க.பாலாசி: கட்டுரை...
Showing posts with label கட்டுரை.... Show all posts
Showing posts with label கட்டுரை.... Show all posts

Monday, July 5, 2010

கொஞ்சம் நடப்போம்...


‘ஐயோவெனின் யான் புலி அஞ்சுவலே;
அணைத்தனன் கொளினே, அகன்மார்பு - எடுக்கல்லேன்!
என்போற் பெருவிதிர்ப் புறுக. நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி -
வரைநிழற் சேர்க- நடந்திற் சிறிதே’

(புறநானூற்றில் 255வது பாடல்; பாடியவர் வண்பரணர்)

பாடல் விளக்கம்
ஐயோவென்று கூக்குரலிடின், புலி வந்துவிடுமோவென்று அஞ்சுகிறேன்.உன்னைச் சுமந்து செல்லலாம் என்றால் ரொம்ப கனமாக இருக்கிறாய். உன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய நியாயமற்ற கூற்றுவன் என்னைப்போலவே பெரிதாக வருத்தப்படட்டும். தூரத்தில், மலையடிவாரத்தில் நிழல் உள்ளது. என் வளைக்கையைப் பற்றிக்கொள், கொஞ்சம் நடப்போம். (போர் நிலத்தில் காயமுற்று மரணமெய்ய காத்திருக்கும் தலைவனைக் கண்ட தலைவி, தன்னிலையெண்ணி புலம்புவதாக அமையப்பெற்றது)

இங்கே என்மொழிக்காக என்னுள் அன்றாடம் ஒலித்திடும் வரிகள். இச்சூழ்நிலை வழியில் நம் கரங்களும், குரல்களும் இடையறாமல் இம்சிக்கும் என் தமிழை, நான் சுமந்தோடும் வழியில் கால்களையேனும் இடறாமல் இருக்கவேண்டுகிறேன்.





இருமனச்சரம் கோர்க்கும் திருமண நிகழ்வில் ஓர் ஆண்மகன் விரும்புது ஒரு பதிவிரதையாகத்தான் இருக்கவேண்டும். அவளுக்கும் அப்படியே. இருபாலிலும் யாரோவொருவர் முன்னமே புணர்ச்சியடைந்திருப்பின் முகச்சுளிப்பிற்கு ஆளாக நேரிடும். அதை இச்சமூகம், என்சமூகம் விரும்புவதுமில்லை. பிறகெப்படியிங்கே வன்புணர்ச்சிகளொத்து என்மொழி மட்டும் இடையறாது கற்பிழக்கிறது என்றுதான் தெரியவில்லை. பிறன்மொழிக் கொண்டு என்மொழியில் பாலினக்கலப்பை புகுத்துவது எவ்வகையில் சிறப்பினையெய்த வழிக்கொணரும்.

நம் வீட்டு தோட்டம் எழிலடைய நாமே விரும்பபாவிடின், அதன் தொண்மையை எத்துணை தலைமுறைவரை நம்மால் கொண்டுச் செல்லமுடியும்? பெற்றவளை புறந்தள்ளி, என் பூவனத்தைப் பயிர்மேயும் வேலியாக ஆட்கொண்ட கள்ளிச்செடியின் முலைகளில் வழிந்ததை, இதுவரையும் தாய்ப்பாலாக அருந்துவது சரிதானோ?

பள்ளியில் I am suffering from fever ல் தொடங்கிவைத்த இக்காய்ச்சலை எம்மருத்திட்டு குணப்படுத்த? என்பின் வரும் தலைமுறைக்கு எந்த மொழியை இதுவென் செம்மொழியாக சுட்டிவிட்டு போகப்போகிறேன். என்வீட்டில் நான் அடைகாத்த குஞ்சுகளுக்கு நிழல்தர கூரைகளுக்குப்பதில் சிலந்திப் பூச்சிகளின் எச்சங்களான ஒட்டடைகளையா விட்டுச்செல்லமுடியும்? கொட்டிக்கிடக்கும் இத்தனையெழுத்துக்களைவிடுத்து வேறெந்த மொழியுருவில் நான் என் மனதை, என் உணர்ச்சிகளை, என் மகிழ்ச்சி மற்றும் கண்ணீரை அடையாளப்படுத்திவிட முடியும். நிச்சயம் முடியாது.

இன்றையநாளில் தமிழ்நாட்டு பள்ளிகளில் 5ம் வகுப்பில் ஆங்கிலமொழி படிப்புத்திறன் 81 சதம் மாணாக்கர்களுக்கு இல்லையென்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதே ஆய்வோர் எத்துணை மாணாக்கர்களிடம் தமிழ் மொழியின் படிப்புத்திறனை சோதித்தார்கள் என்று தெரியவில்லை. அப்படியாயின் 90 சதத்திற்குமேல் என்தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழினை இலக்கணப்பிழையின்றி எழுதப்படிக்க தெரியாது என்பதை உணரலாம். இது என்சமுதாயத்தின் அடித்தளமிழந்த நிலை. அவரவற்கு வாழ்நிலை ஏற்றங்களின்பால் கொண்ட ஈர்ப்பும், நாகரீகத்தின்மிகை கொண்ட நாட்டமும் மற்றுமின்னபிற பொருளாதாரமெனும் ஆடையிழந்த கவர்ச்சியும் என்மொழியை துச்சமென மதிக்கச்செய்துவிட்டது..விடுகிறது...விடும். இப்படியாயின் என்வாழ்காலத்திற்குள் என்மொழியினை நானே எரித்துவிட்டு சாம்பலாவேன்.

பார்ப்போம் எவ்வளவுதூரம் ஊன்றுகோலினை காலெனயெண்ணி ஊனமாய் வாழ்வோமென்று...


**************

குறிப்பு:
1. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 23வதுஆண்டு விழா மலரில் வெளியான என் கட்டுரை.

2. தேர்ந்தெடுத்த விழாமலர் குழுவினருக்கும், ஊக்குவித்த பதிவர் வானம்பாடிகள் அய்யா அவர்களுக்கும் நன்றி.

3. அன்பு பதிவர்கள் பழமைப்பேசி, ஈரோடு கதிர், வானம்பாடிகள் ஆகியோரின் கட்டுரையும் இம்மலரில் வெளியாகியுள்ளது. அதுசமயம் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.




Saturday, November 7, 2009

அவரும் வந்தார் இவரும் வந்தார் ஆடினார்...


1990 - வரை கிராமத்து கோயில் திருவிழாக்கள் என்றால் பனிப்படரும் இரவு நேரத்தில் வாழ்வியலின் சத்தியத்தை சந்தடிகளுக்கும் பரப்பிவிடும் வள்ளித்திருமணம், அரிச்சந்திரா மற்றும் என் ஞாபகமறதியின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இன்னும் சில நாடகங்கள் என்றும் கலையிழக்கா காவியமாக நிகழ்ந்துகொண்டிருந்தன. இவற்றிற்கு சொந்த ஊரிலிருந்தும், அருகே சுத்தியுள்ள கிராமங்களிலிருந்தும் மக்கள் சாப்பாட்டு மூட்டையுடன் கூட்டம் கூட்டமாயும், வண்டிக்கட்டி வந்தும் நாடகமேடை முன்னே சமுக்காளத்தின்மேல் குடும்பம் சகிதம் அமர்ந்து கண்டு மகிழ்ந்தனர். இடையே தாகம் தணிக்க தண்ணீர்ப்பந்தல், டீக்கடை, பட்சணம் போன்றவையும் எளிதாய் கிடைக்கும் வகையில் அக்கம்பக்கத்தார் கடைவிரித்து காத்திருப்பர். விடியும்வரை ஓடும் நாடகத்தில் இடையிடையே உறக்கம் கலைத்து, களைப்பு நீங்க நகைச்சுவையுடன் கலந்து நாடகம் அரங்கேறும். இரவு 11மணியளவில் ஆரம்பித்து காலை 5 மணிவரையாவது நடக்கும். மக்களும் சலிப்பில்லாமல் கண்டிருந்தனர். அரிச்சந்திராவில் மயானகாண்டத்தில் சந்திரமதி புத்திரசோகத்தில் புலம்பியழும்போது அவளழுக ஆற்றாது சிறுவர்கள்கூட சேர்ந்தழுவர் (என் சிந்தை இப்போதும் மறக்காத நிகழ்வு)


பின்னர் நீண்ட வரிசையில் நாடகக்கலைகள் காத்திருக்க என்று தொலைந்தது, எங்கே விட்டகன்றது என்றறியாவண்ணம் நேரம்பார்த்து இடைபுகுந்த தொலைக்காட்சி பெட்டியின் வன்மை ஒளி, ஒலியில் எல்லாம் தொலைந்து, நாடகமேடை மேசையாகி தொலைக்காட்சிப்பெட்டியின் தொல்லையை அதிலே நிலைநிறுத்தி இரவு முழுதும் நான்கைந்து படங்களை புதிய கலாச்சாரமாக இடையிட்டனர். பிறகொரு நாளில் 16mm திரையமைத்து திரைப்படக்கவர்ச்சியினை பெரிதாக்கி அதையே மலிவுவிலை மதுவென்றாக்கி சுமையில்லா சுகம் காண செய்தனர். இந்நேரங்களில் நாடகம் காண வந்த குடும்ப கூட்டங்கள் குறைந்துபோய் வயோதிகர்கள் வாலிபத்திமிரில் கூட்டம் கூடி ஆட்டமாடும் கூடாறமாகிப் போயின நாடகத்திடல்கள்.


பிறகு திரைப்பட இசைநிகழ்ச்சி. அதில் முதலும் முடிவுமாய் சில சாமிப்பாடல்கள். மற்றநேரங்களில் சௌந்தர்ராஜன் குரலையும், பாலசுப்ரமணியன் குரலையும் கொலைசெய்யும் பாடல்கள். அடுத்த தெருவாசியையும் இம்சிக்கும் இசைநிகழ்ச்சியாய் காலைவரை தொடர்ந்திருக்கும் தொல்லையாகவே நடக்கும்.


அதுவே இன்று இன்னும் குன்றிப்போய் திரைப்பட ஆடல்பாடல் நிகழ்ச்சி என்று மேலும் நேரடியாய், திரையில்லா மேடையமைத்து கலிகாலத்தின் கவர்ச்சி என்பதை கவிச்சடிக்க காட்டும் கன்றாவியாகிவிட்டது.


இப்போது நாடகமேடையருகே குடும்பங்கள் இல்லை, டீக்கடையில்லை, பனியுளர்ந்த பட்சணங்களில்லை, தாகம் தணிக்க தண்ணீர்பந்தலில்லை. மாறாய் கூத்தடிக்கும் இளைய, சில வயதான கூட்டங்களும், திரைப்பட இசையில் அடித்தொடைகாட்டும் ஆடலை ஆடம்பரமாய் அரங்கேற்றும் கூத்தாடிகளின் ஜாக்கெட்டுக்குள் ஒன்றிரண்டு ரூபாய் நோட்டுக்களை சொருகி சுகம்காணும் குறைகுணம் கொண்ட கூட்டமுமே கூடிநிற்கின்றன. மதுவின் மயக்கம், புகைக்குழலின் புகைமூட்டம் என சிற்றின்பத்தில் சிறைபடும் இளைதலைமுறையின் தலையை முறையாக வாரிவிடத்தான் அங்கு ஆளில்லை.



தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...


Tuesday, October 20, 2009

காணிக்கை...




பொதுப்பணியில் செலவழிக்க
நினைக்கும்போது பொருளில்லை
பொருளும் புகழும் சேர்ந்தபின்னே
பொதுப்பணியில் நினைவில்லை
போதுமான பொருளும் வந்து
பொதுப்பணியில் நினைவும் வந்தால்
போட்ட திட்டம் நிறைவேறக்
கூட்டாளிகள் சரியில்லை.

இந்த பட்டுக்கோட்டையாரின் வரிகளில் உள்ளர்த்தங்கள் நிறைய உள்ளன. பொதுவாக இது எல்லாவற்றிற்கும் பொருந்தும் வரிகளாயினும் எனது பார்வையில் மிகச்சரி எனப்படுவதை பகிர்ந்துள்ளேன்.

இன்று நாம் கோயில் செல்கிறோம். கும்பிடுகிறோம். காணிக்கை என்ற பெயரில் எவ்வளவோ பணங்களை, பொருள்களை, சொத்துக்களை செலுத்துகிறோம். வீதிக்கொரு கோயில் என புதுவிதி செய்கிறோம். பயன் என்ன? பெற்ற இன்பங்கள் என்னனென்ன? எத்தனை மனிதர்களின் வாழ்வாதாரங்கள் புதிய கோயில் கட்டுவதனாலும், காணிக்கையிடப்படுவதனாலும் சீரமைந்திருக்கின்றன? பெரிய பெரிய கோயில்களில் கொட்டிகிடக்கும் காணிக்கை பணங்களால் எவருக்கு என்ன பயன்? எத்தனை கோயில்களில் கிடைக்கும் வருமானங்கள் மூலம் மக்களுக்கு நல்லது செய்யப்படுகின்றன? போன்ற கேள்விகளுக்கு விடை என்பது ஒருசில இடங்களிலிலிருந்து மட்டுமே கிடைக்கும். அதுவும் கண்துடைப்பாக.

முக்கியமாக எல்லா கோயில்களிலும் அதன் உண்டியல் வருமானம் மற்றும் இன்னபிற வருமானங்கள் அந்த நிர்வாகத்திற்கே செலவிடப்படுகிறது. இதை நான் தவறென்று சொல்லவில்லை. பராமரிப்பும் முக்கியம்தான். ஆயினும் அபரிதமான வருமானம் உள்ள கோயில்களில் கொட்டிகிடக்கும் பணங்கள் ஏழைகளின் அடிமட்ட வாழ்க்கைமுறையை கொஞ்சம் மேல் தூக்கிவிட செலவிடப்படுமாயின் இறைவனின் பணத்தில் ஏழையின் சிரிப்பினை காணலாம் என்பதே என் எண்ணம்.

பழைய கோயில்களே கவனிப்பாரற்று கிடக்கும் நேரத்தில் புதிதாய் வீதிக்கொரு கோயில் கட்டப்படுகிறது. ஏனென்று கொஞ்சம் உற்று நோக்குவோமாயின் ஏதோவொரு விதத்தில் அப்படியும் ஒரு வியாபாராம் நடந்து கொண்டிருக்கிறது. இருக்கின்ற கோயில்களை சீரமைக்கவே முடியாதபட்சத்தில் புதிதாய் ஒரு கோயில் எழுப்பி வருமானத்தினை தேடும் போக்கு ஏழைகளின் புரை விழுந்த கண்களுக்கு என்றுமே மருந்தாய் பயன்படப்போவதில்லை.


இடுகை பற்றின உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...


Friday, October 2, 2009

தீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா?

பள்ளி நாட்களில் நான் பயின்ற ஆங்கில செய்யுளில் கீழ்கண்ட ஒரு poem இருந்தது.

GOOD FOR GOOD - நன்மைக்கு நன்மை
EVIL FOR EVIL - தீமைக்கு தீமை
EVIL FOR GOOD - தீமைக்கு நன்மை
GOOD FOR EVIL - நன்மைக்கு தீமை

இன்றைய நாளில் இதை நினைவு கூர்கையில்... நேற்று, இன்று, நாளை என இந்த மூன்று காலகட்டங்களிலும் இந்த உலகம் மேற்சொன்ன வார்த்தைகளின் சாரம் கொண்டே இயங்கியது, இயங்குகிறது, இயங்கும். இதில் இரண்டாம் சொன்ன வார்த்தையே பிரதான தத்துவமாகி உலகம் முழுதும் , ஆணவத்துடன் அலைந்து திரிந்து, கண்கொண்ட காட்சிகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

தீவிரவாதம் என்ற கேள்விக்கு பதிலாக தீவிரவாதம் என்ற பதிலினை பதிவிட்டால் கிடைக்கும் மதிப்பெண் பல உயிர்களின் மதிப்பாகவே இருக்கும். குருதியினால் கரைபுரளும் வெள்ளத்தினை அதே குருதியின் வீரியம் கொண்டு எதிர்த்தால் இரண்டும் கலந்து எதிர்த்து நிற்கும் இடமும் குருதியின் குழம்பாகத்தானே இருக்கமுடியும்.

அப்படியே சரியாக இருந்தாலும் தீவிரவாதத்தினை எதிர்த்த தீவிரவாதத்தினாலோ அல்லது வன்முறையை எதிர்த்த வன்முறையாலோ சாதிக்க முடிந்தது என்ன? என்ற ஒரு வினா தொடுக்கப்பட்டால் அதன் விடையில் அப்பாவி மக்களின் ஆவிகளே அடங்கியிருக்கும். இன்னும் சில மகாத்மாக்களின் ஆவிக்களும். வன்முறையால், இன்னொரு வன்முறையை வென்றால், இறுதியில் அந்த வன்முறையும், இன்னொரு வன்முறையாலேயே வதம் செய்யப்படும் என்பதுதானே உண்மை.

ஆயுதம் ஏந்திய போராட்டங்களின் வழி என்பது, காந்தியடிகளின் ‘அ’இம்சை வழியில் தெரிந்த வெளிச்சத்தை விட இருளாகவே இருந்தது. பலர் நடந்து செல்லவும் அகிம்சை பாதையே வழிகாட்டியது. ஒட்டு மொத்த இந்தியனுக்காக நிகழ்த்தப்பட்ட அறப்போராட்டத்தின் விடியலாகவே சுதந்திரம் எனும் சுவாசத்தை இன்றும் நாம் நிரந்தரமாய் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

இதில் கருப்பினத்திற்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கும், அதே வழியில் அதே இனத்திற்காக தென்னாப்ரிக்காவில் போராடிய நெல்சன் மண்டேலாவும் கண்ட வெளிச்சம் காந்திய வழியிலேயே தெரிந்தது. இம்சையில் கிடைக்கும் இன்மையைவிட அகிம்சையின் விளிம்பில் கிடைக்கும் சுதந்திரம் நிரந்தரமாய் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம்.

இனவெறியில் இடர்பட்டு இருந்தபோது, அங்கே விடுதலைக்கு போராடிய நெல்சன் மண்டேலா வெளியில் இருந்து கடைபிடித்த அகிம்சைக்கு வெற்றி கிடைக்கவில்லை. 27 ஆண்டுகால சிறைப்போராட்டத்தில் அறவழியில் அவர் சாதித்ததே இன்று ஒரு மகானாக உலகம் அவரை அடையாளம் காண காரணமாயிற்று. மார்ட்டின் லூதர் கிங்கின் மனிதாபிமான போராட்டமும் காந்திய கொள்கையினை கொள்முதல் செய்தே நடந்தது. இவையிரண்டிற்கும் தீர்வாக கிடைத்த கருப்பின சகோதரர்களின் சந்தோஷமே காந்தியத்திற்கு வெளியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றால் மிகையாகாது.

தீவிரவாதம், வன்முறை இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இடையே சிக்குண்ட போராட்டம் என்ற புனிதம் புரியவைக்கப்படாமலேயே கொல்லப்பட்டு விட்டது. ஒரு அறப்போராட்டம், வன்முறையானாலோ அல்லது தீவிரவாதமானாலோ இறுதியில் உமிழப்படும் உதிரம் சாய்த்தது சகமனிதனின் உயிரைத்தானே. இதையா போராட்டங்கள் விரும்புகின்றன?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் எனும்போது இழப்பு என்பது அந்த இரண்டு இடங்களையும் மட்டுமே பாதித்துவிடப் போவதில்லை. அதையும் தாண்டி அதோடு தொடர்புடைய இன்னும் சிலவற்றையும் சேர்த்துதான் துண்டாடுகிறது. சாலைமறியலில் கிடைக்கும் நீதி, பேருந்தை எரிப்பதினால் கிடைத்துவிடப் போவதில்லை. மலையுச்சியில் புறப்படும் நீருற்று மரம் செடிகொடிகள், பாறைகள் இவற்றை கடந்துதான் வருகிறதேயொழிய அவற்றை கோடறி கொண்டு வெட்டி சாய்த்துவிட்டு ஆறாக சங்கமிப்பதில்லை.

இலங்கை தமிழர்களுக்காக முக்கிய மூன்றம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 12 நாள் அன்னம், தண்ணியில்லாமல் உண்ணாவிரதம் இருந்து...இறந்த திலீபன், 13ம் நாள் வெற்றிப்பெற்றான். அந்தநாள் அவன் உயிருடன் இல்லை. ஆயினும் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இருந்தன பின்னர் அங்கே நிகழ்ந்த சில தவறான இருதரப்பு புரிந்துணர்வுகளினால், ஆயுதமே மீண்டும் ஏந்தப்பட்டது. வெற்றி கிடைத்ததா என்றால் இன்று வரையில் இல்லை என்பதே மறுக்கமுடியா உண்மை. ஒருவேளை அன்றையிலிருந்தே அறப்போராட்டம் கடைபிடிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் இத்தனை உயிர்களின் நாடி ஊசலாடிக் கொண்டிருக்காமல் இருந்திருக்கும்.... இருந்திருக்கலாம். உறுதிபட சொல்லிவிட முடியாதபடி அங்கே நடந்து கொண்டிருப்பது அரக்கர்களின் ஆட்சி.

எந்தவொரு முழுமையான வெற்றிக்கும் காரணமாய் அமைவது பேனா முனையில் இளகி கசியும் மையும் , அறவழியில் பிறக்கும் அகிம்சை போராட்டங்களுமே தவிர துப்பாக்கி முனையிலிருந்து துரத்தப்படும் தோட்டாக்கள் அல்ல. புரிந்துகொள்வோம். காந்திய வழிகளில் வழிப்போக்கனாகவாவது இருப்போம்.

*********

தங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....


  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO