க.பாலாசி: நகைத்துண்டு...
Showing posts with label நகைத்துண்டு.... Show all posts
Showing posts with label நகைத்துண்டு.... Show all posts

Tuesday, May 11, 2010

இதாங்க நடந்துச்சு....



‘ஏன்டி புள்ளையப்போட்டு அடிக்கிறவ.?’

‘ம்க்கும்... புள்ளைக்கொண்ணுன்னா வந்திடுவீங்களே... துண்ட முறுக்கி தோள்ல போட்டுகிட்டு’

‘நீ..இங்க வாராசா.. ஏங் அம்மா அடிக்கிறா?’

‘ஆமா... அப்டியே கேட்டாளும் சொல்லவாப்போவுது. எங்கிட்டன்னா வாயடிக்கிறதப்பாரு...’

‘சரிடி... என்னாப்ப....??’

‘ங்ங்ங்.... காலு மொலைச்சிடுச்சுல்ல தொரைக்கு... கீழத்தெருலேர்ந்து மேலத்தெருவுக்கு வெள்ளாட களம்பிட்டாரு.’

‘அதுக்கேன்டி அலுத்துக்கிறவ. புள்ளைங்கன்னா வீட்டுக்குள்ளறயே பொத்திப்பொத்தியா வச்சிக்கமுடியும். அங்கணஇங்கண போயீ வெள்ளாடத்தானடி செய்யுங்க... அதுக்குப்போயி பெரிய இவளாட்டம்... ’

‘நீங்க இப்டியே சப்போட்டு பண்ணி பேசுங்க.. இப்ப இருக்குற மேலத்தெரு பசங்கள்லாம் சரியில்ல... அதுங்கள்ட பேசிப்பேசி... இப்ப இதுவும் எதுத்துப்பேச ஆரம்பிச்சிடுச்சி... ’

‘சரி வுடு... எல்லாம் சரியாப்போயிடும்...’

‘க்க்கும்... இப்டிச்சொல்லுற வாயித்தான்... நாளைக்கு கண்ணுகுட்டி வளத்த கழுசடயப்பாருன்னு சொல்லும். அப்ப வச்சிக்கிறேன் உங்கள... ’

‘அடிப்போடீ... மொட்டத்தலைக்கும் மொழங்காலுக்கும் இப்ப முடிச்சிப்போடுறவ. வளப்புங்கறது இதுயில்ல தெரிஞ்சிக்க...’

‘ஆமா... நாவொன்னும் தெரியாம கெடக்கேங்... நீங்க வாங்க சொல்லிக்கொடுக்க... ’

‘அடியே என்னாடி... நானும் பாக்கிறவ சத்தம் ஓவராப்போவுது...பாத்துக்க..’

‘அப்டியே உம்மகிட்ட சத்தம்போட்டுட்டாலும் அடங்கிப்போயிடுவீரு... பேச வந்துட்டாரு.. பேச்சு.. போய்யா சும்மா... ’

‘ஏய்... வாய மூடிட்டு..மொதல்ல.. சும்மாயிருடி...’



‘எதுச்சொன்னாலும் அப்டியே அடக்கிடுங்க... குடும்பத்துக்கே இதே பொழப்பாப்போச்சு..’

‘ஏய்..என்னய எதுனாச்சும் சொல்லு எங்குடும்பத்த சொல்லாத...ஆமா... ’

‘யோ..போயா.. உங்குடும்பத்தப்பத்தி எனக்கு தெரியாதா... எங்கப்பன் பேச்ச கேட்காம நான் உன்னத்தான் கட்டுவன்னு அடம்புடுச்சி கட்டுனனுல்ல.. எனக்கு இதும்வேணும், இன்னமும் வேணும்..’

‘அதுமாதிரிதான்டி நானும், ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா... எந்தலையெழுத்து உன்ன கட்டிகிட்டு மாரடிக்க வேண்டிகெடக்கு...’

‘ஆமா சும்மா கூட்டிட்டு வந்தமாதிரி பேசுற.. 15 பவுனு நகய எப்பன்ட விடாப்புடியா வாங்குணப்ப இந்த மாரு அடிச்சுக்கலையா... ’

‘அடியே எதுத்து எதுத்து பேசுறவ... அப்பறம் போட்டேன்னு வய்யி... தாங்க மாட்ட..’

‘ஆமாய்யா.. என்னய எப்பன் அதுக்குத்தான் பெத்து உட்ருக்கான்... அடிப்ப நீயி...??!!!’

(ப்ப்ப்ளார்.............)

‘ஆத்தாடி.....யோவ்... அடிச்சிட்டில்ல... இத்தன நாளு இல்லாம கைய நீட்ரளவுக்கு ஆயிட்டீல்ல.. இனிமே உங்கூட வாழமுடியாதுய்யா... நான் எப்பன் வீட்டுக்கு களம்புறேன்.’

‘போடீ...போடீ.... இவ இல்லன்னா வாழமுடியாது பாரு... பெரிய இவ... ’

‘ஆமாய்யா... இப்ப ஒனக்கு தெரியாது. நாளைக்கு எவடா கொஞ்சம் தண்ணி காச்சி ஊத்துவான்னு தெருவுல நிப்ப பாரு... அப்பதான் தெரியும்... ’

‘அடிப்போடீ.. ஆனா அந்த மடம்... ஆவாட்டிப்போனா சந்தமடம்.... ’

‘நாங்களம்புறன்ய்யா... நாளபின்ன எப்பன் வீட்டுக்கு வருவீல்ல .. சமாதானம் பேசிட்டு...அப்ப வச்சிக்கிறேன் உன்னய... ’

‘பூன கண்ண மூடுனா பூலோவம் இருண்டுடாதிடீ.. தெரிஞ்சிக்க... நாங் ஒருக்காலும் வரமாட்டேன்... ’

‘அதையும்தான் பாப்போம்...அப்பனும் புள்ளயுமா கெடங்க... ’

•••••••••

‘அம்மே..... அம்மே.......... எனக்கு அம்மா வேணும்...ம்ம்ம்....ம்ம்ம்..........’

‘என்ன நொம்மே... அதான் போயிட்டாள்ல.... எல்லாம் உன்னால... இனிமே மேலத்தெருவுக்கு வெள்ளாட போவ நீயி.... எங்க அந்த குச்சி.....

‘(போடு... 1.......2...........3...........)’

‘அவ்வ்வ்வ்வ்வ்வ்........................................... ’




Friday, February 26, 2010

ஆரம்பம் 1992...

1992. வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகளை தன்னகத்துள் நிரப்பியிருந்த வருடம். அவ்வளவு சாதாரணமாக எவர் நெஞ்சினையும் நீங்கும்படியான நிகழ்வுகளாக அவை அமையவில்லையென்பது இன்னொரு சிறப்பு. வெள்ளையனைக் கண்டால் வெளியேறு இல்லையேல் அவனின் எழுத்துக்கள் புதைக்கப்பட்ட ஏடுகளை வேருடன் அருத்தெறி என்ற எண்ணம் அனைவர் இதயத்தையும் கவ்விக்கொண்டிருந்தது. கூடவே சட்டமறுப்பு இயக்கங்களும். 25 பைசாவுக்கு துடைப்பானால் அடித்துக்கொண்ட காலகட்டங்கள் அப்போது மேகம் சூழ்ந்த வானமாயிருந்தன. தவறு செய்தலும், தப்பத்தெரிதலும் மிகையாட்கொண்டிருந்த காலகட்டமது.


அன்றைய நாளில் மிகமுக்கிய கோட்பாடாகவும், குறிக்கோளாகவும் அடிமனதில் தாளமிட்டது ஆங்கில எதிர்ப்பு. இலவசம் என்றபெயரில் அனைத்து புத்தகங்களையும் கொடுத்து, ஆங்கிலத்தையும் அதனுடன் திணித்துவிட்ட பள்ளிக்கல்வி நிர்வாகங்களை எப்படிச் சாடுவது. ஒரு நொச்சி சிம்புக்கு (குச்சி) பயந்து நடுங்கிய நாட்களில் ஆங்கில எதிர்ப்பை நடைமுறைப்படுத்துவதென்பது இயலாதவொன்று. அறவழிப்போராட்டத்தை வகுப்பறை நீங்கிதான் நடத்தவேண்டும் என்று சகலரைப்போலவே எனக்கும் தெரிந்திருந்தது. வகுப்பாசிரியருக்கு எங்களியக்கத்தின் வலிமையைக்காட்ட கருவேலங்காட்டுக்குள் கால்தடம் பதித்து பதுங்கியிருப்பதே சாலச்சிறந்ததென்ற எண்ணமிருந்தது. அங்கே கோலிகுண்டும், கூட்டாஞ்சோறுமாய் குதூகலப்படுத்தும் என் சக வீரனை நினைத்து அகமகிழ்வு பெற்றிருந்தேன்.


போராட்ட புதருக்குள் பதுங்கியிருந்த சில புல்லுருவிகளின் அடிமட்ட செயல்களினால் தலைமை ஆசிரியரின் கையில் தலையினைக்கொடுக்கவும் நான் தயங்கியதில்லை. இரண்டு மூன்று குட்டுகளுக்கு பயந்துவிடுவோம் என்று அவர் நினைத்திருக்கலாம். எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுத்துச்செல்லும் தைரியம் எனக்கும் வாய்த்திருந்தது. பெருமிதம் கொண்டிருந்தேன். ஆவாரம் பூவாக எவளோயொருத்தி எனக்கிந்த வாலிபத்தினையும், வாசத்தினையும் வழங்கியிருக்கவேண்டும். சுஜா. அவள் பெயராக இருக்கலாம். இந்த நன்வரலாற்றில் அவளையும் இழுத்துவிடுவது இழிவினைக்கொணரலாம். விலகிவருவோம்.


அம்மாதிரியானதொரு தருணத்தில்தான் தந்தையுடனான ஒத்துழையாமை இயக்கத்தையும் தீவிரப்படுத்தவேண்டிய கட்டாயமிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமலில்லை. ஒரு மதியவேளை ‘அதிமுக்கிய மட்டைவிளையாட்டுக்காக பள்ளிக்கு செல்லவில்லையென்று, உச்சி வெய்யில் உயிர்ச்சுடும் நேரத்தில் காலணி இல்லாமல் நிற்கவைத்த படுபாதக செயலைச் செய்தவர் அவர். உலகவரைபடத்தில் சிறந்த ஜனநாயக நாடாகக் கருதப்படும் நம் இந்திய தேசத்தின் அவஸ்த்தைகளை தட்டிக்கேட்கப் பிறந்தவொரு தனிக்குடிமகனுக்கு மட்டைவிளையாட்டு விளையாட அனுமதி மறுப்பதென்பது காலக்கொடுமையன்றி வேறென்ன சொல்வது. அதன்பொருட்டே இந்த இயக்கம். இதனூடேப் பிறந்த உண்ணாவழிப் போராட்டமும் செவ்வனே நடந்ததாய் அடிக்கோடிட்ட இவ்வரலாற்று வரிகள் உணர்த்துகின்றன.


ஏ, பி, சி, டி... என்று தொடங்கும் 260 எழுத்துக்களையும் (என் போராட்டங்களால் 26ஆக குறைக்கப்பட்டுள்ளதை அறிவேன்) படித்து சமாளிப்பதென்பது அவ்வளவுச் சுலபமல்ல. ஆங்கில அறிவுடையோர் அறிவர். கடுமைக்கும் கொடுமைக்கும் கால்முளைத்தார்போல் தோன்றும் அவ்வெழுத்துக்களே என் முதல் எதிரியாய் தெரிந்தது. பள்ளியில் கொடுத்த ஆங்கிலப்புத்தகங்களை மஞ்சள் பையில் புகுத்தி என் தாய்மொழியை கலங்கப்படுத்தியதுமில்லை அதுபோல் வழக்கமாய் புத்தகங்களுக்குப்போடும் சாம்பிராணியை அவைகளுக்கு காட்டியவனுமில்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததை ஒருபோதும் மறவாதவனாய் அந்த ஆங்கிலப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு அலைந்து திரிந்து ‘இதயம் மளிகைக்கடை அடைந்தேன். எதற்காக என்று நீங்கள் கேட்கலாம். சொல்வதும் என் கடமையென்றறிவேன். எடைக்குப்போடத்தான்(???!!!!). அப்படி கிடைக்கும் 25 பைசாவுக்காகவும், அதனால் வாங்கப்படும் 25 எண்ணிக்கை ஒரு பைசா மிட்டாய்க்காகவும் ஆசைக்கொண்டதால்தான் நான் இச்செயலை செய்தேன் என்றெண்ணலாம் நீங்கள். மறுப்பதற்கான காரணங்களை மேற்கூறியிருக்கிறேன்.



Wednesday, October 28, 2009

பவானி தேனீ...


காலேஜ்ல படிக்கிறப்ப ஒருத்திய காதலிச்சேன். ஆதலினால் டெய்லியும் அவ டேபிள்ல (அவ போனதுக்கு அப்பறம்தான்) ஒரு கவிதன்னு எழுதி வைச்சிட்டு வருவேன். மறுநாள் போய் பாக்குறப்ப அது இருக்காது. ரொம்ப பாசமா அத பிளேடால சொரண்டி வைச்சிருப்பா. அதுக்கெல்லாம் சளைச்சவனில்லங்கற கணக்கா நானும் விடாம எழுதி வைச்சிகிட்டே இருந்தேன். அவளும் டெய்லியும் அழிச்சிட்டு போய்டுவா.


திடீர்னு ஒருநாள் அவ இடத்துல நான் எழுதின கவிதைக்கு பின்னூட்டம் போட்ட மாதிரி


பவானி தேனி

பாலாசி பண்ணி


- ன்னு எழுதியிருந்துச்சு (அவ்வ்வ்வ்...). நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு. திடீர்னு இப்டி இருக்கே என்னடான்னு பார்த்தா அதுக்கு முதல் நாள் அவளோட அண்ணனுக்கு மாலைநேர வகுப்பு அதே கிளாஸ்ல நடந்திருக்கு. அதனாலத்தான் பாசமலர் அண்ணன் அன்ப பொழிஞ்சிருக்கார். அதுக்காகல்லாம் கவலப்படுறது நம்ம பரம்பரைக்கே பழக்கம் கெடையாதுல்ல. வழக்கம்போல வழுக்கத்தலயில எண்ண தடவுறமாதிரி அப்டியே போய்கிட்டிருந்துச்சு எதுக்குமே பிரையோசனமில்லாம.


கடைசியா நானும் மூணு வருசம் முடிச்சு நாலாவது வருசமும் பி.எஸ்.சிய படிச்சேன். அவ கரைட்டா மூணு வருசத்துல எல்லாத்தையும் முடிச்சிட்டு எம்.எஸ்.சிக்கு போயிட்டா. நான்தேன் நாசமாப்போனேன்.


அப்டி எழுதுன கவிதையில (நாமலே சொல்லிக்க வேண்டியதுதான்) ஒருசிலது கீழ தொங்கிகிட்டு இருக்கு (என்னோட பழைய டைரியில சுட்டது)



உன் கண்கள்

எழுதிய கவிதையில்

வளைத்துப்போடப்பட்ட

வார்த்தைகள் நான்.


******


காதல் மீன்கள்

உன் மனதில்

தூண்டிலுடன்

எத்தனை ஆண்களடி...



******


மடப்புறத்து மயிலே (மடப்புறம் அவளோட ஊரு)

என்னை

மடையனாக்கிய குயிலே. (ஆகா...தத்துவம்)


******


நான் பிறந்தது

அமாவாசையாம்...

உண்மைதான்

நீ பிறக்கவில்லையே...


******


உன்

கொலுசொலியால்...

கூவ மறந்த

குயில் நான்.


******


உன் பின்

வருகையில்

காற்றினில் அசையும்

துப்பட்டாகூட சொல்கிறது

வா...வா...என்று..


******

(பேருந்தில்)

முன்னிருக்கையில்

அமராதே....

எதிர்வரும்

வாகனங்கள்

முத்தமிடப்போகிறது.


******


முல்லைக்கு

தேர் கொடுத்தானாம்

பாரி...

மன்னித்துவிடு...

உன்னை

பார்த்திருக்கமாட்டான்.


******

இப்பவும் புரியல...அவ அண்ணன் ஏன் அப்டி எழுதினான்னு. இது ஒன் சைடு...டபுள் சைடு ஒண்ணு இருக்கு (அது ஒரு பெரிய கத....)


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...




Saturday, October 24, 2009

பாவக்கா கொழம்பு...


‘நண்பா...டெய்லியும் சாம்பார மட்டுமே சாப்பிட்டு அலுத்துப்போச்சு...‘

‘ஆமாம் நண்பா...காலையில பாவக்கா (பாகற்காய்) கொழம்பு வைப்போம்.’


••••

காலை 6 மணி...


‘என்னன்ன வேணும்...நான் மார்க்கெட்டுக்கு போயிட்டு வர்ரேன்’

‘பாவக்கா, வெங்காயம், தக்காளி, தேங்கா, கருவேப்பிள்ள, கொத்தமல்லி...’

‘ம்ம் சரி...நீங்க போயி அரிசி மூணு டம்ளர் ஊறவைங்க.’ நான் போயிட்டு வந்திடுறேன்.’

•••••


மார்க்கெட்


‘ம்ம்...எல்லா எவ்வளங்ணா?’

‘இருபத்தாரு...’

••••••


‘அரிசி ஊறப்பபோட்டுட்டீங்களா நண்பா?’

‘ம்ம்....போட்டாச்சு போட்டாச்சு...’

‘சரி நான் என்ன பண்ணட்டும்’

‘வெங்காயம், பூண்டுல்லாம் உறிச்சிட்டு, அத தக்காளியோட சேத்து வதக்கிட்டு...மொத்தமா போட்டு மிக்ஸியில அடிங்க’

‘டுர்ர்ர்ர்ர்........’

‘முடிஞ்சிடுச்சி....அப்பறம்...’

தேங்காய துருவி அதையும் அரைச்சிடுங்க....’

டுர்ர்ர்ர்..........’

‘ம்ம்ம்...முடிஞ்சிடுச்சு...’

‘எல்லாத்தையும் எங்கிட்ட குடுத்துட்டு நீங்க வேடிக்க மட்டும் பாருங்க...நான் எதாவது சொன்னா... செஞ்சா போதும்...’

’ம்ம்ம்....’

கடுகு’

இந்தாங்க’

எண்ணெ....’

இந்தாங்க

கருவேப்பிள்ள ’

இந்தாங்க’

‘எல்லாத்தையும் குடுத்துகிட்டே இருந்தா எப்படி? நீங்களே வந்து போடுங்க...முதல்ல தாளிச்சிட்டு பெறவு தேங்காய மட்டும் வைச்சிட்டு பாக்கி எல்லாத்தையும் சட்டியில ஊத்தி கொஞ்சம் தண்ணிவிட்டு கொதிக்கவிடுங்க...கடைசியா தேங்காய போட்டு கொஞ்சம் கொதிக்கவிட்டு இறக்கினா போதும்....நான் போயி அரிசிய கழுவிட்டு வரேன்.’

‘ம் சரி நண்பா...’

பட்..பட்...பட்....ப்ச்ச்ச்ச்......ச்சூ.........

‘நண்பா சிம்ல வைங்க...இல்லாட்டி தண்ணி மட்டும்தான் சுண்டும்...காயெல்லாம் வேகாது...’

‘சரி நண்பா....நீங்க பக்கத்து அடுப்புலேயே ரைஸ் குக்கர வைச்சிடுங்க....’


கொழம்பு ரெடி...

‘சரி நாலு விசில் உட்டு ஆஃப் பண்ணிடுங்க. நான் கடைக்கு போயி ஒரு டீ போட்டுட்டு...மணிக்கூண்டு வரைக்கும் போயிட்டு வரேன்.

‘ஓ.கே. மணிக்கூண்டுக்கு எதுக்கு?’

‘ம்ம்ம்...மணி பாக்கத்தான்.’

சரி சரி...பொண்ணுங்க வாட்ச்ல பாத்துடாதிங்க....அப்பறம் திரும்பி வர்ரப்ப ‘........’ இருக்காது. நான் போயி குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்.’

•••••


அனல் மேலே பனித்துளியே.........அலைபாயும்.....(செல்லிடபேசி)’

‘ஹலோ....சொல்லுங்க நண்பா’

சாப்புட்டீங்களா?’

‘ம்ம்...இப்பதான் சாப்பிட்டுகிட்டே இருக்கேன்.‘

‘கொழம்பு எப்படி?‘

‘சூப்பர்ர்ர்ர்.....ஆமா பாவக்காய என்ன பண்ணீங்க?‘

அடப்பாவி....அத கொழம்புல போடலையா?‘

கிழிஞ்சிது. நீங்க போட்டிருப்பீங்கண்ணு நான் விட்டுட்டேன்.‘

‘சரி விடுங்க...பேச்சிலர் சமையல்ல இதெல்லாம் ஜகஜம்....‘

‘தம்பி....?....என்ன சாப்பாடு என்ன கொழம்பு?’ பக்கத்துவீட்டு அக்கா.

அரிசி சாப்பாடும், பாவக்கா கொழம்பும்க்கா...‘

‘பாவக்கா கொழம்பா....ம்ம்...சாப்புடுங்க...சாப்புடுங்க...பாவக்கா உடம்புக்கு நல்லது.‘


‘?????......’


டிஸ்கி : இந்த கொழம்பு நேத்து காலையில வைச்சது. பேச்சிலர்ஸ்லாம் சேர்ந்து சமைச்சு சாப்பிடும்போது இதுமாதிரி நடக்கிறது சாதாரணமப்பா....


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO