க.பாலாசி: ஒரு கூடும் சில குளவிகளும்..

Monday, April 2, 2012

ஒரு கூடும் சில குளவிகளும்..

*
கடந்த இருநாட்களில் 36 மணிநேரம் தூங்காமலிருந்திருக்கிறேன். இதிலொரு கொடுமை அலுவலக நேரத்திலும் கொட்டகொட்ட விழித்திருந்ததுதான். ஓர் இரவு கண்விழித்தாலே அடுத்தநாள் முழுதும் அர்த்தநாசம் குட்டிச்சுவர். ஆனாலும் நேற்றையப் பொழுதில் சில சுபங்கள். ஈரோடு வந்திருந்த பதிவரும் தீரா-இலக்கிய ஆர்வலருமான கோபியை சந்தித்து கொஞ்சநேரம் அளவளாவினேன். எங்களின் சங்கமங்கள் அனைத்திலும் பயணச் சிரமங்களைப் பொருட்படுத்தாது கலந்துகொள்ளும் இனிய நண்பர். இந்தவகை அண்ணன்களை சந்திக்கும்போது பெரும்பாலும் கால்கள் கடகடவென நடுங்க ஆரம்பிக்கும். ‘இந்தப் புத்தகத்த படிச்சியா, அந்தப் புத்தகத்த படிச்சியா’வென்று கேட்டுவிட்டு கடைசியில் ‘நீயெல்லாம் என்னய்யா மனுச’னென்று திட்டிவிடுவார்களோவென்ற பயம்தான். எனவே ‘எந்த பஸ்ல வந்தீங்க, எங்கங்க போனீங்க, சாப்டீங்களா, இந்த ரூம்க்கு வாடகை எவ்வளவு‘ போன்ற ‘இலக்கிய’த்தரமான கேள்விகளைக் கேட்க அவரும் பதிலுரைத்தார். ஓர் இலக்கியவாதியை இவ்விதமான கேள்விகளைக்கேட்டு ‘அவ்விதம்’ திருப்பாமலிருப்பது என்னுடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதெனப்பட்டது (with smiley). மாலை மூன்றுக்கு அவரை திருப்பூர் பேருந்தில் ஏற்றிவிட்டு அறைக்குச் சென்று தூஙகலாமென்றிருந்தேன். மனிதனுக்குமவன் மனதிற்குமான போராட்டத்தில் பெரும்பாலும் மனம் ஜெயித்துவிடுகிறது. அதிலும் அதீதமாய் நல்ல செயல்களுக்கு. தூக்கத்தைப்பார்ப்பதா, ‘கோபி’யாரைப் பார்ப்பதாவென்றதில் வென்றது அண்ணன் கோபி.

***

மற்றொன்று

நேசம் + யுடான்ஸ் + சேர்தளம் இணைந்து நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அவர்களிணைந்து நடத்திய சிறுகதை மற்றும் கட்டுரைப்போட்டி பரிசளிப்பு விழாவும் நேற்று (01.04.2012) திருப்பூரில் நடந்தது. ‘போகலாமா வேண்டாமா, போகலாமா முடியுமா, அசதி.. தூங்கலாம், போகவேண்டாம் தூங்கலாம்,  தூங்கவேண்டாம் போகலாம்’ என்ற படிநிலைகளில் ஆர்வமும்,  கொஞ்சிய தூக்கத்தை பயணத்தில் கழிக்கலாமென்ற எண்ணமும் சேர்ந்தே உந்த, பேருந்தில் ஏறினேன். ஆனால் திருப்பூர் வரையில் கோவில்மணி நடுவாடும் நாக்கு கதியாக நின்றுகொண்டே பயணம். ‘விடியாமூஞ்சி, வேலை, கூலி’ பழமொழி ஞாபகம் வந்தது. போக... நிகழ்ச்சி நன்றாக நடந்தது. வலை நண்பர்கள் ஒன்றிணையும்போது கிடைக்கிற இனிமை சொந்த சுபகாரியங்களில்கூட இப்போது கிடைப்பதில்லை. புதியவர்களை காண நாணி முந்தானையொளியும குழந்தைகள் பதிவர்களைக் காணும்போது மட்டும் புழங்கிய வாசமடிக்குமோ என்னவோ. இயல்பாக ஒட்டிக்கொள்கிறார்கள். பரிசலின் பெண்ணும், விஜியக்காவின் பெண்களும் அப்படியே. கொஞ்சம் இறுக்கமான நிகழ்ச்சியின் இறுதியில் தப்பாட்ட குழுவினரின் சரியான ஆட்டம் நடந்தது. இக்காலம் இதைகாண புண்ணியம் தேவைதான். எல்லாம் அமைந்தாலும் மனிதனுக்கு அந்நேரத்தில் ரசிக்கிற மனம் கிடைப்பதரிது. கிடைத்தது. மொத்த நிகழ்வும் தேனூறிய அத்திப்பழம்.

நிகழ்ச்சி குறித்து மயில் விஜி

***

காலங்காலமாக திரைப்படங்களில் காட்டப்படுவதை மட்டுமே புற்றுநோய்க்கான தன்மையென்பதையே ஒருகாலத்தில் அறிந்திருந்தேன். இப்பவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்தனுபவங்கள் வாய்த்ததில்லை, அதன் கொடூரத்தை புகைப்படங்களிலும், ஏடுகளிலும் படித்ததோடன்றி. மார்பக புற்றுநோயை எதிர்கொண்டு அதையும் சவாலாக வென்று அதைப்பற்றி விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்கவேண்டுமென்ற எண்ணத்தில் திருப்பூர் நிகழ்ச்சியில் பேராசிரியை திருமதி.மோகனா அவர்கள் கலந்துகொண்டார். படித்ததை சொல்லும்போது ஏற்படுகிற அலட்சியத்தன்மை உணர்ந்ததைச் சொல்லும்போதே உறைக்கிறது. மேலும் இவர், இந்நிகழ்ச்சியொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டியில் இரண்டாம் பரிசுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

***

பதிவர் பல்டாக்டர் ரோகிணி அவர்கள் ‘ஒருகாலத்தில்’ வாய்ப் புற்றுநோய் வாய்ப்புகள் குறித்து எழுதியிருந்தார். பல் துலக்கும்போதெல்லாம் பயமாகவே இருந்தது. ‘பேய்’ அம்சம் கொண்ட கதைகளையோ, திரைப்படங்களையோ பார்த்துவிட்டு தூங்கினால் கனவிலும் பேய் வந்தாடும்... போலவேதான். நேற்றிலிருந்து இது அதுவா இருக்குமோ, அது இதுவா இருக்குமோ போன்றதான எண்ணங்களும் பயமும். முப்பதுக்குப் பிறகு ஆறுமாதத்திற்கொருதரம் முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது. ஆனாலும் எந்த எழவுக்குப்போனாலும் மருத்துவர்கள் ஊசியை எடுக்கிறார்கள். அது மூன்று மி.மீ. என்னுடலில் நுழைவதற்குள் தரைதட்டி எலும்பில் முட்டிவிடுகிறது. இதேபோலான பிரச்சனை என்னைக் கடிக்கும் ரங்குஸ்கி ரக கொசுக்களுக்கும் இருக்கும் போலிருக்கிறது. ‘நீ இன்னுமாடா இருக்க’ தோரணையில் மோந்து பார்ப்பதோடு சரி. அதுகெல்லாம் கொடுப்பனை வேணும் பாஸ்.

***

2004 ம் ஆண்டு ஜுலை 16ம் நாள் சென்னை கிண்டி நகர மக்கள் ஒரு அநாயசமான  அதிர்வை உணர்ந்திருப்பார்கள். செம்பொன்னார்கோவில் சிங்கமொன்று தன் பிடரியை சிலிப்பியபடியே சென்னை மண்ணில் முதலில் கால்வைத்தது அங்கேதான். சமகாலத்து தமிழ்த்திரை மரபுப்படி வலதுகாலை கடிகாரச்சுற்றுபடி மூன்று சுற்று சுற்றியபடியே தரையை ஓங்கி மிதித்தேன். தூசிதுரும்புகூட அசையவில்லை. போகட்டும். பிறகு போரூர் வாழ்க்கை, மைலாப்பூர், விண் டி.வி, சினிமா ஆசை, நடிகர் சத்யராஜை சந்திக்க ஏற்பாடு போன்றனவெல்லாம் நடந்தது. அக்கட்டத்தில்தான் என் கதையொன்று வாரமலரில் வந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் படித்து முன்னேறி மாவட்ட ஆட்சித்தலைவன் ஆகிறான் பாணியில். பிறகு கேட்கவாவேண்டும் ‘டேரக்டா ஹீரோதான்’ என்ற லட்சியக்கனவு வந்துவிட்டது. போரூர் நகர வீதிகள் கதறகதற கண்விழிப்பது என் பகற்கனவில்தானென்றால் நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். சொல்லமுடியாது இந்நேரம் தனுஷிற்கு சரியான போட்டியாக வந்திருப்பேன் ‘உடலளவில்’.

*

16 comments:

vasu balaji said...

நல்லா வந்திருக்கு. அந்த ரங்குஸ்கி செம்பனார்கோவில் சிங்கம்:))))) சான்ஸே இல்ல.

KARTHIK said...

தல சொல்லாமாபொல்லாம நீங்க மட்டும் போயிட்டு வந்துட்டீங்க :-))))

அரசூரான் said...

//2004 ம் ஆண்டு ஜுலை 16ம் நாள் சென்னை கிண்டி நகர மக்கள் ஒரு அநாயசமான அதிர்வை உணர்ந்திருப்பார்கள். செம்பொன்னார்கோவில் சிங்கமொன்று தன் பிடரியை சிலிப்பியபடியே சென்னை மண்ணில் முதலில் கால்வைத்தது அங்கேதான்.//
இதெல்லாம் நடந்துதா? சொல்லவே இல்லை. நம்ம ஊரு சிங்க சிங்கம் ரெண்டு அங்க சுத்திகிட்டு இருக்கு தெரியும்தானே?

Romeoboy said...

\\ன்னைக் கடிக்கும் ரங்கூஸ்கி ரக கொசுக்களுக்கும் இருக்கும் போலிருக்கிறது. ‘நீ இன்னுமாடா இருக்க’ தோரணையில் மோந்து பார்ப்பதோடு சரி. அதுகெல்லாம் கொடுப்பனை வேணும் பாஸ்.//

சிரிப்பை நிறுத்த முடியல ... :))))))))

அமர பாரதி said...

//கடந்த இருநாட்களில் 36 மணிநேரம் தூங்காமலிருந்திருக்கிறேன்// கண் துஞ்சாமல் கண்டபடி உழைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். சென்னையிலிருந்து எப்படி ஈரோடு வந்தீங்க பாலாசி?

R. Gopi said...

\\ஓர் இலக்கியவாதியை இவ்விதமான கேள்விகளைக்கேட்டு ‘அவ்விதம்’ திருப்பாமலிருப்பது என்னுடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லதெனப்பட்டது (with smiley).\\

அவ்வளவு களைப்பிலும் நீங்க வந்து பாத்தது பெரிய விஷயம் பாலாசி. உங்களைப் பாத்ததில் மிக்க மகிழ்ச்சி.


அப்புறம் இலக்கியவாதி என்பதெல்லாம் ஒரு தவறான பிம்பம். வதந்திகளைக் கண்டு ஏமாற வேண்டாம்:-)

ஓலை said...

ஈரோடுல உட்கார்ந்துகிட்டு செம்பனார் கோவில் சிங்கம் என்னமா கனவு காணுது.

பயணங்கள் வெற்றியடைவது சந்தோசமானது. :-)

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்.....

விஜி said...

நன்றி பாலாசி :)

☼ வெயிலான் said...

// புதியவர்களை காண நாணி முந்தானையொளியும குழந்தைகள் பதிவர்களைக் காணும்போது மட்டும் புழங்கிய வாசமடிக்குமோ என்னவோ. இயல்பாக ஒட்டிக்கொள்கிறார்கள்.//

கலக்குறே பாலாசி!

பரிசல்காரன் said...

செம நடை பாலா! வந்திருந்து விழாவை சிறப்பித்தமைக்கு நன்றி!

அகல்விளக்கு said...

அட்டகாசம்.... :)

பத்மா said...

nalla irukku bala vaazhthukkal

க.பாலாசி said...

நன்றி வானம்பாடிகள் அய்யா
@கார்த்தி..கடைசிநேர முடிவு தலைவரே.. அதான்.. நன்றி..
நன்றிங்க அரசூரான்..
(செம்பை சிங்கங்களா? எனக்கு தெரியலையே..)
நன்றி அருண்மொழித்தேவன்
@அமரபாரதி..நன்றிங்ணா
நன்றி கோபி‘ங்ணா.. :))) அதெல்லாம் ஒத்துக்கமுடியாங், நீங்க தீவிர இலக்கியவாதிதான்..
நன்றி சேது சார்
நன்றிங் ஆரூரன்
நன்றிங்க விஜி அக்கா
@வெயிலான் - நன்றிங்ணா..
@பரிசல் - நன்றிங்ணா
நன்றி ராஜா
நன்றி பத்மா மா..

எல் கே said...

நண்பரே உங்களை வலையோசையில் அறிமுகப் படுத்தி இருக்கிறோம்
http://www.atheetham.com/?p=461

ஆத்மா said...

ok ok..ஓகே ஓகே..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO