சென்ற வாரம் கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரின் உறவினருக்கு அவரசமாக இரத்தம் (வெள்ளை அணுக்கள் மட்டும்) தேவைப்பட்டது. தகவல் தெரிந்தவுடன் இணையத்தில் பகிரலாம் என்று யோசித்தேன். பிறகு வழக்கம்போல் எங்கள் வேலுஜி இந்த (http://www.friendstosupport. org/index.aspx) (http://www.blooddonors.in/) இணைய தளங்களில் இருந்த இரத்தம் கொடுக்கும் தன்னார்வலர்களின் அலைபேசி எண்களை சேகரித்து, அழைத்து 15 நிமிடங்களில் வேலை முடிந்தது. இதில் கிடைத்த 5 எண்களை தொடர்பு கொண்டதில் 2பேர் முன்வந்தார்கள். வாரம் ஒருமுறையாவது எங்களுக்கு இந்த இணையங்கள் பயன்படுகிறது. உங்களுக்கு எந்தவகையான இரத்தம் தேவைப்படுகிறது, நீங்கள் எந்த மாவட்டம், எந்த ஊர் போன்ற விபரங்களை கொடுத்தவுடன் உடனடியாக அந்தப் பகுதியிலுள்ள இரத்ததானம் கொடுப்பவருடைய முகவரி மற்றும் அலைபேசி எண்களை பெறலாம். பயனுள்ள தளம். மேலும் நீங்கள் இரத்த தானம் செய்பவராகவோ, அல்லது செய்யவிரும்புபவராகவோ இருந்தால் இந்த தளத்தில் உங்களது அழைப்பு எண் மற்றும் முகவரியையும் பதிந்து வைத்துவிடுங்கள். இல்லையெனில் என்னைப்போல் 50 கிலோ எடையை தாண்டாமல் இருங்கள்.
•••
30 நாட்களாக வலதுகையில் குடியிருந்த மூன்றங்குல ‘ஆணியை’ மருத்துவர் எடுத்துக்கொண்டார். இப்போதுதான் கை உடைந்ததுபோல் உள்ளது. ஒருமாதமாக நொண்டிக்கையை சாக்காக வைத்து பெற்றுவந்த சலுகைகள் ‘கிளிக்கு ரெக்க முளைத்துடுத்து, ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்து‘ கதையாகிவிட்டது. மொத்த உடலெடையில் 15 கிராம் குறைந்திருக்கிறது. எப்போதும்போல் 50 கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டேன். மருத்துவத்துறை முன்புபோல் இல்லை. புறங்கையில் ஒரு சுள்ளி எலும்பு முறிந்ததற்கு 9 ஆயிரத்து முன்னூத்துச் சொச்சம் செலவு. எதற்கெடுத்தாலும் பிளேட், கம்பி, ஸ்க்ரூ, ஆப்(பு)ரேசன், எதோ டெம்ப்போ லாரிக்கு பாடி கட்டுவதுபோல் செய்கிறார்கள், நல்லவேளை வெல்டிங் மிஷின் மட்டும் இல்லை. இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீடு, க.கா.தி, அல்லது நட்சத்திரம். படுக்கவைத்து இரண்டுநாள் படுத்தியெடுத்து ரவுண்டாக ஒரு தொகை கரந்துவிடுகிறார்கள் மடியில்(இல்)லாவிட்டாலும், நம்மிடம் அல்லது காப்பீடு மூலம் இப்படி இம்சைப்பண்ணும் மருத்துவர்கள் இன்னொசென்ட் என்ற பெயரில்கூட இருக்கிறார்கள். எண்ணெய்க்கட்டு, புத்தூர்கட்டு, மாவுக்கட்டு, அறுவைசிகிச்சை, கம்பிகள்... ; கழனித்தண்ணி, புண்ணாக்கு, பருத்திக்கொட்டை, SKM மாட்டுத்தீவனம், ஊசிகள்....
••••
5 வயதில் ராக்கெட் விடவேண்டும் என்ற ஆசை வந்தது. பள்ளிக்கூடத்தில் நன்கு பயிற்சி எடுத்துக்கொண்டேன். வீட்டிற்கு வந்து எங்கே பேப்பர், எங்கே பேப்பர் எனத்தேடியதில் சிக்கியது அந்த திருமண பத்திரிக்கை. கூராக மடித்து சொய்ங்..சொய்ங்.... மணியன் தாத்தா வீட்டுக்கொல்லையில் விழுந்தது. வேலியை தாண்டி எடுக்க திரானி இல்லை. மறுநாள் அந்தத் திருமணம். அப்பா பத்திரிக்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார். என்மீதான குற்றச்சாட்டு சகல ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டது. வழக்கம்போல விளக்கமாறுதான். மியாமிக்குஷன் செருப்பை மறைத்து வைத்திருந்தேன். தெருவில் ஓடவிட்டு அடித்தார். யாரோ ஒரு புண்ணியவான் உதவ, அதை எடுத்துகொடுத்துவிட்டேன். விசயம் அதுவல்ல. சமீபத்தில் யப்பாரின் மேஜையை பீராய வேண்டிய கட்டாயம், கரையான். பூராவும் பழைய திருமணப் பத்திரிக்கைகள், தொழில் சம்பந்தப்பட்ட கணக்குநோட்டுகள், 1980 க்கு பிறகு வந்த கடிதங்கள், என்னுடைய 3ம் வகுப்பு பாட குறிப்பேடு, கூடவே அந்த திருமணப்பத்திரிக்கையும். நிறைய பத்திரிக்கைகளையும், கடிதங்களையும் பொறுமையாக அமர்ந்து வாசித்தேன். பின்னோக்கிய பயணம்தான் எவ்வளவு சுவாரசியம். எனது நண்பன் ஒருவனின் பெற்றோருக்கு நடந்த திருமணப்பத்திரிக்கையும் அதில் இருந்தது. அவனிடமே காட்டியும் மகிழ்ந்தேன். இப்பவும் வீட்டின் எதோமூலையில் வருகிற பத்திரிக்கைகளை திருமணம் முடிந்ததும் கொக்கியில் சொருகிவிடுகிறார் அப்பா. சென்றவாரம் நண்பனொருத்தன் திருமணத்திற்கான அழைப்பை குறுந்தகவலாக அலைபேசிக்கு அனுப்பினான், ‘புடவைடா (sarry) மாப்ள. ட்யூ டூ ஸார்டேஜ் ஆப் இன்விட்டேசன்‘ இன்ன கிழமை, இன்ன தேதி, இன்ன நேரம், இவளுக்கும் எனக்கும் இன்னக்‘கொடுமை’ யென்று. படித்துவிட்டு உடனடியாக உள்பெட்டியை சுத்தம் செய்தேன். என் புத்தி.
••••
ஒரு நூலை விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு புத்தியில்லையெனக்கு. ஆனாலும் இந்த நூலைப்பற்றி எதாச்சும் சொல்லவேண்டுமென்று மனது அடித்துக்கொள்கிறது. படித்து ஒருமாதமாகிறது. இன்றளவும் அசைபோடுகிறேன். இதைப்பற்றி விமர்சித்தவர்களையெல்லாம் தேடிதேடிச்சென்று படிக்கிறேன். சென்ற மாதம் ஆஸ்பத்திரியில் 2 நாள் படுத்துக்கிடந்தபோதுதான் வாசித்தேன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள். ஒரு அற்புதமான படைப்பு. கேரளத்து மண்ணில் எல்லாவித பசியோடும் ஒடுங்கிய வயிற்றோடுமலைந்த அந்தக் கவிஞனின் வாழ்க்கை சில பக்கங்களில். பெரும்பாலும் வறுமையில் சிதைந்த முகத்துடன், கூடவே சபலம், ஆற்றாமை, குற்றவுணர்வுகள். ஒரு மனிதனின் முகம் வெளிக்காட்டக்கூடிய அனைத்து உணர்ச்சிகளையும் படிக்கும்போது உள்ளத்தால் உணரவைக்கிறார். ஒரு இடத்தில் ‘மதிப்பும் மரியாதையையும் விட பெரியது பசியும் சோறும்தான், நான் சாப்பிட ஆரம்பித்தேன்’ என்றிருப்பார், அந்த கணம் மனதைப் பிசையும். ‘சிதம்பர ஸ்மரண’ என்ற இந்த மலையாளப் புத்தகத்தினை வம்சி பதிப்பகம் வழியாக அதே உணர்வுகளோடு தமிழில் கோர்த்திருக்கிறார் திருமதி.கே.வி. ஷைலஜா. எனக்காக இதை பரிந்துரைத்தவர் திருமதி. பத்மஜா. இருவருக்கும் என்றென்றும் நன்றிகள்.
••
16 comments:
ஏனுங் பாலாசி மெய்யாலுமே நீங்க அம்பது கிலோதானா...
@ இராமசாமி :
இல்லைங்கண்ணா அம்பத்தி புள்ளி சொச்சம்ங்க..
நன்றி..
உடம்ப பாத்துக்குங்க பாலாசி..
நம்ம பாடிக்கு இதெல்லாம் ஓவரு..
That SMS culture...
Too Bad.... :(
*********
//உடம்ப பாத்துக்குங்க பாலாசி..
நம்ம பாடிக்கு இதெல்லாம் ஓவரு..//
Yes My Lord....
take care Anna...
*********
50 கிலோ சரி. அது என்னவே தாஜ்மகால் ? ஆண்டியூர் காளியம்மன்னு சொன்னா ஏத்துக்கிட மாட்டோமா :)
நான் ஐம்பது கிலோ தான்னு சொல்லி சொல்லி யாரை இழுக்கப் பார்க்கறீங்க. நடக்கட்டும் நடக்கட்டும்.
50 kiloவ நான் தாண்டமாட்டேன்... ஏன்னா... 64க்கு அப்புறம் 50 வராது :)
கல்யாண பத்ரிக்க மேட்டரு நெகிழ்வு..
பசியும் சோறு தான் முக்கியம் இது தெரியாதா பாலாசி உங்களுக்கு ;) சரி சரி புத்தகத்த ட்ரை பன்றன்... என்ன ஒரு 30 பேஜஸ் இருக்குமா ? :))
ஆணி இருக்குன்னு ஆணி புடுங்காம இருந்தத ஆணியப் புடுங்கி உன்ன ஆணி புடுங்க வச்சிட்டாரா. பாவம்:))
தொகுப்பு நன்று. பழைய கடிதங்கள்.. பொக்கிஷங்களே. அழைப்பிதழும் குறுஞ்செய்தியாக..:(!
நண்பா, என்னய்யா ஆச்சு? ஒரு வார்த்தை சொல்லிக்கிறதில்லையா? ...
சிதம்பர நினைவுகள், படிக்கத்தெரிந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்... :-) கெட் வெல் சூன்....:-)
கெட் வெல் சூன்,
நூல் அறிமுகத்திற்கு நன்னீஸ்
//புடவைடா (sarry) மாப்ள.//
Hahahaa :)
//50 கிலோ எடையை தாண்டாமல் இருங்கள்//
ஏன்? 50கி எடைக்குக் கீழேயிருந்தால் ரத்தம் கொடுக்க முடியாதா?
ஓ கம்பிய உருவிட்டாங்களா!!!???
நன்றி இராமசாமி
நன்றி சிவா
நன்றி ராஜா
நன்றி மரா. (ஹ..)
நன்றி சேது சார்
நன்றி அசோக் அண்ணா
நன்றி வானம்பாடிகள்
நன்றிங்க ராமலஷ்மி
நன்றி முரளி
நன்றி ரோகிணி அக்கா
நன்றி இளங்கோ
நன்றி அன்புமணி
நன்றிங்க ஹுசைனம்மா
இப்போ நலமா பாலாசி?
பகிர்வு அருமை.
Post a Comment