க.பாலாசி: காஞ்ச மலர்

Friday, December 10, 2010

காஞ்ச மலர்

எந்த திசையுமின்றி விசைகளுக்கேற்ப ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை. பறவையன்றி, விமானத்தின் நிழல்போல ஒரு செயற்கை நேர்கோடு பின்தொடர்ந்தே வருகிறது. குருவிகள் இறந்தபின்னும் கூண்டுக்குள் சிதறிக்கிடக்கும்  இரைகள்போல எதோவொன்று இருக்கத்தான் செய்கிறது. எதேச்சையாக பார்க்கின்ற ஓர் உயிரின் மீதான பரிவும் பச்சாதாபமும் ஆயிரம் மரங்களில் தன்னுடைய வசிப்பறியும் கோடைக்கால பட்சிகளாய் அமர்ந்துகொண்டு பழையதை உடைத்துக்காட்டுகிறது.

அந்த இலுப்பைத் திடலில் சுள்ளிப் பொறுக்கும் பெண்களுக்கும், காலைநேரத்தில் நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் செய்து உடலைக்கரைக்கும் ஜாம்பவான்களுக்கம்,  அருகிலுள்ள சாராயக்கடையில் மொய்க்கும் ஈக்களுக்கும்கூட அவளை நன்றாகவே தெரியும். நான் பார்க்கும் பொழுதுகளில் எப்போதும் ஒரு இலுப்பை மரத்தை உதைத்துக்கொண்டேயிருப்பாள். புழுதியில் கருத்துப்போன நாடா அறுந்த பாவாடையும், அதன்மேல் இறுக்கி கட்டப்பட்ட ஒரு சணல் கயிறும், ஜாக்கெட் என்று சொல்லமுடியாதபடிக்கு ஆங்காங்கே உறிந்து தொங்கும் ஏதோவொரு மேலங்கியும் அவளின் அடையாளத்திற்கு போதுமானது. பள்ளிப்பருவத்தில் அதன் பக்க மைதானத்தை மேயும்  இளம்பிஞ்சிகளுக்கு அவள் ஒரு பொருட்டல்ல.

ஒருகட்டத்தில் அவளை அன்றாடம் காண்பது என் வழக்கமாயிற்று. மரத்தை அவள் உதைக்கும்போது வசை வார்த்தைகள் சரமாரியாக வந்துகொண்டேயிருக்கும். கண்டிப்பாக அவள் ஒரு ஆண்மகனை உருவகப்படுத்திதான் மரத்தினை உதைத்திருக்கிறாள். சரிதான் எத்தனைப் பெண்களுக்குத்தான் தைரியம் இருந்திருக்கிறது புத்தி சுவாதீனத்துடன் ஓர்  ஆடவனை  உதைக்க? அவளைக் கடந்தபின்பும் வெகுநேரம் அவளிடமே மனது சுற்ற ஆரம்பித்தது. இவள் மட்டும் ஏன், இப்படி, எப்படி, உண்டு, உடுக்க என்ன செய்வாள்? எத்தனையோ கேள்விகள் அலைந்துகொண்டேயிருக்கும். ஒருநாள் மாலைவேளையில்தான் கவனித்தேன். எவனோவொருவன் ஒரு பாக்கெட்டை (சாராயம்) அவளிடம் கொடுத்தான். வாஞ்சையுடன் அவரசமாக மடிக்குள் புதைத்துக்கொண்டாள். மறுபடி அவன் நின்றானா போய்விட்டானா என்பதை கவனிக்கவில்லை.

அருகிப்போன மானுடப்பண்பு எங்கும் கோலோச்ச இனியேதும் காலமிருக்கிறதாயென்ன? கொஞ்சமாக அவளை கவனிக்கத் தொடங்கினேன். அவள் உடலில் மாற்றம். சிறுது காலம் கழித்து அவள் கைகள் நிறைய பழைய வளையல்களை அணிந்திருந்தாள். நெற்றியில் எதோ கொஞ்சம் சிகப்பு நிறம். முதலில் ரத்தமாக இருக்குமென்று நினைத்தேன். இல்லை. அவள் உடலில் வயிற்றுப்பகுதி பெரிதாக இருந்தது.  எனக்கு புரிந்தது, அவள் கருத்தரித்திருந்தாள். நாடெங்கிலும் அலையும் காமக்கண்களுக்கு ஏது பஞ்சம், எவனோ ஒருவன் காரணமாக இருக்கலாம். ஒரு புத்தி சுவாதீனமற்றவளை தின்றுப்பார்த்தவன் எந்தக்கொம்பனாக இருப்பான்? என்னால் யூகிக்க முடியவில்லை. மீண்டுமொரு இடைவெளி. பிறகு அவளைப் பார்த்தநாள் ஆற்றமுடியாத பாரத்தை கொடுத்தது. அவள் இறந்துகிடந்தாள், ஈக்கள் மூடிய உடலுடன். அருகில் கிடந்த அவளின் கிழிந்த ஆடைகளெங்கும் மர்மக்கறைகள். அந்த இலுப்பை மரம் அப்படியேத்தான் இருந்தது..

36 comments:

vasu balaji said...

போன வெள்ளிக் கிழமை விட்டதுக்கு சேர்த்து வச்சி கறந்துட்டியே ராசா. வெள்ளிக்கிழமை அடமானம் வைக்க கூடாதும்பாங்க. நீ கராரா மனச புடுங்கி வச்சிக்கிற. நடத்து:)).

நேசமித்ரன் said...

பாலாசி தெருக்கூத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடக்கும் மணிகளைப் பொறுக்கி பத்திரப் படுத்தி முடிந்து கொள்ளும் பிச்சியொருத்திக்கு தேநீர் வாங்கிக் கொடுத்து சில்லறை பெறுகையில் நீளும் அவளின் விரல்கள் கொண்ட நடுக்கம் மீண்டும் கண்ணாடுகிறது

நன்று! தொடர்க...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமை.சுருக்கமாக முடித்தாலும்.

Jerry Eshananda said...

மொழி நடை, எட்டுத்திக்கும் மணக்கிறது பாலாசி.

Chitra said...

மனதை பாரமாக்கி விட்டது!

சென்னை பித்தன் said...

கலங்க வைத்து விட்டீர்கள்.

sakthi said...

மனம் கனத்து விட்டது

ஏன் பாலாசி?

எப்போதும் உங்கள் வரிகள்

ஏதோ ஒரு வகையில் இழப்பையும்

ஏமாற்றங்களையும் வடிக்கும்

வார்த்தைகளின் மொழியாக உள்ளது???

ஈரோடு கதிர் said...

தலைப்பு மிகப் பொருத்தம்

காமராஜ் said...

மிகவும் கூர்மையான பர்வை.எழுத்து கைவீசி நடக்கிறது.படித்துமுடிக்கும் போது எழுத்தின் கனம் படிப்பபோர் மீது ஏறிக்கொள்கிறது.

அரசூரான் said...

அனுபவம்ன்னு எழுதியிருக்க, மனதிற்க்கு உருத்தலாய் இருக்கிறது. ஆக்கம் வழக்கம் போல் அருமை.

சிநேகிதன் அக்பர் said...

சல்யூட்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

மனம் கனத்து விட்டது

கலகலப்ரியா said...

அருமை பாலாசி..

Mahi_Granny said...

இப்படி எழுதினால் , என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

Unknown said...

மனசைப் பிழிஞ்சு எடுக்கறீங்க. ஈவிரக்கமற்ற மனிதர்கள்.

தாராபுரத்தான் said...

மனம் கனத்துவிட்டதுங்க..

மாதவராஜ் said...

பாலாசி!

தொண்டையடைத்துப் போகிறது. சபிக்கப்பட்ட நம் தெருக்களில் இப்படி எத்தனை மர்மக்கறைகள். சின்னஞ்சிறு வயதில் பாவாடையெல்லாம் இரத்தக்கறையோடு எங்கள் வீட்டு வாசலில் சுருண்டு கிடந்த கீதாவைத் திரும்பவும் இன்று வந்து நிற்கிறாள்.மொத்த சமூகமும் சிலுவையாய் அந்த இலுப்பை மரத்தைச் சுமந்து செல்ல வேண்டியதுதான்.

arasan said...

நான் படித்துவிட்டு ஒரு கணம் கலங்கி போய்விட்டேன் சகோ...

உண்மையில் எத்தனையோ இப்படி மலர்கள் காஞ்ச மலர்களாக்க படுகிறார்களோ...

நினைத்தாலே நெஞ்சம் துடிக்கிறது..

நல்ல எழுத்து நடை .. நல்ல பதிவு .. தொடரட்டும் ...

பவள சங்கரி said...

அழகான நடை பாலாசி.....மனதை வேதனைப் படுத்துகிறது.....

அம்பிகா said...

இதைப் படிக்கையில், மாதுஅண்ணன் குறிப்பிட்ட அதே கீதா தான் எனக்கும் நினைவுக்கு வந்தாள். தெலுங்கு பேசித் திரிந்த, அழகாய் சிரித்துக் கொண்டலைந்த கீதாவுக்கும் இதேதான் நிகழ்ந்தது.
வேதனை வருகிறது படிக்கையில்.

Ahamed irshad said...

...,

Anonymous said...

கழுவேற்ற வேண்டிய கொடும்பாவிகள் வாழ்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். கதை மனதை இறுக்குகிறது..உங்கள் எழுத்துக்கான அழகிய நடை மேலும் செம்மையான பாதையில்...அருமை என்ற வார்த்தை சாதாரணமா இருந்தாலும் சொல்லத்தோனுது பாலாசி..

ஹேமா said...

பாலாஜி...வாரம் ஒரு முறையானாலும் மனதை அழுத்தும் பதிவு.சில இழப்புக்களும் வேதனைகளும் தைரியத்தையே தரும்.உங்கள் எண்ணங்களுக்கு மெருகேற்றுவது உங்கள் எழுத்து நடையும்கூட !

Ashok D said...

:(

மாணவன் said...

மனது வலிக்கிறது நண்பரே,

சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

பத்மா said...

பாலா எப்பவும் போல் கலக்கல். கலக்கம் .
எல்லா ஊரிலும் இது போன்ற பெண்கள் உண்டு தானே ? முடிவும் பலசமயங்களில் இப்படித்தான் .
விடை தெரியா கேள்விகளில் இதுவும் ஒன்று ..
நம் ஊர் பேர் சொல்லும் பிள்ளை நீங்கள். மகிழ்ச்சி

தல தளபதி said...

உங்கள் தளத்தின் வாசகன் நான். உங்களின் எழுத்துக்கள் மிக அருமை. நானும் இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் ஆதரவு தேவை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாசி..

எழுத்து, நடை, விவரிப்பு பன்மடங்கு மேலோங்கி உள்ளது.

காஞ்ச மலரைக் கண் முன்னே நிறுத்தி கண் கலங்க வைத்துவிட்டீர்கள்.

சிவகுமாரன் said...

நம்மில் பல பேர்
அப்படித்தான் இருக்கிறோம்
அந்த இலுப்பை போல
இழப்பை அறியாமல்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை பாலாசி. காஞ்ச மலர் கனமாக மனதில்..!

சத்ரியன் said...

பாலாசி,

இது கதையாய்த் தோன்றவில்லை எனக்கு.

இந்த சம்பவம் நிஜம். இலுப்பை மரத்திற்கு பதில்- நாணல் புல்.

மற்றது அனைத்தும் அதே.

அந்த சம்பவம் நிகழ்ந்து 8 ஆண்டுகள் ஆகியிருக்கும். இதைப்படித்து மீண்டும் நினைவில் ஏறி அமர்ந்துக்கொண்டது.

'பரிவை' சே.குமார் said...

கலங்க வைத்து விட்டீர்கள்.

சுந்தரா said...

படித்துமுடித்தபின்னும் மனசில் பாரமாக உட்கார்ந்திருக்கிறது அந்தக் காஞ்ச மலர்.

க.பாலாசி said...

நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி நேசமித்ரன் அய்யா
நன்றி ஸ்ரீ(தர்)
நன்றி ஜெரி ஈசானந்தன் அய்யா
நன்றி சித்ரா
நன்றி சென்னை பித்தன்
நன்றி சக்தி அக்கா
(அழுத்தி கொண்டிருப்பது அதுதானே)
நன்றி கதிர் அய்யா
நன்றி காமராஜ் அய்யா
நன்றி அரசூரான்
நன்றி அக்பர்
நன்றி டி.வி.ஆர் அய்யா
நன்றி ப்ரியாக்கா
நன்றி Mahi_Granny
நன்றி சேது

க.பாலாசி said...

நன்றி தாராபுரத்தான் அய்யா
நன்றி மாதவராஜ் அண்ணா
நன்றி அரசன்
நன்றி நித்திலம் மேடம்
நன்றி அம்பிகா
நன்றி இர்ஷாத்
நன்றி தமிழரசி அக்கா
நன்றி ஹேமா
நன்றி அசோக் அண்ணா
நன்றி மாணவன்
நன்றி பத்மா மேடம்
நன்றி தலதளபதி
(வருகிறேன்)
நன்றி ச. செந்தில்வேலன்
நன்றி சிவக்குமரன்
நன்றி ராமலஷ்மி
நன்றி சத்ரியன்
நன்றி சே.குமார்
நன்றி சுந்தரா

அமர பாரதி said...

Classic Balasi.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO