எனது கல்லூரி நாட்களில், எனது ஊரினைச்சார்ந்த ஒருவன் என்னுடன் சக மாணவனாக வந்து சேர்ந்தான். எனக்கும் நண்பனானான். அவனது ஊர் எங்கள் வீட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில்தான் இருந்தது. அதனால் தினமும் என் வீட்டிற்கு வருவான். இப்படி வந்துபோய்க்கொண்டிருக்கையில் எனது பால்ய நண்பனொருவனுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தேன்.
இருவரும் ஒரு ஜாதிக்காரர்களாக இருக்கவே என்னைவிட இருவரும் நெருங்கிய நண்பர்களாகிப்போனார்கள். அதனால் பின்னாளில் (2, 3 மாதத்திற்கு பிறகு) அவர்கள் இருவரும் கல்லூரி முடிந்ததும் மாலை நேரங்களில் சொந்தமாக வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார்கள். நானும் அவ்வப்போது அவர்களுடன் சென்று அடுத்தடுத்த தெருவில் இருக்கும் வீடுகளுக்கு வசூலுக்கு சென்றுகொண்டிருந்தேன்.
இப்படியாக நாட்கள் கழிய கல்லூரி நண்பன் வட்டிக்கு பணம் கொடுத்த ஒரு வீட்டிலுள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்படுத்திகொண்டான். அந்த பெண் அப்போது 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.
அக்டோபரில் உருவான அவர்களது காதல் ஜனவரிமாதம் வரையே தொடர்ந்தது. இந்த விஷயம் பெற்றவர்களுக்கு தெரிந்துபோக, அவர்கள் அப்பெண்ணிற்கு வரன் தேட ஆரம்பித்தார்கள். அந்த பெண் பள்ளிக்கு சென்றுகொண்டுதான் இருந்தாள். பள்ளிக்கு செல்லும் நேரங்களில் என் நண்பனும் அவளும் பேசிக்கொண்டார்கள். அப்போது அந்த பெண் என் நண்பனிடம் இந்த விஷயங்களைக் கூற, அவன் எடுத்த முடிவு இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போவது.
இதை எங்களிருவரிடமும் கூற நாங்களும் ஒத்துக்கொண்டோம். சரியாக ஜனவரிமாத இறுதி என்று நினைக்கிறேன். (அவர்களிருவரும் காதலிக்க ஆரம்பித்து மூன்று மாதங்களே ஆன நிலை) அவர்கள் ஓடிப்போவதற்கான ஏற்பாடுகளை எனது பால்ய நண்பன் செய்துகொண்டிருந்தான். அவனுக்கு தெரிந்த கேரள நண்பர்களிடம் சொல்லி, இவர்களை அங்கே அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான்.
சரியாக அன்றைய இரவு, அந்தப்பெண் அவளது மூட்டைமுடிச்சிகளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். நான்தான் அவளை சைக்கிளில் அழைத்து சென்று 5 கி.மீ. தொலைவில் உள்ள ஊரின் பஸ் ஸ்டான்டில் விட்டேன். அவர்கள் இருவரும் எனக்கு முன்னமே காத்திருந்தார்கள். ஒருவழியாக எங்களிடம் இருந்த கொஞ்ச பணத்தையும் கொடுத்து இருவரையும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, நாங்களிருவரும் வீட்டிற்கு வந்தோம். மணி சரியாக 10.00 ஆனது.
அன்றைக்கு இரவே 11 மணியளவில், பெண்ணின் தகப்பன் எனது பால்ய நண்பன் வீட்டிற்கு வந்துவிட்டார். பிறகு என்னையும் அழைக்க எனது வீட்டிற்கும் ஆள் வந்துவிட்டது. நானும் சென்றேன். நண்பன் வீட்டின் வாசலில் பெண் வீட்டார் சார்பாக அவரது தெரு மக்களே கூடியிருந்தனர். அப்போதுதான் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.
அந்த நேரத்தில் பெண்ணின் தந்தை வயிற்றில் அடித்துக்கொண்ட அழுதது இன்றும் என் நினைவில் இருக்கிறது.
ஒரு பெண்ணை பெற்று, வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்கி அவளுக்குரிய தேவைகளை பிச்சையெடுத்தாவது பூர்த்தி செய்து, அவள் வளர்ந்து ஆளாக அடிவயிற்றில் நெருப்பினை கட்டிக்கொண்டதுபோல பெற்றோர்கள் அடையும் வேதனை அவர்களுக்குதான் தெரியும்.
அப்போதுதான் உணர்ந்தேன் நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று. எங்களிருவரிடமும் அவர்கள் எப்படி எப்படியோ கேட்டுப்பார்தார்கள். நாங்கள் உண்மையை சொல்லவேயில்லை. பிறகு போலிஸ் கேஸாகி அடிவாங்காமல் மட்டும் தப்பித்து வந்துவிட்டோம்.
இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு வாரம் வரை எனது குடும்பமும், நண்பனது குடும்பமும் படாதபாடுபட்டோம். எங்களது குடும்பங்களே இந்த பாடு பட்டார்கள் என்றால், ஓடிப்போன இருவரின் குடும்பங்களும் எவ்வளவு வேதனையில் இருந்திருப்பார்கள்.
பிறகு பையனின் தகப்பனார் அவர்களின் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை அழைத்துவந்து சமாதானம் பேசி முடித்தார்கள். பிறகு அந்த நண்பன் இருக்கும் இடத்தை நாங்கள் கூற அந்த இடத்திற்கு அவர்கள் செல்லவில்லை என்பது அப்போதுதான் தெரியும். பிறகு எங்கே சென்றார்கள் என்ற கேள்விக்கு பதில் ஓடிப்போன பையனின் அண்ணனிடம் இருந்து வந்தது. அவர்களிருவரும் அவனது அண்ணனிடமே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.
பிறகு எல்லோரும் சமாதானமாகி எல்லாம் சுபம்.
நானும் எனது பால்ய நண்பனும் கொஞ்ச நாள் எங்கள் ஊரில், ஷாஜகான் என்றே அழைக்கப்பட்டோம்.(ஏனென்றால் ஷாஜகான் படம் அப்போதுதான் வந்தது)
சரியாக ஆறு வருடங்கள் ஆகிறது. இன்றும் எனது மனதில், நான் வாழ்வில் செய்த பெரிய தவறாக கருதுவது அவர்களிருவரையும் பஸ் ஏற்றிவிட்டதுதான். என்னதான் இன்று மாமனார் மருமகன் என்று இருவரும் சிரித்துக்கொண்டிருந்தாலும், அன்றைய நாளில் பெண்ணைப்பெற்றவனாய் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுத சம்பவங்கள், அந்த நேரத்தில் எங்கள் மீது அவர் விட்ட சாபங்கள் இவையாவுமே வீணாகவில்லை. இன்றளவும் ஏதோ ஒரு விஷயங்களில் நாங்களிருவருமே அதற்கான தண்டனைகளை அனுபவித் துக்கொண்டிருக்கிறோம்.
பின்னாளில் எனக்கு கிடைத்த தண்டனை எனது காதலியை நான் இழக்க நேரிட்டது. அவள், அவள் கணவனுடன் வாழ்கிறாள், நான் அவள் கனவுடன் வாழ்கிறேன்.
இந்த 27ம் அகவையில் நான் கடந்து வந்த பாதையினை திரும்பிப்பார்க்கிறேன், என் பாதையிலும் சில எறும்புகள் இறந்துகிடக்கின்றன...
தமிழ்மணத்திலும், தமிலிஸ்சிலும் தங்களது வாக்கினை பதிவிடவும்... நன்றி...**********