க.பாலாசி

Thursday, November 12, 2009

ஒரு குழந்தையின் குமுறல்... (2)


வீடேறி வந்தவனுக்கு...

முதலாய் பணம்பெற்று

வட்டியென வாக்களித்தேன்...

இன்று....அவன்மாத்திரம்

ஊழல்வாதியாம்.



வீட்டிற்கொரு கண்ணகி

வீதிக்கொரு கோவலன்

மாதவியின்

பட்டம் மட்டும்

பரத்தையென்பர்.



பசியென்பவனுக்கு

பக்கத்துவீடு....

பஞ்சனையில் தூங்கும்

நாய்க்கு

பால்சோறு.



வறுமையை

சித்தரிக்கும் திரைப்படம்

திரையரங்கில்

நுழைவுக்கட்டணம்

ஐம்பதுக்கு குறைவில்லை.



கடன்சுமை

தற்கொலை

குழந்தையுடன் மனைவி

புகைப்படத்திலும்

புன்னகையுடன் கணவன்.



தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...





Tuesday, November 10, 2009

மட்டை விளையாட்டு...

யாதொரு பிணியுமில்லாத மனிதனுக்கும் சுலபமாய் ஏதோவொன்றை ஏவிவிடும் வேலையை அவ்வப்போது ஒருதின மட்டை விளையாட்டு போட்டிகளே செய்துவிடுகின்றன. அதிலும் குறிப்பாக இந்திய, பாகிஸ்தான் அல்லது ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே ஒருதின போட்டியென்றால் எல்லா வயதினரும் தொலைக்காட்சிப்பெட்டியின் முன் பருவமடைந்த பெண்ணைப்போல் பக்குவமாய் அமர்ந்துவிடுகின்றனர்.


இவ்வாறான தொடர் போட்டிகளில் ஏதோவொன்றில் இறுதியில் இந்திய அணி வெற்றிபெரும் வாய்ப்பை இழக்கும்போது, நம்ப ராஜாவோ, கூஜாவோ சலித்துக்கொள்கின்றனர். காரணம் தான் அந்த போட்டியினை பார்த்ததினால்தான் இந்தியா தோற்றுவிட்டதாக எண்ணி. கிடக்கட்டும் கழுதையென்றால் நம் வீட்டில் பல்போன பாட்டிக்குகூட இரவில் தூக்கம் வருவதில்லையாம், இரண்டு அல்லது மூன்று ஒட்டங்கள் வித்தியாசத்தில் அப்போட்டியின் வெற்றிவாய்ப்பு விலகிப்போனால்.


இதைவிட கொடுமை யாதெனில் கடைசிநேர பதைபதைப்பில், அதாவது ஆறு பந்துக்கு எட்டு ஓட்டங்கள் தேவைப்படும்போது ஏற்படும் மாரடைப்பில் வீரமரணம் எய்துபவர்களும், இரண்டு ஓட்டங்கள் தேவைப்படும் வெற்றியின் விளிம்பில் ஆசிஸ் நெக்ரா வெளியேறினால் விற்பனைக்குள்ள தொ.கா.பெட்டியொன்றை பார்வையாளன் விட்டெரியும் கல்லுக்கு பலிகொடுத்து பரிதாபமாய் கடைமூடும் முதலாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


என்னதான் நான் யோக்கியனென்று வீரவசனம் பேசினாலும் அந்நேர ஆர்வமிகுதியில் இணையதளத்திலாவது ஓட்டங்களை சரிபார்த்துக்கொள்ள என் மனமும் ஏங்கத்தான் செய்கிறது. என்ன செய்ய...நானும் 2003 வரையில் கல்லூரியின் கணிதத்துறை மட்டைவிளையாட்டு குழுவின் உறுப்பினனாகவே இருந்தேன். 2003ல் உலககோப்பை போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா வெல்லவேண்டுமென எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கடவூர் அமிர்தகடேசுவரருக்கும், அபிராமி அம்மையாருக்கும் ஒரு ரூபாய்க்கு சூடம் வாங்கி ஏற்றி வேண்டுகோள் விடுத்தேன். ஒருரூபாய் சூடம் ஒருநிமிடம்தான் எரிந்திருக்கும்போல, 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாறுகண்ட தோல்வியை தொட்டுப்பார்த்தது. பிறகு மட்டைவிளையாட்டு என்றாலே வெறுப்பூன்றிவிட்டது. ஒரு போதிமரத்தின் கீழில்லாவிட்டாலும், ஒரு புளியமரம் அல்லது வேப்பமரத்தின் அடியிலாவது எனக்கு இந்த ஞானம் பிறந்திருக்கவேண்டும்.


இப்போது இவ்விளையாட்டில் அர்ப்பணிப்புடன் விளையாடும் வீரர்கள் மைதானாத்தில் இருந்தாலும், அதைவிடுத்து மற்றவிடங்களில் இவ்விளையாட்டினை மையப்படுத்தி கதராடையில்லா அரசியல் நடக்கிறது. வருங்காலத்தில் இதுவும் கொடியுடன் கூடிய ஒரு அ.இ.ம.வி.கழகமாக மாறலாம்.


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...


Saturday, November 7, 2009

அவரும் வந்தார் இவரும் வந்தார் ஆடினார்...


1990 - வரை கிராமத்து கோயில் திருவிழாக்கள் என்றால் பனிப்படரும் இரவு நேரத்தில் வாழ்வியலின் சத்தியத்தை சந்தடிகளுக்கும் பரப்பிவிடும் வள்ளித்திருமணம், அரிச்சந்திரா மற்றும் என் ஞாபகமறதியின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இன்னும் சில நாடகங்கள் என்றும் கலையிழக்கா காவியமாக நிகழ்ந்துகொண்டிருந்தன. இவற்றிற்கு சொந்த ஊரிலிருந்தும், அருகே சுத்தியுள்ள கிராமங்களிலிருந்தும் மக்கள் சாப்பாட்டு மூட்டையுடன் கூட்டம் கூட்டமாயும், வண்டிக்கட்டி வந்தும் நாடகமேடை முன்னே சமுக்காளத்தின்மேல் குடும்பம் சகிதம் அமர்ந்து கண்டு மகிழ்ந்தனர். இடையே தாகம் தணிக்க தண்ணீர்ப்பந்தல், டீக்கடை, பட்சணம் போன்றவையும் எளிதாய் கிடைக்கும் வகையில் அக்கம்பக்கத்தார் கடைவிரித்து காத்திருப்பர். விடியும்வரை ஓடும் நாடகத்தில் இடையிடையே உறக்கம் கலைத்து, களைப்பு நீங்க நகைச்சுவையுடன் கலந்து நாடகம் அரங்கேறும். இரவு 11மணியளவில் ஆரம்பித்து காலை 5 மணிவரையாவது நடக்கும். மக்களும் சலிப்பில்லாமல் கண்டிருந்தனர். அரிச்சந்திராவில் மயானகாண்டத்தில் சந்திரமதி புத்திரசோகத்தில் புலம்பியழும்போது அவளழுக ஆற்றாது சிறுவர்கள்கூட சேர்ந்தழுவர் (என் சிந்தை இப்போதும் மறக்காத நிகழ்வு)


பின்னர் நீண்ட வரிசையில் நாடகக்கலைகள் காத்திருக்க என்று தொலைந்தது, எங்கே விட்டகன்றது என்றறியாவண்ணம் நேரம்பார்த்து இடைபுகுந்த தொலைக்காட்சி பெட்டியின் வன்மை ஒளி, ஒலியில் எல்லாம் தொலைந்து, நாடகமேடை மேசையாகி தொலைக்காட்சிப்பெட்டியின் தொல்லையை அதிலே நிலைநிறுத்தி இரவு முழுதும் நான்கைந்து படங்களை புதிய கலாச்சாரமாக இடையிட்டனர். பிறகொரு நாளில் 16mm திரையமைத்து திரைப்படக்கவர்ச்சியினை பெரிதாக்கி அதையே மலிவுவிலை மதுவென்றாக்கி சுமையில்லா சுகம் காண செய்தனர். இந்நேரங்களில் நாடகம் காண வந்த குடும்ப கூட்டங்கள் குறைந்துபோய் வயோதிகர்கள் வாலிபத்திமிரில் கூட்டம் கூடி ஆட்டமாடும் கூடாறமாகிப் போயின நாடகத்திடல்கள்.


பிறகு திரைப்பட இசைநிகழ்ச்சி. அதில் முதலும் முடிவுமாய் சில சாமிப்பாடல்கள். மற்றநேரங்களில் சௌந்தர்ராஜன் குரலையும், பாலசுப்ரமணியன் குரலையும் கொலைசெய்யும் பாடல்கள். அடுத்த தெருவாசியையும் இம்சிக்கும் இசைநிகழ்ச்சியாய் காலைவரை தொடர்ந்திருக்கும் தொல்லையாகவே நடக்கும்.


அதுவே இன்று இன்னும் குன்றிப்போய் திரைப்பட ஆடல்பாடல் நிகழ்ச்சி என்று மேலும் நேரடியாய், திரையில்லா மேடையமைத்து கலிகாலத்தின் கவர்ச்சி என்பதை கவிச்சடிக்க காட்டும் கன்றாவியாகிவிட்டது.


இப்போது நாடகமேடையருகே குடும்பங்கள் இல்லை, டீக்கடையில்லை, பனியுளர்ந்த பட்சணங்களில்லை, தாகம் தணிக்க தண்ணீர்பந்தலில்லை. மாறாய் கூத்தடிக்கும் இளைய, சில வயதான கூட்டங்களும், திரைப்பட இசையில் அடித்தொடைகாட்டும் ஆடலை ஆடம்பரமாய் அரங்கேற்றும் கூத்தாடிகளின் ஜாக்கெட்டுக்குள் ஒன்றிரண்டு ரூபாய் நோட்டுக்களை சொருகி சுகம்காணும் குறைகுணம் கொண்ட கூட்டமுமே கூடிநிற்கின்றன. மதுவின் மயக்கம், புகைக்குழலின் புகைமூட்டம் என சிற்றின்பத்தில் சிறைபடும் இளைதலைமுறையின் தலையை முறையாக வாரிவிடத்தான் அங்கு ஆளில்லை.



தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...


  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO