க.பாலாசி: February 2010

Friday, February 26, 2010

ஆரம்பம் 1992...

1992. வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகளை தன்னகத்துள் நிரப்பியிருந்த வருடம். அவ்வளவு சாதாரணமாக எவர் நெஞ்சினையும் நீங்கும்படியான நிகழ்வுகளாக அவை அமையவில்லையென்பது இன்னொரு சிறப்பு. வெள்ளையனைக் கண்டால் வெளியேறு இல்லையேல் அவனின் எழுத்துக்கள் புதைக்கப்பட்ட ஏடுகளை வேருடன் அருத்தெறி என்ற எண்ணம் அனைவர் இதயத்தையும் கவ்விக்கொண்டிருந்தது. கூடவே சட்டமறுப்பு இயக்கங்களும். 25 பைசாவுக்கு துடைப்பானால் அடித்துக்கொண்ட காலகட்டங்கள் அப்போது மேகம் சூழ்ந்த வானமாயிருந்தன. தவறு செய்தலும், தப்பத்தெரிதலும் மிகையாட்கொண்டிருந்த காலகட்டமது.


அன்றைய நாளில் மிகமுக்கிய கோட்பாடாகவும், குறிக்கோளாகவும் அடிமனதில் தாளமிட்டது ஆங்கில எதிர்ப்பு. இலவசம் என்றபெயரில் அனைத்து புத்தகங்களையும் கொடுத்து, ஆங்கிலத்தையும் அதனுடன் திணித்துவிட்ட பள்ளிக்கல்வி நிர்வாகங்களை எப்படிச் சாடுவது. ஒரு நொச்சி சிம்புக்கு (குச்சி) பயந்து நடுங்கிய நாட்களில் ஆங்கில எதிர்ப்பை நடைமுறைப்படுத்துவதென்பது இயலாதவொன்று. அறவழிப்போராட்டத்தை வகுப்பறை நீங்கிதான் நடத்தவேண்டும் என்று சகலரைப்போலவே எனக்கும் தெரிந்திருந்தது. வகுப்பாசிரியருக்கு எங்களியக்கத்தின் வலிமையைக்காட்ட கருவேலங்காட்டுக்குள் கால்தடம் பதித்து பதுங்கியிருப்பதே சாலச்சிறந்ததென்ற எண்ணமிருந்தது. அங்கே கோலிகுண்டும், கூட்டாஞ்சோறுமாய் குதூகலப்படுத்தும் என் சக வீரனை நினைத்து அகமகிழ்வு பெற்றிருந்தேன்.


போராட்ட புதருக்குள் பதுங்கியிருந்த சில புல்லுருவிகளின் அடிமட்ட செயல்களினால் தலைமை ஆசிரியரின் கையில் தலையினைக்கொடுக்கவும் நான் தயங்கியதில்லை. இரண்டு மூன்று குட்டுகளுக்கு பயந்துவிடுவோம் என்று அவர் நினைத்திருக்கலாம். எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுத்துச்செல்லும் தைரியம் எனக்கும் வாய்த்திருந்தது. பெருமிதம் கொண்டிருந்தேன். ஆவாரம் பூவாக எவளோயொருத்தி எனக்கிந்த வாலிபத்தினையும், வாசத்தினையும் வழங்கியிருக்கவேண்டும். சுஜா. அவள் பெயராக இருக்கலாம். இந்த நன்வரலாற்றில் அவளையும் இழுத்துவிடுவது இழிவினைக்கொணரலாம். விலகிவருவோம்.


அம்மாதிரியானதொரு தருணத்தில்தான் தந்தையுடனான ஒத்துழையாமை இயக்கத்தையும் தீவிரப்படுத்தவேண்டிய கட்டாயமிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமலில்லை. ஒரு மதியவேளை ‘அதிமுக்கிய மட்டைவிளையாட்டுக்காக பள்ளிக்கு செல்லவில்லையென்று, உச்சி வெய்யில் உயிர்ச்சுடும் நேரத்தில் காலணி இல்லாமல் நிற்கவைத்த படுபாதக செயலைச் செய்தவர் அவர். உலகவரைபடத்தில் சிறந்த ஜனநாயக நாடாகக் கருதப்படும் நம் இந்திய தேசத்தின் அவஸ்த்தைகளை தட்டிக்கேட்கப் பிறந்தவொரு தனிக்குடிமகனுக்கு மட்டைவிளையாட்டு விளையாட அனுமதி மறுப்பதென்பது காலக்கொடுமையன்றி வேறென்ன சொல்வது. அதன்பொருட்டே இந்த இயக்கம். இதனூடேப் பிறந்த உண்ணாவழிப் போராட்டமும் செவ்வனே நடந்ததாய் அடிக்கோடிட்ட இவ்வரலாற்று வரிகள் உணர்த்துகின்றன.


ஏ, பி, சி, டி... என்று தொடங்கும் 260 எழுத்துக்களையும் (என் போராட்டங்களால் 26ஆக குறைக்கப்பட்டுள்ளதை அறிவேன்) படித்து சமாளிப்பதென்பது அவ்வளவுச் சுலபமல்ல. ஆங்கில அறிவுடையோர் அறிவர். கடுமைக்கும் கொடுமைக்கும் கால்முளைத்தார்போல் தோன்றும் அவ்வெழுத்துக்களே என் முதல் எதிரியாய் தெரிந்தது. பள்ளியில் கொடுத்த ஆங்கிலப்புத்தகங்களை மஞ்சள் பையில் புகுத்தி என் தாய்மொழியை கலங்கப்படுத்தியதுமில்லை அதுபோல் வழக்கமாய் புத்தகங்களுக்குப்போடும் சாம்பிராணியை அவைகளுக்கு காட்டியவனுமில்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததை ஒருபோதும் மறவாதவனாய் அந்த ஆங்கிலப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு அலைந்து திரிந்து ‘இதயம் மளிகைக்கடை அடைந்தேன். எதற்காக என்று நீங்கள் கேட்கலாம். சொல்வதும் என் கடமையென்றறிவேன். எடைக்குப்போடத்தான்(???!!!!). அப்படி கிடைக்கும் 25 பைசாவுக்காகவும், அதனால் வாங்கப்படும் 25 எண்ணிக்கை ஒரு பைசா மிட்டாய்க்காகவும் ஆசைக்கொண்டதால்தான் நான் இச்செயலை செய்தேன் என்றெண்ணலாம் நீங்கள். மறுப்பதற்கான காரணங்களை மேற்கூறியிருக்கிறேன்.Friday, February 19, 2010

கௌரவம்


நாளைக்காவது

ரேசங்கடையில அரிசிய வாங்கியாங்க..

‘வக்கத்தவனுக்கு வாழ்க்கப்பட்டா.......

படபடத்தாள்...


தலை அசைத்தான்...


போனவாரம்

மச்சினனுக்குப்போட்ட

மோதிரமும், மத்தியான விருந்தும்

இன்னும் ஞாபகத்தில்.


••••••••••••


பாப்பாத்தியக்காவோட போனோம்னா...

போனமா...சாப்டமான்னு... வந்திடலாம்.


ரவிக்க ஒட்டு தெரியாம

முந்தானய இழுத்து மூடிக்கவேண்டியதுதான்....

பாவாட கீழதான் கிழிஞ்சிருக்கு...பரவால்ல...


அம்பது ரூவாயாவது

மொய் எழுதுனாத்தான்

கௌரவமா இருக்கும்...


அக்கா போலாமா?Saturday, February 13, 2010

அக்கம் பக்கம்...


என்வீட்டுப் பறங்கிக்கொடி அடுத்தவர் வீட்டில் படர்ந்து கிடப்பதும், அவர் வீட்டு பூசணிக்கொடி என்வீட்டில் காய்த்துக் குலுங்குவதுமாக இருந்த காலகட்டங்களில் இடையிருந்த மூங்கில் படல் (வேளி) ஒரு தடுப்பாக அந்தக் கொடிகளுக்குகூட தெரிந்ததில்லை. கால மாற்றங்களில் அவரவர் சுயநலங்கள் மற்றும் இன்னபிற பொருளாதார வளர்ச்சியின் மிகைப்பொருட்டு இடையாட்கொண்ட செங்கல் சுவர் எல்லாம் மறித்து, மறைத்து இரு குடும்பங்களுக்கிடையிருந்த உறவுமுறை, நட்புணர்வு, சகோதரத்துவம், மனிதநேயம் போன்றனவற்றை வெட்டிச்சாய்த்து வேரூன்றியது.

என்வீட்டுக்
குழம்பு எதிர்வீடு செல்வதும், அவர்கள் வீட்டு காய்கறிக்கூட்டு என்வீட்டில் மனப்பதுமாக இருந்த மனப்பறிமாற்றங்கள் மற்றும் மூன்றவாது வீட்டில் பிணியுற்ற தாத்தாவிற்கு இங்கிருந்துச் சென்ற சுக்கு கசாயமும், என் பிணி இலகுவாக அங்கிருந்து வரும் அரிசிக்கஞ்சியும் இருதரப்பு பிணக்குகளையும் மூடித்திரையிட்டு இனித்துக்கொண்டிருக்கும். பக்கத்துவீட்டில் ஒரு விசேசமென்றால், அடுத்தவீட்டில் பந்திப்பாய்கள் விரிக்கப்பட்டிருக்கும். வீதியிலொரு துக்கமென்றால் அனேகர் இல்லங்களில் ஒப்பாரிகள் ஒலிக்கும். எந்தவொரு நல்லதுகெட்டதிலும் கிராமத்தானின் வாழ்வுதனை சூது கவ்வியதில்லை (மறுப்புகளும் உண்டு).

ஒரு
அஞ்சல் ஊழியனுக்கு, அடுத்த வீதியிலிருப்பவனை அடையாளம்காட்ட என்வீதிக்காரன் உதவுவான். அங்கிருப்பவனுக்கும் அதே ஞானம் மிகைந்திருக்கும். ஏழைப்பணக்காரத்தனமோ, சாதிமத பேதமோ (வீதிக்குவீதி மேம்பட்டிருந்தாலும்) அடுத்தடுத்த வீடுகளுக்குள் புகுந்திருந்ததில்லை. எல்லாம் மறைந்து, மறந்த இந்நேரத்தில் இன்றும் கிராமத்துச்சுவர்களில் இந்நிலைவாசம் மேற்புழுதியாய் படிந்திருந்தாலும் நகரத்து வாழ்வுதனில் இவைகள் மிகக்குறைந்திருப்பது காணக்கிடப்பது. அடுத்தவீட்டில் குடித்தனம் நடத்துவது நமது உறவினர்தான் என்றறிய ஏதாவது திருமணவீடுகள் காரணமாயிருக்கும். இல்லையேல் அதுவும் தெரியாமற்போகும். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யாரென்று தெரிந்துகொள்ள எவருக்கும் ஆர்வமோ, ஆவலோ இருப்பதில்லை. வந்ததை வாங்கி வெந்ததை உள்நிரப்புவதில் இருக்கும் வேகமும் தாகமும் உறவினை பெருக்குவதிலோ, நட்புணர்வினை மேம்படுத்துவதிலோ மிகுதியாக செலவிடப்படுவதில்லை.

தினம்தினம்
காலையில் முகத்தில் பூசிக்கொள்ளும் முகப்பூச்சியினூடே அவ்வப்போது நமது நாகரிகமெனும் அரிதாரத்தையும் சேர்த்திட்டுக்கொள்கிறோம், எவரும் காணாதவாறு. இன்றென் நிலைமையை என்வீட்டுப்பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டுப்போவதில் என்மனமும் சங்கடங்கொள்ளத்தான் செய்கிறது. இலக்கில்லா திசையில் உயிர்மட்டும் தாங்கி உயரஉயர பறக்கும், ஒரு ஊர்க்குருவியாக நானும்.


Monday, February 8, 2010

புரையோடும் ஆலமரம்

நாகரீக போர்வைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகளின் நிலையைப்பற்றி பெருமையுடன் சொல்வதற்கொன்றுமில்லை. இதற்கு விதிவிலக்காய் என்னைப்பெற்றதும் மற்றுமென் சுற்றுவட்ட 54 கிராமங்களும் இல்லையென்பதே அவிழ்ந்துகிடக்கும் உண்மை.


எங்கள் தெருவிலுள்ள 25 விவசாயக்குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இல்லாதவர்கள் (நானறிந்தவரையில்). மழையினாலோ அல்லது வெள்ளத்தினாலோ வேறெந்த இடர்களாலோ பயிர்கள் பாதிக்கப்பட்டாலும் அடுத்த குறுவை சாகுபடியில் விட்டதை பிடிக்கலாம் என்ற ரீதியில் நம்பிக்கையும்பணத் திடமும்உள்ளவர்கள். அடுத்தமுறையும் நட்டமாயின் அவர்களின் வெளிநாட்டுப்பிள்ளைகள் அவர்களை காப்பாற்றிவிடுவார்கள் அல்லது அடுத்த சாகுபடிக்கு பணநீரூட்டி உயிர் கொடுத்துவிடுவார்கள். அவர்களுக்கு இதுதான் தொழிலே (பிள்ளைகளுக்கல்ல). இது எங்கள் தெருவின் நிலை.


இந்நிலை அப்படியே தலைகீழாய் எங்களது அடுத்தடுத்த தெருவாசிகளுக்கு. முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். முதல் போகம் முறிந்துபோனால் அடுத்தபோகம் விளையும் வரையில் ஒரு ரூபாய் அரிசிதான் கதி. (இதன் விலை இன்னும் ஒருரூபாய் ஏறினால் அதோகதிதான்). இன்றைய நாளில் அவ்வப்போது அடித்துப்பெய்யும் மழையில் படுத்துக்கொண்ட நெற்பயிர்கள் அழுகி உயிர்த்துறந்த நிலையில் எல்லாம் வற்றி ஈரப்பதமுள்ள நிலத்தினை மீண்டும் கைகலப்பைக்கொண்டு (இன்றும் உயிருடன் உள்ளது) உழுது மறுநடவு செய்தாலும், எல்லாவித துன்பங்களையும் தாண்டி நெல்மணிகள் நிலத்தினை பார்க்கும் தருவாயில், மாரியின் மயக்கத்தில் பொய்க்கும் பருவமழை பல்லிளித்துக்காட்டும். மீண்டும் நட்டம்.


வானம் பார்த்த பூமி இல்லை. மின்மோட்டார் வசதி இருக்கிறது. இல்லாவிட்டாலும் அடுத்த வயலுக்கு சொந்தக்காரர் தண்ணீர் தரும் நல்லவராக இருப்பார். இப்போது காவிரி டெல்டா பகுதியில் பெரும்பாலானோர் காவிரியைமட்டும் நம்பி இல்லை. அது அம்மா வந்தால் கொஞ்சம், அப்பா வந்தால் கொஞ்சம், இல்லையேல் கருநாடகத்தில் வெள்ளம் வந்தால்மிகவும்கிடைக்கும் வரம். (அதேநேரத்தில் இங்கே மழை அடித்துப்பெய்து கொண்டிருக்கும்) என்றும் இந்த வரம்கடையாதுஎன்றும் தெரியும். மழை வரவில்லையென்றால் வருந்துவதும், மிகைந்து வந்தால் வேதனைக்குள்ளாவதும் எல்லாப்பகுதி விவசாயிகளுக்கும் உரியதுதான். அருவடைக்கு தயாராகும் நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தால் விவசாய மக்கள் ஒவ்வொருவரின் அடிவயிற்றிலும் அலறலெடுக்கும். தன்பயிருக்காக மட்டுமல்லாது, அடுத்தவர் பயிர்களும் அழுகுவதை நினைத்து கண்ணீர்மல்குவது விவசாயிகளுக்கே ()ரிய குணம். இது இன்றைய நிலையில் விவசாயிகளின் இன்னொரு பிரச்சனை.


இவையெல்லாவற்றையும் தாண்டி அருப்பருத்து களத்துக்கு கொண்டுவந்து அடித்துப்பார்த்தால் மிஞ்சுவது முதலாகத்தான் இருக்கும். சரிபோகட்டும் என்று அடுத்த நடவுக்கு தயாராவான் அதே நிலையவன். ஆனால் அவன் மனதில் ஆழப்பதியும் எண்ணமென்பது, தன் பிள்ளைகளுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்பதே. விவசாயத்தைவிட்டால் கிராமப்புறங்களில் இன்று வெளிச்சம்காட்டுவது கொத்தனார் தொழில். சித்தாளாக வேலைசெய்தால் ஒருநாளைக்கு (அதாவது காலை 10 மணிமுதல் மாலை 5.30வரை) 150திலிருந்து 200வரை ஊதியம் (கிராமப்புறங்களில்). கொஞ்சம் முன்னேறிகரனைபிடிக்க ஆரம்பித்தால் 250க்கு குறைவில்லாமல்.


அதைவிடுத்து காலை 7 மணிக்கு அருப்புக்குச் சென்றால் மாலை 6.30 மணிவரையில் வெயிலை மென்று துப்பினாலும் விஞ்சிக் கிடைப்பது 150ரூபாய் வரையும், இரண்டு டீயும், பட்சணங்களுமே. (பெண் நடவாட்களுக்கு இன்னும் குறைவு). வயலுக்குச்சென்று பசியில் குத்தும் வயிற்றை பட்சணங்களில் நிரப்பி பலன் காணுவதை தனது சந்ததியினருக்கும் தொடரவிடாமல் செய்யவே எந்தவொரு தகப்பனும் விரும்புவான். அதே நிலைதான் இந்நிலை விவசாயிகளுக்கும். எப்பாடுபட்டாவது பிள்ளைகளை படிக்கவைக்கின்றனர், இல்லையேல் கொத்தனார் தொழில் அல்லது விவசாயமல்லாத வேறொரு தொழில், மிகை மிஞ்சினால் வெளிநாடு அனுப்பிவிடுகின்றனர். இல்லையேல் தருதலை உருப்படாது என்று தண்ணீர்தெளித்து விட்டொழிக்கின்றனர். எது எப்படியாயினும் இவர்களின் நோக்கம் விவசாய கஷ்டமென்பது தம்மோடு ஒழியட்டுமென்பதே. (விதிவிலக்குகளும் உண்டு).


“ஆலமரம் போல நீ வாழ - அதில்

ஆயிரம் பறவைகள் இளைப்பாற

காலமகள் உன்னைத் தாலாட்ட - அந்த

கருணையை நாங்கள் பாராட்ட..”


எல்லாம் சரி. விழுதுகளின் ஊன்றலின்றி புரையோடிய ஆலமரநிழலில் எத்தனைக்காலந்தான் நம்மாலும் இளைப்பாறமட்டுமே முடியும்.  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO