உலகளவில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருவது மக்கள் தொகைப் பெருக்கம். இதன் காரணமாக வளர்ச்சியின் பலன்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறது. அளவான மக்கள் தொகை அச்சமற்றது, அவசியமானது. அளவு கடந்த மக்கள் தொகை பெருக்கம் ஆபத்தானது.

பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி 2008 ஜூன் மே 1ம் தேதி உலகின் மக்கள் தொகை 667,25,92,711 அதாவது 667 கோடி.

20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் 200 கோடிக்கும் குறைவாக இருந்த மக்கள் தொகை பத்தொன்பது நூற்றாண்டுகளில் அதிகரித்த மக்கள் தொகையை போல் இரண்டு மடங்கு ஒரே நூற்றாண்டில் அதிகரித்திருக்கிறது என்பது தான் வேதனை தரும் உண்மை.

உலக மக்கள் தொகை நிமிடத்திற்கு 150 பேர், மணிக்கு 900 பேர், நாளைக்கு 2, 16,0000 பேர் என்ற வேகத்தில் அதிகரிக்கிறது. 1986ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. 

மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது அந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
பூமியில் உள்ள வளங்கள் 200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சனகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு நாளும் பூமியின் வளங்களை புதிதாக இரண்டு லட்சம பேரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்பு வளரும் நாடுகளில் தான் அதிகமாக உள்ளது. காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் வளர்ந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை வெறும் 20 சதவீதம்தான். மாறாக வெறும் 20 சதவீத வளத்தைக் கொண்டிருக்கும் வளரும் நாடுகளான ஏழை நாடுகளில் உள்ளம் மக்கள் தொகையோ 80 சதவீதம்.

உலக மக்கள் தொகையில் ஆறு பேரில் ஒருவர் இந்தியர். இந்தியாவில் சுதந்திரத்தின்போது 34 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 111 கோடியாக உயர்ந்து விட்டது. உலக நிலப்பரப்பில் வெறும் 24 சதவீதத்தை கொண்டுள்ள இந்தியா உலக மக்கள் தொகையில் 16.7 சதவீதத்தை கொண்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தில் நாடு செல்லும் போக்கு நடுங்க வைப்பதாக இருக்கிறது. ஓராண்டுக்கு ஓர் ஆஸ்திரேலியா என்ற இந்த வேகம் தொடர்ந்தால் 2045-ல் இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாகிவிடும். தற்போது ஆண்டுக்கு பிறப்பு வீதம் 22/100 ஆகவும், இறப்பு வீதம் 8/1000 ஆகவும் உள்ளது. அதாவது ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு 22 பேர் வீதம் பிறக்கிறார்கள். 9 பேர் இறக்கிறார்கள். ஆக நிகர சேர்க்கை 14 பேர்.
உலக அளவில் ஆண்டுதோறும் பெருகி வரும் மக்கள் தொகையில் இந்தியாவில் பங்களிப்பு 21 சதவீதம். மக்கள் தொகை மிகுந்த நாடாக சீனா இருப்பினும், மக்கள் நெருக்கடி மிகுந்த நாடாக இந்தியா இருக்கிறது. இதற்கு காரணம் இந்தியாவைப் போல மூன்று மடங்கு பரப்பளவைக் கொண்டது சீனா. மக்கள் தொகை நெருக்கம் மிகுந்த மாநிலங்களில் மேற்கு வங்கம் (சதுர கி.மி.க்கு 904 பேர்) முதலிடம் வகிக்கிறது.

தேசத்தின் பாதியளவு மக்கள் தொகை (48..5 சதவீதம்) உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா பீகார், மேற்கு வங்கம், ஆந்திரம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே உள்ளது. இந்த மாநிலங்களில் எழுத்தறிவு விகிதம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியில்லை. சுற்றுச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றிலிருந்து வன்முறை, கொலை, கொள்ளை வரையிலாக அனைத்தும் அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என்ற உறுதியாகச் சொல்லலாம்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் வனவளம் அருகி, மண் அரிப்பு பெருகி சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. கான்கிரீட் காடுகளின் வளர்ச்சியால் பயிர் காடுகளுக்கான நிலப்பரப்பு குறைந்து வருகிறது. கிராம மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே குடிசைகள் பெருகி சுற்றுச் சூழல் சீர் கெடுகிறது. குடிநீர்ப் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், மருத்துவமனைகளில் கூட்டம், பள்ளிக்கூடங்களில் இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நகரங்கள் நரகங்களாகின்றன. 

ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதார வளம் இருந்தாலும் குடும்பத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தவறினால் வளம் வறண்டு விடும. வாழ்வு வீழ்ந்து விடும். அளவோடு பெற்றால் தான் வளமோடு வாழ முடியும். வீட்டுக்குப் பொருந்தும் இந்த நியதி நாட்டுக்கும் பொருந்தும்.

‘அவன்’ கொடுப்பதுதான் பிள்ளைச் செல்வம் என்று அதிக அளவில் பிள்ளைகளை பெற்றுக்கொண்டால் பிரச்சனை தீராது. பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்று முடிவெடிப்பது வேண்டுமானால் ஆண்டவனாக இருக்கட்டும். ஆனால் எண்ணிக்கையை முடிவெடுப்பது நாமாக இருக்க வேண்டும்.

மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து இரு வேறு கருத்துக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ‘பிறக்கும் குழந்தை வயிரோடு மட்டும் பிறக்கவில்லை. உழைப்பதற்கு இரு கரங்களோடு பிறக்கிறது’ - என்று மறு சாரார். ‘கரங்கள் உழைப்பது சில காலம்தானே, ஆனால் காலம் முழுக்க வயிற்றுக்கு சோறிட வேண்டுமே’ என்று வேதனை கொள்கிறது முந்தைய அணி. ‘ஒரு ஜோடிக் கரங்கள் பல ஜோடி வயிற்றுக்கு காலமெல்லாம் காப்பாற்றுமே’ என்று நம்பிக்கை கொள்கிறது பிந்தைய அணி.

அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொண்டு உலக மக்கள் தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது. நாளைய தினம் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதுப்புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக (Under population) கருதப்படும் நிலை ஏற்படக்கூடும். 

அதே போல மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளை விட மக்கள் தொகை குறைந்துவிட்டால் அது பேராபத்தில் முடிந்து விடும் என்ற கணிப்பும் இருக்கின்றன. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக உழைக்கும் மகளின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இவையனைத்தும் எதிர்காலத்தில் நிலவும் சமூக, பொருளாதார, இயற்கை சூழலைப் பொறுத்தது. இன்றைய சூழலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொகை ஒரு நாட்டிற்குச் சொத்தா? அல்லது சுமையா? என்றால் தொழிலாளர்களின் தேவை பெருமளவில் இருக்கும். சில நாடுகளுக்கு வேண்டுமானால் அது இருக்கிறது என்பதே உண்மை. அதன் பொருட்டே சிறுகுடும்ப நெறியை பின்பற்றுவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் அளிக்கிறது.

உலகளாவிய பொருளாதார மாற்றங்களின் காரணமாக அண்மைக் காலங்களில் மக்களில் ஒரு சிறு பகுதியினர் வெளிநாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் நல்ல வேலை வாய்ப்பையும், உயர்ந்த வருமானத்தையும் பெறுவதை வைத்துக்கொண்டு பெருகி வரும் மக்கள் தொகை நாட்டுக்கு ஒரு சொத்து என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.

பல்வேறு துறைகளில் சாதனைகள் படைக்கப பட்டிருந்தாலும் வறுமை, வேலையின்மை, கல்லாமை ஆகிய சமுதாயக் குறைகள் இன்னும் அகற்றப்படவில்லை. வளர்ச்சியின் பலன்கள் அடித்தள மக்களை இன்னும் சென்றடையவில்லை என்பதை பாரதப் பிரதமர் அண்மையில் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார். முன்னேற்றத்தின் வளர்ச்சி வேகத்தை விட மக்கள் தொகை பெருக்கத்தின வேகம் அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

எனவே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும. சிறிய குடும்பமே சிறப்பான குடும்பம என்பதை உணர்த்த வேண்டும். அறிவுறுத்தலின் மூலமே அறியாமையை அகற்றமுடியும். எழுத்தறிவுப் பெருக்கமும் குறிப்பாக பெண் கல்வி வளர்ச்சியும் ஏற்பட்டால் தான் மக்கள் தொகைப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

ஒரு ஆண், கல்வி பெற்றால் அது தனி நபரின் கல்வியே. ஆனால் ஒரு பெண் கல்வி பெற்றால் அது ஒரு குடும்பம் முழுவதன் கல்வியாகும். என்ற மகாத்மாவின் கருத்தை சிந்தையில் கொள்ள வேண்டும். கல்விக்குச் செலவிடும் ஒரு ரூபாய், குடும்ப நலத்திட்ட பிரச்சாரத்திற்கும் கருத்தடை சாதனங்களை வழங்குவதற்கு செலவிடப்படும் பத்து ரூபாய்க்கு சமம். சரி, எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். அளவான மக்கள் தொகை சொத்து என்றும், அளவற்ற மக்கள் தொகை சுமை என்பதையும் ஒத்துக் கொள்கிறோம். ஆனால் இப்போது இருக்கும் இந்தச் சுமையை என்ன செய்வது? இந்தச் சுமை என்றைக்குமே சுமைதானா? என்ற கேள்வி மனதில் எழும். இந்த சுமையை சொத்தாக மாற்றமுடியும் என்பதுதான் பதில்.

வானுயர்ந்த கட்டிடங்கள், நீண்ட சாலைகள், ராட்சத இயந்திரங்கள் இவற்றையெல்லாம் சொத்து என்று கூறும்போது இதனை உருவாக்கிய மனிதகுலத்தை ஒட்டுமொத்தமாக ‘சுமை’ என்று கூறிட இயலாது. முறையான கல்வியளித்து உள்ளார்ந்த திறனை வளர்ப்பதால் இந்தச் சுமையை ஒரு சொத்தாக மாற்றமுடியும்.

மனிதன் வேலை செய்யும் வெறும் ‘ஹார்டுவேர்’ - ஆக மட்டும் இருந்தால் போதாது. சிந்திக்கும், முடிவெடுக்கும், நிர்வகிக்கும் ஒரு ‘சாப்ட்வேர்’ - ஆக கல்வி அவனுக்குள் புகுத்தப்பட்டால் மனித உழைப்பு மனித முதலீடாக மாறும். மக்கள் தொகை +கல்வி = மனித முதலீடு.

உலகில் மக்கள் சக்திக்கு இணையாக வேறு சக்தி இல்லை. மனிதனின் சக்திக்கு அடிப்படை அவனுடைய மூளையின் திறனே ஆகும். ஆனால் அதனை முழுமையாகப் பயன்படுத்தும் சக்தியை மனிதன் இன்னும் பெறவில்லை. இந்தக் குறையை போக்க தேவைப்படுவது அறிவு. அந்த அறிவை வளர்ப்பது கல்வி.

‘இந்தியா ஏழைகள் வாழும் செல்வந்த நாடு’ என்பார்கள். ‘இந்தியாவில் செம்மைப்படுத்தப் படாத, பக்குவப்படுத்தப்படாத, வெளிச்சத்திற்கு வராத பல திறமைகள் புதைந்து கிடப்பதுபோல், உலகில் வேறு எங்கும் இல்லை’ என்றும் கூறுகிறார். 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த நிர்வாக என்று கருதப்படும் ஜாக் வெல்ஞ்ச் (Jack Welsch). இதைத்தான் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில’ என்கிறது திரைப்படப்பாடல்.
இயற்கையின் உன்னத படைப்பு மனிதன், இயற்கை வளம் மிகுந்த இந்தியாவின் மகா சக்தியாக விளங்கும் மனித சக்தியை அறிவியல் தொழில்நுட்பத்தோடு இணைத்து ஆக்க வழியில் ஈடுபடுத்தினால் சோதனைகள் சாதனைகளாகும், சுமைகள் சொத்துக்களாகும். புயல்காற்று பூங்காற்றாகத் தவழும்.


குறிப்பு- இந்த இடுகை நான் இணையம் வந்த புதிதில் எங்கோ கிடைத்தது. இது என்னுடைய சொந்த இடுகை இல்லை. இதற்கான மூல சுட்டியும் எனக்கு கிடைக்கவில்லை. ஒரு பகிர்வுக்காக மட்டுமே இதை நான் இங்கு பதிந்துள்ளேன். எழுதியவருக்கு நன்றிகள்.