க.பாலாசி: புனைவு
Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Tuesday, January 29, 2013

மீசை மகாத்மியம்...



ரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு!! இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு  கொடுக்கவில்லை.

“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க?” எனக்கு முந்திக்கொண்டான்.

அவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு!!!. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.?”

“ம்ம்ம் நல்லாருக்கன்டா” என்றான்.

சிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க? பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்?”

“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன?”

“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா? கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது.

“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச..? மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா? அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான். 

மாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன். 

“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது.? அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார்.

ஆமாம் எனக்கு என்ன குறைச்சல்! என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குக்கூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தன்‘தான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வெய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சிகோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன். 

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!!!  அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது.

இங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகடிலிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார்.  கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார்.

எப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார்.

ரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந்த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன்.

இப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.

இப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன்.

“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.

“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன்.

“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா? நீய் செய்யி” என்றான்.

“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் குமட்டிலேயே குத்தினான், அந்த முக்கா மீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.


••
 
குறிப்பு: - மீள் இடுகை

Friday, February 3, 2012

படர்க்கை

*

பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன்.

‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

‘இதான் உன்னோட அத்த’

‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’

‘இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன்.

எனக்கு சித்தியான பாலாவுடைய அம்மா சின்ன வயதிலேயே இறந்துவிட்டாள். இவளைப் போட்டுவிட்டு சித்தப்பனும் எங்கோ ஓடிவிட்டான். என்னதானிருந்தாலும் அப்பனாத்தா இல்லாத பிள்ளைகளை வளர்ப்பதென்பது புட்டிப்பால் கொடுப்பது போலத்தான். எண்ணையும் தண்ணீரும்போல ஒரு ஒட்டு இல்லாமல் இடைவெளி இருந்துகொண்டேயிருக்கும். வீட்டில் பெண்பிள்ளை இல்லாத குறையாக நாங்கள்தான் வளர்த்தோம். எனக்கு ஒரு தங்கையாக அம்மாவுக்கு ஒரு நல்ல மகளாக இருந்தாள். படிப்பு இத்யாதிகள் எதிலும் குறையில்லை.  

எடத்தெருவில் இருந்த 45 குழி இடத்தில் 15 குழியை நாங்களே வைத்துகொண்டு மீதி இடத்தை விற்கும்போது பாதி பணத்தில் வீடு கட்டிக்கொண்டு மீதியில் பாலாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கத்தான் எண்ணினேன், அம்மாவுக்கும் அதான் எண்ணம். ‘நம்மள விட்டா அவுளுக்கு யாருப்பா இருக்கா?’ அம்மா அடிக்கடி சொல்லுவாள். வீடு கட்டி குடியும் போனாம். 10 பவுனுக்கும், சீர் செனத்திக்கும் போக எப்படியும் ஒரு கைப்பங்கு பணம் இருக்கும். அந்தப் பணத்தில் பிறகு என் கல்யாணத்தைப் பார்த்துகொள்ளலாம் என்றிருந்தேன்.

ஆனால் நடந்தது நேர்மாறாகத்தான். பாலாவுக்கு ஜாதகம் சரியில்லை, அது சரியில்லை, இது சரியில்லையென தட்டிக்கொண்டே போனது. வந்த ஜாதகத்திலும் பாதிக்கு மேல் புலுத்தி ஜாதகமாகத்தானிருந்தது. சரி இரண்டாந்தாரம் எதாவது கிடைக்குமா என்றும் தேடினோம். கொடுமையிலும் கொடுமை பெண்களை பிரத்தியில் ரெண்டாம்தாரத்திற்கு கட்டிக்கொடுப்பதுதான். யாரும் அந்த முறையை விரும்ப மாட்டார்கள். ஒரே ஒரு லாபம் இரண்டாம் தாரத்திற்கு கொடுத்தால் ஜாதகம் பார்க்க தேவையில்லை.  கும்மோணத்தில் ஒருத்தன் கிடைத்தான் நாலு பிள்ளைகளுடன். கேட்டவுடனே முகம் சுளித்தாள். எங்களுக்கும் சரியாகப் படாமல் விட்டுவிட்டோம். ரெண்டு வருடம் ஜாதகங்கள் வருவதும் போவதும், பெண் பார்க்க வருவதும் போவதுமாகத்தானிருந்தது. எதுவும் அமையவில்லை.

அம்மாவுக்கு சுகர் வந்து வாய் கோணிவிட்டது. கைகால்கள் அடிக்கடி மறப்பதும், சோம்பி விழுவதுமாக இருந்தாள். அந்த நேரத்தில்தான் வேறு வழியில்லாமல்தான் எனக்கு கல்யாண ஏற்பாடுகள் நடந்தன. மாமாவிடம் சொல்லி பெண்பார்க்கச் சொன்னார்கள். சொல்லி வைத்தது போல இந்த கவிதா கிடைத்தாள். பாலாவுக்கு மாப்பிள்ளை பார்த்த அனுபவத்தினால், முதலில் பார்த்த பெண்ணே ஒருவனுக்கு மனைவியாக அமைவதென்பது இக்காலகட்டத்தின் ஜென்ம பலனாகத் தெரிந்தது.

கவிதாவுக்கும் எனக்கும் திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின்போது மணமக்களுக்கு பின்புறம் காமாட்சி விளக்கு பிடிக்க கட்டுக் கழுத்தியைத்தான் நிற்க வைப்பார்கள்.நான்தான் பிடிவாதமாக பாலாவை காமாட்சி விளக்கு பிடிக்க வைத்தேன். அவளுக்கு அதில் ரொம்ப சந்தோஷமும் கூட. திருமணம் முடிந்தபின் பாலாவும், கவிதாவும் ரொம்ப அந்நியோன்யமாக இருந்தார்கள். அவர்களுக்குள் நல்ல நட்பும் இருந்தது. பாலா, அண்ணி அண்ணி என்று வாய்நிறைய அழைப்பாள்.

புதிதாக சென்ட் அடிப்பவன் அக்குளை மோந்து மோந்து பார்ப்பது மாதிரிதான் புதிதாக கல்யாணம் பண்ணினவர்கள் பாடு, மனைவிக்கு கணவனும் சரி, கணவனுக்கு மனைவியும் சரி. ஒருவரையொருவர் மோந்துகொண்டே இருப்பர். போலவேதான் நாங்களும். காலை எழுத்ததும் இருவரும் குளித்துவிடுவோம் என்றாலும் கலவி முடிந்தவுடன் பாத்ரூமுக்கு சென்று கைகால்கள் இத்யாதியை கழுவிவிட்டு வருவது எங்கள் பழக்கம். கூடாரத்தில் அம்மாவும் பாலாவும் படுத்திருப்பார்கள். நானும் கவிதாவும் சத்தம் வராமல் பொறுமையாக போய்வருவோம்.

ஒருநாள் பிற்பகலில் முடிந்தது. கூடாரத்தில் பாலா உட்காந்திருந்தாள். கவிதா கூடாரத்தின் வழியே கொல்லைக்குப் போகவும், ‘என்ன அண்ணி பகல்லியேவா?’ என்று சாடையாக கேலி செய்தாள். ரூமில் இருந்த எனக்கும் கேட்டது. கொஞ்சம் சங்கடமும், சங்கோஜமும் இருந்தாலும் இது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனக்கு ஒருவாரம் இரவு, ஒருவாரம் பகலாக வேலை மாறியிருந்தது. நாளாக நாளாக நாங்களிருவரும் வீட்டிலிருந்தாலோ அல்லது பேசிக்கொண்டிருந்தாலோ பாலா பக்கத்து வீட்டுக்குப் போக ஆரம்பித்தாள். என்னிடமும் அவளுக்கு பேச்சு குறைந்தது. கவிதாவுடன் எப்போதும்போல் இருந்தாள். புது உறவினர்கள் வருவதும்போவதும், நாங்கள் ஊர் சுற்றுவதுமென இரண்டு மூன்று மாதங்கள் பாலாவின் திருமணம் பற்றி எதுவும் பேசவில்லை. பாலாவும் அதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தனியாக படுக்க பயந்துகொண்டு எப்போதும் அம்மாவுடன் கூடாரத்தில்தான் படுப்பாள் பாலா. ஆனால் சிலநாட்களாக மளிகை சாமானும், பீரோவும் இருக்கும் ரூமில் படுத்துக் கொள்வதாக அம்மா சொன்னாள். என் ரூமுக்கு அடுத்த ரூம்தான் அது. ஒருநாள் பின்னிரவு நேரத்தில் முனகல் சத்தம் அவள் ரூமிலிருந்து கேட்டது. கவிதாவை பார்த்தேன். நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். நானும் ஜுரத்தில்தான் முனகுகிறாள் போலிருக்கிறதென்று அம்மாவை எழுப்பி பார்க்கச்சொன்னேன். ‘அதுல்லாம் ஒண்ணுல்ல போய் பேசாமப் படுடா’ என்றாள். மறுநாள் மறுநாள் அதே நேரம் அதே முனகல் தொடர்ந்தது.

அம்மாவிடம் எதுவும் கேட்க முடியவில்லை. ஒருநாள் பகலில் வீட்டிலிருந்த நேரத்தில் பாலா கோவிலுக்கு போயிருந்தாள். மனதில் அழுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தை தீர்த்துகொள்வதற்காக நான் அவளுடைய அறைக்குள் நுழைந்தேன். கவுச்சி வாடை அடித்தது. அம்மா அலறி அடித்துக்கொண்டு பின்னாலயே வந்து ‘அந்தண்டப்போ மொதல்ல’ என்று கையைப் பிடித்து தள்ளினாள்.

‘என்னம்மா என்னமா பிரச்சனை?’ எதோ மர்மங்களை உணர்ந்தவனாய் கேட்டேன்.

‘பாவம் பண்ணிட்டம்டா மவனே.. பாவம் பண்ணிட்டம்டா, வயசுக்கு வந்த பொண்ண வச்சிகிட்டு ஒனக்கு கல்யாணம் பண்ணது எவ்ளவு தப்புன்னு ரெண்டுவாரமா அனுபவிக்கிறன்டா.. அந்த பாவிக்குதான் அமையலையே பெத்ததுக்காச்சும் கால்கட்டு போட்டுப் பாப்பம்னு தானே செஞ்சேன்... இப்டி ஆவும்னு நெனச்சிப்பாக்கலையேப்பா...’ அம்மா சத்தம்போட்டு அழமுடியாமல் மழுமாறிக்கொண்டே கதறினாள். ‘உன்னயாச்சும் தனிக்குடித்தனம் அனுப்பிருக்கணும் அதுஞ்செய்யாம உட்டனே.. ஒருத்தி வாழ்க்கயையே நாசம் பண்ணிட்டம்பா... இந்த பாவத்த எங்கபோயி தெத்தப்போறன்னு தெரியலையே......’

என்னால் அம்மாவை சமாதானப்படுத்த முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுதாள். பாலாவுக்கு இப்ப என்ன பிரச்சனை என்பதை அறிவதிலேயே மனசு கூடுதலாக பிரயத்தனப்பட்டு அலைந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாய் அன்று இரவே பின்னிரவில் தெரியாமல் அவள் அறைக் கதவைத் திறக்க முயன்றேன். முடியவில்லை. சாவித் துவாரத்தின் வழியே பார்த்தேன். போர்வைக்குள் முனகிக்கொண்டே சுருண்டு கிடந்தாள். அருகில் ஒரு பாவாடை நிறைய இரத்தக் கறையாக இருந்தது. எனக்கு சூழ்நிலை புரிந்தது. முதன் முதலாக வாய்விட்டு கதறி அழுதேன். அம்மா எழுந்து வந்துவிட்டாள். ‘பாத்தியாடா.... பாத்தியாடா...’ என்று அவளும் கட்டிக்கொண்டு கதறினாள். ஆனாலும் பாலா ரூமில் முனகல் நிற்கவில்லை.

மறுநாளிலிலிருந்து தீவிரமாக வரன் தேட ஆரம்பித்தேன். மறுபடியும் அதே நிலைதான். பாலா சித்தப் பிரமை பிடித்ததுபோல் தானகவே பேசிக் கொள்ளத் தொடங்கினாள். யாருடனும் பேசுவது கிடையாது. கவிதாவுடன் அறவேயில்லை. பக்கத்துவீட்டுக்கு போவதும் நின்றுவிட்டதுபோலும். அந்த அறையிலேயே கிடந்தாள். ஒருநாள் அம்மாவும் நானும் ரெங்கபாஷ்யம் கல்யாணத்திற்கு சென்றிருந்தோம். கவிதா மட்டும் வீட்டிலிருந்தாள். அன்றுதான் அந்த விபரீதமும் நடந்தது. நாங்கள் திரும்பி வரும்போது கவிதா தலையில் அடிபட்டு ரெத்த வெள்ளத்தில் துடித்துகொண்டிருந்தாள். காது ஒருபக்கம் பிய்ந்து குழவிக்கல்லுடன் ஒட்டிக்கொண்டிருந்தது. பாலாவைத் தேடினேன், ஆளைக்காணோம். எனக்கு புரிந்துவிட்டது.

•••••••

நல்ல மழை. திருச்சி பேருந்து நிலையத்தினுள் சுக்கு காபிக்கு கூவி கூவி அழைத்தார்கள். அந்தப் பின்னிரவின் குளுமைக்கும், சாரல் ஊதலுக்கும் அது தேவையாகவும் பட்டது. சுக்கு காபியுடன் ஒரு தண்டவாளத் தூணினோரம் சாய்ந்து நின்றேன். ‘வர்ரீங்களா?’ என்று யாரோ கூப்பிட திரும்பினேன். ஒயர் கூடையுடன் பாலா நின்றிருந்தாள். ஒரு சில பெரிய பேருந்து நிலையங்களில் இதுபோல ஒயர் கூடையுடன் நிற்கும் பெண்களை பார்த்திருக்கிறேன். பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் விலைமாதென்று தெரிந்துவிடும். பாலாவை கொஞ்சம் நிதானித்துதான் அடையாளம் கண்டேன். தூக்கிவாரிப் போட்டது. நெஞ்செல்லாம் அடைத்தது. பாலா என்னை அடையாளம் காணவும் வாய்விட்டு ஓவென்று அழுதபடியே கண்மண் தெரியாமல் ஓடினாள். ஈரோட்டிலிருந்து பேருந்து நிலையத்தின் உள்ளே வந்த பேருந்தொன்று வந்த வேகத்தில் அவள்மீது மோதவும் பின் சக்கரம் அவள் மண்டையில் ஏறியது.

••••••

பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன்.

‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான். பக்கத்தில் கவிதா எதுவும் பேசாமல் நின்றிருந்தாள்.

‘இதான் உங்க அத்த’

‘இம்மா நாளா எங்கருந்துச்சி?’

இம்மா நாளா இருந்துச்சி, இப்பதாம்பா செத்துப்போச்சி’ என்றேன். கவிதா எல்லாம் உணர்ந்தவளாய் வர்ஷனை தூக்கிக்கொண்டு ரூமுக்கு போய்விட்டாள். பாலசரோஜினி படத்தின் முன்பமர்ந்து அழத்தோடங்கினேன். கண்ணீர்தான் வரவில்லை.


நன்றி பண்புடன் இணைய இதழ்


Thursday, June 30, 2011

பம்பரம்



நீலவேணி இறந்து திங்களோடு திங்கள் எட்டு செவ்வாய் ஒன்பது நாட்களாகிறது. கோபுரத்தில் விழுந்த காகத்தின் எச்சம், முளைத்து ஆலமரமும் பின் அதுவே விருட்சமுமானது போல்தான் எங்கள் வாழ்க்கை. பாசி பிடித்த படித்துறையில் கால் வைத்தால் வழுக்கிவிடும், ஆனால் அதையும் மீறி இத்தனைக்காலம் ஓடிவிட்டது. போய் சேர்ந்துவிட்டாள் புண்ணியவதி. புதைத்த கையோடு உடன் பாலும் கையோடு மையோடு கல்லு கருமாதியும் முடிந்தேவிட்டது. ஊதுபத்தி வாடையும், பன்னீரின் வாடையும் கலந்து அவளின் சுவாசம் நிறைந்த இந்த கூடாரத்தை அபகரித்துவிட்டது. கண்ணுக்குத் தெரிந்து இந்த வீடும், தோ அவள் படத்தின் முன்னுள்ள பாக்கு வெட்டியும்தான் அவளுக்கான ஜென்மபலன், எங்களுக்கும். ஒட்டங்காடு போகவேண்டுமென்று தோன்றியது. இத்தனை நாளும் இந்த எண்ணம் இல்லாமலில்லை, இப்போதுபோல் இத்தனை நாளுமில்லை.

‘ரெங்கா? நான் ஒட்டங்காடுவரைக்கும் போவலாம்ணு இருக்கேன்யா...’ ரெங்கா என்னையே பார்த்துகொண்டிருந்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், அவனும் என்ன செய்வான்?

‘ஏம்ப்பா? இப்பபோயி?!!!’

‘இல்லய்யா, எனக்கென்னமோ போலருக்கு, நீலா பொறந்த ஊரு, அவளோட நான் வந்ததுலேர்ந்து இப்பதான் நேரங்கூடி வந்திருக்கு, தடவைக்கு தடவ நாஞ்சொன்னாலும் வேண்டா வேண்டாம்பா.. ஒரு நாலு நாளு இருந்திட்டு வர்ரன்யா’ நிறைய ஆற்றாமையும் கொஞ்சம் இயலாமையும் கலந்த என் பேச்சை அவன் தட்டவில்லை.

‘அதுக்குச்சொல்லல...’ முழுங்கிவிட்டு ‘சரிப்பா, அங்கப்போயி எங்க தங்குவீங்க? யாரிருக்கா? பட்டாமணியாரு இருக்காரா இப்ப? அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு போங்களேன்..’

‘சரிய்யா, பாக்கறேன், ராத்திரி சாப்பாடு முடிச்சிட்டே கெளம்பறேன்’

எல்லாம் தயாராகிவிட்டது. ஒரு கருப்புப் பையும், துணிமணிகளும், பேஸ்ட், பிரஸ் எல்லாமும் சரியாக எடுத்துவைத்திருந்தாள் சரசு, மருமகள். ‘போலாமா?’

‘தோ வந்திட்டேம்பா’ வண்டியில் கொண்டுவந்து பஸ்டாண்டில் விட்டான்.

ஒன்பதே முக்காலுக்கு கோயம்பேட்டில் எடுப்பான் அந்த பொறையார் பஸ். பொறையார் டூ மெட்ராஸ், மெட்ராஸ் டூ பொறையார் பைபாஸ். நெய்வேலி, சீர்காழி, மாயவரம், அப்பறம் நேர்வழியாக பொறையார் செல்லக்கூடியது. மாயவரத்தில் இறங்கி லாட்ஜில் தங்கி, குளித்துவிட்டு லைட்டாக டிபன் முடித்துக்கொண்டு கிளம்பினாலும் போதும். காலையில் ஒன்பதரைக்கோ என்னமோ 23ம் நம்பர் பஸ். செம்பனார்கோவில், ஒட்டங்காடு, திருவிளையாட்டம் வழியாக சங்கரன்பந்தல் போகும் அப்போது. இப்போதும் அந்த பஸ் ஓடுவதாக பட்டாமணியார் சொன்னார். இன்னேரம் அவருக்கும் என்னைப்போலவே வயதாகிருக்கும். தாடி, மீசை, கழுத்தில் ஒற்றை ருத்ராச்சம் இன்னமும் அப்படியே இருப்பாரா?!! வயோதிகம் அவர் உடலையும் வாட்டியிருக்கலாம். அவர் மனைவி செத்தது தெரியும். ஒட்டங்காட்டில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுகளையும் அவர் மூலமேதான் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இப்போது ‘வர்ரேன்’ என்று சொன்னேனே ஒழிய எப்போதென்று சொல்லவில்லை. அவர் கண்ணில் படாமல் ஊரில் உலாவ முடியுமா? முடியும், முடியும்.. பாப்போம்..

மஞ்சளாற்றைத் தாண்டி இடதுபுறம் திரும்பியது பேருந்து. எனக்கு மனதெல்லாம் பக்..பக்..கென்று அடித்துக்கொள்ளத் துவங்கியது. கிட்டத்தட்ட 32 வருடங்கள். இங்கிருந்து இதே வழியேதான் நானும் நீலாவும் சைக்கிளில் செம்பனார்கோவில் போய், பின்பு பேருந்தில் மாயவரம், அப்பறம் மெட்ராஸ். அப்போது இந்தச் சாலை சிகப்பு கப்பியில் நிரம்பியிருக்கும். தொலைவில் இடதுபுறத்தில் சட்ரஸ்ஸும், வலதுபுறத்தில் முனியப்பன் கோவிலும் தெரிந்தது. அப்படியேத்தானிருக்கிறது. எந்த மாற்றமும் தெரியவில்லை. அருகருகே இரண்டு மூன்று குடிசைகள். நாங்கள் ஊரைவிட்டுப்போன அந்தக் கடைசிநேர பரபரப்பிலும் நீலா முனியப்பன் உண்டியலில் எதோ காசுபோட்டுவிட்டு சைக்கிளில் வந்து குந்தினாள். விபூதியும் பூசிக்கொண்டாள், நான் கண்டுகொள்ளவில்லை, இருவரையும். பனைமுட்டு, கோனமுட்டி வாய்க்கால், ஒரு சர்ச், உத்திராபதி கோவில் எல்லாம் செருகச்செருக கடந்துகொண்டேயிருந்தது. உடல் வயிறெல்லாம் ஒரு சந்தோஷ திரவம் சில்லென்றாற்போல் ஊறியது. பேருந்து இறக்கத்தில் இறங்கும்போது அடிவயிற்றில் ஒரு இனம்புரியா கிறக்கம் உண்டாகும், அப்படிதான் இதுவும்.

ஒட்டங்காடு மாரியம்மன் கோவில் ஸ்டாப்பிங்கில் இறங்கினேன். யாருக்கும் என்னைத்தெரிய வாய்ப்பேயில்லை. ஆனால் என் அப்பனை அறிந்தவர்கள் யாரேனுமிருந்தால் எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள். ஆமாம்...என்னிடம் என் அப்பனின் முகம் அப்படியே ஒட்டியுள்ளது. இந்த பத்துநாள் தாடியும், வீசையும் அந்தாள் மூஞ்சை பளிச்சென்று காட்டிக்கொடுத்துவிடும். நெஞ்சின் படபடப்பு அடங்கவில்லை. மாரியம்மன் கோவில் வாசலில் தீக்குழி, கரிகள் அள்ளியபின் தெரியும் கருமை படர்ந்திருந்தது. எத்தனைக் கூட்டம் தீமிதித்திருக்குமோ!!!? ஒட்டங்காடு மாரியம்மன் தீமிதியென்றால் மாமாங்க கூட்டம் கூடும். ஜெ.ஜெ வென்று சுத்துபட்டு 54 கிராம மக்கள் கூடுவார்கள். எதிர் சாரியில் ஒரு பெட்டிக்கடை, வாடகை சைக்கிளும் இரண்டு முன்று கிடந்தது. அருள்ராஜ்தான் முன்பு இந்தக் கடை வைத்திருந்தார். இப்போது யாரென்று தெரியவில்லை. கடையில் யாரோ பொடியன் இருந்தான்.

‘தம்பி, சைக்கிள் வாடகைக்கு வேணும்பா?’

‘சைக்கிளா? நீங்க? எங்க போணூம்?’

‘பெருமாக் கோவிலாண்ட’

‘எப்ப வருவீங்க?’

‘ஒரு மணிநேரத்துக்குள்ள வந்திடுவம்பா’

‘ஐ.டி. கார்ட் வேணும், இருக்கா?’

சட்டையிலிருந்த பழைய லைசன்ஸ் கார்டை நீட்டினேன். வாங்கிக்கொண்டான்.

‘கேரியர் வய்ச்சி வேண்டால்ல’ ஒரு சைக்கிளைக் காட்டினான். எடுத்து ஸ்டேண்ட் தள்ளினேன். ரொம்ப நாளாகிறது, சைக்கிளைத்தொட்டு. மெட்ராஸில் கொஞ்சகாலம் சைக்கிள் ஓட்டியிருந்தாலும் நீண்ட இடைவெளி. ஒரு உந்து உந்தி ஏறினேன். பெடலை மிதிக்கும்போது சுலபமாக என்னையும் தள்ளிக்கொண்டே போவதுமாதிரி தோன்றியது.

நல்லவேளை, பெருமாள் குளத்தங்கரையில் யாருமில்லை. சைக்கிளை நிறுத்திவிட்டு  அரசமரத்தைச் சுற்றி கட்டியிருந்த திண்ணையில் அமர்ந்தேன். கோவிலின் உள்ளே மணிச் சத்தம் கேட்டது. மதியக்கால பூஜையாக இருக்கும்.

இந்த அரச மரத்தடியில் சிறுவனாக இருக்கும்போது சோறு தண்ணியின்றி விளையாடிய காலங்கள் எத்தனை!!! எத்தனை!!! என்னடாயிது வயோதிகத்திலாவது இந்த ஞாபகக் கொடுக்குகள் அற்றுப்போகக்கூடாதா? அதுசரி அப்படியிருந்தால் நாம் ஏன் இங்குவரப்போகிறோம்? கோவிலிலிருந்து யாரோவொருவர் வந்தார். ஆ... அந்த உருவம் பழக்கப்பட்டதுதான். அந்தக்காலத்து ஒற்றைநாடி, இப்போது.. இன்னும் தளர்ந்து... கூன் விழுந்து, அய்யரேதான்!!!!. என்னைப் பார்த்துவிட்டார்.

‘யாருப்பாது? இங்க உட்காந்திண்டிருக்க? புதுசாட்டருக்கு!!’

நெற்றியில் அவர் வைத்திருக்கும் குங்குமக் கீற்றலே போதும் அடையாளங் காண. புருவ மத்தியிலிருந்து உச்சி மண்டை வரை நீளும் அந்தக்கோடு. ‘ஆமாங்க சாமீ, புதுசுதான்.’

‘இஞ்ச யாரப்பாக்கணும்?’

‘சாமீ.. கோதண்டபாணிய ஞாபவமிருக்கா ஒங்களுக்கு?’

‘எந்தப் போதண்டபாணிங்க, தெர்லியே’

காது சரியாக கேட்கவில்லை போலும் ‘போதண்டபாணில்ல, கோதண்டபாணி, கோதண்டபாணி..’ உறக்கச்சொன்னேன். பிறகு ‘கொசவங் குட்டைக்கிட்ட ரெய்லோடு போட்ட வீடு ஞாபவமிருக்கா? 30-35 வருஷத்துக்கு முன்னாடிச் சொல்றேன் நானு. அவரு?’

‘ஆங்... டேய், படவா.. கோதண்டம் மொவங்காரனா??!!.. அதாங் மொவரக்கட்ட காட்டுதே...!!, குண்டுகுண்டுன்னு ஓடியாடிண்டிருந்த அந்தக் கொழந்தைய சைக்கிள்லயே இழுத்துண்டு ஓட்ன பயலாச்சே நீ... தாடி வீசல்லா வச்சிண்டு, கெழவனாட்டங்க கடக்க.. கூம் நாம்பரவால்லடாப்பா...’

‘ஆமாங்க சாமீ’. அவர் இத்தனையும் ஞாபகம் வைத்திருப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்த நாளில் ஊர் ஜனங்களுக்கே இந்த சேதி பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கும், அந்த விசும்பல்தான் இந்த ஐயரும். இந்த மரத்தடியில் பம்பரம் விளையாடும் பொழுதுகளில்தான் நீலா ரோட்டுக்கு அந்தண்டைப் பக்கம் வீட்டிலிருந்து பார்ப்பாள். சின்னப்பிள்ளையிலேயே அப்படிதான். ஊரிலேயே அவள் வீடுதான் மாடிவீடு. சீமத்தண்ணி குடித்த குடும்பமென்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். மாட்டு கொட்டகைக்கூட ஒரு ஒட்டுக் கட்டிடத்தில்தான் இருந்தது. இப்பொழுது அந்த வீடும் கொட்டகையுமிருந்த சுவடுகளேயில்லை.

‘ஏண்டாப்பா நீலா எப்டியிருக்கா?! இன்னும் நீ சாமிச்செலைய ஒடைச்சிண்டுதானிருக்கியா?.... மொகரையே தெரியுதே... தோ பாத்தியா இந்த புள்ளையார? அவரு மூக்க உடைச்சது உன் வேலைதானேடா, இன்னும் ரெண்டு மூணுப் பேரோட தூக்கிப்போட்டியே இந்த கொளத்துல..’

உண்மைதான் இந்தப் பிள்ளையாரின் மூக்கு உடைந்தது என்னால்தான். அப்போதிருந்த வேகம், பகுத்தறிவு சிந்தனைகள், பெரியார், இராவணன் அண்ணன்... இந்த பிள்ளையார்தான் அதற்கு பலி, சாட்சி. அதனால் ஊரில் கெட்டப்பெயர், என்னுடன் சேர்ந்திருந்த மூன்றுபேருக்கும். நீலாவுக்குக்கூட இது பிடிக்கவில்லைதான். ஆனாலும் அதுவொரு பொருட்டில்லாமல் என்னை முழுமனதோடு ஏற்றுக்கொண்டிருந்தாள்.

‘ஆனா ஒண்ணுடாம்பி, எப்ப புள்ளையாரத்தூக்கி கொளத்தண்டைப் போட்டியோ அப்பலேர்ந்து கொளத்துல தண்ணி அத்துப்போச்சு.. என்ன சாபமோப்போ. பூட்டியிருந்ததால இந்தப் பெருமாள் தப்பிச்சிண்டார். இல்லன்னா அப்பருந்ததுக்கு இவரையும் தூக்கிப்போட்டிருப்ப..  ஒண்ணு தெரிஞ்சிக்கோடா, பெருமாளாயிருந்தாயென்ன? பெரியாராயிருந்தாயென்ன? மனுஷாள்மேல மனுஷாளுக்கு நம்பிக்கயத்து போனதாலனேடா இந்த தெய்வங்கள் வந்தது. அதையும் லோகத்லேர்ந்து அழிச்சிண்டா எல்லாஞ் சரியாயிடுமாயென்ன?, சரிவுடு, நீலா எப்டியிருக்கா?’ விட்ட இடத்திற்கே வந்து மீண்டும் அவர் கேட்கும்போது அவர் கண்களில் தெரிந்த ஆச்சர்யம் என்னை நடைமுறைக்கு தள்ளியது.

‘ம்ம்..நல்லாருக்கா சாமீ’ வேறெதையும் சொல்லத்தோன்றாமல் அசட்டையாக பொய் சொன்னேன்.

‘நீ கெடக்கவுடு, அவ நல்லாருக்கணும்டாப்பா, ஓடுபுள்ள ஒடியாருபுள்ளையா நாங் பூஜைக்கு வந்தாப்போதும் ஓடோடி வந்திடுவா, குளத்திலேர்ந்து தண்ணி கொண்டாரன்னே.. லெஷ்மி கடாஷம் அப்டியேருக்கும், இந்தப் பெருமாளுக்கு அவளை புடிக்கலப்போல.. அதான உன்னாண்டை விட்டுட்டான். ம்கூம் சூட்டிக்கலானப் பொண்ணு.., சின்ன வயசிலே பம்பரம் வெளையாண்டே அவள ஜோடி சேத்திண்டியேடா? அடுக்குமா, லோகத்துல எந்த பயலுக்காவது இந்த கொடுப்பினை உண்டா?!!’

நீலாவையே சுற்றி சுற்றி பேசிக்கொண்டிருந்தார், அவள் அம்மா அப்பா செத்தது, போனது, வந்தது, இன்னொரு பட்டாமணியார் கணக்காக ஆகிவிட்டது. அப்பறம் கிளம்பினார். என்னைப் பற்றி பெரிதாக விசாரிக்கக்கூட அவர் விரும்பவில்லை. போய்விட்டார். 

‘இந்த அரச மரத்தடிதான் என் வாழ்க்கை, இங்குதான் என் பொழுதுகள் விடிந்தது, இங்குதான் நீலா கிடைத்தாள், இந்த புனர்ஜென்மம் கிடைத்தது. நாலடி விட்டத்தில் ஒரு வட்டமும் நடுவே முக்கி வெளியேற முடியாத பம்பரங்களுமிருக்கும். வெளியே வந்த பம்பரக்காரர்களின் குறி உள்ளேயிருக்கும் பம்பரங்கள் மீது. அதில் உக்கு வைக்கவே அத்தனைப்பேரின் உக்கிர குணங்களும் ஆசைப்படும். எல்லோருக்கும் பொருந்தும் இந்த நீதி. எல்லாப் பம்பரங்களும் அடிபட்டு வெளியேறினால் பம்பரத்தை இழுப்பு விட்டு கையிறால் இரண்டு சுற்று சுற்றி மேலே தூக்கி இரண்டுகையாலும் பிடிக்கவேண்டும். அப்பீட் என்பார்கள். கடைசியாக எடுப்பவர் பம்பரத்தை உள்ளே வைக்கவேண்டும். இதுதான் பொழுது முச்சூடுமான விளையாட்டு. நான் பம்பரம் விடும் அழகுக்காகவும், அதை குத்துவிடும் ஆக்ரோஷத்திற்காகவும்தான் நீலா என்னை பார்த்துக்கொண்டேயிருப்பாள்.  அவளே பிறிதொரு நாளில் சொன்னாள். எல்லாப்பசங்களும் போனப்பிறகு நான் மட்டுமிருப்பேன். மரத்தடிக்கு வந்து ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ என்பாள். அப்போதெல்லாம் பம்பரக்கயிறு புதுத்தாலிக் கயிறு மொத்தமிருக்கும். பம்பரத்தின் கூர்முனையிலிருந்து படிப்படியாக சுற்றி தலைக்குமேல் ஓங்கி கீழ்நோக்கி ஒரு சொடுக்கு சொடுக்குவேன. தரையில் விழாமல் அதை வலது உள்ளங்கியில் தாங்கி அவள் கையில் விடுவேன். பிஞ்சிக்கைகளில் அந்த ஆணிப் பம்பரம் சுற்றிவர சிவந்துவிடும். ரசித்துக் கொண்டிருப்பாள்.

இந்த பம்பரத்திற்கும் வாழ்க்கைக்கும் எவ்வளவு ஒற்றுமை, தொடர்பு. சாட்டையால் சுற்றிவிடுவது எவனோ. சுற்றுவது நாம், தெம்பு குறைந்தபின் ஆட்டம் காலி படுதா காலி. முடியாமல் கஷ்ட வட்டத்தில் மாட்டிக்கொண்டால் உக்கு விழுவதுபோல் சில அடிகள், மரண அடிகள். இதை நினைக்க நினைக்க எனக்கு பம்பரம் விடவேண்டும் என்ற ஆசை வந்தது.

சைக்கிளை எடுத்துக்கொண்டு வேங்குவேங்கென்று அந்தக் கடைக்குப்போனேன். ‘தம்பி, பம்பரம் இருக்கா?’ மூச்சி இறைத்தது.

‘இருக்குங்க’ முழுக் கொட்டைப்பாக்கு அளவில் ஒன்றைக் கொடுத்தான். ப்ளாஸ்டிக் பம்பரம். தமிழ்நாட்டில் பம்பரத் தட்டுப்பாட்டுக்கு விஜயகாந்தும், வைகோவும் காரணகர்த்தாக்கள் போலிருக்கிறது. ச்ச்சை..

‘கயிறு கொடப்பா?’ சிகப்புக்கலரில் ஒரு தாம்புக் கயிறுப்போல் கொடுத்தான். மொத்தம் 8 ரூபாய்.

மறுபடியும் அரச மரத்தடிக்கு வந்தேன். பெருமாள் கோவில் உள்ளேயிருந்து ஊதுபத்தி மணம் வெளிவரைக்கும் அடித்தது. அரசமர இலைகள் சலசலவென்று அடித்துக் கொண்டிருந்தன. சைக்கிளை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். யாருமில்லை. பம்பரத்தில் கயிற்றைச் சுற்றினேன். வழுக்கி வழுக்கி வந்தது. பிறகு பிடித்துகொண்டது. தரையில் ஓங்கி குத்துவிட்டேன், டங்கென்று தரையில் தட்டி குளத்துப் படிக்கட்டில் விழுந்தது. சுற்றவில்லை. மீண்டும் எடுத்து கொஞ்சம் பொறுமையாகக் குத்தினேன். சுற்றியது. ஒரு பின்னிரவு நேரத்தில் மொட்டைமாடியை அலங்கரிக்கும் காற்று மனதைப் பரவசப்படுத்தும், அதுபோலிருந்தது. கீழே குனிந்து புறங்கை தரையில் பட ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் ஒரு விரிசல் உண்டாக்கி பம்பரத்தில் ஆணிக்கு நேராக நீட்டிச் சொருகினேன். பம்பரம் சுற்றியபடியே கையில் ஏறியது.

என்னைக் கேட்டால் பம்பரம் கையில் சுற்றும் அந்த விநாடிகளின் குருகுருப்பையும் கூச்சத்தையும் ஏந்தி ரசிப்பது இந்த வயோதிகத்தின் புண்ணியம் என்பேன். நாற்பது வருடங்கள் இருக்கலாம். இதே மரம், இதே இடம், கலகலவென்று எத்தனைப்பேர் இந்தப் பம்பரம் விளையாட. ஆனால் இப்போது? மல்லாந்துப் படுத்து  மார்பில் துப்பிக்கொள்வதுபோல் நகர வாழ்க்கை, கிராமத்துப் பிள்ளைகளுக்கும் இதேதான் கதி. நெஞ்செங்கும் நிம்மதியால் நிறைந்தது. கொஞ்சநேரம் மரத்தடி திண்ணையில் படுத்து கண்களை மூடினேன். ‘எனக்கு கையில பம்பரம் விடுங்களேன்’ நீலா கை நீட்டினாள்..  


Tuesday, May 31, 2011

மீசை


ரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன்கோவில் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு!! இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு  கொடுக்கவில்லை.

“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க?” எனக்கு முந்திக்கொண்டான்.

அவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு!!!. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.?”

“ம்ம்ம் நல்லாருக்கன்டா” என்றான்.

சிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க? பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்?”

“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன?”

“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா? கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது.

“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச..? மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா? அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான். 

மாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன். 

“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது.? அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார்.

ஆமாம் எனக்கு என்ன குறைச்சல்! என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குகூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தாதான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சிகோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன். 

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்!!!  அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது.

இங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகடிலிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார்.  கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார்.

எப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார்.

ரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந்த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன்.

இப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.

இப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன்.

“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.

“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன்.

“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா? நீய் செய்யி” என்றான்.

“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் கொமட்டிலேயே குத்தினான், அந்த முக்காமீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.


••

Friday, February 25, 2011

நடுநிசி நாய்கள், பயணம் அல்லது இரண்டுமில்லை

‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று அம்மா சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது.

•••••••••

வழக்கமாக 8 மணிக்கே எல்லாவேலையும் முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிடுவேன். இன்று கொஞ்சம் நேரமானது. அடுத்த பஸ் பத்தரை மணிக்குத்தான். ‘டி.எல்’லோ, ‘எம்.ஓ.எச்’சோதான் வரும். மஞ்ச வாய்க்கால் ஸ்டாப்பிங் கிடையாது. ஆக சாதாரணமாக எல்லா பஸ்ஸூம் அங்கே நிற்காது. ராத்திரி நேரமென்றால் அபரிதமாக கருணையடிப்படையில் நிப்பாட்டுவார்கள். எனது சைக்கிளை அங்கே பட்டாபி நைனா வீட்டில்தான் போட்டிருந்தேன். மஞ்ச வாய்க்கால் ஸ்டாப்பிங்கில் இறங்கி உள்ளே கீழ்மாத்தூருக்கு செல்ல ஆறேழு மைல். அங்கேதான் எனது வீடு. கொஞ்சம் பொழுது சாய்ந்தாலே இந்த இடைப்பட்ட தூரத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துவிடும். மீறி இரவு நேரத்தில் செல்பவர்கள் பெரும்பாலும் செம்பனார்கோயில் கடைத்தெருக்கு சென்று மளிகைச்சாமானும், காய்கறிகளும் வாங்கிவிட்டு திரும்பச் செல்பவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் மண்டியில் நெல்லை போட்டுவிட்டு (மாட்டு)வண்டியில் திரும்புபவர்களாக இருப்பார்கள். தினமும் எனக்கு இப்படித்தான்  வழித்துணை கிடைக்கும். ஆனால்...

பஸ்ஸை விட்டு இறங்கியதும் பட்டாபி நைனா வீட்டு கதவை தட்டவேண்டியதாயிற்று. மணி பத்தே முக்கால், படுத்திருப்பார்கள். கரண்ட் வேறு இல்லை. டார்ச் லைட்டை அடித்துகொண்டே கேட்டார்.

“யாரு??”

“பாலாஜி”

கயத்துக்கட்டிலில் சமுக்காலத்தை விரித்து தலையணை வைத்துக்கொண்டு வராந்தா கேட் அருகே தூங்குவதுதான் நைனாவின் பழக்கம். இன்றும் அப்படித்தான். தட்டியவுடன் எழுந்துவிட்டார். “வாய்யா.. என்னா இவ்ளோ நேரம்??”

“கட பூட்ட லேட்டாயிடுச்சு நைனா” நைனா என்றால் அப்பா என்று பொருள்படும். இங்கே எங்கள் பகுதியில் நைனா என்றழைக்கப்படுபவர்கள் அப்பாவாகத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பிரியம் மற்றும் அன்போ, பாசமோ அல்லது பெரும்பாலானோர் அப்படி அழைத்தால்.... அதுபோதும்.

“சேரி.. இருட்டாவேற கெடக்கே, தனியாவாப்போற, இங்கயே படுத்திட்டு காலலேக்கி போயேன்.”

“இல்ல நாங்கிளம்பணும். காலைல மாமா கல்யாணமிருக்கு, நேரமா போனூம்”

“சேரி பாத்துப்போ.. சைக்கிள்ல லைட்டு இருக்குல்ல.”

“இல்ல”

“பின்ன.. பேட்ரி லைட்டுன்னா வேணுமா? ரொம்ப இருட்டால்லருக்கு”

“வாண்டா, நாங் போயிக்கிறேன்.”

“பாத்துப்போப்பா” என்று விடைகொடுத்த நைனாவிடம் என்மீதான அக்கரை கொஞ்சம் தெரிந்தது.

கிளம்பினேன். கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் நான் கடையைப்பூட்டும்போதே கரண்ட் இல்லை. இங்கிருந்து 20, 25 கி.மீ. சுற்றளவுக்கு பேச்சாவடி மின்சார சரகம்தான். அதனால் எங்குமே கரண்ட் இருக்காது. பாவம் தமிழகத்தை ஆள்பவர்கள், என்னதான் செய்வார்கள் லச்சத்து சொச்சம் கடனை வைத்துக்கொண்டு, கஷ்ட ஜீவனமல்லவா!! எனது முடிவு தப்போவென்று தோன்றியது. 11 மணி. ஆள் அரவமற்ற நேரம், ஒரு மினிபஸ் செல்லக்கூடிய அளவிற்கான சிகப்பு கப்பி சாலைதான். ஆனால் மினி பஸ் இந்த மார்க்கத்தில் செல்வதில்லை. வசூல் சரியாக இல்லையென்பது காரணமாக இருக்கலாம். பின்ன? ஒன்றிரண்டுவாட்டித் தவிர மற்ற நேரமெல்லாம் காத்துவாங்கினால் யார்தான் இந்த ஊருக்கு பஸ் விடுவார்கள். வழுக்கைத் தலையிலிருக்கும் ஒன்றிரண்டு முடிகளைப்போல ஆங்காங்கே தெரியும் தூங்குமூஞ்சி மரங்களும் பனைமரமும். கூடவே அந்த ஒற்றைப் பனைமரமும். ஒற்றைப்பனைமரம்.. கொஞ்சம் வியர்க்கும்போலிருந்தது. வேகமாக சைக்கிள் பெடலை அழுத்தத்தொடங்கினேன்.

ஆங்... இப்போதுதான் அம்மா சொல்லும் சிலக்கதைகள் எனது ஞாபகத்திற்கு வந்தது. அம்மாவுக்கு ஒருமாதிரியான பயங்காட்டும் கதைகள் அத்துப்படி. அதுவும் இந்த பேய் கதையென்றால் என் இரவுத்தூக்கத்தை விழிபிதுங்க வைக்குமளவுக்கு தத்ரூபமாகச் சொல்லுவாள், உண்மைப்போலவே. சொல்லமுடியாது, உண்மையாகவும் இருக்கலாம். “ஒத்தப்பன மரத்துக்கிட்ட எங்க சின்ன நைனா மாட்டு வண்டியில வரும்போது திடீர்னு மாடுல்லாம் மெரண்டுபோயி மூச்சுபோச்சில்லாம நிக்குமாம். மாட்டுவண்டிய வுட்டு ஆளு எறங்கினா அவ்ளோத்தான். ஆள அடிச்சிடும். அப்பறம் ஒருவாரத்துக்கு காய்ச்சல் வந்து படுத்தப் படுக்கையாப்போட்டிடும். கொஞ்சநேரம் அப்டியே வண்டியிலேயே உட்காந்து கொலதெய்வத்த வேண்டினாப்போதும், மெரண்ட மாடு சரியாயி கௌம்பிடும்” இதுதான் அம்மா சொல்லும் நான்கைந்து கதைகளின் அடிநாதமாக இருக்கும். பெரும்பாலும் இப்படித்தான் சொல்லுவாள். மேலும் “மஞ்ச வாய்க்காங்கரையோட ராத்திரில வரும்போது  மல்லிப்பூ வாசன அடிக்கும். கையில இரும்பு, கரித்துண்டோட வரணும், சாமிய வேண்டிட்டே வரணும்.. இல்லன்னா மோகினிப் புடிச்சிடும். போனவாரம் ரெங்கபாஷ்யத்து மொவங்கூட மாட்டி ஒருவாரம் எந்திரிக்க முடியாம கெடந்தான். அப்பறம் இன்னொன்று “அந்த பனைமரத்துப்பக்கம் வானொசர (வான் உயர) ஆம்பிளை வெள்ள வேட்டி சட்டையோட நெடுநெடுன்னு அரிவாள் வைச்சிகிட்டு நின்று பார்த்ததாகவும் ஒரு கதை அம்மாவிடம் இருந்தது. உசரமென்றால் அந்தப் பனைமரத்து அளவுக்காம். இதையெல்லாம் கேட்கும் முன்னர்கூட நான் தனியாக அந்த வழிகளில் போனதுமில்லை, வந்ததுல்லை.

சாதாரணமாகவே நானொரு பயந்தாங்கொள்ளி. ராத்திரியில் ஒண்ணுக்கு இருக்க போகணும் என்றாலே அம்மாவை எந்நேரமாகயிருந்தாலும் எழுப்பி அழைத்துச்செல்வேன். ஓரளவுக்கு மீசையரும்புகிற வயசு வந்தப்பிறகு இதைக் குறைத்துக்கொண்டேன். ஆனால் தெருவில் ஏதேனும் சாவு என்றால் அப்பாவை எழுப்பிக்கொண்டு போவேன். இப்போது ஒருவழியாக சட்ராஸை கடந்துவிட்டேன். இருள் சாலையை முழுதும் அடைத்திருந்தது. அமாவாசைக் கழித்த மூன்றாம்நாள். சிகப்பு கப்பி சாலையென்பதால் வழி அனுமானிக்ககூடிய அளவுக்கு தெரிந்தது. சைக்கிளை வேகமாக மிதித்தேன். ஒற்றைப்பனை மரமும் ஒரு திருப்பமும்தான் பாக்கி. அதை கடந்துவிட்டால் அடுத்தது ராமானுஜம் நைனா வீடு வந்துவிடும்.

திடீரென்று சைக்கிள் ஒரு குழியில் இறங்கி ஏறியது. கிட்டத்தட்ட ஃபோர்க் உடைந்துவிடக்கூடிய நிலைமை. நல்லவேளை அதுபோல் ஆகவில்லை. நாய்கள் அந்த அடர்ந்த வயல்வெளில் எங்கோ ஊலையிட்டது, நரிகள்போல். இதுபோல் நாய்கள் ஊலையிட்டால் அது கெட்டதுக்கான அறிகுறி என்பார்கள். மறுநாளே பலித்துவிடும். அய்யோ.. நான், என்.. ஆ... நான் பயந்த்துபோலவே......ம்... அரைபர்லாங் தூரம், அந்த ஒத்தைப்பனைமரத்து அருகில் அல்லது அந்த திருப்பத்தருகில், முன்பு அம்மா சொன்னாளே அதேபோன்றதொரு வானொசர உருவம். வெள்ளைவேட்டி சட்டை.. அதேதான்.. ஆனால் கையில் ஒன்றுமில்லை. விதுக்கென்று ஆகி உடலில் சட்டை ஒட்டிக்கொண்டது. சிலிப்பர் செப்பல் வியர்வையில் நனைந்துவிட்டது. அவ்வளவு வியர்வை. கைகாலெல்லாம் வெடவெடக்கத்தொடங்கியது. என் கையிலிருந்த ஒரே இரும்பு ஆயுதம் என் சைக்கிள் மட்டும்தான். “இரும்புச் சாமான் கைலருந்தா அது நம்மள நெருங்காது” என்று அம்மாதான் சொல்லியிருக்கிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை.

பாதி வந்தப்பிறகு திரும்பிப்போக முடியாது. செல்போனை எடுத்து டார்ச்சை ஆன் செய்தேன். நடக்கும் பாதைக்கு வெளிச்சம் காட்டியது. யாரையாச்சும் போன் பண்ணி கூப்பிடலாமென்றால் டவரும் இல்லை. கைகள் நடுங்கியதை நன்றாக உணர்ந்தேன். எது நடந்தாலும் நடக்கட்டுமென்ற வரட்டு தைரியமிருந்தது, கூடவே சைக்கிளும். விருவிருவென்று சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்தே சென்றேன். ஆனால் ஒன்று உறுதியாகத்தெரிந்தது அந்த உருவத்தின் உயரம் 20, 25 அடியிருக்கலாம். அம்மா சொல்வதுபோல் பனைமர உயரமெல்லாம் கிடையாது. தலையில் முடியில்லாததுபோல்தான் தெரிந்தது. இரவு நேரமென்பதால் முகமும்கூட இருளாகத்தான் தெரிந்தது. மீசையும் தெரியவில்லை. வேட்டி காற்றில் ஆடுவதுபோலவும் தெரிந்தது.  என் வியர்வை அடங்வில்லை. தன்னிச்சையாகவே நடந்துகொண்டிருந்தேன். பெத்தாரண்ண காப்பாத்து, பெத்தாரண்ண காப்பாத்து.. என்று குலதெய்வத்தை வேண்டி முனுமுனுத்துக் கொண்டேயிருந்தது வாய். உள்ளங்கைகூட வியர்த்திருந்தது. இதோ நெருங்கிவிட்டேன்.

இன்னும் 30 அடித்தூரம், 20 அடித்தூ.....10 அடி.... அடக்கடவுளே... ச்ச்ச்சீ...தூ...தூ... செல்போன் டார்ச் லைட்டை அடித்து அது அதுதானா என்று உறுதிசெய்துகொண்டேன். நெஞ்சில் படபடப்பு மட்டும் அடங்கவில்லை. நாம் பார்த்தது உண்மையில் இதுதானா? ஆமாம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். அதன் காலடிக்கு கீழே இப்படித்தான் இருந்தது “இலவச தொலைக்காட்சி வழங்க வருகைத்தரும் எங்கள் ஏழைகளின் ஒளியே, வருக!! வருக!! இடம்: கீழ்மாத்தூர் பஞ்சாயத்து அலுவலகம்...” மின்துறை அமைச்சருக்கான வரவேற்பு பதாகை. நெஞ்சின் படபடப்பு கொஞ்சம்போல் ஓய்ந்தது. கால்தான் ஓய்ச்சலாக இருந்தது. சைக்கிளை மிதிக்கமுடியாமல் மிதித்துச்சென்றேன். இந்த அம்மாவேறு வந்ததும் வராததுமாக “ஏன் இவ்ளோ லேட்டு, போன் பண்ணி சொல்லவேண்டியதுதான..”.... ஆச்சா ஊச்சாவென்று கத்தினாள்....” எனக்கோ அடக்கமுடியாத கோபமும், படபடப்பும். எல்லாம்சேர்த்து அம்மாவைப் பொறிந்து தள்ளிவிட்டேன், நடந்ததையும் சொல்லி.

அதற்குதான் அம்மா “‘ஏந் தை..தைன்னு குதிக்கிற.. இப்ப என்ன நடந்திட்டு, மூணுவாட்டி த்தூ..த்தூன்னு துப்பு எல்லாஞ்சரியாயிடும்’ என்று சொன்னாள். எனக்கு நன்றாகவே காறிக் காறித் துப்பலாம் போலிருந்தது.

.

Friday, October 29, 2010

நந்தி...

பிரதோஷந்தோரும் மௌன விரதமிருக்கும் பழக்கம் எனக்குண்டு. ஏன் ஆரம்பித்தேனென்று தெரியவில்லை. பெரும்பாலான ஆண்கள் இவ்விரதமிருப்பதில்லை. ஆனால் நானிருக்கிறேன். இந்தநாளில்தான் ஒருவேளை உணவுக்கும், அவ்வப்போதைய தொண்டை நனைத்தலுக்கும் இந்த உதடுகளை புணரவிடுதல் போதுமானதாக இருக்கிறது. மேலும் ஒரு தனி அறை முற்றிலுமொரு மயான அமைதியை தரவல்லதாதலின் இவையெல்லாவற்றிற்கும் உகந்தது. இன்று மாலை ஈஸ்வரன் கோவில் செல்லும்வரை இதுதான் என்னுலகம். இந்த சாலை பார்த்தமாதிரியான சன்னலும் வடக்கிலிருந்து வீசும் மெல்லிய கிழிசல் காற்றும் அனுபவிக்க அனுபவிக்க சுகந்தம். மனிதிலிருக்கும் தாண்டவ அமைதி இந்த நாளை தவிர்த்து மற்றைய நாட்களில் கிடைப்பதில்லை என்பது என் அனுபவ உண்மை.

இந்த தனியறையில் வியாபித்திருக்கும் அத்தனைப்பொருட்களுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது. அதையுணரக்கூட எனக்கிந்தப் பொழுது தேவைப்படுகிறது. இந்த நாற்காலி, மேசை, அரிக்கன் விளக்கு, சுவர் மூலையிலிருக்கும் அடுக்குப்பானைகள், மேசைமீது அடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள், அந்த எம்ப்ராய்டரிங் திரைச்சீலைகள் இப்படியாவும் இந்தவொருநாளில்தான் அழகாய் தெரிகிறது, மற்ற நாட்களில் எனையாட்கொள்ளும் இயந்திரத்தன்மை இவையனைத்தையும் கண்மூடி மறைத்துவிடுகிறது. இந்த நாளும், நான் பார்க்கும் இந்த சாலையும் அதில் பயணிக்கும் மனிதர்களும் என் பெருஞ்சுமையென்பது யாருக்குத்தெரியும்?. ஏனோ தெரியவில்லை, இதையனைத்தையும் நானே விரும்பி ஏற்கிறேன். ஒரு நாள் முழுதும் மலரும் அனைத்துப்பூக்களும் பூஜைக்குரியதாகவோ அல்லது ரசிப்பதற்குகந்ததாகவோவா இருந்துவிடுகிறது? எதோவொன்றேனும் குறைபட்டுதான் விடுகிறது. அதுபோலவே நான்பிறந்த அன்றையநாளில் என்கால்கள் விண்ணப்பட்டிருந்தது. ஈஸ்வரன்கோவில் நந்தியினுருவம் உங்கள் மனதிலிருக்கும். அதுபோல்தான் எனக்கும் எப்போதும் அமர்ந்தநிலை. அதற்காக எந்த ஈஸ்வரன் என்னெதிரே அமர்ந்திருக்கிறான் அல்லது அனுதினம் விஷேசப்படுகிறானென்று தெரியவில்லை. அதன் கால்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அந்தப்பெரிய நந்தியின் கால்கள் எவ்வளவு சிறிதாக சோம்பிக்கிடக்கும், அதேதான். இப்போது என்னை உருவகப்படுத்துங்கள்.

மனைவி மக்கள், குடும்பச்சுமை, உறவுகள், நல்லதுகெட்டது, நாள் கிழமை இப்படியிவை எதுவுக்கும் லாயக்கற்றவனென்பது எனக்கு கொடுக்கப்பட்ட வரம். கொஞ்சம் வசதியானதுதான். சென்றமாதம் நான்சென்ற வினோத்தின் திருமணம் நீங்கலாக வேறெதிலும் நான் பங்கேற்பதில்லை. அவன் என் பால்ய சிநேகிதன். அவனல்லால் வேறொருவன் என்னை வெகுவாக கவர்ந்ததில்லை. ஒவ்வொருநாளும் என்னை மொய்க்கும் பரிதாபக்கண்களுக்கு மத்தியில் அவன் என்னை உணர்ந்தவன் என்றால் மிகையில்லை. எவ்வளவு ஆழமான நட்பு அவனுடையது. நினைத்துப்பார்க்கையில் இப்போதும் இனித்துக்கொண்டேயிருக்கிறான். பதினெட்டு வருட நட்பில் இடையில் மனக்கசப்பில் ஒருவருடம் பேசாமல் இருந்திருக்கிறோம். என்தவறுதான் அது. அதுவொரு ஆழ்ந்த வலி, இருவருக்குமே.

அன்றைய நாளில் எனக்கு அறிமுகமானவன்தான் சிவா. அவன்மூலம்தான் இந்த அலுவலகப்பணி எனக்கு கிடைத்தது. இதுவும்கூட ஒரு ஆத்மார்த்தமான நட்பு. ஆயினும் என்னுள் எழும் பொறாமைக் குணம் அனைத்தையும் கெடுத்துவிடுமோ என்ற அச்சம்மட்டும் இருந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொருநாளும் அவன் அலுவலகத்திற்கு வரும்விதம், நடையுடைகள், பாவனைகள். வெகுவாக இம்சிக்கிறது. கட்டுடலும் செந்தோல் கவர்ச்சியுமிக்க ஒருத்தியை கண்கொட்டும் பார்வையில் அள்ளித்தின்னும் உணர்வு எந்தவொரு பருவமெய்தவனுக்கும் இருக்கத்தான் செய்யும். அதுபோலவே அவனின் தோற்றமும் நடையுடையும் என்கண்களை கொத்திக்கொள்கிறது. என்ன செய்ய? என் ஊனம் பிச்சிப்பிடுங்கும் கழுகாக சாகடிக்கிறது. நான் வணங்கும் தெய்வம் எனையேன் இப்படி சபித்தது, சபிக்கிறது என்று எண்ணும்போதெல்லாம் இவ்வுடலின் மீதுரும் வெறுப்பு அளவில்லாதது.

நான் மாற்றுத்திறனாளியாம், சிறகற்றப் பறவைக்கு இச்சமூகம் காட்டும் அற்ப அக்கறை. எந்த கொம்பனுக்கு தெரியும் என் அன்றாட அவஸ்தைகளும், வேதனைகளும் இன்னபிறவும். பார்ப்பதற்கு நானொரு சக மனிதன்தான். ஆனால்..ஆனால்...இந்த கால்...ச்சை..ச்சை.. சிவா மீதான நட்பு எப்போதும்போலிருப்பினும் அவன் மீதான வெறி என்னுள் தலைதூக்கத்தொடங்குகிறது. அதிலும் அவன் கரும்பச்சை பேண்ட், அதற்கு தகுந்தார்ப்போல் அணியும் வெளிர்நிற சட்டையும் நடக்கும்போது இடது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டுச் செல்வதும்.... என்ன சொல்ல? அவன் கோப்புகளைச் சுமந்து எனைகடக்கும்போதும், அலுவலகத்தில் இடையிடையே நடந்துசெல்லும்போதும் என்னையறியாமல் அவனை சபிக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள். என் மீது எனக்கே பரிதாபம் உண்டாகும் அல்லது உண்டாக்கும் கணங்கள் யாவிலும் என் சாபம் எவரையோ நோக்கி பயணிக்கிறது.

இந்த நேரத்தில் என்னைப்பற்றி என் நாட்குறிப்பேட்டில் எழுதிய வரிகள் ஒன்று ஞாபகம் வருகிறது. ‘என் வாழ்க்கை இருட்டறையில் எழுதப்பெற்றதொரு தொடர்கதை‘ எவ்வளவு உண்மை. இதையேன் எழுதினேன் தெரியவில்லை. எதோவொரு அற்பாசையும் அதன்மூலம் பெற்ற வெறுமையும் இதை எழுத காரணமாயிருந்திருக்கக்கூடும். இப்போது ஞாபகம் வருகிறது. ஒரு நாள் நான் எழ முயன்றேன். என் உள்ளங்கால்களை இப்புவியிலழுத்தி நிற்க முயன்றேன். எவர்எவர் மீதானோ ஈர்ப்போ வெறியோ எனையிப்படி செய்யத்தூண்டியது. ப்ச்..இது தோல்விதான் என்பது தெரிந்தே செய்யப்பட்ட முயற்சி. எல்லோருக்கும் ஒரு கனவிருக்கும். எனக்கும் இருக்கிறது இவ்வாழ்நாளில் ஒருநிமிடமேனும் சிவாவைப்போல வாழ்ந்து இல்லையில்லை நடந்துவிடவேண்டும். ஸ்டைலாக இந்தக் கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு கோப்புகளை அலுவலக அறையெங்கும் எடுத்துச்செல்லவேண்டும். அப்படியே இறந்துவிடலாம். என் பிறவிப்பயன் முழுமைபெறும். இப்போது ஈஸ்வரன்கோவில் செல்கிறேன். வழக்கம்போல நந்திதான் இன்றைய முக்கியஸ்தர். எனக்கு அதன் கால் மட்டுமே.


.

Tuesday, September 28, 2010

விட்டு விடுதலையாகி...

அந்த காலைப்பொழுதும் எப்போதும்போல் விடிந்திருக்கவில்லையெனலாம். முற்றத்தில் முகம் கழுவ வந்தபொழுது அந்த கல்லுக்குருவி கண்ணில் பட்டது. ராஜவேலுவை அழைத்துக்காட்டினேன். எழத்திராணியற்ற அதனை கைகளுக்குள் அடக்கிக்கொண்டான். வேண்டாம் விட்டுவிடலாம் என்றேன். அவன் கேட்கவில்லை. வளத்தலாம் என்றான். எனக்கு அவன் செயல் பிடிக்கவில்லை. கூண்டுக்குள் ஒரு உயிரை அடைப்பதும் நெஞ்சிக்குழியில் துடிக்கும் இதயக்குமிழை வெளியே எடுப்பதும் ஒன்றாகவே தெரிந்ததெனக்கு. தரிகெட்ட சுதந்திரமே அதன் பிறப்புரிமை.

வீட்டிற்குள்ளிருந்த வெங்காய கூடையை எடுத்து உத்திரத்தில் சணல் கயிறைக்கட்டி தொங்கவிட்டான். பானைபோன்ற கூடையின் இடையே ஒரு வேப்பங்குச்சியை சொருகினான். குருவியினை உள்ளேவிட்டு பூஸ்ட் குடுவை மூடியில் நெற்மணிகளை கொட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான். இவனுக்கு தம்பினானது என் துரதிஷ்டம் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு.




கைக்கு எட்டாத கூண்டைவிட்டு அந்த உயிருக்கு விமோசனம் அளிக்க நான் அவ்வளவு உயரம் வளரவில்லை. ஒரு நாற்காலியைப்போட்டு அந்தப்பணியைச்செய்ய ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த வெங்கடாஜலபதியும் தைரியத்தைக்கொடுத்து அருள்பாலிக்கவில்லை. பாவம் என்று கொஞ்சநேரம் வெறித்து பார்த்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினேன்.

அம்மா அப்பாவும் கண்டுகொள்ளவில்லை. அவன்தான் செல்லம். அன்றைய மாலை, அடுத்தநாள் காலை அடுத்து... அடுத்து... மூன்றுநாளும் அந்தக்குருவிக்கு நெற்மணிகளும், சோற்றுப்பருக்கைகளும், எதிர்வீட்டு வாசற்படலில் பழுத்திருந்த கோவைப்பழமும் உணவாகப் படைக்கப்பட்டன. என் விருப்பமான இங்க் பழத்தைமட்டும் அவன் கொடுக்கவில்லை. அண்ணனாம் அண்ணன், மனதிற்குள் திட்டித்தீர்த்தேன். ஆனாலும் அந்தக்குருவி எதையும் திரும்பிப்பார்த்ததாய் தெரியவில்லை. கூண்டிற்குள் எல்லாமே காய்ந்து கிடந்தது. அதில் எனக்கு திருப்திதான்.

நான்காம்நாள். அந்த காலைப்பொழுதும் எப்போதும்போல் விடிந்திருக்கவில்லையெனலாம். முற்றத்தில் முகம் கழுவ வந்தபொழுது அந்த கல்லுக்குருவி கண்ணில் பட்டது. நடுவில் சொருகியிருந்த குச்சியில் தலைகீழாக தொங்கி சாகசம் காட்டியது. ராஜவேலுவிடம் காட்டினேன். திறந்து பார்த்தான். விரைத்துப்போய் விழுந்தது அது. அண்ணன் அழத்தொடங்கினான். வெங்கடாஜலபதி சிரித்துக்கொண்டிருந்தார்.



Thursday, August 5, 2010

கனவுகள் மேயும் காடு...


மௌனத்து சீற்றங்கள் உறையத்தொடங்குகிறது இரவெங்கும். அலைகள் கொணரும் நுரையும், நுரையைக்கொள்ளும் கடலும் சொல்லும் சங்கதிகள், கனவுகளின் வழியொழுக அடைத்துக்கொள்கின்றன சிந்தைகள் யாவும். பெருவெளிப் புன்னைமரம் உச்சியில் கொண்ட முற்கூட்டுடன் தனிமையில் அமர காத்திருக்கிறது காக்கையைப்போலவே மனமும். அரவங்களோ, அசைவுகளோ தெரிந்திடின் சீறிட்டு கரையத்தான் செய்கிறது அதற்கும். ஏனிந்த இரவு, வெறுமை, தனிமை, தாகம், மனதுடனான தர்க்கம், சிந்தையற்ற நிலை, உழைப்பதற்ற ஓய்வு? இவைகொண்டு எதோவொன்றை கருகிய இருளோ, மூடிய இமைக்குள் இருட்டினில் தவிக்கும் விழிகளோ சொல்லிக்கொண்டே விழுங்கிப்பார்க்கிறது. சீரனமின்றி தவித்தும், சிரமேற்று தொங்கியும் உதிராத தணல் உடலெங்கும்.

சாளரமற்ற அறையில் புழுக்கத்துடன் சேர்த்து ஆயிரம், லட்சம், கோடியென கொடிகொடியாய் பரந்துபரந்து விரிந்துகொண்டேயிருக்கின்றன புள்ளிகளனைத்தும். சாம்பலான வார்த்தைகளை சேர்த்து குழைத்து குழைந்து நாவினடி ஊறும் கோழை எச்சில்கள்யாவும் படுத்தப்படியே உமிழ்ந்து உடலெங்கும் எச்சங்களாய் எச்சில்கள். அனிச்சைக் கட்டளைகள் பிறந்து கரங்களிரண்டும் துடைத்து துவைத்து மேலெங்கும் ஈரக்கீரல்கள். சற்றைக்கொருதரம் சுவர்க்கோழிகளின் கீச்சிடும் குரல் குத்திக்குத்தி கிழிக்கிறது செவியின் உட்சுவற்றை. எதோவொரு நாதம் கிணற்றிற்க்குள்ளிருந்து அம்மா அம்மாயென்பதைப்போல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இரண்டுமுறை திடுக்கிடுகிறது கண்கள். கால்களின் ஆடுசதைகளில் படிந்த கோரைப்பாயின் வரிகளைத் தடவத்தடவ சுகமேற்கிறது. அனூடே மயிர்கால்களும் சிலிர்த்துக்கொள்கிறது.

உடைந்த மதிற்சுவரினடி மடிந்த எறுப்புச்சாரிகளில் ஒவ்வொன்று கைகால்களிழந்து முக்கி முனகி தப்பிக்கப் பார்ப்பதாய் மனமும் நினைவுகளும் இந்த கனவினை உதறிவிட்டு எங்கோ ஓடத்தான் விழைகிறது. முடிகிறதா? இல்லையே. தாயிடம் அருந்திய பாலின்று பூர்வீக மணத்துடன் நாசியை மூடிக்கொண்டே பயணிக்கிறது. காய்ச்சலில் சுருண்டிருக்கும் நாவிற்கு அவளின் சுக்குக் கசாயம் இனிக்கிற மாதிரியும் தெரிகிறது. கசக்கிற மாதிரியும் தெரிகிறது. ருத்ராச்சையை மென்றபடி நாத்திகம் பேசும் கடவுள், பார்வதியை ஏன் பக்கமிருந்து ஒதுக்கினான். பாம்புகள் எங்கே? மணிமுடியெங்கே? அதன் வழிச்சிதறும் கங்கையெங்கே? அவனின் தாண்டவம் ஏன் அதிராமல் அசைகிறது? என்ன நினைவில் திளைத்திருக்கிறோம். யானறியாமல் எல்லாமே பச்சரிசிக் கஞ்சிக்குள்ளும், நெத்திலிக் கருவாட்டுக்குள்ளுமே நடக்கிறதே. என்ன விந்தையிது!!.
உடல் சுடுகிறதா? அணல் உடலாயிருக்கிறதா? எதைச்சொல்கிறது இந்த தனிக்கனவு?

இதோ இந்த இரவின் அஸ்தமனம் தொடங்கிவிட்டாற்போல் தெரிகிறது. கீழ்வானமும், கீழிமையும் செந்நிறத்தை விரட்டத்தொடங்கிவிட்டன. உடற்படிந்த உப்பு படிமங்கள் போர்வையுடன் சேர்ந்து கொட்டுகிறது. உள்மனமும், உத்திரத்து விசிறியும் தன்னகத்தேகொண்ட அகந்தையை அழித்துக்கொள்கிறது. எங்கோ மச்சிவீட்டின் மதிலை மூடின மல்லிகைக்கொடி, மலர்களை பிரசவிக்கிறதுபோலும். காற்றெங்கும் வாசம், காற்றெங்கும் கானம், காற்றெங்கும் அகமும் புறமும் மிதக்கிறது. பகலவனின் வெண்மை உடலை இதமாக பிடித்துக்கொள்கிறது. அடடா
! என்ன சுகம் இந்த உடலில்! காய்ச்சல் நின்றபின் கிடைத்த இந்த உடலில்தான் எத்தனை மினுமினுப்பு!, எத்தனை அழகு!, எத்தனைக்குளிர்ச்சி!. வரும் இரவும் இந்த தனிமையைக் குத்திக்காட்டும் கனவுகளுடன்தான் வருமோ?!! சூன்யமான அந்த கருமை வராமலிருந்தால்தான் என்ன? அப்பப்பா, இந்த விடியல் இப்படியே தொடர்ந்தாலே நலம்...நலம்...நலம்...




Wednesday, July 21, 2010

ஒட்டுவாரொட்டி...

முருகேசனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் முருகேசனுக்கு பத்திகொண்டுதான் வரும்.

‘ஒருநாளைக்கு பதினஞ்சாயரத்து சொச்சம் பேராவது பொழங்குற எடத்துல க... பயலுங்க ஒரு பக்கத்தால மட்டும்தான் ஒண்ணுக்க இருக்க கட்டிவிட்டுருக்கானுங்க. அந்தப்பக்கத்தால ஒண்ணு கட்டினா இவனுவ வீட்டுக்காசு கொறஞ்சமாதிரி நெனப்பு. இந்த செவத்துல பொழுதுக்கும் நின்னு ஒண்ணுக்கடிச்சு நாறடிக்கிறத பயலுங்கல என்னத்த சொல்றது. பாழப்போனவனுங்களுக்கு புத்தியிருக்குமா என்னான்னே தெரியல. எல்லாம் முழுக்காலு சட்டையும் சவடாலுமாத்தான் திரியிரானுங்க, ஒரு பயலுக்காச்சும் இப்டி பொதுவால நின்னு இருக்கோமே இதுனால வர கெடுதல நெனச்சுப்பாத்தானுங்களா? நாத்தம் நாத்தம் அண்டசயிக்கல’
இது முருகேசனின் அன்றாட புலம்பல்.

‘ஏப்பா கொஞ்சம் தள்ளிதான் போங்களாம்பா.. அங்கணத்தான் கட்டிவுட்டுருக்காங்கல்ல’
இப்டியும் சிலநேரம் கத்திப்பார்ப்பான். ‘நல்லது சொன்னா எவங்கேக்குறான்.. நாசமாப்போச்சு..நமக்கென்ன’ என்று நினைப்பதுதான். ஆனாலும் அவனால் முடிவதில்லை. ‘பங்காளி ஆத்தர அவசரத்துக்கு போறதுதான். இதெல்லாமா பாத்துகிட்டுருப்பாங்க, அழிஞ்ச கொல்லையில ஆடு மேஞ்சான்ன? மாடு மேஞ்சான்ன??’ன்னு பக்கத்துக்கடை பங்காளி சொல்வதுண்டு. ‘சும்மாகெட பங்காளி. எனக்கு கெட்டக்கோவம் வந்திடும்’ என்பான்.

அன்றைக்கு ஆறுமணிக்கு கடைதிறக்கவேண்டியவன் ஏழு மணி ஆகிவிட்டது. அவசரஅவசரமாக வந்தவன் ‘இந்த கொண்டாங்கொடுத்தான் ஒறவே வேண்டான்னு நெனைக்கறதுதான். என்னப்பண்ணி தொலையறது. வந்ததுங்களுக்கு எதாவது செஞ்சித்தொலைய வேண்டிக்கடக்கு’ மனதிற்குள் புலம்பியவாறே ‘கிரிச்’ யென்ற உருமலோடு இயங்கும் சட்டரை மேலே தூக்கினான். கொல்லைப்பக்கமுள்ள ஒரு கழிவரையையும் சொந்தங்கள் அடைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. ‘எல்லாத்தையும் அடக்கலாம் போலருக்கு, இத அடக்க முடியறதில்ல. கடையத்தெறந்திட்டு போலாம்னா இப்டி அடிவயித்தால படுத்துதே. நேத்தைக்கு நைட்டு இந்த அரிசி கணக்கா உள்ள மாத்தரைய (Cetirizine) சாப்டது தப்பாப்போச்சு. நிமிசத்து ஒருவாட்டியா வரும். கருமம் புடுச்சவனுங்க. சலி அலர்ஜின்னாலும் சரி, அரிப்பு, புண்ணுன்னாலும் சரி இதததான் தர்ரானுங்க.’ அதற்குள் யாரோ கடைக்கு வந்துவிட்டார்கள்.

‘வாங்கம்மா என்ன வேணும்?’.
‘ஆப்பில் என்னவெல’.
‘கிலோ 140’
‘அரகிலோ போடுங்க’
‘ம்ம்ம்’
‘பை வச்சிருக்கீங்களா?’
‘இருக்கு’
‘இந்தாங்க.... காலைலேயே நூறுவாய தர்ரீங்களே. சில்லர இல்லைங்களா?’
‘இல்லப்பா’
‘பங்காளி இந்த நூறுவாய ஒடச்சி கொடேன்.’
‘காலைல ஏது பங்காளி. இல்ல...’
‘இரும்மா, எதுத்தால பூக்கடயில வாங்கியாரேன்.’

‘ச்ச..ச்ச.. அடிவயத்தவேற லேசா வலிக்கற மாரி இருக்கே. இனிமேலும் முடியாது. யாவாரத்தையும் உடமுடியல. நல்லவேள சில்லர வாங்க இங்கவந்தோம். அப்டியே போயிட்டு வந்திடவேண்டியதுதான்’ கீழண்டப்பக்கமாய் உள்ள இடுப்பளவு சிமெண்ட் கிராதிப்போட்டு அடைத்திருந்த அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்திற்குள் நுழைந்தான். உள்ளபோனதுதான் தாமதம்...‘அடக்கருமம் புடிச்சவங்களா இங்கயா வந்து பேண்டு வப்பானுங்க, நாறப்பயலுக. காலங்காத்தால, ஹ்கூம், கொல்லுன்னு மொய்க்கிற ஈக்கூட்டத்த பாத்தாலே பயமாயிருக்கு. வாயில நல்லா வருது. என்னாத்த சொல்லி திட்டறது. இப்ப எங்கப்போறது?. ம்கூம்....... அவசரத்துக்கு பாவமில்ல. இன்னைக்கு இந்த செவத்தாலையே போவவேண்டியதுதான். இங்க கூட பரவாயில்ல போலருக்கு. மூக்க பொத்திகிட்டே இருந்துக்கலாம்’ குற்றவுணர்ச்சியும் தானாக பொத்திக்கொண்டது.

•••••••••••••••

ராமநாதனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ராமநாதனுக்கு பத்திகொண்டுதான் வரும்.........................................


Tuesday, May 11, 2010

இதாங்க நடந்துச்சு....



‘ஏன்டி புள்ளையப்போட்டு அடிக்கிறவ.?’

‘ம்க்கும்... புள்ளைக்கொண்ணுன்னா வந்திடுவீங்களே... துண்ட முறுக்கி தோள்ல போட்டுகிட்டு’

‘நீ..இங்க வாராசா.. ஏங் அம்மா அடிக்கிறா?’

‘ஆமா... அப்டியே கேட்டாளும் சொல்லவாப்போவுது. எங்கிட்டன்னா வாயடிக்கிறதப்பாரு...’

‘சரிடி... என்னாப்ப....??’

‘ங்ங்ங்.... காலு மொலைச்சிடுச்சுல்ல தொரைக்கு... கீழத்தெருலேர்ந்து மேலத்தெருவுக்கு வெள்ளாட களம்பிட்டாரு.’

‘அதுக்கேன்டி அலுத்துக்கிறவ. புள்ளைங்கன்னா வீட்டுக்குள்ளறயே பொத்திப்பொத்தியா வச்சிக்கமுடியும். அங்கணஇங்கண போயீ வெள்ளாடத்தானடி செய்யுங்க... அதுக்குப்போயி பெரிய இவளாட்டம்... ’

‘நீங்க இப்டியே சப்போட்டு பண்ணி பேசுங்க.. இப்ப இருக்குற மேலத்தெரு பசங்கள்லாம் சரியில்ல... அதுங்கள்ட பேசிப்பேசி... இப்ப இதுவும் எதுத்துப்பேச ஆரம்பிச்சிடுச்சி... ’

‘சரி வுடு... எல்லாம் சரியாப்போயிடும்...’

‘க்க்கும்... இப்டிச்சொல்லுற வாயித்தான்... நாளைக்கு கண்ணுகுட்டி வளத்த கழுசடயப்பாருன்னு சொல்லும். அப்ப வச்சிக்கிறேன் உங்கள... ’

‘அடிப்போடீ... மொட்டத்தலைக்கும் மொழங்காலுக்கும் இப்ப முடிச்சிப்போடுறவ. வளப்புங்கறது இதுயில்ல தெரிஞ்சிக்க...’

‘ஆமா... நாவொன்னும் தெரியாம கெடக்கேங்... நீங்க வாங்க சொல்லிக்கொடுக்க... ’

‘அடியே என்னாடி... நானும் பாக்கிறவ சத்தம் ஓவராப்போவுது...பாத்துக்க..’

‘அப்டியே உம்மகிட்ட சத்தம்போட்டுட்டாலும் அடங்கிப்போயிடுவீரு... பேச வந்துட்டாரு.. பேச்சு.. போய்யா சும்மா... ’

‘ஏய்... வாய மூடிட்டு..மொதல்ல.. சும்மாயிருடி...’



‘எதுச்சொன்னாலும் அப்டியே அடக்கிடுங்க... குடும்பத்துக்கே இதே பொழப்பாப்போச்சு..’

‘ஏய்..என்னய எதுனாச்சும் சொல்லு எங்குடும்பத்த சொல்லாத...ஆமா... ’

‘யோ..போயா.. உங்குடும்பத்தப்பத்தி எனக்கு தெரியாதா... எங்கப்பன் பேச்ச கேட்காம நான் உன்னத்தான் கட்டுவன்னு அடம்புடுச்சி கட்டுனனுல்ல.. எனக்கு இதும்வேணும், இன்னமும் வேணும்..’

‘அதுமாதிரிதான்டி நானும், ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா... எந்தலையெழுத்து உன்ன கட்டிகிட்டு மாரடிக்க வேண்டிகெடக்கு...’

‘ஆமா சும்மா கூட்டிட்டு வந்தமாதிரி பேசுற.. 15 பவுனு நகய எப்பன்ட விடாப்புடியா வாங்குணப்ப இந்த மாரு அடிச்சுக்கலையா... ’

‘அடியே எதுத்து எதுத்து பேசுறவ... அப்பறம் போட்டேன்னு வய்யி... தாங்க மாட்ட..’

‘ஆமாய்யா.. என்னய எப்பன் அதுக்குத்தான் பெத்து உட்ருக்கான்... அடிப்ப நீயி...??!!!’

(ப்ப்ப்ளார்.............)

‘ஆத்தாடி.....யோவ்... அடிச்சிட்டில்ல... இத்தன நாளு இல்லாம கைய நீட்ரளவுக்கு ஆயிட்டீல்ல.. இனிமே உங்கூட வாழமுடியாதுய்யா... நான் எப்பன் வீட்டுக்கு களம்புறேன்.’

‘போடீ...போடீ.... இவ இல்லன்னா வாழமுடியாது பாரு... பெரிய இவ... ’

‘ஆமாய்யா... இப்ப ஒனக்கு தெரியாது. நாளைக்கு எவடா கொஞ்சம் தண்ணி காச்சி ஊத்துவான்னு தெருவுல நிப்ப பாரு... அப்பதான் தெரியும்... ’

‘அடிப்போடீ.. ஆனா அந்த மடம்... ஆவாட்டிப்போனா சந்தமடம்.... ’

‘நாங்களம்புறன்ய்யா... நாளபின்ன எப்பன் வீட்டுக்கு வருவீல்ல .. சமாதானம் பேசிட்டு...அப்ப வச்சிக்கிறேன் உன்னய... ’

‘பூன கண்ண மூடுனா பூலோவம் இருண்டுடாதிடீ.. தெரிஞ்சிக்க... நாங் ஒருக்காலும் வரமாட்டேன்... ’

‘அதையும்தான் பாப்போம்...அப்பனும் புள்ளயுமா கெடங்க... ’

•••••••••

‘அம்மே..... அம்மே.......... எனக்கு அம்மா வேணும்...ம்ம்ம்....ம்ம்ம்..........’

‘என்ன நொம்மே... அதான் போயிட்டாள்ல.... எல்லாம் உன்னால... இனிமே மேலத்தெருவுக்கு வெள்ளாட போவ நீயி.... எங்க அந்த குச்சி.....

‘(போடு... 1.......2...........3...........)’

‘அவ்வ்வ்வ்வ்வ்வ்........................................... ’




Friday, February 26, 2010

ஆரம்பம் 1992...

1992. வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகளை தன்னகத்துள் நிரப்பியிருந்த வருடம். அவ்வளவு சாதாரணமாக எவர் நெஞ்சினையும் நீங்கும்படியான நிகழ்வுகளாக அவை அமையவில்லையென்பது இன்னொரு சிறப்பு. வெள்ளையனைக் கண்டால் வெளியேறு இல்லையேல் அவனின் எழுத்துக்கள் புதைக்கப்பட்ட ஏடுகளை வேருடன் அருத்தெறி என்ற எண்ணம் அனைவர் இதயத்தையும் கவ்விக்கொண்டிருந்தது. கூடவே சட்டமறுப்பு இயக்கங்களும். 25 பைசாவுக்கு துடைப்பானால் அடித்துக்கொண்ட காலகட்டங்கள் அப்போது மேகம் சூழ்ந்த வானமாயிருந்தன. தவறு செய்தலும், தப்பத்தெரிதலும் மிகையாட்கொண்டிருந்த காலகட்டமது.


அன்றைய நாளில் மிகமுக்கிய கோட்பாடாகவும், குறிக்கோளாகவும் அடிமனதில் தாளமிட்டது ஆங்கில எதிர்ப்பு. இலவசம் என்றபெயரில் அனைத்து புத்தகங்களையும் கொடுத்து, ஆங்கிலத்தையும் அதனுடன் திணித்துவிட்ட பள்ளிக்கல்வி நிர்வாகங்களை எப்படிச் சாடுவது. ஒரு நொச்சி சிம்புக்கு (குச்சி) பயந்து நடுங்கிய நாட்களில் ஆங்கில எதிர்ப்பை நடைமுறைப்படுத்துவதென்பது இயலாதவொன்று. அறவழிப்போராட்டத்தை வகுப்பறை நீங்கிதான் நடத்தவேண்டும் என்று சகலரைப்போலவே எனக்கும் தெரிந்திருந்தது. வகுப்பாசிரியருக்கு எங்களியக்கத்தின் வலிமையைக்காட்ட கருவேலங்காட்டுக்குள் கால்தடம் பதித்து பதுங்கியிருப்பதே சாலச்சிறந்ததென்ற எண்ணமிருந்தது. அங்கே கோலிகுண்டும், கூட்டாஞ்சோறுமாய் குதூகலப்படுத்தும் என் சக வீரனை நினைத்து அகமகிழ்வு பெற்றிருந்தேன்.


போராட்ட புதருக்குள் பதுங்கியிருந்த சில புல்லுருவிகளின் அடிமட்ட செயல்களினால் தலைமை ஆசிரியரின் கையில் தலையினைக்கொடுக்கவும் நான் தயங்கியதில்லை. இரண்டு மூன்று குட்டுகளுக்கு பயந்துவிடுவோம் என்று அவர் நினைத்திருக்கலாம். எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுத்துச்செல்லும் தைரியம் எனக்கும் வாய்த்திருந்தது. பெருமிதம் கொண்டிருந்தேன். ஆவாரம் பூவாக எவளோயொருத்தி எனக்கிந்த வாலிபத்தினையும், வாசத்தினையும் வழங்கியிருக்கவேண்டும். சுஜா. அவள் பெயராக இருக்கலாம். இந்த நன்வரலாற்றில் அவளையும் இழுத்துவிடுவது இழிவினைக்கொணரலாம். விலகிவருவோம்.


அம்மாதிரியானதொரு தருணத்தில்தான் தந்தையுடனான ஒத்துழையாமை இயக்கத்தையும் தீவிரப்படுத்தவேண்டிய கட்டாயமிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமலில்லை. ஒரு மதியவேளை ‘அதிமுக்கிய மட்டைவிளையாட்டுக்காக பள்ளிக்கு செல்லவில்லையென்று, உச்சி வெய்யில் உயிர்ச்சுடும் நேரத்தில் காலணி இல்லாமல் நிற்கவைத்த படுபாதக செயலைச் செய்தவர் அவர். உலகவரைபடத்தில் சிறந்த ஜனநாயக நாடாகக் கருதப்படும் நம் இந்திய தேசத்தின் அவஸ்த்தைகளை தட்டிக்கேட்கப் பிறந்தவொரு தனிக்குடிமகனுக்கு மட்டைவிளையாட்டு விளையாட அனுமதி மறுப்பதென்பது காலக்கொடுமையன்றி வேறென்ன சொல்வது. அதன்பொருட்டே இந்த இயக்கம். இதனூடேப் பிறந்த உண்ணாவழிப் போராட்டமும் செவ்வனே நடந்ததாய் அடிக்கோடிட்ட இவ்வரலாற்று வரிகள் உணர்த்துகின்றன.


ஏ, பி, சி, டி... என்று தொடங்கும் 260 எழுத்துக்களையும் (என் போராட்டங்களால் 26ஆக குறைக்கப்பட்டுள்ளதை அறிவேன்) படித்து சமாளிப்பதென்பது அவ்வளவுச் சுலபமல்ல. ஆங்கில அறிவுடையோர் அறிவர். கடுமைக்கும் கொடுமைக்கும் கால்முளைத்தார்போல் தோன்றும் அவ்வெழுத்துக்களே என் முதல் எதிரியாய் தெரிந்தது. பள்ளியில் கொடுத்த ஆங்கிலப்புத்தகங்களை மஞ்சள் பையில் புகுத்தி என் தாய்மொழியை கலங்கப்படுத்தியதுமில்லை அதுபோல் வழக்கமாய் புத்தகங்களுக்குப்போடும் சாம்பிராணியை அவைகளுக்கு காட்டியவனுமில்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததை ஒருபோதும் மறவாதவனாய் அந்த ஆங்கிலப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு அலைந்து திரிந்து ‘இதயம் மளிகைக்கடை அடைந்தேன். எதற்காக என்று நீங்கள் கேட்கலாம். சொல்வதும் என் கடமையென்றறிவேன். எடைக்குப்போடத்தான்(???!!!!). அப்படி கிடைக்கும் 25 பைசாவுக்காகவும், அதனால் வாங்கப்படும் 25 எண்ணிக்கை ஒரு பைசா மிட்டாய்க்காகவும் ஆசைக்கொண்டதால்தான் நான் இச்செயலை செய்தேன் என்றெண்ணலாம் நீங்கள். மறுப்பதற்கான காரணங்களை மேற்கூறியிருக்கிறேன்.



  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO