க.பாலாசி: ஒரு கூடும் சில குளவிகளும்..

Monday, November 14, 2011

ஒரு கூடும் சில குளவிகளும்..

.

பேருந்தில் ஏறும்முன் நடத்துநரிடம் ‘இடமிருக்கா?’ என்று கேட்பது என் வழக்கமும்கூட. மேலும் கீழும் பார்த்துவிட்டு ‘உனகெதுக்குப்பா தனியாவொரு எடம்.. போ போ அங்கண ஓரமா ரவையோண்டு இருக்குப்பாரு’ என்பதாக தலையசைப்பார். கடக்கு கழுதையென்று தனியாவர்த்தனமாக ஓரிடம்பிடித்து உட்காரும்போதெல்லாம் கூடவே இன்னுமிருவர் வலுக்கட்டாயமாக நெருக்கியடித்து உட்காருவர், அது இருவரிருக்கையாயினும். ஏன்டா இப்படியென்று கேட்கவும் முடியாது. ‘ஒனக்கு இந்த எடம் போதும்’ மென்று பொளிச்சென சொன்னாலும் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக ‘ண்ணே ...க்கு ஒரு டிக்கெட்’ என்றால் ‘அரையா முழுசா?‘ என்பார் நடத்துநர், பார்வையில். உயரத்தில் இரண்டடி குறைவாகவும், இந்த இரண்டு மி.மீ நீள மீசையுமில்லையென்றால் மனசாட்சிக்கு விரோதமின்றி பேருந்துகளிலும், தொடர்வண்டிகளிலும் அரை கட்டணச் சலுகையில் என்னால் பயணிக்கமுடியுமென்பது தற்காலத்திற்குமான நிகழ்தகவு. இந்த மிகை, குறையல்லவென்பது எனைக் கண்டறிந்தவர்களுக்கும் தெரிந்ததுதான். இதைபோன்ற சிறப்பு நிகழ்வுகள் கூடிவந்து கும்மியடிக்கும்போதுதான் வருடந்தோறும் ஐப்பசியும் 8ம் நாளும் வந்து தொலைக்கிறது. அடுக்குப்பானையிலிருக்கும் அதிரசம்போல கடந்த இரண்டு வருடங்களாக 27 ம் அகவையிலேயே குடியிருந்தது ஒரு இனிமைதான். சென்ற ஐப்பசி எட்டுக்குப்பிறகு அதிலும் பூசணம் பூத்தது. 30 தொடங்கிவிட்டதாம். கலிகாலம்.
•••

இந்த நேரத்தில் நீங்கள் தாராசுரம் என்ற ஊரைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 5 ஆவது மைல்கல் தொலைவிலுள்ளது இந்தப் பேரூர். இங்குள்ள, உலகப் பாரம்பரிய சின்னங்களும் ஒன்றான ஐராவதேஸ்வரர் திருக்கோவில் 12 ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோவிலும் மேற்கண்ட கோவிலும் கலையில் நிறைய ஒற்றுமையுடன் திகழ்வதாக அறியப்படுகிறது. மேலும் இக்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இசைப் படிகள் உள்ளது. அதாவது 7 கருங்கற்படிகளும் 7 ஸ்வரங்களை ஒலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலைப்பற்றி  ஒரு முழுமையான பயணக்கட்டுரையை பதிவர் புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார். படிக்கவும்
•••

கூத்தாடி கிழக்கே பார்க்கவும் கூலிக்காரன் மேற்கே பார்க்கவும் காரணமிருக்கிறது. கூத்தாடியின் பிழைப்பு ராப்பொழுதில். ஆகவே அவன் விடியலை கிழக்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். கூலிக்காரன் பிழைப்பு பகற்பொழுது. அவன் சூரியன் மறைவை மேற்கு நோக்கிதான் பார்க்கவேண்டும். போலவே மாயவரம் மண்ணில் பிறந்த நான் மேற்கண்ட பத்தியில் தாராசுர பெருமை போற்றவும் காரணமிருக்கிறது. என் வருங்காலத்திற்கானவள், அதாவது இந்த மாதொருபாகனுக்கான மாதவள்  அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறாள். அது, அதற்கு  இன்னொரு பெருமை.

•••

பெண்பார்க்கப் அந்த வீட்டினுள் நுழையுமுன்னமும் படபடப்பிருந்தது. ‘ஏங்க இவரு மாப்பிள்ளைக்கு கடைக்குட்டி தம்பியா?’ என்று யாராவது என்னைப்பார்த்து கேட்டுவிடும் அபாயமிருந்தது. நல்லவேளை அதற்கான வாய்ப்பை உறவினரொருவர்  தடுத்து ‘இவர்தான் மாப்பிள்ளை’ யென்றார். அப்பாடா‘ என்றிருந்தது. காபி டம்பளரை நீட்டியவள் முன் நாணலாக நாணவும் தெரியாமல், வீராப்புடனுமில்லாமல் சங்கோஜப்பட்டேன். பரஸ்பரங்கள் முடிந்து இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது, இருவருக்கும். அடுத்த அகவை வருவதற்குள் நல்லூணைப் பெருக்கி உடலையும் பெருக்கி ஒரு டி.எம்.டி முறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ அல்லேல் குறைந்தபட்சம் பி.வி.சி குழாயையாவது வளைத்துக்காட்டும் தண்டுளப வண்ணனாகவோ மாறிவிடவேண்டுமென்பதை வருங்காலத்தாளிடம் சொல்லியிருக்கிறேன். அவளும் கொண்டை முடிந்திருக்கிறாள்.

•••

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யமொன்றறியோம் பராபரமே என்பதற்கிணங்க கவிதையெழுதுவதை சமீபகாலமாக நிறுத்தியிருக்கிறேன். தெரியவில்லையென்பது இரண்டாம்பட்சம். நல்ல எளிமைக் கவிதைகளை படிப்பதிலிருக்கும் ஆர்வம் எழுதுவதில் கிஞ்சித்துமில்லை. ஒரு மதிமயங்கிய மாலைநேரம், மழைக்காலம் எதையோ பேசி, எதையோவொன்றைச் சொல்லப்போக என்னவள், ‘நானும் கவிதையெழுதுவே’னென்று என் வலப்பக்கச் செவியின்வழி  குண்டைத் தூக்கிப்போட்டாள். நள்ளிரவு 12 மணிக்குமேல் கவிதையெழுதத் தோன்றினாலும் உடனே துயில் கலை(த்)ந்து ஒரு கோடுபோட்ட குறிப்பேடு முழுக்க கவிதைகளாய் சமைத்துவிடும் வல்லமை  பெற்றவளாம். மாமியார்கூட புளங்காங்கிதமடைந்தார். இந்த கவிதாயினிக்கு ‘சாமி’ வராமல் காலமுழுக்க பார்த்துக் கொள்ளவேண்டுமென்பதே என் இப்போதைய ஆசை.


28 comments:

க ரா said...

வாழ்த்துகள்யா தம்பி.. உம்ம தமிழ் கொல்லுது... செமயா இருக்கு....

vasu balaji said...
This comment has been removed by the author.
vasu balaji said...

எழுத்தாள மாப்பிள்ளைக்கு வாழ்த்துகள். ங்கொய்யால மலையாளக் கவிதையெல்லாம் படிச்சீல்லா. இப்ப இருக்குடி:)))

Kodees said...

வாழ்த்துகள் பாலாசி!. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

vasu balaji said...

ஏனுங் தம்பி அந்த மீன் படம் புதுசா போட்டிருக்கீங்களே, அது நீங்க சிக்கீட்டேன்னு சொல்றீங்களா இல்ல புடிச்சிட்டேன்னு சொல்றீங்களா?

கலகலப்ரியா said...

இது மோசமில்லை ஒரு முக்தி நிலை..

:o))..

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் பாலாசி.

ரோகிணிசிவா said...

அட, அம்மிணியும் எழுதுவாங்களா ?
சூப்பர்

ராமலக்ஷ்மி said...

இனிய வாழ்த்துக்கள்:))!

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் பாலாசி எங்கள் ஊர் பக்கத்தில் நீங்கள் மாப்பிள்ளையாவது மிகுந்த மகிழ்ச்சி

அன்புடன் அருணா said...

ரைட்டு!இனிமே அவங்க கலக்கப் போறாங்களா???

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துகள் நண்பா :-)

sakthi said...

வாழ்த்துகள்

ஹேமா said...

முறுக்குக் கம்பி விளம்பர புஜபலமிக்கவனாகவோ....!

மனம் நிறைந்த வாழ்த்துகள் பாலாஜி !

ஆரூரன் விசுவநாதன் said...

nice post balasi....

ஈரோடு கதிர் said...

ஒடு தேன்கூடும் நிறைய தேன் துளிகளும்னு தலைப்பு வைத்திருக்கலாம்

அழகு!

அருமை!!

வாழ்த்துகள் கவிதைகளாகக் கேட்டு செவி கிழிய :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் பாலாசி..
கவிதையா இருக்கு போஸ்ட் :)))

கவிதையாக வாழுங்கள் ..வாழ்கவளமுடன்..

Mahi_Granny said...

கதிர் சொல்லுவது போல் தலைப்பு இருந்திருக்கலாம் . இப்பவே மாமனார் ஊர் பெருமை ஆரம்பிச்சாச்சு .நான்கவிதை மழை எதிர்பார்த்ததற்கு பதில் சொல்லி விட்டீர்கள் . தொடருங்கள் பாலாசி

அகல்விளக்கு said...

வாழ்த்துக்கள் அண்ணா...

☀நான் ஆதவன்☀ said...

:))) வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் பாலாசி.

rajamelaiyur said...

அருமையான எழுத்து நடை

க.பாலாசி said...

நன்றி க.ரா.
நன்றி வானம்பாடிகள் :)))
நன்றி கோடீஸ் அண்ணா
நன்றி ப்ரியாக்கா
நன்றி செ. சரவணக்குமார்
நன்றி ரோகிணிக்கா
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி சரவணன்
நன்றி அன்புடன் அருணா மேடம்
நன்றி உழவன்
நன்றி சக்திக்கா
நன்றி ஹேமா
நன்றி ஆரூரன்
நன்றி கதிருங்ணா
நன்றி முத்துலட்சுமி அக்கா
நன்றி மகிம்மா
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி ஆதவன்
நன்றி சே.குமார்
நன்றி ராஜா

அரசூரான் said...

வாழ்துகள் பல.
தாரபுரத்தில் இருந்து தாரகையா? கலக்கல்தான்.
திருமணம் எப்போது?

ஹுஸைனம்மா said...

//இங்கும் பிடித்து, அங்கும் பிடித்து இப்போது பித்தும் பிடித்திருக்கிறது//

:-)))))

வாழ்த்துகள்!!

க.பாலாசி said...

நன்றிங்க அரசூராரே..
(திருமணம் ஏப்ரல் மாதத்தில்... )
நன்றிங்க ஹுசைனம்மா..

கே. பி. ஜனா... said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO