எந்த திசையுமின்றி விசைகளுக்கேற்ப ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. பறவையன்றி, விமானத்தின் நிழல்போல ஒரு செயற்கை நேர்கோடு பின்தொடர்ந்தே வருகிறது. குருவிகள் இறந்தபின்னும் கூண்டுக்குள் சிதறிக்கிடக்கும் இரைகள்போல எதோவொன்று இருக்கத்தான் செய்கிறது. எதேச்சையாக பார்க்கின்ற ஓர் உயிரின் மீதான பரிவும் பச்சாதாபமும் ஆயிரம் மரங்களில் தன்னுடைய வசிப்பறியும் கோடைக்கால பட்சிகளாய் அமர்ந்துகொண்டு பழையதை உடைத்துக்காட்டுகிறது.
அந்த இலுப்பைத் திடலில் சுள்ளிப் பொறுக்கும் பெண்களுக்கும், காலைநேரத்தில் நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் செய்து உடலைக்கரைக்கும் ஜாம்பவான்களுக்கம், அருகிலுள்ள சாராயக்கடையில் மொய்க்கும் ஈக்களுக்கும்கூட அவளை நன்றாகவே தெரியும். நான் பார்க்கும் பொழுதுகளில் எப்போதும் ஒரு இலுப்பை மரத்தை உதைத்துக்கொண்டேயிருப்பாள். புழுதியில் கருத்துப்போன நாடா அறுந்த பாவாடையும், அதன்மேல் இறுக்கி கட்டப்பட்ட ஒரு சணல் கயிறும், ஜாக்கெட் என்று சொல்லமுடியாதபடிக்கு ஆங்காங்கே உறிந்து தொங்கும் ஏதோவொரு மேலங்கியும் அவளின் அடையாளத்திற்கு போதுமானது. பள்ளிப்பருவத்தில் அதன் பக்க மைதானத்தை மேயும் இளம்பிஞ்சிகளுக்கு அவள் ஒரு பொருட்டல்ல.
ஒருகட்டத்தில் அவளை அன்றாடம் காண்பது என் வழக்கமாயிற்று. மரத்தை அவள் உதைக்கும்போது வசை வார்த்தைகள் சரமாரியாக வந்துகொண்டேயிருக்கும். கண்டிப்பாக அவள் ஒரு ஆண்மகனை உருவகப்படுத்திதான் மரத்தினை உதைத்திருக்கிறாள். சரிதான் எத்தனைப் பெண்களுக்குத்தான் தைரியம் இருந்திருக்கிறது புத்தி சுவாதீனத்துடன் ஓர் ஆடவனை உதைக்க? அவளைக் கடந்தபின்பும் வெகுநேரம் அவளிடமே மனது சுற்ற ஆரம்பித்தது. இவள் மட்டும் ஏன், இப்படி, எப்படி, உண்டு, உடுக்க என்ன செய்வாள்? எத்தனையோ கேள்விகள் அலைந்துகொண்டேயிருக்கும். ஒருநாள் மாலைவேளையில்தான் கவனித்தேன். எவனோவொருவன் ஒரு பாக்கெட்டை (சாராயம்) அவளிடம் கொடுத்தான். வாஞ்சையுடன் அவரசமாக மடிக்குள் புதைத்துக்கொண்டாள். மறுபடி அவன் நின்றானா போய்விட்டானா என்பதை கவனிக்கவில்லை.

அருகிப்போன மானுடப்பண்பு எங்கும் கோலோச்ச இனியேதும் காலமிருக்கிறதாயென்ன? கொஞ்சமாக அவளை கவனிக்கத் தொடங்கினேன். அவள் உடலில் மாற்றம். சிறுது காலம் கழித்து அவள் கைகள் நிறைய பழைய வளையல்களை அணிந்திருந்தாள். நெற்றியில் எதோ கொஞ்சம் சிகப்பு நிறம். முதலில் ரத்தமாக இருக்குமென்று நினைத்தேன். இல்லை. அவள் உடலில் வயிற்றுப்பகுதி பெரிதாக இருந்தது. எனக்கு புரிந்தது, அவள் கருத்தரித்திருந்தாள். நாடெங்கிலும் அலையும் காமக்கண்களுக்கு ஏது பஞ்சம், எவனோ ஒருவன் காரணமாக இருக்கலாம். ஒரு புத்தி சுவாதீனமற்றவளை தின்றுப்பார்த்தவன் எந்தக்கொம்பனாக இருப்பான்? என்னால் யூகிக்க முடியவில்லை. மீண்டுமொரு இடைவெளி. பிறகு அவளைப் பார்த்தநாள் ஆற்றமுடியாத பாரத்தை கொடுத்தது. அவள் இறந்துகிடந்தாள், ஈக்கள் மூடிய உடலுடன். அருகில் கிடந்த அவளின் கிழிந்த ஆடைகளெங்கும் மர்மக்கறைகள். அந்த இலுப்பை மரம் அப்படியேத்தான் இருந்தது.
.