90, 91 வாக்கில் என்று நினைக்கிறேன், 2 வகுப்பு. ஒரு மூன்று அடி சுவரு. செந்தாமரை டீச்சர் முன்பு பயில்வான் பக்கிரிசாமியாக காட்டிக்கொள்ள துள்ளிக் குதித்து விளையாடியதில் விழுந்து இடது கை முட்டியில் செங்கல் மோதி மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குமார் வாத்தியார்தான் ஒரு அடி ஸ்கேல் மூன்றை இரண்டு இரண்டாக உடைத்து சணல்போட்டு கையில் இறுக கட்டி வீட்டிற்கு அனுப்பினார். அம்மா அழுதாள், ‘க’னா பய மொவன், சும்மாயிருக்கவேமாட்டான்’ அப்பா அடிக்காமல் திட்டினார். மாயவரம் சுப்பையா டாக்டர் அப்போது பிரபலம். மனிதர் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு சார்மினார் சிகரெட் வீதம் பற்றவைத்தப்படியேதான் வைத்தியம் பார்ப்பார். ஒரு மாதம் கைக்கு வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து சுபமங்களம்.
மீண்டும் 2001-2002 கல்வியாண்டு. ஸ்கிப்பிங் கையிற்றை இருவர் பிடித்துக்கொள்ள உயரம் தாண்டுதலில் கோலோச்சிக்காட்டியதில் அதே இடதுகை முட்டியில் ஒரு எலும்புத்துண்டு விவாகரத்துக்கு விரும்பிவிட்டது. விடமுடியுமா?, மீண்டும் சுப்பையா, சார்மினார் சிகரெட் மருத்துவம், விவாகரத்து தள்ளுபடியாகி எலும்புத்தம்பதிகள் ஒன்றுசேர்ந்தனர். இந்தமுறை வீட்டிற்கு தெரியாமல் கட்டுப்போட்டுவிட்டு கலைமகள் ஸ்கூல் ஸ்டாப்பிங்கில் இறங்கி வீட்டிற்கு செல்லும்போது அம்மா முந்தானையில் மூக்கை சிந்தியபடி எதிரே வந்துவிட்டாள். ‘ஏன் தம்பி ஒனக்கு?’ அழுதாள். நண்பன் தேற்றினான். ஒரு மாதம் கல்லூரிக்கல்விக்கு விடுப்பு கொடுத்துவிட்டு காதல் கல்வியைத் தொடங்கினேன். உமா என்னை முழுதும் அடைத்துக்கொண்டது அந்தக்காலகட்டம்தான். ஸ்கிப்பிங் கயிறை இறுகப்பிடித்து என் கையை உடைத்த அதே நண்பனின் தங்கை, பழிக்குப்பழி.
இவைகள் என் வீரவரலாற்றுக் கல்வெட்டுக்களின் இண்டு இடுக்குகளில் காணப்படும் இரண்டு முத்துக்கள்தான். எப்போதுமே எனக்கு எண்ணிக்கையில் மூன்று பிடிக்கும். ‘பொதுவாழ்விலும்’ முதலில் சுஜா, பிறகு பவானி மூன்றாவதாக காதல் ரசம் கரைத்தூட்டிய உமா, கடைசியாயும்கூட. நெருங்கிய நண்பர்கள்கூட மூன்றுபேர்தான். உருப்படாத கோவிலில் உண்டக்கட்டி வாங்கித்தின்ன கூட்டம் நாங்கள்தான். இன்றும் எவனும் விளங்கவில்லை என்னையும் சேர்த்து. இப்போது 2011, பொதுவாகவே புஜபல பராக்கிரமசாலியான எனக்கு மீண்டும் அந்த எலும்புத்தேவன் கோவில் மணியோசை வலதுகை சுண்டுவிரலில் கேட்டது.
ஒரு பிணத்தின் கால்கட்டைவிரல்களின் கட்டை அவிழ்த்துவிட்டு மூக்கில் உள்ள பஞ்சிகளையும் நீக்கிவிட்டு ஒருநாள் உயிர்க்கொடுத்தால் அந்த பிணம் என்ன செய்யும்? என்னுடைய ஞாயிற்றுக்கிழமைகள் அப்படிதான் 6.30க்கு விடிகின்றன. யாருக்கு எப்படியோ, எனக்கு விளையாட்டு புத்திதான் மோகித்திருந்தது. மைதானம், மட்டை, பந்து, எதிரணியில் ஒன்பது ஜாம்பவான்கள். ஆளும் அணியில் ஒன்பது. ஒரு(ரே) பந்து சுண்டுவிரலை நக்கியதில் உள்ளெலும்பில் மணியோசை. உடைந்துவிட்டது.
இந்தமுறை நண்பர்களைத்தவிர வீட்டிற்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை, மூக்கு சிந்தவும், ‘ஏந் தம்பி, ஏந் தம்பி ஒனக்கு?’ என்று ராகங்களை இசைக்கவும் அம்மா, அப்பாவுக்கோ, அக்காளுக்கோகூட தெரியாது. வழக்கம்போல இரவு 8 மணிக்கு அழைத்து ஏம்மா? நல்லாருக்கியா? சாப்டியா? போதும். என் நலத்தையும் அறிந்துகொள்வாள். பத்துநாளில் ஊருக்கு போகவேண்டும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற அசட்டை எனக்கு. அப்போது இதை எப்படி தாங்கிக்கொள்வாள். ம்ம்ம்.... அது கிடக்கு கழுதை, இந்த அம்மா எப்போதும் இப்படிதான், அப்பாவைப்போல உள்ளுக்குள் பரிந்துகொள்வதில்லை.
ஒரு அறுவை சிகிச்சை. கோணி ஊசி அளவு ஒரு கம்பியை உள்ளே செருகியிருக்கிறார் டாக்டர்.இன்னொசென்ட் (பெயரில் மட்டும்) நல்ல விபரம். ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா? கேட்டுவிட்டுதான் இரண்டுநாள் படுக்கவைத்தார். நாலைந்து செவிலிப்பெண்கள். ஒருத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்த உமாவை அப்படியே உரித்து வைத்திருந்தாள். புருவத்து முடிகளை ட்ரிம் செய்து, நெற்றியில் சிறிய கருப்புநிற ஒட்டுற பொட்டு, அதே அளவு, நிற மூக்குத்தி. உமாவைவிட நல்ல நிறம். நன்றாக சிரித்து பேசவும் பழகவும் செய்தாள், எளிமை காட்டினாள். என் காட்டில் பெய்த இந்த மழையில் சிலீரென்று அந்த இருதய நரம்பு துருத்திக்கொண்டது. கட்டணம், ரசீதுகள் மற்றும் இத்யாதிகளை முடித்துக்கொண்டு எல்லாப்பெண்களிடமும் விடைபெற்றுக்கொண்டேன். ‘அடுத்தமொற ஒங்களுக்கு வாயில அடிபடணும்’ ஒருத்தி விளையாட்டாக சிரித்துக்கொண்டே சொன்னாள். வாயை மூடிக்கொண்டேன்.
‘அண்ணே நாலுநாள் கழிச்சி வாங்க, கட்டுப்போடணும்’,
‘எவடி அவ?’ திரும்பிப்பார்த்தேன், உமாவை உரித்துவைத்த அந்த தஞ்சாவூர் சிறுக்கிதான், பாதகி, கிராதகி. கையிலும் வலித்தது.
•