காயம் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் தாத்தனுக்கு இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன என்னொடம்புக்கு அந்த டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும்.

•••••••••••••

அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.



Monday, September 13, 2010

மனிதம் சொட்டிய மலர்கள்...

பிடறியில் விழும் காலத்தின் அடி ஒவ்வொன்றும் வலுவாகவே இருக்கிறது. குன்றினில் ஏறியபின் மதிப்பற்றுப்போகும் கட்டாந்தரையை போலவே எல்லாமும் வளர்‘சிதை‘ ஆகிவிட்டது. கடந்ததை அசைத்துப்பார்ப்பதில் இருளடர்ந்த கனவுகள்கூட அள்ளிப்பருகொத்த அமிர்தம்தான்.

‘செத்த இரு ஆத்தா தோ போட்டுக்கொண்டாறேன், கால்‘ல வெந்நீரயா ஊத்தியாந்த?’,

‘அட பொருடா, அதுக்குள்ள வந்தடமாட்டாங்கொப்பன்’,

‘யப்பா பிரவு கொஞ்சம் மணித்தாத்தாவுக்கு சட்ணி ஊத்துப்பா’,

‘வா மாப்ள ஊர்ல இருக்கியா!!?, இப்பலாம் ரோட்டுக்கடத்தான் கண்ணுக்கு தெரியுதானொக்கு’,

‘வாங்க சார், எதோ கெடக்கன், இது யாரு பேரனா?, பய அப்டியே ஒங்களயே உரிச்சி வச்சிருக்கானே’,

‘இரும்மா அம்மா வந்திடுவா, தாத்தா ஒண்டியா இருக்கன்ல, நிறைய பேரு சாப்டுட்டிருக்காங்க, எல்லாம் போனப்பின்னாடி நீக் கேட்டத வாங்கியாறேன் என்ன’,

‘என்ன பட்டாமணியாரே, பையனுக்கு எதோ வேணுமாமே துரைக்ட்ட சொல்லி வாங்கித்தர்ரது?’,

‘எய்யா செயா அங்காடியில என்னைக்குயா மண்ணன்ன போடுவ? பத்து தேதியாச்சுய்யா......’,

‘என்னத்த சொல்றது மாமா, நாம படுறது நம்மளோட போவட்டும்னுதான் மொவனையாவது வேற வேலைக்கு அனுச்சிட்டு ஒண்டியாவே பாத்துக்கிறேன்‘ என கிராமங்களில் குடிசைக்குளியங்கும் சின்னச்சின்ன உணவு விடுதிகளும், டீக்கடைகளும் உறவுகளுக்குள்ளும், உரிமையெடுப்பிலும் வாழ்ந்துகொண்டிருக்கும். புலரும் ஒவ்வொரு பொழுதும் கொஞ்சலும், குலாவலுமாகவே எல்லாவற்றிற்கும் விடையும் விடிவாகவும் கரைந்துகொண்டிருப்பதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்.



தெருத்தெருவுக்கு விடியலைப் பார்த்து எழுந்து அன்பொழுக பறிமாறப்படும் எந்த உணவிலும் பறக்கும் ஆவியுடன் எதோவொரு மனம் மற்றும் மண் சுவை இருக்கத்தான் செய்தது. அன்போ, பண்போ, பரிவோ, மனிதமோ, உறவு முறையுடன் வந்துவிழும் வார்த்தைகளோ ஏதோவொன்றின் மூலம். அப்பாவின் பெரியவராயின் பெரியப்பாவாகவோ, அம்மாவுக்கு அண்ணனாக்கி மாமாவாகோ, வயதின் மிகை அண்ணனாகவோ ஏதோவொரு முறையில் உறவாகிவிடுவார் அதன் உரிமையாளர். இன்றும் கீத்துக்கொட்டகையில் டீக்கடைகளையும், சின்ன உணவு விடுதிகளையும் சில இடங்களில் காணும்பொழுது நெஞ்சினில் உருளும் நினைவுகள் மலரவே செய்கின்றன.

‘சித்தப்பா நீ படிச்சிப்படிச்சு சொன்னன்னுதான் அத்துப்போன ஒறவ ஒட்டலாம்னு பொண்ணு கேட்க வந்தேன். ஆனா அவன் என்னடான்னா முறுக்கிகிட்டுல்ல போறான்.‘

‘அட இரு மோனே.. நாங்பேசிப் பாக்குறேன். ஒடனேவா கோச்சிக்கறது. எதார்ந்தாலும் பொறும வேணும்பா. இந்தா, டீய குடிச்சிட்டுப்போ நான் பேசுறேன் அவர்ட, நாஞ்சொன்னா மனுஷன் கேப்பான்யா.‘ என்று பிரிந்திருக்கும் உறவுகளை சேர்ப்பதில் தொடங்கி வாய்க்கால் வரப்பு தகராறு வரை தீர்த்துவைக்கப்படும் இவ்விடங்களில் ‘அரசியல் பேசாதீர்’ என்ற வாசகம் மட்டும் அழுத்தம் திருத்தமாக மாவுக்கட்டிகளால் தெரியும். எவரும் உறவாகவும், எல்லாம் இயல்பாகவும் மனிதம் சொட்டும் மலர்களாய் எப்படித்தான் நடக்கிறதோ இந்தக் கடைகள் என்று எண்ணத்தோன்றும் இவ்வேளையில், பளபளக்கும் கண்ணாடி மாளிகைக்குள் இயங்கும் தற்போதைய நவநாகரீக உணவு விடுதிகள் செங்கல்லும், சிமெண்டும் கலந்த புதர்களாகத்தான் காட்சித்தருகின்றன.

அடுத்தவீட்டு முகவரியறியா இக்காலத்தில் எல்லா ‘நகரீய’ மாற்றங்களையும் இழுத்துக்கொண்டு, சீக்குவந்த கோழியாய் சிறுத்துப்போய்த்தான் கிடக்கிறது மனிதநேயமும் மற்றசிலவும்.


Friday, August 20, 2010

ஒளிகளின் நீட்சி...

பட்டிக்குள் அடைபட்ட செம்மறியாட்டுக் கூட்டமென ஆசாபாசங்களை துறக்க பழகிவிட்டது இந்த காலும், கையும். விஞ்ஞான துணுக்கினை வீட்டிற்குள் அமர்த்திவிட்டு அடைகாக்கத்துணிந்த உடலும், மேலிமையை புருவங்கள் கட்டிவைக்க விடியல் வீழ்வதறியாமல் வெறித்திருக்கும் கண்களும் எதையெதையோ தின்றுகொண்டிருக்கின்றன.

நிற்க...

ராஜன் ஜவுளிக்கடைக்காரர் வீட்டுக்கு வந்தபொழுதான் தெரிந்ததெனக்கு தொலைக்காட்சிப்பெட்டியின் மகிமை. நக்கீரர் தெருவுக்குள் இந்த வி.வளர்ச்சியை இழுத்துக்காட்டிய பெருமை ராஜனுக்கு. வாசல் சன்னலில் தொங்கும் திரைச்சீலையை விலக்கி ஒட்டிஒட்டி பத்துப்பதினைந்து கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாக நின்று பருவமடைந்தவளை பதுங்கியிருந்து பார்த்தார்போல் படங்கள் பார்த்த பொழுதுங்கள் இப்போதுமந்த வீட்டின் வாசலில் நிழலாய் நிற்கிறது. பிறகு குருசாமி வீட்டில், அடுத்து ஹரி வீட்டில் இப்படியாக நீமுந்தி, நான் முந்தியென அவரவர் கௌரவம் வீட்டுக்கூடாரத்தை கருப்பு வெள்ளையாக்கியது. யார் வீட்டில் படம் பார்க்கலாமென ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்திருக்கிறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படியில்லை. இந்த ஹை.ஃபி வானொலிப்பெட்டியும், அதில ஒலிக்கும் காரைக்கால் பண்பலையும் அவர்களின் அதிகபட்ச விஞ்ஞானமாக எண்ணியிருந்தனர். வேறெந்த பற்றும் அவர்களை ஆட்கொள்ளவில்லை. அப்பாவுக்கு இதுவரையும்கூட.

அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் வள்ளித்திருமணத்தையும், மயான காண்டத்தையும் கொன்றுவிட்டு சாஸ்த்தா கடையிலிருந்து வாடகைக்கு அந்த தொ.கா. பெட்டியும், ஒரு ஒளிநாடா இயக்கு கருவியும் எடுத்து வைத்தனர். திருவிளையாடலில் ஆரம்பித்து வருஷம் 16 ஓடிக்கொண்டிருக்கும்பொழுது விடிந்தேவிடும். ‘பாரு,பாரு.... எந்த காமுட்டி கோயில்லடா தீவெட்டி புடிச்சே?‘ன்னு வாத்தியார் தலையில் தட்டும்பொழுதான் பள்ளியிலிருப்பதாய் கண்களுக்கு சுரணைவரும்.

‘ஏம்பாலாஜி சவுளிக்கடக்காரு வூட்ல படம் போடுற மெஷினு வந்திருச்சாம்ல. பாத்தியா நீயி’ ன்னு அப்போது கேட்ட அலமேலு அவ்வாவும்(பாட்டி) குத்துக்காலிட்டு திண்ணையிலமர்ந்து ‘இந்த ராசாயா கெழவிக்கும் அது மொவனுக்கு காலைலேந்து எதோ சண்டையாம்லடி நவநி, ஒனக்கு தெரியுமா?’ என்று ஊர் வம்புகளை உலையுடன் சேர்த்து கொதிக்கவைத்த அஞ்சுகம்அம்மாலும், குஞ்சம்மாளும் இப்போது உரலுக்குள் குத்துண்ட நெல்லாக வாசலை எட்டிப்பார்ப்பதில்லை. உறவுகளை வளர்த்ததும், ஊர்வம்புகளை வெற்றிலைப்பாக்குடன் கதைத்ததுமாகயிருந்த பாட்டிகளின் வெறித்தனமான ஆட்சி இப்போது தொ.கா.பெட்டி இயக்குகருவிப் பொத்தான்களுடன்.

ரூபாய் 400 ஓ 600 ஓ மாதாமாதம் உதவித்தொகையாக வாங்கும் ஆதரவற்றோர்கள், கம்பிவழி அலைவரிசை இணைப்புக்கு ரூபாய் 100 யை இழக்கத்தயாராகிவிட்டனர். காரணம் அரசு அளித்த இலவச தொ.கா.பெட்டி. பொங்கித்தின்ன ஒரு ரூபாய் அரிசி கிடைப்பதும் அவர்களின் பலம். ஊன்றமுடியா காலுடன் வாழ்நாளின் உச்சியிலேறி உச்சிப்பிள்ளையாரைப்பார்த்த மகிழ்ச்சி அவர்களின் கண்களில் தொலைக்காட்சித் தொடர்களை காண்கையில் தெரிகிறது. தொடர்களைக்காண வீடுகள் தேடியலைந்த ஏக்கமும், தாகமும் தணிந்துவிட்டதெண்ணி ஒரு பெருமிதமும்கூட. நல்லதோ கெட்டதோ அவர்களின் வாழ்நாள் உறக்கம் முழுவதும் ஏதோவொரு தொ.காட்சித்தொடரின் நாயகியின் கண்ணீரில் கனவுகளாக கடந்துபோகுமென்பது மட்டும் திண்ணமாகத்தெரிகிறது.

எப்படியாயினும் ‘ந்த, ஏன் மாத்தர? 8 மணிக்கெல்லாம் போட்டுடுவான். வய்யி‘ என இப்போது அம்மாவும் அதட்டும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற காணம் தொடங்கும்முன் அலமேலுவை, சவுந்தர்ராசு நயினா வீட்டில்போய் அமர்த்திவிட்ட ஒளிகளின் நீட்சியை இப்போதுதான் உணர்கிறேன்.






Thursday, August 5, 2010

கனவுகள் மேயும் காடு...


மௌனத்து சீற்றங்கள் உறையத்தொடங்குகிறது இரவெங்கும். அலைகள் கொணரும் நுரையும், நுரையைக்கொள்ளும் கடலும் சொல்லும் சங்கதிகள், கனவுகளின் வழியொழுக அடைத்துக்கொள்கின்றன சிந்தைகள் யாவும். பெருவெளிப் புன்னைமரம் உச்சியில் கொண்ட முற்கூட்டுடன் தனிமையில் அமர காத்திருக்கிறது காக்கையைப்போலவே மனமும். அரவங்களோ, அசைவுகளோ தெரிந்திடின் சீறிட்டு கரையத்தான் செய்கிறது அதற்கும். ஏனிந்த இரவு, வெறுமை, தனிமை, தாகம், மனதுடனான தர்க்கம், சிந்தையற்ற நிலை, உழைப்பதற்ற ஓய்வு? இவைகொண்டு எதோவொன்றை கருகிய இருளோ, மூடிய இமைக்குள் இருட்டினில் தவிக்கும் விழிகளோ சொல்லிக்கொண்டே விழுங்கிப்பார்க்கிறது. சீரனமின்றி தவித்தும், சிரமேற்று தொங்கியும் உதிராத தணல் உடலெங்கும்.

சாளரமற்ற அறையில் புழுக்கத்துடன் சேர்த்து ஆயிரம், லட்சம், கோடியென கொடிகொடியாய் பரந்துபரந்து விரிந்துகொண்டேயிருக்கின்றன புள்ளிகளனைத்தும். சாம்பலான வார்த்தைகளை சேர்த்து குழைத்து குழைந்து நாவினடி ஊறும் கோழை எச்சில்கள்யாவும் படுத்தப்படியே உமிழ்ந்து உடலெங்கும் எச்சங்களாய் எச்சில்கள். அனிச்சைக் கட்டளைகள் பிறந்து கரங்களிரண்டும் துடைத்து துவைத்து மேலெங்கும் ஈரக்கீரல்கள். சற்றைக்கொருதரம் சுவர்க்கோழிகளின் கீச்சிடும் குரல் குத்திக்குத்தி கிழிக்கிறது செவியின் உட்சுவற்றை. எதோவொரு நாதம் கிணற்றிற்க்குள்ளிருந்து அம்மா அம்மாயென்பதைப்போல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இரண்டுமுறை திடுக்கிடுகிறது கண்கள். கால்களின் ஆடுசதைகளில் படிந்த கோரைப்பாயின் வரிகளைத் தடவத்தடவ சுகமேற்கிறது. அனூடே மயிர்கால்களும் சிலிர்த்துக்கொள்கிறது.

உடைந்த மதிற்சுவரினடி மடிந்த எறுப்புச்சாரிகளில் ஒவ்வொன்று கைகால்களிழந்து முக்கி முனகி தப்பிக்கப் பார்ப்பதாய் மனமும் நினைவுகளும் இந்த கனவினை உதறிவிட்டு எங்கோ ஓடத்தான் விழைகிறது. முடிகிறதா? இல்லையே. தாயிடம் அருந்திய பாலின்று பூர்வீக மணத்துடன் நாசியை மூடிக்கொண்டே பயணிக்கிறது. காய்ச்சலில் சுருண்டிருக்கும் நாவிற்கு அவளின் சுக்குக் கசாயம் இனிக்கிற மாதிரியும் தெரிகிறது. கசக்கிற மாதிரியும் தெரிகிறது. ருத்ராச்சையை மென்றபடி நாத்திகம் பேசும் கடவுள், பார்வதியை ஏன் பக்கமிருந்து ஒதுக்கினான். பாம்புகள் எங்கே? மணிமுடியெங்கே? அதன் வழிச்சிதறும் கங்கையெங்கே? அவனின் தாண்டவம் ஏன் அதிராமல் அசைகிறது? என்ன நினைவில் திளைத்திருக்கிறோம். யானறியாமல் எல்லாமே பச்சரிசிக் கஞ்சிக்குள்ளும், நெத்திலிக் கருவாட்டுக்குள்ளுமே நடக்கிறதே. என்ன விந்தையிது!!.
உடல் சுடுகிறதா? அணல் உடலாயிருக்கிறதா? எதைச்சொல்கிறது இந்த தனிக்கனவு?

இதோ இந்த இரவின் அஸ்தமனம் தொடங்கிவிட்டாற்போல் தெரிகிறது. கீழ்வானமும், கீழிமையும் செந்நிறத்தை விரட்டத்தொடங்கிவிட்டன. உடற்படிந்த உப்பு படிமங்கள் போர்வையுடன் சேர்ந்து கொட்டுகிறது. உள்மனமும், உத்திரத்து விசிறியும் தன்னகத்தேகொண்ட அகந்தையை அழித்துக்கொள்கிறது. எங்கோ மச்சிவீட்டின் மதிலை மூடின மல்லிகைக்கொடி, மலர்களை பிரசவிக்கிறதுபோலும். காற்றெங்கும் வாசம், காற்றெங்கும் கானம், காற்றெங்கும் அகமும் புறமும் மிதக்கிறது. பகலவனின் வெண்மை உடலை இதமாக பிடித்துக்கொள்கிறது. அடடா
! என்ன சுகம் இந்த உடலில்! காய்ச்சல் நின்றபின் கிடைத்த இந்த உடலில்தான் எத்தனை மினுமினுப்பு!, எத்தனை அழகு!, எத்தனைக்குளிர்ச்சி!. வரும் இரவும் இந்த தனிமையைக் குத்திக்காட்டும் கனவுகளுடன்தான் வருமோ?!! சூன்யமான அந்த கருமை வராமலிருந்தால்தான் என்ன? அப்பப்பா, இந்த விடியல் இப்படியே தொடர்ந்தாலே நலம்...நலம்...நலம்...




Tuesday, June 22, 2010

சில புழுக்கள்


சிலநேரங்களில் காணுகின்ற நிகழ்வுகள் மனதின் மையத்தைப்பிடித்துக்கொண்டு அகலாமல் அரித்துக்கொண்டிருக்கும். அதுபோலவே இதுவும்...

அலுவலக நண்பருடன் சமீபத்தில் அம்மன் கோவில் கும்ப அபிடேகத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை உருவானது. பளபளக்கும் வெளிர்நிற ஆடைகளில் அவ்வூரே திரண்டு ஒற்றுமையாக அவ்விழாவினை நடத்தியது கண்டு வியந்தேன். விசேடங்கள் முடிவடைந்தவுடன் இருசக்கர வாகனத்தை எடுக்க திரும்பி வரும்பொழுதுதான் கவனித்தேன் ஒரு வீதி மக்கள் அவ்வீதி முகனையில் நின்றுகொண்டு அக்காலை உடையுடன் கோவிலைப் பார்த்துக்கொண்டிருப்பதை. அவ்வோடையின் அந்தப்பக்கம் கோவில். இந்தப்பக்கம் அவ்வீதி. நண்பரிடம் விசாரித்தபொழுதுதான் அத்தொண்டைக்குழியடைக்கும் நிலை ஏற்பட்டது. அம்மக்கள் அந்த கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களென்று. ஏனென்று வினவியபொழுது அவர்களின் சாதிதான் காரணமாய் சொல்லப்பட்டது. மீறி சென்றால் அடிதடி, வெட்டுக்குத்து போன்றன நிகழுமாம்.

அந்த சிறுவாய்க்காலின் படித்துறையில் பல்துலக்கியபடியும், துணிகளை தெருக்குழாய்களில் அலசியபடியும் அத்தனை நன்மக்களும் வேடிக்கை மட்டுமே பார்த்தது நெஞ்சில் அடைத்துக்கொள்ளத்தான் செய்தது. அவர்களுக்குக்கூட தோன்றவில்லை, அந்த அம்பாளை வணங்கவேண்டுமென்று. ஒரு ஊரில் மிகைவாழும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் திமிருடனான ஆதிக்க மனப்பான்மை இதுபோன்ற கீழ்ச்செயல்களுக்கு அடித்தளமாகிறது என்பது கண்கூடு. அந்தப்பக்கம் நின்று வெளுத்த சட்டைவேட்டியுடனும், பட்டுப்புடவைகளுடனும் அம்பாளை தரிசனம் செய்யும் அத்தனைப்பேரின் மனதிலும் எத்தனை அழுக்குகள் நிறைந்திருக்கின்றன. நாகரீக வளர்ச்சி எத்தனையோ படிகளை எட்டிவிட்டநிலையிலும் இன்னும் சில உட்கிராமங்களின் நிலை இப்படியேத்தான் உள்ளது.

எனது தாய் தந்தையருக்கு சாதியின் சாயம் ஒட்டியிருந்த சமயங்களில், அப்படியான மாயை எதுவுமில்லை, எல்லோரும் மனிதர்கள்தான், நம்முடலில் உள்ள யாவனவும் எல்லா மனித உடல்களிலும் இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு பகுத்தறிவிக்க என் கல்வியறிவும், அனுபவமும் உதவியது. இங்கு ஒரு ஊரே சேர்ந்து ஒரு குறிப்பிட்ட மக்களை சாதி அடையாளங்களால் ஒதுக்கிவைப்பது எத்துணை கொடுமையானது. அங்கு கல்வி பயின்ற மக்களே இல்லையோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

ஏட்டுக்கல்வி மதிப்பெண்களுக்காக என்றுமட்டும் ஆகிவிட்ட இந்நேரத்தில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்றன மனப்பாடம் செய்து மதிப்பெண்கள்பெற மட்டுமே பயன்படுகின்றனவே தவிர வேறெந்த புரிந்துணர்விற்கும், வாழ்வியலின் நற்பண்புகளுக்கும் பயன்படுவதில்லை என்றே நினைக்கிறேன். வயதில் மட்டும் முதிர்ந்த கல்வியறிவற்ற சில பெரிய புழுக்கள்தான் இப்படியென்றால் அதற்கு கொடிபிடித்துக்கொண்டிருக்கும் என்னொத்த இளையக்கூட்டமும் அதற்கு அடிக்‘காலாக’ முளைத்துக்கொண்டிருக்கிறதே. இச்சமுதாயத்தில் அகற்றப்படவேண்டிய அழுக்குகள்தான் எத்தனைவிதமாய் முளைத்துக்கிடக்கிறது !!!!


Wednesday, June 9, 2010

தண்டவாளங்களும் இன்னபிறவும்...

காட்டுக்கருவையையும், காட்டாமணக்கையும் கடந்துபோகையில் மெல்லியதொரு வாசம் அந்த ஒத்தயடிப்பாதையெங்கும் நிரம்பி நெலிந்துகிடக்கும். அநேகமாய் காட்டுமல்லியின் துயிலுடையும் தருணங்களில் இதுபோன்றதொரு மகத்துவம் வாய்க்கப்பெரும். இங்கே ஒத்தையடிப்பாதையென்பது தண்டவாளங்களருகே அமையப்பெற்றது என்பதை நினைவிற்கொள்க. அவ்வழியில் எருக்கம்பூக்கள் எத்தனையெத்தனை ‘மொட்’டென ஒலியுடன் மலர்ந்தாலும் அதன் மணத்தை நாசியுணர நுண்மதி வேண்டும். காட்டு மல்லிகைக்கு அப்படியில்லை. எந்த நரவை நாற்றத்தில் பூத்திருந்தாலும் எல்லாம் மறைத்து மணம்தரும். சில சமயங்களில் மிக நுட்பமாய் சுவாசித்தால் (சப்பாத்தி)கள்ளி பூக்கூட மிகுந்த மணம் பெற்றிருக்கும். நானும் அவ்வப்பொழுது முயன்றிருக்கிறேன், முடியவில்லை.

தண்டவாளங்களொட்டிய வழிதான் எத்தனை மலர்களை அனுதினமும் பெற்றுக்கொள்(ல்)கிறது. கவனித்திருக்கிறீர்களா? விரைந்து ஓடும் தொடர் (அ) புகை வண்டியின் சக்கரங்களுக்கு பழிப்பான் காட்டி தண்டவாள இடுக்குளில் தினம்தினம் மலர்ந்து மடியும் எத்தனையோ பூக்களிருப்பதை. யார் கண்களுக்கு அந்த ருசிதெரியும்? அதை ரசிக்கும் ஒரு இனிமைப்பொழுது எவருக்கேனும் வாய்த்திருக்கிறதா? முடிந்தால் ஒருபொழுதைக் கொடுத்து அதுகளை மகிழ்வுறச்செய்யுங்கள், முயன்றுபாருங்கள்.

நீங்கள் அவ்வாறு கழிக்கும் பொழுதுகளில் அவ்வழியே ஒரு ஓலைப்பாம்போ, கருந்தேளோ, கருவண்டோ, சாரைசாரையாய் கட்டெறும்பொத்த கூட்டங்களோ.....ஏதோவொன்று கடந்துபோகக்கூடும். பயம்வேண்டாம். இருமருங்கிலும் தண்டவாள கட்டைகளுக்கு இடையே நன்றாய் கூர்ந்து கவனியுங்கள். சூரியகாந்திப்பூவின் குழந்தைப்பருவத்தை நினைவுப்படுத்தும் அதேபோன்றேயொரு மலர் தெரியும். அதன் அழகை, மணத்தை அப்படியே உள்ளிழுத்து ஒருமுறை சுவாசியுங்கள் பார்ப்போம். அடடா இதுவல்லவோ வாழ்க்கை. பக்கத்தில் நீண்ட கழுத்துடைய அதேபோன்ற மலரும் இருக்கும். அது பனிரெண்டாம் வகுப்பில் ஹெர்பேரியம் சமர்ப்பிக்க பயன்படும். இது அதுவல்ல.

இதோ இன்னொன்றை பாருங்கள், கொத்தவரங்காய் போன்ற காய்களுடன் ஒரு செடி. அதிலும் மஞ்சள் நிறப்பூ, அதன் நடுவில் மகரந்தம் தாங்கிய நீட்சிகள். அதன் ஒவ்வொரு சிறுகிளை கனுவிலும் உற்றுப்பார்த்தால், எறும்பின் பின்புட்டம் போன்ற முடிச்சிகள்
தெரியும். இங்கேயே போன்சாய் மல்லிகைப்போன்ற மணமட்டுமில்லாமல் மலரும் வெளிர்நிறப்பூவும் இருக்கிறது. அதனுள்ளும் பாருங்களேன் எத்தனையெத்தனை சிறுசிறு பூச்சிகள். இதுகளுக்குகூட பசியென்பது இருக்கும்போல. அட அதென்ன பச்சை நிறத்தில் இந்த வடிவத்தில் ஒரு புழு அந்த புல்லின்மேல் ‘பின்னதை‘ முன்வைத்து ‘முன்னதை’ பின்வைத்து தவழும் குழந்தையாய் நகர்கிறது. அட..அட....

கொஞ்சம் இரண்டு அடிகள் நகர்ந்து வருவீர்களென்றால் எடுத்துக்காட்டுகளுக்கு எப்போதும் பெயர்பெற்ற தும்பைப்பூவை பார்க்கமுடியும். இந்த பூக்களுக்கு யார் சொட்டுநீலம் போட்டிருப்பார்கள் என்ற சந்தேகப்பார்வை உங்களைப்போலவே எனக்கும். அடுத்ததாய் அதோ தெரியும் பூண்டுச் செடிதான். சிறுவயதில் அடிபடும் காயங்களுக்கு அந்த கிளையை ஒடித்து அதிலொழுகும் பாலை தடவியதாய் ஞாபகம். சுர்ரென்று கொஞ்சம் எரிச்சல்லூட்டும், இரெண்டொருநாளில் காயம் பட்டுப்போகும். அதிலும் சின்னஞ்சிறு பூக்களிருப்பதை நீங்களும் கண்கூடாக பார்க்கமுடியும். இந்த பாதையைவிட்டு விலகிப்போகாதீர்கள் ஓரங்களில் சிலஇடங்கில் விளாமரங்களும், இலந்தை மரங்களும்கூட முற்களுடன் இருக்கும்.

கீழே சிந்திக்கிடக்கும் இந்த பூக்களைப்பார்த்துமா தெரியவில்லை இது மகிழம்பூவென்று. அதேதான் இந்த வாசனை முன்னமே உங்களிடம் சொல்லியிருக்குமே. சரிவிடுங்கள். அந்தப்பக்கம் போகவேண்டாம் அங்கேயிருப்பவை தாழம்பூக்கள். அந்தக்காட்டுக்குள் நல்லப்பாம்புகள் இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வெறுமனே காற்றுடன் கலந்துவரும் அந்த வாசத்தைமட்டும் சுவாசத்திற்காக விருந்தளியுங்கள். அதுவேபோதும். இப்படியேப்போனால் நிறைய காணக்கிடைக்கும், க்க்கும் அதற்குள் அந்த பயணியர் தொடர்வண்டி வந்துவிட்டது. போகலாம். ஒருநிமிடம், போகும்போது கொஞ்சம்
பூக்களுடன்கூடிய புஷ்படச்செடிகளை பறித்துச்செல்லுங்கள். அம்மியில் அரைத்து தலையில் தேய்த்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

அந்த கைகாட்டி மரத்தருகே மறைந்துநின்று பார்ப்பது யார்.? உங்களின் குழந்தைகளா!!!, அழைத்துவாருங்கள் அவர்களுக்கும் ஆசையிருக்கத்தானே செய்யும்...


Wednesday, May 26, 2010

யாதுமற்ற....

மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட அம்மாவின் முந்தாணி என் தலையிலும் அப்பாவின் துண்டென் மாரிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் அம்மாவிற்கும் அப்பாவிற்குமான தூக்கம். அப்பொழுதெல்லாம் அரைநாண்கொடி இடுப்பில் தங்கிக்கொள்ள பழகிவிட்டிருந்தது, அதன் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்க பள்ளிக்கூடத்து காக்கி அரைக்கால் சட்டையும்தான். ஆயினும் அவர்களின் கூட்டுக்குள் நான் குளிர்காய்ந்த இரவுகள் பெரிதாய் மதிக்கப்படாமலே இருந்திருக்கிறது. இருந்திருக்கவேண்டும்... அறியாப்பருவமாதலின்....

[ஒருவேளை எங்கப்பாவிற்கு எழுதத்தெரிந்திருந்தால் இப்படித்தான் ஆரம்பித்திருப்பார்...


மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட என்மகனின் தலை என்வலக்கை முட்டியிலும், இடக்கால் அவனம்மாவின் இடுப்பிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் என் மனைவிக்கான தூக்கம்..........]


கூரைக்குள் பொழியும் மழைநீர்க்குட்டுகளை அலுமினிய ஏனங்கள் அசையாமல் நின்று வாங்கிக்கொள்வதைப்போல மழையில் விளையும் என் சில்வண்டுத்தனங்களை அவர்கள் ரசித்திருக்கலாம். ‘அப்பாடி இப்பயாச்சும் மானம் நல்லா பேயுதே’ என்று மச்சுவீட்டு மாமனும், ‘இந்தவாட்டியாவது மழைலேர்ந்து என்னோட பயிர காப்பாத்தும்மா தாயே’ என்று சின்னவண்டி முனுசாமியும், ‘அய்யோ அடிக்கிற காத்துல வாசல்ல உள்ள முருங்கமரம் வீட்ல சாஞ்சிடப்போவுது’ என்று உடையார் வீட்டு ஆச்சியும் புலம்பிக்கொண்டிருப்பது கரைந்து என்வீட்டு வாசல்வரையும் வந்திருக்கும். வழக்கம்போல அம்மா இருப்புச்சட்டியில் பச்சரிசி வறுக்க தாழ்வாரத்தில் கட்டிவைத்த சுப்பிகளை எடுத்துக்கொண்டிருப்பார். ‘பஞ்சாங்கத்துலதான் மழைன்னு போட்டிருக்கானே... எப்டிப்பெய்யாம போவும்’ என்று 222
ம் நம்பர் பீடிப்புகையில் வட்டம் விடாமல் ஊதிக்கொண்டே இயல்பாகச் சொல்லுவார் அப்பா.

மகனாய் நான் அம்மாவின் அருகில், அடுக்கலையில் வறுத்த பொரியரிசியை கொரித்துக்கொண்டிருப்பேன். வேறெந்த இயல்பையும் மீறி பள்ளிக்கூட குறிப்பேட்டில் கத்திக்கப்பல் செய்து தாழ்வாரத்தில் ஒழுகியோடும் மழைநீர்களுக்கு தாரைவார்த்ததாக என் வரலாறு பதியப்படவில்லை. மிதிவண்டிக்கான கனவு மிகைந்திருந்தமையால் கப்பல்விடும் கனவு அதில் மிதிபட்டிருக்கலாம். வாசலொட்டி குதூகலமாய் நீச்சல்பயிலும் மண்புழுக்களும், மிகைநீர் பெற்றதால் சுமக்கமுடியாமல் மிகமெதுவாய் ஊர்ந்திடும் நத்தைகளும், மழையில் பொந்துகளையிழந்து அலைந்து திரியும் நெருப்பெறும்பு கூட்டங்களும், கூட்டுக்குள் விழும் நீர்ச்சிதறல்களுக்கு மெளிதாய் கீய்ச்சலிடும் சிட்டுக்குருவிகளின் கூச்சல்களும், அடுத்த வீட்டு லலி அக்காவின் ஆட்டுக்குட்டிகள் தூற்றிவிட்டுப்போன நனைந்த புலுக்கைகள் வாசம் என அந்நேரத்து அவசரத்துக்கான குளிர்ச்சிகள் ஏராளம். மழைக்கு மகுடியூதும் தவளைகூட்டங்களின் இரைச்சல்கள் சிலருக்கு எரிச்சலாகவோ அல்லது வரமாகவோ இருக்கக்கூடும். இன்னும் எத்தனையோ...


பணியிடம்பொருட்டு யாதுமற்ற தனியறையில் பாதுகாப்பாக நாற்காலி போட்டமர்ந்து எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடையில் முறுக்கு ஒரு பொட்டலம், உருளைக்கிழங்கு வறுவல் ஒரு பொட்டலம் வாங்கி சுவைத்துக்கொண்டே மழையை ரசிக்க சன்னலைத்திறந்தால் மேற்சொன்னவைகளே சாரல்களாய்....





Friday, May 7, 2010

பிறழ்நிலை...



தினசரி


(பேருந்து நிலையம்)

அண்ணா....அண்ணா...???

ம்ம்ம்....??

காசுண்ணா... சாப்டு ரெண்டு நாளாவதுண்ணா....

ம்கூம்... சில்லர இல்ல பாப்பா...

(ச்ச... பஸ்டான்டு, ரயில்வே ஸ்டேசன் எங்கணப்போனாலும் வந்திடுதுவோ.. இதுங்கள பெத்ததுக என்னப்பண்ணுதுங்கன்னு தெரியல??)

********************

அவ்வப்பொழுது

(பேருந்து நிலையத்திலிருந்து எனது வீதிக்கு வரும் வழி)

‘ஏங்கண்ணு இன்னைக்கு வேலைக்கு போவலையா?’

‘இல்லீங்க... இன்னைக்கு ஞாயித்துக்கெழம லீவு. (சுமார் 40 வயது பெண்மணி...யாரு இவங்க...!!!? எங்கணயோ பாத்தமாதிரி இருக்கு ஆனா தெரியலையே..??)’

‘ஓ.. ஏங்கண்ணு சோப்புல்லாம் வாங்கிட்டு போற?’

‘ம்ம்.. தீந்துடுச்சு.. அதான்.’

‘ஆமா இப்ப எங்க வேலப்பாக்குற???’

‘அதே ......... கம்பனிதான்.’ (அட தெரிஞ்சவங்க மாதிரி பேசுனாங்க... இப்ப இப்டி கேட்குறாங்களே?!! நாம ஆரம்பத்லேர்ந்து அங்கணதான இருக்கோம்)

‘ஒரு 2 ரூவா இருந்தா கொடேன்... டீக்குடிக்க....’

(ஆகா... இது நல்ல டெக்னிக்கா இருக்கே.... ) சில்லர இல்லைங்களே...

சரி.... போ.....

********************

உள்ளுரையாடல்

மனசாட்சி: – ச்ச்ச... எத்தனப்பேரு இந்த மாதிரி.. கைகாலெல்லாம் நல்லாத்தானிருக்கு... பெறவு என்னாத்துக்கு இந்தமாதிரி அடுத்தவேள சோத்துக்குக்கூட வழியில்லாம சோம்பேறியா இருக்காங்க.? இவங்களோட காலம்லாம் எப்டி ஓடுதுன்னே தெரியல.?

புத்தி: – சரி... இப்ப அதுக்கு என்னாங்கற?

மனசாட்சி: – ஏதாவது செய்யணும். இந்த மாதிரி உள்ளவங்களுக்கு.. அட்லீஸ்ட் எங்கணயாவது வேல வாங்கிக்கொடுத்தாக்கூட பொழச்சிப்பாங்க.

புத்தி:– அப்டி செஞ்சா பொழச்சிப்பாங்கன்னு நினைக்கிறீயா?

மனசாட்சி: – ம்ம்...இல்லன்னா போறாங்க... கடமையா நெனச்சி செய்யலாம்ல...

புத்தி: – சரி... யாருட்ட போயீ இவங்களுக்கு வேல கேட்ப? உன்னோட முதலாளிகிட்ட கேட்க முடியுமா உன்னால?

மனசாட்சி: – அய்ய.. எங்காளுங்க காம்ப்ளக்ஸ் உள்ளாரயே உடமாட்டாங்க....

புத்தி: – பெறவென்ன? மூடிகிட்டு போவ வேண்டியதுதான.... என்னாத்துக்கு இந்த ஃபீலிங்கு...

மனசாட்சி:– ஒரு தவிப்பு, அக்கரை.... அதான்...

புத்தி: – சரி... அடுத்ததா நீ எங்கப்போவனும்?

மனசாட்சி: – ம்ம்... சாப்பிட்டு இன்னைக்கு மதியானமாவது நல்லா தூங்கணும்...கண்ணெல்லாம் ஒரே எரிச்சலா இருக்கு.

புத்தி: – ம்ம்.. மொதல்ல அதச்செய்யி....

மனசாட்சி: – ம்ம்...

********************

நடைமுறை

டிங்..டிங்...டிங்......டிங்..டிங்..டிங்.....டிங்..டிங்..டிங்...............

‘ஹலோ..’

‘டேய் நாங் குமார் பேசுறன்டா... திருப்பூர்லேர்ந்து இன்னும் கொஞ்சநேரத்துல களம்பிடுவேன்’

‘எத்தன மணிக்கு வருவ?’

‘ரெண்டர மணிக்குள்ள வந்திடுவேண்டா... நீ சாப்பிட்டியா?’

‘இல்ல, நீ வந்தொடன சாப்பிட்டுக்கலாம் வா...’

‘ஏய் நான் இப்ப கொக்கரக்கோ ரெஸ்டாரண்ட்ல இருக்கேன். உனக்கும் சேத்து பிரியாணி பார்சல் வாங்கிட்டு வந்திடுறேன்.’

‘அப்டியா.. சரி..சரி... ம்ம்ம்... கொக்கரக்கோ பிரியாணி சாப்டு ரொம்ப நாளாச்சு. சரி.. அப்டியே ‘தந்துரி சிக்கன் வித் ஆனியன், லெமனோட வாங்கியாந்திடு..’

‘சரிடா...’

‘ஏய்... சீக்கிரம் வந்திடுடா...’

‘சரி..சரி.. வைக்கட்டுமா.??’

‘ம்ம்ம்.........’

********************

Monday, April 26, 2010

பட்டணத்தி....


2005 மாசி மாதம்


‘ம்ம்ம்மா.... சாந்தி வருதும்மா

‘எந்த சாந்தி??


‘அதாம்மா தெருவுக்கு மீனு கொண்டாருமே.. அந்த பட்ணத்தி சாந்திதான்ங்....

‘ஏ.... அப்டியா... அவ பொழச்சிட்டாளா.!!!’

‘ம்ம்... எனக்கும் பாத்தொன்ன ஒண்ணுஞ் சொல்லமுடியலம்மா...

••••••••



‘ஏ.. சாந்தி நல்லாயிருக்கியாடி... ?

‘நல்லாருக்கங்கா... நீ எப்டி இருக்க...

‘ம்ம்... நல்லாயிருக்கன்டி... எப்டிடி பொழச்ச...??

‘ம்ம்.. எப்டியோ பொழச்சிட்டேன்கா... என்னத்த பொழச்சி என்ன பண்றது... ஏன்டா இந்த உசிருன்னு தோணுது...

‘ஏண்டி சலுத்துகிறவ.. எத்தனயோ மக்க கடலோட போச்சு.. நீயாச்சும் உசிரோட வந்திருக்கியேன்னு சந்தோஷப்படுறேன்.. .நீயென்னடான்னா இப்டி சொல்றவ.

‘என்னக்கா பண்றது பெத்த பொண்ணு போச்சு, கட்டுன புருஷன் வலையோட போயிட்டான்ங்... நான் மட்டுமிருந்து.....................

‘ஏ... அழுவாதடி... அழுது என்னாத்த ஆவப்போவுது விடு... எல்லாந் தலவிதின்னு நெனச்சிக்கவேண்டியதுதான்...

‘யாருட்டக்கா சொல்லியழுவுறது. உன்னாட்டமாதிரி யாராச்சும் விசாரிக்கமாட்டாங்களான்னுதான் மனசு கடந்து அடிச்சுக்கிது. எங்கணயாவது இந்த சொமைய எறக்கிவைக்கணும்ல.

‘ஏங்க…. பொண்ணுன்னா... ஒரு சின்ன பொண்ணு இருந்துச்சே அதுவா.?? ஒருநாளு பஸ்ல காரைக்காலுக்கு போறதுக்கு அழச்சிட்டு வந்தீங்களே.... ?? (நான்)

‘ஆமந்தம்பி... அதான்... 3ம்ப்பு படிச்சிகிட்டிருந்துச்சு.. லீவுதான வௌயாண்டுட்டு போவுட்டும்ட்டு வீட்லயே உட்டுட்டு நான் இங்க மீனு கொண்டாந்துட்டேன். கடைசியில.....

‘ஏ... சாந்தி அழாத.... என்ன.... விடு..விடு... சரி... சாப்பிட்டியாடி.... ?

‘ம்ம்... சாப்டங்க்கா... என்னத்தக்கா விடுறது... ஆழாக்கு அரிசியாருந்தாலும் அடுப்புகட்டி வேணுமேக்கா... வடிச்சி வச்ச சோத்த அள்ளிதின்னக்கூட மனசு வல்லியேக்கா...

‘ம்ம்... சரி... உடுடி... ஆமா...இப்ப உங்கூட யாரு இருக்கா.?

‘என்ங் மாமியாக் கெழவிதாங்கா இருக்கு.. இங்கண தெருவுக்கு கருவாடு கொண்டாருமே அதான்..

‘ஓ அதுவா...

‘ம்ம்ம்....

‘நீ கொடுக்குற பப்பாளி பழம்னா உசிரா சாப்டுவாக்கா என்ங் பொண்ணு. இன்னைக்கு பாத்தியா....

‘ம்ம்... என்னத்தடி சொல்றது.. அந்த கடவுள் ஏந்தான் இப்டி எங்மக்கள சோதிக்கரான்னு தெரியல... கூம்...ஆமா இந்த குண்டா ஒருத்தி பெரிய கூடையில மீனு கொண்டாருவாளே அவ இருக்காளா?

‘அது தெரியலக்கா.... அது தரங்கம்பாடில்ல.. எனக்கு தெரியாது.

‘சரி... இப்பல்லாம் வீடுல்லாம் கட்டிக்கொடுக்கறானுவோலே.. ஒனக்கு எதுனாவ்து கொடுத்தாங்களா?

‘கிழிச்சானுவோ. சாவப்பொழச்சி கெடந்தப்ப, அள்ளிப்போட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோவ ஒருத்தனும் வரல. வந்தவனுங்கல்லாம் செத்ததுங்க காதுலு கழுத்துல கடந்ததெல்லாம் களவாண்டிட்டுதான் போனானுவோலே தவர வேறொன்னும் செய்யல. என்ங் பொண்ணு காதுல கடந்த தொங்கட்டானக்கூட உடலக்கா. அது செத்துகெடந்த பனமுட்டுல போயி பாத்தப்ப காதுல இருந்த சதயக்கூட வுட்டுவைக்கல நாசமாப்போறபயலுங்க. வயிறெல்லாம் எறியுதுக்கா.


‘அடிப்பாவி... இப்டில்லாமா சனங்க இருக்குதுங்க....


‘எல்லாரும் இல்ல. சும்மாச்சொல்லக்கூடாது அதுலையும் செலபேரு நல்லா உதவுனாங்க. சோறு தண்ணியில்லாமக்கூட ராத்திரி பவலுன்னு பாக்காம எங்ககூடயே நெறையபேரு கடந்தாங்க... பெறகு வந்தவனுங்கல்லாம் அத செய்யுற இத செய்யுறன்னு செஞ்சிட்டு காசு பாக்குறானுங்க. யாருக்கும் சொந்தம்ல பந்தம்ல நடுத்தெருவுல நின்னுகெடக்கோம். எங்களுக்கு கட்டிகொடுக்குற வீட்லக்கூட அதையும் இதையும் அள்ளிப்போட்டு பூசிட்டு மிச்ச காச சுருட்டிட்டானுவோ சண்டாளப்பயலுங்க...




‘ஆமாடி... இந்த கட்சிக்காரனுவோ பண்ற அழிச்சாட்டியம் தெரிஞ்சதுதானே.. விடு.....

‘ம்ம்... சேரிக்கா மீனு வேணுமா?


‘இல்லடிம்மா இன்னைக்கு வெள்ளிக்கெழம எனக்கு வேண்டாம்...ஞாயித்துக்கெழம நல்லா பெரிய மீனா கொண்டா, வறக்குறமாதிரி... இரு எதுத்தால ரேவதி கேட்டா.. கூப்புடுறேன்.


‘தம்பி ரேவதிய கூப்டு சாந்தி மீனு கொண்டாந்திருக்கான்னு சொல்லு.


•••••••••


‘இல்லம்மா அவங்களுக்கு வேண்டாமா.

‘சரி சாந்தி... நீ நேரமா களம்பு... வெய்ய வந்திடும்...


‘ம்ம்ம்... வர்ரங்கா...


••••••••••




Tuesday, April 20, 2010

பகிர்தல் அறம்...

குறுக்காக சுமார் எட்டு மைல் கல் தொலைவு இருக்கலாம் எங்களுரிலிருந்து. மேலும்சில என் குடும்ப உறவினர்களையும் பெற்றிருக்கும் கிராமம் அது. தொடர்ச்சியாக மூன்று வருடங்கள், விடுமுறை நாட்கள் நீங்களாக, அந்தச் சாலையையும் அவ்விடத்தினையும் என் கண்கள் நிரப்பியுள்ளன. அங்கே குழுமியிருக்கும் பூச்செடிகளுக்கும் அதனூடாக முளைத்திருக்கும் புற்பூண்டுகளுக்கும் நடுவே எழுப்பப்பட்டுள்ள மணிமண்டபம் எனக்குள் ஒரு காட்சிப் பொருளாகப்பட்டதேயொழிய வேறெந்த பிரமிப்பினையும் ஏற்படுத்தியதாக நினைவிலில்லை. அப்பகுதி மக்களுக்கும் அவ்வாறே இருக்க அல்லது இருந்திருக்கவேண்டும்.

காலை 6.30 க்கு பழையச்சோறும், பச்சைமிளகாயும் கொடுத்த இனிமையை பவானிக்காக நான் ருசித்திருக்கலாம். வேறெந்த காரணகாரியங்களிருப்பதாய் தோன்றவில்லை. 6.45க்கு மயிலாடுதுறையிலிருந்து பொறையார் வரை அப்பேருந்து தினமும் செல்லும்வழிதான். இடையில் திருக்கடையூரைக் கடந்தால் 3 மைல்கள். தில்லையாடி. மாபெரும் வரலாற்றுக்கு சொந்தமான கிராமம். பேருந்தின் படிக்கட்டுக்கட்டுகளையும், சன்னலோரத்தையும் தாண்டி கடந்து செல்லும் அவ்விடம் வேறெந்த தாக்கதினையும் என்னுள் ஏற்படுத்தாமல் போனதற்கு அதன் முழுவரலாறு அறியா மூடனாக நான் வளர்ந்ததே காரணமாயிருக்கும்.



தில்லையாடி வள்ளியம்மையின் முழு வரலாறு இங்கே.. சாதனைப் பெண்கள்.

இன்னொருவர் காந்தியடிகளுக்கு துணையாகவும் நண்பராகவும். தமிழர் நலனில் அதிக அக்கரை எடுத்துக்கொண்டு போராடிய, பல போராட்டங்களுக்கு காந்தியடிகளுக்கு பக்கபலமாகவும் இருந்த தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆச்சாரியார்... இவரைப்பற்றின முழுத்தகவல்கள் கிடைக்கபெறவில்லை. ஆயினும் அவர் தாயார் உடல் நலமில்லாமலிருந்தபோது காந்திஜி அவர்கள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பணவுதவியுடன், சுப்பிரமணிய ஆச்சாரியாருக்கு தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். அக்கடிதம் கீழே.....


இந்நேரம் உணர்கிறேன், இனியும் அங்கு செல்லவேண்டிய தருணங்கள் நிறைய இருக்கின்றது. பிறகொருமுறையும் வெறுமனே கடந்து வருவதை விரும்பவில்லை.



  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO