க.பாலாசி: ஒரு கூடும் சில குளவிகளும்

Thursday, February 3, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்

அதிகாலை 7 மணி இருக்கலாம். தேநீர் அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தேன். ஒரு திருப்பம், அங்கே லாரி ஒன்று எனது திசையில் வலதுபுறம் நிறுத்தப்பட்டிருந்தது. காலைநேரப் பனி, குளிர். நாசியில் நுழைந்த தூசிக்காற்று குறுகுறுத்ததில் கண்களை மூடி ஒருகை வாய்பொத்த தும்மிவிட்டேன். அதேநேரம் எதிரே ஒரு வயதானவர் டி.வி.எஸ் வண்டியில் வந்துகொண்டிருந்தார். சற்றேறக்குறைய இருவரும் மோதிவிடும் நிலைமை. கொஞ்சம் அவரோ அல்லது நானோ சுதாரித்துக்கொண்டு மையிரிழையில் மோதிக்கொள்ளாமல் தப்பித்தோம்@தார். மோதியிருந்தால் அவர் லாரியின் ஓர பட்டைகளில் அடிபட வாய்ப்பிருந்தது. நான் வெறுமனே தரையை தடவியிருக்கக்கூடும். இருவரும் ஒருவரையொருவர் கடந்து பத்தடி இடைவெளியில் நின்றுவிட்டோம். அவர் என்னை திட்ட ஆரம்பித்தார். ‘ஏன்டா காத்தால வர்ரீங்க..என்ன நெனப்புல போறானுங்களோ தெரியல’ இன்னும் இன்னும்.. அப்படியே கொஞ்சம் ‘ஒத்தச் சொல்லால தனுஷாக என்னை அவர் நினைத்திருக்கக்கூடும். என்மீது தவறு, உணர்ந்துகொண்டேன். நின்று திரும்பி கை சின்னத்தைக்காட்டி ‘சாரிங்க’ என்றேன். அவர் வாக்காளனைப்போலவே கருவிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அவர் அருகில் சென்றேன். ஒருமாதிரி மருண்ட விழிகளுடன் பார்த்தார். பிறகு தமிழில் ‘மன்னிச்சிடுங்க தப்பு என்மேலத்தான், திடீர்னு தும்மல் வந்திடுச்சு...அதான், இனிமே நடக்காம பாத்துக்கிறேன்’ என்று அமைதியான குரலில் சொன்னேன். முன்பிருந்த கோபம் முற்றிலும் அவரிடம் இல்லாமல்போனது. போலவே சாந்தமான குரலில் ‘பாத்துப்போ கண்ணு’ என்றார். ஒரே சொல்தான், முன்பு சொன்னதற்கும் இதற்கும் பொருளும் ஒன்றுதான், சொற்களின் ஒலியளவுகளில் வேண்டுமானால் சற்று வித்யாசம் இருக்கக்கூடும், ஆனால் இங்கே இருவேறானது மொழிகள்தான். அந்தச்சொல் கொடுக்கிற அழுத்தம் மனதை புரட்டிப்போடுகிறது. அதுதான் தமிழ்.

•••••••

வாரமொருமுறை இரவு உணவுக்கு செல்லும் ஒரு சிற்றுண்டி கடை. ஒரு தாத்தன்தான் பிரதான பாத்திரம், ஒரு அம்மாக்காரியும், பெரியம்மாக்காரியும் துணை. ஒரு குழந்தை இங்கே நாயகி. எப்போதும் துருதுருவென ஓடுவாள் ஒடியாறுவாள், நாம் சிரித்தால் சிரிப்பாள், முறைத்தால் முறைக்காமல் அவளம்மாவின் கொசுவத்தை பிடித்துக்கொள்வாள். நேற்று அவள் அம்மாவும், பெரியம்மாவும் இல்லை, பிரதானச்சாலையில் அடுத்தசாரியில் கால் பர்லாங்கு தள்ளியிருக்கும் அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கக்கூடும். எப்போதும் பூச்சிகளைக் கண்ட பூனையைப்போல் இருப்பவள் கொஞ்சம் சுணங்கியிருந்தாள். கொஞ்சநேரத்திற்கெல்லாம் அழவும் தொடங்கிவிட்டாள். தாத்தனைத் தவிர வேறுயாரும் கடையிலில்லை. அவரே சமையல்காரர், பறிமாறுபவர், துடைப்பவர் இத்யாதி.... நை..நை யென்று அழத்தொடங்கியவள், தாத்தன் தண்ணீர் மொள்ளப்போனால் பின்னாடியே... கைலியைப்பிடித்துகொண்டே, இலையெடுக்கப்போனால்  ....பிடித்துக்கொண்டே, தோசை ஊற்றப்போனால்....கொண்டே, காசு வாங்கி கல்லாவில் போட்டால் ...ண்டே... இன்னும். இந்த சூழ்நிலையைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்குகூட எரிச்சல் வந்து அவளை சமாதானப்படுத்த முயன்றேன், ம்கூம். அவளுக்கு இப்போது வீட்டிற்கு செல்லவேண்டும். அதற்குதான் அடம், அழிச்சாட்டியம். கடையில் என்னைப்போலவே சாப்பிடும்  மற்றவர்களும் சமாதானம் செய்ய முயன்றார்கள் முடியவில்லை. கூடவே தாத்தனும். சாப்பிடுபவர்களை அப்படியே விட்டுவிட்டு கூட்டிச்செல்ல அவராலும் முடியாதுதான். ‘இரும்மா, இரும்மா.. தோ அம்மா வந்திடுவா.. ஒனக்கு என்னவேணும் சொல்லு, வாங்கியாறேன்.. அழாத..’ ம்கூம்..... இதே நானாகயிருந்தால் ஓங்கி செவுள் செவுளென்று அறைந்திருப்பேன், ருக்கலாம். ப்ப்ப்ச்ச். என்னுடைய வியப்பு இப்போது அந்த முதியவரிடத்தில் திரும்பியது. எப்படியிவர் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார்!!!. கொஞ்சம்கூட அந்த குழந்தையை கடிந்துகொள்ளவில்லையே!!. ஆனால் அவரிடத்தில் ஒரு இயலாமை, தன்னையே நொந்துக்கொள்ளும் கடுமை. பிறகு மீண்டும் ‘அழாத என்னவேணுஞ்சொல்லு, தாத்தா வாங்கியாரேன், சரி வாப் போலாம்’ என தூக்கிக்கொண்டு எதிர்த்த மளிகைக்கடைக்கு சென்றார். ஒரு லேய்ஸ் மற்றும் வாட்டர் பாக்கெட் அழுதுவீங்கிய கன்னம் மலர தேவைப்பட்டிருக்கிறது. ‘மீண்டு’ம் வந்தார், முகத்தில் சாதனை. எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது. எல்லா பெற்றோர்களும்தான் ‘இங்கே’ பேதையாகிருப்பார்கள்.


••••••••

வழக்கம்போலவே ஒரு விடுமுறைநாள். எப்போதும் சிந்திப்பதைவிட அதிகம் முயன்றதில்  2 வருடங்களுக்கு முன்பு சென்ற  சென்னிமலை முருகன் ஞாபகம் வந்தார். நண்பனும் நானும் மயில்வாகனனுக்காக இருச்சக்கர வாகனத்தில் கிளம்பினோம். சரியாக மதியம் ஒன்றரை மணி. மலையேற ஆயிரத்து முன்னூத்திச்சொச்சம் படிகளும் கூடவே பசியும் துணை. முருகனுக்கு கோபம் வந்தால் பொசுக்கென்று மலையுச்சியில் ஆண்டியாக உட்கார்ந்துகொள்கிறார். எல்லோரும் பணத்தைப் பணத்தால் எடுக்க அவரை மலையில் தேடுகிறார்கள், இயல்பு அல்லது ஆசை மற்றும் நப்பாசை என்னைப்போலவே!!!. போனமுறை நண்பனும் நானும் மேலே சந்நதிக்குப் பின்புறம் மலைக்கற்களைப் பொறுக்கி ஆளுக்கொரு வீடு கட்டினோம், சும்மா, கூம்பாக, அடுக்கடுக்கி. உள்ளே ஒரு நெய்விளக்கும். இந்தவருடம் நண்பனின் ஆசை நிறைவேறியதற்காக ஒரு நன்றிகடன், நான்  இம்முறையும் கற்கள், கூம்பு, நெய்விளக்கு. இந்தமுறை மரங்களில்லாத இடத்தில் கட்டவேண்டும்...டினேன் (குறியீடு). மேலேறும் போது பிரித்துவைத்த புளிச்சோரு மூட்டையுடன் ஒரு குடும்பத்தை பார்க்க நேர்ந்தது. எவ்வளவு காலமாகிறது, இந்த கட்டுச்சோறு சாப்பிட்டு, குறைந்தது நான்கு, ஐந்து. உச்சி வெய்யிலில் ஈரப்பதமிக்க எல்லா இடுக்குகளிலும் மொய்க்கிற எறும்புக்கூட்டம்போலான மனதிது. அவரைக்குளத்து மாரியம்மனும், திருவிழாயிரவில் கட்டுச்சோற்றுடன் மேடையின் முன்னமர்ந்து பார்த்த அரிச்சந்திரனும் ஞாபகம் வந்தார்கள். குளத்திலிருந்து துள்ளிய மீனொன்று கட்டாந்தரையில் துடிப்பதுபோலிருந்தது. கீழே இறங்கிவந்தபோது நான்கு மணி. மலையடிவாரம், கொஞ்சம் ‘கொஞ்ச’ லாம்போல் தென்படுகிற சுடிதார் யுவதிகள். பசிக்கு தின்ற பத்துரூபாய் பொரியும், கலவைக்காரமும் அடிவயிற்றை ஐம்பதுபைசா பலூன் அளவுக்கு ஆக்கியது. தைப்பூச திருவிழாக்கடைகள் இன்னும் எடுக்கவில்லை. சுற்றும் ராட்டினம், சில குழந்தைகள். நாமும் ஏறலாமா? வேண்டாமா? கொஞ்சம் குழப்பமும் கூச்சநாச்சமும் வேண்டாமென்றது, காரணம் பனிக்கூழ் நக்கியவாறான அழகு பெண்கள் மற்றும் கடந்துவந்த என் வயது. அருகருகே தள்ளுவண்டிகளில் பலாச்சுளை, வேர்க்கடலை, கீத்துப்போட்ட அண்ணாச்சிப்பழம்... ம்கூம்.. முக்கினாலும் முடியாது, சோற்றுப்பொரியால் வந்தவினை,  நாங்கள் வண்டியை கிளப்பினோம், வயிறும் மனதும் புடைத்தேயிருந்தது. வஞ்சனை வாழ்க்கை. 



.

33 comments:

vasu balaji said...

ம்ம். மனுஷன படிக்கத் தெரியறது பெரிய விஷயம். முதலிரண்டும் அபாரம். மனசான மூணாவதும்தான். தென்ன குறியீடு மரமில்லாத இடத்துல? மரம் சகுனத்தடையில்லை. மரமிருக்கட்டும் தம்பி. செழிக்கும்:)

sakthi said...

வாழ்வின் யதார்த்தங்களை தொகுத்திருக்கும் விதம் அழகு பாலாசி தொடருங்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்.. முதல் நச்.. தமிழ் மொழினா சும்மாவா..

//தாத்தன் தண்ணீர் மொள்ளப்போனால் பின்னாடியே... கைலியைப்பிடித்துகொண்டே, இலையெடுக்கப்போனால் ....பிடித்துக்கொண்டே, தோசை ஊற்றப்போனால்....கொண்டே, காசு வாங்கி கல்லாவில் போட்டால் ...ண்டே... //

எழுத்து... ம்ம்ம்.. அசத்தல்..

3 - சென்னிமலையை விட.. யுவதிகளூம்.. குறியீடுகளும் நினைவில்..

நம்ம பாலாண்ணே என்ன சொல்றாருன்னே விளங்கமாட்டீங்குது

சமுத்ரா said...

/எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது. / NICE

ஹேமா said...

குழந்தையோ முதுமையோ மனதில் பாசமும் பரிவும் அன்பும் இருக்கும்வரை அமைதிதான்.
வாழ்வியல் தொகுப்பு நல்லாயிருக்கு பாலாஜி !

ஹுஸைனம்மா said...

முதலிரண்டுமே முதியவர்கள்தான்; இருவரும் வேறுவேறு விதம் என்று தோன்றவில்லை. முதலாமவர் - பயத்தால் - சம்பவம் தந்த பயம் அல்லது, இளைஞனாயிருக்கிறானே, அவன் திட்டுவானோ என்ற பயமாயிருக்கலாம்.

பா.ராஜாராம் said...
This comment has been removed by the author.
பா.ராஜாராம் said...

//‘பாத்துப்போ கண்ணு’ //

//எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது//

//உச்சி வெய்யிலில் ஈரப்பதமிக்க எல்லா இடுக்குகளிலும் மொய்க்கிற எறும்புக்கூட்டம்போலான மனதிது. அவரைக்குளத்து மாரியம்மனும், திருவிழாயிரவில் கட்டுச்சோற்றுடன் மேடையின் முன்னமர்ந்து பார்த்த அரிச்சந்திரனும் ஞாபகம் வந்தார்கள். குளத்திலிருந்து துள்ளிய மீனொன்று கட்டாந்தரையில் துடிப்பதுபோலிருந்தது//

கிரேட் மாப்ள!

(great மாப்ள! என்று சொல்லத்தான் விரும்பினேன். //பனிக்கூழ் நக்கியவாறான அழகு பெண்கள்// என்றெல்லாம் தமிழ் விளையாடுகிற இடத்தில் எதுக்கு வம்பு என கிரேட் மாப்ள-என தமிழ் படுத்திக் கொண்டேன்) ஹி..ஹி..

ஈரோடு கதிர் said...

மூன்றுமே வெகு யாதார்த்தம் பாலாசி... அழகான யதார்த்தமும் கூட!

க ரா said...

அருமை பாலாசி..

சிவகுமாரன் said...

சின்ன சின்ன நிகழ்வுகளைக் கூட சுவைபட சொல்கிறீர்கள்.
அருமை.

Anonymous said...

நீங்க எழுதும் கதையும் கவிதையும் தான் நெஞ்சை வருடும் என்றில்லை நிகழ்வுகளும் அப்படியே....

ஜோதிஜி said...

தளத்தில் விழந்து கொண்டிருக்கும் இந்த ட்விட்களைப் பார்த்து கொஞ்சம் நேரம் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

எல்லாநிலையிலும் நல்ல முன்னேற்றம்.

பத்மா said...

great bala !!!!


hehe pa ra ...

bala onnum solla maataar! illa bala?

Anonymous said...

மூன்று நிகழ்வுகளுமே உங்கள் எழுத்தில் ப்ரமாதமா இருக்கு பாலா!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))))அருமை.

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி

அருமை அருமை மூன்றுமே அருமை - எதிர்பாரா தும்மல் - சிறிய தவறு - ஒருவர் இறங்கி வந்தவுடன் அடுத்தவர் இயல்பாக இறங்குவது யதார்த்தம். பாத்துப்போ கண்ணு - என்று ஒரு முதியவர் சொல்வது அவரது உள்ளத்தில் இருந்து வரும் சொற்கள். அடுத்து முதியவர்கள் என்றாலே குழந்தைகள் தான். அடுத்து சென்னிமலை முருகனைப் பாக்கப் போயிட்டு - "கொஞ்சலாம்" போன்ற - பனிக்கூழை நக்குகிற அழகு ( ப் ) பெண்களா - ம்ம்ம்ம் பாலாசி பெரிய ஆளுய்யா நீ .... இயல்பான அழகிய நடை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

r.v.saravanan said...

யாதார்த்தம் பாலாசி

Unknown said...

தலைவரே பின்றீங்க ...

Chitra said...

அபாரம்!

பிரதீபா said...

அப்பப்பா.. வியக்கச் செய்யும் நடை.

arasan said...

மூன்றுமே முத்துக்கள் ...
மிகவும் எளிய நடையில் அற்புதமாய் இருந்தது ...
நன்றி

இளங்கோ said...

அழகு வரிகள், வியக்கச் செய்யும் மொழி நடை. வாழ்த்துக்கள்

Learn said...

அருமையான கதையும் கவிதைகளும்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

அகல்விளக்கு said...

அட்டகாசம் அண்ணா...

:-)

Mahi_Granny said...

நான் தனியா என்ன சொல்வது . பாலாசி எப்போதும் கிரேட் தான்

அன்புடன் நான் said...

மன்னிப்பு.... அதுதான் தமிழ்!
பெருமையாய் உணர்ந்தேன்.

/எல்லாக்குழந்தைகளாலும் ஒரு முதியவனாகமுடிகிறது, எல்லா முதியவனாலும் ஒரு குழந்தையாகமுடிகிறது. /

மிக உண்மையே!

பனிக்கூழ்....உங்க! (நம்) தனித்தமிழ்க்கு என் வணக்கம்.

மொத்தத்தில் மிக சிறப்பா இருக்கு மூன்று முத்துக்கள்.

க.பாலாசி said...

நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றிங்க சக்தி
நன்றிங்க ச.செந்தில்வேலன்
நன்றி சமுத்ரா
நன்றி ஹேமா
நன்றி ஹுசைனம்மா
நன்றி பா.ரா. மாம்
நன்றி ஈரோடு கதிர் அய்யா
நன்றி இராமசாமி
நன்றி சிவக்குமரன்
நன்றி தமிழரசிக்கா
நன்றி ஜோதிஜி
நன்றி பத்மா மேம்
நன்றி அன்புடன் அருணா
நன்றி பாலாஜி சரவணன்
நன்றி ஸ்ரீதர்
நன்றி சீனா அய்யா
நன்றி ஆர்.வி. சரவணன்
நன்றி கே.ஆர்.பி.செ.
நன்றி சித்ரா
நன்றி பிரதீபா
நன்றி அரசன்
நன்றி இளங்கோ
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி மகி மேடம்
நன்றி கருணாகரசு

"உழவன்" "Uzhavan" said...

தலைப்பே அருமை பாலாஜி

சாந்தி மாரியப்பன் said...

அழகு!!.. இடுகை.

சந்தான சங்கர் said...

யதார்த்த நடை சொல்லும்
உங்கள் வரிகள் அருமை..

நிகழ்வுகளை எல்லாம்
நினைவிற்கு கொண்டு செல்லும்போதுதான்
அதற்கென மொழி நடையும்
சாரம்சமும் பிறக்கின்றது.

அருமை நண்பா..

தாராபுரத்தான் said...

அருமை...

மா.குருபரன் said...

அருமையாக இருக்கிறது பாலாசி

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO