க.பாலாசி: சில புழுக்கள்

Tuesday, June 22, 2010

சில புழுக்கள்


சிலநேரங்களில் காணுகின்ற நிகழ்வுகள் மனதின் மையத்தைப்பிடித்துக்கொண்டு அகலாமல் அரித்துக்கொண்டிருக்கும். அதுபோலவே இதுவும்...

அலுவலக நண்பருடன் சமீபத்தில் அம்மன் கோவில் கும்ப அபிடேகத்திற்கு செல்லவேண்டிய சூழ்நிலை உருவானது. பளபளக்கும் வெளிர்நிற ஆடைகளில் அவ்வூரே திரண்டு ஒற்றுமையாக அவ்விழாவினை நடத்தியது கண்டு வியந்தேன். விசேடங்கள் முடிவடைந்தவுடன் இருசக்கர வாகனத்தை எடுக்க திரும்பி வரும்பொழுதுதான் கவனித்தேன் ஒரு வீதி மக்கள் அவ்வீதி முகனையில் நின்றுகொண்டு அக்காலை உடையுடன் கோவிலைப் பார்த்துக்கொண்டிருப்பதை. அவ்வோடையின் அந்தப்பக்கம் கோவில். இந்தப்பக்கம் அவ்வீதி. நண்பரிடம் விசாரித்தபொழுதுதான் அத்தொண்டைக்குழியடைக்கும் நிலை ஏற்பட்டது. அம்மக்கள் அந்த கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களென்று. ஏனென்று வினவியபொழுது அவர்களின் சாதிதான் காரணமாய் சொல்லப்பட்டது. மீறி சென்றால் அடிதடி, வெட்டுக்குத்து போன்றன நிகழுமாம்.

அந்த சிறுவாய்க்காலின் படித்துறையில் பல்துலக்கியபடியும், துணிகளை தெருக்குழாய்களில் அலசியபடியும் அத்தனை நன்மக்களும் வேடிக்கை மட்டுமே பார்த்தது நெஞ்சில் அடைத்துக்கொள்ளத்தான் செய்தது. அவர்களுக்குக்கூட தோன்றவில்லை, அந்த அம்பாளை வணங்கவேண்டுமென்று. ஒரு ஊரில் மிகைவாழும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் திமிருடனான ஆதிக்க மனப்பான்மை இதுபோன்ற கீழ்ச்செயல்களுக்கு அடித்தளமாகிறது என்பது கண்கூடு. அந்தப்பக்கம் நின்று வெளுத்த சட்டைவேட்டியுடனும், பட்டுப்புடவைகளுடனும் அம்பாளை தரிசனம் செய்யும் அத்தனைப்பேரின் மனதிலும் எத்தனை அழுக்குகள் நிறைந்திருக்கின்றன. நாகரீக வளர்ச்சி எத்தனையோ படிகளை எட்டிவிட்டநிலையிலும் இன்னும் சில உட்கிராமங்களின் நிலை இப்படியேத்தான் உள்ளது.

எனது தாய் தந்தையருக்கு சாதியின் சாயம் ஒட்டியிருந்த சமயங்களில், அப்படியான மாயை எதுவுமில்லை, எல்லோரும் மனிதர்கள்தான், நம்முடலில் உள்ள யாவனவும் எல்லா மனித உடல்களிலும் இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு பகுத்தறிவிக்க என் கல்வியறிவும், அனுபவமும் உதவியது. இங்கு ஒரு ஊரே சேர்ந்து ஒரு குறிப்பிட்ட மக்களை சாதி அடையாளங்களால் ஒதுக்கிவைப்பது எத்துணை கொடுமையானது. அங்கு கல்வி பயின்ற மக்களே இல்லையோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.

ஏட்டுக்கல்வி மதிப்பெண்களுக்காக என்றுமட்டும் ஆகிவிட்ட இந்நேரத்தில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்றன மனப்பாடம் செய்து மதிப்பெண்கள்பெற மட்டுமே பயன்படுகின்றனவே தவிர வேறெந்த புரிந்துணர்விற்கும், வாழ்வியலின் நற்பண்புகளுக்கும் பயன்படுவதில்லை என்றே நினைக்கிறேன். வயதில் மட்டும் முதிர்ந்த கல்வியறிவற்ற சில பெரிய புழுக்கள்தான் இப்படியென்றால் அதற்கு கொடிபிடித்துக்கொண்டிருக்கும் என்னொத்த இளையக்கூட்டமும் அதற்கு அடிக்‘காலாக’ முளைத்துக்கொண்டிருக்கிறதே. இச்சமுதாயத்தில் அகற்றப்படவேண்டிய அழுக்குகள்தான் எத்தனைவிதமாய் முளைத்துக்கிடக்கிறது !!!!


47 comments:

vasu balaji said...

இந்த இழவெடுத்த புத்திய வச்சிக்கிட்டு கும்பாபிசேகம் வேற கேக்குதா. இந்த அழுத்தமெல்லாம் தாளாமதான் ஒவ்வொரு கோயிலா சூய்சைடு பண்ணிக்குது. காளஹஸ்தி போச்சு. ஸ்ரீரங்கம் வெடிப்பு விடுதுன்னு. கும்பாபிஷேகம் முடிஞ்சி நாறிப்போன ஊர சுத்தம் பண்ணமட்டும் கூப்புடுவானுங்க. தேரிழுக்கும்போதும், திருவிழாவின் போதும் ஆச்சாரம் கூட பார்க்ககூடாதுன்னு விதியே இருக்கிறதா படிச்சிருக்கேன்.புதுசா கட்டின கோவிலுக்கு கும்பாபிஷேகம். இவனுங்க மனச கழுவ எந்தாபிஷேகம் பண்றது?

AkashSankar said...

காறி உமிழ வேண்டும் அந்த ஈன மக்களை...

அ.முத்து பிரகாஷ் said...

அன்பு தோழர் பாலாசி ...

உங்கள் உணர்வுகளோடு உடன்படுகிறேன் ...

// " எனது தாய் தந்தையருக்கு சாதியின் சாயம் ஒட்டியிருந்த சமயங்களில், அப்படியான மாயை எதுவுமில்லை, எல்லோரும் மனிதர்கள்தான், நம்முடலில் உள்ள யாவனவும் எல்லா மனித உடல்களிலும் இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு பகுத்தறிவிக்க என் கல்வியறிவும், அனுபவமும் உதவியது..."//

உங்களை நினைத்து பெருமைபடுகிறேன் தோழர் ...

//"அந்தப்பக்கம் நின்று வெளுத்த சட்டைவேட்டியுடனும், பட்டுப்புடவைகளுடனும் அம்பாளை தரிசனம் செய்யும் அத்தனைப்பேரின் மனதிலும் எத்தனை அழுக்குகள் நிறைந்திருக்கின்றன"//

மதத்தில் தான் ஜாதியின் அடிவேர் இருப்பதாக கூறுகிறது என் சிற்றறிவு ( நண்பர்கள் மனதை புண்படுத்தும் நோக்கம் ஒன்றுமில்லை ..)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///‘சாதிகள் இல்லையடி பாப்பா’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்றன மனப்பாடம் செய்து மதிப்பெண்கள்பெற மட்டுமே பயன்படுகின்றனவே தவிர வேறெந்த புரிந்துணர்விற்கும், வாழ்வியலின் நற்பண்புகளுக்கும் பயன்படுவதில்லை என்றே நினைக்கிறேன்///

ரொம்ப சரியா சொன்னிங்க.. எவ்ளோ தான் முன்னேற்றம் வந்தாலும், இந்த விசயத்துல...பின் தங்கி தான் இருக்கோம்.. :-((

கலகலப்ரியா said...

||ஏனென்று வினவியபொழுது அவர்களின் சாதிதான் காரணமாய் சொல்லப்பட்டது. மீறி சென்றால் அடிதடி, வெட்டுக்குத்து போன்றன நிகழுமாம்.||

இந்த எளவில இருந்து எப்போ வெளில வரப் போறாங்களோ... உலகம் அழிஞ்சாதான் செரி... இல்லைன்னா திருந்தச் சந்தர்ப்பமில்ல..

நேசமித்ரன் said...

சாமி இருக்கா இல்லையா ?இருந்தாலும் இப்புடி தனியா பார்க்குறத ஏத்துக்குட்டா அது சாமியா அதை கும்புடனுமா ?

ஆனா பிரிச்சு நிக்க வச்சவனுங்கள பிரிச்சு மேய வேணாம் இல்லாட்டி உங்க ஊர் கலெக்டர் நல்லவருங்கறாங்களே பேசலாம்

அன்புடன் அருணா said...

மனதின் மையத்தைப்பிடித்துக்கொண்டு அகலாமல் அரித்துக்கொண்டிருக்கும் இதுவும்.

Paleo God said...

வெளங்கிடும்! :(

ஈரோடு கதிர் said...

|| ‘சாதிகள் இல்லையடி பாப்பா’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்றன மனப்பாடம் செய்து மதிப்பெண்கள்பெற மட்டுமே பயன்படுகின்றனவே ||

அங்கேதானே சாதிச் சான்றிதழும் கேக்குறாங்க

//Ananthi said...

ரொம்ப சரியா சொன்னிங்க.. எவ்ளோ தான் முன்னேற்றம் வந்தாலும், இந்த விசயத்துல...பின் தங்கி தான் இருக்கோம்.. //

ரிப்பீட்...

சிநேகிதன் அக்பர் said...

தீண்டாமை பெருங்குற்றம்.

க ரா said...

இந்த இழவெடுத்த சாதிப்பேய் ஒழிஞ்சாத்தான் இந்த கொடுமை முடியும். இதுக்கு மக்கள்தான் மனசு வைக்கனும்.

தேவன் மாயம் said...

அம்மக்கள் அந்த கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்களென்று. ஏனென்று வினவியபொழுது அவர்களின் சாதிதான் காரணமாய் சொல்லப்பட்டது. மீறி சென்றால் அடிதடி, வெட்டுக்குத்து போன்றன நிகழுமாம்.///

உண்மையில் வருந்தத்தக்கது!!

Unknown said...

// எனது தாய் தந்தையருக்கு சாதியின் சாயம் ஒட்டியிருந்த சமயங்களில், அப்படியான மாயை எதுவுமில்லை, எல்லோரும் மனிதர்கள்தான், நம்முடலில் உள்ள யாவனவும் எல்லா மனித உடல்களிலும் இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு பகுத்தறிவிக்க என் கல்வியறிவும், அனுபவமும்உதவியது..."//

உண்மையில் மிக பெருமையாக இருக்கிறது. நானும் இந்த சாதிதீயை அழிக்க என்வீட்டில் மற்றும் நண்பர்களிடம் முயன்று கொண்டு இருக்கிறேன்/

முனைவர் இரா.குணசீலன் said...

அங்கு கல்வி பயின்ற மக்களே இல்லையோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.//

படித்த முட்டாள்களின் பெயர்களுக்குப் பின்னாலும் நீ---------ண்ட பட்டங்கள் உண்டு நண்பா.

ராமலக்ஷ்மி said...

// வேறெந்த புரிந்துணர்விற்கும், வாழ்வியலின் நற்பண்புகளுக்கும் பயன்படுவதில்லை என்றே நினைக்கிறேன்.//

அதேதான்:(!

அம்பிகா said...

வருந்தத்தக்க நிகழ்வு.
இன்னமும் இவையெல்லாம் தொடர்வது வேதனையை தருகிறது.

பழமைபேசி said...

//கும்ப அபிடேகத்திற்கு //

இவ்வளவு சிரமப்படணுமாங்க? குடமுழுக்கு விழாவுக்கு எளிமையா சொல்லலாமே?

dheva said...

திக்கெட்டும் எரியட்டும் அக்னி ஜுவலைகள்.... நம்மிலிருந்து தொடங்கட்டும் விழுப்புணர்வு....! எவனோ சொல்லிக்கொடுத்த மாயையிலிருந்து மானுடம் வெளிவரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

நமது வீட்டு பிள்ளைகளிடம் இருந்து எரியவிடுவோம் சாதி எதிர்ப்புத் தீயை....!


விழிப்புணர்வூட்டும் பகிர்வுக்கு நன்றி பாஸ்!

சீமான்கனி said...

//இந்த இழவெடுத்த புத்திய வச்சிக்கிட்டு கும்பாபிசேகம் வேற கேக்குதா. இந்த அழுத்தமெல்லாம் தாளாமதான் ஒவ்வொரு கோயிலா சூய்சைடு பண்ணிக்குது. காளஹஸ்தி போச்சு. ஸ்ரீரங்கம் வெடிப்பு விடுதுன்னு. கும்பாபிஷேகம் முடிஞ்சி நாறிப்போன ஊர சுத்தம் பண்ணமட்டும் கூப்புடுவானுங்க. தேரிழுக்கும்போதும், திருவிழாவின் போதும் ஆச்சாரம் கூட பார்க்ககூடாதுன்னு விதியே இருக்கிறதா படிச்சிருக்கேன்.புதுசா கட்டின கோவிலுக்கு கும்பாபிஷேகம். இவனுங்க மனச கழுவ எந்தாபிஷேகம் பண்றது?//

சேம் பீலிங்க்ஸ்...பாலாசி நன்றி...

ஹேமா said...

இது எங்கும்தான் பாலாஜி.
எம்மவர்கள் வெள்ளைக்காரன் நடுவில் வாழ்ந்துகொண்டும் புதிதாய் வரும் நட்புகளைக் கூட ஆராய்கிறார்கள்.இங்கு பிறந்து வளரும் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

Chitra said...

இச்சமுதாயத்தில் அகற்றப்படவேண்டிய அழுக்குகள்தான் எத்தனைவிதமாய் முளைத்துக்கிடக்கிறது !!!!


....... வேதனையான உண்மை..... என்று தீருமோ?

பிரேமா மகள் said...

எல்லோரும் பொது பட்டியலில் வரும் நாள் வரும்.

புலவன் புலிகேசி said...

இந்தக் கொடுமைகள் இன்னமும் இருக்கின்றன என்பதுத் தெரியும். இந்த எழவெடுத்த சாதியையும், சாமியையும் கட்டிக் கிட்டு அழுவுறத நிறுத்திட்டு மனிதனிடம் மனிதம் பார்க்கத் தொடங்கினாலொழிய இந்த கழிசடைகளை ஒழிக்க முடியாது நண்பா.

தாராபுரத்தான் said...

வேடிக்கை பார்க்கிறோம்...ஊருக்கு ஒரு பெரியார் தேவைங்க.

காமராஜ் said...

எனக்கு
இப்படி இருதய சுத்தியுடன்
எழுதப்படும் எழுத்துக்களைப்
படித்தவுடன் கண்பனிக்கும்.

பனிக்கிறது.

ஹாட்ஸ் ஆஃப் பாலாஜி.
பாலாண்ணா....
இன்னும்.

அண்ணாமலை..!! said...

சமுதாய சிந்தனையுடன் ஒரு கட்டுரை!
நன்றிகள் நண்பரே!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

காலங்கள் மாறினாலும்... சில கோலங்கள் (அவலங்கள்) இன்றும் நம்மை விட்டு விலகி செல்லாமல்...

களைய படவேண்டிய ம(மா)க்கள்...

அன்புடன் நான் said...

இவர்களின் மனமும் புத்தியும்.... வெளுக்க வேண்டுடிய அழுக்கு!
இது தற்கால... அல்ல கற்கால இழுக்கு!!

தெளிவான பார்வை பாலாசி.

பத்மா said...

பாலா அருமையா,, வருத்தத்தோட எழுதிருக்கீங்க ...
படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு ..இது எப்போ மாறும்?

vasan said...

ச‌மீப‌த்திய‌ ஆங்கில‌ தெலைக்காட்சி பார்த்தீர்க‌ளா?
நான்கயைந்து இள‌ம் ம‌ண‌மான‌ ஜோடிக‌ள்,த‌லைந‌க‌ரில் கார்க‌ளிலும்,
ப‌ங்க‌ளாக்க‌ளிம் பிண‌ங்க‌ளாய், கொலை செய்ய‌ப்ப‌ட்டு.
இது 'க‌வுர‌வ‌க் கொலைக‌ளாம்' மாற்று சாதியின‌ரை
ம‌ண‌ந்த‌திற்காய், ம‌ர‌ண‌ம்.
அதை விட‌ கிராம‌ ம‌க்க‌ளின் இய‌ல்பு ப‌ர‌வாயில்லை தானே!

க.பாலாசி said...

கருத்துக்களை பரிமாறிக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

க.பாலாசி said...

//பழமைபேசி said...
இவ்வளவு சிரமப்படணுமாங்க? குடமுழுக்கு விழாவுக்கு எளிமையா சொல்லலாமே?//

சரிதானுங்க...ஏற்றுக்கொள்கிறேன். நன்றி..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

என்னைக்கு இதெல்லாம் ஒழியும்னு தெரியலீங்க பாலாசி.. இதுகளுக்கு குடமுழுக்கு ஒரு கேடு :(

கமலேஷ் said...

இன்னும் இந்த இழி நிலை தொடரத்தான் செய்கிறது என்ன செய்ய..

Thenammai Lakshmanan said...

மனப்பாடம் செய்து மதிப்பெண்கள்பெற மட்டுமே பயன்படுகின்றனவே தவிர வேறெந்த புரிந்துணர்விற்கும், வாழ்வியலின் நற்பண்புகளுக்கும் பயன்படுவதில்லை என்றே நினைக்கிறேன்//

உண்மைதான் பாலாசி

ஜெயந்தி said...

சில கிராமங்கள் அல்ல. ஏறக்குறைய அனைத்து கிராமங்களிலும் இதுதான் நிலைமை.

ஜோதிஜி said...

மனம் இது குறித்து நிறைய எழுத வேண்டும் என்று சொல்கிறது? ஆனால் எதார்த்தம் சுடுகிறது.

வேறென்ன நடுத்தர வாழ்க்கை எப்போதுமே நடுங்கும் வாழ்க்கை தான்.

Unknown said...

கெட்ட வார்த்தைகளால் திட்டனுன்னு தோணுது.. சாமியே தேவையில்லை நண்பா...

Unknown said...
This comment has been removed by the author.
r.v.saravanan said...

நல்ல பகிர்வு பாலாசி

இறைவன் படைப்புகள் தான் எல்லோரும், அப்படி இருக்கையில் கோயிலுக்குள்
சிலர் செல்ல கூடாது என்பது இறைவனின் படைப்பை அலட்சியப்படுத்துவது போல் இதை எப்போது உணர்வார்கள் ?

க.பாலாசி said...

அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி...

"உழவன்" "Uzhavan" said...

இன்னமும் இருக்கத்தான் செய்யுது தலைவா

கார்த்திக் நேத்தா said...

சாதிகள் செத்துப் போம் ,
சமயம் செத்துப் போம் ,
அன்பொன்றே நிற்கும் .

கே. பி. ஜனா... said...

கண்கள் பனிக்கின்றன! --கே.பி.ஜனா

ஜோதிஜி said...

போட்டியில் கலந்து கொண்டு பதிவு பார்த்து உள்ளே வந்தேன். வாழ்த்துகள்.

உமர் | Umar said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துகள்.

ஹேமா said...

பாலாஜி....தமிழ்மண விருதுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.எங்க உங்களைக் காணோம் !

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO