க.பாலாசி: பயணக்குறிப்பு...
Showing posts with label பயணக்குறிப்பு.... Show all posts
Showing posts with label பயணக்குறிப்பு.... Show all posts

Thursday, September 24, 2009

பாருக்குள்ளே பாண்டிச்சேரி...

இளமை விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு


எனது சமீபத்திய சாதனைகளில்(?!!!) ஒன்றாக பாண்டிச்சேரி என்றழைக்கப்படுகின்ற புதுச்சேரிக்கு சென்று வந்த நிகழ்வினை குறிப்பிடலாம். எனது நண்பரின் பகுத்தறிவு திருமணத்திற்காக அங்கே செல்ல நேரிட்டது.


மாலையில் திருமணம் என்பதால் முதல்நாள் இரவு புறப்பட்டோம் (அலுவலக தோழர்கள் உட்பட) மறுநாள் காலை புதுவையின் மண்ணில் எங்கள் காலடி பதித்தக் காலம், கீழ் விழுந்த கதிரவன் ஒளியதில் கால் படும் நேரமாக அமைந்தது என்றால் மிகையாகாது. கொஞ்ச நேரம் ஓய்வுறக்கம். பின்னர் 12 மணிவாக்கில் கிழக்கு கடற்கரையின் வாசம் நுகர சென்றோம்.


பெருகிவரும் அலைகளின் வீரியத்தினை குறைக்க பெருங்கற்கள் போடப்பட்ட கரையுடைய கடலின் அழகு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் கரை நுழையும் அன்பர்களை தடியோடு வரவேற்கும் காந்தியடிகளின் மணிமண்டபமே கூறும் புதுவையின் சொச்ச அழகினை.


உச்சிதொடும் வெயிலின் வெக்கை மிகையாகத்தான் இருந்தது. ஆயினும் வேகமாய் வீசிய கடற்காற்று எல்லாம் மறைத்து அதன் அழகினை ரசிக்க இடம் கொடுத்தது. கொஞ்ச நேரம் உலாத்திவிட்டு திரும்புகையில் கடந்து வந்த சாலையில் புதுச்சேரியின் வரலாற்றை அறிந்துகொள்ள அவசியம் காணவேண்டிய இடமாக திகழும் புதுவை அருங்காட்சியகத்தை தற்செயலாக காணும் வாய்ப்பு நேர்ந்தது. இது புதுவை ஆளுநர் இல்லம் அருகே உள்ள ஒரு வளைவில் உள்ளது. பல்லவர், சோழ காலச் செப்புச்சிலைகள், கற்சிலைகள், பிரஞ்சுக்காரர்களின் பழம்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு சிற்ப அரங்கு, பிரெஞ்சு அரங்கு, தொல்லியல் அரங்கு, நில இயல் அரங்கு, ஆயுத அரங்கு, ஓவிய அரங்க எனப் பல பகுதியாக அமைந்துள்ளது (புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை).

இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இந்த அருங்காட்சியகம் பாரதி பூங்காவிற்கு வடக்கில், ரோமன் ரோலண்டு நூலகத்திற்குப் பின்புறம் அமைந்துள்ளதாக அதன் வரைபடத்தில் உள்ளது. அருங்காட்சியகத்தை வெளியே வருகையில் முன்புறம் இருந்த அறிவிப்பு பலகையில், இந்த பழம்பெரும் (அதாவது பிரஞ்சுக்காரர்கள் பயன்படுத்திய) மாளிகையை 1999-ல் கருணைக்கொலை செய்யவிருந்ததாகவும், அப்போதைய சமூக ஆர்வலர்கள் சிலரின் முயற்சியால் தப்பித்து இப்போது அருங்காட்சியகமாக செயல்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. திங்கள் கிழமை விடுமுறை நாள். எங்களால் அன்றைய நாள் பார்க்கமுடிந்தது அவ்வளவுதான்.


ஆயினும் பிறகொருமுறை அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்தால் காணவேண்டும் என்று எனது மனக்குறிப்பேடின் நடுப்பக்கத்தில் குறித்து வைத்துள்ள இடங்கள் கீழ்கண்ட பெயரில் உள்ளன....

ரோமன் ரோலண்டு நூலகம்

காந்தியடிகளின் நண்பராக விளங்கிய பிரெஞ்சு அறிஞர் ரோமன் ரோலண்டு என்பவரின் பெயரால் இந்நூலகம் செயல்பட்டு வருவதாக செய்தி. 1827 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் துவங்கபட்டபோது, முதன்முதலில் புதுவை ரயில் நிலையம் அருகில் இருந்தது என்றும் 1974 ஆம் ஆண்டு முதல் ராஜ்பவனுக்கு அருகில் செயல்பட்டு வருகிறது என்றும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

அரவிந்தர் ஆசிரமம்

உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் இங்கு வந்து ஆசிரமவாசிகளாக உள்ளனராம். ரோமிலுள்ள வாடிகன் போல, புதுச்சேரி அரசுக்குள்ளே ஒரு தனி ராஜ்யம், தனி உலகில் இயங்கிவருவதாக இவ்வூரின் அடுத்த புத்தகத்தில் உள்ளது.

இவைகள் தவிர பாரதியார் அருங்காட்சியகம், பாரதிதாசன் அருங்காட்சியகம் மற்றும் இன்னம் சில முக்கிய இடங்கள் உள்ளதாக அறியப்பெற்றேன். வாய்ப்பு நேரும்போது அந்த கடலிலும் நீச்சலடிக்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது.

நாங்கள் திரும்பி வருகையில் (அதாவது திருமணம் முடிந்து மறுநாள் காலை) தற்பெருமை கொள்ளத்தக்க வகையில் பேருந்தின் சாளரம் அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது (!!). புதுச்சேரியின் புறநகர் என்று சொல்லமுடியாத ஓர் இடத்தின் சாலையோரம்... மதுவின் மயக்கத்தில் ஒரு மாதுவே அச்சாலையின் நீள அகலங்களை துல்லியமாக தன் கால்களாலேயே அளந்துகொண்டிருக்க....உணர்ந்துகொண்டேன்.....பாண்டிச்சேரி பாருக்குள் மட்டுமில்லை...BAR-ருக்குள்ளும் இருக்கிறதென்பதை...


தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்....நன்றி...




Saturday, August 8, 2009

வளர்ந்த கலை.....

தமிழ்மணத்தில் தங்களின் வாக்கினை செலுத்த மேலுள்ள தலைப்பினை அழுத்தவும்.

வளர்ந்த கலை மறந்துவிட்டாள் ஏனடா கண்ணா,
அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.
குடும்ப கலை போதும் என்று கூறடா கண்ணா-அதில்
கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா?


இப்படி சொன்னா எப்புடி. வாங்க தெரிஞ்சிக்கலாம்.

1682 ல் ஜெர்மனி நாட்ல பொறந்து 1706 ல் கடல்வழி மார்க்கமா தரங்கம்பாடி மண்ணில் கால வச்ச பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு-ன்ற புண்ணியவான் பின்னாடி 1710 ல் ஜெர்மனிலேர்ந்து அச்சு எந்திரத்தை கொண்டுவர ஏற்பாடு செஞ்சு, கொண்டுவரப்பட்ட அச்சு எந்திரம் தான் மேலே உள்ள படம். அவரோட படம் தான் கீழ இருக்கு.

என்னோட கண்ணுக்கு என்னமோ, ஜாலியன் வாலாபாக்ல நடந்த படுகொலைக்கு காரணமான ஜென்ரல் டயர் மாதிரி தெரியுராரு. ஆனா ரொம்ப நல்ல மனுஷனுங்க. இவரு வந்த புதுசுல தரங்கம்பாடிய (ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்) ஆன்டுகிட்டு இருந்த மன்னனால கொஞ்சம் துன்புருத்தப்பட்டிருக்கார். அப்பறம் எல்லாம் சரியாகி அந்த பகுதியில இருந்த நம்ம மக்களின் அறியாமையை போக்கி கிருத்தவ இயக்கத்தை வளர்த்திருக்கார். (இவர் அடிப்படையில ஒரு மத போதகர்). இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம் வந்த 11ம் வது நாள்லேர்ந்து இவர் தமிழ் கத்துக்க ஆரம்பிச்சாராம். எத்தனை நாள்ல கத்துகிட்டார்னு தெரியல.

அச்சு எந்திரம் கொண்டாந்தது மட்டுமில்லாம, பொறையாரு (நான் கல்லூரி பயின்ற இடம் ,தரங்கம்பாடிக்கு ஒரு கிலோமீட்டர் முன்னதாக உள்ள ஊர்) பேப்பர் பேக்டரிய (காகித பட்டறை) உண்டாக்கி, மரக்கூழ் மூலமா காகிதம் தயாரிக்க வழிசெஞ்சிருக்கார். இதுவும் அதே காலகட்டத்துல நடந்ததுதான். அந்த எடத்துக்கு இன்னமும் கடுதாசிப்பட்டறைங்கற பேர்தான் இருக்கு. அப்பறம் 1715 ல் தமிழ்மொழியில புதிய ஏற்பாட்டை (பைபிள்) வெளியிட்டிருக்கிறார். இவரோட முயற்சியால தான் இந்தியாவிலேயே முதல் முறையா தமிழ் அச்சுக்கள் உருவாயிருக்கு. ஆனா நம்மல்ல பலபேருக்கு தெரியல. இன்னைக்கு பிரிண்டிங்றது எவ்வளவோ வளர்ச்சியடைஞ்சிடுச்சு. எத்தனயோ விதமான பிரிண்டிங் முறைகள் இருக்கு. ஆனா இதுக்கெல்லாம் ஆணிவேரு இந்த தரங்கம்பாடியில தான் உருவாயிருக்கு. ஒருவேல அவரு கொண்டு வரலேன்னா, வேற யாராவது கொண்டாந்திருப்பாங்க. ஆனா முதல்ல (இந்தியாவுல) அச்சில் ஏறுன பெருமை தமிழுக்கு கெடைச்சுருக்காது.

இவரு அதேநேரத்துல தரங்கம்பாடியில ஒரு தேவாலயத்த 1718 ம் வருஷம் கட்டிவச்சிருக்காரு. அடுத்த வருஷமே செத்து போயிட்டார். இவருடைய ஆயுளை கடவுள் 37 ஓட நிறுத்திட்டார். அவரோட சேவை அவங்களுக்கும் தேவையா இருந்திருக்கும் போலருக்கு. ஆனா 80, 90 வயசுலையும் அரசியல் பண்ற ஆளுகள மட்டும் விட்டுவச்சிடுறார். ஏன்னுதான் தெரியல.

நான் காலேஜ் படிக்கறச்சே கட் அடிச்சிட்டு இந்த கடற்கரையில தான் காத்து வாங்குவேன். அப்போதைக்கு இந்த தேவாலயத்தப் பாத்து பிரமிச்சிருக்கேன். கிட்டத்தட்ட 291 வருஷம் ஆகுது அந்த சர்ச்சை கட்டி. எவ்வளவு மலைப்பான விஷயம். இன்னமும் அதே பொலிவோட இந்த சர்ச் இருக்கறதா சொல்றாங்க. எனக்கு தெரியல. நான் பாத்தது 2000-2003 கால இடைவெளியில.(அதுக்கப்பறம் இந்த இடத்த விட்டு பிரிய மனமில்லாம இன்னும் ரெண்டு வருஷம் படிசேன்ங்கறு வேற விஷயம்)

(வேற நல்ல படம் வலையில மாட்டல)

சரி நான் சொல்ல வந்தத மறந்துட்டேனே. இப்படி உருவான அச்சு கலை வரலாறு, பிரஸ் வச்சிருக்குற, பிளக்ஸ் பிரிண்ட் போடுற, பிளக்ஸ் பிரிண்டுல கைய ஆட்டிகிட்டே நடந்து வர்ர.... நம்மாளுக எத்தனை பேருக்கு தெரியும்னு தெரியல. ஆனா குறைந்தபட்சம் தெரிஞ்சி வச்சிருக்கனும்ங்கறத்துகாக இந்த பதிவு.

வரலாறுகளைப் படிக்கும் போதும், அதை தெரிந்து கொள்ளும் போதும் எனக்கு ஒரு விதமான பிரமிப்பு ஏற்படும். அதை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. இங்கே குறிப்பிட்டுள்ள தரங்கம்பாடி எனும் ஊர் நாகை மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை ஓரம் அமைந்துள்ளது, மற்றும் எனது சொந்த ஊரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்தான் உள்ளது. சிலப்பதிகாரம் கண்ட பூம்புகாரின் சிறப்பு இன்னும் இந்த ஊருக்கு கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. பார்க்கப்போனால் பூம்புகாரும், தரங்கம்பாடியும் சுமார் 15 கி.மீ. (கடல் வழி மார்க்கமாக) தொலைவில் அருகருகே அமைந்துள்ள ஊர்கள், இரண்டுமே பூம்புகார் சட்ட மன்ற தொகுதியில் அமைந்த ஊர்கள். இரண்டுமே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள். பூம்புகாருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இன்னும் தரங்கம்பாடிக்கு கிடைக்கவில்லை, ஏனென்றுதான் தெரியவில்லை.

இங்கே இன்னொரு சிறப்பும் உள்ளது. அது டேனிஷ் கோட்டை. அதைப்பற்றி வரும் பதிவில் முடிந்தவரை சொல்கிறேன்.


•••••••••

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO