
சாதாரணமா ஒத்த சுழி இருந்தாலே கையும் காலும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க. நமக்குவேற ரெட்டசுழியா....ஆடுற காலும் பாடுற வாயும் கம்முன்னா இருக்கும்? ரெண்டாவது படிக்கும்போது கைய வச்சிகிட்டு சும்மா இல்லாம எங்கப்பா பாக்கெட்லேர்ந்து 25 பைசாவ களவாடிட்டேன். புள்ள எதோ ஆசப்பட்டுட்டான்னு எப்பாராவது பெருந்தன்மையா கண்டுக்காம விட்டுருக்கலாம். உட்டாரா மனசன். அந்த 25 பைசாவுக்கு போட்டாரே ஆட்டம். மொத்தமா நாலுபேரு உள்ள வீட்ல, திருட்டு கொடுத்த எங்கப்பாவ தவிர பாக்கி மூணுபேரு. எங்கம்மா அந்த காச எடுத்துட்டுபோயி பப்ரு முட்டாயி வாங்கி சாப்டபோறதில்லை. எனக்கு முன்னாடியே பொறந்த எக்காளுக்கு அந்தளவுக்கு யானை (ஞானம்) இல்ல. சோ, எப்பாருக்கு உச்சிமண்டைக்குமேல முடி நட்டுக்க கோவம் வந்தது என் மேலத்தான்.
ஆரம்பிச்சாரே மனுசன். சும்மா தொரத்தி தொரத்தி நொச்சி சிம்பு நோவுவர வரைலியும். வேற வழியில்லாம வாங்குன அடிக்கெல்லாம் வஞ்சன இல்லாம ஒத்துக்கவேண்டியாயிடுத்து (இல்லன்னா பந்தியில வச்ச சோறு சந்திக்குல்ல வந்திடும்). சரி இதோட முடிச்சிபோச்சுன்னு நம்ம்ம்பி உட்காந்திருந்தேன். ஆனா, விதி விடலையே.
நமக்கு அம்மா சைடுல கொஞ்சம் செல்லம். அடிவாங்குறதிலேர்ந்து கொஞ்சமா காப்பாத்தி கூட்டியாந்து உள்ளார ஒட்கார வச்சுது. எங்கப்பாருக்கு அப்டியும் நட்டுகிட்ட முடி நாணிபோவாம, அதெப்படி படவா ராஸ்கோலு திருடலாம்னு பரபரன்னு வெளியில இழுத்துகிட்டு வந்தவரு கொள்ளவாசப்படி கோலத்துக்கு நேரா உச்சி வெயில்ல நிக்கவச்சு, வௌக்கமாத்த கைலக்குடுத்து, நீயே உன்ன அடிச்சிக்கன்னு சொல்லி, எப்டி அடிக்கணும்னு ட்ரெயினிங் வேற கொடுத்தாரு. (அடப்பாவி இது புதுசால்ல இருக்கு) ஒரு 25 பைசாவ திருடுனதுக்கா இவ்ளோ பெரிய தண்டன. வேற வழி, அடிச்சிகிட்டுதான ஆவனும். ஸ்டார்ட் மியூசிக்....போடுறா....ஒண்ணு, ரெண்டு, மூணு....அடிக்கச்சொல்லி பாத்துகிட்டு இருந்தாலும் பரவாயில்ல. சைக்கிள எடுத்துகிட்டு தொர வெளியில கௌம்புனாரு. அப்பாடி இதோட முடிஞ்சிதுடா சாமின்னு நெனச்சேன். முடிஞ்சிதா...அதான் இல்ல.
வெளியில களம்புன எசமான் வேதவாக்கு சொல்ற மாதிரி, மொளச்சி மூணு எல (மூணாங்கிளாஸ்) கூட போவல இப்பவே திருடுது. இதெல்லாம் உருப்படவா போவுதுன்னுட்டு... நான் திரும்பி வரவரையில் அடிச்சிகிட்டே இருக்கணும்னு சொல்லிட்டு கௌம்பிட்டாரு. மொத்தமா ஒரு இருவது இருவத்தஞ்சு அடி சொத்தமாவே (அவ்வ்வ்வ்...) அடிச்சிகிட்டு இருந்தேன். யாராவாது அக்கம்பக்கத்துல பாக்குறாங்களான்னு அப்பப்ப பாத்துக்கிட்டேன். நல்லவேள ஒரு நாதாரியும் பாக்கல. (முக்கியமா எதித்த வீட்டு ஃபிகரு). அப்டியும் பாருங்க மூணாவது வீட்டு பனங்கொட்ட (அந்த ஃபிகரோட தலமுடி அப்டி இருக்கும்) பாத்துடுச்சு. ஃபியூச்சர்ல அதுதான் நமக்கு ஹீரோயினா ஆயி, பெறவு உயிராவும் மயிராவும் நெனச்சிகிட்டு இருக்கவேண்டியதாப்போச்சு. ஊரே கூடிநின்னு வேடிக்க பாத்தாலும், நம்ம கண்ணு ஏதாவது பொம்பளைங்க பாத்துடப்போறாங்கன்னுதானே பாக்கும். இந்த பனங்கொட்ட பாத்தப்ப மட்டும் மனசுக்குள்ள ஹீரோ கணக்கா ஆயிடுச்சு. எங்கம்மாவுக்கு எப்பார எதுக்குர திராணி இல்லாத்தால நான் சொந்த கால்ல நின்னு அடிச்சிக்கிர அழக பாத்து அருகாப்படிலேயே உட்காந்துடுச்சு. அதுக்குள்ள போன மச்சான் திரும்பி வந்தார்ர்ர்...க்வாட்டர் மணத்தோட.. மறுபடியும் ஸ்டார்ட் மியூசிக்....
ஒருவழியா அவரு ஃபிளாட் ஆனதுக்கப்பறம்தான் என் கையிலருந்த வௌக்கமாறுக்கு விடிவுகாலம் பொறந்துச்சு. நான் திருனுடத மட்டும் எப்பாரு கண்டுக்காம வுட்டுருந்தாருன்னா....இன்னேரம் நானும் ஒரு ‘நல்ல’ அரசியல்வாதியா ஆகியிருப்பேன்.