க.பாலாசி: குடியானவன்...

Friday, October 9, 2009

குடியானவன்...


மரங்களடர்ந்த சாலையில் புள்ளியிட்டும் போடாத கோலமாய் ஒழுகியிருக்கும் நிலவொளி, புளியமரங்களின் புண்ணியத்தில் அடைந்து, அடைகாத்து தலைமுறையை செழிக்க செய்யும் காக்கைகளின் ஒன்றிரண்டு அரைகூவல், எங்கோ ஒலிக்கும் நாய்களின் மெல்லிய அழகான குரைப்பு, இஞ்சியை மென்று விழுங்கமுடியா தவிப்பில் விழிக்கும் குரங்குகளைப்போல ஆந்தைகள், இசைந்தோடும் காற்றில் முடியாமல் அசையும் நாணல், தலையில் விழுந்த பனிச்சுமையை தாங்கி நிற்கும் புற்கள், உறவுகளின் தூரங்களையொத்து இடைவெளிகாட்டும் தார்ச்சாலையின் நடு கோடுகள் இப்படி எல்லாமே ரசிக்கும்படியான சூழ்நிலையாயினும் குமார் எனும் பெயரிருந்த அவன் எதையும் பார்த்து பரவசப்பட முடியவில்லை. ஆயினும் தன் இல்லத்தின் திசையில் காற்றுடன் இயைந்து நடக்கிறான்.


செல்லும் வழியில் தான் கடைசியாக மதுவருந்திய கடையினை சற்றே நின்று பார்த்து ஒரு பெருமூச்சினை விலையாக கொடுத்து மதுவின் வாசனையை புதிதாய் சுவாசிப்பவன்போல் உணர்கிறான். உள்ளே மதுவருந்துமிடத்தில் குடியரசர்கள் விட்டுச்சென்ற போதை தெளியாத பாட்டில்களை பொறுக்கிப்போடும் சத்தம் மிகத்தெளிவாக கேட்கிறது. மீண்டும் மதுவின் பிடியில் விழக்கூடாது என்ற எண்ணத்துடன் அவனின் கால்கள் மேலும் இரண்டொரு விரல்கடை தள்ளிதள்ளியே வைத்து நடக்கின்றன.


தெருவினில் நுழைகிறான் இந்த அமைதியை எங்கோ உணர்ந்ததுபோல் இருந்தாலும் அதை ஆராய்ந்து விடை தெளிய அவன்மனம் ஒப்பவில்லை. மனைவியை காணும் மனநிலையில் கொஞ்சமும் மழுங்காமல் செல்கிறது அவன் கால்கள். கருத்த உருவம், பருத்த உடல் என அந்த மளிகைக்கடைக்காரரை கயற்றுக்கட்டில் கொஞ்சம் சிரமமாய்த்தான் தாங்கிக்கொண்டிருந்தது. எதிலும் கவலைகொள்ளாத அவன் உடல் கொசுவின் கொஞ்சலில் மட்டும் கொஞ்சம் குலுங்குகிறது. பரம்பரையோடு படுத்திருக்கும் ஆட்டுக்கூட்டங்கள் கொஞ்சம் வழிவிட்டுதான் பார்ப்போம் என்ற தோரணையில் விலகி நிற்கின்றன. பக்கத்து வீட்டின் பரமசிவம் கதவினை இறுக சாத்திவிட்டு தூங்கிகொண்டிருப்பான் போலவே தெரிந்தது. நேற்று முன்தினம்வரை இருவரும் சேர்ந்து போதையின் புத்தியை பரிமாறிக்கொண்டது நினைவில் நிழலாடியது.


வீட்டின் வாசல் வருகிறான். சிறிய பந்தலில் தேக்குமர கட்டில் மற்றும் நாற்காலி. சற்று முன்னர் தான் கழுவியிருக்கவேண்டும். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ரோஜாப்பூவின் இதழ்கள், கால்வைத்தால் அப்பிக்கொள்ளும் சேரும் சகதியுமான தெருவினை ஒட்டிய வாயிற்படி, அலசிவிடப்பட்ட திண்ணை, யாருமில்லை. உள்ளே நுழைகிறான். சிதறி கிடக்கும் கண்ணாடித் துண்டங்களாய் ஆங்காங்கே உறங்கும் உறவினங்கள். காலையில் வந்தவர்கள் இன்னும் செல்லவில்லை என்றே தோன்றியது. மனைவியைத்தேடினான். அறையில் இருக்கவேண்டும் என்று எண்ணியவாறு உள்தாழ்ப்பால் போட்ட கதவினில் நுழைந்து செல்கிறான்.


விட்டம், சுழலும் மின்விசிறி, சுற்றி அலையும் கடன் சுமைகள் சூழ்ந்திருக்கும் மேகங்களாய் விடையில்லா மகனின் வாழ்க்கை, பருவமடைய பார்த்திருக்கும் மகளின் எதிர்காலம், எல்லாவற்றிற்கும் மேலாக சிறகொடிந்த பறவையாய் படுத்திருக்கும் மாமியாரின் மறுபக்கம் இப்படி எல்லாம் அவன் மனைவியின் வெறித்த பார்வையில் ஒரு ஏக்கமாய் தொங்கிகொண்டிருந்தது.


நீரின்றி காய்ந்த தென்னையாய் அவள் தேகம், இதற்குமேல் வர வாய்ப்பில்லா நிலையில் தற்கொலைக்கு தயாராகும் கண்ணீரின் எஞ்சிய துளி, அதைக் காப்பாற்றுத் துடிக்கும் கீழிமை, கோடியாய் வந்த ஒரு சிகப்பு புடவையுடன் ஒரு கோடியில் துறந்துவிட மறுக்கும் உயிருடன் அவள் உடல். அழியபோகும் பிரமிப்பில் நெற்றிப்பொட்டு, அதனருகே அடித்துக்கொண்டழுததில் உடைந்த வளையலின் ஒரு துண்டு குத்தியதாக பழிசுமத்தும் காயம், இன்னும் கொஞ்ச நாளாவது அவள் குழலில் தங்கவேண்டும் என்ற ஆதங்கத்தில் உதிரப்போகும் மல்லிகை, பதினைந்து நாளில் அவள் கழுத்தை விட்டகலப்போகும் அவன் குடித்தழித்ததில் மிஞ்சிய ஒரே சொத்தான தாலி. இப்படி எல்லாம் பார்த்து , ஒன்றை மட்டும் உணர்கிறான்... அவளுக்கான ஆறுதல் எவராலும் கொடுக்கமுடியாத கடனாக பதுங்கியிருந்ததை. உறங்காத அவள் விழியினில் நிலையிருந்த இமையின் வலிமை அவனை உருக்குலைத்தது. மௌனமாய் திரும்பினான்.


மூச்சு முட்டிய போதையில் நேற்று முன்தினம் எப்படி படுத்தோம்? எப்படி இறந்தோம்? ஏன் இறந்தோம்? என்ற கேள்விகளுக்கான விடை கிடைக்காமலே.... மீண்டும் வந்தவழியை தேடின குமார் எனும் ‘குடியானவனின் கண்கள்.


*******


தங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....27 comments:

vasu balaji said...

அய்யா பாலாஜி. அருமை அருமை அய்யா.
/மூச்சு முட்டிய போதையில் நேற்று முன்தினம் எப்படி படுத்தோம்? எப்படி இறந்தோம்? ஏன் இறந்தோம்? என்ற கேள்விகளுக்கான விடை கிடைக்காமலே.... மீண்டும் வந்தவழியை தேடின குமார் எனும் ‘குடி’யானவனின் கண்கள்./

இது இது.

கார்த்திகைப் பாண்டியன் said...

வர்ணனைகள் அருமை என்றாலும் இந்தக் கதைக்கு இது தேவையில்லை என்பது ஏன் தாழ்மையான கருத்து.. உங்களிடம் இதைச் சொல்லும் உரிமை எனக்கு இருப்பதாக நம்புகிறேன் நண்பா

ஈரோடு கதிர் said...

வார்த்தைக் கோர்வைகளின் உச்சம்
படிக்க படிக்க சுகம் தரூம்

வார்த்தைகளைப் பாராட்டியே தீர வேண்டும்..

ஆனாலும் அதீத வர்ணிப்பு கதைக் கருவை சிதைக்கிறது...

ஹேமா said...

குடியானவன் தொடங்கி முடியும்வரை மனதில் நிற்கிறான்.வறுமை வலி எல்லாமே.கதை உணர்வோடு கை கோர்த்து வருகிறது.
பாராட்டுக்கள் பாலாஜி.

பிரபாகர் said...

//இதற்குமேல் வர வாய்ப்பில்லா நிலையில் தற்கொலைக்கு தயாராகும் கண்ணீரின் எஞ்சிய துளி, அதைக் காப்பாற்றுத் துடிக்கும் கீழிமை//

தல... சும்மா கலக்குறீங்க... என்ன வர்ணிப்பு.... உண்மையில் அபாரம். பாலாஜி, நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு கலக்கல். வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு பாலாஜி

தமிழ் அமுதன் said...

உங்கள் கைகளை பற்றிகொண்டு பாராட்ட தோன்றுகிறது..!

முடியும்போது ஒரு சிலிர்ப்பு ...!

அருமை ..!

velji said...

//மீண்டும் மதுவின் பிடியில் விழக்கூடாது என்ற எண்ணத்துடன் அவனின் கால்கள் மேலும் இரண்டொரு விரல்கடை தள்ளிதள்ளியே வைத்து நடக்கின்றன//
இறந்தபின்னே எடுத்த முடிவு!...அருமை!

கதிர் சொல்வது போல்,வர்ணனை அதிகம்தான்.கடைசி வரை வருகிறது!

பழமைபேசி said...

வாழ்த்துகள் பால்சு!

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை பாலாஜி

கற்பனை கொஞ்சம் டூமச்..

தமிழ் நாடன் said...

எனக்கென்னவோ இந்த வர்ணணை தேவை என்றே தோன்றுகிறது. அதுதான் அவன் இழந்த வாழ்வின் அருமையை நமக்கு சொல்வதாய் இருக்கிறது. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

ஒரு முடிவோடத்தான் கிளம்பிருப்பிங்க போல!

தேவன் மாயம் said...

மூச்சு முட்டிய போதையில் நேற்று முன்தினம் எப்படி படுத்தோம்? எப்படி இறந்தோம்? ஏன் இறந்தோம்? என்ற கேள்விகளுக்கான விடை கிடைக்காமலே.... மீண்டும் வந்தவழியை தேடின குமார் எனும் ‘குடி’யானவனின் கண்கள்//

கதை நல்லாயிருக்கு !

நாடோடி இலக்கியன் said...

படிச்சிட்டேன் பாலாஜி.

நாடோடி இலக்கியன் said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் said...
This comment has been removed by the author.
ஆரூரன் விசுவநாதன் said...

கதை அருமை....

ஊன்றி படிக்க வேண்டியிருக்கிறது.... தொடர்ந்து வரும் உவமைகளில் மனத்தை செலுத்த இயலவில்லை....

நல்ல முயற்சி


வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

வானம்பாடிகள் said...
அய்யா பாலாஜி. அருமை அருமை அய்யா.இது இது.//

நன்றி அய்யா...

//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
வர்ணனைகள் அருமை என்றாலும் இந்தக் கதைக்கு இது தேவையில்லை என்பது ஏன் தாழ்மையான கருத்து.. உங்களிடம் இதைச் சொல்லும் உரிமை எனக்கு இருப்பதாக நம்புகிறேன் நண்பா//

மிக்க நன்றி அன்பரே...உங்களின் வெளிப்படையான விமர்சனத்தினையே விரும்புகிறேன்.

//Blogger கதிர் - ஈரோடு said...
வார்த்தைக் கோர்வைகளின் உச்சம்
படிக்க படிக்க சுகம் தரூம்
வார்த்தைகளைப் பாராட்டியே தீர வேண்டும்..ஆனாலும் அதீத வர்ணிப்பு கதைக் கருவை சிதைக்கிறது...//

இதை என்னால் அதீத வர்ணிப்பாக பார்க்க முடியவில்லை....வர்ணிப்பு என்றால் ஓ.கே. ஒத்துக்கொள்கிறேன். மிக்க நன்றி உங்களின் வருகை மற்றும் கருத்திற்கு...

க.பாலாசி said...

//ஹேமா said...
குடியானவன் தொடங்கி முடியும்வரை மனதில் நிற்கிறான்.வறுமை வலி எல்லாமே.கதை உணர்வோடு கை கோர்த்து வருகிறது.
பாராட்டுக்கள் பாலாஜி.//

நன்றி ஹேமா....

//Blogger பிரபாகர் said...
தல... சும்மா கலக்குறீங்க... என்ன வர்ணிப்பு.... உண்மையில் அபாரம். பாலாஜி, நீங்கள் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு கலக்கல். வாழ்த்துக்கள். பிரபாகர்.//

மிக்க நன்றி பிரபாகர் அய்யா....

//Blogger " உழவன் " " Uzhavan " aid...
நல்லாருக்கு பாலாஜி//

நன்றி...உழவன்

க.பாலாசி said...

//ஜீவன் said...
உங்கள் கைகளை பற்றிகொண்டு பாராட்ட தோன்றுகிறது..!
முடியும்போது ஒரு சிலிர்ப்பு ...!
அருமை ..!//

மிக்க நன்றி ஜீவன் சார்...

//Blogger velji said...
இறந்தபின்னே எடுத்த முடிவு!...அருமை!
கதிர் சொல்வது போல்,வர்ணனை அதிகம்தான்.கடைசி வரை வருகிறது!//

அப்படியா....சரி இனிவரும் கதைகளில் குறைத்துக்கொள்கிறேன். நன்றி உங்களின் கருத்திற்கு...

//Blogger பழமைபேசி said...
வாழ்த்துகள் பால்சு!//

நன்றி பழமைபேசி...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
அருமை பாலாஜி
கற்பனை கொஞ்சம் டூமச்..//

ஒத்துக்கொள்கிறேன் வசந்த்...நன்றி...

க.பாலாசி said...

// தமிழ் நாடன் said...
எனக்கென்னவோ இந்த வர்ணணை தேவை என்றே தோன்றுகிறது. அதுதான் அவன் இழந்த வாழ்வின் அருமையை நமக்கு சொல்வதாய் இருக்கிறது. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி தமிழ்நாடன்...உங்களின் கருத்தையும் ஏற்கிறேன்..

//Blogger வால்பையன் said...
ஒரு முடிவோடத்தான் கிளம்பிருப்பிங்க போல!//

ஹா...ஹா....

நன்றி...

//Blogger தேவன் மாயம் said...
கதை நல்லாயிருக்கு !//

நன்றி அன்பரே....

//Blogger நாடோடி இலக்கியன் said...
படிச்சிட்டேன் பாலாஜி.//

ஓ.கே. அண்ணா....

க.பாலாசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
கதை அருமை....
ஊன்றி படிக்க வேண்டியிருக்கிறது.... தொடர்ந்து வரும் உவமைகளில் மனத்தை செலுத்த இயலவில்லை....
நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி விசு அய்யா...

Unknown said...

அருமை இருக்கு பாலாஜி ...!!

Sadagopal Muralidharan said...

ரொம்ப நல்லா இருக்கு. எல்லோரும் இந்தப்பாதையை ஒரு தரமாவது கடந்து வந்து வருந்தியிருப்பார்கள். நல்ல பதிவு.

புலவன் புலிகேசி said...

அருமை பாலாசி!!! அழகாகவும் ஆழமாகவும் இருந்தது.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை பாலாஜி.

க.பாலாசி said...

//லவ்டேல் மேடி said...
அருமை இருக்கு பாலாஜி ...!!//

நன்றி மேடி...

//Blogger Sadagopal Muralidharan said...
ரொம்ப நல்லா இருக்கு. எல்லோரும் இந்தப்பாதையை ஒரு தரமாவது கடந்து வந்து வருந்தியிருப்பார்கள். நல்ல பதிவு.//

ஆமாம் அன்பரே....நன்றி வருகைக்கு...

//Blogger புலவன் புலிகேசி said...
அருமை பாலாசி!!! அழகாகவும் ஆழமாகவும் இருந்தது.....//

நன்றி நண்பா....

//Blogger T.V.Radhakrishnan said...
அருமை பாலாஜி.//

நன்றி டி.வி.ராதா....

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO