க.பாலாசி

Thursday, December 10, 2009

நன் கடவுள்...

திருப்பதி சென்றிருந்தபோது பாதசாரிகள் பாதையின் படிக்கட்டுகளில் ஒரு 8 வயது மதிக்கத்தக்க சிறுமியொருத்தி யாசகம் கேட்டு தவழ்ந்து வந்துகொண்டிருந்தாள். கால் இரண்டும் ஊனமாக இருக்கவேண்டும். படிகளில் ஏறிச்சென்ற எங்களுக்கும், இறங்கி (தவழ்ந்து) வந்த அவளுக்கும் களைப்பு ஒரே நேரத்தில் ஏற்பட, ஓரங்களில் இருந்த சுவற்றில் நாங்கள் அமர்ந்தோம். அவளுக்கான கொஞ்ச அனுதாபமும் என் வியர்வையினூடே கசிந்துகொண்டுதானிருந்தது. அவளும் எங்களுக்கெதிரிரே அமர்ந்து அதுவரை கிடைத்த காசுகளை எண்ணிக்கொண்டிருந்தாள். எங்கள் களைப்பு அடங்க இன்னும் சிறுது நேரம் தேவைப்பட்டமையால் அமர்ந்த இடம் சூடேறி தணியும் வரை தரிசனம் பெறச்செல்லும் சில நிறங்களை தரிசித்துக்கொண்டிருந்தோம்.

ஒரு பத்து நிமிடங்கள் கழித்து அதுவரை தவழ்ந்து வந்துகொண்டிருந்த பெண் எழுந்து நடக்க ஆரம்பித்தாள். இதென்ன? ஏழுமலையான் அதற்குள்ளாக கண்திறந்துவிட்டார் என்று நானும் நண்பரும் திகைத்து நின்ற தருவாயில் கொஞ்ச தூரம் கீழிரங்கி சென்ற அவள், அவளையே நோட்டமிட்டிருந்த ஒருவனிடம் தன்னிடமிருந்த சில்லரை முடிச்சொன்றை கொடுத்துவிட்டு மறுபடியும் தவழ ஆரம்பித்துவிட்டாள். (பால்ய வயது பழக்கம்)

என்னவென்று சொல்வது? ஒருவேளை அது அவளின் தந்தையாக இருக்குமோ? என்ற சந்தேகம் இருந்தது. அவனுக்கேன் இந்த பிழைப்பு? இப்படி சம்பாதிப்பதை வைத்து சோம்பேறியான அவன் என்ன செய்யமுடியும்? அவன் ஒரு குடிகாரனாக இருப்பானோ? சந்தேகம் வலுவாகத்தான் இருந்தது. இதென்ன இந்த சமுதாயத்தின் சாபமா? எது எப்படியோ நமக்கு குழுமியிருக்கும் கூட்டங்களுக்கு நடுவே சுவாமிசி, நெரிசலில்லாமல் காட்சிதந்தால் சரிதான் என்றவாறு ஏறத்தொடங்கின எங்களது கால்கள்.

சரியாக ஆறுமாதங்கள் கழித்து இந்த நினைவு வந்ததற்கு காரணமும் இருக்கிறது. இரண்டு நாட்கள் முன்புதான் நான் கடவுள் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. சில நண்ப புண்ணியகோடிகளின் அருளால். அதில் காட்டப்பட்ட பிச்சைக்காரர்களின் மறுவுலகம் இந்த ஞாபகத்தினை தோண்டி பரிசோதனை செய்திருக்கவேண்டும். இப்போது நினைத்துப்பார்க்கிறேன், ஒருவேளை அவளிடமிருந்து சில்லறை முடிச்சியினை பெற்றவன் இந்த படத்தில் வரும் தாண்டவனின் அடிபொடிகள் போல இருப்பானோ என்று (இருக்கலாம்). எது எப்படியோ நான் கண்ட இந்த காட்சி நான் கடவுள் பார்ப்பதற்கு முன்பாக நான் கடவுளை பார்க்கப்போனதால். வாழ்க நன் கடவுள்.

அவ்விடத்தே கடந்து சென்ற எத்தனையோ பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள் அவளையோ அவள் சார்ந்த தொழிலையோ, அவளுக்குள்ள பிரச்சனைகளையோ அல்லது வலியையோ ஒரு பொருட்டாக மதித்ததாக தெரியவில்லை. நான் கவனித்த அளவிற்குகூட(????). தம்மால் முடிந்த ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது அதற்கும் குறைவான எடையுள்ளதையோ மட்டுமே புண்ணியம்பெறும் நோக்கில் கொடுத்துவிட்டு கடமையே கருத்தாக சென்றனர். (நான் அதுகூட செய்யவில்லை) நானும் அதே பாதையை கடந்து வந்துவிட்டேன். (குற்றவுணர்ச்சி இந்த இடுகையை எழுதும்வரை எனக்குமில்லை. குற்றமா?)

சிலநேரங்களில் எனது மனவோட்டத்தினை மறுவாய்வு செய்துபார்க்கையில் இதுபோல எத்தனை பாதைகளை கடந்து வந்திருக்கிறேன் என்ற உணர்வு எழத்தான் செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் இன்னொரு மனிதனின் வலிகளைத்தான் எவ்வளவு சுலபமாக, நம் மனதிற்குள் மருந்து தடவி மறைத்துக்கொள்கிறோம்.



Tuesday, December 8, 2009

ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம்...

நவிதொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்பு உடையார் தொடர்பு.

ஒவ்வொருமுறை படிக்கும்போதும் சிந்தனைகளையும் கருத்துக்களையும் புதிய தகவல்களையும் உணர்த்துவன மிகச்சிறந்த நூல்களாம். அதுபோல பண்புடைய நல்லோர்களின் சுற்றத்தை விரும்பி, நட்பாக உறவாடும் ஒவ்வொருமுறையும் அந்த சுற்றத்தின் அருமை கூடும். அந்த உறவின் பெருமை மிகும் என்பது மேற்சொன்ன குறளின் மூலம் வள்ளுவன் எடுத்தியம்பும் வாழ்வியலின் நியதி.

இக்குறளினை சிரமேற்கொண்டு ஈரோடு மாநகரில் பதிவர்களின் சங்கமத்தினை அரங்கேற்ற வரும் 20.12.09 ஞாயிறு அன்று மதிமயங்கும் மாலை 3.30 மணியளவை, மதிபெறும் மாலையாக மாற்ற ஈரோட்டு பதிவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுசமயம் பதிவர்களும் வாசகர்களும் திரளாக பங்குபெற்று இனிய அனுபவத்தினை பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடனும், பண்புடனும் அழைக்கிறோம்.



இச்சங்கமத்தில் முக்கிய அம்சங்களாக நாங்கள் தெரிவுசெய்வது...

* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்

* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு
* இன்னும் சில.....

தங்களது வருகையினை கீழ்கண்ட பதிவர்களின் அலைபேசி எண்களுக்கு அழைத்து உறுதிபடுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வால்பையன் (ஈரோடு) - 9994500540
கதிர் (ஈரோடு) - 9842786026
ஆரூரன் விசுவநாதன் (ஈரோடு) - 9894717185
அகல்விளக்கு (ஈரோடு) - 9578588925

சந்திப்பு நடைபெறும் இடம் :
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி)
லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
பெருந்துறை சாலை,
ஈரோடு - 11

நாள் : 20.12.2009 ஞாயிற்றுக்கிழமை
நேரம்
: சரியாக மாலை 3.30 மணியளவில்.

தங்களின் வருகையினை அன்புடன் எதிர்நோக்கும்

- ஈரோடு பகுதி பதிவாசிகள்.



Friday, December 4, 2009

மழலைகளும் மரணங்களும்...

வேதாரண்யத்தில் நடந்த பள்ளி வாகன விபத்திற்கும் (இதுவரை) 9 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் வழக்கம்போல் நமது முதல்வர், முரசொலியில் ஒரு கவிதையும், திரைத்துறைக்கு ஒரு காவியமுமாக எழுதி மௌன கண்ணீரஞ்சலி செலுத்திவிடுவார். உடனிருப்புக்கள் (பிறப்பு) யாரும் கவலைக்கொள்ள தேவையில்லை. அதேபோல் ரத்தத்தின் ரத்தங்களுக்காக கொடநாடு நிலத்திலிருந்தபடி 200 பக்க ஆறுதல் அறிக்கையை எதிர்கட்சித்தலைவர் தயார் செய்துவருவதாக உளவுத்துறை, கோபாலபுரத்தை உசுப்பியுள்ளதாகவும் தகவல். விரைவில் அனைத்து அரசியல்வாதிகளும் நாகப்பட்டிணத்திற்கு அஞ்சலி செலுத்தவும், ஆறுதல் கூறவும் இழப்பீடு வழங்கவும் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

இந்த விபத்திற்கு காரணம் ஓட்டுனர் உரிமம் பெறாத ஓட்டுனரே என்று, மக்களும் போக்குவரத்துதுறை அதிகாரிகளும் கண்டுபிடித்திருக்கின்றனர்(!?). இன்னொரு சாரார் அந்த வாகனத்தில் 15 குழந்தைகளே பயணம் செய்யமுடியுமென்றும், மொத்தம் 22 குழந்தைகள் அவ்வாகனத்தில் இருந்ததாகவும் வருத்தப்படுகிறார்கள் மற்றும் பள்ளிவாகனம் சரியாக பராமறிக்கப்படாததும் காரணமாம். பள்ளிக்கல்வித்துறையும், போக்குவரத்துதுறையும் ஒருவரையொருவர் அயோக்கியன் என்று உண்மைகளை உளரிவருகின்றனர். எனது எண்ணம் 16லிருந்து 22வது குழந்தை வரை அந்த வாகனத்தில் ஏற்றிய பெற்றோர்களுக்கு ஏன் இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் போனது?

எத்தனையோ மூன்று சக்கர வாகனங்கள் எல்லைக்குமீறிய அளவில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு போவதை பார்த்திருக்கிறோம். இத்தனைக் குழந்தைகளை ஏற்றிய ஒரு வாகனத்தில் கடைசி குழந்தையாக தன்னுடையதையும் கடமையே கண்ணாக கடைசியில் ஏற்றிவிடும் பெற்றோர்கள் கொஞ்சமாவது சிந்தித்து பார்க்கவேண்டும். இத்தனை நெரிசலில் நம் பிள்ளையையும் ஏற்றிவிடுகிறோமே, இவ்வாகனம் விபத்துக்குள்ளானால் என்ன ஆகும் என்ற எண்ணம் சிறிதேனும் அவர்களுக்கு இருக்கவேண்டும். எத்தனை பண, மன துயர்களுக்கிடையே படிக்க வைத்தாலும் ஒரு குழந்தையின் உயிர் எவ்வளவு விலைமதிப்பில்லாதது. என்ன சொல்லி என்ன பயன். கந்தனுக்கு புத்தி கவட்டியில் என்பார்கள். இதேபோல அடுத்த விபத்து நடந்தாலும் எவரும் கண்டுகொள்ளப்போவதில்லை.


புளியங்காய்க்கு புளிப்பை ஏற்றிவிடவா முடியும்?


  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO