க.பாலாசி: கவிதை...
Showing posts with label கவிதை.... Show all posts
Showing posts with label கவிதை.... Show all posts

Tuesday, April 26, 2011

யரலவழள

*

அடுப்பினுள் தூங்கும் அந்தப் பூனைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
எதுவுமில்லா வீட்டில்
எலியும் இருக்காதென்று.

•••

யாசித்துக் கிடைக்காத
பிச்சையை வீதியெங்கும்
வீசிச்செல்கிறான் பிச்சைக்காரன்
சாபமாக....

•••

பசியில் இறந்தவன்
உயிர்நாற்றம் குப்பையில் 
சிதறிக்கிடக்கிறது
தலைவாழை இலையுடன்

•••

பகலில் தூங்கி 
இரவில் எழுகிறது
காய்ந்த வயிற்று   
வேசியின் சேலை.


Wednesday, January 12, 2011

வேறென்ன வேண்டும்

.

கல்யாணிக்கு
ஒருகால் இல்லை

அக்கம்பக்க பிள்ளைகளுக்கு
அவள் அத்தையாகியிருந்தாள்

சிலர் பெரியம்மா பெரியம்மா என்பார்கள்
நானும்தான்...

செல்லையன் மட்டும்
அம்மா என்றுதான் கூப்பிடுவான்

எனக்குத்தெரிந்து
கல்யாணிதான் பலருக்கு

நேற்றுப்பிறந்த பொண்டு பொடிசுகளால்
ஆத்தாவும் ஆகிவிட்டாள்

வேறென்ன வேண்டும்
கல்யாணிக்கு கல்யாணம்தான் ஆகவில்லை.


.

Friday, November 26, 2010

கௌரவம் - ஆ

காதுல கிடக்கிற
குண்டுமணி சைஸ் தோடும்
கையில இந்த
அலுமினிய வளையலும் போதும்

கழுத்துக்கு மட்டும் எப்போதும்போல
சந்திராவோட முருக்கு செயின்
ஏன்னா..
அதுதான் எடுப்பாயிருக்கும்.

அவளும்
அதே கல்யாணத்துக்குப்போனா
இருக்கவே இருக்கு
சரசோட இன்னொரு சீரகச் சங்கிலி

ஒரே தெருவுல விஷேசம்னா
வேறவழியில்ல..
கழுத்தொட்டிக் கருத்துப்போன
சிதம்பரம் கவரிங்‘தான்

கிராக்கி பண்ற
சகுந்தலாகிட்டயும் கல்யாணிகிட்டவும்
எப்பவுமே கேட்கிறதில்ல

நமக்குன்னு
ஒரு கௌரவம் இருக்குல்ல.



••••••••••••••••••••


பூன் கட்டின மூங்கித்தடியும்
ஒரு கம்பி விட்டுப்போன குடையுந்தான்
தர்மலிங்க தாத்தாவோட அடையாளம்

ஒரு கல்யாணம் காட்சி
நம்ம திம்மன்னா
சும்மா கூப்பிட்டாப்போதும்
எட்டு மொழ வேட்டியும்,
காசித்துண்டோடையும் வந்திடுவாரு

வாசல்ல நிக்கிறவன்
வாங்கன்னு
கூப்பிடலன்னா அவ்ளோத்தான்

மொய்ய எழுதிட்டு
வீராப்பா போயிடுவாரு

அவர் கால்லதானயா செருப்பில்ல
கௌரவத்துக்கு என்ன குறைச்சல்.



கௌரவம் - அ



.

Friday, November 12, 2010

பாட்டி...

வெற்றிலைக்காம்பை கிள்ளி
வெகுசுலபமாய்
வாசல் குப்பைகளில்
போட்டுவிடுகிறாள்

நீண்டுத் தொங்கும்
காதுமடல் குண்டலத்தை
இழுத்து விளையாடும் விரல்களிலிருந்து
விடுதலையும் கிடைத்தாயிற்று

உறங்கச்செய்யப் பாடும்
‘என் செல்லமே கண்ணுறங்கு’
தாலாட்டும் கதைகளும்
நின்று காலமாகிவிட்டது

முந்தியில் முடிந்திருக்கும்
ஒன்றிரண்டு ரூபாயைப்பிடுங்கி
கடுக்காய் மிட்டாய் வாங்கிச்
சாப்பிடவும் யாருமில்லை

குடலேற்றம் வந்தால்
முதுகை தட்டி வயிற்றை நீவி
குணமாக்கவேண்டிய கடமையும்
இல்லாமல் போனது

எங்கள் வீட்டில்...
மின்சாரம் நின்றால் திரும்பிப்பார்க்க
அம்மியும் இருக்கிறது
அவளும் இருக்கிறாள்.


..

Saturday, October 9, 2010

இன்றிரவும்...


எல்லோருக்கும் தெரியும்
யார்தான் அறியாதவர்

காலையில் தோப்புத்தெரு
அடுத்து மேலவீதியும்
கலைஞர் காலனியும்

எங்கும் கிடைக்காமற்போனால்
எப்போதுமில்லாத அக்ரஹாரம்

கடைத்தெரு செல்லும்போது மட்டும்
கிடைத்துவிடவாப்போகிறது....

யாசிப்பவளின் இடுப்பெலும்பில்
வெறித்திருக்கும் சிசுவிற்கு

இன்றிரவும் கிடைக்கலாம்....

வேப்பெண்ணை வாசமும்
அதே உதிரமும்.


.

Friday, August 27, 2010

வெவ்வேறானவை...

..


சீப்பிலிருந்த தலைமுடியை
கைவிரலில் சுருட்டிக்கொண்டிருந்தாள்

எப்ப வந்த? என்று கேட்பதற்குமுன்...

வாந்த...ஊர்ல இருக்கியா? என்றாள்..

இல்ல இன்னைக்குத்தான்...
ஆமா நீ? சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டேன்

நேத்து வந்தேன்..

உம்பொண்ணா இது?

ம்ம்...

தூக்கியணைத்து.. முத்தமிட்டேன்
குழந்தையாய் பார்த்தாள்...

நல்லவேளை
சின்னபொண்ணும், ராசுபொண்டாட்டியும்
ஊரிலில்லை.


**********************

காரம் கூடின குழம்புக்கு
அவ்வப்போது பாட்டியும் திட்டுவாள்

த்தூ.. என்னாக் கொழம்புடியிது
புளிப்பு வாயில வய்க்கமுல்ல
இது அப்பா

‘ஒண்ணும் வாங்கியாரதில்ல..
வரட்டும் வச்சிக்கிறேன் இந்த மனுஷனை’

வைதுகொண்டிருப்பாள் அம்மா...
அலமாரிக்கு மட்டும் கேட்கும்படி.


*********************

சோப்பு சீப்பெல்லாம்
தனியா வச்சிக்கணும்யா..

இந்தா இதுல
பவுடரும் எண்ணையும் இருக்கு

பாய்த் தலையாணில்லாம்
நீ மட்டுந்தான வச்சிக்கிற...

என்று சொன்ன அப்பாவின்முன்

நண்பனின் சட்டையை அணிந்திருந்தேன்...
அவர் சட்டைசெய்யவில்லை.


...

Friday, July 2, 2010

யானை சவாரி...



அந்திப்பொழுதில் தொடங்குகிறது

அம்மாவுடனான

யானை சவாரி விளையாட்டு


அம்மாவே யானை

மகன்தான் இப்பொழுதும் பாகன்


ஏய் போ, அங்ப்போவாத, ம்ம் படு, எந்திரி......

எண்ணற்ற கட்டளைகளை

அவளிடம் மட்டுமே பிரயோகிக்கிறான்

சிலநேரங்களில் (மெல்ல) அடிப்பதும்கூட...


அப்பாவுடன் விளையாட

இத்தனை சிரமங்களை கொடுப்பதில்லை.


அவ்வப்பொழுது முனகிக்கொள்வாள்

‘அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்திருக்கு’



••••••••••••••••••



அந்திப்பொழுதில் தொடங்குகிறது

அம்மாவுடனான

யானை சவாரி விளையாட்டு


அம்மாவை யானையாக்குவதில்

சில சவுகர்யங்கள்...


தாய்மையான மேனி

அலுங்காத நடை

பிடிமானத்திற்கு நிறைய அவளுடன்


இன்னும் சொன்னால்

சொல்வெதெல்லாம் அப்படியே செய்வாள்


இறங்கியப்பின்னும்

'எஞ்செல்லமே' என்று

வாரியணைக்கத்தான் கைநீட்டுவாள்


அப்பாவின் முதுகு அப்படியில்லை....








Wednesday, June 30, 2010

கனவுகள் பலவிதம்...

நிலவைக்காட்டி
அம்மாவும்

மிட்டாய் ஆசைகள் கூறி
அப்பாவும்

பூச்சாண்டிக்கதைகள் சொல்லி
பாட்டியும்

ஊட்டிஊட்டிவிடும்
எத்தனை ஆசாபாசங்கள்
நிறைத்தாலும்.......

கையேந்திபவனை கடக்கையில்
கலைந்துபோகிறது...

கைகளற்றவனின் கனவு.



•••••••••••••••••



கால்களால் வரைந்த பட்டத்தை

பார்த்தபடியே

துயிலடைந்தாள் அச்சிறுமி


அவளின் இரவுகள் முழுமையும்

வியாபித்திருக்கின்றன

ஆயிரமாயிரம் பட்டங்கள்


இமைகளுக்குள் கண்கள்

அங்கும் இங்கும் அலைந்தபடியே...


தன் பட்டம்

உயரப்பறப்பதில் ஆனந்த கண்ணீர்...


(தூக்கத்தினூடே)

அனிச்சையாகவும் துடைத்துகொள்கிறாள்

தோள்பட்டைகளால்...




Tuesday, June 15, 2010

கிளிமொழி...

தான் வளர்க்கும் கிளியுடன்
விளையாடிக் கொண்டிருந்தாள் அச்சிறுமி.

இவள் பங்கு முடிந்ததும்
கிளியின் முறை தொடங்கியது...

பென்சில், ரப்பர், பேனா
இப்படி ஒவ்வொன்றாய்
ஓரிடத்தில் வைத்து
துணியை இழுத்து மூடிவைத்தது கிளி.

கடைசியாக
அவள் தோட்டையும் கழற்ற
கவ்விகொண்டிருந்தபோது சொல்லியேவிட்டாள்........

‘அப்பா இஞ்சப்பாரேன்......
இது அம்மா மா(த்)ரியே பண்ணுது.....’


Friday, May 14, 2010

இலைமறை கனி...


அம்மன் படத்துடன்
பிச்சைக்கேட்டு வரும் ஒருத்திக்கு
குடிசைக்குள்ளிருந்தவள்
‘இல்லை’யென்ற பதிலையே
வைத்திருந்திருந்தாள்...

பிறகு
மாதா படத்துடன் வந்தாள்...
அதே பதில்தான்....

யாசித்து வந்தவளும்
தடவைக்குத்தடவை வெவ்வேறான
காரணங்களை அவிழ்த்துவிட்டாள்...

ஒருமுறை அப்பா, அம்மா
அடுத்து ஊனமுற்ற தம்பி
அடுத்தடுத்து வேறொன்று....

இந்தமுறை ‘என் கல்யாணத்திற்கு’ என்றவளுக்கு...
அதேபதிலை சொல்லமுடியவில்லை...

உள்ளே சென்று
சில்லரையுடன் வந்தாள்...
தன் கருகமணியை மறைத்துக்கொண்டு...


.

Tuesday, May 4, 2010

நல்லவேளை...




முந்தைய வெள்ளி...

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி கோவில்,

சென்றவாரம் திருப்பத்தூர் அணேரி,

அமாவாசைதோரும் திருமணஞ்சேரி,

வழக்கம்போல்....

இடையன்குள பிள்ளையாரும், அரசமரமும்....


வாரயிதழில் கண்ணுற்றபடி

மாதமொருமுறை ஒரு மருத்துவச்சி...

ஆறுதலுக்காக...

சித்த வைத்தியமும், சில லேகியமும்கூட...

பிள்ளை வேண்டி

அவள் தினசரியில் கலந்துவிட்டது...


நல்லவேளை...

எனக்கு மாமனார் மட்டுமே.....




Tuesday, April 13, 2010

மானம்...




வீட்டுக்கு பின்னாடிதான்
சத்தியான் வாய்க்கா....

ஆனாலும்....சேகரு பொண்டாட்டிக்கு
எப்பவும் அவரைக்கொளம்தான்...
துணி தொவைக்கறதுக்கும்
, குளிக்கறதுக்கும்...

அந்த சக்காளத்தி சிறுக்கி
கொண்டாரதும்....
பொன்வண்டு சோப்புதானான்னு பாக்கணுமாம்.

பேச்சுவாக்குல
அவ கொண்டார பனியன
இவ எடுத்துக்குவா....

இவ கொண்டார அன்ட்ராயர
அவ எடுத்துக்குவா...

அந்த மனுஷனோட...
மானங்காக்குற வேஷ்டிய மட்டும்
விட்டுக்கொடுக்க மாட்டாளுங்க....



•••••••••••••



அவளுக்கு மஞ்ச கனகாம்பரம்னா

இவளுக்கு அதே கலரு திசம்பர் பூவு...


அங்க திருபுவனம் பட்டுன்னாக்கா

இங்க காஞ்சிபுரம்....


ஏதாவது நோய்நொடின்னாலும்

அவ மாதவன் டாக்டருகிட்ட..

இவ வாசுதேவங்கிட்ட...


என்னதான் வேத்தும இருந்தாலும்....


அவனோட வெள்ளச்சட்டைக்கு மட்டும்....

ரெண்டுபேரும் உஜாலாத்தான்.....




Thursday, March 18, 2010

தூரம்...

கொல்லப்பக்கமா பாய்ப்போட்டு

ஒலக்க ஒருபக்கம், வௌக்கமாறு ஒருபக்கம்

தலமாட்டுல டம்ளரும் சொம்புமா தண்ணிவேற...

சாப்புடுற தட்டு தனியா இருக்கும்...


படுத்திருந்த எடத்த

சாணிப்போட்டு மொழுவுனாங்க...


சாமிப்படத்த

சேலையால மூடிவைச்சாங்க...


அவ்வளவு சுத்தம்...


மாசம் மூணுநாளு இப்டித்தான்...அக்காவுக்கு...


பொண்டாட்டி வந்தபெறவுதான் தெரிஞ்சிது

அக்கா அனுபவிச்ச வயித்து வலியும்....




  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO