
காதலிக்கு எழுதிய கவிதையை
படித்து ஆசிகூறி அனுப்பிவைத்த நண்பன்
புறமுதுகில் காரித்துப்பியதையும்
காதில் வாங்கிபடியேச் சென்று....
அவள் அண்ணா என்றவுடன்
ஆற்றாமையில் அறைக்கு திரும்பும் நேரத்தில்
அரைகுடுவை சாராயத்துடன் காத்திருப்பான் அதே நண்பன்.
**********
மெழுகு காகிதத்தில் சுற்றப்பட்ட மேரி ரொட்டியை
சரிபாதியாய் பிரித்து, அதிலொன்று எச்சமடைய
இரண்டாய் ஒடித்துப் பகிர்ந்துகொண்டதுஉம்....
பின்னாளில் கல்லூரிவாசல் பெட்டிக்கடையில்
ஒரு புகைக்குழலுக்காய் சண்டையிட்டாலும்
தேர்வறையில் துண்டுச்சீட்டினைப் பரிமாறக்கொடுத்து
தேர்ச்சிபெறச்செய்ததுஉம்....நட்பன்றி வேறென்ன??
**********
தான் பார்க்கும் பெண்ணை
அவனும் பார்க்கிறான் என்றறிந்ததும்
தயக்கமின்றி அவளை தங்கையாக்கிக்கொண்டு
அடுத்தவளைத் தேடிச்சென்றுவிடும் நண்பனுக்கு
தன் காதலையும் தியாகம் செய்து
காதலே வேண்டாமென்று அறிவுறுத்தும்
அதுவும்கூட நட்புதான்.
**********
‘தருதலைங்க உருப்படவாப்போகுது’
என்று அம்மா திட்டியது தெரிந்தும்
சளைக்காமல் வந்து எதிர்வீட்டு பெண்ணை
எனக்கு தெரியாமலே கண்ணடிக்கும் அவனுக்கு...
அவன் தங்கையை நான் பார்ப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் மறந்துப்பழகும்
அவனல்லால் நண்பன் யாதொருவன்??
**********