கையை பிசைந்துகொண்டிருந்த பெற்றோர்கள் ஒரு வருடம் பொறுத்திருந்துவிட்டு நம் ராணிக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராணியின் விருப்பப்படி அவளே தேர்ந்தெடுத்த அல்லது காதலித்த வரனுக்கு அவளை கட்டிக்கொடுக்கிறார்கள். எல்லாம் சுபம்.
Thursday, March 10, 2011
இவளும் பெண்தான்..
கையை பிசைந்துகொண்டிருந்த பெற்றோர்கள் ஒரு வருடம் பொறுத்திருந்துவிட்டு நம் ராணிக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராணியின் விருப்பப்படி அவளே தேர்ந்தெடுத்த அல்லது காதலித்த வரனுக்கு அவளை கட்டிக்கொடுக்கிறார்கள். எல்லாம் சுபம்.
Wednesday, July 21, 2010
ஒட்டுவாரொட்டி...
‘ஒருநாளைக்கு பதினஞ்சாயரத்து சொச்சம் பேராவது பொழங்குற எடத்துல க... பயலுங்க ஒரு பக்கத்தால மட்டும்தான் ஒண்ணுக்க இருக்க கட்டிவிட்டுருக்கானுங்க. அந்தப்பக்கத்தால ஒண்ணு கட்டினா இவனுவ வீட்டுக்காசு கொறஞ்சமாதிரி நெனப்பு. இந்த செவத்துல பொழுதுக்கும் நின்னு ஒண்ணுக்கடிச்சு நாறடிக்கிறத பயலுங்கல என்னத்த சொல்றது. பாழப்போனவனுங்களுக்கு புத்தியிருக்குமா என்னான்னே தெரியல. எல்லாம் முழுக்காலு சட்டையும் சவடாலுமாத்தான் திரியிரானுங்க, ஒரு பயலுக்காச்சும் இப்டி பொதுவால நின்னு இருக்கோமே இதுனால வர கெடுதல நெனச்சுப்பாத்தானுங்களா? நாத்தம் நாத்தம் அண்டசயிக்கல’ இது முருகேசனின் அன்றாட புலம்பல்.
‘ஏப்பா கொஞ்சம் தள்ளிதான் போங்களாம்பா.. அங்கணத்தான் கட்டிவுட்டுருக்காங்கல்ல’ இப்டியும் சிலநேரம் கத்திப்பார்ப்பான். ‘நல்லது சொன்னா எவங்கேக்குறான்.. நாசமாப்போச்சு..நமக்கென்ன’ என்று நினைப்பதுதான். ஆனாலும் அவனால் முடிவதில்லை. ‘பங்காளி ஆத்தர அவசரத்துக்கு போறதுதான். இதெல்லாமா பாத்துகிட்டுருப்பாங்க, அழிஞ்ச கொல்லையில ஆடு மேஞ்சான்ன? மாடு மேஞ்சான்ன??’ன்னு பக்கத்துக்கடை பங்காளி சொல்வதுண்டு. ‘சும்மாகெட பங்காளி. எனக்கு கெட்டக்கோவம் வந்திடும்’ என்பான்.
அன்றைக்கு ஆறுமணிக்கு கடைதிறக்கவேண்டியவன் ஏழு மணி ஆகிவிட்டது. அவசரஅவசரமாக வந்தவன் ‘இந்த கொண்டாங்கொடுத்தான் ஒறவே வேண்டான்னு நெனைக்கறதுதான். என்னப்பண்ணி தொலையறது. வந்ததுங்களுக்கு எதாவது செஞ்சித்தொலைய வேண்டிக்கடக்கு’ மனதிற்குள் புலம்பியவாறே ‘கிரிச்’ யென்ற உருமலோடு இயங்கும் சட்டரை மேலே தூக்கினான். கொல்லைப்பக்கமுள்ள ஒரு கழிவரையையும் சொந்தங்கள் அடைத்துக்கொண்டது ஞாபகம் வந்தது. ‘எல்லாத்தையும் அடக்கலாம் போலருக்கு, இத அடக்க முடியறதில்ல. கடையத்தெறந்திட்டு போலாம்னா இப்டி அடிவயித்தால படுத்துதே. நேத்தைக்கு நைட்டு இந்த அரிசி கணக்கா உள்ள மாத்தரைய (Cetirizine) சாப்டது தப்பாப்போச்சு. நிமிசத்து ஒருவாட்டியா வரும். கருமம் புடுச்சவனுங்க. சலி அலர்ஜின்னாலும் சரி, அரிப்பு, புண்ணுன்னாலும் சரி இதததான் தர்ரானுங்க.’ அதற்குள் யாரோ கடைக்கு வந்துவிட்டார்கள்.
‘வாங்கம்மா என்ன வேணும்?’.
‘ஆப்பில் என்னவெல’.
‘கிலோ 140’
‘அரகிலோ போடுங்க’
‘ம்ம்ம்’
‘பை வச்சிருக்கீங்களா?’
‘இருக்கு’
‘இந்தாங்க.... காலைலேயே நூறுவாய தர்ரீங்களே. சில்லர இல்லைங்களா?’
‘இல்லப்பா’
‘பங்காளி இந்த நூறுவாய ஒடச்சி கொடேன்.’
‘காலைல ஏது பங்காளி. இல்ல...’
‘இரும்மா, எதுத்தால பூக்கடயில வாங்கியாரேன்.’
‘ச்ச..ச்ச.. அடிவயத்தவேற லேசா வலிக்கற மாரி இருக்கே. இனிமேலும் முடியாது. யாவாரத்தையும் உடமுடியல. நல்லவேள சில்லர வாங்க இங்கவந்தோம். அப்டியே போயிட்டு வந்திடவேண்டியதுதான்’ கீழண்டப்பக்கமாய் உள்ள இடுப்பளவு சிமெண்ட் கிராதிப்போட்டு அடைத்திருந்த அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்திற்குள் நுழைந்தான். உள்ளபோனதுதான் தாமதம்...‘அடக்கருமம் புடிச்சவங்களா இங்கயா வந்து பேண்டு வப்பானுங்க, நாறப்பயலுக. காலங்காத்தால, ஹ்கூம், கொல்லுன்னு மொய்க்கிற ஈக்கூட்டத்த பாத்தாலே பயமாயிருக்கு. வாயில நல்லா வருது. என்னாத்த சொல்லி திட்டறது. இப்ப எங்கப்போறது?. ம்கூம்....... அவசரத்துக்கு பாவமில்ல. இன்னைக்கு இந்த செவத்தாலையே போவவேண்டியதுதான். இங்க கூட பரவாயில்ல போலருக்கு. மூக்க பொத்திகிட்டே இருந்துக்கலாம்’ குற்றவுணர்ச்சியும் தானாக பொத்திக்கொண்டது.
•••••••••••••••
ராமநாதனின் பழக்கடை கொஞ்சம் சிறியதுதான், அந்த நகர பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளை ஒப்பிடுகையில். கீழண்டைப்பக்கமும், மேலண்டைப்பக்கமும் உள்ள அனைத்துமே பழக்கடைகள், மற்றும் பூக்கடைகள். நடுவில் இருக்கும் சேகரண்ணன் டீக்கடைத்தவிர. இதோ எதிர் திசையில் தெரிகிறதே அந்த சுவரைப்பார்க்கும் பொழுதெல்லாம் ராமநாதனுக்கு பத்திகொண்டுதான் வரும்.........................................
Tuesday, June 22, 2010
சில புழுக்கள்
சிலநேரங்களில் காணுகின்ற நிகழ்வுகள் மனதின் மையத்தைப்பிடித்துக்கொண்டு அகலாமல் அரித்துக்கொண்டிருக்கும். அதுபோலவே இதுவும்...
அலுவலக நண்பருடன் சமீபத்தில் அம்மன் கோவில் கும்ப அபிடேகத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை உருவானது. பளபளக்கும் வெளிர்நிற ஆடைகளில் அவ்வூரே திரண்டு ஒற்றுமையாக அவ்விழாவினை நடத்தியது கண்டு வியந்தேன். விசேடங்கள் முடிவடைந்தவுடன் இருசக்கர வாகனத்தை எடுக்க திரும்பி வரும்பொழுதுதான் கவனித்தேன் ஒரு வீதி மக்கள் அவ்வீதி முகனையில் நின்றுகொண்டு அக்காலை உடையுடன் கோவிலைப் பார்த்துக்கொண்டிருப்பதை. அவ்வோடையின் அந்தப்பக்கம் கோவில். இந்தப்பக்கம் அவ்வீதி. நண்பரிடம் விசாரித்தபொழுதுதான் அத்தொண்டைக்குழியடைக்கும் நிலை ஏற்பட்டது. அம்மக்கள் அந்த கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களென்று. ஏனென்று வினவியபொழுது அவர்களின் சாதிதான் காரணமாய் சொல்லப்பட்டது. மீறி சென்றால் அடிதடி, வெட்டுக்குத்து போன்றன நிகழுமாம்.
அந்த சிறுவாய்க்காலின் படித்துறையில் பல்துலக்கியபடியும், துணிகளை தெருக்குழாய்களில் அலசியபடியும் அத்தனை நன்மக்களும் வேடிக்கை மட்டுமே பார்த்தது நெஞ்சில் அடைத்துக்கொள்ளத்தான் செய்தது. அவர்களுக்குக்கூட தோன்றவில்லை, அந்த அம்பாளை வணங்கவேண்டுமென்று. ஒரு ஊரில் மிகைவாழும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் திமிருடனான ஆதிக்க மனப்பான்மை இதுபோன்ற கீழ்ச்செயல்களுக்கு அடித்தளமாகிறது என்பது கண்கூடு. அந்தப்பக்கம் நின்று வெளுத்த சட்டைவேட்டியுடனும், பட்டுப்புடவைகளுடனும் அம்பாளை தரிசனம் செய்யும் அத்தனைப்பேரின் மனதிலும் எத்தனை அழுக்குகள் நிறைந்திருக்கின்றன. நாகரீக வளர்ச்சி எத்தனையோ படிகளை எட்டிவிட்டநிலையிலும் இன்னும் சில உட்கிராமங்களின் நிலை இப்படியேத்தான் உள்ளது.
எனது தாய் தந்தையருக்கு சாதியின் சாயம் ஒட்டியிருந்த சமயங்களில், அப்படியான மாயை எதுவுமில்லை, எல்லோரும் மனிதர்கள்தான், நம்முடலில் உள்ள யாவனவும் எல்லா மனித உடல்களிலும் இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு பகுத்தறிவிக்க என் கல்வியறிவும், அனுபவமும் உதவியது. இங்கு ஒரு ஊரே சேர்ந்து ஒரு குறிப்பிட்ட மக்களை சாதி அடையாளங்களால் ஒதுக்கிவைப்பது எத்துணை கொடுமையானது. அங்கு கல்வி பயின்ற மக்களே இல்லையோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
ஏட்டுக்கல்வி மதிப்பெண்களுக்காக என்றுமட்டும் ஆகிவிட்ட இந்நேரத்தில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்றன மனப்பாடம் செய்து மதிப்பெண்கள்பெற மட்டுமே பயன்படுகின்றனவே தவிர வேறெந்த புரிந்துணர்விற்கும், வாழ்வியலின் நற்பண்புகளுக்கும் பயன்படுவதில்லை என்றே நினைக்கிறேன். வயதில் மட்டும் முதிர்ந்த கல்வியறிவற்ற சில பெரிய புழுக்கள்தான் இப்படியென்றால் அதற்கு கொடிபிடித்துக்கொண்டிருக்கும் என்னொத்த இளையக்கூட்டமும் அதற்கு அடிக்‘காலாக’ முளைத்துக்கொண்டிருக்கிறதே. இச்சமுதாயத்தில் அகற்றப்படவேண்டிய அழுக்குகள்தான் எத்தனைவிதமாய் முளைத்துக்கிடக்கிறது !!!!
Monday, February 8, 2010
புரையோடும் ஆலமரம்
நாகரீக போர்வைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகளின் நிலையைப்பற்றி பெருமையுடன் சொல்வதற்கொன்றுமில்லை. இதற்கு விதிவிலக்காய் என்னைப்பெற்றதும் மற்றுமென் சுற்றுவட்ட 54 கிராமங்களும் இல்லையென்பதே அவிழ்ந்துகிடக்கும் உண்மை.
எங்கள் தெருவிலுள்ள 25 விவசாயக்குடும்பங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இல்லாதவர்கள் (நானறிந்தவரையில்). மழையினாலோ அல்லது வெள்ளத்தினாலோ வேறெந்த இடர்களாலோ பயிர்கள் பாதிக்கப்பட்டாலும் அடுத்த குறுவை சாகுபடியில் விட்டதை பிடிக்கலாம் என்ற ரீதியில் நம்பிக்கையும் ‘பணத் திடமும்’ உள்ளவர்கள். அடுத்தமுறையும் நட்டமாயின் அவர்களின் வெளிநாட்டுப்பிள்ளைகள் அவர்களை காப்பாற்றிவிடுவார்கள் அல்லது அடுத்த சாகுபடிக்கு பணநீரூட்டி உயிர் கொடுத்துவிடுவார்கள். அவர்களுக்கு இதுதான் தொழிலே (பிள்ளைகளுக்கல்ல). இது எங்கள் தெருவின் நிலை.
இந்நிலை அப்படியே தலைகீழாய் எங்களது அடுத்தடுத்த தெருவாசிகளுக்கு. முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். முதல் போகம் முறிந்துபோனால் அடுத்தபோகம் விளையும் வரையில் ஒரு ரூபாய் அரிசிதான் கதி. (இதன் விலை இன்னும் ஒருரூபாய் ஏறினால் அதோகதிதான்). இன்றைய நாளில் அவ்வப்போது அடித்துப்பெய்யும் மழையில் படுத்துக்கொண்ட நெற்பயிர்கள் அழுகி உயிர்த்துறந்த நிலையில் எல்லாம் வற்றி ஈரப்பதமுள்ள நிலத்தினை மீண்டும் கைகலப்பைக்கொண்டு (இன்றும் உயிருடன் உள்ளது) உழுது மறுநடவு செய்தாலும், எல்லாவித துன்பங்களையும் தாண்டி நெல்மணிகள் நிலத்தினை பார்க்கும் தருவாயில், மாரியின் மயக்கத்தில் பொய்க்கும் பருவமழை பல்லிளித்துக்காட்டும். மீண்டும் நட்டம்.
வானம் பார்த்த பூமி இல்லை. மின்மோட்டார் வசதி இருக்கிறது. இல்லாவிட்டாலும் அடுத்த வயலுக்கு சொந்தக்காரர் தண்ணீர் தரும் நல்லவராக இருப்பார். இப்போது காவிரி டெல்டா பகுதியில் பெரும்பாலானோர் காவிரியைமட்டும் நம்பி இல்லை. அது அம்மா வந்தால் கொஞ்சம், அப்பா வந்தால் கொஞ்சம், இல்லையேல் கருநாடகத்தில் வெள்ளம் வந்தால் ‘மிகவும்’ கிடைக்கும் வரம். (அதேநேரத்தில் இங்கே மழை அடித்துப்பெய்து கொண்டிருக்கும்) என்றும் இந்த வரம் ‘கடையாது’ என்றும் தெரியும். மழை வரவில்லையென்றால் வருந்துவதும், மிகைந்து வந்தால் வேதனைக்குள்ளாவதும் எல்லாப்பகுதி விவசாயிகளுக்கும் உரியதுதான். அருவடைக்கு தயாராகும் நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தால் விவசாய மக்கள் ஒவ்வொருவரின் அடிவயிற்றிலும் அலறலெடுக்கும். தன்பயிருக்காக மட்டுமல்லாது, அடுத்தவர் பயிர்களும் அழுகுவதை நினைத்து கண்ணீர்மல்குவது விவசாயிகளுக்கே உ(ய)ரிய குணம். இது இன்றைய நிலையில் விவசாயிகளின் இன்னொரு பிரச்சனை.
இவையெல்லாவற்றையும் தாண்டி அருப்பருத்து களத்துக்கு கொண்டுவந்து அடித்துப்பார்த்தால் மிஞ்சுவது முதலாகத்தான் இருக்கும். சரிபோகட்டும் என்று அடுத்த நடவுக்கு தயாராவான் அதே நிலையவன். ஆனால் அவன் மனதில் ஆழப்பதியும் எண்ணமென்பது, தன் பிள்ளைகளுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்பதே. விவசாயத்தைவிட்டால் கிராமப்புறங்களில் இன்று வெளிச்சம்காட்டுவது கொத்தனார் தொழில். சித்தாளாக வேலைசெய்தால் ஒருநாளைக்கு (அதாவது காலை 10 மணிமுதல் மாலை 5.30வரை) 150திலிருந்து 200வரை ஊதியம் (கிராமப்புறங்களில்). கொஞ்சம் முன்னேறி ‘கரனை’ பிடிக்க ஆரம்பித்தால் 250க்கு குறைவில்லாமல்.
அதைவிடுத்து காலை 7 மணிக்கு அருப்புக்குச் சென்றால் மாலை 6.30 மணிவரையில் வெயிலை மென்று துப்பினாலும் விஞ்சிக் கிடைப்பது 150ரூபாய் வரையும், இரண்டு டீயும், பட்சணங்களுமே. (பெண் நடவாட்களுக்கு இன்னும் குறைவு). வயலுக்குச்சென்று பசியில் குத்தும் வயிற்றை பட்சணங்களில் நிரப்பி பலன் காணுவதை தனது சந்ததியினருக்கும் தொடரவிடாமல் செய்யவே எந்தவொரு தகப்பனும் விரும்புவான். அதே நிலைதான் இந்நிலை விவசாயிகளுக்கும். எப்பாடுபட்டாவது பிள்ளைகளை படிக்கவைக்கின்றனர், இல்லையேல் கொத்தனார் தொழில் அல்லது விவசாயமல்லாத வேறொரு தொழில், மிகை மிஞ்சினால் வெளிநாடு அனுப்பிவிடுகின்றனர். இல்லையேல் தருதலை உருப்படாது என்று தண்ணீர்தெளித்து விட்டொழிக்கின்றனர். எது எப்படியாயினும் இவர்களின் நோக்கம் விவசாய கஷ்டமென்பது தம்மோடு ஒழியட்டுமென்பதே. (விதிவிலக்குகளும் உண்டு).
“ஆலமரம் போல நீ வாழ - அதில்
ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட - அந்த
கருணையை நாங்கள் பாராட்ட..”
எல்லாம் சரி. விழுதுகளின் ஊன்றலின்றி புரையோடிய ஆலமரநிழலில் எத்தனைக்காலந்தான் நம்மாலும் இளைப்பாறமட்டுமே முடியும்.
Thursday, January 21, 2010
பிஞ்சிற் பழுத்த...
உள்ளத்து ஆளுமைகளை ஆசுவாசப்படுத்தி அமர்த்திவிட்டு, அதனுள் படிந்திருக்கும் கசடுகளை அவ்வப்போது அகற்றவேண்டிய கட்டாயம் எனக்கும் இருக்கிறது. எங்கோ பார்த்தோ பழகியோ நமக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் அவ்விதமான படிமங்களை பறித்தெரிவதற்கான நேரமும் காலமும் சுலபமாய் அமைந்துவிடுவதில்லை. எனக்கான இந்த வாய்ப்புகள்போல் (பகிர்தல்). சாம்பலைத்தின்று, வெளியே வெண்ணைகளை பூசிக்கொள்ளும் சக மனிதர்களையும் நம் கண்கள் அவ்வப்போது உள்ளிடுகைச்செய்யும்போது ஏற்கிறோமோ அல்லது ஏற்றுகிறோமோ ஆயினும் கடந்துவிடுகிறோம் அல்லது கடத்திவிடுகிறோம். வெண்ணையைத்தின்றாலும், சாம்பலைத்தின்றாலும் செல்லுமிடம் எதுவாக இருக்குமோ அதுவே மடியலுக்கு செல்லும்பாதையாகவும் அமையும். சிறிது ஆயுட்காலங்கள் மட்டும் வித்யாசப்படலாம்.
சமீபத்திய எனதூர் பயணத்தில் நான் கண்டறிந்த விடயங்கள் கொஞ்சம் மனதை திகைக்கவும் இளைஞர்களில் நிலையைக்கண்டு திகட்டவும் செய்தது. என் வீட்டுக்கு எதிர்வீட்டுப்பையன் வயது 19-20 இருக்கும். நான் தூக்கிவளர்த்தவன் என்பதை சொல்வதற்கும் மெல்லக் கூசவும் செய்கிறது. இன்றைய நாளில் வாரத்திற்கு இரண்டுநாட்களுக்கு குறையாமல் மது அருந்துகிறான். அவன் மட்டுமல்ல. எங்களது தெருவிலுள்ள மற்றய நாலைந்து இளைஞர்களும் (சிறுவர்கள்) சேர்ந்து. கல்லூரியில் முதலாமாண்டு தொழில்நுட்பம் படிக்கிறார்கள். தொழில்நுட்பத்தைதான் படிக்கிறார்களா? என்ற கேள்வியும் அவர்களின் செயல்கண்டு எழுந்துபார்க்கிறது.
நானும் கல்லூரிப் பயிலும்போது இவ்வாய்ப்பினில் மாட்டி மங்கியிருக்கிறேன். இந்தப்பழச்சாறும் புளிக்குமென்று முதல்நாளே அகற்றியெரிந்திருக்கிறேன். வீட்டுக்கொரு குடிமகனிருந்தாலே நாடு நலம்பெறும் என்ற நோக்கின் அடிப்படை அறிவினால் எனது தந்தைக்கு அவ்விலாக்காவை தாரைவார்த்துவிட்டேன். எனது தந்தைக்கு அப்பழக்கம் உண்டு. இருந்தாலும் அவரின் செய்கை மன்னிக்கத்தக்கது (என்னால் மட்டிலும்கூட இருக்கலாம்). பகற்பொழுதினில் உழைத்து உடல்வலுவை வியர்வைகள் வெளிக்கொணர்வதால் அவருக்கந்த இளைப்பாற்றல் தேவைப்படலாம்...படலாம்... அதனால் என்மனம் அவரின் செய்கையை ஒத்துக்கொள்கிறது தவறுதானென்றாலும்.
ஆனால் இந்த இளைவர்களுக்கு என்னக்கேடு என்றுதான் தெரியவில்லை. அவர்கள் குடிப்பதற்கான காரணமாய் ஏதோவொன்று இருக்கவேண்டும். (நொண்டிச்சாக்காக). சிறிதுநேர மனமகிழ்வுக்காக என்கிறார்கள். மஞ்சள்நிற சிலேடைகளின் சிலுசிலுப்பில், பிஞ்சில் வெதும்பி குறைநேர சிற்றிந்தின்பத்திற்காட்பட்டு விலைமாதுவின் வியர்வைகளை விலைக்குவாங்கி விலங்காகும் என்வயதொத்த ஒரு ஆண்மகனின் மனநிலையும் இதுவும் ஒன்றன்றி வேறெப்படி எண்ணவென்று தெரியவில்லை. இதற்கு வழிகாட்டுதலாக சில பெரியவர்களும் அமைந்துவிடுகிறார்கள். அப்துல்கலாம் காணச்சொன்ன கனவு இவ்வாறு மதிமயங்கி காணும் கனவாகவா இருக்கப்போகிறது??
Monday, January 11, 2010
கழுதைகளுக்கு தெரியுமா?
சக மனிதனொருவன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், தனது வெள்ளை வேட்டிச்சட்டையில் படப்போகும் ரத்தக்கரைகளுக்கு பயந்தோ அல்லது அசிங்கப்பட்டோ தூரநின்று தொலைப்பேசிவழி அடுத்தவர்களுக்கு தகவல்கொடுக்கும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், அதே காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களது உதவியாளர்கள், மற்றும் இன்னபிற அரசுத்துறை அதிகாரிகள், தீண்டத்தகாவன் என்பதுபோல் தண்ணீரை தூரநின்று ஊற்றும் ஒரு சமூகப்பிரஜை ஆகிய இவர்களின் ரத்தசொந்தமொன்றுக்கு இவ்வாறு நடந்திருந்தால், இதையேத்தான் செய்துகொண்டிருந்திருப்பார்களா? என்று எண்ணத்தூண்டுகிறது சமீபத்திய திருநெல்வேலி நிகழ்வு. இத்தனை வாகனங்களிருந்தும் அவசரகால ஊர்திக்காக காத்திருந்துதான் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவேண்டுமென்ற ‘விடாப்பிடியான’ கொள்கையுடன் நின்றிருந்தவர்களை எப்படி வசை பாடினால் என்ன?
புரியாதவர்கள் இந்த காணொளியைப் பார்க்கவும்.
அவ்வாறு அவர் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் அங்கே ஜீவனற்றுகிடந்த மரக்கட்டைகளுக்கும், உயிர்வலியை அல்லது துடிப்பை சகித்துக்கிரகித்துக் கொண்டிருந்த இவர்களுக்கும் இருக்கும் வித்யாசங்கள் வெகுக்குறைவாகே தெரிகிறது.
வழக்கமாய் பொதுமக்கள் செய்யும் காரியத்தைதான் உயர்மட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் செய்திருக்கிறார்கள் பூசிமொழுகிய ஊடகப்பார்வையுடன். இதில் கவனிக்கவேண்டிய விசயம் இதை ‘தத்ரூபமாக’ ஒளிப்பதிவு செய்தவருக்கும் மனிதாபிமானமோ வேறெந்த மண்ணாங்கட்டியோ இல்லாமல் இருந்திருக்கிறது.
ஒரு நாய்க்கு அடிப்பட்டால் கூட இன்னொரு நாய் அதனருகில் நின்று அழும். இன்னொரு காக்கைக்கு காலொடிந்திருந்தால் சுற்றிலும் காக்கைகளின் கூட்டம் அலப்பறியும். ஆனால் ஒரு மனிதன் அடிப்பட்டாலோ, அல்லது உயிர்வலியில் துடித்தாலோ நானா? நீயா? என்ற போட்டியிலோ அல்லது சுயநலப்புண்ணாக்கிலோ அனைவரும் வேடிக்கைப் பார்ப்பது எவ்வளவு கேவலமான செயல். அதுசரி கழுதைகளுக்கு தெரியுமா???
