க.பாலாசி: 2011

Monday, December 12, 2011

சங்கமம்‘2011 அன்போடு அழைக்கிறோம்

.

அதிகாலையும் பனிப்புகையும் தொண்டையிலிறங்கும் இளஞ்சூடான தேநீரும் போல இந்த மாதத்திற்கெனவே சில சிறப்பான நிகழ்வுகள் இருக்கின்றன.

மழைக்காலத்தே பசியிலலையும் எறும்புக்கூட்டங்களுக்கு சாமிமாடம் முன்பு போடப்பட்ட அரிசிமாக் கோலம், மார்கழிமாதக் காலையில் சாணந்தெளித்த வாசலதில் வைத்த மகரந்தம் மிளிரும் பூசணிப்பூ, எரியூட்டப்படும் மண் அடுப்புகளில் கிழக்கு நோக்கி முதலில் பொங்கும் வெண்சோற்றுப்பானை, தூரதேசம் வாழும் மகனின் கையில் தாய் தன்கைப்பட சுட்டுக்கொடுத்த முறுக்கும், அதிரசமும் கிடைக்கும் நேரம், இருளடர்ந்த வீட்டினரையில் விளையாடும் குழந்தையின் கையிலிருக்கும் விளக்கெரியும் பொம்மை, தீப்பிழம்புகள் காடழிக்க நல்லரவத்திற்கு கரையான் புற்று கண்படும் நொடி, முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம், போலவேதான் எங்கள் ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் நடத்தும் பதிவர்கள், இணையதள வாசகர்கள், முகநூல் மற்றும் ட்விட்டர் நண்பர்களுக்கான மாபெரும் சங்கமம்‘2011. 




நாள் : 18.12.2011 ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணிமுதல் மதியம் 2 மணிவரை
இடம் : ரோட்டரி CD அரங்கம்
பெருந்துறை ரோடு,
பழையபாளையம், ஈரோடு

முதன்முறையாக வலைப்பக்கம் (Blog / Wordpress) என்பதைத்தாண்டி FaceBook / Twitter / BUZZ போன்ற சமூக வலைத்தளங்களில் இருப்போர் என அழைப்பதில் பெருமகிழ்வு கொள்கின்றோம். அதே சமயம் அதில் எங்களுக்கு இருக்கும் சின்ன நெருக்கடி, அதிலிருந்து எத்தனைபேர் கலந்துகொள்வார்கள் எனும் சரியான எண்ணிக்கைதான். எனவே, சங்கமம்-2011 நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் அனைவரும், தங்கள் வருகையை 15.12.2011 வியாழக்கிழமைக்குள் erodesangamam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு

தங்கள் பெயர்
தொடர்பு எண் (optional)
மின்மடல் முகவரி
வலைப்பக்க(blog-Facebook-Twitter ID) முகவரி / பெயர்
..... ஆகியவற்றுடன் மின் மடல் செய்யவேண்டுகிறோம்.

மேலதிக விபரங்களுக்கு:
தாமோதர் சந்துரு (தலைவர்) 93641-12303 ,
க.பாலாசி (செயலர்) 90037-05598,
கார்த்திக் (பொருளர்) 97881-33555,
ஆரூரன் - 98947-17185 ,
கதிர் – 98427-86026,
வால்பையன் - 99945-00540,
ஜாபர் - 98658-39393,
ராஜாஜெய்சிங் - 95785-88925,
சங்கவி – 9843060707

இணையத்தில் இணைந்த இதயங்கள் இச்சங்கமத்தில் சங்கமிக்கட்டும்.  அன்புதோய்ந்த கரங்களுடன் வரவேற்க காத்திருக்கிறோம்...  


.

Monday, November 14, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்..

.

பேருந்தில் ஏறும்முன் நடத்துநரிடம் ‘இடமிருக்கா?’ என்று கேட்பது என் வழக்கமும்கூட. மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘உனகெதுக்குப்பா தனியாவொரு எடம்.. போ போ அங்கண ஓரமா ரவையோண்டு இருக்குப்பாரு’ என்பதாக தலையசைப்பார். கடக்கு கழுதையென்று தனியாவர்த்தனமாக ஓரிடம்பிடித்து உட்காரும்போதெல்லாம் கூடவே இன்னுமிருவர் வலுக்கட்டாயமாக நெருக்கியடித்து உட்காருவர், அது இருவரிருக்கையாயினும். ஏன்டா இப்படியென்று கேட்கவும் முடியாது. ‘ஒனக்கு இந்த எடம் போதும்’ மென்று பொளிச்சென சொன்னாலும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ‘ண்ணே ...க்கு ஒரு டிக்கெட்’ என்றால் ‘அரையா முழுசா?‘ என்பார் நடத்துநர், பார்வையில். உயரத்தில் இரண்டடி குறைவாகவும், இந்த இரண்டு மி.மீ நீள மீசையுமில்லையென்றால் மனசாட்சிக்கு விரோதமின்றி பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும் அரை கட்டணச் சலுகையில் என்னால் பயணிக்கமுடியுமென்பது தற்காலத்திற்குமான நிகழ்தகவு. இந்த மிகை, குறையல்லவென்பது எனைக் கண்டறிந்தவர்களுக்கும் தெரிந்ததுதான். இதைபோன்ற சிறப்பு நிகழ்வுகள் கூடிவந்து கும்மியடிக்கும்போதுதான் வருடந்தோறும் ஐப்பசியும் 8ம் நாளும் வந்து தொலைக்கிறது. அடுக்குப்பானையிலிருக்கும் அதிரசம்போல கடந்த இரண்டு வருடங்களாக 27 ம் அகவையிலேயே குடியிருந்தது ஒரு இனிமைதான். சென்ற ஐப்பசி எட்டுக்குப்பிறகு அதிலும் பூசணம் பூத்தது. 30 தொடங்கிவிட்டதாம். கலிகாலம்.
•••

இந்த நேரத்தில் நீங்கள் தாராசுரம் என்ற ஊரைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 5 ஆவது மைல்கல் தொலைவிலுள்ளது இந்தப் பேரூர். இங்குள்ள, உலகப் பாரம்பரிய சின்னங்களும் ஒன்றான ஐராவதேஸ்வரர் திருக்கோவில் 12 ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலும் மேற்கண்ட கோவிலும் கலையில் நிறைய ஒற்றுமையுடன் திகழ்வதாக அறியப்படுகிறது. மேலும் இக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இசைப் படிகள் உள்ளது. அதாவது 7 கருங்கற்படிகளும் 7 ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைப்பற்றி  ஒரு முழுமையான பயணக்கட்டுரையை பதிவர் புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கவும்
•••

கூத்தாடி கிழக்கே பார்க்கவும் கூலிக்காரன் மேற்கே பார்க்கவும் காரணமிருக்கிறது. கூத்தாடியின் பிழைப்பு ராப்பொழுதில். ஆகவே அவன் விடியலை கிழக்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். கூலிக்காரன் பிழைப்பு பகற்பொழுது. அவன் சூரியன் மறைவை மேற்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். போலவே மாயவரம் மண்ணில் பிறந்த நான் மேற்கண்ட பத்தியில் தாராசுர பெருமை போற்றவும் காரணமிருக்கிறது. என் வருங்காலத்திற்கானவள், அதாவது இந்த மாதொருபாகனுக்கான மாதவள்  அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். அது, அதற்கு  இன்னொரு பெருமை.

•••

பெண்பார்க்கப் அந்த வீட்டினுள் நுழையுமுன்னமும் படபடப்பிருந்தது. ‘ஏங்க இவரு மாப்பிள்ளைக்கு கடைக்குட்டி தம்பியா?’ என்று யாராவது என்னைப்பார்த்து கேட்டுவிடும் அபாயமிருந்தது. நல்லவேளை அதற்கான வாய்ப்பை உறவினரொருவர்  தடுத்து ‘இவர்தான் மாப்பிள்ளை’ யென்றார். அப்பாடா‘ என்றிருந்தது. காபி டம்பளரை நீட்டியவள் முன் நாணலாக நாணவும் தெரியாமல், வீராப்புடனுமில்லாமல் சங்கோஜப்பட்டேன். பரஸ்பரங்கள் முடிந்து இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது, இருவருக்கும். அடுத்த அகவை வருவதற்குள் நல்லூணைப் பெருக்கி உடலையும் பெருக்கி ஒரு டி.எம்.டி முறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ அல்லேல் குறைந்தபட்சம் பி.வி.சி குழாயையாவது வளைத்துக்காட்டும் தண்டுளப வண்ணனாகவோ மாறிவிடவேண்டுமென்பதை வருங்காலத்தாளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் கொண்டை முடிந்திருக்கிறாள்.

•••

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யமொன்றறியோம் பராபரமே என்பதற்கிணங்க கவிதையெழுதுவதை சமீபகாலமாக நிறுத்தியிருக்கிறேன். தெரியவில்லையென்பது இரண்டாம்பட்சம். நல்ல எளிமைக் கவிதைகளை படிப்பதிலிருக்கும் ஆர்வம் எழுதுவதில் கிஞ்சித்துமில்லை. ஒரு மதிமயங்கிய மாலைநேரம், மழைக்காலம் எதையோ பேசி, எதையோவொன்றைச் சொல்லப்போக என்னவள், ‘நானும் கவிதையெழுதுவே’னென்று என் வலப்பக்கச் செவியின்வழி  குண்டைத் தூக்கிப்போட்டாள். நள்ளிரவு 12 மணிக்குமேல் கவிதையெழுதத் தோன்றினாலும் உடனே துயில் கலை(த்)ந்து ஒரு கோடுபோட்ட குறிப்பேடு முழுக்க கவிதைகளாய் சமைத்துவிடும் வல்லமை  பெற்றவளாம். மாமியார்கூட புளங்காங்கிதமடைந்தார். இந்த கவிதாயினிக்கு ‘சாமி’ வராமல் காலமுழுக்க பார்த்துக் கொள்ளவேண்டுமென்பதே என் இப்போதைய ஆசை.


Friday, September 16, 2011

வதம்

துண்டான சிலந்தியின் கால் துடிப்பதைபோல அவளின் இடதுகை மட்டும் பாயில் பிறாண்டிக் கொண்டிருந்தது. இரண்டு கண்முழிகளும் பிதுங்கி மேற்நோக்கி நிலைகுத்திவிட்டது. இந்நேரம் அவள் நாடி அடங்கியிருக்கும். இத்தனை ரண வேதனையும் நெஞ்செரிச்சலையும் தாண்டி என்மனதில் பூரண நிம்மதி, சந்தோஷம். இரண்டுவாரமாக இருந்த என் வயிற்றெரிச்சல் இன்று அடங்கிவிட்டது. ஆனாலும் வாய்விட்டு சிரிப்பதற்கு என்னிடம் திராணியில்லை. ஒரே இறுக்கமாக இருக்கிறது. இந்த மரமட்டைகள் அசைந்து தொலைத்தால் தேவலை. வாசற்கதவுக்கூட திறந்துதான் கிடக்கிறது.  இவள் போட்ட இந்தக்கூச்சலை யாராவது கேட்டிருப்பார்களா? இருக்காது... இருக்காது. எனக்கே லேசாகத்தான் கேட்டது.  பாஷாணம் எனக்கும் வேலை செய்கிறது. மெல்ல மெல்ல பார்வை மறைவதை நன்றாக உணரமுடிகிறது. கூரையின் மோட்டுவலைக் குச்சிகள் கோடுகோடாய்த்தான் தெரிகிறது.


காலையில் செய்தி தெரிந்தபின் என்னாகுமோ!? கலைந்த கோலமும் அதனை மொய்க்கும் எறும்புகளுமாய் ஊர் சனமே கூடி நிற்கும். ஆளாளுக்கு வாயில் வந்ததை மாய்ந்து மாய்ந்து பேசுவார்கள். “சும்மாவாடி சொன்னாங்க… புத்திக்கெட்டதுங்க பூமிக்கிப்பாரம்னு” , “இந்த ரெண்டுங்கெட்டானோட வாழறதுக்கு அவ இப்டி சாவலாங்கறேன்” “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு வளத்தத தாரவாத்துட்டுதுங்க, இனி இருந்தென்ன? இல்லன்னாயென்ன? பேரன்பேத்தி பாத்துட்டு போயிருக்கலாம், என்ன கஷ்டமோ என்னமோ?” இப்படி. எப்படியும் எவனாவது ஓடிப்போய் பபிதாவுக்கு தந்தி அடித்துவிடுவான். அவளிடமிருந்து வந்த கடிதங்கள் குதிருக்கு பக்கத்தில்தான் தொங்கிக்கொண்டிருக்கிறது. அதிலேயே அவளின் முகவரியும் இருக்கிறது. MOTHER AND FATHER DEAD அல்லது VAITHYANATHAN AND ANNAM DEAD இப்படித்தான் கொடுக்கப்போகிறார்கள். இப்படித்தான் நாலைந்து எழவு வீடுகளுக்கு நானும் கொடுத்திருக்கிறேன்.


செய்தி தெரிந்தால் பபிதா துடித்துதான் போவாள். சிறா உடைக்கும் கோடரியை நடுமாரில் போட்டதுபோல்தான் இருக்கும், வயிறிலும் வாயிலும் அடித்துக்கொள்வாள். அந்த நேரத்தில் பஸ் கிடைக்குமோ என்னமோ?. அவளுக்கு எங்களைவிட்டால் நாதியில்லைதான், அதுவும் என்மேல் அவளுக்கு ரொம்பவே ப்ரியம். ஒரே பெண், சொல்லவா வேண்டும்.. எத்தனை ஊட்டி வளர்த்திருக்கிறேன். இவள் வயிற்றில் பிறந்ததுதான். கல்யாணம் முடிந்து இரண்டுவாரம்தான் ஆகிறது. நேற்று ஊருக்குப் போகும்போது கலங்கிய விழிகளுடன் என்னையேன் அப்படிப் பார்த்தாளென்று தெரியவில்லை. தீர்க்கதரிசனம் என்பார்களே! அதுபோல் எதாவது இருந்திருக்குமோ? இருக்கும் இருக்கும்.. நான் வளர்த்தவளாயிற்றே. பெண் வீட்டாரின் மூன்று அழைப்புகளும் முடிந்து ரெண்டுபேரையும் நேற்றுதான் அனுப்பிவைத்தோம். நானும் அவள் நல்லபடியாக போகட்டுமென்றுதான் காத்துக்கிடந்தேன். பபிதாவை நினைத்தால் கொஞ்சம் சங்கடமாகயிருந்தாலும் இது சரியான முடிவுதான். என்ன செய்வது?.


பலநாள் திருடன் ஒருநாளில் மாட்டுவான் என்பார்கள். ஒருவேளை அந்தச் செய்தி பப்பிக்குத் தெரிந்தால்... அவ்வளவுதான், நாண்டுகொள்வாள், இதைவிட பெரிய அவமானம் அவளுக்கு கிடையாது. குடியே முழுகிவிடும். அய்யோ, வேண்டாம்..வேண்டாம், நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அந்த மாதிரி நடப்பதற்குதான் இனி வழியில்லையே. அன்னம் வாய் திறந்தால்தான் உண்டு. அவள் வாய்தான் பிளந்துகிடக்கிறதே. ஹ..ஹ... என்னமோ சொல்வார்களே கரவம் கட்டி பழிதீர்ப்பதென்று. இந்த ரெண்டு வாரமும் என் மனம் கிடந்து எப்படித் துடித்தது, யாருக்காவது தெரியுமா?.. எத்தனை சாணக்கியக்காரி, கைகாரி இந்த அன்னம். நாக்கில் எத்தனை கொடுக்குகள். சாகும்போதுக்கூட என்ன துடுக்கான பேச்சு பேசுகிறாள்.


எனக்கும் அன்னத்துக்குமான இந்த 24, 25 ஆண்டுகால வாழ்க்கை மேம்போக்காக அப்பா, அம்மா ஸ்தானத்தில் பப்பிக்கு தெரிந்தாலும் இலைமறை காய்மறையாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் இந்த விசயம் வெளியுலகத்திற்கு தெரிந்தால் என்னாவது? வெளியுலகம் கிடக்கு, முதலில் பபிதாவிற்கு தெரியாமலே போய்விடவேண்டும். இனித்தெரியவும் வாய்ப்பில்லை. சுப்பிணி ஒருத்தனை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது.  அவனும் சொல்லக் கூடியவனில்லை. மானஸ்தன்தான். என்ன பெரிய மானஸ்தன்? பொல்லாத மானஸ்தன், நயவஞ்சகன்... காரியசாலி.. அவனைவிட்டால் இது வெளியில் ரெண்டாம்பேருக்கு தெரியாது, சொல்லமாட்டான் அவன்...


தெரிந்தால்தான் என்ன? நான் இனி எதைப் பார்க்கப்போகிறேன். தோ, இந்த பூரணம் அற்பமாகப்போகிறது. பிராணன் போனப்பிறகு என்ன நடந்தால் என்ன..? இந்த சுப்பிணி இல்லையென்றால் எனக்கும் அன்னத்துக்குமான வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்!! இருந்திருக்குமா? அவன் முன்னமே செத்திருந்தால் இது சாத்தியம். நிச்சயம் இருந்திருக்கலாம், ஆனால் இவள்.. நெஞ்செல்லாம் வஞ்சம், சண்டாளி... செத்தாள் சனியன், சாகட்டும், சாகட்டும்.


அப்போது எங்களுக்கு கல்யாணம் ஆகி 6 மாதமாகியிருந்தது. தனிக்குடித்தனம். அதற்குள் எங்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது, மாயை. வேண்டா வெறுப்பான வாழ்க்கையாக தெரிந்தது. கொல்லன் பட்டறையில் பதம் பார்த்தடித்த அரிவாள் முனையில் சம்மட்டியை போட்டு மழுங்கடித்தாற் போலாகிவிட்டது. வேறென்ன சொல்வது? அன்னம் அன்று காலரா வந்துகிடந்தாள். பக்கத்தில் பார்த்துக்கொள்ள ஆளில்லை. இருவர் வீட்டிற்குமே நான் சொல்லவுமில்லை. பார்த்துக்கொள்ளலாமென்ற அசட்டை. நான் பட்டறையில் கிடந்தேன். முதல்நாளே வயிற்றைப் பிடித்துக் கிடந்தவளை நான்தான் அலட்சியப்படுத்திவிட்டேன். அவளும் தன் தீவிரத்தைக் காட்டவில்லை. இந்த சுப்பிணி பக்கத்து வீட்டுக்காரன். துணிமணியெல்லாம் கழிந்து கிடந்தவளை தூக்கிக்கொண்டு அவன்தான் ஆஸ்பத்திரிக்கு ஓடியிருக்கிறான். பிறகு சேதிவந்துதான் அரக்கபறக்க நானும் ஓடினேன். காய்ந்த மாவிலைப்போல படுக்கையில் கிடந்தாள். எனக்கும் உச்சிமண்டையில் அப்போதுதான் உரைத்தது. ஒரு உயிரை உதாசீனப்படுத்துமளவுக்கு எத்தனை வன்மம், வக்கிரப்புத்தி எனக்கு. படித்து என்ன பிரையோஜனம். ஒன்றுமில்லை. ஒரு நல்ல வேலைக்குக்கூட போகமுடியவில்லை, நல்ல புத்தியும் இல்லை, இந்த உடல், நடை, உடை, பாவனை எதுவும் ம்கூம்....


அப்போதெல்லாம் நான் சுப்பிணியை தினமும் வணங்காத குறைதான். அவ்வளவு மதிப்பு அவன் மீதிருந்தது. நண்பர்களைப்போல நல்ல பழக்கம்தான் சுப்புணிக்கும் எனக்கும். அவனுக்கு நல்ல தலதல உடல்வாகு, மண்வெட்டி இலைபோல ஏந்தலான மார்புகள், தலை, கை, கால், மூக்கு முழி எதுவும் குறையில்லை. என்னைப்போலில்லைதான். எனக்கென்ன குறைச்சல் நானும் அவனைப்போல ஆண்பிள்ளைதான், ஆமாம் ஆண்பிள்ளைதான். அன்னத்தை தவிர எல்லாருக்கும் நானொரு ஆண்மகன்தான். தாம்பத்தியத்தை அன்னம் ரொம்பவும் விரும்பியிருப்பாள் போலிருக்கிறது. ஆனால் வெறும் தாம்பத்தியம்தான் இந்த வாழ்க்கையா? ச்ச்ச.. நானும் அவ்வாறு நினைக்கவில்லைதானே. அதிலும் குறையாக எனக்கு தெரியவில்லையே...


ஆனால் அன்னம்.. இந்த அன்னம்.......? இதோ கோசா..கோசா என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கத்தியே செத்துப்போனாளே இந்த அன்னம்.. இவளைத்தவிர நான் எல்லோருக்கும் ஆண்பிள்ளைதான். என்னைப்பற்றி யாரிடமாவது சொல்லியிருப்பாளா? இருக்காது, சொல்லியிருந்தால் அக்கம் பக்கத்துக்கு சிறுக்கிகள்
என்னை ஏளனமாக பார்த்திருக்கவேண்டும். யாரும் அப்படி பார்த்ததே கிடையாது. ஆங்... ஆனாலும் சகுந்தலா சிறுக்கி மட்டும் ஒருமாதிரி வெடைப்பாக பார்ப்பாள், அப்பப்பா அதில்தான் எத்தனை எள்ளல்...!! த்தூ...


எப்போதோ பள்ளிவயதில் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு சிங்கானோடை ஜோசியக்காரன் சொன்னான், அந்த கருநாக்கன்தான் சொன்னான்..  இன்னும் ஞாபகமிருக்கிறது. ‘இது, பொம்மனாட்டி ஜாதகம்ல, இது தப்பிப்பொறந்தது, கேந்திரஸ்தானம், லக்னத்துல புதனும், சுக்கிரனும் சேந்துக்கெடக்கான், சந்திரன்  உச்சம்... புதன் அலி, சுக்கிரனும், சந்திரனும் பொம்பளச் சாதி.... ம்ம்ம்... ஜாதக அம்சமே அதாஞ்சொல்லுது, ஆளு பாத்தாலே தெர்லயா... ‘ஆனாலும்?’ இரண்டு மூன்று விரல்களை எண்ணிவிட்டு பிறகு சொன்னான் ‘....... காலத்துல சரியாயிடும், பாருங்க. கெட்டிக்காரனாயிடுவான்’.


உண்மைதான், என் பேச்செல்லாம்கூட ரெண்டுங்கெட்டான் நிலைதான், இப்போதெல்லாம் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன், மாற்றிகொண்டேனென்றால் அதிகம் எவரிடமும் பேசுவது கிடையாது. வாயைக் குதப்ப வெற்றிலைப் பாக்கு, இருக்கவேயிருக்கு. வேறென்ன.. அப்போதெல்லாம் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்ள ரொம்ப பிரியப்படுவேன். ஏனென்றும் தெரியாது. அந்த பருவத்தில் ஆண்கள் மீதான விருப்பம்தான் மிதமிஞ்சியிருந்தது. பள்ளியில் என்கூட படித்த பயல்கள் எல்லாமே முதுகுக்குப்பின்னாடி ‘கோசா, ஒம்போது’ என்றுதான் பேசிக்கொள்வார்கள். எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனாலும் எனக்கு அது பொருட்டில்லை, பழகிப்போய்விட்டது.


ஒரு மாட்டின் கன்றுக்குட்டியை தினமும் தூக்கிப்பழகினால், அது மாடானப்பிறகும் நம்மாள் தூக்க முடியும். அதுபோல்தான் எல்லாமே எனக்கு பழகியிருந்தது. புளித்துப்போன வார்த்தைகள். ஒரு உச்ச வெறுப்பான நாளில் அன்னத்துக்கும் எனக்கும் சண்டை. பப்பிக்கு அப்போது மூன்றரை வயதிருக்கும். அன்னம் என்னை ‘வாடா, போடா’ போட்டு திட்டினாள். ஓங்கி அறைந்தேன், ‘டேய் கோசாப்பயலே என்னையாடா அடிக்கிற? சாண்டக்குடிக்கார, உங்கூட எவளாச்சும் குடும்பம் நடத்துவாளாடா, இம்மாந் தண்ணிக்கு உன்னய தெருவுல கையேந்த விடறேன்டா’ என்று பிடித்து தள்ளினாள், பிறகு அப்பன் வீட்டுக்கு போய்விட்டாள். பிறகு மாமனார் சமரசம், இத்யாதிகள். ஆனாலும் அவள்மனதில் என் மீதான இளக்காரப் பார்வை தொடர்ந்துகொண்டேதான் இருந்திருக்கிறது. நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. நிஜமாகவே குமட்டுகிறது... உவ்வ்வ்... பாஷாணம் வேலை...


இத்தனை நாள் இல்லாத அல்லது தெரியாத அந்த இடி இரண்டு வாரங்களுக்கு முன்னால்தான் என்தலையில் விழுந்தது. அது எனக்கு தெரியாமலே இருந்திருக்கக்கூடாதா?... பப்பி என் மகளே இல்லையாம்.


‘மகமாயி.. மகமாயி.. நித்தம் உன்னக் கும்பிடுறனே... என்னடி சோதனையிது..’ கொல்லைக்கட்டில் இந்த சிறிக்கியும், அந்தப்பயலும் பேசிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, எவ்வளவு அன்யோன்யமாக பேச்சு அவர்களுக்குள், குசுகுசுன்னு. ‘தாயே... மகமாயி...மகமாயி... நீயாச்சும் அப்பவே இவள காட்டிகொடுக்கக்கூடாதா?...’ ஆமாம் தெரிந்துதான் என்ன? ஒன்றும் கிடையாது. என் வாழ்க்கையே பப்பிக்காகதானே... அதெப்படி? இத்தனைக்காலம் எனக்குத் தெரியாமல்.... இவர்களின் உறவு புடம்போட்டதுபோல் மறைந்திருக்க முடியும்?.. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திருக்கும், எத்தனை நாள், ராப்பகல் பாராத பட்டறை வாழ்க்கை.. தலைக்குமேல் வெள்ளம் போய்விட்டது பிறகென்ன... பப்பிக்குப்போட்ட அந்த நாலு பவுன் நகையும், அவன்தான் கொடுத்திருப்பானோ? அவனேதான்.. நான் கேட்டதுக்கு இவள்தான் பதிலே சொல்லவில்லையே.. அப்படித்தானிருக்கும். அய்யோ பப்பி.. பப்பி..  ‘ச்ச்ச்ச்ச... இதென்ன புதிசா.. ஞாபகம் கொடுக்கும் பப்பியின் முகம் அவன் மூகமாட்டம்... அந்த உள்ளி மூக்கு அவனுடையதுதானோ? அவனுடையதுதான்.. அவனுடையதுதான்.. அப்படியே அவனைத்தான் உரித்துவைத்திருக்கிறாள். இத்தனைநாள் எனக்கு தோன்றவில்லையே.. இதென்ன.. ச்சை..ச்சை..


இந்த பாஷாணம் என்ன இப்படி உடம்பை முருக்குகிறது. யப்பா.. நெஞ்சிக்குள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதுபோல் எரிகிறது.... அன்னம் இன்று பரங்கிப்பழம் போட்டு பூண்டுக் குழம்புதான் வைத்திருந்தாள். அதில்தான் இதை ஊற்றினேன். பூண்டு வாடை எல்லாவற்றையும் மறைத்தேவிட்டது. நல்லதுதான். ஒன்றரை தட்டு சாதமாவது சாப்பிட்டிருப்பாள். தெரிந்ததாலோ என்னமோ அரைதட்டுக்குமேல் என்னால் முழுங்க முடியவில்லை. ரெண்டு மொனரு தண்ணீரும் குடித்தேன்.


அன்னம் போய்ச்சேர்ந்து இவ்வளவு நேரமாகியும் நான்மட்டும் இழுத்துக்கொண்டு கிடக்க அதுதான் காரணம். ஆனாலும் பூண்டுக்குழம்பில் பரங்கிப்பழம் போட்டால் எவ்வளவு ருசி!! நன்றாக வெந்த சேமியாபோல அதன் சதைகள், ஹும்.. ரசித்து ருசித்துச் சாப்பிடவேண்டும். ‘நாடகம் விடும் வேலைதான் உச்ச காட்சி நடக்குதம்மா....’ பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது. ‘கண்ணெல்லாம் சொருகுதுடி, நெஞ்செரிச்சல் தாங்கமுடியலடி ப்ப்பி...தாயீ.. நீ என் பொண்ணேயில்லையாமே?.. அய்யோ..அய்யோ..அய்யோ.. இது அடுக்குமா? தலையிலகூட அடிச்சிக்க முடியலடி.. சண்டாளி... செத்தா... இப்டி ஒரு வாழ்க்கை தேவையாடி ஒனக்கு அன்னம்..?? தேவயா......’ பூலோகம் இருண்டது.

நன்றி அதீதம்

Friday, July 29, 2011

காத்திருத்தல்


பெரும்பாலும் பெரிய விசயங்களைவிட சிறுசிறு விசயங்களில்தான் காத்திருத்தலென்பது ஒரு சுமையெனப் படுகிறதெனக்கு, என் புத்திக்கு. நான் காத்திருந்த நேரங்களைவிட காக்கவைத்த நேரங்கள்தான் அதிகமிருக்குமென்பது இதையெழுத நினைக்கும்போதுதான் ஞாபகம் வந்துதொலை(க்)கிறது. விவசாயி மழைக்கு, மாணவன் பரிட்சை முடிவுக்கு, இளைஞன் காதலுக்கு, பெண் திருமணத்திற்கு, ஒரு குடும்பத் தலைவன் கணக்குப் போட்டு கடன் வாங்கி பின் வரும்படிக்கு என இப்படி ஒவ்வொரு காலத்திற்குமான ஒவ்வொரு வகை  பெரிய காத்திருப்புகள் கட்டாயம். ஒரு காத்திருத்தலும் அதற்குள் மனதிற்குள் உண்டாகும் எண்ணங்களும் மொத்த வாழ்வின் வலி, போராட்டம், தவிப்பு, இன்பம், துன்பம், அனைத்திற்கும் மேலான ஒருவித சுகச்சுமை போன்ற அத்துணைப் பண்புகளையும் காலத்திற்கேற்றாற்போல் ஒருங்கே கொடுத்துவிடுகிறது. நான் இத்தனைப் பிசகில்லாமல் எளிமையாகக் கடந்திருக்கிறேனோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இது வரமா, சாபமா தெரியவில்லை.



தெருவே அல்லோகலப்பட்டுக் கிடந்தது. அனைத்து வீட்டு வாசல்களிலும் என்னொத்தச் சிறுவர்கள் வெடிகளை காயப்போட்டிருந்தனர். பார்க்கப்பார்க்க பொங்கிப் பொங்கி வந்தது. மாலை மணி ஆறாகிவிட்டது. அப்பா வந்தபாடில்லை. மாயவரம் மரவாடிக்கு சென்றிருந்தார். துணிமணிகளை எடுத்து ஒரு மாதமாகியிருந்தது. ஆனால் வெடி? ‘தோ செத்தயிரு வந்திடும்பா’ இரும்புச் சாரணியில் முறுக்குப் பிழிந்தபடியே அம்மாவின் ஆறுதல். பாவி மனசு கேட்கணுமே. ஏக்கமும், தவிப்பும் நிரம்பி உதடுகள்வழி பிதுங்கி பொங்கிவிட்டது. ஏழு, எட்டு... கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி பொங்கலும் அடங்கியது. எனக்கு அப்போது புஸ்வானம் விட ரொம்பப் பிடிக்கும். ஒரு புள்ளியிலிருந்து விரிகின்ற மலர்போல அழகு.   எல்லோர்வீட்டு பிள்ளைகளும் புஸ்வானம் விட்டுக்கொண்டிருந்தனர். நான் ‘புஸ்’ஸானேன். உண்டேனா இல்லையாவென்று தெரியவில்லை ஆனால் உறங்கிவிட்டேன். பதினொன்றரை மணியிருக்கலாம் அப்பா வந்தார், ஐம்பது ரூபாய் வெடிகளுடன். அம்மா எழுப்பி காட்டினாள். செய்தித்தாளில் சுற்றி சணல் போட்டுக் கட்டியிருந்தார்கள். காத்திருந்த மனதிலிருந்து அத்தனை அடைசல்களும் நீங்கி ஆற்றாமையும், தவிப்பும், பொய்க் கோபங்களும் பெருமூச்சின் வழி காற்றுடன் கலந்தது. ஐப்பசி குளிரில் புஸ்வானங்கள் ஜில்லென்றிருந்தது. ‘இந்தா இந்தா கொளுத்து’ என்று அப்பாவும் துணைக்கு வந்தார். மழையும் வந்தது.



கல்லூரிக் காலம். பவானியின் அண்ணனைப் பார்க்க தனியாக ஆக்கூர் பஸ்டாண்ட் பேக்கரி கடையில் உட்கார்ந்திருந்தேன், இடுப்பில் பைப் கத்தி சகிதம். பவானியை காதலித்தேனென்பது உலகறிந்தது. அந்த ‘ஒரே’ குற்றத்திற்காக என்னை ஆள்வைத்து மிரட்டினான், கிராதகன். வந்ததே கோபம், வச்சனா தகடியா ஒன்று நான், இல்லை அவன். அதற்குதான் அந்தக் காத்திருத்தல். என்னை மிரட்டியவன் பார்த்து விட்டான். ஆனால் கண்டு கொள்ளவில்லை. 2வது சந்திலிருக்கும் பவானி வீட்டிற்கு அவன் சென்றிருக்க வேண்டும். அந்த சந்து முகனையில்தான் பஞ்சாயத்து அலுவலகம். அதுவரை எந்த வம்பு தும்புகளுக்கும் போனவனில்லை. அரசமரம், கோயில்கள் தவிர்த்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் பஞ்சாயத்து நடக்குமென்பது என் அறிவீனம். கொஞ்சம் மனதுக்குள் வியர்க்கத் தொடங்கியது. போன பேருந்தைக் காணோம். ஒண்டிக்கட்டை. எவ்வளவு தைரியம்?  இவ்வளவு தூரமென்று உணர்வதற்கும் நேரமில்லை. பொதுவாகவே நான், இணையாகவிழும் இரு மழைத்துளிகளுக்கிடையேப் பிசகாமல் நுழைந்துவரும் புஷ்டியான உடலமைப்பைப் பெற்றவன். சற்றைக்கெல்லாம் அவள் அண்ணன் வந்துவிட்டான். நல்லவேளை வேறு யாரும் வரவில்லை. ‘டேய் வேணான்டா விட்டுடு, அதான் புடிக்கலன்னு சொல்லுதுல்ல, அப்பறம் ஏன்டா?, எப்பாவுக்கு (வாத்தியார்) தெரிஞ்சா பிரச்சன ஆயிடும்.. அவ்ளோதான்’ சொல்லி முடித்தான்.. ப்ப்ப்ரு... இவ்ளோத்தானா? அட சொங்கிப்பயலே.. (மனதிற்குள்) முகத்தை விரைப்பாக வைத்திருந்தேன், கையும் காலும் கடகட, மனது பக்பக். அடுத்த பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினேன். அரைமணி நேரமானது... அந்தக்(கால) காத்திருத்தலொரு இளப் போராட்டம்.



அதே காலம். நண்பனையும் அவன் காதலியையும் பேருந்தில் ஏற்றிவிட்டோம், இன்னொரு நண்பனும் நானும். சம்போ சிவசம்போ பாடல் அப்போதில்லை. இரண்டுநாள் கழித்து நானும் அவனும் காவல் நிலையத்தில், ஆய்வாளர் வருகைக்காக ‘அமர’ வைக்கப்பட்டிருந்தோம். காவல் நிலையமென்பது சிகப்புக் கலர் பெயிண்ட் அடிக்கப்பட்ட கட்டிடமென்பது என் பரம்பரைக்கே அத்துப்படி. அதில் ‘உள்ளாழ்ந்து’ நடப்பவற்றை முதலில் ‘புல’னாய்வு செய்தவன் நான்தான். பெண்ணைப் பெற்றவர் ‘உங்க ரெண்டுபேரையும் என்னப்பண்றேன் பாருங்கடா’  என்று காவல்நிலைய வாசலில் சவால்விட்டுக் கொண்டிருந்தார். (என்) அப்பா கொஞ்சதூரம் தள்ளி மரநிழலில் குருசாமியிடம் பேசிக்கொண்டிருந்தார். அவரும் காவலர், தெருக்காரர், மேலும் எங்களிருவருக்கும் வக்காலத்து. வரப்போகும் காவல்துறை ஆய்வாளர் மிகவும் கண்டிப்பானவரென்று அறிந்திருந்தேன். உள்ளே மரப்பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பனும் நானும் உச்சா போகாதக் குறைதான். ‘ஒழுங்கா உண்மையச் சொல்லிடுங்கடா, விட்டுர்றோம், அய்யா வந்தாருன்னா பின்னிருவாரு’ என்னமோ சடைப் பின்னுவதுபோல் அந்த எழுத்தர் சொன்னார். அடிவயிறு முட்டியது. எப்பாடுபட்டாலும் உண்மையைச் சொல்லக்கூடாது என்பது எங்கள் திண்ணம். ஆனால் லத்தியைப் பார்க்கும்போது அது இளகிக்கொண்டிருந்தது. அதுவரைக்கும் அப்பாவின் விளக்கமாத்து அடிகளை மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட எனக்கு லத்திகளை பார்த்தபோதே வலிக்க தொடங்கிவிட்டது. நண்பனுக்காவது கொஞ்சம் என்புசதை போர்த்திய உடம்பு, இங்கே என்புதோல்தான்.. ஒரு மணிநேரம் ஆகும். உதைவாங்க காத்திருந்தோம். அம்மா, அப்பா, அக்கா எல்லா உறவுகளும் கண்முன் நிழலாடியது. வாங்கப்போகும் அடியின் அச்சாரம் எப்படியிருக்குமென்பதை பக்கத்திலிருந்தவன் கன்னம் சொல்லியது. வந்தார். சில கட்டளைகள், சில வசவுகள், எச்சரிக்கைகள்...அவ்வளவுதான். சோம்பல் முறித்துக்கொண்டு வெளியே வந்தேன். காத்திருந்த அப்பா அழுதிருந்தார், பெத்தமனம்...


அழைத்த அண்ணன் மாதவராஜ் அவர்களுக்கும் நன்றி.

Thursday, June 30, 2011

பம்பரம்



நீலவேணி இறந்து திங்களோடு திங்கள் எட்டு செவ்வாய் ஒன்பது நாட்களாகிறது. கோபுரத்தில் விழுந்த காகத்தின் எச்சம், முளைத்து ஆலமரமும் பின் அதுவே விருட்சமுமானது போல்தான் எங்கள் வாழ்க்கை. பாசி பிடித்த படித்துறையில் கால் வைத்தால் வழுக்கிவிடும், ஆனால் அதையும் மீறி இத்தனைக்காலம் ஓடிவிட்டது. போய் சேர்ந்துவிட்டாள் புண்ணியவதி. புதைத்த கையோடு உடன் பாலும் கையோடு மையோடு கல்லு கருமாதியும் முடிந்தேவிட்டது. ஊதுபத்தி வாடையும், பன்னீரின் வாடையும் கலந்து அவளின் சுவாசம் நிறைந்த இந்த கூடாரத்தை அபகரித்துவிட்டது. கண்ணுக்குத் தெரிந்து இந்த வீடும், தோ அவள் படத்தின் முன்னுள்ள பாக்கு வெட்டியும்தான் அவளுக்கான ஜென்மபலன், எங்களுக்கும். ஒட்டங்காடு போகவேண்டுமென்று தோன்றியது. இத்தனை நாளும் இந்த எண்ணம் இல்லாமலில்லை, இப்போதுபோல் இத்தனை நாளுமில்லை.

‘ரெங்கா? நான் ஒட்டங்காடுவரைக்கும் போவலாம்ணு இருக்கேன்யா...’ ரெங்கா என்னையே பார்த்துகொண்டிருந்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், அவனும் என்ன செய்வான்?

‘ஏம்ப்பா? இப்பபோயி?!!!’

‘இல்லய்யா, எனக்கென்னமோ போலருக்கு, நீலா பொறந்த ஊரு, அவளோட நான் வந்ததுலேர்ந்து இப்பதான் நேரங்கூடி வந்திருக்கு, தடவைக்கு தடவ நாஞ்சொன்னாலும் வேண்டா வேண்டாம்பா.. ஒரு நாலு நாளு இருந்திட்டு வர்ரன்யா’ நிறைய ஆற்றாமையும் கொஞ்சம் இயலாமையும் கலந்த என் பேச்சை அவன் தட்டவில்லை.

‘அதுக்குச்சொல்லல...’ முழுங்கிவிட்டு ‘சரிப்பா, அங்கப்போயி எங்க தங்குவீங்க? யாரிருக்கா? பட்டாமணியாரு இருக்காரா இப்ப? அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு போங்களேன்..’

‘சரிய்யா, பாக்கறேன், ராத்திரி சாப்பாடு முடிச்சிட்டே கெளம்பறேன்’

எல்லாம் தயாராகிவிட்டது. ஒரு கருப்புப் பையும், துணிமணிகளும், பேஸ்ட், பிரஸ் எல்லாமும் சரியாக எடுத்துவைத்திருந்தாள் சரசு, மருமகள். ‘போலாமா?’

‘தோ வந்திட்டேம்பா’ வண்டியில் கொண்டுவந்து பஸ்டாண்டில் விட்டான்.

ஒன்பதே முக்காலுக்கு கோயம்பேட்டில் எடுப்பான் அந்த பொறையார் பஸ். பொறையார் டூ மெட்ராஸ், மெட்ராஸ் டூ பொறையார் பைபாஸ். நெய்வேலி, சீர்காழி, மாயவரம், அப்பறம் நேர்வழியாக பொறையார் செல்லக்கூடியது. மாயவரத்தில் இறங்கி லாட்ஜில் தங்கி, குளித்துவிட்டு லைட்டாக டிபன் முடித்துக்கொண்டு கிளம்பினாலும் போதும். காலையில் ஒன்பதரைக்கோ என்னமோ 23ம் நம்பர் பஸ். செம்பனார்கோவில், ஒட்டங்காடு, திருவிளையாட்டம் வழியாக சங்கரன்பந்தல் போகும் அப்போது. இப்போதும் அந்த பஸ் ஓடுவதாக பட்டாமணியார் சொன்னார். இன்னேரம் அவருக்கும் என்னைப்போலவே வயதாகிருக்கும். தாடி, மீசை, கழுத்தில் ஒற்றை ருத்ராச்சம் இன்னமும் அப்படியே இருப்பாரா?!! வயோதிகம் அவர் உடலையும் வாட்டியிருக்கலாம். அவர் மனைவி செத்தது தெரியும். ஒட்டங்காட்டில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளையும் அவர் மூலமேதான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது ‘வர்ரேன்’ என்று சொன்னேனே ஒழிய எப்போதென்று சொல்லவில்லை. அவர் கண்ணில் படாமல் ஊரில் உலாவ முடியுமா? முடியும், முடியும்.. பாப்போம்..

மஞ்சளாற்றைத் தாண்டி இடதுபுறம் திரும்பியது பேருந்து. எனக்கு மனதெல்லாம் பக்..பக்..கென்று அடித்துக்கொள்ளத் துவங்கியது. கிட்டத்தட்ட 32 வருடங்கள். இங்கிருந்து இதே வழியேதான் நானும் நீலாவும் சைக்கிளில் செம்பனார்கோவில் போய், பின்பு பேருந்தில் மாயவரம், அப்பறம் மெட்ராஸ். அப்போது இந்தச் சாலை சிகப்பு கப்பியில் நிரம்பியிருக்கும். தொலைவில் இடதுபுறத்தில் சட்ரஸ்ஸும், வலதுபுறத்தில் முனியப்பன் கோவிலும் தெரிந்தது. அப்படியேத்தானிருக்கிறது. எந்த மாற்றமும் தெரியவில்லை. அருகருகே இரண்டு மூன்று குடிசைகள். நாங்கள் ஊரைவிட்டுப்போன அந்தக் கடைசிநேர பரபரப்பிலும் நீலா முனியப்பன் உண்டியலில் எதோ காசுபோட்டுவிட்டு சைக்கிளில் வந்து குந்தினாள். விபூதியும் பூசிக்கொண்டாள், நான் கண்டுகொள்ளவில்லை, இருவரையும். பனைமுட்டு, கோனமுட்டி வாய்க்கால், ஒரு சர்ச், உத்திராபதி கோவில் எல்லாம் செருகச்செருக கடந்துகொண்டேயிருந்தது. உடல் வயிறெல்லாம் ஒரு சந்தோஷ திரவம் சில்லென்றாற்போல் ஊறியது. பேருந்து இறக்கத்தில் இறங்கும்போது அடிவயிற்றில் ஒரு இனம்புரியா கிறக்கம் உண்டாகும், அப்படிதான் இதுவும்.

ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் ஸ்டாப்பிங்கில் இறங்கினேன். யாருக்கும் என்னைத்தெரிய வாய்ப்பேயில்லை. ஆனால் என் அப்பனை அறிந்தவர்கள் யாரேனுமிருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். ஆமாம்...என்னிடம் என் அப்பனின் முகம் அப்படியே ஒட்டியுள்ளது. இந்த பத்துநாள் தாடியும், வீசையும் அந்தாள் மூஞ்சை பளிச்சென்று காட்டிக்கொடுத்துவிடும். நெஞ்சின் படபடப்பு அடங்கவில்லை. மாரியம்மன் கோவில் வாசலில் தீக்குழி, கரிகள் அள்ளியபின் தெரியும் கருமை படர்ந்திருந்தது. எத்தனைக் கூட்டம் தீமிதித்திருக்குமோ!!!? ஒட்டங்காடு மாரியம்மன் தீமிதியென்றால் மாமாங்க கூட்டம் கூடும். ஜெ.ஜெ வென்று சுத்துபட்டு 54 கிராம மக்கள் கூடுவார்கள். எதிர் சாரியில் ஒரு பெட்டிக்கடை, வாடகை சைக்கிளும் இரண்டு முன்று கிடந்தது. அருள்ராஜ்தான் முன்பு இந்தக் கடை வைத்திருந்தார். இப்போது யாரென்று தெரியவில்லை. கடையில் யாரோ பொடியன் இருந்தான்.

‘தம்பி, சைக்கிள் வாடகைக்கு வேணும்பா?’

‘சைக்கிளா? நீங்க? எங்க போணூம்?’

‘பெருமாக் கோவிலாண்ட’

‘எப்ப வருவீங்க?’

‘ஒரு மணிநேரத்துக்குள்ள வந்திடுவம்பா’

‘ஐ.டி. கார்ட் வேணும், இருக்கா?’

சட்டையிலிருந்த பழைய லைசன்ஸ் கார்டை நீட்டினேன். வாங்கிக்கொண்டான்.

‘கேரியர் வய்ச்சி வேண்டால்ல’ ஒரு சைக்கிளைக் காட்டினான். எடுத்து ஸ்டேண்ட் தள்ளினேன். ரொம்ப நாளாகிறது, சைக்கிளைத்தொட்டு. மெட்ராஸில் கொஞ்சகாலம் சைக்கிள் ஓட்டியிருந்தாலும் நீண்ட இடைவெளி. ஒரு உந்து உந்தி ஏறினேன். பெடலை மிதிக்கும்போது சுலபமாக என்னையும் தள்ளிக்கொண்டே போவதுமாதிரி தோன்றியது.

நல்லவேளை, பெருமாள் குளத்தங்கரையில் யாருமில்லை. சைக்கிளை நிறுத்திவிட்டு  அரசமரத்தைச் சுற்றி கட்டியிருந்த திண்ணையில் அமர்ந்தேன். கோவிலின் உள்ளே மணிச் சத்தம் கேட்டது. மதியக்கால பூஜையாக இருக்கும்.

இந்த அரச மரத்தடியில் சிறுவனாக இருக்கும்போது சோறு தண்ணியின்றி விளையாடிய காலங்கள் எத்தனை!!! எத்தனை!!! என்னடாயிது வயோதிகத்திலாவது இந்த ஞாபகக் கொடுக்குகள் அற்றுப்போகக்கூடாதா? அதுசரி அப்படியிருந்தால் நாம் ஏன் இங்குவரப்போகிறோம்? கோவிலிலிருந்து யாரோவொருவர் வந்தார். ஆ... அந்த உருவம் பழக்கப்பட்டதுதான். அந்தக்காலத்து ஒற்றைநாடி, இப்போது.. இன்னும் தளர்ந்து... கூன் விழுந்து, அய்யரேதான்!!!!. என்னைப் பார்த்துவிட்டார்.

‘யாருப்பாது? இங்க உட்காந்திண்டிருக்க? புதுசாட்டருக்கு!!’

நெற்றியில் அவர் வைத்திருக்கும் குங்குமக் கீற்றலே போதும் அடையாளங் காண. புருவ மத்தியிலிருந்து உச்சி மண்டை வரை நீளும் அந்தக்கோடு. ‘ஆமாங்க சாமீ, புதுசுதான்.’

‘இஞ்ச யாரப்பாக்கணும்?’

‘சாமீ.. கோதண்டபாணிய ஞாபவமிருக்கா ஒங்களுக்கு?’

‘எந்தப் போதண்டபாணிங்க, தெர்லியே’

காது சரியாக கேட்கவில்லை போலும் ‘போதண்டபாணில்ல, கோதண்டபாணி, கோதண்டபாணி..’ உறக்கச்சொன்னேன். பிறகு ‘கொசவங் குட்டைக்கிட்ட ரெய்லோடு போட்ட வீடு ஞாபவமிருக்கா? 30-35 வருஷத்துக்கு முன்னாடிச் சொல்றேன் நானு. அவரு?’

‘ஆங்... டேய், படவா.. கோதண்டம் மொவங்காரனா??!!.. அதாங் மொவரக்கட்ட காட்டுதே...!!, குண்டுகுண்டுன்னு ஓடியாடிண்டிருந்த அந்தக் கொழந்தைய சைக்கிள்லயே இழுத்துண்டு ஓட்ன பயலாச்சே நீ... தாடி வீசல்லா வச்சிண்டு, கெழவனாட்டங்க கடக்க.. கூம் நாம்பரவால்லடாப்பா...’

‘ஆமாங்க சாமீ’. அவர் இத்தனையும் ஞாபகம் வைத்திருப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நாளில் ஊர் ஜனங்களுக்கே இந்த சேதி பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கும், அந்த விசும்பல்தான் இந்த ஐயரும். இந்த மரத்தடியில் பம்பரம் விளையாடும் பொழுதுகளில்தான் நீலா ரோட்டுக்கு அந்தண்டைப் பக்கம் வீட்டிலிருந்து பார்ப்பாள். சின்னப்பிள்ளையிலேயே அப்படிதான். ஊரிலேயே அவள் வீடுதான் மாடிவீடு. சீமத்தண்ணி குடித்த குடும்பமென்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மாட்டு கொட்டகைக்கூட ஒரு ஒட்டுக் கட்டிடத்தில்தான் இருந்தது. இப்பொழுது அந்த வீடும் கொட்டகையுமிருந்த சுவடுகளேயில்லை.

‘ஏண்டாப்பா நீலா எப்டியிருக்கா?! இன்னும் நீ சாமிச்செலைய ஒடைச்சிண்டுதானிருக்கியா?.... மொகரையே தெரியுதே... தோ பாத்தியா இந்த புள்ளையார? அவரு மூக்க உடைச்சது உன் வேலைதானேடா, இன்னும் ரெண்டு மூணுப் பேரோட தூக்கிப்போட்டியே இந்த கொளத்துல..’

உண்மைதான் இந்தப் பிள்ளையாரின் மூக்கு உடைந்தது என்னால்தான். அப்போதிருந்த வேகம், பகுத்தறிவு சிந்தனைகள், பெரியார், இராவணன் அண்ணன்... இந்த பிள்ளையார்தான் அதற்கு பலி, சாட்சி. அதனால் ஊரில் கெட்டப்பெயர், என்னுடன் சேர்ந்திருந்த மூன்றுபேருக்கும். நீலாவுக்குக்கூட இது பிடிக்கவில்லைதான். ஆனாலும் அதுவொரு பொருட்டில்லாமல் என்னை முழுமனதோடு ஏற்றுக்கொண்டிருந்தாள்.

‘ஆனா ஒண்ணுடாம்பி, எப்ப புள்ளையாரத்தூக்கி கொளத்தண்டைப் போட்டியோ அப்பலேர்ந்து கொளத்துல தண்ணி அத்துப்போச்சு.. என்ன சாபமோப்போ. பூட்டியிருந்ததால இந்தப் பெருமாள் தப்பிச்சிண்டார். இல்லன்னா அப்பருந்ததுக்கு இவரையும் தூக்கிப்போட்டிருப்ப..  ஒண்ணு தெரிஞ்சிக்கோடா, பெருமாளாயிருந்தாயென்ன? பெரியாராயிருந்தாயென்ன? மனுஷாள்மேல மனுஷாளுக்கு நம்பிக்கயத்து போனதாலனேடா இந்த தெய்வங்கள் வந்தது. அதையும் லோகத்லேர்ந்து அழிச்சிண்டா எல்லாஞ் சரியாயிடுமாயென்ன?, சரிவுடு, நீலா எப்டியிருக்கா?’ விட்ட இடத்திற்கே வந்து மீண்டும் அவர் கேட்கும்போது அவர் கண்களில் தெரிந்த ஆச்சர்யம் என்னை நடைமுறைக்கு தள்ளியது.

‘ம்ம்..நல்லாருக்கா சாமீ’ வேறெதையும் சொல்லத்தோன்றாமல் அசட்டையாக பொய் சொன்னேன்.

‘நீ கெடக்கவுடு, அவ நல்லாருக்கணும்டாப்பா, ஓடுபுள்ள ஒடியாருபுள்ளையா நாங் பூஜைக்கு வந்தாப்போதும் ஓடோடி வந்திடுவா, குளத்திலேர்ந்து தண்ணி கொண்டாரன்னே.. லெஷ்மி கடாஷம் அப்டியேருக்கும், இந்தப் பெருமாளுக்கு அவளை புடிக்கலப்போல.. அதான உன்னாண்டை விட்டுட்டான். ம்கூம் சூட்டிக்கலானப் பொண்ணு.., சின்ன வயசிலே பம்பரம் வெளையாண்டே அவள ஜோடி சேத்திண்டியேடா? அடுக்குமா, லோகத்துல எந்த பயலுக்காவது இந்த கொடுப்பினை உண்டா?!!’

நீலாவையே சுற்றி சுற்றி பேசிக்கொண்டிருந்தார், அவள் அம்மா அப்பா செத்தது, போனது, வந்தது, இன்னொரு பட்டாமணியார் கணக்காக ஆகிவிட்டது. அப்பறம் கிளம்பினார். என்னைப் பற்றி பெரிதாக விசாரிக்கக்கூட அவர் விரும்பவில்லை. போய்விட்டார். 

‘இந்த அரச மரத்தடிதான் என் வாழ்க்கை, இங்குதான் என் பொழுதுகள் விடிந்தது, இங்குதான் நீலா கிடைத்தாள், இந்த புனர்ஜென்மம் கிடைத்தது. நாலடி விட்டத்தில் ஒரு வட்டமும் நடுவே முக்கி வெளியேற முடியாத பம்பரங்களுமிருக்கும். வெளியே வந்த பம்பரக்காரர்களின் குறி உள்ளேயிருக்கும் பம்பரங்கள் மீது. அதில் உக்கு வைக்கவே அத்தனைப்பேரின் உக்கிர குணங்களும் ஆசைப்படும். எல்லோருக்கும் பொருந்தும் இந்த நீதி. எல்லாப் பம்பரங்களும் அடிபட்டு வெளியேறினால் பம்பரத்தை இழுப்பு விட்டு கையிறால் இரண்டு சுற்று சுற்றி மேலே தூக்கி இரண்டுகையாலும் பிடிக்கவேண்டும். அப்பீட் என்பார்கள். கடைசியாக எடுப்பவர் பம்பரத்தை உள்ளே வைக்கவேண்டும். இதுதான் பொழுது முச்சூடுமான விளையாட்டு. நான் பம்பரம் விடும் அழகுக்காகவும், அதை குத்துவிடும் ஆக்ரோஷத்திற்காகவும்தான் நீலா என்னை பார்த்துக்கொண்டேயிருப்பாள்.  அவளே பிறிதொரு நாளில் சொன்னாள். எல்லாப்பசங்களும் போனப்பிறகு நான் மட்டுமிருப்பேன். மரத்தடிக்கு வந்து ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ என்பாள். அப்போதெல்லாம் பம்பரக்கயிறு புதுத்தாலிக் கயிறு மொத்தமிருக்கும். பம்பரத்தின் கூர்முனையிலிருந்து படிப்படியாக சுற்றி தலைக்குமேல் ஓங்கி கீழ்நோக்கி ஒரு சொடுக்கு சொடுக்குவேன. தரையில் விழாமல் அதை வலது உள்ளங்கியில் தாங்கி அவள் கையில் விடுவேன். பிஞ்சிக்கைகளில் அந்த ஆணிப் பம்பரம் சுற்றிவர சிவந்துவிடும். ரசித்துக் கொண்டிருப்பாள்.

இந்த பம்பரத்திற்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு ஒற்றுமை, தொடர்பு. சாட்டையால் சுற்றிவிடுவது எவனோ. சுற்றுவது நாம், தெம்பு குறைந்தபின் ஆட்டம் காலி படுதா காலி. முடியாமல் கஷ்ட வட்டத்தில் மாட்டிக்கொண்டால் உக்கு விழுவதுபோல் சில அடிகள், மரண அடிகள். இதை நினைக்க நினைக்க எனக்கு பம்பரம் விடவேண்டும் என்ற ஆசை வந்தது.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வேங்குவேங்கென்று அந்தக் கடைக்குப்போனேன். ‘தம்பி, பம்பரம் இருக்கா?’ மூச்சி இறைத்தது.

‘இருக்குங்க’ முழுக் கொட்டைப்பாக்கு அளவில் ஒன்றைக் கொடுத்தான். ப்ளாஸ்டிக் பம்பரம். தமிழ்நாட்டில் பம்பரத் தட்டுப்பாட்டுக்கு விஜயகாந்தும், வைகோவும் காரணகர்த்தாக்கள் போலிருக்கிறது. ச்ச்சை..

‘கயிறு கொடப்பா?’ சிகப்புக்கலரில் ஒரு தாம்புக் கயிறுப்போல் கொடுத்தான். மொத்தம் 8 ரூபாய்.

மறுபடியும் அரச மரத்தடிக்கு வந்தேன். பெருமாள் கோவில் உள்ளேயிருந்து ஊதுபத்தி மணம் வெளிவரைக்கும் அடித்தது. அரசமர இலைகள் சலசலவென்று அடித்துக் கொண்டிருந்தன. சைக்கிளை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமில்லை. பம்பரத்தில் கயிற்றைச் சுற்றினேன். வழுக்கி வழுக்கி வந்தது. பிறகு பிடித்துகொண்டது. தரையில் ஓங்கி குத்துவிட்டேன், டங்கென்று தரையில் தட்டி குளத்துப் படிக்கட்டில் விழுந்தது. சுற்றவில்லை. மீண்டும் எடுத்து கொஞ்சம் பொறுமையாகக் குத்தினேன். சுற்றியது. ஒரு பின்னிரவு நேரத்தில் மொட்டைமாடியை அலங்கரிக்கும் காற்று மனதைப் பரவசப்படுத்தும், அதுபோலிருந்தது. கீழே குனிந்து புறங்கை தரையில் பட ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் ஒரு விரிசல் உண்டாக்கி பம்பரத்தில் ஆணிக்கு நேராக நீட்டிச் சொருகினேன். பம்பரம் சுற்றியபடியே கையில் ஏறியது.

என்னைக் கேட்டால் பம்பரம் கையில் சுற்றும் அந்த விநாடிகளின் குருகுருப்பையும் கூச்சத்தையும் ஏந்தி ரசிப்பது இந்த வயோதிகத்தின் புண்ணியம் என்பேன். நாற்பது வருடங்கள் இருக்கலாம். இதே மரம், இதே இடம், கலகலவென்று எத்தனைப்பேர் இந்தப் பம்பரம் விளையாட. ஆனால் இப்போது? மல்லாந்துப் படுத்து  மார்பில் துப்பிக்கொள்வதுபோல் நகர வாழ்க்கை, கிராமத்துப் பிள்ளைகளுக்கும் இதேதான் கதி. நெஞ்செங்கும் நிம்மதியால் நிறைந்தது. கொஞ்சநேரம் மரத்தடி திண்ணையில் படுத்து கண்களை மூடினேன். ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ நீலா கை நீட்டினாள்..  


Tuesday, May 31, 2011

மீசை


ரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன்கோவில் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு!! இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு  கொடுக்கவில்லை.

“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க?” எனக்கு முந்திக்கொண்டான்.

அவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு!!!. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.?”

“ம்ம்ம் நல்லாருக்கன்டா” என்றான்.

சிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க? பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்?”

“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன?”

“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா? கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது.

“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச..? மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா? அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான். 

மாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன். 

“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது.? அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார்.

ஆமாம் எனக்கு என்ன குறைச்சல்! என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குகூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தாதான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சிகோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன். 

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!!!  அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது.

இங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகடிலிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார்.  கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார்.

எப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார்.

ரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந்த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன்.

இப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.

இப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன்.

“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.

“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன்.

“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா? நீய் செய்யி” என்றான்.

“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் கொமட்டிலேயே குத்தினான், அந்த முக்காமீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.


••

Friday, May 6, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்

சென்ற வாரம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரின் உறவினருக்கு அவரசமாக இரத்தம் (வெள்ளை அணுக்கள் மட்டும்) தேவைப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் இணையத்தில் பகிரலாம் என்று யோசித்தேன். பிறகு வழக்கம்போல் எங்கள் வேலுஜி இந்த (http://www.friendstosupport.org/index.aspx) (http://www.blooddonors.in/) இணைய தளங்களில் இருந்த இரத்தம் கொடுக்கும் தன்னார்வலர்களின் அலைபேசி எண்களை சேகரித்து, அழைத்து 15 நிமிடங்களில் வேலை முடிந்தது. இதில் கிடைத்த 5 எண்களை தொடர்பு கொண்டதில் 2பேர் முன்வந்தார்கள். வாரம் ஒருமுறையாவது எங்களுக்கு இந்த இணையங்கள் பயன்படுகிறது. உங்களுக்கு எந்தவகையான இரத்தம் தேவைப்படுகிறது, நீங்கள் எந்த மாவட்டம், எந்த ஊர் போன்ற விபரங்களை கொடுத்தவுடன் உடனடியாக அந்தப்  பகுதியிலுள்ள இரத்ததானம்  கொடுப்பவருடைய முகவரி மற்றும் அலைபேசி எண்களை பெறலாம். பயனுள்ள தளம். மேலும் நீங்கள் இரத்த தானம் செய்பவராகவோ, அல்லது செய்யவிரும்புபவராகவோ இருந்தால் இந்த தளத்தில் உங்களது அழைப்பு எண் மற்றும் முகவரியையும் பதிந்து வைத்துவிடுங்கள். இல்லையெனில் என்னைப்போல் 50 கிலோ எடையை தாண்டாமல் இருங்கள்.

•••

30 நாட்களாக வலதுகையில் குடியிருந்த மூன்றங்குல ‘ஆணியை’ மருத்துவர் எடுத்துக்கொண்டார். இப்போதுதான் கை உடைந்ததுபோல் உள்ளது. ஒருமாதமாக நொண்டிக்கையை சாக்காக வைத்து பெற்றுவந்த சலுகைகள் ‘கிளிக்கு ரெக்க முளைத்துடுத்து, ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்து‘ கதையாகிவிட்டது. மொத்த உடலெடையில் 15 கிராம் குறைந்திருக்கிறது. எப்போதும்போல் 50 கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டேன். மருத்துவத்துறை முன்புபோல் இல்லை. புறங்கையில் ஒரு சுள்ளி எலும்பு முறிந்ததற்கு 9 ஆயிரத்து முன்னூத்துச் சொச்சம் செலவு. எதற்கெடுத்தாலும் பிளேட், கம்பி, ஸ்க்ரூ, ஆப்(பு)ரேசன், எதோ டெம்ப்போ லாரிக்கு பாடி கட்டுவதுபோல் செய்கிறார்கள், நல்லவேளை வெல்டிங் மிஷின் மட்டும் இல்லை. இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீடு, க.கா.தி, அல்லது நட்சத்திரம். படுக்கவைத்து இரண்டுநாள் படுத்தியெடுத்து ரவுண்டாக ஒரு தொகை கரந்துவிடுகிறார்கள் மடியில்(இல்)லாவிட்டாலும், நம்மிடம் அல்லது காப்பீடு மூலம் இப்படி இம்சைப்பண்ணும் மருத்துவர்கள் இன்னொசென்ட் என்ற பெயரில்கூட இருக்கிறார்கள். எண்ணெய்க்கட்டு, புத்தூர்கட்டு, மாவுக்கட்டு, அறுவைசிகிச்சை, கம்பிகள்... ; கழனித்தண்ணி, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, SKM மாட்டுத்தீவனம், ஊசிகள்.... 

••••

5 வயதில் ராக்கெட் விடவேண்டும் என்ற ஆசை வந்தது. பள்ளிக்கூடத்தில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன். வீட்டிற்கு வந்து எங்கே பேப்பர், எங்கே பேப்பர் எனத்தேடியதில் சிக்கியது அந்த திருமண பத்திரிக்கை. கூராக மடித்து சொய்ங்..சொய்ங்.... மணியன் தாத்தா வீட்டுக்கொல்லையில் விழுந்தது. வேலியை தாண்டி எடுக்க திரானி இல்லை. மறுநாள் அந்தத் திருமணம். அப்பா பத்திரிக்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்மீதான குற்றச்சாட்டு சகல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது. வழக்கம்போல விளக்கமாறுதான்.  மியாமிக்குஷன் செருப்பை மறைத்து வைத்திருந்தேன். தெருவில் ஓடவிட்டு அடித்தார். யாரோ ஒரு புண்ணியவான் உதவ, அதை எடுத்துகொடுத்துவிட்டேன். விசயம் அதுவல்ல. சமீபத்தில் யப்பாரின் மேஜையை பீராய வேண்டிய கட்டாயம், கரையான். பூராவும் பழைய திருமணப் பத்திரிக்கைகள், தொழில் சம்பந்தப்பட்ட கணக்குநோட்டுகள், 1980 க்கு பிறகு வந்த கடிதங்கள், என்னுடைய 3ம் வகுப்பு பாட குறிப்பேடு, கூடவே அந்த திருமணப்பத்திரிக்கையும். நிறைய பத்திரிக்கைகளையும், கடிதங்களையும் பொறுமையாக அமர்ந்து வாசித்தேன். பின்னோக்கிய பயணம்தான் எவ்வளவு சுவாரசியம். எனது நண்பன் ஒருவனின் பெற்றோருக்கு நடந்த திருமணப்பத்திரிக்கையும் அதில் இருந்தது. அவனிடமே காட்டியும் மகிழ்ந்தேன். இப்பவும் வீட்டின் எதோமூலையில் வருகிற பத்திரிக்கைகளை திருமணம் முடிந்ததும் கொக்கியில் சொருகிவிடுகிறார் அப்பா.  சென்றவாரம் நண்பனொருத்தன் திருமணத்திற்கான அழைப்பை குறுந்தகவலாக அலைபேசிக்கு அனுப்பினான், ‘புடவைடா (sarry) மாப்ள. ட்யூ டூ ஸார்டேஜ் ஆப் இன்விட்டேசன்‘ இன்ன கிழமை, இன்ன தேதி, இன்ன நேரம், இவளுக்கும் எனக்கும் இன்னக்‘கொடுமை’ யென்று.    படித்துவிட்டு உடனடியாக உள்பெட்டியை சுத்தம் செய்தேன். என் புத்தி.

••••

ஒரு நூலை விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு புத்தியில்லையெனக்கு. ஆனாலும் இந்த நூலைப்பற்றி எதாச்சும் சொல்லவேண்டுமென்று மனது அடித்துக்கொள்கிறது. படித்து ஒருமாதமாகிறது. இன்றளவும் அசைபோடுகிறேன். இதைப்பற்றி விமர்சித்தவர்களையெல்லாம் தேடிதேடிச்சென்று படிக்கிறேன். சென்ற மாதம் ஆஸ்பத்திரியில் 2 நாள் படுத்துக்கிடந்தபோதுதான் வாசித்தேன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள். ஒரு அற்புதமான படைப்பு. கேரளத்து மண்ணில் எல்லாவித பசியோடும் ஒடுங்கிய வயிற்றோடுமலைந்த அந்தக் கவிஞனின் வாழ்க்கை சில பக்கங்களில். பெரும்பாலும் வறுமையில் சிதைந்த முகத்துடன், கூடவே சபலம், ஆற்றாமை, குற்றவுணர்வுகள். ஒரு மனிதனின் முகம் வெளிக்காட்டக்கூடிய அனைத்து உணர்ச்சிகளையும் படிக்கும்போது உள்ளத்தால் உணரவைக்கிறார். ஒரு இடத்தில் ‘மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான், நான் சாப்பிட ஆரம்பித்தேன்’ என்றிருப்பார், அந்த கணம் மனதைப் பிசையும். ‘சிதம்பர ஸ்மரண’ என்ற இந்த மலையாளப் புத்தகத்தினை வம்சி பதிப்பகம் வழியாக அதே உணர்வுகளோடு தமிழில் கோர்த்திருக்கிறார் திருமதி.கே.வி. ஷைலஜா. எனக்காக இதை பரிந்துரைத்தவர் திருமதி. பத்மஜா. இருவருக்கும் என்றென்றும் நன்றிகள். 



••

Tuesday, April 26, 2011

யரலவழள

*

அடுப்பினுள் தூங்கும் அந்தப் பூனைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
எதுவுமில்லா வீட்டில்
எலியும் இருக்காதென்று.

•••

யாசித்துக் கிடைக்காத
பிச்சையை வீதியெங்கும்
வீசிச்செல்கிறான் பிச்சைக்காரன்
சாபமாக....

•••

பசியில் இறந்தவன்
உயிர்நாற்றம் குப்பையில் 
சிதறிக்கிடக்கிறது
தலைவாழை இலையுடன்

•••

பகலில் தூங்கி 
இரவில் எழுகிறது
காய்ந்த வயிற்று   
வேசியின் சேலை.


Wednesday, March 30, 2011

தஞ்சாவூர் சிறுக்கி

90, 91 வாக்கில் என்று நினைக்கிறேன், 2 வகுப்பு. ஒரு மூன்று அடி சுவரு. செந்தாமரை டீச்சர் முன்பு பயில்வான் பக்கிரிசாமியாக காட்டிக்கொள்ள துள்ளிக் குதித்து விளையாடியதில் விழுந்து இடது கை முட்டியில் செங்கல் மோதி மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குமார் வாத்தியார்தான் ஒரு அடி ஸ்கேல் மூன்றை இரண்டு இரண்டாக உடைத்து சணல்போட்டு கையில் இறுக கட்டி வீட்டிற்கு அனுப்பினார். அம்மா அழுதாள், ‘க’னா பய மொவன், சும்மாயிருக்கவேமாட்டான்’ அப்பா அடிக்காமல் திட்டினார்.  மாயவரம் சுப்பையா டாக்டர் அப்போது பிரபலம். மனிதர் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சார்மினார் சிகரெட் வீதம் பற்றவைத்தப்படியேதான் வைத்தியம் பார்ப்பார். ஒரு மாதம் கைக்கு வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து சுபமங்களம்.

மீண்டும் 2001-2002 கல்வியாண்டு. ஸ்கிப்பிங் கையிற்றை இருவர் பிடித்துக்கொள்ள உயரம் தாண்டுதலில் கோலோச்சிக்காட்டியதில் அதே இடதுகை முட்டியில் ஒரு எலும்புத்துண்டு விவாகரத்துக்கு விரும்பிவிட்டது. விடமுடியுமா?, மீண்டும் சுப்பையா, சார்மினார் சிகரெட் மருத்துவம், விவாகரத்து தள்ளுபடியாகி எலும்புத்தம்பதிகள் ஒன்றுசேர்ந்தனர். இந்தமுறை வீட்டிற்கு தெரியாமல் கட்டுப்போட்டுவிட்டு கலைமகள் ஸ்கூல் ஸ்டாப்பிங்கில் இறங்கி வீட்டிற்கு செல்லும்போது அம்மா முந்தானையில் மூக்கை சிந்தியபடி எதிரே வந்துவிட்டாள். ‘ஏன் தம்பி ஒனக்கு?’ அழுதாள். நண்பன் தேற்றினான். ஒரு மாதம் கல்லூரிக்கல்விக்கு விடுப்பு கொடுத்துவிட்டு காதல் கல்வியைத் தொடங்கினேன். உமா என்னை முழுதும் அடைத்துக்கொண்டது அந்தக்காலகட்டம்தான். ஸ்கிப்பிங் கயிறை இறுகப்பிடித்து என் கையை உடைத்த அதே நண்பனின் தங்கை, பழிக்குப்பழி.


இவைகள் என் வீரவரலாற்றுக் கல்வெட்டுக்களின் இண்டு இடுக்குகளில் காணப்படும் இரண்டு முத்துக்கள்தான். எப்போதுமே எனக்கு எண்ணிக்கையில் மூன்று பிடிக்கும். ‘பொதுவாழ்விலும்’ முதலில் சுஜா, பிறகு பவானி மூன்றாவதாக காதல் ரசம் கரைத்தூட்டிய உமா, கடைசியாயும்கூட. நெருங்கிய நண்பர்கள்கூட மூன்றுபேர்தான். உருப்படாத கோவிலில் உண்டக்கட்டி வாங்கித்தின்ன கூட்டம் நாங்கள்தான். இன்றும் எவனும் விளங்கவில்லை என்னையும் சேர்த்து. இப்போது 2011, பொதுவாகவே புஜபல பராக்கிரமசாலியான எனக்கு மீண்டும் அந்த எலும்புத்தேவன் கோவில் மணியோசை வலதுகை சுண்டுவிரலில் கேட்டது.


ஒரு பிணத்தின் கால்கட்டைவிரல்களின் கட்டை அவிழ்த்துவிட்டு மூக்கில் உள்ள பஞ்சிகளையும் நீக்கிவிட்டு ஒருநாள் உயிர்க்கொடுத்தால் அந்த பிணம் என்ன செய்யும்? என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகள் அப்படிதான் 6.30க்கு விடிகின்றன. யாருக்கு எப்படியோ, எனக்கு விளையாட்டு புத்திதான் மோகித்திருந்தது. மைதானம், மட்டை, பந்து, எதிரணியில் ஒன்பது ஜாம்பவான்கள். ஆளும் அணியில் ஒன்பது. ஒரு(ரே) பந்து சுண்டுவிரலை நக்கியதில் உள்ளெலும்பில் மணியோசை. உடைந்துவிட்டது.


இந்தமுறை நண்பர்களைத்தவிர வீட்டிற்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை, மூக்கு சிந்தவும், ‘ஏந் தம்பி, ஏந் தம்பி ஒனக்கு?’ என்று ராகங்களை இசைக்கவும் அம்மா, அப்பாவுக்கோ, அக்காளுக்கோகூட தெரியாது. வழக்கம்போல இரவு 8 மணிக்கு அழைத்து ஏம்மா? நல்லாருக்கியா? சாப்டியா? போதும். என் நலத்தையும் அறிந்துகொள்வாள். பத்துநாளில் ஊருக்கு போகவேண்டும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டை எனக்கு. அப்போது இதை எப்படி தாங்கிக்கொள்வாள். ம்ம்ம்.... அது கிடக்கு கழுதை, இந்த அம்மா எப்போதும் இப்படிதான், அப்பாவைப்போல உள்ளுக்குள் பரிந்துகொள்வதில்லை.

ஒரு அறுவை சிகிச்சை. கோணி ஊசி அளவு ஒரு கம்பியை உள்ளே செருகியிருக்கிறார் டாக்டர்.இன்னொசென்ட் (பெயரில் மட்டும்) நல்ல விபரம். ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா? கேட்டுவிட்டுதான் இரண்டுநாள் படுக்கவைத்தார்.  நாலைந்து செவிலிப்பெண்கள். ஒருத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உமாவை அப்படியே உரித்து வைத்திருந்தாள். புருவத்து முடிகளை ட்ரிம் செய்து, நெற்றியில் சிறிய கருப்புநிற ஒட்டுற பொட்டு, அதே அளவு, நிற மூக்குத்தி. உமாவைவிட நல்ல நிறம். நன்றாக சிரித்து பேசவும் பழகவும் செய்தாள், எளிமை காட்டினாள். என் காட்டில் பெய்த இந்த மழையில் சிலீரென்று அந்த இருதய நரம்பு துருத்திக்கொண்டது. கட்டணம், ரசீதுகள் மற்றும் இத்யாதிகளை முடித்துக்கொண்டு எல்லாப்பெண்களிடமும் விடைபெற்றுக்கொண்டேன். ‘அடுத்தமொற ஒங்களுக்கு வாயில அடிபடணும்’ ஒருத்தி விளையாட்டாக சிரித்துக்கொண்டே சொன்னாள். வாயை மூடிக்கொண்டேன்.

‘அண்ணே நாலுநாள் கழிச்சி வாங்க, கட்டுப்போடணும்’,


‘எவடி அவ?’ திரும்பிப்பார்த்தேன், உமாவை உரித்துவைத்த அந்த தஞ்சாவூர் சிறுக்கிதான், பாதகி, கிராதகி. கையிலும் வலித்தது.


Thursday, March 10, 2011

இவளும் பெண்தான்..

அவள் அப்போதுதான் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாள். பள்ளிக்கூடம் திறப்பதற்கு ஒன்றரை மாதகால அவகாசம் இருந்தது. பத்தாம் வகுப்பு செல்வதற்கான கனவுடனிருந்தாள். தெருவில் வரும் கிளி ஜோசியன் அவளுக்கான வாழ்க்கை சீட்டை கையில் வைத்துக்கொண்டு கூவி வருகிறான். அவளின் பெற்றோர்கள் அவனை அழைத்து ஆரூடம் பார்க்கின்றனர். தெருவில் சில்லிக்கோடோ என்னவோ விளையாடிக்கொண்டிருந்தவள் ஆர்வத்துடன் கிளிக்காகவோ, ஜோசியத்துக்காகவோ அந்த இடத்தில் அமர்கிறாள். விளையாட்டுப்போக்கில் அவளுக்கும் 2 ரூபாய் மொய்வைத்தப் பிறகு  ராஜாத்தியென்றோ பாப்பாத்தியென்றோ அழைக்கப்படும் அந்த பச்சைக்கிளி ஒரு சீட்டை எடுத்துப்போடுகிறது. பிரித்துப்பார்த்த ஜோசியக்காரர் பலவிசயங்களை சொல்லிவிட்டு இவளுக்கு இந்நேரம் வரம் பார்த்திருக்கவேண்டும் இல்லையென்றால் இன்னும் சொற்ப நாட்களில் வரம் வந்துவிடும், கிழக்கிலிருந்துதான் வருவான். சொந்தக்காரன், சீமைத்தண்ணி குடிப்பவனாக இருப்பான் போன்றனவும் இன்னும் சிலவும் வாயில் வசம்பு தேய்த்ததுபோல் சொல்கிறார்.

‘இவள் படிப்பில் கெட்டிக்காரி’ என்று அந்த ஜோசியன் சொன்னதை இரவு முழுக்க கனவாக காண்கிறாள். பெற்றவர்கள் வரப்போகும் வரனை அவனோ, இவனோ, எவனோ என்கிற யூகத்தில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சொல்லிவைத்தார்போல ஒரு ராஜன் (வயது 28) அந்த ராணிக்காக துபாயிலிருந்து பொத்துக்கொண்டு திருவெண்காட்டில் குதிக்கிறான். அவன் ராணிக்கு மாமன் முறை, ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட அல்லது கேடுகெட்ட. துபாயில் கதாநாயகன் சித்தாளோ, கொத்தனாரோ என்னயெழவோ. மார்பில் சங்கிலியும் கையில் மோதிரமும், ஒரு மைனர் குஞ்சு போல மூர்த்திக்கடை மிக்ஸரும்,  அல்வாவும் வாங்கிக்கொண்டு அக்கா வீட்டுக்கு வருகிறான். அவனுக்கு நம் ராணி அக்கா மகள் (முறையில்). இவள் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கிறாள். பேச்சிப்போக்கில் தனக்கு பெண் பார்த்துக்கொண்டிருப்பதாக அக்கா, மாமாவிடத்தில் சொல்லிவைக்கிறான். விருந்து கருமங்கள் முடிந்தது. நாயகன் நாயகியை ஓரக்கண்ணால் ஒரு லுக், அவள் அந்த மிக்ஸருக்காக ஒரு லுக், அவ்வளவே.

எங்கோ தட்டிய பொறி அவள் பெற்றோர்களுக்குள் பற்றிக்கொள்கிறது. சரி அவர்களாக கேட்டால் நாமும் பேசலாம் என்று முடிவாகிறது. அந்த சனியனும் அடுத்தவாரமே நடந்துவிட்டது. மூன்றாம் நபர் வழியாக ராணியை பெண் கேட்டு தூது வருகிறது. இவளின் குடும்பத்திற்குள் குதூகளம். அக்கம்பக்கத்திலுள்ள மொத்தம் 10 டூ 15 குடும்பங்களும் இவர்களுக்கு சொந்தம்தான். அனைவருக்கும் இந்த சம்பந்தம் பிடித்தாலும், ‘சின்னவயசுல இவளுக்கு எதுக்கு இப்ப கல்யாணம்?, நாலு வருஷம் தள்ளி பண்ணா ஆவாதா?’ என்று சொல்லிப்பார்க்கிறார்கள். ம்கூம். காதில்லாதவன் காதில் ஊதியென்ன, செவிட்டில் அப்பிதான் என்ன புண்ணியம்?. மறுபடியும் சிங்கானோடை ஜோதிடனிடம் ஜோடிப்பொருத்தம் பார்க்கிறார்கள். ஜோடிப்பொருத்தத்தில் ஒன்பதோ, எட்டோ பொருந்தியிருக்கவேண்டும். முடிவாகிவிட்டது.

நகை, நட்டு, சீர்வரிசை, அப்போதே இருபத்தைந்தாயிரம் செலவு செய்து கட்டில், பீரோ கூடவே ஒரு ஹெர்குலஸ் சைக்கிளோ, டி.வி.எஸ் வண்டியோ எனக்கு மறந்துவிட்டது. ஜாம் ஜாம் திருமணம் திருவெண்காடு அந்த பிரசித்திப்பெற்ற கோவிலில். ராணியின் கூடப்பிறந்தவர்கள் இருவர், ஒரு அண்ணன், ஒரு தம்பி. அந்த தம்பியும் நானும் பால்ய நண்பர்கள். பக்கத்துவீடுதான். ஜாதியில் வேற்றுமையிருந்தாலும், பெரியம்மா, பெரியப்பா உறவுப்பிணைப்புடையது எங்களின் குடும்பங்கள். நானும் திருமணத்திற்கு சென்றிருந்தேன். எனக்கும் ஒன்றுமறியாத வயது. எல்லாம் முடிந்தது. இது நடவாமலிருந்தால் இந்நேரம் அவளுக்கு பத்தாம் வகுப்பு  ஆரம்பித்திருக்கும். ஆனால்..?

6 மாதங்கள் ஓடிவிட்டது. அனைவருக்கும் சந்தோஷம், சென்னை ஏர்போர்டில் மாமனுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு சென்ற காரிலேயே திருவெண்காட்டிற்கு திரும்புகிறார்கள் ராணி. ஆறுமாத சந்தோஷ வாழ்க்கை இந்த பிரிவில் அவளுக்கு ஆற்றமுடியா சங்கடத்தைக்கொடுக்கிறது. பிறந்த வீட்டிற்கு 3 மாதம் வந்து தங்கிக்கொள்கிறாள். அங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இந்த மூன்றுமாத காலமும் அவளின் நடத்தை யை அசிங்கப்படுத்தி இவளின் குடும்ப எதிரிகள், அந்த மாமியாருக்கு வாராவாரம் கடிதம் எழுதுகிறார்கள். அப்படி செய்வது மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்தான், அவளுடன் இன்னும் இரண்டு பெண்டுகள். மாமியார் வீட்டில் புகைச்சல் அதிகமாகிறது. அவர்களும் நம்புகிறார்கள். ‘அவ இங்க இருக்கும்போதே அப்டித்தான் இருந்தா, அப்பன் வீட்லன்னா கேக்கவாவேணும்’ இது மாமியார்.

இந்நிலையில் 9 வது மாதம் வளையல் காப்பு (சீமந்தம்) முடிகிறது. மனதில் குமைச்சலுடன் மாமியாளும் நாயகன் வீட்டு உறவினர்களும் கலந்துகொள்கிறார்கள். பத்தாவது மாதம் அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. மூன்றுமாதம் கழித்து சாஸ்த்திரத்திற்கு திருவெண்காட்டுக்கு அழைத்து செல்கிறார் மாமியார். மீண்டும் ஆறுமாதங்கள் சண்டை சச்சரவு, மாமியார் கொடுமை நடத்தையை குத்திக்காட்டி, பச்சையான, கொச்சையான வார்த்தைகள். பச்ச உடம்புக்காரி ஓரளவிற்கு மேல் தாங்கமுடியாமல் அந்த ஒரு வயதை அடையப்போகும் தன் குழந்தையுடன் பிறந்த வீட்டிற்கு வருகிறாள், கணவனும் சேர்ந்து கைவிட்ட நிலையில். அடுத்த ஒரு வருடங்கள் சமாதானப்பேச்சு, இரண்டு மாதம் அங்கே, இரண்டு மாதம் இங்கே. வேலைக்காகவில்லை. அதே கொடுமை. நிரந்தரமாக பிறந்த வீட்டிலேயே தங்கிவிடுகிறாள்.

எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுது பித்தளை சொம்பில் ஜோடித்த கரகத்தை எந்த துணையுமின்றி தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு அரங்கம் அதிர ஆடிய அவளேதான் இப்போது அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாய். அனாதரவான நிலையில். பெற்றவர்கள் தலையில் போட்ட இந்த பாறாங்கல் அவளை தற்கொலைக்குக்கூட தூண்டியது. காப்பாற்றிவிட்டார்கள். ஊர், தெருமக்களின் இழிச்சொற்கள், வாழாவெட்டி என்ற அந்த பட்டம், எதிரி குடும்பத்தாரின் ஏளனச்சிரிப்பு, எல்லாவற்றிற்கும் மேல் இந்த நிர்கதிக்கு துணைநின்ற கணவன், மாமியார் மயிரை அறுக்கவேண்டும் இவை அனைத்தும் சாத்தியப்பட அவள்முன் எதிர்காலம் கனிந்துகிடக்கிறது. ஆனது ஆயிற்று அடுத்தது விவாகரத்து.

கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. எந்த சட்டப் புடுங்கிகளாலும் அந்த 18 வயது நிரம்பாத அந்த அபலைக்கு நீதி கொடுக்கமுடியாத சூழ்நிலை. சீர்வரிசை நகை நட்டில் பாதிதான் திரும்ப வருகிறது. வேறு இம்மியளவுக்கூட அசைக்கமுடிவில்லை. துபாய் துரை ஃபாரின் கிளம்புவதற்கு முன் இன்னொரு இடத்தில் பெண் பார்த்துகொண்டிருப்பதாக கேள்வி. ராணியின் அண்ணணும் தம்பியும் அவனை அடித்து வெளுக்கிறார்கள். மறுபடியும் வழக்கில் சிக்கல். தீர்ந்தபாடில்லை. அவளின் நிலை பார்க்கும் நல்லுள்ளங்களுக்கு பரிதாபம், எதிராளிக்கு இளக்காரம். கூனிக்குருகி வீட்டின் மூலையில் முடங்கியே கிடக்கிறாள். செய்த தவறை உணர்ந்தும் செய்வதறியாது அப்படியே காலத்தை ஓட்ட முனையும் பெற்றோர்கள். எங்கோ ஒரு வெளிச்சம் தெரிந்தது அவளுக்கு. அது....

3 வயது நிரம்பிய தன் மகளை மெட்ரிக் பள்ளியில் சேர்த்துவிட்டாள். தன் படிப்பையும் தொடர்ந்தாள். பத்தாவது, பனிரெண்டாவது... முடிந்தது. அடுத்து ஒரு டிகிரி படிக்கவேண்டும். அவளின் அனைத்து வழிகளுக்கும் உதவ பெற்றவர்கள் தயாராகவே இருந்தனர். டிகிரியும் முடித்தாயிற்று. பிறகு ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டும். ஏதோவொரு வெறி முளைத்துக்கொண்டேயிருந்தது அவளுள். இடையில் துபாய் துரை வரும்போதெல்லாம் ராணியின்  அண்ணன் தம்பிகளிடம் உதைவாங்கி கொண்டுதானிருந்தான். ஐ.ஏ.எஸ் ரெண்டாம்கட்ட தேர்வில் தோல்வி. ஓரளவிற்கு மேல் அவளாலும் முடியவில்லை. அந்த நேரத்தில் நமது ஊரின் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் பணி ஒருவருடத்தில் காலியாகும்போல் தெரிந்தது. பி.பி.டி.கோர்ஸ் சேர சிதம்பரம் செல்கிறாள். வெற்றிகரமாக முடிந்தது. வேலை கிடைக்கவேண்டிய சூழ்நிலை கைகூடியது. அண்ணணுக்காக அதை விட்டுக்கொடுக்கவேண்டிய நிலையும் வந்தது. அப்படியே செய்துவிட்டாள். வேறு என்ன செய்யலாம்....??

தமிழ்நாடு காவல்துறையின் எஸ்.ஐ. பணி தேர்விற்காக விண்ணப்பித்திருந்தாள். அதற்காக அனைத்துவிதத்திலும் தன்னை தயார்படுத்திக்கொண்டாள். எல்லாம் சுபமாக முடிந்தது. சில லகரங்களில் வேலையும் கிடைத்தது. ஒரு புதியதோர் வாழ்க்கை பிறந்தது. ட்ரெய்னிங் இத்யாதிகள் முடிந்து சீர்காழியில் ட்ரெய்னிங் எஸ்.ஜ. அங்கேயே கொஞ்சகாலம் சகவாசம். பெற்றவர்கள் மறுமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார்கள், அவளும். இப்போது எதிராளியாக இருந்த குடும்பங்களும் நெருங்கிவிட்டார்கள். அனைவரும் ஒற்றுமை.  இந்த நேரத்தில் அந்த செய்தி உச்சந்தலையில் இடியை இறக்குகிறது. அவள் மகள் பருவமெய்திவிட்டாள். அனைவரும் நொடிந்துபோனார்கள்.

கையை பிசைந்துகொண்டிருந்த பெற்றோர்கள் ஒரு வருடம் பொறுத்திருந்துவிட்டு நம் ராணிக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராணியின் விருப்பப்படி அவளே தேர்ந்தெடுத்த அல்லது காதலித்த வரனுக்கு அவளை கட்டிக்கொடுக்கிறார்கள். எல்லாம் சுபம்.

இது லட்சத்து சொச்சம் டெம்ப்ளேட் கதைகளில் துவைத்து காயப்போட்ட  சம்பவமாக இருக்கலாம். ஆனால் இதுவும் உண்மை. இப்போது ராணி நாகை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர். அந்த துபாய் துரை இன்னொரு திருமணம் முடித்துவிட்டு எங்கோயிருக்கிறான். இந்நிலையில் அவனை ஸ்டேஸனில் வைத்து மானியிலேயே உதைக்க அவளால் முடியும். ஆனால் அவள் அப்படியில்லை.


..

Friday, February 25, 2011

நடுநிசி நாய்கள், பயணம் அல்லது இரண்டுமில்லை

‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று அம்மா சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது.

•••••••••

வழக்கமாக 8 மணிக்கே எல்லாவேலையும் முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிடுவேன். இன்று கொஞ்சம் நேரமானது. அடுத்த பஸ் பத்தரை மணிக்குத்தான். ‘டி.எல்’லோ, ‘எம்.ஓ.எச்’சோதான் வரும். மஞ்ச வாய்க்கால் ஸ்டாப்பிங் கிடையாது. ஆக சாதாரணமாக எல்லா பஸ்ஸூம் அங்கே நிற்காது. ராத்திரி நேரமென்றால் அபரிதமாக கருணையடிப்படையில் நிப்பாட்டுவார்கள். எனது சைக்கிளை அங்கே பட்டாபி நைனா வீட்டில்தான் போட்டிருந்தேன். மஞ்ச வாய்க்கால் ஸ்டாப்பிங்கில் இறங்கி உள்ளே கீழ்மாத்தூருக்கு செல்ல ஆறேழு மைல். அங்கேதான் எனது வீடு. கொஞ்சம் பொழுது சாய்ந்தாலே இந்த இடைப்பட்ட தூரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துவிடும். மீறி இரவு நேரத்தில் செல்பவர்கள் பெரும்பாலும் செம்பனார்கோயில் கடைத்தெருக்கு சென்று மளிகைச்சாமானும், காய்கறிகளும் வாங்கிவிட்டு திரும்பச் செல்பவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் மண்டியில் நெல்லை போட்டுவிட்டு (மாட்டு)வண்டியில் திரும்புபவர்களாக இருப்பார்கள். தினமும் எனக்கு இப்படித்தான்  வழித்துணை கிடைக்கும். ஆனால்...

பஸ்ஸை விட்டு இறங்கியதும் பட்டாபி நைனா வீட்டு கதவை தட்டவேண்டியதாயிற்று. மணி பத்தே முக்கால், படுத்திருப்பார்கள். கரண்ட் வேறு இல்லை. டார்ச் லைட்டை அடித்துகொண்டே கேட்டார்.

“யாரு??”

“பாலாஜி”

கயத்துக்கட்டிலில் சமுக்காலத்தை விரித்து தலையணை வைத்துக்கொண்டு வராந்தா கேட் அருகே தூங்குவதுதான் நைனாவின் பழக்கம். இன்றும் அப்படித்தான். தட்டியவுடன் எழுந்துவிட்டார். “வாய்யா.. என்னா இவ்ளோ நேரம்??”

“கட பூட்ட லேட்டாயிடுச்சு நைனா” நைனா என்றால் அப்பா என்று பொருள்படும். இங்கே எங்கள் பகுதியில் நைனா என்றழைக்கப்படுபவர்கள் அப்பாவாகத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பிரியம் மற்றும் அன்போ, பாசமோ அல்லது பெரும்பாலானோர் அப்படி அழைத்தால்.... அதுபோதும்.

“சேரி.. இருட்டாவேற கெடக்கே, தனியாவாப்போற, இங்கயே படுத்திட்டு காலலேக்கி போயேன்.”

“இல்ல நாங்கிளம்பணும். காலைல மாமா கல்யாணமிருக்கு, நேரமா போனூம்”

“சேரி பாத்துப்போ.. சைக்கிள்ல லைட்டு இருக்குல்ல.”

“இல்ல”

“பின்ன.. பேட்ரி லைட்டுன்னா வேணுமா? ரொம்ப இருட்டால்லருக்கு”

“வாண்டா, நாங் போயிக்கிறேன்.”

“பாத்துப்போப்பா” என்று விடைகொடுத்த நைனாவிடம் என்மீதான அக்கரை கொஞ்சம் தெரிந்தது.

கிளம்பினேன். கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் நான் கடையைப்பூட்டும்போதே கரண்ட் இல்லை. இங்கிருந்து 20, 25 கி.மீ. சுற்றளவுக்கு பேச்சாவடி மின்சார சரகம்தான். அதனால் எங்குமே கரண்ட் இருக்காது. பாவம் தமிழகத்தை ஆள்பவர்கள், என்னதான் செய்வார்கள் லச்சத்து சொச்சம் கடனை வைத்துக்கொண்டு, கஷ்ட ஜீவனமல்லவா!! எனது முடிவு தப்போவென்று தோன்றியது. 11 மணி. ஆள் அரவமற்ற நேரம், ஒரு மினிபஸ் செல்லக்கூடிய அளவிற்கான சிகப்பு கப்பி சாலைதான். ஆனால் மினி பஸ் இந்த மார்க்கத்தில் செல்வதில்லை. வசூல் சரியாக இல்லையென்பது காரணமாக இருக்கலாம். பின்ன? ஒன்றிரண்டுவாட்டித் தவிர மற்ற நேரமெல்லாம் காத்துவாங்கினால் யார்தான் இந்த ஊருக்கு பஸ் விடுவார்கள். வழுக்கைத் தலையிலிருக்கும் ஒன்றிரண்டு முடிகளைப்போல ஆங்காங்கே தெரியும் தூங்குமூஞ்சி மரங்களும் பனைமரமும். கூடவே அந்த ஒற்றைப் பனைமரமும். ஒற்றைப்பனைமரம்.. கொஞ்சம் வியர்க்கும்போலிருந்தது. வேகமாக சைக்கிள் பெடலை அழுத்தத்தொடங்கினேன்.

ஆங்... இப்போதுதான் அம்மா சொல்லும் சிலக்கதைகள் எனது ஞாபகத்திற்கு வந்தது. அம்மாவுக்கு ஒருமாதிரியான பயங்காட்டும் கதைகள் அத்துப்படி. அதுவும் இந்த பேய் கதையென்றால் என் இரவுத்தூக்கத்தை விழிபிதுங்க வைக்குமளவுக்கு தத்ரூபமாகச் சொல்லுவாள், உண்மைப்போலவே. சொல்லமுடியாது, உண்மையாகவும் இருக்கலாம். “ஒத்தப்பன மரத்துக்கிட்ட எங்க சின்ன நைனா மாட்டு வண்டியில வரும்போது திடீர்னு மாடுல்லாம் மெரண்டுபோயி மூச்சுபோச்சில்லாம நிக்குமாம். மாட்டுவண்டிய வுட்டு ஆளு எறங்கினா அவ்ளோத்தான். ஆள அடிச்சிடும். அப்பறம் ஒருவாரத்துக்கு காய்ச்சல் வந்து படுத்தப் படுக்கையாப்போட்டிடும். கொஞ்சநேரம் அப்டியே வண்டியிலேயே உட்காந்து கொலதெய்வத்த வேண்டினாப்போதும், மெரண்ட மாடு சரியாயி கௌம்பிடும்” இதுதான் அம்மா சொல்லும் நான்கைந்து கதைகளின் அடிநாதமாக இருக்கும். பெரும்பாலும் இப்படித்தான் சொல்லுவாள். மேலும் “மஞ்ச வாய்க்காங்கரையோட ராத்திரில வரும்போது  மல்லிப்பூ வாசன அடிக்கும். கையில இரும்பு, கரித்துண்டோட வரணும், சாமிய வேண்டிட்டே வரணும்.. இல்லன்னா மோகினிப் புடிச்சிடும். போனவாரம் ரெங்கபாஷ்யத்து மொவங்கூட மாட்டி ஒருவாரம் எந்திரிக்க முடியாம கெடந்தான். அப்பறம் இன்னொன்று “அந்த பனைமரத்துப்பக்கம் வானொசர (வான் உயர) ஆம்பிளை வெள்ள வேட்டி சட்டையோட நெடுநெடுன்னு அரிவாள் வைச்சிகிட்டு நின்று பார்த்ததாகவும் ஒரு கதை அம்மாவிடம் இருந்தது. உசரமென்றால் அந்தப் பனைமரத்து அளவுக்காம். இதையெல்லாம் கேட்கும் முன்னர்கூட நான் தனியாக அந்த வழிகளில் போனதுமில்லை, வந்ததுல்லை.

சாதாரணமாகவே நானொரு பயந்தாங்கொள்ளி. ராத்திரியில் ஒண்ணுக்கு இருக்க போகணும் என்றாலே அம்மாவை எந்நேரமாகயிருந்தாலும் எழுப்பி அழைத்துச்செல்வேன். ஓரளவுக்கு மீசையரும்புகிற வயசு வந்தப்பிறகு இதைக் குறைத்துக்கொண்டேன். ஆனால் தெருவில் ஏதேனும் சாவு என்றால் அப்பாவை எழுப்பிக்கொண்டு போவேன். இப்போது ஒருவழியாக சட்ராஸை கடந்துவிட்டேன். இருள் சாலையை முழுதும் அடைத்திருந்தது. அமாவாசைக் கழித்த மூன்றாம்நாள். சிகப்பு கப்பி சாலையென்பதால் வழி அனுமானிக்ககூடிய அளவுக்கு தெரிந்தது. சைக்கிளை வேகமாக மிதித்தேன். ஒற்றைப்பனை மரமும் ஒரு திருப்பமும்தான் பாக்கி. அதை கடந்துவிட்டால் அடுத்தது ராமானுஜம் நைனா வீடு வந்துவிடும்.

திடீரென்று சைக்கிள் ஒரு குழியில் இறங்கி ஏறியது. கிட்டத்தட்ட ஃபோர்க் உடைந்துவிடக்கூடிய நிலைமை. நல்லவேளை அதுபோல் ஆகவில்லை. நாய்கள் அந்த அடர்ந்த வயல்வெளில் எங்கோ ஊலையிட்டது, நரிகள்போல். இதுபோல் நாய்கள் ஊலையிட்டால் அது கெட்டதுக்கான அறிகுறி என்பார்கள். மறுநாளே பலித்துவிடும். அய்யோ.. நான், என்.. ஆ... நான் பயந்த்துபோலவே......ம்... அரைபர்லாங் தூரம், அந்த ஒத்தைப்பனைமரத்து அருகில் அல்லது அந்த திருப்பத்தருகில், முன்பு அம்மா சொன்னாளே அதேபோன்றதொரு வானொசர உருவம். வெள்ளைவேட்டி சட்டை.. அதேதான்.. ஆனால் கையில் ஒன்றுமில்லை. விதுக்கென்று ஆகி உடலில் சட்டை ஒட்டிக்கொண்டது. சிலிப்பர் செப்பல் வியர்வையில் நனைந்துவிட்டது. அவ்வளவு வியர்வை. கைகாலெல்லாம் வெடவெடக்கத்தொடங்கியது. என் கையிலிருந்த ஒரே இரும்பு ஆயுதம் என் சைக்கிள் மட்டும்தான். “இரும்புச் சாமான் கைலருந்தா அது நம்மள நெருங்காது” என்று அம்மாதான் சொல்லியிருக்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை.

பாதி வந்தப்பிறகு திரும்பிப்போக முடியாது. செல்போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்தேன். நடக்கும் பாதைக்கு வெளிச்சம் காட்டியது. யாரையாச்சும் போன் பண்ணி கூப்பிடலாமென்றால் டவரும் இல்லை. கைகள் நடுங்கியதை நன்றாக உணர்ந்தேன். எது நடந்தாலும் நடக்கட்டுமென்ற வரட்டு தைரியமிருந்தது, கூடவே சைக்கிளும். விருவிருவென்று சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தே சென்றேன். ஆனால் ஒன்று உறுதியாகத்தெரிந்தது அந்த உருவத்தின் உயரம் 20, 25 அடியிருக்கலாம். அம்மா சொல்வதுபோல் பனைமர உயரமெல்லாம் கிடையாது. தலையில் முடியில்லாததுபோல்தான் தெரிந்தது. இரவு நேரமென்பதால் முகமும்கூட இருளாகத்தான் தெரிந்தது. மீசையும் தெரியவில்லை. வேட்டி காற்றில் ஆடுவதுபோலவும் தெரிந்தது.  என் வியர்வை அடங்வில்லை. தன்னிச்சையாகவே நடந்துகொண்டிருந்தேன். பெத்தாரண்ண காப்பாத்து, பெத்தாரண்ண காப்பாத்து.. என்று குலதெய்வத்தை வேண்டி முனுமுனுத்துக் கொண்டேயிருந்தது வாய். உள்ளங்கைகூட வியர்த்திருந்தது. இதோ நெருங்கிவிட்டேன்.

இன்னும் 30 அடித்தூரம், 20 அடித்தூ.....10 அடி.... அடக்கடவுளே... ச்ச்ச்சீ...தூ...தூ... செல்போன் டார்ச் லைட்டை அடித்து அது அதுதானா என்று உறுதிசெய்துகொண்டேன். நெஞ்சில் படபடப்பு மட்டும் அடங்கவில்லை. நாம் பார்த்தது உண்மையில் இதுதானா? ஆமாம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். அதன் காலடிக்கு கீழே இப்படித்தான் இருந்தது “இலவச தொலைக்காட்சி வழங்க வருகைத்தரும் எங்கள் ஏழைகளின் ஒளியே, வருக!! வருக!! இடம்: கீழ்மாத்தூர் பஞ்சாயத்து அலுவலகம்...” மின்துறை அமைச்சருக்கான வரவேற்பு பதாகை. நெஞ்சின் படபடப்பு கொஞ்சம்போல் ஓய்ந்தது. கால்தான் ஓய்ச்சலாக இருந்தது. சைக்கிளை மிதிக்கமுடியாமல் மிதித்துச்சென்றேன். இந்த அம்மாவேறு வந்ததும் வராததுமாக “ஏன் இவ்ளோ லேட்டு, போன் பண்ணி சொல்லவேண்டியதுதான..”.... ஆச்சா ஊச்சாவென்று கத்தினாள்....” எனக்கோ அடக்கமுடியாத கோபமும், படபடப்பும். எல்லாம்சேர்த்து அம்மாவைப் பொறிந்து தள்ளிவிட்டேன், நடந்ததையும் சொல்லி.

அதற்குதான் அம்மா “‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது.

.

Thursday, February 3, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்

அதிகாலை 7 மணி இருக்கலாம். தேநீர் அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு திருப்பம், அங்கே லாரி ஒன்று எனது திசையில் வலதுபுறம் நிறுத்தப்பட்டிருந்தது. காலைநேரப் பனி, குளிர். நாசியில் நுழைந்த தூசிக்காற்று குறுகுறுத்ததில் கண்களை மூடி ஒருகை வாய்பொத்த தும்மிவிட்டேன். அதேநேரம் எதிரே ஒரு வயதானவர் டி.வி.எஸ் வண்டியில் வந்துகொண்டிருந்தார். சற்றேறக்குறைய இருவரும் மோதிவிடும் நிலைமை. கொஞ்சம் அவரோ அல்லது நானோ சுதாரித்துக்கொண்டு மையிரிழையில் மோதிக்கொள்ளாமல் தப்பித்தோம்@தார். மோதியிருந்தால் அவர் லாரியின் ஓர பட்டைகளில் அடிபட வாய்ப்பிருந்தது. நான் வெறுமனே தரையை தடவியிருக்கக்கூடும். இருவரும் ஒருவரையொருவர் கடந்து பத்தடி இடைவெளியில் நின்றுவிட்டோம். அவர் என்னை திட்ட ஆரம்பித்தார். ‘ஏன்டா காத்தால வர்ரீங்க..என்ன நெனப்புல போறானுங்களோ தெரியல’ இன்னும் இன்னும்.. அப்படியே கொஞ்சம் ‘ஒத்தச் சொல்லால தனுஷாக என்னை அவர் நினைத்திருக்கக்கூடும். என்மீது தவறு, உணர்ந்துகொண்டேன். நின்று திரும்பி கை சின்னத்தைக்காட்டி ‘சாரிங்க’ என்றேன். அவர் வாக்காளனைப்போலவே கருவிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அவர் அருகில் சென்றேன். ஒருமாதிரி மருண்ட விழிகளுடன் பார்த்தார். பிறகு தமிழில் ‘மன்னிச்சிடுங்க தப்பு என்மேலத்தான், திடீர்னு தும்மல் வந்திடுச்சு...அதான், இனிமே நடக்காம பாத்துக்கிறேன்’ என்று அமைதியான குரலில் சொன்னேன். முன்பிருந்த கோபம் முற்றிலும் அவரிடம் இல்லாமல்போனது. போலவே சாந்தமான குரலில் ‘பாத்துப்போ கண்ணு’ என்றார். ஒரே சொல்தான், முன்பு சொன்னதற்கும் இதற்கும் பொருளும் ஒன்றுதான், சொற்களின் ஒலியளவுகளில் வேண்டுமானால் சற்று வித்யாசம் இருக்கக்கூடும், ஆனால் இங்கே இருவேறானது மொழிகள்தான். அந்தச்சொல் கொடுக்கிற அழுத்தம் மனதை புரட்டிப்போடுகிறது. அதுதான் தமிழ்.

•••••••

வாரமொருமுறை இரவு உணவுக்கு செல்லும் ஒரு சிற்றுண்டி கடை. ஒரு தாத்தன்தான் பிரதான பாத்திரம், ஒரு அம்மாக்காரியும், பெரியம்மாக்காரியும் துணை. ஒரு குழந்தை இங்கே நாயகி. எப்போதும் துருதுருவென ஓடுவாள் ஒடியாறுவாள், நாம் சிரித்தால் சிரிப்பாள், முறைத்தால் முறைக்காமல் அவளம்மாவின் கொசுவத்தை பிடித்துக்கொள்வாள். நேற்று அவள் அம்மாவும், பெரியம்மாவும் இல்லை, பிரதானச்சாலையில் அடுத்தசாரியில் கால் பர்லாங்கு தள்ளியிருக்கும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கக்கூடும். எப்போதும் பூச்சிகளைக் கண்ட பூனையைப்போல் இருப்பவள் கொஞ்சம் சுணங்கியிருந்தாள். கொஞ்சநேரத்திற்கெல்லாம் அழவும் தொடங்கிவிட்டாள். தாத்தனைத் தவிர வேறுயாரும் கடையிலில்லை. அவரே சமையல்காரர், பறிமாறுபவர், துடைப்பவர் இத்யாதி.... நை..நை யென்று அழத்தொடங்கியவள், தாத்தன் தண்ணீர் மொள்ளப்போனால் பின்னாடியே... கைலியைப்பிடித்துகொண்டே, இலையெடுக்கப்போனால்  ....பிடித்துக்கொண்டே, தோசை ஊற்றப்போனால்....கொண்டே, காசு வாங்கி கல்லாவில் போட்டால் ...ண்டே... இன்னும். இந்த சூழ்நிலையைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குகூட எரிச்சல் வந்து அவளை சமாதானப்படுத்த முயன்றேன், ம்கூம். அவளுக்கு இப்போது வீட்டிற்கு செல்லவேண்டும். அதற்குதான் அடம், அழிச்சாட்டியம். கடையில் என்னைப்போலவே சாப்பிடும்  மற்றவர்களும் சமாதானம் செய்ய முயன்றார்கள் முடியவில்லை. கூடவே தாத்தனும். சாப்பிடுபவர்களை அப்படியே விட்டுவிட்டு கூட்டிச்செல்ல அவராலும் முடியாதுதான். ‘இரும்மா, இரும்மா.. தோ அம்மா வந்திடுவா.. ஒனக்கு என்னவேணும் சொல்லு, வாங்கியாறேன்.. அழாத..’ ம்கூம்..... இதே நானாகயிருந்தால் ஓங்கி செவுள் செவுளென்று அறைந்திருப்பேன், ருக்கலாம். ப்ப்ப்ச்ச். என்னுடைய வியப்பு இப்போது அந்த முதியவரிடத்தில் திரும்பியது. எப்படியிவர் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார்!!!. கொஞ்சம்கூட அந்த குழந்தையை கடிந்துகொள்ளவில்லையே!!. ஆனால் அவரிடத்தில் ஒரு இயலாமை, தன்னையே நொந்துக்கொள்ளும் கடுமை. பிறகு மீண்டும் ‘அழாத என்னவேணுஞ்சொல்லு, தாத்தா வாங்கியாரேன், சரி வாப் போலாம்’ என தூக்கிக்கொண்டு எதிர்த்த மளிகைக்கடைக்கு சென்றார். ஒரு லேய்ஸ் மற்றும் வாட்டர் பாக்கெட் அழுதுவீங்கிய கன்னம் மலர தேவைப்பட்டிருக்கிறது. ‘மீண்டு’ம் வந்தார், முகத்தில் சாதனை. எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது. எல்லா பெற்றோர்களும்தான் ‘இங்கே’ பேதையாகிருப்பார்கள்.


••••••••

வழக்கம்போலவே ஒரு விடுமுறைநாள். எப்போதும் சிந்திப்பதைவிட அதிகம் முயன்றதில்  2 வருடங்களுக்கு முன்பு சென்ற  சென்னிமலை முருகன் ஞாபகம் வந்தார். நண்பனும் நானும் மயில்வாகனனுக்காக இருச்சக்கர வாகனத்தில் கிளம்பினோம். சரியாக மதியம் ஒன்றரை மணி. மலையேற ஆயிரத்து முன்னூத்திச்சொச்சம் படிகளும் கூடவே பசியும் துணை. முருகனுக்கு கோபம் வந்தால் பொசுக்கென்று மலையுச்சியில் ஆண்டியாக உட்கார்ந்துகொள்கிறார். எல்லோரும் பணத்தைப் பணத்தால் எடுக்க அவரை மலையில் தேடுகிறார்கள், இயல்பு அல்லது ஆசை மற்றும் நப்பாசை என்னைப்போலவே!!!. போனமுறை நண்பனும் நானும் மேலே சந்நதிக்குப் பின்புறம் மலைக்கற்களைப் பொறுக்கி ஆளுக்கொரு வீடு கட்டினோம், சும்மா, கூம்பாக, அடுக்கடுக்கி. உள்ளே ஒரு நெய்விளக்கும். இந்தவருடம் நண்பனின் ஆசை நிறைவேறியதற்காக ஒரு நன்றிகடன், நான்  இம்முறையும் கற்கள், கூம்பு, நெய்விளக்கு. இந்தமுறை மரங்களில்லாத இடத்தில் கட்டவேண்டும்...டினேன் (குறியீடு). மேலேறும் போது பிரித்துவைத்த புளிச்சோரு மூட்டையுடன் ஒரு குடும்பத்தை பார்க்க நேர்ந்தது. எவ்வளவு காலமாகிறது, இந்த கட்டுச்சோறு சாப்பிட்டு, குறைந்தது நான்கு, ஐந்து. உச்சி வெய்யிலில் ஈரப்பதமிக்க எல்லா இடுக்குகளிலும் மொய்க்கிற எறும்புக்கூட்டம்போலான மனதிது. அவரைக்குளத்து மாரியம்மனும், திருவிழாயிரவில் கட்டுச்சோற்றுடன் மேடையின் முன்னமர்ந்து பார்த்த அரிச்சந்திரனும் ஞாபகம் வந்தார்கள். குளத்திலிருந்து துள்ளிய மீனொன்று கட்டாந்தரையில் துடிப்பதுபோலிருந்தது. கீழே இறங்கிவந்தபோது நான்கு மணி. மலையடிவாரம், கொஞ்சம் ‘கொஞ்ச’ லாம்போல் தென்படுகிற சுடிதார் யுவதிகள். பசிக்கு தின்ற பத்துரூபாய் பொரியும், கலவைக்காரமும் அடிவயிற்றை ஐம்பதுபைசா பலூன் அளவுக்கு ஆக்கியது. தைப்பூச திருவிழாக்கடைகள் இன்னும் எடுக்கவில்லை. சுற்றும் ராட்டினம், சில குழந்தைகள். நாமும் ஏறலாமா? வேண்டாமா? கொஞ்சம் குழப்பமும் கூச்சநாச்சமும் வேண்டாமென்றது, காரணம் பனிக்கூழ் நக்கியவாறான அழகு பெண்கள் மற்றும் கடந்துவந்த என் வயது. அருகருகே தள்ளுவண்டிகளில் பலாச்சுளை, வேர்க்கடலை, கீத்துப்போட்ட அண்ணாச்சிப்பழம்... ம்கூம்.. முக்கினாலும் முடியாது, சோற்றுப்பொரியால் வந்தவினை,  நாங்கள் வண்டியை கிளப்பினோம், வயிறும் மனதும் புடைத்தேயிருந்தது. வஞ்சனை வாழ்க்கை. 



.

Thursday, January 13, 2011

ஒரு விமர்சனம்



‘கள்ளிக்காட்டில் பெறந்த தாயே’ என்று தொடங்கும்போதே இந்த ஒத்தையடிப்பாதை எந்த மையத்தில் செல்லப்போகிறது என்று தெரிந்துவிடுகிறது. பெயர்கள் ஓடும்போது வருகிற செஃபியா டோன் புகைப்படங்கள் அத்தனை கிராமத்து முகங்களையும் ஒத்தியெடுத்திருக்கிறது. கூடவே எனக்கு அண்ணன் கருவாயனின் புகைப்படங்கள்தான் ஞாபகத்திற்கு வந்தது.  படம் தென்மேற்கு பருவக்காற்று, இயக்கம் சீனு ராமசாமி அவர்கள்.

நசநசத்த மண்ணும் தூரிக்கொண்டிருக்கும் மழையுமாக பட்டிகளுக்குள் அடைந்துகிடக்கும் செம்மறியாட்டு கூட்டங்களை காட்டும்போது கூடவே படத்துடன் அடைந்துபோவதைத்தவிற வேறுவழியில்லையெனக்கும். எல்லா நகர மனிதனுக்குள்ளும் பிதுங்கிவழியும் அந்த கிராமத்துமண் ஏக்கம் காரணமாக இருக்கலாம். வாயில்லாப்பூச்சிகளை வசைக்குள்ளாக்கும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் வீதிகளில் செல்லும் டயர்வண்டி மாடுகளை பார்க்கும்போது அதன் முதுகில் உள்ள தார்க்குச்சி புள்ளிகளில், மாட்டுக்குச் சொந்தக்காரனின் ‘வீரம்’ தான் முதலில் தெரிகிறது. இதில் பசுமாடுகளும், ஆடுகளும் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு, இறுதியில் பலியானாலும்கூட. ஆடுகளை கொஞ்சி வளர்ப்பதும், அவைகளுக்கு சீக்குவந்து கழிந்தால்கூட கண்ணீர் சிந்துமளவுக்கு பாசங்காட்டும் பொம்பளைகள் இன்னும் கிராமத்தில் இருக்கிறார்கள்.

போக... ஆடு மேய்க்கும் தொழிலு‘முடைய குடும்பத்திற்கும், அவைகளை களவாடி இறைச்சியாக்கி பிழைப்பு நடத்தும் ஒரு குடும்பத்திற்கும் கொஞ்சம் காதலுடன் கட்டப்பட்ட கதை. படத்தின் நாயகன் நாயகி என்று காட்டப்படும் இரண்டு முகங்களைத்தாண்டி ஓடியாடி உழைத்திருப்பது ‘நாயகனின்’ நாயகி  சரண்யாவும்,  ஒளிப்பதிவாளர் செழியனும், இயக்கிய சீனுராமசாமியுந்தான் என்பதே சரி. சிற்றுந்துகள் தூரத்திலிருந்து வரும்பொழுது பின்னாலொலிக்கும் இசையில்,  இளையராஜாவின் இசைச்சுவற்றில் கொஞ்சம் சுண்ணாம்பைச்சுரண்டி  எடுத்ததுபோல் தெரிகிறது. மேலும் ஆரம்ப இறுதி மற்றும் இடையில்வரும் ‘கள்ளி கள்ளிச்செடி’ பாடல்களைத்தவிர மற்றெதுவும் பெரிய தாக்கத்ததை தரவில்லை.

கதை, திரைக்கதை, செம்மண் வசனங்கள் இதர பாத்திரங்கள் மற்றும் மற்ற இத்யாதிகளை ஓரங்கட்டிவிட்டு இங்கே பார்க்கவேண்டியது பொன்வண்ணனின் பொண்டாட்டி முகத்தையும் நடிப்பையும். மேலுதட்டுக்கு மேலே ஓட்டைகள்தெரிய புடைத்த அந்த மூக்கே போதும். பார்ப்பவர்கள் ராட்சஸி பட்டம்தர ஏற்ற இந்த பொம்பளையை,  ‘ச்ச்சே என்ன பொம்பளடா’ என்று நவநாகரீகத்தார் நினைத்துக்கொள்ளலாம். ஆயினும் கிராமத்து புழுதியை எண்ணெய்த்தலையில் சுமந்தலைந்தவர்களுக்கு அவள் ஒரு பழக்கப்பட்ட முகமாகவே தெரிவாள். எனக்கு அப்படித்தான். இந்த ராங்கி ரப்பு இல்லாத பொம்பளைகளை எங்கள் தெருவில் பார்ப்பதரிது. மயிலாம்பாள், சரசு, முருகனோட அம்மா, வைத்தி பொண்டாட்டி, பக்கத்து தெரு ராசாவோட அக்கா என்று பட்டிவாய்ப் பொம்பளைகளுடன் புழங்கியப்பொழுதுகள் படம் முடிந்தபொழுதும், கனவிலும்கூட வந்து தொலைத்தது.

‘இந்த ரத்தம்லாம் அப்பனாத்தா இல்லாத புள்ளைங்களுக்கு குடுப்பாங்களா!!?’ என்று கேட்டுவிட்டு ரத்தம் கொடுக்க போகுமிடத்தே தொடங்குகிறது அவளின் அலப்பறை. ‘தோ பாரு, நா வாக்கு குடுத்திட்டேன், மீறி நடக்கணும்னு நெனச்ச சங்கருத்துடுவேன்’ என்று மகனை மிரட்டும் காட்சியாகட்டும், கடைசியில் தாலியை திருப்பிக்கொடுக்க வந்த நாயகியை மனம்மாறி ஏற்றுக்கொண்டபிறகு அவள் அண்ணனை எதிர்க்க ஊர் முனையில் தடியோடு நிற்பதாகட்டும், கத்தியால் குத்துப்பட்டபின்பு ‘களவாணிப் பய குத்திட்டான்னு தெரிஞ்சா மானம்போயிடும் யார்டையும் சொல்லாத’ என்று சொல்லிவிட்டு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வீராப்பாகட்டும், அதற்கு முன்பு ‘இந்தா வெத்தலப்பாக்கு வச்சிருக்காயாடா?’ என்று கேட்டுவாங்கி அப்பவே 101 யை வைத்து நிச்சயம் செய்யுமிடமும்...., ‘முண்டச்சி வீட்ல சம்பந்தம் பண்ணக்கூடாதுன்னு அப்பவே எல்லாம் சொன்னானுக.. நாங்கேட்டனா?... நீ நல்லாவே இருக்கமாட்ட...நல்லாவே இருக்கமாட்ட’ என்று அந்த தம்பிமுறையான் மண்ணை தூற்றிவிட்டு செல்லுமிடத்தில், அவமானத்திலும் ஆங்காரத்திலும் விழிபிதுங்கும் இடமும்............இந்த பொம்பளை வாழ்ந்திருக்கிறாள். எனக்கென்னமோ எல்லாரையும் தாண்டி அப்படியே என் சரசு அத்தையை ஞாபகப்படுத்தினா‘ள் அல்லது ‘ர்’.

இன்னொரு கருவாச்சி பெண்ணும் வருகிறாள். ‘நீங்க எனக்கு தூரத்து சொந்தந்தான்’ என்று தொங்கட்டான் குலுங்க தலையாட்டிப்பேசும் பேச்சே போதும்..செமத்தியான சிறுக்கி.

படத்தில் ஆங்காங்கே இழுத்து இழுத்து பேசும் நண்பனின் வசனமும், மூடியக்கையில் நொழுந்திய வெங்காயப்பக்கோடா போன்ற ஒரு கிளைமாக்ஸ் காட்சியும் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் இவையெல்லாம் அந்த தாயின் கலப்பையில் அரைந்துபோன மண்புழுப்போலதான்.

இப்படத்தின் நாயகியைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக என்று யாராவது கேட்கக்கூடும். 

ஒரு அலக்குக்குச்சிக்கு பாவாடைத்தாவணி போட்டதுபோல்தான் நாயகி. முனை அருவாளை கண்ணில் வைத்திருக்கிறாள். கள்ளிப்பழத்தை சாப்பிடும்போது மோவாயில் குத்துகிற பூமுற்களைப்போல நெஞ்சில் குத்துகிறாள். அந்த உதட்டெச்சிலைத் தொட்டு வெறுமனே கன்னத்தில் வைத்துக்கொள்ளலாம்போல. என் முகத்தில் பருக்கள் வந்து காலமாகிவிட்டது. மீண்டும் இக்காலத்தே வரலாம். (கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட?)  வேறொன்றுமில்லை. கண்களால் நடிக்கத்தெரிந்தவளுக்கு வளையவளைய வந்தாலும் பெரிதாய் சொல்’லமுடியாத ‘வாய்’ப்பூ.

ஒரு நல்ல படைப்பையும், சரண்யாவின் முழு நடிப்புத்திறனையும் திரையுலகிற்கொணர்ந்த இயக்குநர் சீனுராமசாமிக்கு எக்காலமும் நன்றி.


நல்லாயிரு தாயீ






.

Wednesday, January 12, 2011

வேறென்ன வேண்டும்

.

கல்யாணிக்கு
ஒருகால் இல்லை

அக்கம்பக்க பிள்ளைகளுக்கு
அவள் அத்தையாகியிருந்தாள்

சிலர் பெரியம்மா பெரியம்மா என்பார்கள்
நானும்தான்...

செல்லையன் மட்டும்
அம்மா என்றுதான் கூப்பிடுவான்

எனக்குத்தெரிந்து
கல்யாணிதான் பலருக்கு

நேற்றுப்பிறந்த பொண்டு பொடிசுகளால்
ஆத்தாவும் ஆகிவிட்டாள்

வேறென்ன வேண்டும்
கல்யாணிக்கு கல்யாணம்தான் ஆகவில்லை.


.

Friday, January 7, 2011

அசோகமித்திரனுக்கு சாரல் விருது



அன்பிற்குரிய நண்பருக்கு,
வணக்கம்.
நலம் தானே.
நானும், நண்பர் தேனுகாவும், திரு மா.அரங்கநாதன் அவர்களும் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கி வரும் சாரல் இலக்கிய விருதின் நடுவர் குழுவில் தேர்வாளர்களாக இயங்கி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந்த ஆண்டின் சாரல் இலக்கிய விருது முதுபெரும் எழுத்தாளர் 
திரு அசோகமித்திரன்அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

 
உங்கள் வருகையால் விழா மேலும் சிறக்கும். அவசியம் வருக!
நன்றி!


      சாரல் விருது வழங்கும் விழாவும்
ஜேடி ஜெர்ரியின் கலம்காரி நூல் வெளியீட்டு விழாவும்

பங்கேற்போர்:
பிரபஞ்சன்
| ஆர். பி. பாஸ்கரன் | எம்பெருமாள் | ச தமிழ்செல்வன் | பாரதிமணி | இயக்குனர் லிங்குசாமி



அன்று இரவு 8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம் திரையிடப்படும்.

இடம்: பிலிம் சேம்பர் அரங்கம், சென்னை,
நாள்:9.01.2011 நேரம் மாலை 6 மணி.

நன்றி கலாப்ரியா

••••••••••••

ஆங்கிலத்திலும் படைப்பிலக்கியங்களை எழுதியவர். கரைந்த நிழல்கள், தண்ணீர், ஒற்றன், பதினெட்டாவது அட்சக்கோடு உள்ளிட்ட நாவல்களும் காலமும் ஐந்து குழந்தைகளும், இன்னும் சில நாட்கள் உள்ளிட்ட சிறுகதைகளையும் எழுதிய இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். 2009-ம் ஆண்டில் எழுத்தாளர் திலிப்குமாருக்கும் 2010 ஆம் ஆண்டில் கவிஞர் ஞானக்கூத்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

விருதுக்குழு நடுவர்களாக எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், ரவிசுப்ரமணியன் கலைவிமர்சகர் தேனுகா செயல்பட்டனர். வரும் ஞாயிற்றுக்கிழமை (9.1.11) அன்று பிலிம்சேம்பரில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், எம்.பெருமாள், ச. தமிழ்ச்செல்வன், பாரதிமணி, இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.

 விளம்பரப் படஉலகில் முன்னணியில் இருக்கும் இயக்குநர்கள் ஜேடி, ஜெர்ரி இருவரும் இந்த இலக்கிய அமைப்பை நடத்தி வருகின்றனர். விழாவில் ஜெர்ரி இயக்கிய கலம்காரி என்ற ஆவணப்படம் திரையிடப்படும்.

நன்றி தினமணி


••••••••••



Wednesday, January 5, 2011

அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்

ஒரு இறுக்கம் தளர்ந்த இரவுப்பொழுது என்றுதான் வாய்க்குமோ தெரியவில்லை. ஒவ்வொரு நாள் அடர்த்தியும், அழுத்தி கொடுக்கிற முத்தத்தால் விளையும் கன்னத்து எச்சில்களாய் கொஞ்சம் சில்லிடலும் கொஞ்சம் அருவருப்புமாய் தொலைகிறது. கருமாந்திர கன்றாவிகளை சகித்துகொண்டே பழகிவிட்டது மனது.


தினமும் விடிகிற காலையைப்போல்தான் அன்றும் விடியப்போகிறது. வேறெந்த எழவும் நடக்கபோவதில்லை. ஒரு திருவிழாவிற்குண்டான பரபரப்பினை பள்ளிக்கூடங்களைச் சூழ்ந்த கடைகண்ணிகள் கொண்டிருக்கும். கலர் கலர் தோரணங்களும் பதாகைகளும் தார்ச்சாலையில் அம்மா வாங்க அய்யா வாங்க என்றழைக்கும் சுண்ணாம்புக்கோடுகள் தோரணையில் திருவோடுகளும், ஓரங்களில் வாடகைக்கடையோ அல்லது டெண்ட்டோ போட்டு ‘டேய் அண்ணன் வந்திட்டாருடா, 3 வது வார்டு, கரைட்டா நோட் பண்ணிக்கொடு, அண்ண மறந்திடாதண்ண மேலேர்ந்து மூணாவது பட்டன் நம்மளோடது, அழுத்தினா சவுண்ட் வரும் பாத்துக்க’ இயல்பாய் பாடத்துடன் ஒலிக்கும் குரல்களும் கேட்டுகொண்டேதானிருக்கும்.

நடக்கமுடியாத இராசாயாக்கிழவியும், நவநீயும் ஜகஜ்ஜோராக வண்டியில் பொக்கைப்பல் தெரிய ‘நானெல்லாம் ஓட்டுப்போட்டு என்ன ஆவப்போது‘என்று சிரித்துகொண்டே போவார்கள். டவுசரை மறந்து லுங்கியைச் சுற்றியதுகளனைத்தும் பக்கோடா பொட்டணத்திற்கும், ‘டீ’க்குமாக பூத் ஏஜண்டாகவோ, வெளியில் வார்டு எண் குறித்துதரும் பொம்மைகளாகவோத்தான் வீற்றிருக்கப்போகின்றன. கன்னக்கோல் வைத்து திருடும் கூட்டத்திற்கு வெள்ளைவேட்டியும் சட்டைகளும்வேறு. நேற்றைய மழையில் முளைத்த இன்னொரு காளானாக ஆகப்போகும் புதிதாய் வாய்க்கப்பெற்றவன் இந்த நாட்டின் முதல்குடிமகனான பிரம்மையில்  வேகாத வெய்யலில் நின்று கையில் வைத்த மையை திரும்பத்திரும்ப பார்த்து பிரமித்துபோகப்போகிறான் அரும்பிய மீசையை தடவித்தடவி இன்புறுவதுபோல். இன்னொரு ஏப்ரல், மே, இன்னொரு சனி ஞாயிறு, இன்னொரு விடுமுறை, இன்னொரு 2ஜியோ புண்ணாக்கோ என்ன புடலங்காயோ.....

‘ஆணவம் தலைக்கேரிய மன்னா, உன் ஆணவம் அழியப்போகிறது..... லொக்..லொக்..’

‘அழிவாம் அழிவு, என்னை அழிக்க எவனடா வருவான்...ஹா..ஹா..ஹா.. ’

கட் கட்..கட்..

ங்ஙஞீஞீங்ங்ஞேஞே.. குதிரையும் அதன் கணைப்பும், பேக்ரவுண்டில் டண்டண்டய்ங்ங் இசையும் சூழ ஒரு உக்கிரபுத்திரன் வருவான் இவ்வுலகைக்காக்க...

ஆஹா.. அஹ்ஹஹ்ஹா... தட்டுடா கைய....என திரைச்சித்திரத்தின் நீட்சியைக்கண்டு மெய்சிலிர்த்துப்போவதோடு இம்மண்ணின் மனிதகுலம் மாட்சியுறும்.

எந்த பன்றியுடன் சேர்ந்த கன்னுக்குட்டிகள், கன்னுக்குட்டிகளாகவே இருந்திருக்கின்றன? வாருங்கள் அந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம், அதற்கு இன்னும் நாள்தான் வைக்கவில்லை.



.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO