க.பாலாசி: இவளும் பெண்தான்..

Thursday, March 10, 2011

இவளும் பெண்தான்..

அவள் அப்போதுதான் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாள். பள்ளிக்கூடம் திறப்பதற்கு ஒன்றரை மாதகால அவகாசம் இருந்தது. பத்தாம் வகுப்பு செல்வதற்கான கனவுடனிருந்தாள். தெருவில் வரும் கிளி ஜோசியன் அவளுக்கான வாழ்க்கை சீட்டை கையில் வைத்துக்கொண்டு கூவி வருகிறான். அவளின் பெற்றோர்கள் அவனை அழைத்து ஆரூடம் பார்க்கின்றனர். தெருவில் சில்லிக்கோடோ என்னவோ விளையாடிக்கொண்டிருந்தவள் ஆர்வத்துடன் கிளிக்காகவோ, ஜோசியத்துக்காகவோ அந்த இடத்தில் அமர்கிறாள். விளையாட்டுப்போக்கில் அவளுக்கும் 2 ரூபாய் மொய்வைத்தப் பிறகு  ராஜாத்தியென்றோ பாப்பாத்தியென்றோ அழைக்கப்படும் அந்த பச்சைக்கிளி ஒரு சீட்டை எடுத்துப்போடுகிறது. பிரித்துப்பார்த்த ஜோசியக்காரர் பலவிசயங்களை சொல்லிவிட்டு இவளுக்கு இந்நேரம் வரம் பார்த்திருக்கவேண்டும் இல்லையென்றால் இன்னும் சொற்ப நாட்களில் வரம் வந்துவிடும், கிழக்கிலிருந்துதான் வருவான். சொந்தக்காரன், சீமைத்தண்ணி குடிப்பவனாக இருப்பான் போன்றனவும் இன்னும் சிலவும் வாயில் வசம்பு தேய்த்ததுபோல் சொல்கிறார்.

‘இவள் படிப்பில் கெட்டிக்காரி’ என்று அந்த ஜோசியன் சொன்னதை இரவு முழுக்க கனவாக காண்கிறாள். பெற்றவர்கள் வரப்போகும் வரனை அவனோ, இவனோ, எவனோ என்கிற யூகத்தில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சொல்லிவைத்தார்போல ஒரு ராஜன் (வயது 28) அந்த ராணிக்காக துபாயிலிருந்து பொத்துக்கொண்டு திருவெண்காட்டில் குதிக்கிறான். அவன் ராணிக்கு மாமன் முறை, ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட அல்லது கேடுகெட்ட. துபாயில் கதாநாயகன் சித்தாளோ, கொத்தனாரோ என்னயெழவோ. மார்பில் சங்கிலியும் கையில் மோதிரமும், ஒரு மைனர் குஞ்சு போல மூர்த்திக்கடை மிக்ஸரும்,  அல்வாவும் வாங்கிக்கொண்டு அக்கா வீட்டுக்கு வருகிறான். அவனுக்கு நம் ராணி அக்கா மகள் (முறையில்). இவள் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கிறாள். பேச்சிப்போக்கில் தனக்கு பெண் பார்த்துக்கொண்டிருப்பதாக அக்கா, மாமாவிடத்தில் சொல்லிவைக்கிறான். விருந்து கருமங்கள் முடிந்தது. நாயகன் நாயகியை ஓரக்கண்ணால் ஒரு லுக், அவள் அந்த மிக்ஸருக்காக ஒரு லுக், அவ்வளவே.

எங்கோ தட்டிய பொறி அவள் பெற்றோர்களுக்குள் பற்றிக்கொள்கிறது. சரி அவர்களாக கேட்டால் நாமும் பேசலாம் என்று முடிவாகிறது. அந்த சனியனும் அடுத்தவாரமே நடந்துவிட்டது. மூன்றாம் நபர் வழியாக ராணியை பெண் கேட்டு தூது வருகிறது. இவளின் குடும்பத்திற்குள் குதூகளம். அக்கம்பக்கத்திலுள்ள மொத்தம் 10 டூ 15 குடும்பங்களும் இவர்களுக்கு சொந்தம்தான். அனைவருக்கும் இந்த சம்பந்தம் பிடித்தாலும், ‘சின்னவயசுல இவளுக்கு எதுக்கு இப்ப கல்யாணம்?, நாலு வருஷம் தள்ளி பண்ணா ஆவாதா?’ என்று சொல்லிப்பார்க்கிறார்கள். ம்கூம். காதில்லாதவன் காதில் ஊதியென்ன, செவிட்டில் அப்பிதான் என்ன புண்ணியம்?. மறுபடியும் சிங்கானோடை ஜோதிடனிடம் ஜோடிப்பொருத்தம் பார்க்கிறார்கள். ஜோடிப்பொருத்தத்தில் ஒன்பதோ, எட்டோ பொருந்தியிருக்கவேண்டும். முடிவாகிவிட்டது.

நகை, நட்டு, சீர்வரிசை, அப்போதே இருபத்தைந்தாயிரம் செலவு செய்து கட்டில், பீரோ கூடவே ஒரு ஹெர்குலஸ் சைக்கிளோ, டி.வி.எஸ் வண்டியோ எனக்கு மறந்துவிட்டது. ஜாம் ஜாம் திருமணம் திருவெண்காடு அந்த பிரசித்திப்பெற்ற கோவிலில். ராணியின் கூடப்பிறந்தவர்கள் இருவர், ஒரு அண்ணன், ஒரு தம்பி. அந்த தம்பியும் நானும் பால்ய நண்பர்கள். பக்கத்துவீடுதான். ஜாதியில் வேற்றுமையிருந்தாலும், பெரியம்மா, பெரியப்பா உறவுப்பிணைப்புடையது எங்களின் குடும்பங்கள். நானும் திருமணத்திற்கு சென்றிருந்தேன். எனக்கும் ஒன்றுமறியாத வயது. எல்லாம் முடிந்தது. இது நடவாமலிருந்தால் இந்நேரம் அவளுக்கு பத்தாம் வகுப்பு  ஆரம்பித்திருக்கும். ஆனால்..?

6 மாதங்கள் ஓடிவிட்டது. அனைவருக்கும் சந்தோஷம், சென்னை ஏர்போர்டில் மாமனுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு சென்ற காரிலேயே திருவெண்காட்டிற்கு திரும்புகிறார்கள் ராணி. ஆறுமாத சந்தோஷ வாழ்க்கை இந்த பிரிவில் அவளுக்கு ஆற்றமுடியா சங்கடத்தைக்கொடுக்கிறது. பிறந்த வீட்டிற்கு 3 மாதம் வந்து தங்கிக்கொள்கிறாள். அங்கேதான் பிரச்சனை ஆரம்பமாகிறது. இந்த மூன்றுமாத காலமும் அவளின் நடத்தை யை அசிங்கப்படுத்தி இவளின் குடும்ப எதிரிகள், அந்த மாமியாருக்கு வாராவாரம் கடிதம் எழுதுகிறார்கள். அப்படி செய்வது மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஒரு பெண்தான், அவளுடன் இன்னும் இரண்டு பெண்டுகள். மாமியார் வீட்டில் புகைச்சல் அதிகமாகிறது. அவர்களும் நம்புகிறார்கள். ‘அவ இங்க இருக்கும்போதே அப்டித்தான் இருந்தா, அப்பன் வீட்லன்னா கேக்கவாவேணும்’ இது மாமியார்.

இந்நிலையில் 9 வது மாதம் வளையல் காப்பு (சீமந்தம்) முடிகிறது. மனதில் குமைச்சலுடன் மாமியாளும் நாயகன் வீட்டு உறவினர்களும் கலந்துகொள்கிறார்கள். பத்தாவது மாதம் அழகிய பெண் குழந்தை பிறக்கிறது. மூன்றுமாதம் கழித்து சாஸ்த்திரத்திற்கு திருவெண்காட்டுக்கு அழைத்து செல்கிறார் மாமியார். மீண்டும் ஆறுமாதங்கள் சண்டை சச்சரவு, மாமியார் கொடுமை நடத்தையை குத்திக்காட்டி, பச்சையான, கொச்சையான வார்த்தைகள். பச்ச உடம்புக்காரி ஓரளவிற்கு மேல் தாங்கமுடியாமல் அந்த ஒரு வயதை அடையப்போகும் தன் குழந்தையுடன் பிறந்த வீட்டிற்கு வருகிறாள், கணவனும் சேர்ந்து கைவிட்ட நிலையில். அடுத்த ஒரு வருடங்கள் சமாதானப்பேச்சு, இரண்டு மாதம் அங்கே, இரண்டு மாதம் இங்கே. வேலைக்காகவில்லை. அதே கொடுமை. நிரந்தரமாக பிறந்த வீட்டிலேயே தங்கிவிடுகிறாள்.

எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுது பித்தளை சொம்பில் ஜோடித்த கரகத்தை எந்த துணையுமின்றி தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு அரங்கம் அதிர ஆடிய அவளேதான் இப்போது அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாய். அனாதரவான நிலையில். பெற்றவர்கள் தலையில் போட்ட இந்த பாறாங்கல் அவளை தற்கொலைக்குக்கூட தூண்டியது. காப்பாற்றிவிட்டார்கள். ஊர், தெருமக்களின் இழிச்சொற்கள், வாழாவெட்டி என்ற அந்த பட்டம், எதிரி குடும்பத்தாரின் ஏளனச்சிரிப்பு, எல்லாவற்றிற்கும் மேல் இந்த நிர்கதிக்கு துணைநின்ற கணவன், மாமியார் மயிரை அறுக்கவேண்டும் இவை அனைத்தும் சாத்தியப்பட அவள்முன் எதிர்காலம் கனிந்துகிடக்கிறது. ஆனது ஆயிற்று அடுத்தது விவாகரத்து.

கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. எந்த சட்டப் புடுங்கிகளாலும் அந்த 18 வயது நிரம்பாத அந்த அபலைக்கு நீதி கொடுக்கமுடியாத சூழ்நிலை. சீர்வரிசை நகை நட்டில் பாதிதான் திரும்ப வருகிறது. வேறு இம்மியளவுக்கூட அசைக்கமுடிவில்லை. துபாய் துரை ஃபாரின் கிளம்புவதற்கு முன் இன்னொரு இடத்தில் பெண் பார்த்துகொண்டிருப்பதாக கேள்வி. ராணியின் அண்ணணும் தம்பியும் அவனை அடித்து வெளுக்கிறார்கள். மறுபடியும் வழக்கில் சிக்கல். தீர்ந்தபாடில்லை. அவளின் நிலை பார்க்கும் நல்லுள்ளங்களுக்கு பரிதாபம், எதிராளிக்கு இளக்காரம். கூனிக்குருகி வீட்டின் மூலையில் முடங்கியே கிடக்கிறாள். செய்த தவறை உணர்ந்தும் செய்வதறியாது அப்படியே காலத்தை ஓட்ட முனையும் பெற்றோர்கள். எங்கோ ஒரு வெளிச்சம் தெரிந்தது அவளுக்கு. அது....

3 வயது நிரம்பிய தன் மகளை மெட்ரிக் பள்ளியில் சேர்த்துவிட்டாள். தன் படிப்பையும் தொடர்ந்தாள். பத்தாவது, பனிரெண்டாவது... முடிந்தது. அடுத்து ஒரு டிகிரி படிக்கவேண்டும். அவளின் அனைத்து வழிகளுக்கும் உதவ பெற்றவர்கள் தயாராகவே இருந்தனர். டிகிரியும் முடித்தாயிற்று. பிறகு ஐ.ஏ.எஸ் படிக்கவேண்டும். ஏதோவொரு வெறி முளைத்துக்கொண்டேயிருந்தது அவளுள். இடையில் துபாய் துரை வரும்போதெல்லாம் ராணியின்  அண்ணன் தம்பிகளிடம் உதைவாங்கி கொண்டுதானிருந்தான். ஐ.ஏ.எஸ் ரெண்டாம்கட்ட தேர்வில் தோல்வி. ஓரளவிற்கு மேல் அவளாலும் முடியவில்லை. அந்த நேரத்தில் நமது ஊரின் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் பணி ஒருவருடத்தில் காலியாகும்போல் தெரிந்தது. பி.பி.டி.கோர்ஸ் சேர சிதம்பரம் செல்கிறாள். வெற்றிகரமாக முடிந்தது. வேலை கிடைக்கவேண்டிய சூழ்நிலை கைகூடியது. அண்ணணுக்காக அதை விட்டுக்கொடுக்கவேண்டிய நிலையும் வந்தது. அப்படியே செய்துவிட்டாள். வேறு என்ன செய்யலாம்....??

தமிழ்நாடு காவல்துறையின் எஸ்.ஐ. பணி தேர்விற்காக விண்ணப்பித்திருந்தாள். அதற்காக அனைத்துவிதத்திலும் தன்னை தயார்படுத்திக்கொண்டாள். எல்லாம் சுபமாக முடிந்தது. சில லகரங்களில் வேலையும் கிடைத்தது. ஒரு புதியதோர் வாழ்க்கை பிறந்தது. ட்ரெய்னிங் இத்யாதிகள் முடிந்து சீர்காழியில் ட்ரெய்னிங் எஸ்.ஜ. அங்கேயே கொஞ்சகாலம் சகவாசம். பெற்றவர்கள் மறுமணம் செய்யும் முடிவுக்கு வருகிறார்கள், அவளும். இப்போது எதிராளியாக இருந்த குடும்பங்களும் நெருங்கிவிட்டார்கள். அனைவரும் ஒற்றுமை.  இந்த நேரத்தில் அந்த செய்தி உச்சந்தலையில் இடியை இறக்குகிறது. அவள் மகள் பருவமெய்திவிட்டாள். அனைவரும் நொடிந்துபோனார்கள்.

கையை பிசைந்துகொண்டிருந்த பெற்றோர்கள் ஒரு வருடம் பொறுத்திருந்துவிட்டு நம் ராணிக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார்கள். ராணியின் விருப்பப்படி அவளே தேர்ந்தெடுத்த அல்லது காதலித்த வரனுக்கு அவளை கட்டிக்கொடுக்கிறார்கள். எல்லாம் சுபம்.

இது லட்சத்து சொச்சம் டெம்ப்ளேட் கதைகளில் துவைத்து காயப்போட்ட  சம்பவமாக இருக்கலாம். ஆனால் இதுவும் உண்மை. இப்போது ராணி நாகை மாவட்டத்தில் ஒரு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளர். அந்த துபாய் துரை இன்னொரு திருமணம் முடித்துவிட்டு எங்கோயிருக்கிறான். இந்நிலையில் அவனை ஸ்டேஸனில் வைத்து மானியிலேயே உதைக்க அவளால் முடியும். ஆனால் அவள் அப்படியில்லை.


..

22 comments:

சஞ்சயன் said...

டெம்பிளேட் கதை என்பது சமுதாயத்தின் பிரச்சனயின் மறுவடிவம் அல்லவா?
பல பெண்களின் வாழ்வு இப்படித்தானிருக்கிறது.

பெண் பெரியவளானால் என்ன. இவர் மணமுடித்திருக்கலாம் என்பது எனது கருத்து.

நன்றி.

vasu balaji said...

சிலருக்கு இப்படித்தான் அமைந்துவிடும் போல. இத்தனை கஷ்டத்துக்கு பிறகாவது அவள் விரும்பிய வாழ்க்கையிருக்கிறதே.

/இந்நிலையில் அவனை ஸ்டேஸனில் வைத்து மானியிலேயே உதைக்க அவளால் முடியும். ஆனால் அவள் அப்படியில்லை. /

அதான் தலைப்பே சொல்லுது. அவளும் பெண்தான்.

Chitra said...

உண்மை சம்பவம் என்பதால், இன்னும் மனதை பாதிக்கிறது.

சிநேகிதன் அக்பர் said...

பெண்ணை பெற்றவர்களின் அறியாமையை எங்கே போய் சொல்ல...

ஆனால் சாதித்துக்காட்டிய அந்த பொண்ணுக்கு ஒரு சல்யூட்.

kathir said...

அந்தப் பெண்மணிக்கு ஒரு சல்யூட்!!!

//உதைக்க அவளால் முடியும். ஆனால் அவள் அப்படியில்லை. //

அவன் மட்டும் கையில கிடைக்கட்டும் அப்புறம் தெரியும்!!!!

suneel krishnan said...

http://www.jeyamohan.in/?p=12992
வாழ்த்துக்கள் :)

ரோகிணிசிவா said...

avangaluku support paninaellarukum inthapost valiya oru thanks !

ஹேமா said...

துணிச்சலும் நம்பிக்கையும் இருந்ததாலும் ,அவசரப்பட்ட பெற்றவர்களாக இருந்தாலும் இப்போ உணர்ந்து அவளுக்கு உதவுபவர்களாக இருப்பதால் வாழ்வை வளப்படுத்த முடிந்தது ராணியால்.
இல்லையென்றால் !

அரசூரான் said...

பாலசி, போட்டுத் தாக்குற. இப்பத்தான் மூர்த்தி கடை அல்வாவும், மிச்சரும் வந்திருக்கு. நம்ம ஊருக்கு இப்போ பேங்களூர் ஐய்யங்கார்’ஸ் பேக்கரி வந்துடுச்சி... இன்னும் உங்கிட்ட எவ்வளவு ஸ்டாக் இருக்குன்னு யோசிக்கிறேன்.

தாராபுரத்தான் said...

காதில்லாவர்கள் காதில் ஓதி என்ன பயன்..

ஓலை said...

'Ivalum penn thaan' ..

Ezhuthaalarin ezhuththil 'Ival thaan penn' yenru azhagaaga mudinthirukku.

Sagotharargal intha alavukku uthaviyaaga irunthathu oru aaruthalaana visayam.

Nalla kaalam pirakkattum ellorukkum.

En nanban oruvan romba naal thirumanam seyyamal irunthaan. Yennai anaiyil moozhgaamal kaappatriyavan. Avanathu nanban oru vibaththil iranthathil, avargalathu kuzhainthaikalodu serththu than kudumba maakki kondaan yenru kelvip patten.

Mahi_Granny said...

கிளி ஜோசியக்காரனின் வர்ணனையாகட்டும் துபாய் மாப்பிளை பற்றியதாகட்டும், ஒவ்வொரு பத்தியையும் நிதானமாக வாசித்தேன். அந்த '' அவளுக்கும் " இந்த பாலாசிக்கும் பாராட்டுக்கள்

Ashok D said...

என்னப்பா பெண்கள் கஷ்டத்த பத்திய எழுதற... உண்மையில் பெண்களால் ஆண்கள் தான் அதிகமா கஸ்டப்படறாங்க தெரியுமா?

அந்த - வசம்பு, மிக்ஸர்க்காக மட்டும் லுக்.. :))))

நகைச்சுவை தெளித்திருப்பது சூப்பரு

அம்பிகா said...

\\ சாதித்துக்காட்டிய அந்த பொண்ணுக்கு ஒரு சல்யூட்.\\
உண்மைசம்பவம் என்பதால் அதிர்வும், அந்த பெண்ணின் தன்னம்பிக்கையை நினைத்து சந்தோஷமும் வருகிறது.

Anonymous said...

மனதைநெருடியவர்களில் 'இவளும் பெண் தான் '.

க.பாலாசி said...

//dr suneel krishnan said...
http://www.jeyamohan.in/?p=12992
வாழ்த்துக்கள் :)//

அறிந்தேன், பார்த்தேன். நன்றிங்க டாக்டர் சுனில்.

அன்புடன் அருணா said...

ம்ம் இன்னும் ஒரு அவளும் பெண்தானே...

சென்னை பித்தன் said...

எளிமையாக ,இயல்பாக, மனதைத் தொடும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள்!

ஹுஸைனம்மா said...

//சில லகரங்களில் வேலையும் கிடைத்தது//

//இப்போது எதிராளியாக இருந்த குடும்பங்களும் நெருங்கிவிட்டார்கள். அனைவரும் ஒற்றுமை.//

சமூகத்திற்கான டெம்ப்ளேட்!!

'பரிவை' சே.குமார் said...

அவளும் பெண்தான்.

இன்றைய கவிதை said...

பாலாசி மனதை அறுத்தது இவர்கள் திருந்தவே மாட்டார்களா

இன்னும் ஏழையின் ஆசையில் எத்தனை எத்தனை இளம் வாழ்க்கை பாதிக்கிறதோ என்று முடியுமோ இந்த அவலம்

ஜேகே

TamilTechToday said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO