க.பாலாசி: 2010

Monday, December 27, 2010

நன்றி என்னய்யா பெரிய நன்றி...

நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய அலைபேசிக்கு ஒரு பழக்கமிருக்கிறது, எப்போதும் ஊமையாகவே இருப்பது. அதற்கு அடிமையாகாமல் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கதைவிட்டாலும் அந்தளவிற்கு எனக்கு அழைப்புகள் வருவதில்லையென்பது உண்மை. மேலும் சீக்குவந்த கோழியின் தலைபோல அலைபேசியில் பேசிக்கொண்டேயிருப்பதும் எனக்கு பிடிக்காத செயல்தான். இந்த இரண்டு நாட்களாக என் அலைபேசி ‘சிரித்து’க்கொண்டேதானிருந்தது. சங்கமத்தைப்பற்றிய அழைப்புகள் மற்றும் கலந்துகொள்ளும் நண்பர்களின் அழைப்புகளென்று இந்த திருவிழாவில் பங்கேற்ற பெருமை என் அலைபேசிக்கும் உண்டு. இரட்டிப்பு மகிழ்ச்சி இப்போது உள்ளது. இப்படியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள் எல்லோரையும்  முதற்கண் வணங்குகிறேன்.

ஒரு பெரிய மலையை இரண்டுகைகளினால் புரட்டிப்போட்டதுபோன்ற பிரமிப்புணர்ச்சி எங்கள் குழும உறுப்பினர்கள் அனைவருக்கும் இருக்கிறது. இந்த முல்லைச்செடியை வளர்த்தது நாங்கள்தானென்றாலும் தேர்கொடுத்தவர்கள் நீங்கதானே. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் எங்களின் சங்கமத்தில்  இத்தனைப் பதிவர்கள் கலந்துகொண்டதையெண்ணி மிகவும் மகிழ்கிறேன்.  நாட்கள் நெருங்கநெருங்க எனக்கு கொஞ்சம் பயம் எடுக்கத்தான் செய்தது. எங்களது ஏற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தவேண்டுமே என்கிற இதயத்துடிப்புதான் அதற்கு காரணம். இப்போது வருகைதந்தோர் ஒவ்வொருவரும் இதைப்பற்றி சிறப்பாக கூறும் போது எங்களது உழைப்பு பயனுள்ளதாகிவிட்டது என்ற திருப்தியும் ஒட்டிக்கொண்டுள்ளது.

எங்களது உழைப்பு என்பது இந்நிகழ்வில் மிக மிக குறைவுதான். ஒவ்வொருவருடைய வாழ்த்தும் வருகையும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியில் அடங்கியுள்ளது. ஏதோவொரு சந்திப்பு நடைபெறுகிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்று சிரத்தையெடுத்துக்கொண்டு வருகைபுரிந்த பதிவர்கள் மற்றும் வாசகர்கள், மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டவர்களுக்கும், இந்த நிகழ்ச்சிக்கு அனைத்துவகையிலும் உதவியவர்களுக்கும் எனது நன்றியை தனிப்பட்ட முறையிலும், குழுமத்தின் சார்பாகவும் தெரிவிக்கிறேன்.

குறிப்பாய் இம்மாபெரும் விழாவிற்கு வருகைதந்த பெண் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்.

நன்றி என்னய்யா பெரிய நன்றி... கண்கள் பனித்ததும் இதயம் இனித்ததும்  (கலைஞர் உபயம்) எப்படியென்று மனதார உணர்ந்தேன். எல்லோருக்கும் இப்படித்தானே இருந்திருக்கும்...


நன்றி...நன்றி...நன்றி சொந்தங்களே!!!!


சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் பட்டியல்

மேலும் விரிவான இடுகை ஈரோடு கதிர் அவர்கள் பக்கத்தில்
 
 சங்கமம்‘2010 படங்களைக் காண இந்த சுட்டியை சொடுக்கவும்



Friday, December 24, 2010

மார்கழி மகோற்சவம்

இந்த மாதத்து காலைகள் இப்படித்தான் விடிகின்றன. வாசல் முருங்கை மரத்தில் அடைந்த கோழிகள் எழுந்துவர ஆறு ஆறரை ஆகிவிடுகிறது. உடலில் போர்த்திய போர்வையின் கதகதப்பை எரித்துக்கொண்டிருக்கிறது குளிர். குடிசைக்குள்ளிரங்கும் பனித்தூரல் பூனைகளின் உறக்கத்தைக்கூட கொஞ்சநேரம் வேடிக்கைப்பார்க்கிறது. முகனைப் பிள்ளையாரை துயிலெழுப்ப 4 மணிக்கே ஆயத்தமாகின்றனர் மைக்செட் காரர்கள். ‘கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?‘  மதுரை சோமுவின் குரல் அதிகாலைக் கனவினை முருகன் பக்கம் திருப்ப முயல்கிறது. போதாக்குறைக்கு ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ’ நாகேஷின் நடுங்கும் குரலில் திருவிளையாடல் வேறு. எப்பூவும் சூடாத கோலங்கள் இப்பொழுதான் சுமங்கலி வேடம் கொள்கிறது. மேலும் மழைவேறு பெய்தால் கேட்கவாவேண்டும்? தாழ்வாரத்தில் கட்டிவைத்த தூங்குமூஞ்சி சுப்பிக்கட்டுகள் மிதந்துபோகும். அடுப்பில் வறட்டித் துண்டுடன் காடா விளக்கில் மண்னெண்ணையை ஊற்றிப் பற்றவைக்கும் அம்மாவிடம் உதைவாங்கும் புகை, தென்னங்கூரையினூடே மலையைக் குடையமுனையும் மேகமாய்க் கடப்பதும் ஒரு கவர்ச்சிதான். விளாமிச்சைவேருக்கு விடுதலைக் கிடைத்து காய்ந்துகிடக்கும். வாசலில் சாணந்தெளித்து கூட்டவும், பெருக்கவும் தேவைப்படும் அதிகாலைப்பொழுது மழைகூட்டலில் அடைந்து போனதில் இன்னும் வேலைமிச்சம். அப்பாக்களின் தேநீர் கடைகள் அப்படியல்ல, எப்போதும் போலவே காதொட்டி முண்டாசு கட்டின தலைகளுடன் நிறைந்தோடும். மாட்டுத் தொழுவங்களின் நசநசத்துப்போன போன நாத்தம் வீதியெங்கும் விரவிக்கிடக்கும். கொஞ்சம் கொஞ்சம் தலைக் காட்டும் கதகத கதிரொளி தெருக்குழாய்களை நிழற்கோடாக்கிச் சிரிப்பதுகூட அழகுதான். நிற்க


அந்தக்கரையில் கூடின அலைகளின் நுரைக் குமிழ்கள் இன்னும் உடையவில்லை. அந்தக்கூடத்தில் சூழ்ந்த அனைவரின் மூச்சுக்காற்றும்கூட இன்னும் அங்கேயேத்தான் இருக்கும். மார்கழிக்குளிரில் ஒரு தந்திக்கம்பியில் ஒட்டியொட்டி அமர்ந்திருக்கும் குருவிகளை பார்த்திருக்கிறீர்களா? அந்த உடற்சூட்டில் ஒளிந்துகிடக்கும் நட்பெனும் செருக்கை உணர்ந்ததுண்டா? வாருங்கள் நமது ஈரோடு சங்கமத்திற்கு. ஒரு சேர கரம் கோர்க்கலாம். யார் யாருக்கோ எதெதுக்கோ பனிக்கும் கண்கள் நமக்கும் இந்நிகழ்வில் பனிக்கட்டும். மின்னஞ்சல் வழியும், அலைபேசிகள் வழியும் வந்துகுவியும் வாழ்த்துக்களும், வருகையை உறுதிப்படுத்துவதும் எங்களுக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அரங்கு இந்த ஜனத்திரளை தாங்குமா என்பதை பயத்துடனும் எதிர் நோக்குகிறோம். எப்படியாயினும் இதுவொரு மார்கழி மகோற்சவம்தான்.


.

Wednesday, December 22, 2010

ஒரு குழந்தையின் குமுறல்



விளை நிலங்களை விற்றாகிவிட்டது
மூலைக்கொரு வீடும் வந்துவிட்டது
காவலுக்கிருந்த அய்யனார்
கட்டிடத்திற்குள் வந்துவிட்டார்
இனி கவலையில்லை.

*******

பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம்
சாயுங்காலம் டியூசன்
விடுமுறையென்றால் வீடியோ கேமும் உண்டு
வேறென்ன குறைச்சல்
எங்கள்வீட்டு நாய்க்குட்டியும் இப்படித்தான்.

*******

கட்சிக்கும் நடிகனுக்கும்
பளபளக்கும் பதாகைகள் 
பட்டினியில் செத்தவன் பிள்ளை
சிரிக்கிறான் வலது ஓரத்தில்..
பெரியதாய் படம்போட்டு... 

*******

விதர்பாவைப்பாருங்கள்
தண்டகாருன்யாவைப்பாருங்கள்
அய்யோ என் இனமே செத்துவிட்டதே
போராடுவோம்.. போராடுவோம்...
திரட்டியில் இணைத்தால் வேலை முடிந்தது
ஹலோ? என் கேபினுக்கு டீ வரல.

*******

எல்லாரும் திருடனுங்க
அத்தனையும் ஊழல்
யாருவீட்டு காச யாரு திங்கறது?
இந்தமுறை ஓட்டுப்போட
தலைக்கு ரெண்டாயிரம் வேணும்...

*******

அக்காளுக்கு போட்ட நகைநட்ட
நம்ம கல்யாணத்துல புடுங்கிடலாம்
கூடவே ஒரு டூவீலரும் கெடைச்சிடும்
ஜாம்..ஜாம் கல்யாணம்தான்
தாலிதானே குத்தும்.. பரவாயில்லை.

*******

செத்தவன் சேதி சிறுத்துக்கிடக்கும்
முக்கியமானது ஒரு மூலையில்
அரசியல்வாதி கோமணம் அங்கங்கே
போதும் போதும்.. ஆனது ஆகட்டும்
நடிகனின் மசிருக்குள் தேடலாம்
பத்திரிக்கை தர்மத்தை.

********



.

Tuesday, December 14, 2010

அனைவரும் வருக!!!

அதிகாலைநேரத்தில் பனிப்புகையுடன் தொண்டையில் பரவும் சூடான தேநீர், மழைக்காலத்தே பசியிலலையும் எறும்புக்கூட்டங்களுக்கு சாமிமாடம் முன்பு போடப்பட்ட அரிசிமாக் கோலம், மார்கழிமாதக் காலையில் சாணந்தெளித்த வாசலதில் வைத்த மகரந்தம் மிளிரும் பூசணிப்பூ, எரியூட்டப்படும் மண் அடுப்புகளில் கிழக்கு நோக்கி முதலில் பொங்கும் வெண்சோற்றுப்பானை, தூரதேசம் வாழும் மகனின் கையில் தாய் தன்கைப்பட சுட்டுக்கொடுத்த முறுக்கும், அதிரசமும் கிடைக்கும் நேரம், இருளடர்ந்த வீட்டினரையில் விளையாடும் குழந்தையின் கையிலிருக்கும் விளக்கெரியும் பொம்மை, தீப்பிழம்புகள் காடழிக்க நல்லரவத்திற்கு கரையான் புற்று கண்படும் நொடி, முதலில் பிரசவித்த குழந்தைக்கு தாயவள் தன் மார்க்காம்பை வாயிற்புகட்டும் தருணம், போலவே வருகிற திசம்பர் 26 ம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கின்ற பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கான மாபெரும் சங்கமம்‘2010.

இணையத்தில் இணைந்த கண்கள் இச்சங்கமத்தில் சங்கமிக்கட்டும். காத்திருக்கிறோம் அனைவரின் அகமும் புறமும் மகி(ழ)ழ்த்த.

நாள்         : 26.12.2010 ஞாயிறு
நேரம்      : காலை 11.00 மணி
இடம்       : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
                       URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம்: -

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும்.

உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!

தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.


.

Friday, December 10, 2010

காஞ்ச மலர்

எந்த திசையுமின்றி விசைகளுக்கேற்ப ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. பறவையன்றி, விமானத்தின் நிழல்போல ஒரு செயற்கை நேர்கோடு பின்தொடர்ந்தே வருகிறது. குருவிகள் இறந்தபின்னும் கூண்டுக்குள் சிதறிக்கிடக்கும்  இரைகள்போல எதோவொன்று இருக்கத்தான் செய்கிறது. எதேச்சையாக பார்க்கின்ற ஓர் உயிரின் மீதான பரிவும் பச்சாதாபமும் ஆயிரம் மரங்களில் தன்னுடைய வசிப்பறியும் கோடைக்கால பட்சிகளாய் அமர்ந்துகொண்டு பழையதை உடைத்துக்காட்டுகிறது.

அந்த இலுப்பைத் திடலில் சுள்ளிப் பொறுக்கும் பெண்களுக்கும், காலைநேரத்தில் நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் செய்து உடலைக்கரைக்கும் ஜாம்பவான்களுக்கம்,  அருகிலுள்ள சாராயக்கடையில் மொய்க்கும் ஈக்களுக்கும்கூட அவளை நன்றாகவே தெரியும். நான் பார்க்கும் பொழுதுகளில் எப்போதும் ஒரு இலுப்பை மரத்தை உதைத்துக்கொண்டேயிருப்பாள். புழுதியில் கருத்துப்போன நாடா அறுந்த பாவாடையும், அதன்மேல் இறுக்கி கட்டப்பட்ட ஒரு சணல் கயிறும், ஜாக்கெட் என்று சொல்லமுடியாதபடிக்கு ஆங்காங்கே உறிந்து தொங்கும் ஏதோவொரு மேலங்கியும் அவளின் அடையாளத்திற்கு போதுமானது. பள்ளிப்பருவத்தில் அதன் பக்க மைதானத்தை மேயும்  இளம்பிஞ்சிகளுக்கு அவள் ஒரு பொருட்டல்ல.

ஒருகட்டத்தில் அவளை அன்றாடம் காண்பது என் வழக்கமாயிற்று. மரத்தை அவள் உதைக்கும்போது வசை வார்த்தைகள் சரமாரியாக வந்துகொண்டேயிருக்கும். கண்டிப்பாக அவள் ஒரு ஆண்மகனை உருவகப்படுத்திதான் மரத்தினை உதைத்திருக்கிறாள். சரிதான் எத்தனைப் பெண்களுக்குத்தான் தைரியம் இருந்திருக்கிறது புத்தி சுவாதீனத்துடன் ஓர்  ஆடவனை  உதைக்க? அவளைக் கடந்தபின்பும் வெகுநேரம் அவளிடமே மனது சுற்ற ஆரம்பித்தது. இவள் மட்டும் ஏன், இப்படி, எப்படி, உண்டு, உடுக்க என்ன செய்வாள்? எத்தனையோ கேள்விகள் அலைந்துகொண்டேயிருக்கும். ஒருநாள் மாலைவேளையில்தான் கவனித்தேன். எவனோவொருவன் ஒரு பாக்கெட்டை (சாராயம்) அவளிடம் கொடுத்தான். வாஞ்சையுடன் அவரசமாக மடிக்குள் புதைத்துக்கொண்டாள். மறுபடி அவன் நின்றானா போய்விட்டானா என்பதை கவனிக்கவில்லை.

அருகிப்போன மானுடப்பண்பு எங்கும் கோலோச்ச இனியேதும் காலமிருக்கிறதாயென்ன? கொஞ்சமாக அவளை கவனிக்கத் தொடங்கினேன். அவள் உடலில் மாற்றம். சிறுது காலம் கழித்து அவள் கைகள் நிறைய பழைய வளையல்களை அணிந்திருந்தாள். நெற்றியில் எதோ கொஞ்சம் சிகப்பு நிறம். முதலில் ரத்தமாக இருக்குமென்று நினைத்தேன். இல்லை. அவள் உடலில் வயிற்றுப்பகுதி பெரிதாக இருந்தது.  எனக்கு புரிந்தது, அவள் கருத்தரித்திருந்தாள். நாடெங்கிலும் அலையும் காமக்கண்களுக்கு ஏது பஞ்சம், எவனோ ஒருவன் காரணமாக இருக்கலாம். ஒரு புத்தி சுவாதீனமற்றவளை தின்றுப்பார்த்தவன் எந்தக்கொம்பனாக இருப்பான்? என்னால் யூகிக்க முடியவில்லை. மீண்டுமொரு இடைவெளி. பிறகு அவளைப் பார்த்தநாள் ஆற்றமுடியாத பாரத்தை கொடுத்தது. அவள் இறந்துகிடந்தாள், ஈக்கள் மூடிய உடலுடன். அருகில் கிடந்த அவளின் கிழிந்த ஆடைகளெங்கும் மர்மக்கறைகள். அந்த இலுப்பை மரம் அப்படியேத்தான் இருந்தது.



.

Friday, November 26, 2010

கௌரவம் - ஆ

காதுல கிடக்கிற
குண்டுமணி சைஸ் தோடும்
கையில இந்த
அலுமினிய வளையலும் போதும்

கழுத்துக்கு மட்டும் எப்போதும்போல
சந்திராவோட முருக்கு செயின்
ஏன்னா..
அதுதான் எடுப்பாயிருக்கும்.

அவளும்
அதே கல்யாணத்துக்குப்போனா
இருக்கவே இருக்கு
சரசோட இன்னொரு சீரகச் சங்கிலி

ஒரே தெருவுல விஷேசம்னா
வேறவழியில்ல..
கழுத்தொட்டிக் கருத்துப்போன
சிதம்பரம் கவரிங்‘தான்

கிராக்கி பண்ற
சகுந்தலாகிட்டயும் கல்யாணிகிட்டவும்
எப்பவுமே கேட்கிறதில்ல

நமக்குன்னு
ஒரு கௌரவம் இருக்குல்ல.



••••••••••••••••••••


பூன் கட்டின மூங்கித்தடியும்
ஒரு கம்பி விட்டுப்போன குடையுந்தான்
தர்மலிங்க தாத்தாவோட அடையாளம்

ஒரு கல்யாணம் காட்சி
நம்ம திம்மன்னா
சும்மா கூப்பிட்டாப்போதும்
எட்டு மொழ வேட்டியும்,
காசித்துண்டோடையும் வந்திடுவாரு

வாசல்ல நிக்கிறவன்
வாங்கன்னு
கூப்பிடலன்னா அவ்ளோத்தான்

மொய்ய எழுதிட்டு
வீராப்பா போயிடுவாரு

அவர் கால்லதானயா செருப்பில்ல
கௌரவத்துக்கு என்ன குறைச்சல்.



கௌரவம் - அ



.

Friday, November 19, 2010

ஏன்யா இந்த காண்டுவாதம்?

சாதாரணமாவே கல்யாணம் முடிச்சு புதுபொண்டாட்டிய அம்மாவோட விட்டுட்டுப்போற வெளியூரு மாப்ளைகள் பாடு திண்டாட்டம். இதுல பயபுள்ள ஃபாரின்ல இருந்தா கேக்கவாவேணும். இப்டித்தான் எதுத்த வீட்லையும், பக்கத்தால லலித்தாக்கா, அதுக்கடுத்தால ஆனந்தி பெரிம்மா வீட்லையும் பசங்களுக்கு கல்யாணம் முடிச்சி அந்தப்பயலுங்க மூணுமாசம் லீவு முடிஞ்சி ஃபாரின் போயிட்டானுங்க. ஒரு வருசம் முடிஞ்சி புள்ளப்பெத்தபெறவுன்னு அதுவரைக்கும் மாமியா மருமகக்குள்ள எந்த பிரச்சனையுமில்ல. பாராட்டத்தான் செய்யணும். லைட்டா ரெண்டாவது வருசம் தீவாளி, பொங்கலுக்கு வரிசை வய்க்கிறப்பத்தான் எழவெடுத்த சண்ட ஆரம்பிச்சுது. முதல்ல லலித்தாக்கா வீட்ல. அஞ்சு தட்டு நெறைய சாமான்ங்கள  பொங்கச்சீரா அடுக்கிக்கொண்டுவந்தாலும் நொட்டாரம் சொல்ற மாமியாக்காரிங்க எங்கதான் இல்ல. அந்த நொல்லக்கண்ணு லலிக்கு மட்டும் இல்லாமலா போயிடும். என்மொவன் வெளிநாட்ல அவ்ளோ சம்பாரிக்கிறான், நாதியத்த குடும்பத்துல பொண்ணுகட்டி ஒண்ணுத்துக்கும் வழியில்லாம போயிடுச்சுன்னு அக்கம்பக்கத்து அக்காக்களோட சாயந்தரம் ஆனா கதையளக்க ஆரம்பிச்சிடும். கடைசியிலப்பாத்தா இந்தம்மாளோட பொண்ணுக்கு புருஷங்காரனவிட்டு மணியார்டர்ல 200, 300 ஓ அனுச்சிட்டு அடுத்தவன கொறசொல்லும். 

ஆத்துக்குப்போறவ அன்னாந்துகிட்டே போவாளாம், கூத்துக்குப்போறவன் குனிஞ்சிகிட்டே போவானாம் அந்த கதையா பெட்ரூமு, பைப்படி, அடுப்படி, சன்டிவி, ஆனந்தவிகடன், மாட்டுக்கொட்டா, ஏனம் வௌக்கறது, துணி தொவைக்கிறதுன்னு தன்னோட கோவத்தல்லாம் காட்டிட்டே பொழுத ஓட்டுற மாட்டுப்பொண்ணு சும்மாவா இருப்பா. தன்ன திட்டினாலும் கோவப்படாத எந்த பதுசான மனுஷிக்கும்  அப்பனாத்தால திட்டனா பொசுக்குன்னு வரத்தான் செய்யும். கோவத்துல ஒன்னு அழுவா, இல்லன்னா டக்குன்னு எதாவது ராங்கி ரப்பான வார்த்தையா கொட்டிடுவா. மாமியாளோட ஆட்டத்த ஆரம்பிக்க இதோட காரணம் வேணுமாயென்ன. அப்பறமென்ன ஈருகுளில்ல மாட்டின பேன் கதைதான் புதுப்பொண்ணோட பொழப்பு•. அது என்னமோத் தெரியல. எல்லா மாமியாக்காரிகளும் அம்மாவா இருக்கிறவரை நல்லாத்தாங்க இருக்குதுங்க. மருமக வந்தா அப்டியொரு குஜால் ஆயிடுதுங்க. சிக்கிட்டாடா ஒரு அடிமைங்கிறமாரி. 

ஈர நாக்குல யாருக்குத்தான் எலும்பிருந்திருக்கு. தெருக்கள்ல பாத்திங்கன்னா கட்டுக்கழுத்திங்கன்னு நாலுபேரு இருக்கும்ங்க. எங்கன கல்லு கருமாதி, நல்லதுகெட்டது, சாதி சடங்கு, சீமந்தம், வளயகாப்புன்னாலும் ஆரத்தியெடுக்கறதுக்கும் அம்மிக்கல்ல தூக்கி நேரா மூணு சுத்து, ரிவர்ஸ்ல மூணு சுத்து சுத்தறதுக்கும் இதுங்கத்தான் முன்னாடிப்போயி நிக்குங்க. ‘யக்கா பாத்துப்பாத்து கொண்டாந்த மருமவ ஒன்னையே எதுத்து பேசிட்டாம்ல. அப்டி என்னக்கா அவ்ளோ அதப்பா அவளுக்கு’ன்னு மூக்குப்பொடிய மூஞ்சிலத்தூவினாமாரி ஏத்தி விட்டுடுங்க. இதுக்கெடையிலத்தான் ரூமுக்குள்ள குமுறி குமுறி உட்காந்திருக்கிற மருமவ சிறிக்கி ஏர்மெயில் கவர் வாங்கி கண்ணீர் கடிதத்த ஆரம்பிக்கும்.. ‘அன்புள்ள அத்தான், அவ்வ்வ்வ்வ்வ்வ்....... ’ அதுக்கப்பறம் சொல்லவா வேணும், வந்தது போனது, நடந்தது நடக்காதது எல்லாத்தையும் நாலு பக்கமா எழுதி போஸ்ட் ஆயிடும். 

அதுக்கு முன்னாடியே ஆத்தாக்காரி 8 பக்கத்துக்கு கொறயாம எதுத்தவீட்ல எவனாச்சும் என்னாட்டம் இளிச்சவாயன் இருந்தான்னா எழுதச்சொல்லி ‘இங்க பாருடா மோகனு, உம் பொண்டாட்டி சரியில்ல, எது சொன்னாலும் எதுத்து எதுத்து பேசுறா, எதாச்சும் வேல சொன்னா மூஞ்ச சுழிச்சிக்கறா, ஆவூன்னா ரூமுக்குள்ள போயிடுறா, கரண்டு இல்லன்னா இந்த கொடகல்லுல ஆட்டுனா என்னா? அதகூட செய்யமாட்டுறா, அதென்னமோ குசுகுசுன்னு ஒரு நாளைக்கு ரெண்டு தரம் அவவீட்டுக்கு போன் பண்ணி கொறசொல்றா, போன் பில்லு நறையா வருது, சோறு போடுறப்ப தட்ட கீழ வச்சி சல்லுன்னு தள்ளிவிடுறா, உங்கொழந்தைய கொஞ்சநேரம் கொஞ்சக்கூட விடறதில்ல, சாயந்தரம் ஆனாவே பொட்டுதான் பூவுதான் சென்ட்தான். மேக்கப் போட்டுகிட்டு சித்ரா வீட்டுக்கு போயிடுறா, அவளும் இவளும் என்னதான் அப்டி பேசுவாங்களோ தெரியல, திரும்பி வர 9 மணிஆவுது. அதுவரைக்கும் எனக்கு சோறு போடறதில்ல. பேசி முடிச்சிட்டு வந்தப்பறம்தான் எனக்கு சோறு போடுறா. நானே போட்டு சாப்புட தெம்பாயிருக்கு. அவளோட சேர்மானம் சரியில்ல சொல்லிட்டேன் ஆமாம். அப்பா அன்னைக்கு எதோ சொன்னதுக்கும் எதுத்து பேசுறா, இது சரியில்ல. நானும் நீ மனசு கோணக்கூடாதேன்னுதான் எல்லாத்தையும் பொருத்துக்கிறேன். இப்பவும் நீ நல்லாருக்கனும்னுதான் நெனக்கிறேனே ஒழிய நான் என்னத்த மூட்டக்கட்டிகிட்டு போவப்போறேன் (ரெண்டு சொட்டு கண்ணீரு) சொல்லு. உம்பொண்டாட்டிய அடக்கி வைய்யி, இல்லன்னா உம் அம்மாவ நீ உசிரோட பாக்கமுடியாது. அவ்வ்வ்வ்வ்’ அப்பறம் எடையில எடையில மானே தேனே பொன்மானே.....

ங்ங்கொய்யால இந்தமாதிரி லெட்டர படிக்கிறவன் துபாயிலையும், சிங்கப்பூருலையும் நிம்மதியா வேலை செய்யமுடியும்கிறீங்க. ஏறச்சொன்னா எருதுக்கு கோவம் வரும், இறங்கச்சொன்னா நொண்டிக்கு கோவம் வரும்னு ஒரு பழமொழி உண்டு. இந்த மத்தளத்துல ரெண்டுபக்கமும் அடிவாங்குற தோலு மாதிரி கல்யாணம் முடிச்சிட்டு ஃபாரின் போற மாப்பிள்ளைங்க பொழப்பு நாத்தப்பொழப்புங்க. இதுங்க ரெண்டுபேரையும் சமாளிச்சு ஒருவழியா ஓஞ்சிப்போயிடுவான் அந்த படுபாவி. அது ஏன்டா உனக்கு இந்த ஃபீலிங்குன்னு நினைக்கிறீங்களா? ஏரி நிறைஞ்சா கரை கஸ்ஸ்ஸ்ஸியத்தானங்க செய்யும். எங்கத்தெருவில அஞ்சாரு குடும்பங்கள்ல இந்த நெலமத்தாங்க. இதெல்லாம் நெனச்சுப்பாக்குறப்பதான் ஏன்யா இந்த காண்டுவாதம்னு தோணுது.  



Friday, November 12, 2010

பாட்டி...

வெற்றிலைக்காம்பை கிள்ளி
வெகுசுலபமாய்
வாசல் குப்பைகளில்
போட்டுவிடுகிறாள்

நீண்டுத் தொங்கும்
காதுமடல் குண்டலத்தை
இழுத்து விளையாடும் விரல்களிலிருந்து
விடுதலையும் கிடைத்தாயிற்று

உறங்கச்செய்யப் பாடும்
‘என் செல்லமே கண்ணுறங்கு’
தாலாட்டும் கதைகளும்
நின்று காலமாகிவிட்டது

முந்தியில் முடிந்திருக்கும்
ஒன்றிரண்டு ரூபாயைப்பிடுங்கி
கடுக்காய் மிட்டாய் வாங்கிச்
சாப்பிடவும் யாருமில்லை

குடலேற்றம் வந்தால்
முதுகை தட்டி வயிற்றை நீவி
குணமாக்கவேண்டிய கடமையும்
இல்லாமல் போனது

எங்கள் வீட்டில்...
மின்சாரம் நின்றால் திரும்பிப்பார்க்க
அம்மியும் இருக்கிறது
அவளும் இருக்கிறாள்.


..

Friday, October 29, 2010

நந்தி...

பிரதோஷந்தோரும் மௌன விரதமிருக்கும் பழக்கம் எனக்குண்டு. ஏன் ஆரம்பித்தேனென்று தெரியவில்லை. பெரும்பாலான ஆண்கள் இவ்விரதமிருப்பதில்லை. ஆனால் நானிருக்கிறேன். இந்தநாளில்தான் ஒருவேளை உணவுக்கும், அவ்வப்போதைய தொண்டை நனைத்தலுக்கும் இந்த உதடுகளை புணரவிடுதல் போதுமானதாக இருக்கிறது. மேலும் ஒரு தனி அறை முற்றிலுமொரு மயான அமைதியை தரவல்லதாதலின் இவையெல்லாவற்றிற்கும் உகந்தது. இன்று மாலை ஈஸ்வரன் கோவில் செல்லும்வரை இதுதான் என்னுலகம். இந்த சாலை பார்த்தமாதிரியான சன்னலும் வடக்கிலிருந்து வீசும் மெல்லிய கிழிசல் காற்றும் அனுபவிக்க அனுபவிக்க சுகந்தம். மனிதிலிருக்கும் தாண்டவ அமைதி இந்த நாளை தவிர்த்து மற்றைய நாட்களில் கிடைப்பதில்லை என்பது என் அனுபவ உண்மை.

இந்த தனியறையில் வியாபித்திருக்கும் அத்தனைப்பொருட்களுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது. அதையுணரக்கூட எனக்கிந்தப் பொழுது தேவைப்படுகிறது. இந்த நாற்காலி, மேசை, அரிக்கன் விளக்கு, சுவர் மூலையிலிருக்கும் அடுக்குப்பானைகள், மேசைமீது அடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள், அந்த எம்ப்ராய்டரிங் திரைச்சீலைகள் இப்படியாவும் இந்தவொருநாளில்தான் அழகாய் தெரிகிறது, மற்ற நாட்களில் எனையாட்கொள்ளும் இயந்திரத்தன்மை இவையனைத்தையும் கண்மூடி மறைத்துவிடுகிறது. இந்த நாளும், நான் பார்க்கும் இந்த சாலையும் அதில் பயணிக்கும் மனிதர்களும் என் பெருஞ்சுமையென்பது யாருக்குத்தெரியும்?. ஏனோ தெரியவில்லை, இதையனைத்தையும் நானே விரும்பி ஏற்கிறேன். ஒரு நாள் முழுதும் மலரும் அனைத்துப்பூக்களும் பூஜைக்குரியதாகவோ அல்லது ரசிப்பதற்குகந்ததாகவோவா இருந்துவிடுகிறது? எதோவொன்றேனும் குறைபட்டுதான் விடுகிறது. அதுபோலவே நான்பிறந்த அன்றையநாளில் என்கால்கள் விண்ணப்பட்டிருந்தது. ஈஸ்வரன்கோவில் நந்தியினுருவம் உங்கள் மனதிலிருக்கும். அதுபோல்தான் எனக்கும் எப்போதும் அமர்ந்தநிலை. அதற்காக எந்த ஈஸ்வரன் என்னெதிரே அமர்ந்திருக்கிறான் அல்லது அனுதினம் விஷேசப்படுகிறானென்று தெரியவில்லை. அதன் கால்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அந்தப்பெரிய நந்தியின் கால்கள் எவ்வளவு சிறிதாக சோம்பிக்கிடக்கும், அதேதான். இப்போது என்னை உருவகப்படுத்துங்கள்.

மனைவி மக்கள், குடும்பச்சுமை, உறவுகள், நல்லதுகெட்டது, நாள் கிழமை இப்படியிவை எதுவுக்கும் லாயக்கற்றவனென்பது எனக்கு கொடுக்கப்பட்ட வரம். கொஞ்சம் வசதியானதுதான். சென்றமாதம் நான்சென்ற வினோத்தின் திருமணம் நீங்கலாக வேறெதிலும் நான் பங்கேற்பதில்லை. அவன் என் பால்ய சிநேகிதன். அவனல்லால் வேறொருவன் என்னை வெகுவாக கவர்ந்ததில்லை. ஒவ்வொருநாளும் என்னை மொய்க்கும் பரிதாபக்கண்களுக்கு மத்தியில் அவன் என்னை உணர்ந்தவன் என்றால் மிகையில்லை. எவ்வளவு ஆழமான நட்பு அவனுடையது. நினைத்துப்பார்க்கையில் இப்போதும் இனித்துக்கொண்டேயிருக்கிறான். பதினெட்டு வருட நட்பில் இடையில் மனக்கசப்பில் ஒருவருடம் பேசாமல் இருந்திருக்கிறோம். என்தவறுதான் அது. அதுவொரு ஆழ்ந்த வலி, இருவருக்குமே.

அன்றைய நாளில் எனக்கு அறிமுகமானவன்தான் சிவா. அவன்மூலம்தான் இந்த அலுவலகப்பணி எனக்கு கிடைத்தது. இதுவும்கூட ஒரு ஆத்மார்த்தமான நட்பு. ஆயினும் என்னுள் எழும் பொறாமைக் குணம் அனைத்தையும் கெடுத்துவிடுமோ என்ற அச்சம்மட்டும் இருந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொருநாளும் அவன் அலுவலகத்திற்கு வரும்விதம், நடையுடைகள், பாவனைகள். வெகுவாக இம்சிக்கிறது. கட்டுடலும் செந்தோல் கவர்ச்சியுமிக்க ஒருத்தியை கண்கொட்டும் பார்வையில் அள்ளித்தின்னும் உணர்வு எந்தவொரு பருவமெய்தவனுக்கும் இருக்கத்தான் செய்யும். அதுபோலவே அவனின் தோற்றமும் நடையுடையும் என்கண்களை கொத்திக்கொள்கிறது. என்ன செய்ய? என் ஊனம் பிச்சிப்பிடுங்கும் கழுகாக சாகடிக்கிறது. நான் வணங்கும் தெய்வம் எனையேன் இப்படி சபித்தது, சபிக்கிறது என்று எண்ணும்போதெல்லாம் இவ்வுடலின் மீதுரும் வெறுப்பு அளவில்லாதது.

நான் மாற்றுத்திறனாளியாம், சிறகற்றப் பறவைக்கு இச்சமூகம் காட்டும் அற்ப அக்கறை. எந்த கொம்பனுக்கு தெரியும் என் அன்றாட அவஸ்தைகளும், வேதனைகளும் இன்னபிறவும். பார்ப்பதற்கு நானொரு சக மனிதன்தான். ஆனால்..ஆனால்...இந்த கால்...ச்சை..ச்சை.. சிவா மீதான நட்பு எப்போதும்போலிருப்பினும் அவன் மீதான வெறி என்னுள் தலைதூக்கத்தொடங்குகிறது. அதிலும் அவன் கரும்பச்சை பேண்ட், அதற்கு தகுந்தார்ப்போல் அணியும் வெளிர்நிற சட்டையும் நடக்கும்போது இடது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டுச் செல்வதும்.... என்ன சொல்ல? அவன் கோப்புகளைச் சுமந்து எனைகடக்கும்போதும், அலுவலகத்தில் இடையிடையே நடந்துசெல்லும்போதும் என்னையறியாமல் அவனை சபிக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள். என் மீது எனக்கே பரிதாபம் உண்டாகும் அல்லது உண்டாக்கும் கணங்கள் யாவிலும் என் சாபம் எவரையோ நோக்கி பயணிக்கிறது.

இந்த நேரத்தில் என்னைப்பற்றி என் நாட்குறிப்பேட்டில் எழுதிய வரிகள் ஒன்று ஞாபகம் வருகிறது. ‘என் வாழ்க்கை இருட்டறையில் எழுதப்பெற்றதொரு தொடர்கதை‘ எவ்வளவு உண்மை. இதையேன் எழுதினேன் தெரியவில்லை. எதோவொரு அற்பாசையும் அதன்மூலம் பெற்ற வெறுமையும் இதை எழுத காரணமாயிருந்திருக்கக்கூடும். இப்போது ஞாபகம் வருகிறது. ஒரு நாள் நான் எழ முயன்றேன். என் உள்ளங்கால்களை இப்புவியிலழுத்தி நிற்க முயன்றேன். எவர்எவர் மீதானோ ஈர்ப்போ வெறியோ எனையிப்படி செய்யத்தூண்டியது. ப்ச்..இது தோல்விதான் என்பது தெரிந்தே செய்யப்பட்ட முயற்சி. எல்லோருக்கும் ஒரு கனவிருக்கும். எனக்கும் இருக்கிறது இவ்வாழ்நாளில் ஒருநிமிடமேனும் சிவாவைப்போல வாழ்ந்து இல்லையில்லை நடந்துவிடவேண்டும். ஸ்டைலாக இந்தக் கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு கோப்புகளை அலுவலக அறையெங்கும் எடுத்துச்செல்லவேண்டும். அப்படியே இறந்துவிடலாம். என் பிறவிப்பயன் முழுமைபெறும். இப்போது ஈஸ்வரன்கோவில் செல்கிறேன். வழக்கம்போல நந்திதான் இன்றைய முக்கியஸ்தர். எனக்கு அதன் கால் மட்டுமே.


.

Monday, October 25, 2010

ஒரு கூடும் சில குளவிகளும்

நான் வந்த பேருந்தில் ஏறியவர்கள் கணவன் மனைவியாக இருக்கவேண்டும். தொடை உயரம் ஒரு மகன், இன்னொரு குழந்தை அப்பன் தோளில் தூங்கியது. அவர் கையில் பால் பாட்டிலும் தயாராகவே இருந்தது. பேருந்தினுள் நான்குபேர் இடைவெளியில் இருவரும் நின்றுகொண்டார்கள். மூக்கொழுகும் பெரிய மகன் அவளின் காலை கட்டிக்கொண்டான். ஒரு கையால் மேல்கம்பியை பிடித்துக்கொண்டாலும், மறுகையில் துணியடைத்த குச்சிப்பையை வைத்துக்கொண்டாள். ஒருவரின் மூச்சுகாற்று அடுத்தவர் முதுகில் சூட்டைப்பரப்புமளவு கூட்டம். இருவர் இருக்கையில் அமர்ந்திருந்த குண்டு சிறுக்கிகளுக்கு மூன்றுபேர் இருக்கையே தாங்காது. அவர்களின் தள்ளுமுள்ளலும் இவளுக்குத்தான் இடைஞ்சல். அவ்வப்போது விலகும் மாராப்பையும், இடுப்புச்சேலையையும் சரிசெய்துகொண்டாள். அருகருகே நிற்கும் ஆண்களின் இடிசலுக்கும், நடத்துநர் நடையழகுக்கும் ஓர் உடலங்கத்தை அவள் ஒதுக்கிவைத்தே ஆகவேண்டும். இந்த மேடுபள்ள சாலையில் பயணிப்பதில் ஆண்களுக்கே அடிவயிறு கலக்கும் அபாயம் உண்டு. ஐந்தாவது முறையாக பெரிய மகனின் ஒழுகும் மூக்கை முந்தானையால் துடைத்துவிட்டாள். ஒரு வேகத்தடையை கடந்தது பேருந்து. அப்பனிடம் தூங்கிய குழந்தை விழித்துக்கொண்டது. இவளைப்பார்த்து அழத்தொடங்கியது. அவர் பாலைக்கொடுத்து சமாதானப்படுத்த முயன்றார், குடிக்கவில்லை. அனைவரும் கவனிக்க தொடங்கினர், சிலருக்கு எரிச்சலும்கூட. அப்பன் கையில் திமிரிய அந்தப்பொடிசை அவளே வாங்கிக்கொண்டாள். ‘ச்ச்சுச்சூ...ச்ச்சுச்சூ...ஏஞ்செல்லம் அழுவுறீங்க.....’ என்றபடியே இடுப்பில் அமர்த்தி முத்தமிட்டாள், அவ்வளவுதான்....அதுவும் சிரித்தது, அவளும் சிரித்தாள்..... நான் இறங்கவேண்டிய நிறுத்தம் கடந்துவிட்டது.

•••••••

அக்கா மகள் தன் குறிப்பேட்டைக்காட்டி ’மாய்மா...இத பாறேன்’ என்றாள். ‘அ’னா‘வை அழகாக எழுதியிருந்தாள்.

‘ரொம்ப நல்லாயிருக்கே நீங்களா எழுதினீங்க?’என்றேன்.

‘ம்ம்ம்’ என்றாள்.

‘எந்த மிஸ் சொல்லிக்கொடுத்தாங்க?’

‘ஹர்ஸா மிஸ்’

‘ஓ...எங்க மறுபடி எப்டின்னு போட்டுக்காட்டுங்க பார்ப்போம்’

‘பர்ஸ்ட் மேலவொரு ஸ்மால் சர்க்கிள் இப்டி போட்டுட்டியா, அதுக்கு கீழ ஒரு பெரிய எலிப்ஸ், அப்பறம் ரெண்டையும் ஜாயிண்ட் பண்ணி ஒரு கர்வ், நெக்ஸ்ட் ஒரு ஹரிசான்டல் லைன், வெர்டிகிள் லைன். அவ்ளோத்தான்.......’

அக்கா கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள், மாமா பூரித்திருந்தார். ஒன்றாம் வகுப்பு சேரும்போது தமிழ்பண்டிட் பொன்னுசாமி அய்யா என் விரலைப்பிடித்து சிலேட்டில் ‘அ’ எழுதிக்காட்டியதை நினைத்துக்கொண்டிருந்தேன். விட்டத்து மூலையில் ஒட்டடைக்கூட்டினில் சிக்கிய பொன்வண்டை பார்க்கப் பாவமாயிருந்தது.

•••••••••

இப்போதெல்லாம் அவளை நினைத்துப்பார்ப்பதை குறைத்துவிட்டேன். ஓர் அகண்டவாய் ஏனமாக இன்றைய நிலை மாறிவிட்டதாலோ என்னமோ கொண்டதெல்லாம் கொண்டுவிடுகிறது. அவளென்னுள் படிந்த வேகம் ஒரு குறுகிய காலம். ஒரு ஜென்ம பகையும், ஏழு ஜென்ம நினைவுகளையும் மனதிலிருந்து சுரண்டமுடியாமல் செய்துவிட்டாள். ஒரு பெட்டிக்குள் அடைபட்டுள்ள துணிகளாய் வர்ணவர்ணமாய் அவளின் காதல் அடைந்துகிடக்கிறது. அவ்வப்போதைய கனவுகளும், சில பெருவெளி தனிமையும் அணிந்துகொள்வதோடு சரி. முக்கி முனகி நான்கு வருடங்களை கடந்துவிட்டேன். அண்ட சராசரங்களனைத்தும் ஒரே ஜீவனுக்குள் அடக்கிவைத்திருந்திருப்பதாய் பாரமாகவே கழிகிறது பொழுதுகள். ஒரு கழுமரமும் அதிலமர்ந்த காகமுமாய்த்தான் மடிந்து புலரும் பொழுதுகள் கண்ணாம்பூச்சிக்காட்டி ஓடி ஓடி மறைகிறது. எல்லாவற்றையும் அள்ளிக்கொட்டி மட்கசெய்துவிடத்தான் பார்க்கிறேன். போகும் வழியெங்கும் சேகரிப்பது குப்பைகளாகவே இருப்பின் எதை எங்கே கொட்ட.

•••••••••

நேற்றைய இரவுப்பொழுதை பேருந்துப்பயணம் மேயந்துகொண்டது. காலையிலதுமிழ்ந்த வெளிச்ச உலகில் மாற்றமேதுமில்லை. சென்றவருடத்தைவிட இப்போது 2 கிலோ எடை அதிகரித்திருக்கிறேன். தா(டி)டை முடிகள் சற்றே கூர்மையடைந்து காணப்படுகிறது. மீசை(?!!!)யில் கருமை அடர்ந்துள்ளது. வலது காதுமடல் மேல் ஒரு வெள்ளை மடையானின் இறகு நீட்சி. சென்றவருடம் இது இல்லை. ஒரு இருட்டறையும், அதிலமர்ந்து வாசிக்கும் தொடர்கதையுமாக இவ்வாழ்க்கை புரண்டுகொண்டேயிருக்கிறது எதுவும் புலப்படாமல் அல்லது படுத்தாமல். வெறுமனே புரட்ட 27 வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. வீடு கட்டும் மணலில் காற்கூடு கட்டிக் கழித்த வயதுதான் இப்போதைய கனவுகளை சொரிந்து சுகப்படுத்துகிறது. வேறென்ன சொல்ல. இந்த நாளையினிமையாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.



.

Thursday, October 14, 2010

புராதானங்கள் அபாய நிலையில்!!!

புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை.


ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்ட ஆளுருட்டி மலை


அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி, (இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே


மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கீழ்கண்ட மின் அஞ்சலை அனுப்புங்கள்.

வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

புதுக்கோட்டை ஆட்சியர் மின் அஞ்சல் முகவரி:-
collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in

செய்தி
To
The Collector,
Pudukottai Dist.
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.
Regds:\


நன்றி
http://fourthpillar.wordpress.com/ மற்றும் பதிவர் ஆரூரன் விசுவநாதன்

குறிப்பு
இந்த இடுகைக்கு பின்னூட்டப்பெட்டி மூடப்பட்டுள்ளது. பின்னூட்டமிடும் நேரத்தில் எளிதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.



Saturday, October 9, 2010

இன்றிரவும்...


எல்லோருக்கும் தெரியும்
யார்தான் அறியாதவர்

காலையில் தோப்புத்தெரு
அடுத்து மேலவீதியும்
கலைஞர் காலனியும்

எங்கும் கிடைக்காமற்போனால்
எப்போதுமில்லாத அக்ரஹாரம்

கடைத்தெரு செல்லும்போது மட்டும்
கிடைத்துவிடவாப்போகிறது....

யாசிப்பவளின் இடுப்பெலும்பில்
வெறித்திருக்கும் சிசுவிற்கு

இன்றிரவும் கிடைக்கலாம்....

வேப்பெண்ணை வாசமும்
அதே உதிரமும்.


.

Tuesday, September 28, 2010

விட்டு விடுதலையாகி...

அந்த காலைப்பொழுதும் எப்போதும்போல் விடிந்திருக்கவில்லையெனலாம். முற்றத்தில் முகம் கழுவ வந்தபொழுது அந்த கல்லுக்குருவி கண்ணில் பட்டது. ராஜவேலுவை அழைத்துக்காட்டினேன். எழத்திராணியற்ற அதனை கைகளுக்குள் அடக்கிக்கொண்டான். வேண்டாம் விட்டுவிடலாம் என்றேன். அவன் கேட்கவில்லை. வளத்தலாம் என்றான். எனக்கு அவன் செயல் பிடிக்கவில்லை. கூண்டுக்குள் ஒரு உயிரை அடைப்பதும் நெஞ்சிக்குழியில் துடிக்கும் இதயக்குமிழை வெளியே எடுப்பதும் ஒன்றாகவே தெரிந்ததெனக்கு. தரிகெட்ட சுதந்திரமே அதன் பிறப்புரிமை.

வீட்டிற்குள்ளிருந்த வெங்காய கூடையை எடுத்து உத்திரத்தில் சணல் கயிறைக்கட்டி தொங்கவிட்டான். பானைபோன்ற கூடையின் இடையே ஒரு வேப்பங்குச்சியை சொருகினான். குருவியினை உள்ளேவிட்டு பூஸ்ட் குடுவை மூடியில் நெற்மணிகளை கொட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான். இவனுக்கு தம்பினானது என் துரதிஷ்டம் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு.




கைக்கு எட்டாத கூண்டைவிட்டு அந்த உயிருக்கு விமோசனம் அளிக்க நான் அவ்வளவு உயரம் வளரவில்லை. ஒரு நாற்காலியைப்போட்டு அந்தப்பணியைச்செய்ய ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த வெங்கடாஜலபதியும் தைரியத்தைக்கொடுத்து அருள்பாலிக்கவில்லை. பாவம் என்று கொஞ்சநேரம் வெறித்து பார்த்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினேன்.

அம்மா அப்பாவும் கண்டுகொள்ளவில்லை. அவன்தான் செல்லம். அன்றைய மாலை, அடுத்தநாள் காலை அடுத்து... அடுத்து... மூன்றுநாளும் அந்தக்குருவிக்கு நெற்மணிகளும், சோற்றுப்பருக்கைகளும், எதிர்வீட்டு வாசற்படலில் பழுத்திருந்த கோவைப்பழமும் உணவாகப் படைக்கப்பட்டன. என் விருப்பமான இங்க் பழத்தைமட்டும் அவன் கொடுக்கவில்லை. அண்ணனாம் அண்ணன், மனதிற்குள் திட்டித்தீர்த்தேன். ஆனாலும் அந்தக்குருவி எதையும் திரும்பிப்பார்த்ததாய் தெரியவில்லை. கூண்டிற்குள் எல்லாமே காய்ந்து கிடந்தது. அதில் எனக்கு திருப்திதான்.

நான்காம்நாள். அந்த காலைப்பொழுதும் எப்போதும்போல் விடிந்திருக்கவில்லையெனலாம். முற்றத்தில் முகம் கழுவ வந்தபொழுது அந்த கல்லுக்குருவி கண்ணில் பட்டது. நடுவில் சொருகியிருந்த குச்சியில் தலைகீழாக தொங்கி சாகசம் காட்டியது. ராஜவேலுவிடம் காட்டினேன். திறந்து பார்த்தான். விரைத்துப்போய் விழுந்தது அது. அண்ணன் அழத்தொடங்கினான். வெங்கடாஜலபதி சிரித்துக்கொண்டிருந்தார்.



Friday, September 24, 2010

சுக்குமி ளகுதி ப்பிலி...

கொல்லவாசல் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரத்துகள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்கொடுக்கிற அம்மா இப்பவும் அதேமாதிரிதான் இருக்கு. நானிங்கவந்து நைட்டு ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு பக்கத்து பொட்டிக்கடையில ‘அண்ணா ஒரு பழம்னா?’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாங்க. பொழைப்பத்த அம்மாக்கு பொழைக்கத்தெரியலையா இல்ல எனக்கான்னு தெரியல. இந்த பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.

••••••••••••

ரெண்டுரூவாய தெருமொன ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்வாய்க்கு எப்பாருக்கு ஒரு பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல அதோட லாட்டரி சீட்டுக்கு நடுவுல வைச்சித்தர சுண்ணாம்போட கார்ரூவா கொட்டப்பாக்கு, கார்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச கார்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மாத்ரி.

•••••••••••••

அந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி வய்ச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரங்கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுகடையில வாங்கினா கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகால்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடயையும் சேர்த்து வித்துட்டு புள்ளைங்க சம்பாதிக்கறதே போதும்னு ஊட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அரிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.

••••••••••••

ஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள் எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட வந்தப்ப கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திராவீடு. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கு தாராளமா போதும். இந்தமாடு கறவ விட்டுட்டா அடுத்து அது, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம் பருத்திக்கொட்ட வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட மட்டுமில்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.

•••••••••••

இந்த மண்வெட்டி கால்ல விழுந்தாலுஞ்சரி, அருவா இல்லைன்னா கோடாளி எப்டிக்காயம்பட்டாலும் எலந்த இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும் வெட்டுக்காயம் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் தாத்தனுக்கு இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன என்னொடம்புக்கு அந்த டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும்.

•••••••••••••

அன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.



Friday, September 17, 2010

ராசம்...

என்றுமில்லாது இன்று ஆளோடிக்கட்டிலில் கொஞ்சம் படுக்கவேண்டும் என்று தோன்றியது. வீட்டினுள்ளே டங்..டங்.. என்று தரை அதிர்வதற்கு என் மனைவிதான் காரணம். பெயர் ராசம். இந்த 26 வருட திருமண வாழ்வில் அவளிடம் நான் கற்றுக்கொள்ள வேண்டியன நிறைய இருந்திருக்கிறது. ஆயினும் எந்த கணவனுக்குத்தான் மனைவியென்பவள் ஒரு மானுட ஜென்மம் என்பது அவ்வளவு எளிதாக புரிந்திருக்கிறது. நான் மட்டும் விதிவிலக்காயென்ன. சின்ன வயதில் தந்தையை இழந்த என்னை பத்தாம் வகுப்புவரை படிக்கவைத்தது என் அம்மாதான். மரப்பொந்தினிலிருக்கும் பருந்து குஞ்சுக்கு ஆகாரம் அவ்வப்போது கிடைத்துவிடும்தான். இருப்பினும் பறக்க கற்றுக்கொடுப்பது ஜென்ம இரத்தமின்றி வேறென்னவாக இருக்கமுடியும். என் பாட்டன், முப்பாட்டன் எவன் மதித்தான் என் பாட்டி, முப்பாட்டிகளை.

ஒரு படி மேலேபோய் என் தாத்தன் குடும்பச்சண்டையில் பாட்டியின் காலை கடப்பாறையால் முட்டிக்குமேலே ஓங்கி அடித்திருக்கிறான். அய்யோ..அய்யோ...என்று அடுத்தவீட்டுக்குகூட கேட்காதபடி அலறிவிட்டு அடுத்தவேளை சோற்றை பொங்கிப்போட்ட புண்ணியவதி அவளென்று குடும்ப வரலாறை கேட்கும்போதெல்லாம் என் அத்தை கண்ணீர்மல்க கூறுவாள். எவ்வளவு கொடியவன், கிராதகம் பிடித்தவன் என்று அப்போதும் நினைத்துக்கொள்வேன். இப்போது நினைத்தாலும் அப்படித்தான். பித்துக்குளி. நல்லவேளை நமக்கந்தளவுக்கு புத்திகெட்டுப்போகவில்லை என்பதற்கு என் படிப்பறிவோ, பகுத்தறிவோ காரணமாயிருக்கும் அக்காவின் மகளை அவளின் 16 வயதில் கட்டிக்கொண்டேன். என் குடும்ப ரத்தம்தான் ராசத்திற்கு. அதனாலோ என்னவோ என்னிடம் அரைவாங்கி கண்ணம் வீங்கினாலும் எனக்கு சோறு உண்டு. 3 வருட தாம்பத்தியத்தில் பெற்றெடுத்ததை மலர்கொடி என்ற நாமம்சூட்டி ஒருவழியாக சென்றவருடம் கரையேற்றினேன். கரையேற்றினேன் என்பதுதான் அத்தனை சிரமங்களுக்குமான ஒற்றைச்சொல்.

ஒரே பெண் வேறெதுவுமில்லை. சிறுவயதில் அவள் சில்லிக்கோடு விடையாடும் அழகு தனிதான். கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நானும் ராசமும் மற்றவர்களுடன் அவள் போட்டிப்போட்டு துள்ளி துள்ளி நொண்டியடித்து விளையாடும் பாங்கை ரசித்திருக்கிறோம். ராசம்தான் அவளுக்கு இந்த விளையாட்டை கற்றுக்கொடுத்தாள். ராசமும் சிறுவயதில் இந்த விளையாட்டில் தேர்ந்தவள்தான். பெண் பார்க்க நிச்சயமாகி சிங்காரத்தின் கூண்டு வண்டியை வாடகைக்கெடுத்து போகும்போதுகூட தெருவாசலில் விளையாடிக்கொண்டுதான் இருந்தாள். ‘விளையாட்டுப்பிள்ளையாவே வளந்துட்டா, போ..போ..மூஞ்சி கழுவியா’என்று அவளை துரத்திவிட்டு மாமா என்னிடம் அசடு வழிந்ததுகூட இன்னும் ஞாபகம் இருக்கிறது.

ஏணிப்படிகள்போல ஆறு பெட்டிகளுடன் கூடியதில் மலையிலிருந்து ஆரம்பித்து 5,4,3,2,1 வரை வந்து பிறகு, கைமேல் சில்லியை வைத்து நொண்டியடிக்கவேண்டும். புறங்கை, விரலிடுக்கு, கால், கால் விரலிடுக்கு, இறுதியாக மேட்டா கீட்டாவில் முடியும் அந்த விளையாட்டு தெருப்பெண்களின் சமயோசித விளையாட்டு, இன்னும் சொல்வதானால் பாரம்பரிய விளையாட்டு. மேட்டா கீட்டாவில் எந்த பெட்டியில் சில்லியை போடுகிறோமோ அந்த பெட்டி ஒரு உப்பு என்று விளையாடிய பெண் கோடுபோட்டுக்கொள்வாள். அந்த பெட்டியை எதிராளி நொண்டியடிக்கும்போது தாண்டித்தான் செல்லவேண்டும். விதிமுறை. வயதுக்கு வந்த பின்னும் மலருக்கு இந்த விளையாட்டு அலுக்கவில்லை. ராசத்திற்கும் வேடிக்கை பார்ப்பதும் அலுக்கவில்லை.

என் மகளை பெண்பார்க்க வந்தபோதும் சில்லிக்கோடுதான் விளையாடிக்கொண்டிருந்தாள். என் மாப்பிள்ளையிடம் நான் அசடுவழியவில்லை. சின்ன சின்ன குடும்பங்களில் ஒருவர் பிரிந்தபின் ஏற்படும் அதே வெறுமைதான் இப்போது என் வீட்டிலும். காயப்போட்ட துணிகளுடன் கொடி அறுந்து விழுவதுபோல பிரிவென்பது இந்த மூன்றுபேர் குடும்பத்தின் உச்ச வலி, பார்க்க அழகாயிருந்தாலும்கூட. நான் வேலைக்கு சென்றபின் ஆக்கி இறக்கி வைத்த நேரம்போக ராசத்தை வேறெந்த வேலைகளும் இழுத்துப்பிடிக்கவில்லை. மிஞ்சிப்போனால் என் துணிகளை துவைப்பாள். உண்டு தின்ற ஏனங்கள். அப்படியேதும் அவளின் தனிமையை ஆட்கொண்டதாக தெரியவில்லை, ஏன் நானும்கூட. என் வலியே அதிகம்தான். பெண்களுக்கான வற்றாத கண்ணூற்று முனுக்கென்றால் பொங்கிவிடுவதைப்போல, எந்த ஆண்மகனால் முடிகிறது. என் நெஞ்சிலும் அழுத்தம் இல்லாமல் இல்லை.

இரவுகளில் ராசம் தூங்கும் போது எதோ நெஞ்சழுத்தக்காரியின் முகமாகத்தான் அவள் முகம் இருக்கும். என் முகத்தைப்பற்றி அவளிடம்தான் கேட்கவேண்டும். சென்றமாதம்தான் அவளின் நெஞ்சாழ்மையை இந்தக்கோலத்தில் பார்த்தேன். ஒரு கண்ணாடியும் அது உடைந்தால் தெரியும் இரண்டு பிம்பங்களுமாய் என் முன் அவள். மலரின் அந்த பச்சைக்கலர் பாவாடை தாவணியை உடுத்தியிருந்தாள். இந்த 45வது வயதில் அவளுக்கு எடுப்பாகத்தான் இருந்தது என்று சொன்னால் நான் பைத்தியமோ என்று எனக்கே தோன்றும். சிகையில் இரட்டைப்பின்னல் வேறு. கொல்லையில் பூத்திருந்த திசம்பர் பூவைக் கட்டி சூடியிருந்தால். அந்த நெத்திச்சுட்டி ஏதென்று தெரியவில்லை. பார்ப்பதற்கு அகோரமான தோற்றம்தான். அருகில் செல்லும்வரை என்னைப்பார்க்காதவள் சென்றவுடன் விரைத்த உடலுடன் மலங்க மலங்க விழித்தது என் 52 வருட வயது முரட்டையும், திடகாத்திரத்தையும் பொலபொலவென விழ்த்தியது. இன்று நினைத்தாலும் ஒரு சொட்டாவது கண்ணீர் வரத்தான் செய்கிறது.

நாட்கள் நகர்வது அவளுக்கு தெரிகிறதோ என்னவோ, சமயத்தில் அவளிடம் அந்த பருவ நினைவு குடிபுகுந்துவிடுகிறது. பார்ப்பவர்கள் பைத்தியம் என்கிறார்கள். இன்று வீட்டினுள் வரும் டங்...டங்...என்ற சத்தம் ராசம் சில்லிக்கோடு விளையாடுவதால்தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நான் தனி அரையில் கோலிக்குண்டு விளையாடுவது யாருக்கும் தெரியாது.

*


குறிப்பு- இச்சிறுகதை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அவரது தளத்தில் குறிப்பிட்டது கீழே :-

சுருக்கமாகச் சொல்லப்பட்ட கதை. கதைசொல்லியின் ஆளுமை அந்த மொழ்யிலேயே தெரிகிறது. அதிக விவரிப்புகள் இல்லாமல் இயல்பாக ஒரு பெரும் சோகம், தலைமுறைகளாக நீளும் சோகம் சொல்லப்படுகிறது

ஒரு உச்சத்தில் அந்த வட்டாட்டம் பலவிஷயங்களுக்கு குறியீடாக மாறி நிற்கிறது
நன்றி திரு.ஜெயமோகன்

Monday, September 13, 2010

மனிதம் சொட்டிய மலர்கள்...

பிடறியில் விழும் காலத்தின் அடி ஒவ்வொன்றும் வலுவாகவே இருக்கிறது. குன்றினில் ஏறியபின் மதிப்பற்றுப்போகும் கட்டாந்தரையை போலவே எல்லாமும் வளர்‘சிதை‘ ஆகிவிட்டது. கடந்ததை அசைத்துப்பார்ப்பதில் இருளடர்ந்த கனவுகள்கூட அள்ளிப்பருகொத்த அமிர்தம்தான்.

‘செத்த இரு ஆத்தா தோ போட்டுக்கொண்டாறேன், கால்‘ல வெந்நீரயா ஊத்தியாந்த?’,

‘அட பொருடா, அதுக்குள்ள வந்தடமாட்டாங்கொப்பன்’,

‘யப்பா பிரவு கொஞ்சம் மணித்தாத்தாவுக்கு சட்ணி ஊத்துப்பா’,

‘வா மாப்ள ஊர்ல இருக்கியா!!?, இப்பலாம் ரோட்டுக்கடத்தான் கண்ணுக்கு தெரியுதானொக்கு’,

‘வாங்க சார், எதோ கெடக்கன், இது யாரு பேரனா?, பய அப்டியே ஒங்களயே உரிச்சி வச்சிருக்கானே’,

‘இரும்மா அம்மா வந்திடுவா, தாத்தா ஒண்டியா இருக்கன்ல, நிறைய பேரு சாப்டுட்டிருக்காங்க, எல்லாம் போனப்பின்னாடி நீக் கேட்டத வாங்கியாறேன் என்ன’,

‘என்ன பட்டாமணியாரே, பையனுக்கு எதோ வேணுமாமே துரைக்ட்ட சொல்லி வாங்கித்தர்ரது?’,

‘எய்யா செயா அங்காடியில என்னைக்குயா மண்ணன்ன போடுவ? பத்து தேதியாச்சுய்யா......’,

‘என்னத்த சொல்றது மாமா, நாம படுறது நம்மளோட போவட்டும்னுதான் மொவனையாவது வேற வேலைக்கு அனுச்சிட்டு ஒண்டியாவே பாத்துக்கிறேன்‘ என கிராமங்களில் குடிசைக்குளியங்கும் சின்னச்சின்ன உணவு விடுதிகளும், டீக்கடைகளும் உறவுகளுக்குள்ளும், உரிமையெடுப்பிலும் வாழ்ந்துகொண்டிருக்கும். புலரும் ஒவ்வொரு பொழுதும் கொஞ்சலும், குலாவலுமாகவே எல்லாவற்றிற்கும் விடையும் விடிவாகவும் கரைந்துகொண்டிருப்பதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்.



தெருத்தெருவுக்கு விடியலைப் பார்த்து எழுந்து அன்பொழுக பறிமாறப்படும் எந்த உணவிலும் பறக்கும் ஆவியுடன் எதோவொரு மனம் மற்றும் மண் சுவை இருக்கத்தான் செய்தது. அன்போ, பண்போ, பரிவோ, மனிதமோ, உறவு முறையுடன் வந்துவிழும் வார்த்தைகளோ ஏதோவொன்றின் மூலம். அப்பாவின் பெரியவராயின் பெரியப்பாவாகவோ, அம்மாவுக்கு அண்ணனாக்கி மாமாவாகோ, வயதின் மிகை அண்ணனாகவோ ஏதோவொரு முறையில் உறவாகிவிடுவார் அதன் உரிமையாளர். இன்றும் கீத்துக்கொட்டகையில் டீக்கடைகளையும், சின்ன உணவு விடுதிகளையும் சில இடங்களில் காணும்பொழுது நெஞ்சினில் உருளும் நினைவுகள் மலரவே செய்கின்றன.

‘சித்தப்பா நீ படிச்சிப்படிச்சு சொன்னன்னுதான் அத்துப்போன ஒறவ ஒட்டலாம்னு பொண்ணு கேட்க வந்தேன். ஆனா அவன் என்னடான்னா முறுக்கிகிட்டுல்ல போறான்.‘

‘அட இரு மோனே.. நாங்பேசிப் பாக்குறேன். ஒடனேவா கோச்சிக்கறது. எதார்ந்தாலும் பொறும வேணும்பா. இந்தா, டீய குடிச்சிட்டுப்போ நான் பேசுறேன் அவர்ட, நாஞ்சொன்னா மனுஷன் கேப்பான்யா.‘ என்று பிரிந்திருக்கும் உறவுகளை சேர்ப்பதில் தொடங்கி வாய்க்கால் வரப்பு தகராறு வரை தீர்த்துவைக்கப்படும் இவ்விடங்களில் ‘அரசியல் பேசாதீர்’ என்ற வாசகம் மட்டும் அழுத்தம் திருத்தமாக மாவுக்கட்டிகளால் தெரியும். எவரும் உறவாகவும், எல்லாம் இயல்பாகவும் மனிதம் சொட்டும் மலர்களாய் எப்படித்தான் நடக்கிறதோ இந்தக் கடைகள் என்று எண்ணத்தோன்றும் இவ்வேளையில், பளபளக்கும் கண்ணாடி மாளிகைக்குள் இயங்கும் தற்போதைய நவநாகரீக உணவு விடுதிகள் செங்கல்லும், சிமெண்டும் கலந்த புதர்களாகத்தான் காட்சித்தருகின்றன.

அடுத்தவீட்டு முகவரியறியா இக்காலத்தில் எல்லா ‘நகரீய’ மாற்றங்களையும் இழுத்துக்கொண்டு, சீக்குவந்த கோழியாய் சிறுத்துப்போய்த்தான் கிடக்கிறது மனிதநேயமும் மற்றசிலவும்.


Friday, August 27, 2010

வெவ்வேறானவை...

..


சீப்பிலிருந்த தலைமுடியை
கைவிரலில் சுருட்டிக்கொண்டிருந்தாள்

எப்ப வந்த? என்று கேட்பதற்குமுன்...

வாந்த...ஊர்ல இருக்கியா? என்றாள்..

இல்ல இன்னைக்குத்தான்...
ஆமா நீ? சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டேன்

நேத்து வந்தேன்..

உம்பொண்ணா இது?

ம்ம்...

தூக்கியணைத்து.. முத்தமிட்டேன்
குழந்தையாய் பார்த்தாள்...

நல்லவேளை
சின்னபொண்ணும், ராசுபொண்டாட்டியும்
ஊரிலில்லை.


**********************

காரம் கூடின குழம்புக்கு
அவ்வப்போது பாட்டியும் திட்டுவாள்

த்தூ.. என்னாக் கொழம்புடியிது
புளிப்பு வாயில வய்க்கமுல்ல
இது அப்பா

‘ஒண்ணும் வாங்கியாரதில்ல..
வரட்டும் வச்சிக்கிறேன் இந்த மனுஷனை’

வைதுகொண்டிருப்பாள் அம்மா...
அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி.


*********************

சோப்பு சீப்பெல்லாம்
தனியா வச்சிக்கணும்யா..

இந்தா இதுல
பவுடரும் எண்ணையும் இருக்கு

பாய்த் தலையாணில்லாம்
நீ மட்டுந்தான வச்சிக்கிற...

என்று சொன்ன அப்பாவின்முன்

நண்பனின் சட்டையை அணிந்திருந்தேன்...
அவர் சட்டைசெய்யவில்லை.


...

Friday, August 20, 2010

ஒளிகளின் நீட்சி...

பட்டிக்குள் அடைபட்ட செம்மறியாட்டுக் கூட்டமென ஆசாபாசங்களை துறக்க பழகிவிட்டது இந்த காலும், கையும். விஞ்ஞான துணுக்கினை வீட்டிற்குள் அமர்த்திவிட்டு அடைகாக்கத்துணிந்த உடலும், மேலிமையை புருவங்கள் கட்டிவைக்க விடியல் வீழ்வதறியாமல் வெறித்திருக்கும் கண்களும் எதையெதையோ தின்றுகொண்டிருக்கின்றன.

நிற்க...

ராஜன் ஜவுளிக்கடைக்காரர் வீட்டுக்கு வந்தபொழுதான் தெரிந்ததெனக்கு தொலைக்காட்சிப்பெட்டியின் மகிமை. நக்கீரர் தெருவுக்குள் இந்த வி.வளர்ச்சியை இழுத்துக்காட்டிய பெருமை ராஜனுக்கு. வாசல் சன்னலில் தொங்கும் திரைச்சீலையை விலக்கி ஒட்டிஒட்டி பத்துப்பதினைந்து கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாக நின்று பருவமடைந்தவளை பதுங்கியிருந்து பார்த்தார்போல் படங்கள் பார்த்த பொழுதுங்கள் இப்போதுமந்த வீட்டின் வாசலில் நிழலாய் நிற்கிறது. பிறகு குருசாமி வீட்டில், அடுத்து ஹரி வீட்டில் இப்படியாக நீமுந்தி, நான் முந்தியென அவரவர் கௌரவம் வீட்டுக்கூடாரத்தை கருப்பு வெள்ளையாக்கியது. யார் வீட்டில் படம் பார்க்கலாமென ஒத்தையா ரெட்டையா போட்டு பார்த்திருக்கிறேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படியில்லை. இந்த ஹை.ஃபி வானொலிப்பெட்டியும், அதில ஒலிக்கும் காரைக்கால் பண்பலையும் அவர்களின் அதிகபட்ச விஞ்ஞானமாக எண்ணியிருந்தனர். வேறெந்த பற்றும் அவர்களை ஆட்கொள்ளவில்லை. அப்பாவுக்கு இதுவரையும்கூட.

அவரைக்குளம் மாரியம்மன் கோவிலில் வள்ளித்திருமணத்தையும், மயான காண்டத்தையும் கொன்றுவிட்டு சாஸ்த்தா கடையிலிருந்து வாடகைக்கு அந்த தொ.கா. பெட்டியும், ஒரு ஒளிநாடா இயக்கு கருவியும் எடுத்து வைத்தனர். திருவிளையாடலில் ஆரம்பித்து வருஷம் 16 ஓடிக்கொண்டிருக்கும்பொழுது விடிந்தேவிடும். ‘பாரு,பாரு.... எந்த காமுட்டி கோயில்லடா தீவெட்டி புடிச்சே?‘ன்னு வாத்தியார் தலையில் தட்டும்பொழுதான் பள்ளியிலிருப்பதாய் கண்களுக்கு சுரணைவரும்.

‘ஏம்பாலாஜி சவுளிக்கடக்காரு வூட்ல படம் போடுற மெஷினு வந்திருச்சாம்ல. பாத்தியா நீயி’ ன்னு அப்போது கேட்ட அலமேலு அவ்வாவும்(பாட்டி) குத்துக்காலிட்டு திண்ணையிலமர்ந்து ‘இந்த ராசாயா கெழவிக்கும் அது மொவனுக்கு காலைலேந்து எதோ சண்டையாம்லடி நவநி, ஒனக்கு தெரியுமா?’ என்று ஊர் வம்புகளை உலையுடன் சேர்த்து கொதிக்கவைத்த அஞ்சுகம்அம்மாலும், குஞ்சம்மாளும் இப்போது உரலுக்குள் குத்துண்ட நெல்லாக வாசலை எட்டிப்பார்ப்பதில்லை. உறவுகளை வளர்த்ததும், ஊர்வம்புகளை வெற்றிலைப்பாக்குடன் கதைத்ததுமாகயிருந்த பாட்டிகளின் வெறித்தனமான ஆட்சி இப்போது தொ.கா.பெட்டி இயக்குகருவிப் பொத்தான்களுடன்.

ரூபாய் 400 ஓ 600 ஓ மாதாமாதம் உதவித்தொகையாக வாங்கும் ஆதரவற்றோர்கள், கம்பிவழி அலைவரிசை இணைப்புக்கு ரூபாய் 100 யை இழக்கத்தயாராகிவிட்டனர். காரணம் அரசு அளித்த இலவச தொ.கா.பெட்டி. பொங்கித்தின்ன ஒரு ரூபாய் அரிசி கிடைப்பதும் அவர்களின் பலம். ஊன்றமுடியா காலுடன் வாழ்நாளின் உச்சியிலேறி உச்சிப்பிள்ளையாரைப்பார்த்த மகிழ்ச்சி அவர்களின் கண்களில் தொலைக்காட்சித் தொடர்களை காண்கையில் தெரிகிறது. தொடர்களைக்காண வீடுகள் தேடியலைந்த ஏக்கமும், தாகமும் தணிந்துவிட்டதெண்ணி ஒரு பெருமிதமும்கூட. நல்லதோ கெட்டதோ அவர்களின் வாழ்நாள் உறக்கம் முழுவதும் ஏதோவொரு தொ.காட்சித்தொடரின் நாயகியின் கண்ணீரில் கனவுகளாக கடந்துபோகுமென்பது மட்டும் திண்ணமாகத்தெரிகிறது.

எப்படியாயினும் ‘ந்த, ஏன் மாத்தர? 8 மணிக்கெல்லாம் போட்டுடுவான். வய்யி‘ என இப்போது அம்மாவும் அதட்டும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற காணம் தொடங்கும்முன் அலமேலுவை, சவுந்தர்ராசு நயினா வீட்டில்போய் அமர்த்திவிட்ட ஒளிகளின் நீட்சியை இப்போதுதான் உணர்கிறேன்.






Wednesday, August 18, 2010

எதோ வீ.ஏ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல...

‘எய்யா எதோ வீ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல நீ ஃபாம் அனுப்பிட்டியா’ன்னு எப்பாரு கேட்கும்போது ‘இல்ல’ன்னு சொல்லித்தொலைச்சிட்டேன். ஃபோன்லயே விட்டாரு பாருங்க டோஸு ‘அந்தப்பய மொவனே, இந்தப்பய மொவனே’ன்னு பாதி அவரையே திட்டிட்டு என்னையும் கொஞ்சமா கொதறி வச்சாரு. பெத்த மனுஷன் கத்தினா நல்லதுக்காதான இருக்கும். ஏழு கழுத வயசாயும் இன்னும் நமக்கிந்த புத்தி வரமாட்டுதேன்னு போஸ்டாபிஸ்க்கு போனாத்தான் தெரியுது, தலையில ஒட்டு முடிகூட இல்லாத கெழங்கட்டைகள்லாம் அவத்தால குத்தவச்சிருக்கறது.

வந்துதே எனக்கு வீரம், அப்பிளிகேஷன் வாங்கலாம்னு போனா ஸ்டாக் இல்லயாம். ஒருபக்கத்தால ‘அவைலபில்‘ன்னு நோட்டீஸூ, இன்னொரு பக்கத்தால அவுட் ஆஃப் ஸ்டாக்குன்னு.





ஒரு வழியா நண்பருகிட்ட வாங்கி ஃபில் பண்ணி போஸ்ட் பண்ணப்போனா ‘கொல்’லுன்னு ஒரே கூட்டம். உள்ளப்போனொன்னே ஒரு செம ஃபிகர்தான் கண்ணுல பட்டுது. ரொம்ப நேரமா அந்த க்யூவுலேயே நின்னுகிட்டிருந்தேன். போஸ்ட் மாஸ்டர் கிட்டத்தால போனப்பதான் தெரிஞ்சிது நான் நிக்கவேண்டியது அடுத்த க்யூன்னு. கொஞ்சநேரத்துக்கெல்லாம் ‘அம்மே’ன்னு ஒருப்பயபுள்ள வந்து அந்த ஃபிகர் கால கட்டிப்புடிச்சிது. அடக்கருமமே...நேத்து புள்ளபெத்தது, நாளைக்கு பெக்கப்போறதுலேர்ந்து நிக்குதுங்க. அதுங்களுக்கு அடுத்தால க்யூல புருஷனுங்களும் ஒரு கேரி பேக்கோட நிக்கிறாங்க. இந்த புள்ளையாண்டானுங்களுக்கு என்னா நம்பிக்க பாருங்க. எதோ காசு குடுத்தாதான் இந்த வேலையெல்லாம் கெடைக்கும்னு பேச்சுப்போக்குல சொல்லிக்கிட்டு திரிஞ்சதெல்லாம் சந்தடிச்சாக்குல அப்ளை பண்ணிட்டு வெளியில வருதுக. அதுசரி நம்பிக்கத்தான வாழ்க்கையே.

அந்த குண்டம்மா ஃபிரியட்ல கடைசிகாலத்துலதான் TNPSC-ய ஓப்பன் பண்ணுச்சு. எதோவொரு நம்பிக்கையில நானும் கடக்கு கழுதன்னு எக்ஸாம் எழுதுனேன். அதோட அந்தம்மா ஆட்டம் காலி. இப்பயும் அதே நம்பிக்கையிலத்தான் எழுதப்போறேன்.. பாப்போம்..



போஸ்ட் ஆபிஸ் வாசல்தாங்க


ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஃபில் பண்ணவேண்டியத, ஒருநாளைக்கு முன்னாடிதான் பண்ணணும்னு விதி போல..


தோ பாருங்க இவரும்தான்


கடைசியா கண்ணாமுழி தெரியற மாதிரி ஒருத்தன் நிக்ரானே, அவன எவத்தையோ பாத்த மாதிரி தெரியுது...


ம்க்கும்... எந்த புள்ளைய பெத்ததுக்காக இந்த நெலமயோ தெரியல



வெய்யலுதான். என்னா பண்றது. வயிறு காயுதுல்ல. இந்த சீஸன்ல விய்க்கலன்னா எப்ப விய்க்க முடியும்.




உள்ளபோன அம்மாக்காக வெயிட்டிங்...



எதோ சீரியஸான டிஸ்கஸன் போலருக்கு




பேரெல்லாம் நல்லாத்தான் வச்சிருக்காங்க.. ஒரு நல்ல மனுஷங்க பேர விடுறதில்ல..


இதுக்கு ஒண்ணும் சொல்ல தெரியல


என்னதான் காமடி பண்ணினாலும் அரசாங்க வேலைக்கு எளசுங்கள்ட கிராக்கி அதிகம்தான். நாரப்பயலுக அதையும் காச வாங்கிட்டு யாராருக்கோ பட்டாப்போட்டு குடுத்திர்ரானுங்க. என்னதான் அரசாங்கத்தோட தகுடுதித்தம் தெரிஞ்சாலும் எதோவொரு நம்பிக்கைதான் இவ்ளோ அலமலப்புக்கும் காரணம்.

சும்மாவாச்சொன்னாங்க ‘எலிக்கு திண்டாட்டம், பூனைக்கு கொண்டாட்டம்’னு..







Thursday, August 5, 2010

கனவுகள் மேயும் காடு...


மௌனத்து சீற்றங்கள் உறையத்தொடங்குகிறது இரவெங்கும். அலைகள் கொணரும் நுரையும், நுரையைக்கொள்ளும் கடலும் சொல்லும் சங்கதிகள், கனவுகளின் வழியொழுக அடைத்துக்கொள்கின்றன சிந்தைகள் யாவும். பெருவெளிப் புன்னைமரம் உச்சியில் கொண்ட முற்கூட்டுடன் தனிமையில் அமர காத்திருக்கிறது காக்கையைப்போலவே மனமும். அரவங்களோ, அசைவுகளோ தெரிந்திடின் சீறிட்டு கரையத்தான் செய்கிறது அதற்கும். ஏனிந்த இரவு, வெறுமை, தனிமை, தாகம், மனதுடனான தர்க்கம், சிந்தையற்ற நிலை, உழைப்பதற்ற ஓய்வு? இவைகொண்டு எதோவொன்றை கருகிய இருளோ, மூடிய இமைக்குள் இருட்டினில் தவிக்கும் விழிகளோ சொல்லிக்கொண்டே விழுங்கிப்பார்க்கிறது. சீரனமின்றி தவித்தும், சிரமேற்று தொங்கியும் உதிராத தணல் உடலெங்கும்.

சாளரமற்ற அறையில் புழுக்கத்துடன் சேர்த்து ஆயிரம், லட்சம், கோடியென கொடிகொடியாய் பரந்துபரந்து விரிந்துகொண்டேயிருக்கின்றன புள்ளிகளனைத்தும். சாம்பலான வார்த்தைகளை சேர்த்து குழைத்து குழைந்து நாவினடி ஊறும் கோழை எச்சில்கள்யாவும் படுத்தப்படியே உமிழ்ந்து உடலெங்கும் எச்சங்களாய் எச்சில்கள். அனிச்சைக் கட்டளைகள் பிறந்து கரங்களிரண்டும் துடைத்து துவைத்து மேலெங்கும் ஈரக்கீரல்கள். சற்றைக்கொருதரம் சுவர்க்கோழிகளின் கீச்சிடும் குரல் குத்திக்குத்தி கிழிக்கிறது செவியின் உட்சுவற்றை. எதோவொரு நாதம் கிணற்றிற்க்குள்ளிருந்து அம்மா அம்மாயென்பதைப்போல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இரண்டுமுறை திடுக்கிடுகிறது கண்கள். கால்களின் ஆடுசதைகளில் படிந்த கோரைப்பாயின் வரிகளைத் தடவத்தடவ சுகமேற்கிறது. அனூடே மயிர்கால்களும் சிலிர்த்துக்கொள்கிறது.

உடைந்த மதிற்சுவரினடி மடிந்த எறுப்புச்சாரிகளில் ஒவ்வொன்று கைகால்களிழந்து முக்கி முனகி தப்பிக்கப் பார்ப்பதாய் மனமும் நினைவுகளும் இந்த கனவினை உதறிவிட்டு எங்கோ ஓடத்தான் விழைகிறது. முடிகிறதா? இல்லையே. தாயிடம் அருந்திய பாலின்று பூர்வீக மணத்துடன் நாசியை மூடிக்கொண்டே பயணிக்கிறது. காய்ச்சலில் சுருண்டிருக்கும் நாவிற்கு அவளின் சுக்குக் கசாயம் இனிக்கிற மாதிரியும் தெரிகிறது. கசக்கிற மாதிரியும் தெரிகிறது. ருத்ராச்சையை மென்றபடி நாத்திகம் பேசும் கடவுள், பார்வதியை ஏன் பக்கமிருந்து ஒதுக்கினான். பாம்புகள் எங்கே? மணிமுடியெங்கே? அதன் வழிச்சிதறும் கங்கையெங்கே? அவனின் தாண்டவம் ஏன் அதிராமல் அசைகிறது? என்ன நினைவில் திளைத்திருக்கிறோம். யானறியாமல் எல்லாமே பச்சரிசிக் கஞ்சிக்குள்ளும், நெத்திலிக் கருவாட்டுக்குள்ளுமே நடக்கிறதே. என்ன விந்தையிது!!.
உடல் சுடுகிறதா? அணல் உடலாயிருக்கிறதா? எதைச்சொல்கிறது இந்த தனிக்கனவு?

இதோ இந்த இரவின் அஸ்தமனம் தொடங்கிவிட்டாற்போல் தெரிகிறது. கீழ்வானமும், கீழிமையும் செந்நிறத்தை விரட்டத்தொடங்கிவிட்டன. உடற்படிந்த உப்பு படிமங்கள் போர்வையுடன் சேர்ந்து கொட்டுகிறது. உள்மனமும், உத்திரத்து விசிறியும் தன்னகத்தேகொண்ட அகந்தையை அழித்துக்கொள்கிறது. எங்கோ மச்சிவீட்டின் மதிலை மூடின மல்லிகைக்கொடி, மலர்களை பிரசவிக்கிறதுபோலும். காற்றெங்கும் வாசம், காற்றெங்கும் கானம், காற்றெங்கும் அகமும் புறமும் மிதக்கிறது. பகலவனின் வெண்மை உடலை இதமாக பிடித்துக்கொள்கிறது. அடடா
! என்ன சுகம் இந்த உடலில்! காய்ச்சல் நின்றபின் கிடைத்த இந்த உடலில்தான் எத்தனை மினுமினுப்பு!, எத்தனை அழகு!, எத்தனைக்குளிர்ச்சி!. வரும் இரவும் இந்த தனிமையைக் குத்திக்காட்டும் கனவுகளுடன்தான் வருமோ?!! சூன்யமான அந்த கருமை வராமலிருந்தால்தான் என்ன? அப்பப்பா, இந்த விடியல் இப்படியே தொடர்ந்தாலே நலம்...நலம்...நலம்...




Wednesday, July 21, 2010

ஒட்டுவாரொட்டி...

முருகேசனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் முருகேசனுக்கு பத்திகொண்டுதான் வரும்.

‘ஒருநாளைக்கு பதினஞ்சாயரத்து சொச்சம் பேராவது பொழங்குற எடத்துல க... பயலுங்க ஒரு பக்கத்தால மட்டும்தான் ஒண்ணுக்க இருக்க கட்டிவிட்டுருக்கானுங்க. அந்தப்பக்கத்தால ஒண்ணு கட்டினா இவனுவ வீட்டுக்காசு கொறஞ்சமாதிரி நெனப்பு. இந்த செவத்துல பொழுதுக்கும் நின்னு ஒண்ணுக்கடிச்சு நாறடிக்கிறத பயலுங்கல என்னத்த சொல்றது. பாழப்போனவனுங்களுக்கு புத்தியிருக்குமா என்னான்னே தெரியல. எல்லாம் முழுக்காலு சட்டையும் சவடாலுமாத்தான் திரியிரானுங்க, ஒரு பயலுக்காச்சும் இப்டி பொதுவால நின்னு இருக்கோமே இதுனால வர கெடுதல நெனச்சுப்பாத்தானுங்களா? நாத்தம் நாத்தம் அண்டசயிக்கல’
இது முருகேசனின் அன்றாட புலம்பல்.

‘ஏப்பா கொஞ்சம் தள்ளிதான் போங்களாம்பா.. அங்கணத்தான் கட்டிவுட்டுருக்காங்கல்ல’
இப்டியும் சிலநேரம் கத்திப்பார்ப்பான். ‘நல்லது சொன்னா எவங்கேக்குறான்.. நாசமாப்போச்சு..நமக்கென்ன’ என்று நினைப்பதுதான். ஆனாலும் அவனால் முடிவதில்லை. ‘பங்காளி ஆத்தர அவசரத்துக்கு போறதுதான். இதெல்லாமா பாத்துகிட்டுருப்பாங்க, அழிஞ்ச கொல்லையில ஆடு மேஞ்சான்ன? மாடு மேஞ்சான்ன??’ன்னு பக்கத்துக்கடை பங்காளி சொல்வதுண்டு. ‘சும்மாகெட பங்காளி. எனக்கு கெட்டக்கோவம் வந்திடும்’ என்பான்.

அன்றைக்கு ஆறுமணிக்கு கடைதிறக்கவேண்டியவன் ஏழு மணி ஆகிவிட்டது. அவசரஅவசரமாக வந்தவன் ‘இந்த கொண்டாங்கொடுத்தான் ஒறவே வேண்டான்னு நெனைக்கறதுதான். என்னப்பண்ணி தொலையறது. வந்ததுங்களுக்கு எதாவது செஞ்சித்தொலைய வேண்டிக்கடக்கு’ மனதிற்குள் புலம்பியவாறே ‘கிரிச்’ யென்ற உருமலோடு இயங்கும் சட்டரை மேலே தூக்கினான். கொல்லைப்பக்கமுள்ள ஒரு கழிவரையையும் சொந்தங்கள் அடைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. ‘எல்லாத்தையும் அடக்கலாம் போலருக்கு, இத அடக்க முடியறதில்ல. கடையத்தெறந்திட்டு போலாம்னா இப்டி அடிவயித்தால படுத்துதே. நேத்தைக்கு நைட்டு இந்த அரிசி கணக்கா உள்ள மாத்தரைய (Cetirizine) சாப்டது தப்பாப்போச்சு. நிமிசத்து ஒருவாட்டியா வரும். கருமம் புடுச்சவனுங்க. சலி அலர்ஜின்னாலும் சரி, அரிப்பு, புண்ணுன்னாலும் சரி இதததான் தர்ரானுங்க.’ அதற்குள் யாரோ கடைக்கு வந்துவிட்டார்கள்.

‘வாங்கம்மா என்ன வேணும்?’.
‘ஆப்பில் என்னவெல’.
‘கிலோ 140’
‘அரகிலோ போடுங்க’
‘ம்ம்ம்’
‘பை வச்சிருக்கீங்களா?’
‘இருக்கு’
‘இந்தாங்க.... காலைலேயே நூறுவாய தர்ரீங்களே. சில்லர இல்லைங்களா?’
‘இல்லப்பா’
‘பங்காளி இந்த நூறுவாய ஒடச்சி கொடேன்.’
‘காலைல ஏது பங்காளி. இல்ல...’
‘இரும்மா, எதுத்தால பூக்கடயில வாங்கியாரேன்.’

‘ச்ச..ச்ச.. அடிவயத்தவேற லேசா வலிக்கற மாரி இருக்கே. இனிமேலும் முடியாது. யாவாரத்தையும் உடமுடியல. நல்லவேள சில்லர வாங்க இங்கவந்தோம். அப்டியே போயிட்டு வந்திடவேண்டியதுதான்’ கீழண்டப்பக்கமாய் உள்ள இடுப்பளவு சிமெண்ட் கிராதிப்போட்டு அடைத்திருந்த அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்திற்குள் நுழைந்தான். உள்ளபோனதுதான் தாமதம்...‘அடக்கருமம் புடிச்சவங்களா இங்கயா வந்து பேண்டு வப்பானுங்க, நாறப்பயலுக. காலங்காத்தால, ஹ்கூம், கொல்லுன்னு மொய்க்கிற ஈக்கூட்டத்த பாத்தாலே பயமாயிருக்கு. வாயில நல்லா வருது. என்னாத்த சொல்லி திட்டறது. இப்ப எங்கப்போறது?. ம்கூம்....... அவசரத்துக்கு பாவமில்ல. இன்னைக்கு இந்த செவத்தாலையே போவவேண்டியதுதான். இங்க கூட பரவாயில்ல போலருக்கு. மூக்க பொத்திகிட்டே இருந்துக்கலாம்’ குற்றவுணர்ச்சியும் தானாக பொத்திக்கொண்டது.

•••••••••••••••

ராமநாதனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ராமநாதனுக்கு பத்திகொண்டுதான் வரும்.........................................


Monday, July 19, 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?

நண்பர் புலவன் புலிகேசி என்னையிந்த தொடரிடுகைக்கு அழைத்திருந்தார். அவருக்கு எனது நன்றிகள்.



1)வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சி@பாலாசி

2)அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. க.பாலாசி என்பதுதான் எனது முழுமையான பெயர். முதலில் என்பெயரின் கடைசியெழுத்தான ‘சி’ என்பதை தலைப்பாக வைத்திருந்தேன். பிறகு மாற்றம்வேண்டி சி@பாலாசி என்பதாக மாற்றிக்கொண்டேன்.

3)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

முதலில் கேபிள் சங்கரின் திரைவிமர்சனங்கள் படிக்க ஆரம்பித்து அப்படியே படிப்படியாக வலைப்பூவென்றால் என்னவென்பதை அறிந்து பிறகு ஏதோவொரு நப்பாசையில் எனக்கான வலைப்பூ ஒன்றை உருவாக்கிக்கொண்டேன். அனுபவங்கள், மனதில் உருவாகும் ஆக்கங்கள், சிலசமயம் சரி, தவறெனப்படுவதையும் பதிந்துகொண்டிருக்கிறேன். அவை கட்டுரையாகவோ கவிதையாகவோ இருக்கலாம்.

4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

தடியெடுத்தவர்கள் யாவரும் தண்டல்காரர்களில்லை. பிரபலம் என்ற அடைமொழி வலைப்பதிவாளர்களுக்கு பொருந்துமா என்றும் தெரியவில்லை. பாதையெங்கும் வியாபித்திருக்கும் பூக்களின் வாசம் சிலநேரம் ரம்மியமான மழையை மனதிற்குள் தூவிவிடும். சிலநேரம் அமர்ந்து அலவலாவ செய்துவிடும். அதுபோல் விரும்பியவர்களை மற்றும் விரும்பின இடுகைகளை வாசிக்கிறேன், பின்னூட்டமிடுகிறேன் அவ்வளவே.

5)வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு. பகிர்வுக்காக சில அனுபவங்களை எழுதியிருக்கிறேன். அது நல்லதோ, கெட்டதோ யானறியேன். படிப்பவர்களின் ரசிப்பு மற்றும் பின்னூட்டங்களை தவிர்த்த விளைவுகள் என்று சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை.

6)நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சயம் பொழுதுபோக்கவும், போக்கிற்காகவும் அல்ல. சம்பாதிப்பதற்காகவும் அல்ல.

7)நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


ஒன்றுக்கு மட்டும்தான்.

8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

மற்ற பதிவர்கள் மீது கோபம் என்று இதுவரை வந்ததில்லை. மண்வாசனையும், மனிதத்தன்மையும், சூழ்நிலைச்சார்ந்த அக்கரையையும் வார்த்தைகளில் எடுத்தியம்பும் அனைவரும் பொறாமைகள் தவிர்த்த விருப்பத்திற்குரியவர்கள். அதையும் மீறின பொறாமை அவ்வப்பொழுது எழுவதுண்டு. இன்னாரென்று எளிய அடைப்புக்குள் புகுத்திவிடயியலாது.

9)உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..

முதலில் பின்னூட்டமிட்டவர் கோவி.கண்ணன் என்று ஞாபகம். தொடர்புகொண்டு பாராட்டியவரெனில் அது ஈரோடு கதிர் அவர்களாகத்தான் இருக்கவேண்டும். எதோவொரு கவிதைக்கோ, கட்டுரைக்கோ கிடைத்த அவரின் பாராட்டும் ஊக்கமும் மென்மேலும் எழுதத்தூண்டியது. தவறெனில் சுட்டிக்காட்டவும் அவர் தயங்கியதாக தெரியவில்லை. அதுவே இன்றென் கூழாங்கல் நிலைக்கு காரணமும்கூட. பின்காலத்தில் வந்தமர்ந்த வானம்பாடிகள் அய்யாவின் தோள்தட்டலும் ஒருவித உற்சாக மனப்பான்மைக்கு பெரிதும் காரணம். இவர்கள் தவிர்த்த அனைத்து வாசிப்பாளர்கள் மற்றும் என்னுடன் பயணித்து படித்து பின்னூட்டமிடும் அனைவரும் என்னை தோள்நிறுத்தி பாராட்டும் வகையைச்சாருவர்.

10)கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. மனம்போன வாழ்வென்றில்லாமல் முயன்று வாழ்கிறேன். மற்றபடி என் வாழ்காலம் இவ்வலைதள தலைப்பின் விரிவில் கூறினதுபோல அமையவேண்டுமென்றே விழைகிறேன்.


இந்த இடுகையைத்தொடர நண்பர் முரளிக்குமார் பத்பநாபனை அழைக்கிறேன்.




Monday, July 5, 2010

கொஞ்சம் நடப்போம்...


‘ஐயோவெனின் யான் புலி அஞ்சுவலே;
அணைத்தனன் கொளினே, அகன்மார்பு - எடுக்கல்லேன்!
என்போற் பெருவிதிர்ப் புறுக. நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி -
வரைநிழற் சேர்க- நடந்திற் சிறிதே’

(புறநானூற்றில் 255வது பாடல்; பாடியவர் வண்பரணர்)

பாடல் விளக்கம்
ஐயோவென்று கூக்குரலிடின், புலி வந்துவிடுமோவென்று அஞ்சுகிறேன்.உன்னைச் சுமந்து செல்லலாம் என்றால் ரொம்ப கனமாக இருக்கிறாய். உன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய நியாயமற்ற கூற்றுவன் என்னைப்போலவே பெரிதாக வருத்தப்படட்டும். தூரத்தில், மலையடிவாரத்தில் நிழல் உள்ளது. என் வளைக்கையைப் பற்றிக்கொள், கொஞ்சம் நடப்போம். (போர் நிலத்தில் காயமுற்று மரணமெய்ய காத்திருக்கும் தலைவனைக் கண்ட தலைவி, தன்னிலையெண்ணி புலம்புவதாக அமையப்பெற்றது)

இங்கே என்மொழிக்காக என்னுள் அன்றாடம் ஒலித்திடும் வரிகள். இச்சூழ்நிலை வழியில் நம் கரங்களும், குரல்களும் இடையறாமல் இம்சிக்கும் என் தமிழை, நான் சுமந்தோடும் வழியில் கால்களையேனும் இடறாமல் இருக்கவேண்டுகிறேன்.





இருமனச்சரம் கோர்க்கும் திருமண நிகழ்வில் ஓர் ஆண்மகன் விரும்புது ஒரு பதிவிரதையாகத்தான் இருக்கவேண்டும். அவளுக்கும் அப்படியே. இருபாலிலும் யாரோவொருவர் முன்னமே புணர்ச்சியடைந்திருப்பின் முகச்சுளிப்பிற்கு ஆளாக நேரிடும். அதை இச்சமூகம், என்சமூகம் விரும்புவதுமில்லை. பிறகெப்படியிங்கே வன்புணர்ச்சிகளொத்து என்மொழி மட்டும் இடையறாது கற்பிழக்கிறது என்றுதான் தெரியவில்லை. பிறன்மொழிக் கொண்டு என்மொழியில் பாலினக்கலப்பை புகுத்துவது எவ்வகையில் சிறப்பினையெய்த வழிக்கொணரும்.

நம் வீட்டு தோட்டம் எழிலடைய நாமே விரும்பபாவிடின், அதன் தொண்மையை எத்துணை தலைமுறைவரை நம்மால் கொண்டுச் செல்லமுடியும்? பெற்றவளை புறந்தள்ளி, என் பூவனத்தைப் பயிர்மேயும் வேலியாக ஆட்கொண்ட கள்ளிச்செடியின் முலைகளில் வழிந்ததை, இதுவரையும் தாய்ப்பாலாக அருந்துவது சரிதானோ?

பள்ளியில் I am suffering from fever ல் தொடங்கிவைத்த இக்காய்ச்சலை எம்மருத்திட்டு குணப்படுத்த? என்பின் வரும் தலைமுறைக்கு எந்த மொழியை இதுவென் செம்மொழியாக சுட்டிவிட்டு போகப்போகிறேன். என்வீட்டில் நான் அடைகாத்த குஞ்சுகளுக்கு நிழல்தர கூரைகளுக்குப்பதில் சிலந்திப் பூச்சிகளின் எச்சங்களான ஒட்டடைகளையா விட்டுச்செல்லமுடியும்? கொட்டிக்கிடக்கும் இத்தனையெழுத்துக்களைவிடுத்து வேறெந்த மொழியுருவில் நான் என் மனதை, என் உணர்ச்சிகளை, என் மகிழ்ச்சி மற்றும் கண்ணீரை அடையாளப்படுத்திவிட முடியும். நிச்சயம் முடியாது.

இன்றையநாளில் தமிழ்நாட்டு பள்ளிகளில் 5ம் வகுப்பில் ஆங்கிலமொழி படிப்புத்திறன் 81 சதம் மாணாக்கர்களுக்கு இல்லையென்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதே ஆய்வோர் எத்துணை மாணாக்கர்களிடம் தமிழ் மொழியின் படிப்புத்திறனை சோதித்தார்கள் என்று தெரியவில்லை. அப்படியாயின் 90 சதத்திற்குமேல் என்தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழினை இலக்கணப்பிழையின்றி எழுதப்படிக்க தெரியாது என்பதை உணரலாம். இது என்சமுதாயத்தின் அடித்தளமிழந்த நிலை. அவரவற்கு வாழ்நிலை ஏற்றங்களின்பால் கொண்ட ஈர்ப்பும், நாகரீகத்தின்மிகை கொண்ட நாட்டமும் மற்றுமின்னபிற பொருளாதாரமெனும் ஆடையிழந்த கவர்ச்சியும் என்மொழியை துச்சமென மதிக்கச்செய்துவிட்டது..விடுகிறது...விடும். இப்படியாயின் என்வாழ்காலத்திற்குள் என்மொழியினை நானே எரித்துவிட்டு சாம்பலாவேன்.

பார்ப்போம் எவ்வளவுதூரம் ஊன்றுகோலினை காலெனயெண்ணி ஊனமாய் வாழ்வோமென்று...


**************

குறிப்பு:
1. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 23வதுஆண்டு விழா மலரில் வெளியான என் கட்டுரை.

2. தேர்ந்தெடுத்த விழாமலர் குழுவினருக்கும், ஊக்குவித்த பதிவர் வானம்பாடிகள் அய்யா அவர்களுக்கும் நன்றி.

3. அன்பு பதிவர்கள் பழமைப்பேசி, ஈரோடு கதிர், வானம்பாடிகள் ஆகியோரின் கட்டுரையும் இம்மலரில் வெளியாகியுள்ளது. அதுசமயம் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.




Friday, July 2, 2010

யானை சவாரி...



அந்திப்பொழுதில் தொடங்குகிறது

அம்மாவுடனான

யானை சவாரி விளையாட்டு


அம்மாவே யானை

மகன்தான் இப்பொழுதும் பாகன்


ஏய் போ, அங்ப்போவாத, ம்ம் படு, எந்திரி......

எண்ணற்ற கட்டளைகளை

அவளிடம் மட்டுமே பிரயோகிக்கிறான்

சிலநேரங்களில் (மெல்ல) அடிப்பதும்கூட...


அப்பாவுடன் விளையாட

இத்தனை சிரமங்களை கொடுப்பதில்லை.


அவ்வப்பொழுது முனகிக்கொள்வாள்

‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’



••••••••••••••••••



அந்திப்பொழுதில் தொடங்குகிறது

அம்மாவுடனான

யானை சவாரி விளையாட்டு


அம்மாவை யானையாக்குவதில்

சில சவுகர்யங்கள்...


தாய்மையான மேனி

அலுங்காத நடை

பிடிமானத்திற்கு நிறைய அவளுடன்


இன்னும் சொன்னால்

சொல்வெதெல்லாம் அப்படியே செய்வாள்


இறங்கியப்பின்னும்

'எஞ்செல்லமே' என்று

வாரியணைக்கத்தான் கைநீட்டுவாள்


அப்பாவின் முதுகு அப்படியில்லை....








Wednesday, June 30, 2010

கனவுகள் பலவிதம்...

நிலவைக்காட்டி
அம்மாவும்

மிட்டாய் ஆசைகள் கூறி
அப்பாவும்

பூச்சாண்டிக்கதைகள் சொல்லி
பாட்டியும்

ஊட்டிஊட்டிவிடும்
எத்தனை ஆசாபாசங்கள்
நிறைத்தாலும்.......

கையேந்திபவனை கடக்கையில்
கலைந்துபோகிறது...

கைகளற்றவனின் கனவு.



•••••••••••••••••



கால்களால் வரைந்த பட்டத்தை

பார்த்தபடியே

துயிலடைந்தாள் அச்சிறுமி


அவளின் இரவுகள் முழுமையும்

வியாபித்திருக்கின்றன

ஆயிரமாயிரம் பட்டங்கள்


இமைகளுக்குள் கண்கள்

அங்கும் இங்கும் அலைந்தபடியே...


தன் பட்டம்

உயரப்பறப்பதில் ஆனந்த கண்ணீர்...


(தூக்கத்தினூடே)

அனிச்சையாகவும் துடைத்துகொள்கிறாள்

தோள்பட்டைகளால்...




  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO