பொறந்த ஆறுமாசக் கொழந்தைய மடியில வச்சிகிட்டு இந்த மாமியாக்கார கெழவி சும்மாயிருக்கும்கிறீங்களா? ம்ம்...‘மொதல்லத்தான் பொட்டையாப்போச்சு. அடுத்ததாவது பேர்சொல்றமாதிரி ஆம்பளையா பொறக்குதான்னு பாக்கும்’னு மொவங்காரன் காதுல உழுவுறமாதிரி சொல்லிகிட்டே இருக்கும். இந்த பயபுள்ள சுழி சும்மா இருக்குமா?... ம்ம்கூம். அதுலேர்ந்து பயபுள்ள மந்திரிச்சிவுட்ட மாதிரியே சுத்தி.... ஒருவழியா மொதப்புள்ள பால (பால்) மறக்குறத்துக்குள்ள ரெண்டாவதா... பாலும் பழமும் கைகளில் ஏந்தி, மசக்கையில் மவ எடுப்பாலேவாந்தி. இப்பிடியே ஆயி..ஆயி...கடைசியா அஞ்சாம் பொண்ணோட வந்து நிக்கும். அதுக்கப்புறம்ஸ்டாப் த மியூசிக். ஏன்னா அஞ்சாவதா பொண்ணு பொறந்தா அரசாளுமாம். ஆறாவதா அதுவேபொறந்தா அப்பங்காரன் ஆண்டியாயிடுவானாம். (அஞ்சு பொறந்த பெறவும் அவன் ஆண்டிதான்). இங்கத்தான் அதுங்களுக்கு ‘பொதுநலனே’ எட்டிப்பாக்கும். எத்தனக் கோயில் கொளம் ஏறிஎறங்குனாலும் செலப்பேருக்கு இப்டித்தான் வாய்க்குது.
‘அஞ்சுப்பொண்ணு பெத்த மவராசன்னு’ போறவங்க வரவங்கல்லாம் அந்த பயபுள்ளைக்கு கொடுக்கரபட்டம்போக வேறவொன்னும் மிச்சங்கெடையாது. காலம்புல்லா ஒழச்சி, ஒழச்சி ஓடாதேஞ்சிபோறதுதான் அவனுக்கு மிச்சமா இருக்கும். எனக்குத்தெரிஞ்சி என் வூருல ஒரு கிராமநிர்வாக அதிகாரிக்கு 4 பொண்ணுங்க. அதுங்க நண்டு சிண்டா இருக்குறப்ப அவரோட எம்80 வண்டியில எல்லாத்தையும் அள்ளிப்போட்டுகிட்டு பொண்டாட்டியையும் கூட்டுட்டுப்போற அழகுஇருக்கே....அடடா... குடும்ப கட்டுப்பாட்டுக்கு வௌம்பரம் கொடுத்த கணக்கா சும்மா சூப்பராஇருக்கும்.
இதுமாதிரி அஞ்சுப்பொண்ணுங்கள பெத்த மவராசங்க ரெண்டுபேரு அக்கம் பக்கத்துல இருக்காங்க. இரண்டுபேருமே அஞ்சையும் கட்டிகொடுத்துட்டாங்க (கல்யாணம்). அதுல ஒருத்தரு பழக்கடக்காரு, இன்னொருத்தரு மாட்டு வண்டி ஓட்டுறவரு. இதுல மாட்டு வண்டிக்காரு பாடுதான்திண்ணடாட்டமானுது. கடைசியா குடியிருந்த குச்சியையும் வித்துதான் கடக்குட்டியகட்டிக்கொடுத்தாரு. இதோட முடிஞ்சா போயிடும்?? இந்த ‘கொண்டான் கொடுத்தான்’ ஒறவுஇருக்கே... அப்பப்பா...அயிரத்தெட்டு சிக்கல் உள்ளதுங்க. வாழ்வு, சாவு, நல்லது கெட்டது இப்டி என்னயெழவுன்னாலும் பொண்ணு குடுத்தவன் போயி முன்ன நிக்கனும். இல்லன்னா அந்தவூட்டுக்காரவங்களுக்கு இங்கேயிருந்து போனது அடிமையாயிடும். இதுல எத்தனப்பொண்ணபெத்தாலும் ஆடாம அசையாம குத்துக்கல்லாட்டம் குடும்பம் நடத்துற மவராசனுங்களும்இருக்கத்தான் செய்யுறாங்க. இருந்தாலும் ஆசயப்பாருங்களேன். அது கடக்கட்டும் நமக்கு அந்த வயித்துவலி வரும்போது பாக்கும் எத்தனன்னு.
இப்ப வர்ரவங்கல்லாம் கொஞ்சம் பரவாயில்ல. மொதல்லையே பொண்ணு பொறந்தாலும் மியூஸிக்க ஸ்டாப் பண்ணிட்டு, இதுக்கு பாட்டு எழுதுனா போதும்னுட்டு விட்டுடுறாங்க. இந்த அரசாங்கத்துல முக்கோணமா ஒரு வௌம்பரம் அங்கண, இங்கண எழுதி வச்சிருப்பாங்க... அதையும் இப்ப காணல. படுபாவிங்க அதுமேலத்தான நமிதா போஸ்ட்டர சைஸ் பாத்து ஒட்டிவச்சிடுறாங்களே. அதுசரி...ஞாயிறும் திங்களும் நாளைக்குதான தெரியும்.